மருத்துவமனையின் பெயரை கூறி விட்டு அவளுக்கு தலையில் கட்டு போட்டிருக்காங்க. இப்ப கிளம்பிடுவோம் என்றான்.
“நான் அவளிடம் பேசணும்” சம்பத் கேட்க, “சுயர் பேசுங்க. அவளுக்கும் ஆறுதலா இருக்கும்” அலைபேசியை அப்சராவிடம் சென்று கொடுத்து அவன் தன் தந்தையையும் மருத்துவரையும் பார்க்க சென்றான்.
மிகத் தாழ்ந்த குரலில் களைப்புடன், “ஹலோ…” அப்சரா அழைக்க, “ஆர் யூ ஓ.கே?” என்ற குரலில் சம்பத் என அறிந்து கொண்டு செவிலியரை பார்த்து, “கொஞ்சம் வெளிய இருக்கீங்களா சிஸ்டர்?” பாவமாக கேட்டாள். அவர் அவளை பார்த்துக் கொண்டே சென்றார்.
சார் என்னாச்சு? அண்ணா ஓ.கே தான? எதுவும் பிரச்சனையா?
முதல்ல உன்னை பாரு. என் நிழலில் இருக்கும் வரை உன் அண்ணனை எவனும் தொட மாட்டான்..
ஆமா சார், அவன் சின்ன பொருளை கூட நகர்த்த மாட்டான். அவனுக்கு பயிற்சின்னா? அதான் கேட்டேன்.
புன்னகைத்த சம்பத், அதெல்லாம் ஒன்றுமில்லை. அவனுக்கு தனியே ஆள் போட்டாச்சு. அவங்க பார்த்துப்பாங்க. சரி..நீ என்ன பண்ற?
சார், இங்க இது சாதாரணம் தான்.
எது குடிகார, பொம்பள பொறுக்கியை திருமணம் பண்றது சாதாரண விசயமா?
“எல்லாமே கேட்டுட்டீங்களா?” பாவமாக கேட்டாள்.
ம்ம்..
சார், முதல் முறை அப்பாவும்,யாதுவும் எனக்காக நிக்கிறாங்க. எனக்கு இந்த வலி பெருசா தெரியல. அவங்க எனக்காக வந்தாங்களே அதை விட பெரிய சந்தோசம் என்ன இருக்கப் போகுது?
“இருக்கு” என்றான் சம்பத்.
என்ன சார்?
“நாம சந்திக்கணுமே!” உன்னிடம் பேசியே ஆகணும். எனக்கு ஒரு திட்டம் இருக்கு.
சார்..
மாலை சந்திக்கலாமா?
எப்படி?….
உன்னை இன்று பார்க்க மருத்துவன் சிபி வருவான்.
சிபியா? அண்ணாவா? உங்களுக்கு அவரை தெரியுமா?
என்னோட தோழன் தான். அவன் உன்னை அழைத்து வருவான்..
சார், அத்தை, சித்தி..
அவன் பார்த்துப்பான்..
ஓ.கே சார்..
பெயின் அதிகமா இருக்கா?
அக்கறையா இதுவரை எனக்கு அடிபட்டால் கூட யாரும் கேட்டதில்லை. நாளை கூட யாதுவும் அப்பாவும் மாறலாம். நீங்க மாற மாட்டீங்கள? அவள் கேட்க, அவளின் நம்பிக்கையில் அவன் விசித்திர உணர்வு ஒன்றை உணர்ந்தான்.
அவன் அமைதியாக இருக்க, “ஓ.கே சார் நான் வாரேன். நான் நல்லா இருக்கேன். அண்ணாவை பார்த்துக்கோங்க” கூறி அலைபேசியை வைத்து விட்டாள்.
அலைபேசியை வைத்த சம்பத்தை உற்று பார்த்துக் கொண்டிருந்தான் சேந்தன்.
அவனை பார்த்து பயந்து, “என்னடா பண்ற?” கேட்டான் சம்பத்.
