காதல் 8

“அண்ணா அண்ணீ சூப்பர். இந்தா வச்சுக்கோ. நான் அலைபேசி எண்ணை எடுத்துட்டேனே!” சம்பத் கையில் அலைபேசியை திணித்து “அண்ணீ” என அப்சரா எண்ணை பதிந்து கொண்டாள்.

“சரி, இவ்வளவு நேரம் உறங்காமல் என்ன செய்றீங்க?” சம்பத் இருவரையும் பார்த்து கேட்டான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நேரத்தை பார்த்தனர். அது ஒன்று என காட்டியது.

“தூக்கம் வரலை அண்ணா” தாரணி கூற, சித்தார்த் சம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் சம்பத் அலைபேசி அலறியது.

எட்டி பார்த்த தாரணி சம்பத்தை பார்த்து, “இப்ப தான வீட்டுக்கு வந்த அதுக்குள்ள அண்ணியால உன்னை பார்க்காமல் இருக்க முடியல. அவ்வளோ லவ்வு” கேலி செய்தாள்.

எந்த உணர்வும் காட்டாது அவன் அலைபேசியை எடுத்தான்.

மாமா..மாமா..மாமா..அழுது கொண்டே அப்சரா கத்தும் சத்தம் கேட்டது.

அவளை திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளை அப்சரா உறங்கிக் கொண்டிருந்த தருணம் அவளிடம் தவறாக நடந்து கொள்ள, அவளது பலம் முழுவதையும் திரட்டி அவனை தள்ளி படுக்கையிலிருந்து கீழே விழுந்திருந்தாள். மேசையில் இருந்த இரவு விளக்கின் அருகே இருந்த அவளது அலைபேசி கீழே விழுந்தது.

அவள் சம்பத்தை அழைக்க, அவன் மேலும் அவளை நெருங்கினான். அவள் அலைபேசி விழுந்ததில் யாதவ் எண்ணிற்கும் அழைப்பு சென்றது.

முதலில் சம்பா அலைபேசியை எடுத்த போது அவளது அழுகையில், “அப்சா என்னாச்சு?” பதட்டமாக கேட்க, அவளது வீட்டில் யாதவ் தூக்க கலக்கத்தில் அலைபேசியை எடுத்து, “ஹலோ..இந்த நேரத்துல்ல யாரு?” என கேட்க, சம்பத் அப்சராவை அழைப்பதும் அவள் அவனுடன் போராடிக் கொண்டே கதறுவதும் கேட்டது.

“ஹே..யாரு? அப்பூ..நீ……” என திக்கி, வேகமாக அறையை விட்டு வெளியே வந்து அவளறையை திறந்தான் யாதவ்.

அப்சரா ஆடை கிழிந்த நிலையில் அந்த கேவலமான பிறவியுடன் போராடிக் கொண்டிருந்தாள்.

அப்சரா பேசவில்லை எனவும் “இருவரும் பத்திரமாக இருங்க” சித்தார்த் தாரணியிடம் கூறி சம்பத் அவன் பைக்கை எடுத்தான்.

அண்ணா, எதுவும் பிரச்சனையா?

“ஆமா அப்படி தான் தெரியுது. சித் அவளுக்கு ஏதும் ஆகாது. யாரோ அலைபேசியை எடுத்துருக்காங்க. பார்த்துக்கிறோம். நீ தாராவை பார்த்துக்கோ” பைக்கை அதிவேகமாக விரட்டினான்.

நடுநிசி என்பதால் வீதி முழுவதும் காலியாக இருக்க, அப்சராவிடம் பேச முயன்ற படி சம்பத் கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருந்தான்.

அப்சரா அறைக்குள் சென்ற யாதவ் அவளை பார்த்து பதறி, “ஏய்ய்ய்ய்ய்…” கத்திக் கொண்டே அவனை அவளிடமிருந்து பிரித்தான். அப்சரா அழுது கொண்டே சோர்ந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

குடி போதையில் இருந்த மாப்பிள்ளை, “ஏய்ய்ய்ய் எப்படியும் இவ எனக்கு தானடா சொந்தம்..” வாய் குலறியவாறு பேச, கடுப்பில் அவன் வாயிலே குத்தினான் யாதவ்.

