“அப்புறம், அர்ஜுன் வந்து உன் கொள்கைகளைச் சொன்ன போதுதான், உன் மீதான பார்வை மாறியது. ஒரு ஆர்வம் தோன்றியது. அதன் பின் உன்னை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்..
அப்புறம் அன்று பார்ட்டியில், நீ தைரியமாகப் பதில் கொடுத்த விதம் என்னை ஈர்த்தது. மிகவும் பிடித்தது.
அதன் பிறகு உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேகம் வந்தது.உன்னைப் பார்ப்பதற்காகவும், உன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகவும் தான் ‘ருசிக்க’ செட்டிற்கு அடிக்கடி வந்தேன்…” எனக் கண் சிமிட்டினான்.
“நீ ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்தைத் தந்தாய். மிகவும் ஈர்த்தாய். ரசித்தேன்…” என்று நெகிழ்ந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல், உன் மீதான விருப்பம் புரிந்தது.
“உனக்கும் அர்ஜுனுக்குமான நட்பை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் வசந்த்….? அதனால் தான்….. அன்று வசந்த்துடனான நட்பைத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்று தான், தெரிந்தே வரம்பு மீறி அர்ஜுனிடம் கேட்டேன், ஆனால் அதற்கும் நீ கொடுத்து விட்டாய்….” எனக் கடகடவெனச் சிரித்தான்.
இவை அனைத்தையும் கண் சிமிட்டாமல், சிலையெனக் கேட்டுக் கொண்டிருந்தாள் இனியா.
“இப்போது எவ்வளவு அழகாகப் பார்க்கிறாய் தெரியுமா இனியா?” எனக் கிறங்கினான்.
சற்று வெட்கப்பட்டவள், “டாப்பிக் மாறாதிங்க விக்ரம், சொல்லுங்க…” எனத் தூண்டினாள்.
“உன்கிட்ட பேசனும், பழகனும் நினைத்தேன். ஆனால் என் அந்தஸ்த்தே எனக்குப் பெரிய தடையாக இருந்தது. அர்ஜுன், வசந்த் மாதிரி, உடன் பணிபுரிந்தால் ஈஸியாக இருந்திருக்கும் கூட நினைத்திருக்கிறேன்….”
இனியாவைத் திகைப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றான்.
“எப்படிடா உன்னோடு பழகுவது என யோசித்துக் கொண்டிருக்கும் போது தான், ஆபத்பாந்தவனாக என் மாமியார், மாமனார் என்னிடம் உதவி கேட்கச் சொன்னார்கள்…” எனக் குறும்பாகக் கண் அடித்தான்.
உடனே இனியா, மேஜையில் இருந்த முள்கரண்டியை அவன் மீது தூக்கி எறிய, அதை கேட்ச் பிடித்தவன், “நோ வயலன்ஸ் இனியா, நான் தாங்கமாட்டேன்…” எனக் கேலி செய்தான்.
அப்புறம், “அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான, உன் தெளிவான பார்வையும், தீர்க்கமான சிந்தனையும் ஆச்சரியப்படுத்தியது. மிக முக்கியமாக, நீ புகழை கையாண்ட விதத்தில் அசந்து போனேன்….” எனச் சிலாகித்தான்.
“அதன் பின், உன்னை விரும்புகிறேன் என உறுதியாகத் தோன்றியது. அப்புறம் இறங்கி ஆட ஆரம்பித்தேன்….” எனக் காதலாகப் பார்த்தான்.
அவன் பார்வையைத் தவிர்த்து “பெரிய ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறீர்களே?” என்று இனியா நொடிக்க,
“கண்டதும் காதல் கொள்ள, நான் பருவவயதில் இல்லை இனியா?”
மேலும், ”நீ என்னை ஈர்த்ததால், உன்னைப் பிடித்ததால் தானே இத்தனை ஆராய்ச்சி…… இல்லையென்றால் ஜஸ்ட் கடந்து போயிருப்பேன்” என்று சொன்னவன்,
“இந்தச் சுயமரியாதையும் மிகவும் பிடிக்கும்…” எனக் கண்ணோடு கண் பார்த்தான்.
இனியா அவனிடமிருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் தடுமாற
பேரர் வர, பார்வை தடைபட்டது.
பேரிடம் வேறு சில உணவுகளை ஆர்டர் கொடுத்து விட்டு, பாஸந்தியை உண்டபடி,
“இப்போது ஏன் இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்கிறேன் என யோசித்தாயா இனியா?”
“தெரியவில்லை….” என்று இனியா தோளைக் குலுக்க,
உன்னுடைய ஒவ்வொரு செயலையும், பிடித்து, ரசித்துத் தான், உன் பின்னால் வந்திருக்கிறேன், உன்னை விரும்புகிறேன் இனியா. அதனால், நீங்கள் வேற லெவல்….என்ற பேச்சுக்கள், இனி எப்போதும் நமக்குள் வரக் கூடாது. இங்கே இப்போதே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடு. நாம் இருவரும் சமம் தான், புரிகிறதா?”
