காதல் 9

கதிரவன் மீண்டு அக்காலை நேரத்து குயில்கள் கூக்குரலிட எழுந்தாள் அப்சரா. யாதவ் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவள் மெதுவாக எழுந்து குளியலறை சென்று தயாராகி கீழே வந்தாள். அவள் வர எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயா, “டேய்..” சத்தமிட்டார்.

நான்கைந்து பேர் உள்ளே வர, சுதாகர் பின்னிருந்து தன் கைக்குட்டையால் அப்சரா மூக்கை அழுத்தினார். அவள் மயங்கி சரிய, வந்தவர்கள் அவளை தூக்கினார்கள்.

தனலட்சுமி வெளியே வந்து, “ஏய்ய்ய்…அவள என்ன பண்றீங்க? விடுங்க” அவர்களருகே வந்து கொண்டே சத்தமிட்டார்..

சத்தம் கேட்டு வீட்டு ஆட்கள் வர, ஜெயா தனலட்சுமி குறுக்கே வந்து அவர் காலை தட்டி விட, அவர் கீழே விழுந்து தன் மகனை அழைத்தார்.

அப்சராவை காரில் போட்டு ஜெயா, சுதாகர், அவர்கள் ஆட்களுடன் காரில் ஏறினார்கள்.

வேலையாள் ஒருவர் வேகமாக சிவகுமாரை அழைக்க ஓட, பெண்மணி ஒருவர் யாதவிடம் ஓடினார்.

இருவரும் ஒரே நேரத்தில் வந்தனர்.

சிவகுமாரையும் தன் மகனையும் பார்த்த தனலட்சுமி..

யாது ஜெயாவும் அவ புருசனும் நம்ம அப்பூவை கடத்தீட்டு போறாங்க. ஜெயா பட்டுப்புடவையில் இருந்தாள் அவர் கூறிக் கொண்டிருக்க, வாயில் கையை வைத்து கொட்டாவியை அடக்கியவாறு வந்தாள் கீர்த்திகா.

யாதவ் சினமுடன் அவளிடம் வந்து அவளது கழுத்தை இறுக பற்றி, “அப்பூவை எங்க கடத்தி இருக்கீங்க? சொல்லு?” சத்தமிட்டான்.

“கடத்தீட்டாங்களா? யாரு?” கீர்த்திகா பதறுவது போல நடித்தாள்.

“அதான் தெரியலைன்னு சொல்றால்ல அவளை விடு. முதல்ல அப்பூவை தேடுங்க” தனலட்சுமி கூற, கூலாக அனைவரையும் பார்த்துக் கொண்டே உணவுமேசையில் வைத்திருந்த ஆப்பிளை கொறித்தாள் கீர்த்திகா.

என்ன எண்ணினாரோ வெளியே செல்ல இருந்த சிவக்குமார் சற்றும் சிந்திக்காது பழக்கூடையில் இருந்த கத்தியை எடுத்து கீர்த்திகா கழுத்தில் வைத்தார்.

“சொல்லு? அப்சராம்மா எங்க இருக்காங்க?” அவர் கேட்க, “ஒரு வேலைக்காரனுக்கு இவ்வளவு தைரியமா?” சினமுடன் கேட்டாள்.

“வேலைக்காரன் தான் என் முதலாளிக்கு விசுவாசமான வேலைக்காரன்” அவளை முறைத்தார்.

“சொல்லு இல்லை உன்னை கொல்ல கூட தயங்க மாட்டேன்” சீற்றமுடன் பேசினான் யாதவ்.

அவளுக்காக என்னை கொல்வீயா?

அவ என்னோட அக்கா…

அக்கான்னா உன்னோட அம்மா வயித்துலையா பொறந்தா?

இது சரியில்லை என்ற சிவக்குமார் கத்தியை யாதவ் கையில் கொடுத்து விட்டு அவர் அலைபேசியில் யாருடனோ தொடர்பு கொண்டார்.

“யாதவ் வாங்க” அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்.

கீர்த்திகா அலைபேசியை எடுக்க, அவளது அலைபேசியை பிடுங்கி அவள் அம்மாவிற்கு அழைத்தார் தனலட்சுமி.

