“சரி டி”, என்று கிளம்ப ஆரம்பித்தாள் வெண்மதி. பூர்ணிமா மருந்து சீட்டை தேடி எடுத்துக் கொண்டு கீழே வந்தவள் கணவனிடம் விஷயத்தைச் சொல்ல அவனுக்கு நண்பனை நினைத்து தலை வேதனையாக இருந்தது.

வெண்மதி கிளம்பி வெளியே வர எப்போதுமே அவளைப் பார்த்து ரசிக்கும் சரவணன் அன்று அவள் புறம் திரும்பவே இல்லை. அவன் பார்த்த காட்சி அவன் மனக் கண்ணில் தோன்றி அவனை இம்ஸிக்கும் போது அவன் எப்படி சாதாரணமாக அவளைப் பார்ப்பான்? அவன் உணர்வுகளை மறைக்கும் அளவுக்கு அவன் கைதேர்ந்தவன் இல்லையே. அவன் அமைதியாக வண்டியை எடுக்க அவன் பின்னே ஏறி அமர்ந்தவள் எப்போதும் போல் அவன் தோளில் கை வைக்க அவன் மேல் நெருப்பாக கொதிப்பது போல இருந்தது.

தன்னுடைய தயக்கம் உதறி “என்னங்க உடம்பு சரியில்லையா?”, என்று கேட்டாள் வெண்மதி.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை”, என்று சொன்னவன் வண்டியைக் கிளப்ப “உன் புருசனுக்கு வெளிய சொல்ல முடியாத அளவுக்கான வைரஸ் காச்சல் மா. அந்த வைரஸை அவன் தான் விடாம பிடிச்சிருக்கான் தங்கச்சி”, என்று சொன்னான் செந்தில். அவன் சொன்னதைக் கேட்டு முறைத்த சரவணன் வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான். செந்தில் சொன்னதும் புரிந்தும் புரியாத நிலையில் வெண்மதி அவனிடம் எதுவுமே சொல்ல வில்லை.

அவர்கள் சென்ற பிறகு “இவங்க ரெண்டு பேரையும் என்ன தான் செய்றது டி?”, என்று கேட்டான் செந்தில்.

“என்ன செய்ய? எங்க அண்ணா தான் நல்லா சொதப்புறான்னு தெரியுது”

“உங்க குடும்பத்துக்கே அது தானே வேலை? நீ என்னை எத்தனை நாள் சுத்தல்ல விட்ட?”, என்று சொல்லி அவளிடம் இருந்து ஒரு முறைப்பை பெற்றுக் கொண்டான்.

“வெண்மதி அவனை புருசனா ஏத்துக்கிட்டாங்க. இவன் தான் விலகி இருக்கான்.  நீங்க அண்ணா கிட்ட பேசலாம்ல?”

“உங்க அண்ணன் எங்க என்னைப் பேச விடுறான்? மதி பாவம் அவளை ஏதாவது பேசியோ செஞ்சோ கஷ்டப் படுத்திறக் கூடாதுன்னு நினைக்கிறேன்னு சொல்றான். வெண்மதியே அவ மனசை திறந்து அவன் கிட்ட பேசணும். என் மனசுல நிர்மல் இல்லை, நீ தான் இருக்க மடையான்னு அவ சொன்னா தான் அவன் சரியாவான். இல்லைன்னா இப்படி தான் ஒதுங்கிப் போய் அவனும் கஷ்டப் பட்டு அவளையும் கஷ்டப் படுத்துவான். அவனைச் சொல்லியும் தப்பு இல்லை. ஏன்னா அவனைப் பொறுத்த வரைக்கும் அவன் மனசைத் தொட்ட முதல் பொண்ணு வெண்மதி தான். ஆனால் அவளுக்கு அப்படி இல்லை. அவ வாயாலே நிர்மலை பிடிச்சிருக்குன்னு சொல்லிருக்கா. அதனால நிர்மல் பத்தி உங்க அண்ணன் அதிகம் யோசிக்க தான் செய்வான். சரி அந்த மருந்து சிலிப் எடுத்தியா?”, என்று கேட்ட செந்தில் வேறு பேச ஆரம்பித்து விட்டான்.