ம்ம்! அமைதியாக எழுந்து சித்தார்த்தை கவனிக்க சென்றான்.
இவன் என்ன நினைக்கிறான்? அந்த பொண்ணுக்காக வருந்துவது போல இருக்கே! இந்த வருத்தம் காதலாக மலருமா? பொறுத்திருந்து பார்ப்போம் சேந்தன் அவனாக எண்ணிக் கொண்டான்.
வீட்டிற்கு அப்சராவை அழைத்து வந்தனர் யாதவும் குருமூர்த்தியும்.
“ஐயா, வெளிய பத்திரிக்காரவங்க வந்திருக்காங்க” வாட்ச்மேன் ஓடி வந்தார். அவர் பின் வந்த டிரைவர் சிவகுமாரை அர்த்தப் பார்வை வீசிய குருமூர்த்தி நிதானமாக சுதாகர் அருகே வந்து,
“உன்னோட எந்த ஆதாரமும் உன்னிடம் இல்லை. நேற்றிரவே அது அழிந்து விட்டது. உன்னோட அலைபேசியை பாரு…” என்றவர் தன் மனைவி அருகே வந்து, “பையனை பார்த்துக்கோ”.
ஜெயாவை பார்த்து, “நீ நடப்பது எதுவும் நடக்காது”.
“யாது…” தன் மகனை அழைத்தார்.
வீட்ல இனி நடக்கும் எல்லாவற்றையும் நீ தான் பார்த்துக்கணும்..
“இவனா?” நக்கலாக கீர்த்திகா சிரிக்க,
யாதவ் அவளை முறைத்து, “உனக்கு மணியாட்டிட்டு வந்துட்டு இருக்கிற மாதிரி நடிச்சேன்டி. நீயெல்லாம் எனக்கு வொர்த்தே இல்லை” என்ற யாதவ் தன் தந்தையை பார்த்து..
டாட், நான் இருக்கேன். வசந்தி அம்மா, அப்சரா என்னோட பொறுப்பு என சொல்ல, எல்லாரும் பேறைந்தது போல் நின்றனர்.
தங்கை கணவன் முன் வந்து சொடக்கிட்ட குருமூர்த்தி, “இதுவரை உன் ஆட்டத்தை ஆடுனேல்ல இனி எங்க ஆட்டத்தையும் பாரு…” வெளியே வந்தார்.
சுதாகர், ஜெயா, தனலட்சுமி, கீர்த்திகா புரியாமல் அவர் பின் சென்றனர்.
யாதவ் சிவகுமாரை பார்த்து விட்டு பத்திரிக்கையாளர்களிடம் சென்ற குருமூர்த்தியின் பின்னே கை கட்டி நின்றான். அவனது கம்பீரமான நடை பேச்சில் அவனை தெண்டமாக எண்ணிய கீர்த்திகா வழிந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பொள்ளாச்சியை சேர்ந்த வந்தனா என்ற பெண்ணை இரு வருடங்களுக்கு முன் பலவந்தமாக கற்பழித்து எறித்து கொன்றதற்காக என்னை கைது செய்ய காவலர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று அதற்கான வீடியோவை குருமூர்த்தி பத்திரிக்கையாளர்களிடம் நேரடியாக கூறி கொடுத்து தனது இரு கைகளையும் முன் நீட்டினார்.
“சார், மற்றவர்கள் யார்?” என வீடியோவில் அவருடன் இருந்தவர்களை பார்த்து போலீஸார் கேட்டனர்.
அவர் பதிலளிக்கவேயில்லை.
தன் தந்தை, தமையன் மாற்றத்தில் திழைத்து பார்த்துக் கொண்டிருந்த அப்சரா மீடியா முன் தன் தந்தை கூறியதை கேட்டு அதிர்ந்து வலியை மறந்து கீழே ஓடி வந்தாள்.
அந்நேரம் பத்திரிக்கையாளன் ஒருவன் கேட்ட கேள்விக்கு குருமூர்த்தி அளித்த பதிலில் உடைந்து போன அப்சரா தன் தந்தை என்றும் பாராது அவர் முன் வந்து அவரை மாறி மாறி அடித்து அங்கேயே கதறி அழுதாள்.