யாதவ் கத்தியதில் வீட்டிலிருந்தவர்கள் வந்தனர்.

ஜெயாவும் சுதாகரும் பதறி மாப்பிள்ளையிடம் சென்றனர்.

மாப்பிள்ள…

“இவரு தான் இந்த சிறுக்கியை கட்டிக்கப் போறவர். அவரை விடுங்க” ஜெயா யாதவை தள்ள, ஏதோ தொலைக்காட்சியில் நடக்கும் நாடகத்தை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார் யாதவின் அன்னை தனலட்சுமி.

“யாரு…? இந்த மூச்சி..என்னோட அக்காவுக்கு கணவனா? இந்த திருமணத்தை நான் நடக்கவே விட மாட்டேன்” சீற்றமுடன் கத்தினான் யாதவ்.

பேசும் திராணி கூட இல்லாது அப்சரா சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் தானாக அலைபேசியிடம் செல்ல, நகர்ந்து அதனை எடுத்தாள்.

மா..மா…சோர்வுடன் அவள் அழைக்க, எல்லாரும் அவளை பார்த்தனர்.

என்ன நடக்குது அப்சா?

கதறி அழுதாள் அப்சரா.

ஏதாவது பேசு…

அவளது அலைபேசியை பிடுங்க வந்த சுதாகரனுக்கு முன் யாதவ் அதனை வாங்கி,

“மாமா…. நீங்க யாருன்னு எனக்கு தெரியாது பட் அப்பூ நேற்று தான் சொன்னா. என்ன நடந்தாலும் உங்களுக்கும் அப்பூவுக்கும் தான் திருமணம் நடக்கும். நான் நடத்தி வைப்பேன்” வீரவசனம் பேசினான் யாதவ்.

யாதவ் பேச தொடங்கவும் அவன் தான் என பல்லை கடித்த சம்பத், அவனது அக்கறையான பொறுப்பான பேச்சில் அவன் தாடையை தேய்ந்து சிந்தித்தான்.

“மாமா…” அவன் அழைக்க, என்ன நடக்குது? சம்பத் கேட்டான்.

யாதவ் விசயத்தை கூற, “அலைபேசியை ஸ்பீக்கரில் போடு” என்றான் சம்பத்.

மாமா…

போடு..

யாதவ் அலைபேசியை ஸ்பீக்கரில் போடவும்,

“அப்சா அழுறத நிறுத்தீட்டு தைரியமா இரு. என்னோட பொண்டாட்டி எப்போதும் அழவே கூடாது.. புரியுதா?”

ம்ம்!

வாய திறந்து சொல்லு..

“அழ மாட்டேன்” மெதுவாக சுவற்றை பிடித்து எழுந்தாள்.

உன்னோட அத்தை, மாமா இருக்காங்களா?

இருக்காங்க மாமா..

இங்க பாருங்க. இப்ப நான் அப்சா பக்கத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்க நினைக்கிற எதையும் நடக்க விட மாட்டேன். அப்சா எனக்கு மட்டும் தான். அவள் என்னை திருமணம் செய்து கொள்ள எப்பொழுது சரி என்றாளோ அப்பவே என்னுடைய பாதியாகிட்டா. அவ மேல எவன் கையை வச்சாலும் வெட்டி போட தயங்க மாட்டேன்..

“அப்சா உன்னோட தம்பி உன்னோட அறையிலே இருக்கட்டும். இரு நாட்கள் நன்றாக தூங்கி ஓய்வெடு. நமக்கு மூன்றாவது நாள் திருமணம்…” பைக்கை ஓட்டிக் கொண்டே பேசினான்.

காற்றை கிழித்துக் கொண்டு வந்த வேகத்தில் அப்சரா வீட்டிற்கே வந்து விட்டான்.

“யாருடா நீ? எங்க வீட்டு நிழலை கூட உன்னால தொட முடியாது” சுதாகரன் கர்ஜித்தார்.