ஜெயா கீர்த்திகாவிடம் பேசுவது போல ஓர் இடத்திற்கு வரச் சொல்ல, தனலட்சுமி கீர்த்திகாவை பார்த்து புன்னகைத்தார்.

“என்ன அத்தை, அவள காப்பாத்திடலாம்ன்னு நினைச்சீங்களா? முடியாதே! அந்த மாப்பிள்ளை இன்னும் அரை மணிநேரத்தில் அவ கழுத்துல தாலி கட்டிருவான்” ஏளனமாக சிரித்தாள் கீர்த்திகா.

அதே அலைபேசியில் தன் மகனை அழைத்து இடத்தை தனலட்சுமி கூற, அம்மா உடனே நீங்களும் வாங்க..

நானுமா?

“அப்பூ கல்யாணத்தை பாக்கணும்ன்னா வாங்க” சொல்லி அவன் அணைத்து விட்டான்.

தனலட்சுமி எதையும் கீர்த்திகா முன் காட்டாது அப்சராவை அவர்கள் தூக்கி சென்ற மஹாலுக்கு விரைந்தார்.

கண்விழித்த அப்சரா திருமண கோலத்தில் இருப்பதை பார்த்து திகைத்து விழித்துக் கொண்டிருந்தாள்.

“மேம் எழுந்துட்டீங்களா?” முகத்தை நன்றாக கழுவி விட்டு வாங்க. ஒப்பனை செய்யணும்” ஒரு பெண் கூற, “நான் இங்கிருந்து போகணும். உதவுங்களேன்” அப்சரா அப்பெண்ணிடம் உதவி கேட்டாள்.

“பணம் முன்னதாகவே கொடுத்துட்டாங்க மேம்” அவள் கூறிக் கொண்டிருக்க, உள்ளே அதிரடியாக நுழைந்தார் ஜெயா.

“இங்க என்ன வெட்டிப் பேச்சு பேசிட்டு இருக்க? ஏய்…நீ எல்லாவற்றையும் சீக்கிரம் எடுத்து வை. மாப்பிள்ளை தயாராகிட்டார். பத்து நிமிடத்தில் ஒப்பனையை முடிக்கணும்” அப்பெண்ணிடம் சத்தமிட்டு அப்சராவிடம் வந்தார்.

“இங்க பாருடி எப்படியும் ஒருத்தனை கல்யாணம் செஞ்சுட்டு வாழ்ந்து தான ஆகணும். நீ இவரை தான் கட்டிக்கிற…இல்ல..ஜெயில்ல இருக்கும் உன்னோட அப்பன் பரலோகம் போயிருவான். உள்ளே எங்க ஆளுங்க இருக்காங்க. உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்” கால் மீது கால் போட்டு அமர்ந்தார் ஜெயா.

கண்ணீருடன் குளியலறைக்கு சென்று தன்னை சரி செய்து வந்தாள் அப்சரா. அவளுக்கு ஒப்பனை போட்டு அணிகலன்களுடன் மணமேடையில் அமர்த்தினர். அருகே இருந்த மாப்பிள்ளை கொஞ்சமும் இங்கிதமில்லாமல் அவள் தொடையில் கை வைத்தான்.

அப்சரா அவன் கையை தட்டி விட்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

சிவக்குமாரும் யாதவும் திருமண மஹாலை அடைந்தனர். அவர்கள் வருவார்கள் என அறிந்து வைத்திருந்த சுதாகரன் தன் ஆட்களை அம்மஹாலை சுற்றி நிற்க வைத்திருந்தார்.

திருமண மஹாலில் மக்கள் கூட்டத்தை பார்த்து அதிர நின்றிருந்த அவ்விருவரையும் சுதாகரின் ஆட்கள் பின்னிருந்து அவர்கள் தலையில் கட்டையால் அடித்து மயங்க வைத்து தனி அறையில் அடைத்து வைத்தனர்.

நேற்றைய இரவில் சம்பா தன் குடும்பம் முன் அவமானப்படுத்தியதாக உணர்ந்த சுதாகரன் உடனே மாப்பிள்ளையின் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு இரவோடு இரவாக அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை அழைத்திருந்தார். திருமண ஏற்பாடுகளும் அப்பொழுதே தொடங்க ஆரம்பித்து இருந்தது.

