“ஒரு நிமிஷம் இரு மதி”, என்று சொன்னவன் அவளது ஒரு காலைத் தூக்கி அவன் மடியில் வைத்துக் கொள்ள அதிர்ந்து போனவள் “ஏன் இப்படி பண்ணுறீங்க?”, என்று காலை உருவிக் கொண்டு அவன் அருகே அமர்ந்தாள்.
“காலை நீட்டு மதி”
“எதுக்கு இப்படி பண்ணுறீங்க? முதல்ல நீங்க எந்திரிங்க”
“நான் கொலுசு போடணும்”
“நானே போட்டுக்குறேன்”
“ஏன் நான் போடக் கூடாதா? பிளீஸ் காலைக் கொடு”, என்று சொல்ல தயக்கமாக அவன் புறம் நீட்டினாள். மீண்டும் அவள் காலை எடுத்து தன்னுடைய மடியில் வைத்தவன் அந்த கொலுசை அவளுக்கு போட்டு விட்டான்.
இரண்டு கால்களிலும் போட்ட பிறகு அவள் காலை உருவிக் கொள்ள முயல அதை இழுத்து வைத்துக் கொண்டான் சரவணன்.
அவன் விரல்கள் அவள் காலை வருட அவளுக்கு கூச்சமாக இருந்தது. “கடவுளே ஏன் இப்படி பண்ணுறான்?”, என்று அவள் எண்ண “உன்னோட கால் ரொம்ப சாஃப்ட்டா இருக்கு மதி”, என்று செர்டிபிகேட் வேறு கொடுத்தான்.
அவளுக்கு தான் படபடப்பாக இருந்தது. சிறிது நேரம் கழித்து அவன் அவள் காலில் இருந்து கையை எடுக்க அவசரமாக காலை உருவிக் கொண்டு எழுந்து நின்றவள் அவனை எதிர்க் கொள்ள முடியாமல் அங்கிருந்து சென்றாள்.
அடுத்து வாழ்க்கை எப்போதும் போல நகர ஒரு ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. இருவருக்கும் விடுமுறை என்பதால் சாவகாசமாக தூங்கி எழுந்தார்கள். காலை உணவு முடிந்ததும் “மதி ரெஸ்ட் எடு, நான் வயல் வரைக்கும் போயிட்டு வரேன்”, என்றான் சரவணன்.
பூர்ணிமாவும் அவளுடைய வீட்டில் இருக்க தன்னை இப்படி தனியாக விட்டுவிட்டு போகிறானே என்று இருந்தது அவளுக்கு.
அவள் மனதை உணர்ந்தவன் “அம்மா இருக்காங்க தானே? பேசிட்டு இரு. அம்மாவுக்கு பேச்சின்னா போதும்”, என்றான்.
“சரி”, என்று சொல்லி அவள் புன்னகைக்க அவன் தான் அவள் சிரிப்பில் சிதறிப் போனான். ஆனால் அவளை நெருங்க அவன் முயலவே இல்லை. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவன் புரிந்து கொள்ளவும் இல்லை.
நிர்மலைப் பற்றி பேசினால் அவள் மனது காயப் பட்டுவிடுமோ என்று பயந்தே அதைப் பற்றி பேச வில்லை. ஆனால் அதை தெளிவு படுத்தாமல் அவளுடன் வாழ அவன் தயாராக இல்லை. அவள் நிர்மலை பிடித்து தான் திருமணம் செய்தேன் என்று சொல்லாமல் அப்பா சொன்னதால் திருமணம் செய்தேன் என்று சொல்லி இருந்தால் அவனுக்கு எந்த தயக்கமும் வந்திருக்காது. ஆனால் அவள் நிர்மலை பிடிக்கும் என்று சொல்லி இருந்ததால் தான் தயங்கினான்.
அவன் வயலுக்கு சென்றதும் வசந்தாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் வெண்மதி. சரவணன் மற்றும் பூர்ணிமா சிறு வயதில் செய்யும் சேட்டைகளை வசந்தா சொல்லிக் கொண்டிருக்க வெண்மதிக்கு நேரம் நன்கு போனது. சிறிது நேரத்தில் பூர்ணிமாவும் சாந்தியும் அங்கே வந்து விட அரட்டை வெகு சுவாரசியமாக போனது. இப்போதெல்லாம் வெண்மதிக்கு வசந்தாவிடம் எந்த தயக்கமும் இல்லை. அத்தை அத்தை என்று அவளிடம் ஒட்டிக் கொண்டே திரிந்தாள்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள் வெண்மதி. எப்போதுமே சீக்கிரம் கிளம்பி வெளியே சென்று விடுவது போல இன்றும் சரவணன் சென்று விட்டான். அவன் வெளியே சென்றதும் வெண்மதி உடை மாற்ற ஆரம்பித்தாள்.
அப்போது அங்கே வந்த செந்தில் “மச்சான் போன மாசம் பூர்ணிக்கு மாத்திரை வாங்கிட்டு வந்தல்ல? அந்த மருந்து சிலிப் உன் கிட்ட தானே இருக்கு?”, என்று கேட்டான்.
“ஆமா டா, என் கிட்ட தான் இருக்கு. மாத்திரை வாங்கிட்டு வரவா?”
“இல்லை டா, இன்னைக்கு பூர்ணிக்கு செக்கப் இருக்கு. அதை கொண்டு போய் காட்டிட்டு அதே மாத்திரையை வாங்கவா, இல்லை வேற எழுதி தராங்களான்னு கேக்கணும். கொஞ்சம் அதை தரியா?”
