காதல் 5

அப்சரா களைப்பில் பைக்கிலே சம்பத்தை கட்டிக் கொண்டு உறங்கி விட்டாள். அவள் அலைபேசி ஒலித்தது. அவள் எடுக்காமல் இருக்க பைக்கை நிறுத்தி லேசாக திரும்பி அவள் உறங்குவதை பார்த்து புன்னகைத்தான் சம்பத்.

இறங்காமலே பைக்கை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி அவன் நகர்ந்து அவளுக்கு அடிபடாமல் இருக்க அவன் கையை இடை நிறுத்தினான். அவன் கையில் முன்னோக்கி அவள் விழ அவன் அவள் கீழே விழாமல் இருக்க பைக்கை ஒட்டி நின்றான்.

விழித்த அப்சரா அவன் கையை பார்த்து மேலும் விழித்து அவளுடல் அவனிடம் சாய்ந்திருப்பதை கண்டு விரைந்து நகர்ந்தாள்.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, “சாரி” சம்பத்தை பார்க்க, அவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

கீழிறங்கி அலைபேசியை அவள் எடுக்கவும், “இப்பவே வீட்டுக்கு வா” அவள் தந்தையின் குரலில் விக்கித்து போனாள்.

“அப்பா…நான்..” கண்கலங்க சம்பத்தை பார்த்தாள்.

“சீக்கிரம் வா இல்ல அப்படியே போயிட வேண்டியது தான்” அதட்டினார்.

அப்சராவிற்கு கண்ணீர் வந்து விட்டது.

“அப்பா….” அவள் அழைக்க, அவர் வைத்து விட்டார்.

அலைபேசியை வைத்து விட்டு அவளையே குறுகுறுவென பார்க்கும் சம்பத்தை கண்டு கண்ணை துடைத்து, “சாரி சார் அசதியில் உறங்கிட்டேன். இனி உறங்க மாட்டேன். கிளம்பலாமா?”

“யாரு கால் பண்ணா?” தெரிந்து கொண்டே கேட்டான் சம்பத்.

அப்பா தான். வீட்டிற்கு வரச் சொன்னாங்க.

“வா” அவன் பைக்கை எடுக்க இருவரும் கிளம்பினார்கள்.

இருவரும் அப்சராவின் வீட்டை அடைந்தனர்.

அவளது தந்தை, சித்தி, அத்தை வெளியே வந்தனர். சம்பத் ஹெல்மெட்டுடன் இறங்க, அப்சராவின் சித்தி அவளிடம் வந்து அவளை ஓங்கி அறைந்தார்.

“எங்கடி போன? எங்க மானத்தை வாங்காமல் விட மாட்ட? இந்த ராத்தியில எவனோ ஒருவனோட வந்திருக்க? இவ்வளவு நேரம் இவனுடன் தான் இருந்தீயா?” சரமாரியாக கேட்டுக் கொண்டே அவளை அடித்தார். சம்பத் கைகளை இறுக்கினான்.

அவளது அத்தை ஜெயா அவளிடம் வந்து, “எந்த ஹோட்டல்ல ரூம் போட்டு இவனோட படுத்துட்டு வந்திருக்க?” வார்த்தையை அவர் விட, அப்சராவின் மனம் சில்லு சில்லாய் நொருங்கியது. இதனால் தான் தன் தோழர்களிடம் கூட பேசாமல் அவளை அவளே தனிமைப்படுத்தி இருக்கிறாள்.

ஜெயா விகற்பமாக பேசியதில்லாமல் அவள் முடியை பிடித்து இழுக்க, “அவள விடுங்க. மருத்துவமனையிலிருந்து….” அவன் சொல்லத் தொடங்க, அவன் கையை பிடித்த அப்சரா “வேண்டாம்” தலையசைத்தாள்.

“ஏன்டி எங்க முன்னாடியே அவனோட கையை பிடிக்கிற?” ஜெயா அவளை மேலும் அடிக்க, அப்சராவிற்கு தலை கிறுகிறுக்க தடுமாறி சம்பத் கையை அழுத்தி பிடித்தாள். அவனுக்கோ கட்டுப்படுத்த முடியாத சினம் வரத் தொடங்கியது.

காலையிலிருந்து அவனை கவனித்த அவளுக்கு இவர்களின் நடத்தை அவனுக்கு கோபத்தை வர வைக்கும் என தெரியும் தானே!

அந்நிலையிலும் அவனை கண்டுகொண்ட அப்சரா, “அத்தை என்னோட ஸ்கூட்டி ரிப்பையர் ஆகிடுச்சி. அதான் பைக் புக் பண்ணி வந்தேன்” அவன் கையை விடுத்து, “தேங்க்ஸ்” சம்பத்தை பார்த்து கண்ணாலே எச்சரித்து தன் தந்தையை பார்த்து,

“நான் பே பண்ணிட்டேன். உள்ளே போறேன்” அவள் தடுமாறி நடக்க, வேகமாக அவளிடம் செல்ல இருந்த அவளின் தந்தை குருமூர்த்தியின் கையை பற்றினார் முறைப்புடன் அவளது சித்தி தனலட்சுமி.