மேலும் அவரை கேள்விகள் தொடுக்க, தன் மகளின் கதறலை கண்டு துவண்ட குருமூர்த்தியை காவலர்கள் கைது செய்து இழுத்து சென்றனர்.
யாதவ் கைகளை இறுக அழுத்திக் கொண்டு கதறும் அப்சராவை பார்த்தான்.
ஆமாம், பத்திரிக்கையாளன் என்ன கேள்வி தான் கேட்டிருப்பான்?
இதோ…
அந்த பொண்ணு வயது இருபத்து இரண்டு. உங்களுக்கு அதிகம். நீங்கள் அவ்வளவு காமவெறியனா? நேரடியாக கேட்ட பத்திரிக்கையாளனை விரக்தி புன்னகையுடன் ஏறிட்டார் குருமூர்த்தி.
அவர் அளித்த பதில்..
காமம். சில நேரம் காதலுடனும் உறவாடும். வெறும் கட்டில் சுகமாகவும் பார்க்கப்படும். நான் அவ்வாறில்லை. என் மகளுக்காக செய்தேன்.
என்னோட தங்கை மகன் சர்வா காதலித்த பொண்ணு தான் வந்தனா. என் மகளை அவர் பார்க்க கூட இல்லை. அந்த பொண்ணு இல்லைன்னா என்னோட மாப்பிள்ளை சர்வா என் மகளை திருமணம் செய்து கொள்வார் என்று தான் இவ்வாறு செய்தேன் அவர் முடித்த பின் தான் அப்சராவின் வருகையும், கதறலும்.
தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை. அதுவும் தன் தந்தையே கற்பழித்து கொன்றிருக்கிறாரே! மனம் தாளாது கதறியவள் அன்றைய நாளில் சம்பத்தை சந்திக்க வேண்டுமென்பதை மறந்தாள்.
இச்செய்தி ஊரெங்கும் பரவ, சம்பத்தையும் அடைந்தது. பைத்தியம் பிடித்தவன் போல் யாருமில்லா தனியிடம் சென்று உரக்க சிரித்தான்.
சித்தார்த் தொலைக்காட்சியில் தன் தந்தையை கைது செய்வதை பார்த்து அதிர, தாரணியின் கண்களோ குளம் கட்டியது. அதை சித்தார்த் கவனிக்கவில்லை.
தாரணி வேகமாக எழுந்து சம்பத்தை அலைபேசியில் அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. அவள் பதட்டமுடன் வெளியே வர, சேந்தன் பைக்கில் வந்தான்.
பைக் சத்தம் கேட்டு சித்தார்த் வெளியே வந்தான்.
“அண்ணா…” அவள் கண்கலங்க சேந்தனை பார்த்தாள்.
சித்தார்த்தை பார்த்த சேந்தன், “சித் நீ வீட்டிலே இரு. நாங்க வந்துடுவோம்” என்று தாரணியை பைக்கில் ஏற சொல்ல, அவளும் அவனது பரந்த தோளில் கையை போட்டு ஏறினாள்.
இருவரும் செல்ல, தாரணி சித்தார்த்தை கவனிக்காததை கண்டு கொண்ட சித்தார்த்திற்கு தேவையே இல்லாமல் சேந்தன் மீது பொறாமை தோன்றியது.
“அண்ணா எங்க இருக்கான் தெரியுமா?” கண்ணீருடன் தாரணி கேட்க, “அவனது அலைபேசியில் டிவைஸ் வச்சிருக்கேன். அவன் இருக்கும் இடம் தெரியும். போகலாம்” பேசிக் கொண்டே இருவரும் சம்பத் இருக்கும் இடத்தை அடைந்தார்கள்.
“மச்சீ…..” சேந்தன் அழைக்க, அண்ணா ஓடிச் சென்று தன் அண்ணனை அணைத்து அழுதாள் தாரணி. சம்பத் சேந்தனை முறைத்து பார்த்தான்.