கீர்த்திகாவிற்கு சம்பாவால் அவள் தந்தை பட்ட அவமானம், அவள் மனம் யாதவை விட்டு சம்பா பின் போகவும், இதை சாதகமாக பயன்படுத்தி அவளும் இதில் கலந்திருந்தாள்.

அப்சராவை இதற்கு மேல் விடக் கூடாது. தந்தை கூறிய அப்சரா திருமணத்தில் மனம் லயித்து அவளும் இரவு ஏற்பாட்டை கவனித்து விட்டு காலை தான் வீட்டிற்கே வந்திருந்தாள்.

சற்று நேரத்தில் சிவக்குமார் முதலில் விழித்து சன்னலை திறந்து வெளியே பார்த்து செல்லும் ஒருவரை அழைத்து உதவி கேட்டார். அவரும் உதவ முன் வந்தார்.

மயக்கத்தில் இருக்கும் யாதவ் மீது தண்ணீரை தெளித்து விழிக்க வைத்து இருவரும் வெளியே வர, உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. இருவரும் வேகமாக உள்ளே ஓடினார்கள்.

மாப்பிள்ளை அமரும் இடத்தில் சம்பத் அமர்ந்திருக்க, தலைகவிழ்ந்தவாறு கண்ணீர் சொட்ட சொட்ட அப்சரா கையை இறுக்கியவாறு அமர்ந்திருந்தாள்.

மணமகனறைக்கு சென்ற மாப்பிள்ளையை மயக்கமடைய வைத்த சம்பத், அறையின் உள்ளிருந்த ஓர் அறையில் அடைத்து விட்டு, அவனை தேடி வந்த சுதாகரன் ஜெயாவை மற்றொரு அறையில் அடைத்து விட்டு, அவன் பெற்றோரை சமாளிக்க சொல்லி சம்பத் அழைத்து வந்த சேந்தனிடம் சொல்லி மணமேடையில் அமர்ந்தான்.

ஐயர் விழிக்க, கையசைத்து மந்திரம் ஓத சொல்ல, அவரும் செய்தார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களிடம் கையை மட்டும் உயர்த்திய சம்பத் மறு நொடியில் தாலியை எடுத்து அப்சராவின் மென்மையான வளைந்த கழுத்தில் கட்டினான்.

பதறிக் கொண்டு வந்த தனலட்சுமி, சிவக்குமார், யாதவ் அதிர, தாலி ஏறவும் நிற்காமல் வந்த அப்சராவின் கண்ணீர் சம்பத் கையை நனைத்தது. குனிந்திருந்த அவளது முகத்தின் முன் அவன் கையை நீட்ட, அவள் அவளது இறுகிய கையை மெதுவாக விரித்தாள்.

அதிலிருந்த மாத்திரைகளை பார்த்து திகைத்த சம்பத், அதை அவள் கையிலிருந்து பட்டென பிடுங்கி ஓமகுண்டத்தில் போட்டான். அவள் சினமுடன் நிமிர்ந்து சம்பத்தை பார்த்து இன்பமாய் அதிர்ந்தாள்.

“மாமா…..” அவள் தாலியை கையிலெடுத்து பார்க்க, அவன் புன்னகையுடன் கண்சிமிட்டினான்.

சம்பத் மீது பாய்ந்து அவனை அணைத்து கதறி தீர்த்தாள் அப்சரா.

அந்நேரம் உள்ளே வந்த சர்வேஸ்வரன் அப்சராவின் செயலையும், அவள் கணவனாக மாறிய தன் நண்பன் சம்பத்தையும் பார்த்து திகைத்தான்.

சர்வா மாமா…இவர்…இவர்…

உங்கள் நண்பன் தான! யாதவ் புரியாமல் இருவரையும் பார்த்தான்.

“நண்பனா?” தனலட்சுமி சர்வாவை பார்த்தார்.

ஆமா அத்தை, இவன் என் பால்ய சினேகிதன் சம்பத்.