இதை பார்த்த சம்பத், மூவருக்கும் முன்னே சென்று அவளை தூக்கினான். எல்லாரும் அதிர்ந்து அவனை பார்த்தனர். அப்சரா நம்பமுடியாமல் விழித்து அவனை பார்த்தாள்.

அப்சராவை தூக்கி அவர்கள் பக்கம் திரும்பி, “சார் உங்க பொண்ணோட அறை எங்க இருக்கு? நான் அறையில் விட்டு செல்கிறேன். ஏற்கனவே அவங்க சோர்வா இருந்தாங்க” அவளை பார்த்தான். அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த அப்சரா கண்கள் நீரால் கோர்த்தது. அதை கண்டும் காணாதது போல அவர்களை பார்த்தான்.

பெண்கள் இருவரும் கடுப்புடன் இவர்களை பார்க்க, குருமூர்த்தி அவளறையை காட்டினார். சம்பத் அவளறைக்கு வந்து அவளை விட்டு பெண்களை பார்த்து…

இவங்க பேருந்தில் அசந்து தூங்கி வெகுதூரம் போயிட்டாங்க. அங்க இந்த நேரம் எதுவும் கிடைக்காது. அதான் பைக் புக் பண்ணி இருக்காங்க. நான் பத்திரமா கொண்டு வந்து விட்டுட்டேன். வேற எவனாவது இருந்தால் இவங்கள கடத்தி பணம் பறிச்சிருப்பாங்க. அங்க வழிபறி நிறைய நடக்கும் என்று ஓர் கதையை கூறி அப்சராவை காப்பாற்றி விட்டு நகர்ந்தான்.

பெண்கள் செல்லவும் குருமூர்த்தி வேக வேகமாக சம்பத் பின் ஓடி வந்து மூச்சிறைக்க நின்று, “ரொம்ப நன்றிப்பா. எம் பிள்ளையை காப்பாத்தி கொடுத்திருக்க? உனக்கு என்ன வேண்டுமானாலும் கேளுப்பா” என்றார்.

எனக்கு இப்ப எதுவும் தேவையில்லை சார். வேண்டுமென்றால் கேட்கலாமா?

“ம்ம்! கண்டிப்பாக” அவர் அவரது விசிட்டிங் கார்ட்டை நீட்டினார்.

சம்பத் புன்னகையுடன் கிளம்பினான். அவன் ஹெல்மேட்டை கழற்றவேயில்லை. அதனால் அவன் முகத்தை யாரும் பார்க்கவில்லை.

குருமூர்த்தி கண்கலங்க உள்ளே செல்வதை சினமுடன் பார்த்துக் கொண்டே சென்றான் சம்பத்.

சம்பத் செல்லவும் தன் மகள் அறைக்கு குருமூர்த்தி செல்ல, அவர் மனைவி தனலட்சுமி அவரை அவர்களது அறைக்கு சினமுடன் அழைத்து சென்றார்.

அப்சராவிற்கு அந்த சோர்விலும் உறங்க முடியாமல் சம்பத்தின் நெருக்கமான சில நிமிடங்களை எண்ணி எண்ணி கரைந்து கொண்டிருந்தாள்.

எவ்வளவு கோபக்காரனாக இருந்தாலும் நற்பண்பும் பாசமும் மிக்கவனாயிற்றே! அவன் விழிகள் அவளை இம்சித்தது.

வீட்டிற்கு வந்த சம்பத் எதிரேயுள்ள பெண்மணி வீட்டை பார்த்துக் கொண்டே அவனறைக்கு சென்று படாரென கதவை அடித்து சாற்றினான்.

சட்டையை கழற்றி தூக்கி எறிந்து படுக்கையில் விழுந்த அவனுக்கு அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது. அதை எண்ணிய அவன் மனம் கொதித்தது.

“ஆஆஆஆஆஆ” கண்கள் சிவக்க தலையை பிடித்து சீற்றமுடன் கத்தினான்.

“உன்னை சும்மா விட மாட்டேன்” கத்திய சம்பத் எண்ணத்தில் அப்சராவின் எண்ணம் சூழ அமைதியானான்.

சிலமணி நேரம் இன்று நடந்த அனைத்தையும் எண்ணியவாறு சித்தார்த், அப்சராவை பற்றி சிந்தித்து ஓர் முடிவை எடுத்தான். பின் தான் அவனால் உறங்க முடிந்தது.