“தாரா ஒன்றுமில்லைடா” சம்பத் அவள் தலையை கோதினான்.
“அண்ணா இவரா நம்ம வந்துவை?” தொண்டை அடைக்க கேட்டவளை இறுக அணைத்து அவன் கண்ணீரை சுட்டி விட்டு, “நான் இனி நிம்மதியா இருப்பேன்ம்மா. நீ வீட்டுக்கு போ” அவளை நகர்த்தி…
சித், இச்செய்தியை பார்த்தானா?
“ஆம்” தலையை மட்டும் அசைத்தாள்.
ஆட்டோ ஒன்றை பிடித்து தாரணியை வீட்டிற்கு அனுப்பி விட்டு சம்பத் சேந்தனை பார்த்தான்.
சேந்தா, அந்தாளூ தன் மகனை காப்பாற்ற அவர் பழியை ஏத்துட்டு இருக்கார். அந்த யாதவ் நல்லா தான் இருக்கான். அவனை விடக் கூடாதுடா…
ம்ம்! ஆமாடா சம்பா.. அவராக வந்து சரணடைவார்ன்னு நானும் எதிர்பார்க்கலை.
ம்ம்!
இப்ப என்ன பண்ணப் போற?
இனி என் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போறேன். அதுவும் இன்றே! இருவரும் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.
யாதவ் தன் தாயை முறைத்துக் கொண்டே அப்சரா அறைக்கு சென்றான். அவர் நடப்பதை நம்ப முடியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார்.
“அக்கா….” யாதவ் அழைக்க, சிவந்த கண்களுடன் அவனை ஏறிட்டாள்.
அழாத. இனி தான் நீ தைரியமா இருக்கணும்.
நீ எப்படி இப்படி? தயக்கமுடன் கண்ணை துடைத்தாள்.
என்னிடம் எதுவும் கேட்காத. நம்ம மாமா வந்துருவாரு. நீ தைரியமா இரு. அந்த பொண்ணு…
“வேண்டாம். எதுவும் சொல்லாத!” சீறிய அப்சரா தன் தந்தையை திட்டியும் அழுதும் தீர்த்தாள்.
“என்னால இப்ப உன்னிடம் எதுவும் சொல்ல முடியாது” மனதில் எண்ணியவாறு அவன் கீழே வந்தான்.
குறுக்கும் நெடுக்கும் கையை பிசைந்து நடந்து கொண்டிருந்த கீர்த்திகா யாதவ் வருவதை பார்த்து அவனிடம் செல்ல, அவன் அவளை கண்டு கொள்ளாமல் நடந்தான்.
ஏய்..யாது..
நின்று அவளை பார்த்து, கால் மீ யாதவ்..
என்ன திடீர்ன்னு சாமி புகுந்தது போல நல்லவனா நடந்துக்கிற?
சிறுபுன்னகையுடன், “என்னிடமிருந்து தள்ளியே இரு. நான் பழைய யாதவ் இல்லை” அனல் பறக்க பேசி விட்டு அவன் நகர, அவன் தாய் தனலட்சுமி அவன் கரம் பிடித்து நிறுத்தினார்.
அசையாமல் அவன் நிற்க, “என்னடா நடக்குது? யாருடா அந்த பொண்ணு? உன்னோட மாமனுக்காகவா உன் அப்பா இப்படி செய்தார்? அவர் இதை செய்யும் ஆள் இல்லையே!”
தனலட்சுமி கையை தட்டி விட்ட யாதவ், “சோ…நீயும் அவர் செய்தாருன்னு நம்புற? அப்பூ பேசினால் சரி. நீங்க தான் அப்பாவை மிரட்டி வச்சிருந்தீங்களே!”
ஆமாடா, ஆனால் அது வசந்தி விசயமாச்சே!