“மாமா….” யாதவ் பதற, அவன் கையை அழுத்தி “வேண்டாம்” தலையசைத்த சர்வா சிவக்குமாரை பார்த்தான். அவர் கண்கலங்க மணமக்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்சா எல்லாரும் பாக்குறாங்க” சம்பத் கூற, வேகமாக அவனை நிமிர்ந்து பார்த்து எல்லாரையும் பார்த்தவள் தன் மாமா சர்வாவை பார்க்கவும் சம்பத்திடமிருந்து விலகி அவள் எழ, அவள் கரம் பற்றினான் சம்பத்.

“இன்னும் சம்பிரதாயம் முடியலை” தன் உயிர்நண்பன் சர்வேஸ்வரனை வெறித்து பார்த்தான் சம்பத்.

“மாமா..சர்வா மாமா. நான் சொன்னேன்ல்ல. அவரை இன்வெயிட் பண்ணனும்” சம்பத்தை பார்த்தாள் அப்சரா.

“அமரு. முடித்த பின் வரவேற்கலாம்” என்றான் சம்பத் யாதவை முறைத்துக் கொண்டு.

“யாது, நீ போ” சர்வா அவனை மேடை ஏறச் சொல்ல, அவனும் தனலட்சுமியும் மேடை ஏறினார்கள்.

அக்னிகுண்டத்தை வலம் வர தயாராக, சம்பத் காதருகே வந்து தாரா, சித்தார்த்தை கேட்டாள்.

“அவங்க வரலை” சம்பத் கூற, அவள் முகம் வாடியது.

தனலட்சுமி சம்பத்திடம், “தங்கை உறவுள்ள பொண்ணு இருக்காங்களா?” வெறுமனே கேட்டார்.

சம்பத் ஏதும் பேசாமல் இருக்க, “எங்க உறவுல உங்களுக்கு தங்கை முறையுள்ள பொண்ணை அழைக்கலாம்” என்று பார்த்து அழைத்தார்.

சம்பத் தன் மனைவி கையை பிடிக்க, அந்த பொண்ணு அப்சரா கையை பிடித்தாள். தயக்கமுடன் யாதவ் சம்பத்தை பார்த்தான்.

அவனை வெறித்தவாறு சம்பத் நகர முற்பட, “மாமா..அண்ணா தான் இங்கில்லை..யாது…” அப்சரா கேட்கவும், ஏதும் பேசாமல் யாதவிற்கு கையை கொடுத்தான் சம்பத். அவன் வியர்த்து விறுவிறுக்க பயத்துடன் சம்பத் கையை பிடித்தான்.

நால்வரும் வலம் வர, அவர்களின் திருமணமும் உறவும் நீடிக்க மந்திரங்களை ஐயர் ஓதினார்.

பின் சில சடங்குகள் நடந்தது.

மக்கள் சலசலப்பு அப்பொழுதைக்கு நின்றிருந்தது. மீண்டும் எழ, தன் மனைவி கையை பிடித்து அனைவர் முன்னும் பேசத் தொடங்கினான் சம்பத்.

முன் வரிசையில் சர்வேஸ்வரனும் சிவக்குமாரும் சம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோப்புகள் சிலவற்றை அனைவர் முன்னும் தூக்கி காட்டி, அப்சராவின் தந்தை அவரது மொத்த சொத்திற்கும் அதிபதீயாக என் மனைவியை அறிவித்துள்ளார்.

நாளையிலிருந்து என் மனைவியும் நானும் எங்களது கம்பெனியை கவனிக்க தொடங்கி விடுவோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் எங்களுக்கு அவசியம் என்றும் பேசி, அவன் மருத்துவன் என்றும் அறிமுகமானான்.

கூட்டத்தில் ஒருவர் எழுந்து, “சுதாகரன் சார் தான் எல்லாவற்றையும் மேற்பார்வை இடுவார். இப்பொழுதும் அவர் தானே இருப்பார்” கேட்டுக் கொண்டிருக்க, மாப்பிள்ளை, அவரின் பெற்றோர், சுதாகரன், ஜெயா வந்தனர்.

சம்பத் அவர்களை பார்த்துக் கொண்டே, “இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அவரவர் வேலையை பொறுத்தது” என்றான்.

“ஏய்…திருட்டுத்தனமா தாலியை கட்டிட்டு நீ எங்க குடும்பத்துக்குள்ள வந்துருக்க?” சுதாகரன் சீறினார்.