“சித்தப்பூ, இப்ப நான் எங்க இருக்கேன்னு நினைக்கிற?”

சோர்வாக இருந்தாலும் அவனை பார்க்கும் ஆர்வத்தில் வேகமாக சன்னலை திறந்து பார்த்தாள் அப்சரா.

அவன் இல்லாமல் முகம் சுருங்க, சரியாக அவர்கள் வீட்டின் கேட்டருகே பைக்கில் வந்து கொண்டிருந்தான்.

அப்சரா வேகமாக கீழே ஓட, அனைவரும் வெளியே வந்தனர்.

அன்று போல ஹெல்மெட்டுடன் வந்தவனை பார்த்து பெண்கள் இருவரும் அதிர்ந்தனர். செடியில் இருந்த ரோஜாவை பறித்து நின்றான்.

அப்சரா ஓடிச் சென்று அவனை அணைத்து அழுதாள்.

அவளை நகர்த்தி, ரோஜாவை அவனிடம் நீட்டினான். அவள் வாங்கிக் கொண்டு அவனை பார்த்தாள். அவன் ஹெல்மேட் கண்ணாடியை உயர்த்தி அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்.

பின் அவள் தோளில் கை போட்டு அவர்களிடம், “என்னோட பொண்டாட்டியை யாராவது கஷ்டப்படுத்துனீங்க. அப்புறம் உங்க உயிர் உங்க உடம்புல இருக்காது”  மிரட்டினான்.

“என்னடா சொன்ன?” மாப்பிள்ளை அவனை அடிக்க வர, அப்சராவை இழுத்து அவனும் நகர்ந்தான். போதையில் மாப்பிள்ளை கீழே விழுந்தான்.

“என்ன மாப்பிள்ளை சார் இப்படி மண்ணை கவ்வீட்டீங்க? நீங்களா போய்ட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது” அவன் பேசிக் கொண்டிருக்க, சுதாகரன் கீழே கிடந்த கட்டையை எடுத்து சம்பத்தை அடிக்க வந்தார்.

இருவரும் சரிசமமாக சண்டை போட்டனர்.

கடைசியில் நம் சம்பாவிடம் அடி வாங்கி கீழே விழுந்து அசிங்கப்பட்டு… “உன்னை விட மாட்டேன்டா” கர்ஜித்து சினமுடன் உள்ளே சென்றார் சுதாகரன்.

யாதவ் மகிழ்வுடன் ஓடிச் சென்று அவனை அணைத்தான்.

அவனை நகர்த்தி, “பத்திரமா பார்த்துக்கோ. எதுவும்ன்னா எனக்கு கால் பண்ணு” அப்சராவிற்கும் ஆறுதல் கூறி சென்று விட்டான் சம்பத்.

யாதவ் அப்சராவை அழைத்து வீட்டிற்குள் சென்று, “இதுக்கு மேல மாப்பிள்ளன்னு ஏதாவது பேசுங்க அவ்வளவு தான். என்னோட அக்காவுக்கு யார் சரின்னு நான் பார்த்துக்கிறேன். இப்பொழுது வந்த அவர் தான் அப்பூவின் கணவன்” நினைவில் வச்சுக்கோங்க சத்தமிட்டான்.

அவன் முகத்தை கூட காட்டவில்லை. அவன் எந்த பரதேசியோ ஜெயா சம்பத்தை தூற்ற, பொறுக்க முடியாத அப்சரா….

“மாமா பரதேசி இல்லை. அவர் மருத்துவர். உங்கள மாதிரி கொள்ளையடிக்கிற கும்பல் இல்ல” முதல் முறையாக சம்பத் கொடுத்த தைரியத்தில் பேசி விட்டாள்.

தனலட்சுமி அமைதியாக நிற்க, ஜெயா அப்சராவை அடிக்க பாய்ந்து கொண்டு வந்தார்.

“அத்த, இதுக்கு மேல அப்பூ மேல கையை வச்சீங்க. உங்க கையை உடைக்க கூட தயங்க மாட்டேன்” யாதவ் அவர் கையை பிடித்து தடுத்து அவரை தள்ளினான்.