மாம் ஒன்று சொல்கிறேன். நல்லா கேட்டுக்கோ. யாரையும் நம்பாத என்று கீர்த்திகாவை பார்த்து விட்டு அவன் வெளியேறினான்.
வீட்டிற்கு வந்த சம்பத் சித்தார்த்தை பார்த்தான். அவன் வருத்தமுடன் ஏதோ சிந்தனையில் இருந்தான்.
“என்ன சித்? வீட்டு நினைவு வந்துருச்சா?” சேந்தன் கேட்க, தாரணி அவனை எட்டிப் பார்த்தாள்.
“தாரா, ஸ்ட்ராங்கா டீ போடும்மா” சேந்தன் சொல்லி சித்தார்த்தை பார்க்க, அவன் சேந்தனை முறைத்து விட்டு சம்பத் அறைக்கு சென்று கதவை படாரென அடித்து சாத்தினான்.
தேனீரை எடுத்து வந்த தாரணி மூவருக்கும் கொடுக்க, சம்பத் சித்தார்த் வரைந்ததை பார்த்து,
“இவன் தான் நன்றாக வரைவானே! இப்பொழுது என்னாச்சு?” அவனை ஆழ்ந்து கவனித்தான் சம்பத்.
தாரணி சித்தார்த் வரைந்ததை பார்த்து கலகலவென சிரித்தாள். அவளது கிண்கிணிசிரிப்பில் சித்தார்த் புன்னகைக்க சம்பத் புரிந்து புன்னகைத்தான்.
“மானத்தை வாங்காதடா” சேந்தன் அதனை எடுத்து கசக்கி கீழே போட்டான். சித்தார்த் மீண்டும் அமைதியானான்.
செங்கதிரவன் மறைய தொடங்கும் நேரம் உறங்கிக் கொண்டிருந்த அப்சரா அலைபேசி ஒலித்தது. அழுத சோர்வுடன் உறக்கத்திலே அதனை எடுத்து “ஹலோ…” மென்மையிலும் மென்மையாக கூறினாள்.
“அப்சரா நான் சம்பத். நாம மீட் பண்ணலாமா?” அவன் கேட்க, விரைந்து எழுந்து அமர்ந்தாள்.
சார்…நான்..இப்ப..திணறியவாறு பேசினாள்.
வெயிட். நோ டென்சன். நான் கொடைக்கானல்ல தான் இருக்கேன். உன்னோட தந்தை பற்றிய நியூஸை பார்த்தேன். நீ நான் சொல்ற இடத்துக்கு வர முடியுமா?
சார், இன்று…….அவள் மேலும் தயங்கி…
சரி சார்..நான் வாரேன் என்று இடத்தை கேட்டு அலைபேசியை வைத்து, எப்படி வெளியே செல்வது? சிந்தித்தாள்.
நடக்க உதவும் ஸ்ட்டிக்கை ஊன்றி அறையிலிருந்து வெளியே எட்டி பார்த்தாள். கீர்த்திகா அலைபேசியை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். உடன் தனலட்சுமியும் அமர்ந்திருந்தார்.
சுற்றும் முற்றும் பார்த்தாள். ஜெயா வந்து கொண்டிருந்தார்.
வேகமாக அறையை சாற்றி விட்டு படுக்கையில் படுத்து உறங்குவது போல நடித்தாள் அப்சரா.
ஜெயா அப்சரா அறைக்கதவை திறந்து அவளது போர்வையை பிடித்து இழுத்தார். அப்சரா பயந்து எழுந்து அமர்ந்தாள்.
“அத்த..” பயத்துடன் அவள் அழைக்க, “உன்னோட அலைபேசி கொடு” அவர் கேட்க, தூக்கி வாரி போட்டது அப்சராவிற்கு.
அத்த…
“என்னடி புரியாத மாதிரி பேசுற? மறுபடியும் உன்னுடைய நண்பனுடன் வெளியே செல்ல பார்க்கிறாயா?” அவர் கேட்க,
இல்ல அத்த..
ஜெயா அவளது அறையை நோட்டமிட்டு வெளியே சென்றார்.