நான் எந்த திருட்டுத்தனமும் செய்யவில்லை. நீங்கள் தான்……நாங்க காதலிக்கிறோம்ன்னு தெரிந்தே ஏழு மணி நேரத்திற்குள் ஏற்பாடு செய்திருக்கீங்க.

“நான் எப்படி என் அப்சாவை எவனோ ஒரு பொறுக்கியிடம் விட்டு வைப்பேன்?” புருவத்தை உயர்த்தி, “அப்சா..நீ சொல்லு” என்றான்.

கூட்டத்தில் இருந்த கிழத்தி ஒருவர், “என்னத்த சொல்ல? அதான் மாப்பிள்ள பார்த்து புள்ள பாய்ஞ்சு கட்டி புடிச்சுச்சே! சுதாகரா…பொண்ணுக்கு விருப்பமில்லாதவனை கட்டி வைக்க நீ அவளோட அப்பன் இல்லை. உன் இஷ்டத்துக்கு எதையும் செய்யாத!” சத்தமிட்டார்.

“ஏய்ய்ய்ய்…கிழவி..” ஜெயா சத்தமிட,

“போடி போக்கத்தவளே” என்று கிழவி மணமக்கள் அருகே வந்து மலர்களை தூவினார்.

இருவரும் பாட்டியிடம் ஆசி பெற… “புள்ளய பார்த்துக்கோப்பா” ஆசி வழங்க, அவர் கருத்து நியாயம் என அனைவரும் வாழ்த்தினார்கள்.

இதை பொறுக்காத சுதாகரன், “பொட்ட பிள்ளைக்கு எப்படி எல்லா சொத்துக்களும் சேரும்? இவன் மாமாவை மிரட்டி இருக்கான்” சத்தமிட்டார்.

“சித்தப்பூ, நான் யாரையும் மிரட்டவில்லை. திருமணம் செய்து கொள்ள தான் பர்மிசன் கேட்டேன். அவர் அவராகவே ஒத்துக் கொண்டு சொத்துக்களை அவர் மகள் பெயரில் எழுதி என்னை நாமினியாக போட்டிருக்கார்”.

அதுமட்டுமல்ல…நான் இனி உங்க வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா வரப் போறேன் என்றான் சம்பத்.

சர்வா அதிர்ந்து எழுந்து சம்பத்தை உற்று பார்த்தான். சிவக்குமார் சர்வாவின் கை பிடித்தார்.

அங்கிள்..

அவர் கண்ணை மூடி திறந்தார்.

“சர்வா, எப்ப வந்த? பாருடா…நம்ம சொத்தை புடுங்கவே இவள காதலித்து இருக்கான்” ஜெயா முதலைக்கண்ணீருடன் சர்வாவிடம் வந்தார்.

சர்வா தன் தாயை நகர்த்தி மணமேடை ஏறினான்.

பிரச்சனை என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்க, நேராக சம்பத்தின் முன் வந்து சிறுபுன்னகையுடன் கையை நீட்டி, “வாழ்த்துக்கள்..வெல்கம் டூ அவர் ஹவுஸ்” என்றான்.

சம்பத் முறைக்க, அவனை இடித்தாள் அப்சரா.

சம்பா புன்னகையை வெளியே காட்டி பல்லை கடிக்க, இரு நண்பர்களும் அணைத்தனர்.

“திட்டம் சூப்பர் மச்சீ” சர்வா கூற, “இனி உன் குடும்பம் என் கையில். யாரையும் சும்மா விட மாட்டேன்” யாதவை முறைத்தான். அவனுக்கு அல்லு விட்டது.

“பார்க்கலாம்” புன்னகைத்தான் சர்வேஸ்வரன்.

“மாமா….” யாதவ் சர்வாவை அழைக்க, “ஒன்றுமில்லை பயப்படாத” என்பது போல தலையை ஆட்டி, “நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

சொத்து அப்சரா கையில் என்றவுடன் தனலட்சுமி இளித்தவாறு அவளது கையை பிடித்து, “இனி அம்மாவும் இருக்கேன்” என்றார்.