வண்டியில் சென்ற சரவணன் அவளை இறக்கி விடும் வரைக்கும் எதுவும் பேச வில்லை. அவள் இறங்கியதும் “சாயங்காலம் நான் வர லேட் ஆகும் மதி. நீ பஸ்ல போறியா? இல்லை செந்திலை வரச் சொல்லவா?”, என்று அவள் முகம் பார்க்காமல் கேட்டான்.

“இல்லை, அண்ணா பூர்ணியைக் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போகணும்னு சொன்னாங்க. நான் பஸ்லே போய்க்கிறேன்”

“சரி வரேன்”

“ம்ம்”, என்று அவள் சொல்ல அவன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

அன்றைய நாளுக்கு பிறகு இருவருக்கும் இடையில் ஒரு திரை விழுந்த நிலை தான். அந்த திரையை யார் முதலில் கிழிப்பது என்று தெரியாததால் அவர்களுக்குள் மௌனமே அதிகம் நிலவியது. தேவைக்கு மட்டுமே பேசிக் கொண்டார்கள்.

மற்றொரு நாள் அவளுடைய வீட்டுக்கு இருவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவளது பெற்றோரைப் பார்த்து விட்டு அப்படியே நிர்மலின் பெற்றோரைப் பார்க்க போவதாக தான் பிளான்.

காலை உணவை முடித்ததும் “கிளம்பலாமா மதி?”, என்று கேட்டான் சரவணன்.

“இருங்க, என்னோட ஹேன்ட் பேகை மட்டும் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அறைக்கு சென்றாள் வெண்மதி.

அவனும் தன்னுடைய பர்சை எடுக்க மேலே சென்றான். அவன் போன போது மேலே ஒரு ஆணியில் தன்னுடைய ஹேன்ட் பேகைத் தொங்கப் போட்டிருந்தவள் அதை எடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அதில் இருந்து ஒரு பல்லி குதித்து கீழே விழ “ஐயோ”, என்ற அலறலுடன் அருகில் நின்றவனுடன் ஒட்டிக் கொண்டாள்.

அவன் முதுகில் அவள் அழுத்தமாக ஒட்டிக் கொள்ள அவன் தான் அவள் அருகாமையில் தடுமாறிப் போனான். அவளது நெருக்கம் அவனுக்கு பெரிய சோதனையாகவே இருந்தது.

முயன்று தன்னை நிலைப் படுத்திக் கொண்டவன் “மதி என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.

அப்போது தான் அவன் மீது ஒட்டி இருப்பது புரிய அவனிடம் இருந்து இருந்து விலகி “பல்லி”, என்றாள்.

“அது ஓடிருக்கும். நீ கிளம்பு”, என்று சொன்னவன் அடுத்த நொடி வேகமாக வெளியே சென்று விட்டான்.

இப்படியாகப் பட்ட நிகழ்வுகளைத் தவிர இருவரும் விலகித் தான் இருந்தார்கள். ஆனால் இருவருக்கும் ஒரே அறை சோதனையாக தான் இருந்தது.

தினமும் மொட்டை மாடியில் அவளுடன் அமர்ந்து காற்று வாங்கும் போது, வண்டியில் நெருக்கமாக அமர்ந்து செல்லும் போது, இருவருக்குமே மனது தடுமாறத் தான் செய்தது.

இப்படியே இரண்டு மாதம் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் சரவணன் காலில் கல் தடுக்கி ரத்தம் ஊற்றியது. சிறிது நேரத்தில் ரத்தம் நின்று அந்த காயம் இரண்டு நாட்களில் சரியாகி விட்டது தான். ஆனால் இது சாந்தி மனதில் சிறு நெருடலை உண்டாக்கியது. இரவில் ஏதோ கெட்ட கனவு வேறு கண்டிருந்ததால் அவளுக்கு மனது சரியில்லாமல் இருந்தது.

அன்று சரவணனின் வீட்டுக்கு வந்த சாந்தி “அக்கா சமையல் முடிச்சாச்சா?”, என்று கேட்டாள்.

“முடிச்சிட்டேன் சாந்தி, எண்ணெய் கத்திரிக்கா குழம்பு வச்சிருக்கேன். போகும் போது எடுத்துட்டு போ“

“சரிக்கா, அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

“என்ன சாந்தி?”