கீழே விழுந்த ஜெயா இடுப்பை பிடித்துக் கொண்டு, “என்னோட இடுப்பை உடச்சுட்டானே! பாவி உன்னை நன்றாக பார்த்துக் கொண்டதற்கு யாரோ ஒருவனுக்காக இப்படி பேசுகிறாயே!” ஒப்பாரி வைத்தார்.

“அவங்க இருக்காங்க. நீ வா” அப்சரா கையை பிடித்து யாதவ் தன் அம்மாவின் அமைதியை கவனித்துக் கொண்டே சென்றான்.

“அடியேய்! உம் பிள்ளைய பாருடி. என்னை தள்ளி விட்டான். தூக்கி விடுடி…” ஜெயா தனலட்சுமியிடம் கையை நீட்டினார். அவர் தன் மகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அடியேய்! ஜெயா கத்துவது தனலட்சுமி காதில் விழவேயில்லை. அவர் சிந்தனையில் மூழ்கி விட்டார். இருவரையும் கவனித்தவாறு யாதவ் அப்சராவை அவளறைக்கு அழைத்து சென்றான்.

கீர்த்திகா அங்கே வந்து, “அம்மா என்னாச்சு? கீழ பார்த்து வராம…எங்க பார்த்துட்டு வந்து கீழ விழுந்து கிடக்க?” கேட்டுக் கொண்டே தனலட்சுமி பார்வை அப்சரா அறையில் இருப்பதை பார்த்தாள்.

அத்தை, எதுக்கு இப்ப அவளோட அறையை பாக்குறீங்க?

“கீர்த்து, நீ தான் மாப்பிள்ளை கிட்ட பேசுனியா?” அவர் அவளை பார்த்தார்.

எந்த மாப்பிள்ள? புரியாதது போல கேட்டாள்.

அப்பூவுக்கு பார்த்த மாப்பிள்ளை இங்க வந்தது உனக்கு தெரியாதா? அவர் வர நீ காரணமில்லையா?

யாதவ் அறையை பார்த்து விட்டு, “அத்தை..நான் தான் அவனை வர வைத்தேன். என்னாச்சு? எல்லாம் முடிந்ததா? அவ அழுதுட்டு இருக்காளா? வாங்க அந்த கண்கொள்ளா காட்சியை பார்த்துட்டு வரலாம்” தனலட்சுமியையும் சேர்த்து அழைத்தாள்  கீர்த்திகா.

கண்கள் சிவக்க தனலட்சுமி கீர்த்திகாவை ஓங்கி அறைந்தார்.

ஒரு பொண்ணோட மானத்தை எடுக்க உன்னால எப்படிடி முடிந்தது?

அத்த…

ஜெயா சினமுடன் எழுந்து அதிகார தோரணையில், “என்னடி அவளுக்காக பேசுற?” பல்லை கடித்து கேட்டார்.

சொத்துக்காக அப்பூவை வேலைக்காரியாக நடத்தினேன். நம்மை வீட்டை விட்டு அவ எவனுடன் போனாலும் பரவாயில்லைன்னு சொன்னதும் சொத்துக்காக தான். என் மகன் இந்த சாம்ராஜ்ஜியத்துக்கே ராஜாவாக தான். ஆனால் நீ….சற்று நேரம் முன் உன் புருசனுடன் பேசியதை கேட்டேன்.

“அய்யோ அத்தாச்சி! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” ஜெயா பூனை போல தனலட்சுமியிடம் வந்தார்.

என்னடி அத்தாச்சி? நான் உன் முன் நிற்கும் போது அத்தாச்சி. நான் இல்லைன்னா சிமிட்டி, கைக்காரியா?

வசந்தி இடத்தில் நான் வந்தது. உன் அண்ணனை ஏமாற்றியது அனைத்தும் சொத்திற்காக தான் செய்தேன். நான் எண்ணி இருந்தால் அன்றே வசந்தியையும் அப்பூவையும் வெளியே அனுப்பி இருப்பேன்.