“அப்சராவிற்கு தான் தெரியுமே அவரை பற்றி” அவள் சிரிப்புடன் அவர் கையை எடுத்து விட்டு, “மாமா…” அழைத்தாள்.

சம்பத், சர்வா இருவரும் பிரிந்து அவளை பார்க்க, சர்வாவை அணைத்துக் கொண்டு, “ஏன் மாமா பாதியிலே போயிட்ட? நீ இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருந்தது” அழுதாள்.

“அதான் வந்துட்டேன்லடா. இனி மாமா பார்த்துக்கிறேன்” தன் நண்பனை பார்த்தான்.

“இவர்கள் யுத்தம் ஆரம்பமாகிவிடாமல்” என எண்ணிய சிவக்குமார் அவர்களுக்கு இடையே வந்து சர்வாவை கீழே அழைத்து சென்றார்.

ஜெயாவும் சுதாகரனும் கடுப்புடன் வீட்டிற்கு சென்றனர். மற்றவர்கள் புன்னகையுடன் உணவுண்ண சென்றனர்.

சிவக்குமாரை தனியே அழைத்து சென்ற சர்வா, “அங்கிள் நீங்கள் முன்னமே சம்பாவை பார்த்தீங்களா?”

“ம்ம்! நேற்று தான் இரவு பார்த்தேன்” அப்சரா வீட்டிற்கு வந்த சம்பத் சர்வாவின் தந்தையிடம் நடந்து கொண்டதை அவர் கூறவும் புன்னகைத்தான் சர்வா.

உங்களை பார்த்ததும் சம்பா என்ன செய்தான்? நீங்க உயிரோட இருப்பது அவனுக்கு ஏற்கனவே தெரியுமா? அப்பூ எப்படி சம்பாவை இந்த அளவிற்கு நம்புகிறாள்? வினாக்களை அடுக்கினான் சர்வேஸ்வரன்.

நான் அவனை முன்னாடியே பார்த்துட்டேன். ஆனால் அவன் என்னை நேற்று தான் பார்த்தான். ரொம்ப எமோஸ்னல் ஆகிட்டான்.

“சித்தப்பா…சித்தப்பா..” தவிர வேற வார்த்தையே அவனுக்கு வரலை என்ற சிவக்குமார் சித்தார்த் சம்பத் வீட்டில் இருப்பதாகவும் அப்சரா அவனை சந்தித்ததிலிருந்து அனைத்தையும் கூறி முடித்தார்.

அப்சராம்மா நம்ம சம்பத்தை முழுசா நம்புறாங்க..

என்ன திட்டம் வச்சிருக்கான்னு சொன்னானா?

நான் எவ்வளவு கேட்டும் சொல்லவில்லை. ஆனால் சம்பா யாதவை தான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறான்.

நீங்க தாராவை பார்த்தீங்களா?

“ம்ம்! பார்த்தேன். தூரத்திலிருந்து பார்த்தேன். பேச கூட இல்லை” கண்கலங்கினார்.

சம்பத் தந்தையின் உடன் பிறந்த தம்பி தான் சிவக்குமார். அதே போல தாரணி சம்பத்தின் உடன் பிறந்தவள் அல்ல. சம்பத்தின் உடன் பிறந்த தங்கை வந்தனா. அவளை கற்பழித்து கொன்ற வழக்கில் தான் குருமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவக்குமாரின் சொந்த மகள் தான் தாரணி.

“சாரி அங்கிள், எல்லாம் என்னால தான்…நான் என்னுடைய வேலையை பார்த்து என் வந்துவை…” கண்கலங்கினான் சர்வேஸ்வரன்.

“நல்ல நாள் அதுவுமாக கலங்காதீங்க. குருமூர்த்தி சார், யாதவ் இருவருக்கும் இதில் எவ்வித சம்பந்தமில்லை” என்று நான் இங்கு வந்ததும் அறிந்து கொண்டேன். சொல்லப் போனால் என்னை காப்பாற்றியதே உங்க மாமா குருமூர்த்தி தான்..

மாமா, இதெல்லாம் என்னிடம் சொல்லவில்லை.

அவர் எதையும் வாய் திறக்க மாட்டேங்கிறார்.