இனியா திகைத்துப் பார்க்க, “இன்னும் கூட வேறு என்னென்ன பிடிக்கும் என்று சொல்வேன்…. ஆனால் அது கொஞ்சம் ‘ஏ’ ரேட்டு ஆகிவிடும்” எனக் காதலில் குழைந்தான்.
இனியா ஃப்ரீஸானாள்.
அத்தியாயம் 43
பேரர் உணவை எடுத்துக் கொண்டு வர, அதை இருவரும் பரிமாறிக் கொண்டனர். பின்,“இப்போது உன் முறை, சொல் இனியா…” என விக்ரம் தூண்ட,
“என்ன சொல்ல…?” என்று ஆரம்பித்த இனியா, “உங்களை மாதிரியெல்லாம் நான் யோசிக்கவில்லை விக்ரம், அந்த பார்க்கிங் சம்பவத்திற்குப் பிறகு உங்களைத் தவிர்க்கவே நினைத்தேன். லார்ட் லபக்தாஸிடமிருந்து தள்ளியே நிற்போம் என நினைத்திருந்தேன்.
உங்கள் மீது கோபம் இருந்தது, அதனால் தான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் திருப்பிக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.”
“ம்ம்…”
“மற்றவர்களாக இருந்தால் இந்தச் செய்கைகளைக் கையாளும் விதம் வேறாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்பது கவனிக்க வைத்தது. ஆனால் அதைத் தாண்டி வேறு எதுவும் யோசிக்கவில்லை.
உங்களைப் புகழ்கின்ற பாஸிடம் தேவையே இல்லாமல் சண்டைக்குப் போவேன், இப்போது யோசித்தால் ஈர்ப்பைத் தவிர்ப்பதற்கான போராட்டமோ? எனத் தோன்றுகிறது.
மேலும் எனக்கு நண்பர் வட்டம் பெரிது தான், ஆனாலும் அவர்கள் நெருங்கிய நண்பர்களாகச் சிறிது காலமாகும். ஆனால்…..” என்று நெஞ்சைத் தடவியவாறு, “நீங்கள் அப்படியில்லை…. சட்டென்று ஒட்டிக் கொண்டீர்கள். உங்களிடம் ஒரு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உணர்ந்தேன்… இது எப்படி நிகழ்ந்தது?” என்ற தவிப்பும், வியப்பும் இருந்தது.
அவன் புன்சிரிப்போடு, “சரி, அப்புறம்…” என ஊக்கினான்,
“உங்க கூடப் பேசப் பிடித்தது, வம்பு பண்ணப் பிடித்தது.ஆனால் இந்த உணர்வை எப்படிக் கையாளுவது எனப் புரியவில்லை.பின், உங்கள் கள்ளப்பார்வை, காந்தப்பார்வை, கண் சிமிட்டல்கள் எல்லாம் ஏதேதோ செய்தது, ஏதேதோ யோசிக்க வைத்தது….” எனக் கிறங்கினாள்.
விக்ரம் மீண்டும் தன் காந்தப் பார்வையை, அவள் மீது செலுத்த,
“விக்ரம்….” என இனியா சிணுங்கினாள்.
“சரி,சரி , மேலே சொல்….” என்றான் புன்னகையோடு,
ஒரு சில நேரம் நீங்கள் நெருங்கி வருவது போல் தோன்றும், மறு நொடியே, இது என் கற்பனையோ எனப் பயம் வரும். உங்கள் அந்தஸ்து, புகழ், பணமெல்லாம்… இதை எப்படி எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இப்படித் தயங்கி, தவித்த வேளையில்…. ,
உங்கள் காதல் வெளிப்பாடு, முதலில் எனக்கு பெரும் விடுதலையையும், நிம்மதியையும் தந்தது, அப்புறம் தான், மற்றதெல்லாம்….” எனத் தயங்க,
விக்ரம் ஆர்வமானான். “அப்புறம்….” எனக் கண்ணில் குறும்போடு தூண்ட,
“வானில் பறப்பது போல்…. ,வயிற்றில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்க….. காணும் காட்சியெல்லாம் அழகாய் தோன்ற என்று என் உலகமே மிகவும் வண்ணமயமாகிவிட்டது விக்ரம் ….” எனக் கன்னக்குழி விழச் சிரித்தாள்.
அவன் மீண்டும் குறும்போடு, “அப்புறம்…..”
“அப்புறம் என்ன…? சுபம் தான்” எனக் கண் சிமிட்டினாள்.
விக்ரம் மேஜையில் இருந்த இனியாவின் கையைப் பிடித்தபடி, மீண்டும்,“ஐ லவ் யூ ஜில்லு” என்றான்.
இனியா சற்று வெட்கத்தோடு, “அது என்ன ஜில்லு?” என கேட்க ,
“இதை நிச்சயமாக உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை விக்ரம்…” என இனியா ஆச்சரியப்பட,
“நானே எதிர்பார்க்கவில்லை….” எனத் தலை கோதினான்.