என்ன தான் அவர் என்னிடம் மூழ்கி இருந்தாலும் அவர் எண்ணம் முழுவதும் அவர் குடும்பம் மீது தான் இருந்தது. அதற்காக என் மகனையும் அவர் விட்டு கொடுத்ததில்லை. அதனால் தான் அவர்கள் மனதை காயப்படுத்தினாலும் அவர்களை அவரிடமிருந்து பிரிக்கவில்லை.

ஆனால் உம் பொண்ணு படித்து கூட முடிக்கவில்லை. அதற்குள் அவளது அண்ணி உறவில் இருக்கும் அப்பூவின் மானத்தை வாங்க மாப்பிள்ளையை வைத்து கற்பழிக்க வழி செய்து கொடுத்திருக்காள்.. ச்சே….அவள விடு…

“இத்தனை வருசமா ஒண்ணுமண்ணுமா சேர்ந்திருந்த எனக்கே துரோகம் பார்க்க நினைச்சிருக்க? எம் மகன் பெயருக்கு சொத்தை மாற்றி உம் பொண்ணை அவனுக்கு முடித்து வைத்து எல்லா சொத்தும் உங்கள் பெயரில் மாற்ற, நீயும் உம் புருசனும் திட்டம் போட்டுட்டு இருக்கீங்க? எவ்வளவு தைரியம்டி உனக்கு?” தனலட்சுமி சத்தமிட, இதை கேட்டவாறு கீழே வந்து கொண்டிருந்தான் யாதவ்.

“மாம்…வாங்க” தனலட்சுமி கையை பிடித்து அவனறைக்கு இழுத்து சென்றான் யாதவ். இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகா அவர்கள் பின்னே வந்து அப்சரா அறைக்கதவருகே வந்தாள்.

தனலட்சுமியை உள்ளே விட்டு, “ஏய்..” கீர்த்திகாவை அழைத்த யாதவ், பாஸ்வேடை மாத்தியாச்சு. உன்னோட வேலைய பாரு. உன்னோட கேவலமான செயலுக்கான ஊதியம் சீக்கிரம் உன்னிடம் வந்தடையும்.

“யாது…” அவள் கொஞ்சியவாறு அவனருகே வர, அவன் படாரென அறைக்கதவை அடித்து சாற்றினான். கீர்த்திகாவிற்கு முகத்தில் அறைந்தாற் போல இருந்தது.

சினமுடன், “யாது உன்னை என்ன செய்கிறேன் பாரு” சத்தமிட்டாள்.

கதவை திறந்து, “முடிந்ததை செய்” அவன் உள்ளே சென்று அவன் அம்மாவின் முன் கை கட்டி நின்று தனலட்சுமியை பார்த்தான். அவர் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

உனக்கு சொத்து தான் முக்கியம். அப்படி தான?

ஆமா, என் கணவருக்கு அடுத்தப்படியாக சொத்து என் மகன் உனக்கு தான?

அம்மா, உன் ஆசை வார்த்தையில் நான் மயங்கமாட்டேன். நான் எப்போதும் சர்வா மாமா பக்கம் தான்.

சிறுபுன்னகையுடன், அவன் தான் உன்னை மாற்றி இருக்கான்.

ஆமா, அவர் சொல்லி புரிய வைக்கவில்லை. அனுபவத்தில் புரிந்து கொண்டேன்..

உனக்கு என்னடா புடலங்காய் அனுபவம்? ஏளனமாக கேட்டார்.

“சொன்னா நீ என்ன திருந்தவா போற? உன்னோட கணவன் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது..” யாதவ் கூற,

அந்த பொண்ணு…

ஆமாம்மா, அப்பா காட்டிய வீடியோவில் இருந்தது நான். ஆனால் அதை நான் செய்யவில்லை. என்னை மாட்டி விட பார்த்தார்கள். அதை வைத்து தான் சுதாகரன் மாமா அப்பாவை மிரட்டிக் கொண்டிருந்தார்.