“பார்த்துக்கலாம் அங்கிள். இதில் சம்பந்தப்பட்ட யாரையும் சும்மா விடக்கூடாது” கையை இறுக்கி சினம் மிக தூணில் கையை இடித்தான்.

சரியாக உணவை முடித்து சம்பத்தும் அப்சராவும் வந்தனர்.

“மாமா….” அப்சரா ஓடி வந்து அவன் கையை பிடித்து பார்க்க, புருவம் சுருக்கி சம்பத் சர்வாவை பார்த்துக் கொண்டே அவர்களிடம் வந்தான்.

“எதுக்கு கையை இடிச்சுக்கிட்ட?” சர்வா கையை ஊதிக் கொண்டிருந்த அப்சராவை தன் பக்கம் இழுத்த சம்பத், “அப்சா உன்னோட மாமாவுக்கு நம்ம திருமணம் பிடிக்கலையோ?” ஏளனமான பார்வை ஒன்றை சம்பத் சர்வாவிடம் உதிர்த்தான்.

சிவக்குமார் தன் அண்ணன் மகன் சம்பத்தை முறைத்தார்.

அவர் கையை பற்றி புன்னகையுடன், “எங்க அப்பூவோட சரியான ஜோடியா தான் இருக்கீங்க சம்பா. இதுல பிடிக்காம போக என்ன இருக்கு? முதல் முறை எங்க அப்பூ சரியான முடிவெடுத்துருக்கா” சிலாகித்தான் சர்வா.

சம்பத் கையை விடுவித்து சர்வாவை அணைத்து “தேங்க்ஸ் மாமா”…குதூகலிப்புடன் இருந்தாள் அப்சரா.

“மாமா இப்போது இருந்தால் நன்றாக இருந்திருக்கும்” சர்வா வருத்தமுடன் அப்சராவின் தலையில் கை வைத்தான்.

தொண்டையை செருமி கனைத்த சம்பத், “இன்று மாலை உன்னுடைய தந்தையை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வரலாம்” என்ற சம்பத், தன் சித்தப்பா சிவக்குமாரை பார்த்தான்.

“மாமா அங்கிள் கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்” அப்சரா சம்பத்தை சிவக்குமார் காலில் விழ வைக்க, இதற்காக காத்திருந்த சம்பத்திற்கு மனதினோரம் ஓர் நிம்மதி பெருமூச்சு..

“இரண்டு பேரும் எத்தனை இடர்களானாலும் சேர்ந்தே இருக்கணும். பல்லாண்டு வாழ்க” வாழ்த்தினார். முகத்தை திருப்பிய சர்வா இதழோரம் பூத்த புன்னகையை பார்த்த சம்பத் சினமுடன் அவனை செல்லமாக முறைத்தான்.

ஆயிரம் பிரச்சனையாயினும் நட்பு நட்பு தானே!

“அங்கிள், மாமா சாப்பிட்டு வாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல்ல வீட்டிற்கு கிளம்பணும்ன்னு சித்தி சொன்னாங்க” அப்சரா கூறவும் இருவரும் சென்றனர்.

யாதவும் தனலட்சுமியும் வர, இவர்கள் கிளம்பினார்கள்.

வந்த சொந்தபந்தங்கள் தங்கள் வீட்டு மாப்பிள்ளை என்று சம்பத்தை பாராது அவனாக வந்தான் தாலி கட்டினான். எல்லாம் மனைவி பெயரில் எழுதி இருக்குன்னு அப்சரா சொத்தை பிடுங்கி அவனை நிர்மூலமாக்கிட்டு போகப் போறான் என்று சிலர் பேசியும், சிலர் மணமக்களை வாழ்த்தியும் சென்றனர்.

அப்சராவிற்கு தான் அவர்களது பேச்சு பிடிக்கவில்லை. தனலட்சுமி அவர்களின் பேச்சை கேட்டு ஆராய்ச்சி பார்வையை சம்பத் பக்கம் திருப்பினார். அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.

“என்னவெல்லாம் செய்யப் போகிறானோ?” சம்பத்தை எண்ணி பயத்துடன் அமர்ந்திருந்தான் பார்வையை வேறிடம் பதித்து யாதவ்.

சற்று நேரத்தில் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.