அவர் சென்றவுடன் உஃபென காற்றை வாயிலிருந்து ஊதி தள்ளி விட்டு, தனது ஸ்டிக்கை சன்னல் பக்கமாக கீழே போட்டு பயத்துடன் தன் காலை பார்த்து கண்ணை மூடிக் கொண்டு கீழே குதித்து வாயை கையால் அடைத்து காலை பார்த்தாள்.
லேசாக இரத்தக்கசிவு ஏற்பட்டது. சுற்றுபுறத்தை ஆராய்ந்து கொண்டே பின் பக்கமாக வெளியே வந்து கேப் பிடித்து ஏறினாள் அப்சரா.
தற்செயலாக வெளியே வந்த கீர்த்திகா கேப்பில் அப்சரா ஏறுவதை பார்த்து காரை எடுத்து அவளை பின் தொடர்ந்தாள்.
சற்று நேரத்தில் சம்பத் கூறிய இடத்திற்கு வந்த அப்சரா பணம் கொடுத்து கேப்பிலிருந்து இறங்கினாள். காரிலிருந்து கீர்த்திகா அவளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
அப்சராவை பார்த்ததும் சம்பத் வீதியை கடந்து அவளருகே வந்தான். அவள் கையில் ஸ்ட்டிக்கோடு இறங்குவதை கண்டு நின்று விட்டான்.
இவளோ கேப் ஓட்டுனருக்கு நன்றி கூறி விட்டு திரும்ப அவளருகே நெருங்கி நிற்பவனை பார்த்து தடுமாறினாள்.
“பார்த்தும்மா” கேப் ஓட்டுனர் சத்தமிட, அப்சரா விழாமல் பிடித்து, “உன்னோட காலுக்கு என்ன ஆச்சு?” கேட்டான் சம்பத்.
“சார்….” தயங்கி அவன் கையை அவள் எடுத்து விட, “நான் கேட்டேன்” மீண்டும் அவளை தன் பக்கம் இழுத்தான் சினமுடன்.
“சார், இது பொது இடம். அமைதியா கேளுங்க. நான் சொல்கிறேன்” அவள் கூற, ஓட்டுனர் இருவரையும் பார்த்தார்.
“உன்னோட வேலை முடிஞ்சதுல்ல கிளம்பு” கூறிக் கொண்டே சம்பத் அவளை தூக்கினான்.
“சார், இறக்கி விடுங்க” பதறினாள்.
“ஷ்ஷ்…அமைதியா வா” அவன் ரெஸ்டாரண்டில் அமர வைத்து விட்டு,
“இங்கேயே இரு” வெளியே சென்றான்.
அங்கிருந்த ஒருவர் அவளை பார்த்து, “பாய் ப்ரெண்டாம்மா? நல்லா பார்த்துக்கிறார்” சொல்லிக் கொண்டிருக்க, கவர் ஒன்றை மேசையில் வைத்து அவளை பார்த்தான்.
அப்சரா முகம் புன்னகையுடன் இருப்பதை பார்த்து புருவம் சுருக்கினான். அவள் அவ்வப்போது அந்நபரை பார்த்தாள். அவரை பார்த்து விட்டு அவளது காலை அவன் பிடிக்க, அவள் பதறி எழுந்தாள்.
ஸ்டிக் இல்லாமல் நிற்க முடியவில்லை. தடுமாறி அவனது தோளை இரு கைகளால் அழுந்த பற்றினாள்.
அவளை முறைத்து, “தடுமாறாமல் இருக்கவே மாட்டாயா? கீழ விழுந்து வாருரதே வேலையா போச்சு” சினந்தான்.
அப்சராவிற்கும் அவர்களை கவனிப்பவர்களுக்கும் அவன் செல்லக் கோபமுடன் பேசுவது போல இருந்தது. அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“முதல்ல உட்காரு” அவளை அமர வைத்து, அவளை பார்த்து விட்டு அவள் கவனிக்கும் அவரை பார்த்த சம்பத், “எல்லாரும் எதுக்கு நம்மை பாக்குறாங்க? நீ எதுக்கு சிரிச்ச?”