அப்பா எப்படி அந்த வீடியோவில் என் இடத்தில் இருந்தாரோ அதே போல யாரோ ஒருவன் செய்த வேலையை நான் செய்தேன்னு மார்பிங் பண்ணி அனுப்பி மிரட்டுனானுக..

அந்த பொண்ணுன்னா சர்வா மாமாவுக்கு உயிர். அவர் என்னை தாறுமாறாக பேசிக் கொண்டே அடித்தார். பின் அவருக்கு வந்த அலைபேசி காலில் பதறி என்னை விட்டு போனவர் தான்…இன்று வரை வரவில்லை.

நானும் பேச முயன்றேன். உனக்கே தெரியும். அப்பாவை விட எனக்கு எல்லாமே மாமா தான். என்னுடைய உதாசீனங்களை பொறுத்துக் கொண்டவர். ஆனால் அவர் வலிக்கு மருந்து போடாமல் இரு வருடமாக மனதளவில் உலன்று கொண்டிருந்தேன்.

என் தந்தை எனக்காக சிறைக்கு சென்றிருக்கிறார். இனியாவது நான் பொறுப்பாக இருக்கணும்.

சுதாகர் மாமாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோன்னு சந்தேகத்தில் தான் அவங்க பக்கம் இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தேன். அவர் நிறைய தவறு செய்கிறார். சர்வா மாமா கண்டிப்பாக வரணும். அவர் வந்தால் தான் அவர் காதலித்த அந்த பொண்ணு வாழ்க்கையை சீரழித்தது எவன் என்று கண்டறிய முடியும்.

அதுமட்டுமல்ல நம்ம அப்பூ காதலிக்கும் மாமாவும் தைரியசாலி தான். அவரிடமும் உதவி கேட்கலாம்ன்னு இருக்கேன். ஆனால் சில நாட்களின் பின் அவரிடம் பேசணும். அவரை பற்றியும் தெரியாமல் எதையும் சொல்லக் கூடாது.

குருமூர்த்தி மகனாக சொத்தில் பங்கு கேட்பதை விட, அவரது துயரத்தில் பங்கெடுப்பது தான் சரியாக இருக்கும். உண்மையான கள்வனை கண்டறிந்து என் தந்தையை சிறையிலிருந்து மீட்டெடுப்பேன்..

உன்னால எப்படி முடியும்?

முடியும்மா. நம்ம அப்பூவோட திருமணத்திற்கு கண்டிப்பாக சர்வா மாமா வருவாங்க. அவங்கள வேறெங்கும் போகாமல் பார்த்துக் கொள்ளணும். அவர் அப்பூ திருமணத்திற்கு வராமல் இருக்க மாட்டார். எந்த வேலையாக இருந்தாலும் போட்டு விட்டு வந்துருவார்…

இத்தாலி…

சர்வா சார் கங்கிராட்ஸ். எல்லாரும் உங்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிலுவையில் இருந்த அனைத்து கேஸையும் முடித்து விட்டீர்கள்..அப்புறம் என்ன? திருமணமா? ஒருவர் சர்வேஸ்வரனிடம் கை குலுக்கி பேச, “திருமணம்” விரக்தியாக அவரை பார்த்து “தேங்க்யூ சார்” என்று வேற எதுவும் பேசாமல் நகர்ந்தான் சர்வேஸ்வரன்.

சர்வா..

ஆண்மையின் கம்பீரமும், வாதத்தில் சிறந்த வழக்குரைஞராகவும் இருக்கிறான்.

இத்தாலியில் பெயருள்ள வழக்குரைஞரின் சிறந்த ஜூனியரும் கூட…இத்தாலியில் அவனை தெரியாத வழக்கறிஞர், நீதிபதிகள் இல்லை எனலாம். சிறந்த பேச்சாளன்.

தன் காதலை இழந்த துக்கத்தில் இத்தாலி வந்தவனை அரவணைத்தவர் “கபில் சிங் ஹோத்தாரி” என்ற அவனது சீனியர் வழக்குரைஞர் தான் அவனுக்கு உதவியாக இருந்தவர். இப்பொழுதும் இருப்பவர். அவருக்கு மகன் ஒருவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனை பார்க்கும் போதெல்லாம் சர்வாவின் எண்ணங்கள் யாதவிடமே வந்து நிற்கும்.

