காதல் வைபோகமே…. நாள் -10(1)

அத்தியாயம் 30

மறுநாள் ராம்குமாரை காபி ஷாப்பில் சந்தித்துத் தன்னுடைய கொள்கைகளை விளக்கினாள்.

“ஓ.கே. மேடம், ஸார் எல்லா விவரத்தையும் ஏற்கனவே சொல்லி விட்டார். மேலும் நீங்கள் ஸாரோட குடும்ப நண்பரோட பெண், எந்தத் தப்பும் நடக்கக் கூடாது என எச்சரித்துள்ளார்…” 

“ஓ….!” 

“மேடம்,  இது என்னோட கார்டு,  உங்களை அணுகுபவர்களை, இந்த நம்பரைக் கொடுத்துப் பேசச் சொல்லுங்கள் , நான் பார்த்துக் கொள்கிறேன்…” 

“சரி…” என அவருடைய சம்பள விவரம் கேட்டு,  அதையும் முடிவு செய்தாள். பின் ஏற்கனவே அணுகியவர்களைப் பற்றிய விவரம் தந்தாள்.

இனியாவின் வேலை செய்யும் நேரம் மற்றும் அவளுடைய கைபேசி நம்பர் ஆகியவற்றை ராம்குமாரும் கேட்டு வாங்கிக் கொண்டார். இரண்டு நாட்களில் தொடர்பு கொள்வதாகக் கூறிச் சென்றார்.

வீட்டுக்கு வந்த இனியா,  ‘விக்ரமை எப்படித் தொடர்பு கொள்ளவது…?’ எனக் குழம்பினாள்.

 

‘எல்லாம் நல்லபடியாக முடிந்தது என மெஸேஜ் செய்து விடலாம்’ என முதலில் நினைத்தாள்.

பின், ‘தல பேசச் சொன்னாரே…’ என யோசித்தாள். ‘இப்போது அழைப்போமா?’ என் நினைத்தாள். பின், ‘தொந்தரவாக இருக்குமோ?’ என்று தயங்கினாள்.

ஒரு முடிவாக, எப்போது கால் பண்ணட்டும் ஸார்? என்ற பதிவை அனுப்பினாள்.

ஒரு மணிநேரம் ஆகியும் பதில் வரவில்லை. இனியா ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தன் பதிவிற்குப் பதில் வந்து விட்டதா? என்று செக் செய்து கொண்டிருந்தாள்.

இவள் செய்கையைப் பார்த்து என்னவென்று காவியா விசாரிக்க, விவரத்தைச் சொன்னாள்.

“இதற்கு நீ போனே செய்திருக்கலாம், அவர் ஃப்ரீயாக இருந்தால் எடுத்திருப்பார், இல்லையெனில் திரும்ப அழைப்பார். ஒன்றுமே இல்லாததைப் பெரிசு பண்ணிக் கொண்டிருக்கிறாய்…” என்று திட்டினாள். “முதலில் கால் செய்…” என்றவாறு நகர்ந்தாள்.

காவியா சொன்னது சரியென்று தோன்ற, கைபேசியை எடுக்க, விக்ரமிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஸாரி மீட்டிங்கில் இருந்தேன். இப்போது தான் முடிந்தது , சொல் என்ன விசயம் இனியா…?” 

“ஒன்றுமில்லை ஸார்,  இன்று ராம்குமாரைப் பார்த்தேன். அதைப் பற்றிப் பேசலாம் எனக் கால் செய்தேன்.”

“ஓ…!,  என்னாச்சு?  நல்லபடியாக முடிந்ததா?”

“ம்ம்…” என்று அங்கு பேசியவற்றைத் தெரிவிக்க, 

“ஓ.கே. இப்போது குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதல்லவா?”

“எஸ் ஸார், தேங்க் யூ ஸார்”

“ஓ.கே. கவனம் இனியா…”

“ஓ.கே. ஸார்… அப்புறம் நீங்கள் என்னைக் குடும்ப நண்பரோட பெண் என்று சொன்னீங்க போல…” என்று இழுக்க,

“ஆமாம், நாம் குடும்பம் தானே?” என ஒருவிதமான ஹஸ்கி குரலில் கேட்க,

அந்தக் குரல் என்னவோ செய்ய, மனம் படபடக்க, ரேவதி மாதிரி வெறும் காத்து தான் வருது என்ற பாணியில், “ஸார்ர்…” என இழுத்தாள்.

அவளின் ஸாரை கேட்டுச் சிரித்தபடி, “நாம் எல்லோரும் ‘சி’சேனல் குடும்பம்தானே…?”

அவன் பதிலைக் கேட்டவுடன், உண்மையில் இனியாவிற்கு ஆசுவாசமாகி இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக மனதில் ஒரு மெல்லிய ஏமாற்றம் பரவியதை உணர்ந்தாள்.

தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, “ஓ…!” என்றாள் தேய்ந்த குரலில்,

அந்தப் பதிலில்,  ‘ஆஹா…! நம்ம ஜில்லுக்கு, இப்போது தான் பல்பு எரிய ஆரம்பிக்கிறது போல…’ என நினைத்தான்.