“சரி இரு, எடுத்துட்டு வரேன்”, என்று சொன்னவன் வெண்மதி கிளம்பி முடித்திருப்பாள் என்று எண்ணி லேசாக மூடி இருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து விட்டான். திடீரென்று சத்தம் கேட்கவும் அவள் திரும்பிப் பார்க்க அவனோ அவள் நின்ற கோலத்தைக் கண்டு அதிர்ந்து விட்டான்.
அவள் சேலைக்கு மடிப்பு எடுத்துக் கொண்டிருந்ததால் வெறும் பாவாடை மற்றும் சட்டையுடன் நின்றிருந்தாள். அவன் பார்வை அவளையே வெறித்தது. அவளது அழகை கண்டவனுக்கு மூச்சடைத்தது. சட்டென்று அவன் உணர்வுகள் அவனைத் தாக்க வேகமாக மூச்சு இழுத்த படி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளும் அவனைப் பார்த்து விட்டாள். ஒரு சங்கடமான சூழ்நிலை தான் அது. சட்டென்று முந்தானையை எடுத்துப் போர்த்தினாலோ, இல்லை கைகளால் மறைத்தாளோ அது அவனை அவமானப் படுத்துவது போல இருக்கும் என்பதால் தயங்கி தலை குனிந்த படி நின்றாள். ஓடிச் சென்று அவளை இறுக்கி அணைக்க அவனுக்கு வெறியே வெந்தது.
அவளும் இந்த கோலத்தில் தன்னைப் பார்த்து அவன் நெருங்கி வருவான் என்று எதிர் பார்க்க அவனோ “சாரி மதி”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான். எதிர்பார்த்தது நடக்காததால் மனதுக்குள் சட்டென்று ஒரு வெறுமை தாக்க சேலை கட்ட வேண்டும் என்பதைக் கூட மறந்து கட்டிலில் அமர்ந்தவள் ஏங்கி ஏங்கி அழுதாள். அவனுக்கு எழுந்த உணர்வுகள் அவளை மட்டும் தாக்காதா என்ன?
மருந்து சீட்டை எடுத்து வருவான் என்று நினைத்து காத்திருந்த செந்தில் சரவணன் ஒரு மார்கமாக வரவும் திகைப்பாக அவனைப் பார்த்தான். சரவணனுக்கு நெஞ்செல்லாம் அடைத்து ஒரு மாதிரி மூச்சு விடுவதற்கு திணறிப் போனான். அவன் நிலையைக் கண்ட செந்தில் பயந்தே போனான்.
“டேய் மச்சான், என்ன டா? என்ன டா ஒரு மாதிரி இருக்க? என்ன பண்ணுது?”, என்று கேட்க அவன் சத்தம் கேட்டு பூர்ணிமாவும் அங்கே வந்து விட்டாள்.
“அண்ணா என்ன ஆச்சு?”, என்று அவள் கேட்ட பிறகு தான் கொஞ்சம் மூச்சை வேகமாக வெளியிட்டவன் தலையை அழுந்த கோதிக் கொண்டான். “நான் ஏன் இப்படி?”, என்று தலையில் அடித்த படி தன்னை சமாளிக்க முயன்றான். அந்த நேரம் தனிமை தேவைப் படுவது போல இருக்க அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்க்காமல் “நான் கொஞ்சம் வெளிய இருக்கேன்”, என்று சங்கடமாக சொல்லி விட்டு சென்று விட்டான்.
“என்ன ஆச்சுங்க, அண்ணனுக்கு?”
“தெரியலை டி, மாத்திரை சிலிப் கேட்டேன். ரூமுக்கு போனான். அப்புறம் பாத்தா ஒரு மாதிரி மூச்சு விட சிரமப் படுற மாதிரி வரான். அவனைப் பாத்தா எனக்கு ஒண்ணு தோணுது”
“என்னதுங்க?”
“இல்லை பாரின்ல இருக்குறப்ப வீடியோ காலில் பேசிட்டு இருக்கும் போது ஒரு பீல் வரும், அப்படியே செத்துறலாம்னு. அதே ரியாக்சனை உங்க அண்ணா கிட்ட பாக்குறேன். சரி நான் அவனைப் பாக்குறேன். நீ வெண்மதியைப் போய் பாரு”, என்று செந்தில் சொல்ல பூர்ணிமா அவனை முறைத்தவாறு வெண்மதியைத் தேடிச் சென்றாள்.
பூர்ணிமா உள்ளே சென்ற போது வெண்மதியோ பாவாடை மற்றும் சட்டையுடன் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளது அந்த கோலத்தைக் கண்டு திகைத்து விட்டாள்.
“வெண்மதி என்ன ஆச்சு டி?”, என்று சொல்லி கொண்டே சேலையை எடுத்து அவள் மேல் போட அவளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள் வெண்மதி.
தோழியை அழ விட்டவளுக்கு எதுவோ புரிவது போல இருந்தது. இவள் உடை மாற்றும் போது அவன் உள்ளே வந்திருக்க வேண்டும். இவள் நிலையைக் கண்டு மூச்சு திணறி அவன் வெளியே போயிருக்க வேண்டும். அவன் விலகல் தாங்க முடியாமல் இவள் அழுகிறாள் என்று பூர்ணிமாவுக்கு புரிந்தது.
“இப்ப எதுக்கு இந்த அழுகை? எதுவும் உன் கையை விட்டு போகலை வெண்மதி. உனக்கு முன்னாடி வாழ்க்கை விரிஞ்சு கிடக்கு. எல்லாம் மாறும் டி. இதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம். அண்ணா கிளம்பி கீழே வெயிட் பண்ணுறாங்க. நீ சீக்கிரம் கிளம்பி வா”, என்று சொன்னாள் பூர்ணிமா.