மேலும் சிறிது நேரம் பேச்சு நீடித்தது. பின்இனியா, “நேரமாகிவிட்டது விக்ரம்…”
“கொஞ்ச நேரம் இனியா….” நானே உன்னை டிராப் செய்கிறேன்…”
“வேண்டாம் விக்ரம், நீங்கள் வீட்டுக்கு வர முடியாது, எங்காவது தெரு முனையில் இறக்கி விட வேண்டும். அது ஏதோ அம்மா அப்பாவை ஏமாற்றுவது போல் தோன்றுகிறது, நாம் நமக்குள் பேசித் தெளிவான பின், குடும்பத்தில் தெரிவிக்கலாம், அதன் பின் நீங்களே டிராப் செய்யுங்கள்…”
இனியாவின் எண்ணம் புரிந்தது. இது தானே ஈர்த்தது. விக்ரம் மனசே இல்லாமல் விடை கொடுத்தான்.
அத்தியாயம் 44
முகம் கொள்ளாச் சிரிப்புடன் விக்ரம் வீட்டுக்குள் வர,
தாத்தா அவனைக் கவனித்து, “என்னடா ராஜா…? என கேட்க,
“வெற்றி…?” என்று அவரைக் கட்டிக் கொண்டு, முத்தம் வைத்தான்.
“ரொம்ப வருடம் கழித்து, எனக்கு முத்தம் கொடுக்கிறாய்டா ராஜா, இதிலிருந்தே உன் சந்தோஷத்தின் அளவைப் புரிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள்…”எனத் தலையைத் தடவினார் தாத்தா.
“எப்போதுஅறிமுகப்படுத்தப் போகிறாய்?”
“உங்கள் பேத்தி பல கண்டிஷன் போடுவாள்….” என டிராப் பண்ண ஒத்துக்காத கதையைச் சொல்லிச் சிரித்தான்.
“நல்ல பொண்ணு டா….” என்று தாத்தா பாராட்ட,
விக்ரம் முகத்தில் பெருமை வந்து ஒட்டிக்கொண்டது.
“சரி தாத்தா, ரூமிற்குப் போகிறேன்….” என எழ,
“போட, போய் கனவு காண்….” எனக் கேலி செய்ய, அதைக் கேட்காத மாதிரி, இரண்டு படிகளாகத் தாவித் தன் அறைக்குச் சென்றான்.
இனியா வீடு வந்தவுடன், ரீச்டு எனப் பதிவைத் தட்டி விட்டு, அம்மா, அப்பாவுடன் அரட்டையில் இணைந்தாள்.
‘போன் பண்ணுவாள்…’ என எதிர்பார்த்திருக்க, பதிவைக் கண்டதும் கடுப்பானான் விக்ரம் .
ஒரு மணி நேரம் கழித்து, கரெக்ட்டா ரெஸ்பான்ஸ் வந்துவிட்டதா? எனக் குறும்பு எம்மோஜியை இனியா தட்ட, உடனே அழைத்தான்.
“ஏன், போன் செய்ய மாட்டீங்களோ?” என வம்பு இழுத்தான்.
“சனி இரவு, எந்தப் பார்ட்டியில் இருப்பீர்களோ?” என அவள் பதில் கொடுக்க,
“ஆமாம், பார்ட்டிக்குப் போகிற மூடு தான் இருக்கு பார்….” எனக் கடுப்படித்தான்.
“ஏன், என்னாச்சு?”
“ம்ம்… , என் ஆளை டிராப் செய்கிற சாக்கில் கூடக் கொஞ்சநேரம் இருக்கலாமென நினைத்தால்…..”என்று பெரு மூச்சுடன், ஏதேதோ தத்துவம் சொல்லி, வேண்டாம் என்று மறுத்து விட்டாள். பின்னே வந்துவிட்டேன் எனச் சொல்லும் சாக்கிலாவது பேசலாம் என நினைத்தால்…., அதற்கும் எஸ்எம்எஸ் தான்….” எனக் காய்ந்தான்.
“கோபமா? நான் சொன்னது புரியவில்லையா?” எனக் கவலையுடன் இனியா வினவ,
“லீவ் இட் இனியா, எல்லாம் புரிந்தது, உன் போன் காலுக்குக்காகக் காத்திருந்தேனா? அந்த ஏமாற்றம் தான் கோபமாக வெளிப்படுகிறது…”
“அப்பாடி, தப்பித்தேன், கொலம்பஸ்க்கு விளங்களையோ எனப் பயந்தே போனேன்….” எனக் கிண்டலடிக்க,
“ஒருத்தன் கோபத்தில் இருக்கானே எனச் சமாதானம் படுத்துகிறாயா?”
“கூல் கூல்….” என்றபடி, “வீட்டில் அனைவரும் இருந்தார்கள், உடனே போன் பேசத் தொடங்கினால் நன்றாக இருக்காது இல்லையா? அதான் அவர்களோடு இருந்து விட்டு ஃப்ரீயானவுடன் உங்களை அழைக்கிறேன், இப்போ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்…”
“நீ எங்க கூப்பிட்ட? நானல்லவா அழைத்தேன்….” என வம்பு செய்ய,
“ரெஸ்பான்ஸ் வருவதைப் பார்த்து நாங்களே அழைத்து இருப்போம்….” எனக் கெத்துக் காட்ட,