“அப்புறம், என்ன உதவி வேண்டுமானாலும் கூப்பிடு, தயங்காதே இனியா.” என்றவன், மேலும், அவள் யோசிக்கட்டும் என, வேலையிருப்பதாகச் சொல்லிப் போனை வைத்தான் விக்ரம்.

இனியாவும் தன் எதிர்பார்ப்புகளை நினைத்துக் குழம்பிப் போனாள். 

அத்தியாயம் 31

மேலும் சில நாட்கள் செல்ல…,  ராம்குமார் உதவியுடன்,  இனியா சில விளம்பரங்களில் நடித்து இருந்தாள்.

‘ருசிக்க ரசிக்க’ நிகழ்ச்சியும் மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிரிபுதிரி வெற்றியானது.

 விக்ரம் இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாட,  கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி என முடிவு செய்தான்.

இதை அர்ஜுனிடமே சொல்லி, அறிவித்திருக்க முடியும். ஆனால் இனியாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தானே நேராக வந்து,

“ ‘ருசிக்க ரசிக்க’ டீமின் மாபெரும் வெற்றியைக் கொண்டாட, அடுத்த சனிக்கிழமை, கிழக்குக் கடற்கரையில் உள்ள பெரிய ஹோட்டலில் பார்ட்டி…” என அறிவித்தான்.

எல்லோரும் சந்தோஷத்தில் கூச்சலிட்டுக் கொண்டிருந்த சமயத்தில்,  வழக்கம் போல் ஒரு காந்தப் பார்வையை அவள் மீது செலுத்தி விட்டு,  நல்ல பிள்ளையாகப் பார்வையை மாற்றிக் கொண்டான்.

இனியா வழக்கம் போல், “பார்த்தானா? இல்லையா?”  என்ற குழப்பத்தில் திகைத்து நின்றாள்.

அப்போது ரோஜா, “ ஸார்,  டீம் மக்கள் மட்டும் தானா?”

 உடனே அனைவரும், “உனக்கு உன் கவலை…” என ஓட்ட,  

உடனே ரோஜா, “எனக்கு நான்தானே பேசவேண்டும்” எனப் பதில் சொன்னவள்,  அப்படியே அர்ஜுனைப் பார்த்து, “ஸார் நாமெல்லாம் ஒரே கட்சி தானே…?” என கேட்க, 

அங்கே சிரிப்பலை பரவியது.

உடனே விக்ரம் சிரித்தபடி, “ எஃஸ்டரா ஒரு நபர் ஓ.கே.”

 என்றவன், “தென்,  ஓ.கே. கய்ஸ்,  ஐ ஆம் லீவிங்….” 

விக்ரம் கிளம்பியவுடன்,  அர்ஜுன் பிரேக் அறிவித்து விட்டு இனியாவுடன் காற்றாட,  செட்டை விட்டு வெளியே வர, 

“பாஸ்…., அனு இல்லாமல் போவது எப்படி எனச் சோக கீதம் பாடிக்கொண்டு இருந்திருப்பீர்கள்,  ரோஜா புண்ணியத்தில் தப்பித்தீர்கள்…” என்று கேலி செய்தபடி வெளியே நின்றார்கள்.

அப்போது தான் காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்த வரச் சொல்லி,  வாசலில் காத்திருந்த விக்ரம், இவர்களைப் பார்த்தவுடன்,

“ அர்ஜுன்…” என அழைக்க,  இனியாவும் அர்ஜுனும் அருகே வர,

 எல்லோருடைய பாதுகாப்பையும் பார்த்துக் கொள்ளுங்கள். ஈ.சிஆர் இல் இருந்து வீட்டிற்குப் போவதற்கு என்ன ஏற்பாடு என்று கேட்டுக் கொள்ளுங்கள். நாளைக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது, கவனம்.”

“ஓகே. ஸார், கண்டிப்பாகப் பார்த்துக் கொள்கிறேன்.” 

அப்புறம் இனியா, “ ஹவ் அபௌவ்ட் யுவர் ஆட் ஷூட்டிங்ஸ்”

“குட் ஸார், நோ இஸ்யூஸ்….” 

அதற்குள் கார் வர, “ஓ.கே….” என்றவாறு அர்ஜுன் அறியாமல் கண் சிமட்டிச் சென்றான்.

இனியாவின் இதயமோ இந்தச் செயலால்,  இரயில் வேகமெடுத்தது.

இதைக் கவனிக்காமல், அர்ஜுன் வழக்கம் போல், “பார் இனியா, ஸார் எப்படி எல்லாவற்றையும் கவனித்து அக்கறை எடுத்துக் கொள்கிறார்…” எனப் பெருமை பேசினான்.

மற்ற நேரமாக இருந்தால் ஏதாவது கவுண்ட்டர் கொடுத்திருப்பாள்.

மனம் வேறு ஏதோ யோசனையில் இருந்ததால், ஆம் எனத் தலையாட்ட,

“இன்று மழை கொட்டப் போகிறது போ…” என்றான் அர்ஜுன்.

அவள் சிரித்தபடி, “நாங்க உண்மையை ஒப்புக் கொள்வோம் பாஸ்….” என்று கெத்துக் காட்ட, 

அவன் சிரித்தபடி, “ வா நேரமாச்சு , உள்ளே செல்வோம்…” என்று சொல்ல,

 

இருவரும் உள்ளே சென்றனர் .