“சரவணனும் வெண்மதியும் சந்தோஷமா தானே இருக்காங்க? கூடிய சீக்கிரம் பேரப் பிள்ளையை எதிர் பாக்கலாமா”?”

“எங்க? ரெண்டு பேரும் நல்லா தான் பேசிக்கிறாங்க? எங்க போனாலும் ஜோடி போட்டுட்டு தான் போறாங்க. ஆனா ரெண்டு பேரும் இன்னும் விலகித் தான் இருக்காங்க போல? ரெண்டாவது கல்யாணம் பாத்தியா? நாம உடனே எதையும் எதிர் பாக்க முடியாது சாந்தி”

“அக்கா, கொஞ்ச நாளாவே எனக்கு மனசுக்கு ஒண்ணு தோணிட்டே இருக்கு”

“என்ன சாந்தி”

“நாம பனைக்குடி ஜோசியர் கிட்ட போய் ரெண்டு பேருக்கும் ஜாதகம் பாத்துட்டு வந்துருவோமா? கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே அந்த பிள்ளையோட முதல் புருஷன் இறந்துட்டார், அடுத்து நம்ம சரவணன் கூட போகும் போது ஆக்ஸிடெண்ட் வேற நடந்துச்சு. ரெண்டு நாள் முன்னாடி அவன் கால்ல வேற அடி பட்டுருச்சு. எனக்கு கெட்ட கனவு வேற? சரவணனுக்கு மேல மேல ஏதாவது வருது. எனக்கு மனசுக்கு கொஞ்சம் பக்கு பக்குன்னு தான் இருக்கு. ஒரு வேளை வெண்மதியோட ஜாதகத்தால தான் சரவணனுக்கு இப்படி ஆகுமோ?”, என்று கேட்டாள் சாந்தி. அதைக் கேட்டு திகைத்து நின்றாள் வசந்தா.

அப்போது வாசலில் நிழலாட திரும்பி பார்த்த வசந்தா அங்கே நின்ற வெண்மதியை சத்தியமாக எதிர் பார்க்க வில்லை. சாந்திக்கும் அதிர்ச்சி தான். அவளைக் கண்ட இருவருக்கும் அங்கே தர்ம சங்கடமான நிலை.

அவர்கள் அவளையே பார்க்க “என்னால அவருக்கு ஏதாவது ஆபத்து வரும்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா ஜாதகம் பாருங்க அத்தை. ஏதாவது பரிகாரம் இருந்தா நானே அதை செய்யுறேன். இல்லை அவரை விட்டு பிரியுறது தான் அவருக்கு நல்லதுன்னா நான் அதையும் செய்யுறேன்”, என்று மனதை கல்லாக்கி கொண்டு சொன்னவள் அடுத்த நொடி அறைக்குள் ஓடி விட்டாள்.

“பாத்தியா சாந்தி, நீ பேசினதை இந்நேரம் வேற யாராவது கேட்டிருந்தா இங்க பெரிய சண்டையே நடந்துருக்கும். ஆனா என் மருமக அவனையே விட்டுக் கொடுக்க துணிஞ்சிட்டா. இவ ராசியைப் பத்தி பேசுறியே? அப்படின்னா வைஷ்ணவி செத்ததுக்கு நம்ம மகனோட ராசி தான் காரணம்னு சொல்லப் போறியா?”

“அக்கா, என்ன இப்படிச் சொல்றீங்க?”

”நம்ம பிள்ளையைச் சொன்னா உனக்கு பதறுதுல்ல? அதே மாதிரி தானே அடுத்த வீட்டு பிள்ளைக்கும் இருக்கும்?”

“தப்பு தான் அக்கா. என்னை மன்னிச்சிருங்க, நான் வெண்மதி கிட்ட பேசுறேன்”

“வேண்டாம், இதை இதோட விட்டுரு”

“அவ அழுதுட்டு போறாக்கா”

“அவ புருஷன் வந்து சமாதானப் படுத்துவான். அப்படியாவது ரெண்டு பேரும் ஒட்டிக்கிறாங்களான்னு பாப்போம்”, என்று சொல்லி விட்டு வேறு பேச ஆரம்பித்து விட்டாள்.