தன்னுடைய காரை எடுத்து அவனது பிளாட்டிற்கு வந்து டையை தளர்த்தி சோபாவில் சாய்ந்து கண்ணை மூடினான் சர்வேஸ்வரன். அவனுடைய கடந்த கால நினைவுகள் புன்னகையில் தொடங்கி கண்ணீரில் வந்து நின்றது

மனம் சோர்ந்து கண்களை துடைத்து டீப்பாயின் மேலிருந்த தண்ணீரை மடமடவென அருந்தி அறைக்கு சென்று ஆடையை மாற்றி கீழே வந்தான்.

அவனது குடியிருப்பில் கீழே இருக்கும் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு நேரத்தை கழித்து மீண்டும் இருப்பிடம் வந்து அவனாகவே உணவை தயாரித்து உணவுண்டு படுத்துக் கொண்டான். மதியம் மட்டும் ஹோட்டலில் உண்பான்.

காலை எழுந்து உணவு தயாரித்து தயாராகி உணவுண்டு செல்வான்… இவ்வாறாக இரு வருடத்தை நெஞ்சில் சுமந்த வலிகளுடன் வாழ்ந்து வந்தான்.

இன்றிரவு படுக்கையில் விழுந்த சர்வா உறங்க முடியாமல் லேசாக அசந்தான். சற்று நேரத்திலே விழித்த அவன் தன் அலைபேசியை எடுத்து சிந்தித்தான்.

“குரு மாமா இரு நாட்களாக அழைக்கவேயில்லையே!” குருமூர்த்தி எண்ணுக்கு அழைத்தான்.

யாரிடமும் பேசாத சர்வா தன் தாய்மாமாவிடம் மட்டும் தினமும் மூன்று முறையும் பேசிடுவான்.

இன்று அவர் அழைக்கவில்லை எனவும் ஏதோ பிரச்சனை என்று அதிகாலை மூன்று மணிக்கு அழைத்தான். அலைபேசி எடுக்கப்படவில்லை. அவன் மனம் பதட்டமானது.

மீண்டும் முயன்றான். அலைபேசி எடுக்கப்பட்டது.

“மாமா..” சினமுடன் சர்வா அழைக்க, “சொல்லுங்க சர்வா” என்றார் சிவக்குமார்.

நீங்க?

நான் சிவக்குமார்..

வாட்? வேகமாக எழுந்து அமர்ந்தான்.

அங்கிள், நீங்க உயிரோட இருக்கீங்களா?

இருக்கேன்..

குரு மாமா அலைபேசி உங்களிடம்…

“ஏம்ப்பா, இப்படி பொறுப்பே இல்லாமல் போய்ட்டீங்க? உங்க மாமா நிலை உங்களுக்கு தெரியுமா இல்லையா? நியூஸ் பார்த்தீங்களா?”

நியூஸ்ஸா? மாமாவுக்கு என்னாச்சு? பதட்டமுடன் கூகுலை தேடினான். அதிலிருந்த செய்தியை பார்த்து அதிர்ந்து சிவக்குமாரிடம் சத்தமிட்டான்.

அங்கிள், மாமா மீது எந்த தவறும் இருக்காது. அவரை பேச விட்டு வேடிக்கை பார்த்தீங்களா?

நான் உங்க வீட்ல டிரைவராக தான் இருக்கேன். நான் எப்படி அவரை தடுக்க முடியும்?

“நான் இப்பவே கிளம்புகிறேன்” அவன் கூற, வேலையாள் மூலம் நடந்ததை அறிந்து அப்சராவிற்கு சற்று நேரம் முன் நடந்ததையும் அவர் கூறினார்.

“டேமிட்….வர வர தப்பு அதிகமா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இப்பவே வாரேன்”  அலைபேசியை அணைத்து தயாராக தொடங்கினான். அவன் கிளம்பும் நேரம் அனைத்தும் இனிதாக ஆரம்பமாவதை அறியாமல்..