“ஒன்றுமில்லை சார். நீங்க அக்கறையா என்னை தூக்கி வந்து விட்டு போனீங்களா? இவங்க எல்லாரும் நம்மள கம்புல்ன்னு நினைச்சி ஸ்மைல் பண்றாங்க” புன்னகைத்தாள்.
சுற்றிலும் பார்த்த சம்பத், “எல்லாரும் உங்க வேலைய பாக்குறீங்களா? நாங்க தனியா பேசணும்” என்றான்.
வரவேற்பறையில் இருந்த பொண்ணு ஓடி வந்து, “சார் நான் அறைச்சாவியை எடுத்து வரவா?” கேட்டாள்.
வாட்? அவன் அதிர, சார்..இது எங்க ஹோட்டல் தான்.
ஓ! உங்களுடையதுல? எனக்கு மறந்து போச்சு. எல்லாரையும் உனக்கு தெரியுமா?
நோ சார். இவங்களுக்கு என்னை தெரியும்.
ஓ! நீ விசயத்தை சொல்லு? அவன் கேட்க, எல்லாரையும் பார்த்து தயங்கினாள்.
“மேம், டாக்டரை வரச் சொல்லவா?” அந்த பொண்ணு கேட்க, “நானும் மருத்துவன் தான்” அந்த பெண்ணை முறைத்து கூறினான் சம்பத்.
என்ன நடந்தது? அவன் கேட்க, அவள் கண்கள் கலங்கியது.
அவன் கட்டை போட்டு விட்டு அவளுக்கு எதிரே சென்று அமர்ந்து அவளை பார்த்தான்.
சித்தியும் அத்தையும் கண்டுபிடிச்சிட்டாங்க. என்னை அடிச்சாங்க.
அத்தை தான்…நான் அழுது கொண்டே அறைக்கு செல்லும் போது பாட்டில் ஒன்றை நான் செல்லும் போது தூக்கி எறிஞ்சுட்டாங்க. நல்ல வேளையாக அது தரையில் விழுந்து உடைந்தது.
கோபத்தில் கீர்த்தி என்னை தள்ளினாள். காலை உடைந்த பாட்டிலில் வைத்து விட்டேன். நேற்றே மருந்து போட்டுக் கொண்டேன்.
ஏன் மருத்துவர் கூட வர மாட்டாங்களா?
அவங்க வர விட மாட்டாங்க.
இருவரும் அமைதியாக இருந்தனர்.
காஃபி ஒன்றை ஆர்டர் செய்தான் சம்பத். அவளுக்கு வேண்டியதை கேட்டும் ஆர்டர் செய்தான்.
எல்லாவற்றையும் பொறாமைக்கண்ணுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் கீர்த்திகா. அவளுக்கு இவர்கள் பேசுவது கேட்கவில்லை.
ஆனால் சம்பத்தின் அழகும், கம்பீரமும், அக்கறையுடன் நடந்து கொள்ளும் விதமும் கீர்த்திகாவை கவர்ந்தது. அவன் அப்சராவிற்காக செய்வதை கீர்த்திகா விரும்பவில்லை.
இவன் யாராக இருப்பான்? ஒரு வேளை பாய் ப்ரெண்டோ? இவளுக்கு பாய் ப்ரெண்டாக எவனுக்கு தைரியம் இருக்கு? இவன் ஜஸ்ட் தோழனாக இருப்பான். இவனுக்கு தான் விபத்து என பொய் சொல்லி வெளியே செல்ல நினைத்திருக்கிறாள் போல!
அப்பூ கண்டிப்பாக நம்மை பற்றி யாரிடமும் பேசி இருக்க மாட்டாள் என எண்ணிக் கொண்டே அந்த நவீன ஆடையுடன் தலையில் தொப்பியும், கண்ணில் கூலருடன் இருவரின் மேசை அருகில் வந்தாள்.