அதிகாலை எழுந்த சம்பத் மீது கையை போட்டு உறங்கிக் கொண்டிருந்தான் சித்தார்த். அவனை கண்டு சினந்த சம்பத்தால் அவனது கள்ளம்கபடமில்லா முகத்தை பார்க்கவும் கோபம் தூரச் சென்றது.

சில நிமிடம் அவனை கண்டு கொண்டிருந்தவனுக்கு அப்சராவின் வார்த்தைகள் காதில் விழுந்தது.

“அவளது மாமாவை எதிர்த்து சித்தார்த்தை நிற்க வைக்க சொல்லி இருந்தாளே!” எண்ணமுடன் அவனது நேற்றைய முடிவையும் சிந்தித்தான்.

குருமூர்த்தியின் மகள் அப்சராவை திருமணம் செய்து அவளை இவன் வீட்டிற்கு அழைத்து வந்து அவள் தந்தையிடமிருந்து பிரிக்க எண்ணியவனின் எண்ணம் மாறியது.

“முதல்ல சித்தார்த் எல்லாமே கற்றுக்கொள்ளணும். அப்சரா சொன்னது போலவும் செய்தால் அந்த குருமூர்த்தியின் மகள், மகன் இருவரையுமே அவரிடமிருந்து பிரிக்கலாம். ஒரு கல்லில் இரு மாங்காய்” என்று எண்ணியவன், “அப்சரா தன்னை திருமணம் செய்ய ஒத்துக் கொள்வாளா? என்ன செய்யலாம்?” சிந்தித்தான்.

அப்சராவை அவன் தூக்கிய போது அவளது கண்கலங்கலில் அன்பிற்காக ஏங்குகிறாள். இதை பயன்படுத்தலாம் என எண்ணினான் அவளுக்கு தன் மீது காதல் வந்ததை அறியாமல்..

சித்தார்த்தை விழிக்க வைத்து அவனை தன்னுடன் ஜிம் அழைத்து சென்றான். அங்கே நிலனுக்கு பதிலாக புது பயிற்சியாளன் சேந்தன் இருந்தான்.

சித் இவன் என்னோட நண்பன் சேந்தன்.

சேந்தா, இவன் சித்..சித்தார்த். இவனுக்கு இனி தினமும் நீ தான் பயிற்சி கொடுக்கணும். நானும் இடையிடையே பார்த்துக் கொள்கிறேன்.

“சம்பா ஸ்பெசல் பர்சனா?” கண்ணடித்து சேந்தன் கேட்க, “ஆமாடா” சித்தார்த்தை பார்த்தான் சம்பத்.

சம்பா, என்னால இதெல்லாம் முடியாது.

“ப்ரோ எதுவும் முடியாதுன்னு சொல்லாதீங்க” சித்தார்த் தோளில் கை போட்டான் சேந்தன்.

“சித், நீ இங்கேயே இரு. நான் அவனிடம் பேசிட்டு வாரேன்” சேந்தனை அவனுடன் அழைத்து சென்று ஒன்றுவிடாமல் கூறினான் சம்பத்.

“சம்பா, பழி வாங்குறதுக்காக திருமணம் செய்யப் போறீயா? சரியில்லைடா. சித்தார்த்தை நம்ம தாரா காதலிக்கிறான்னு வேற சொல்ற? அவளுக்காகவாது யோசிடா..வேண்டாம்” எச்சரித்தான் சேந்தன்.

இல்லடா மச்சான். என்னோட வலி புரியாம பேசாத..

ஏன்டா புரியாது? நல்லா புரியுது. நீ யாரை திருமணம் செய்யப் போறன்னு புரிந்து தான் பேசுறியா? பழி வாங்க.. அவனுக்கு தெரிந்தால்..

எவன்டா அவன்? நான் என் குடும்பத்தை இழந்திருக்கேன். உனக்கு தெரியும்ல்ல? என்னோட வந்துவை…சீற்றமுடன் கத்திய சம்பத் கதறி அழுதான்.

சாரிடா. ஒரு பொண்ணோட வாழ்க்கை? அதான் பேசினேன். அதுவும் அவன்..

“செட் அப். முடிந்தால் உதவு இல்லைன்னா போய்க்கிட்டே இரு” சினந்து சம்பத் கூறவும், “சரிடா..இப்ப என்ன சித்தார்த்திற்கு பயிற்சி கொடுக்கணும். உனக்காக அவன் உடலை மட்டுமல்ல அவன் மனதையும் பலப்படுத்துவேன்” உறுதியளித்து அவன் நகர்ந்தான்.

என்ன தான் முடிவெடுத்து விட்டாலும் அப்சராவின் முகம் சம்பத் கண் முன் வந்து சென்று கொண்டிருந்தது.

“வந்து எனக்கான வாய்ப்பை நான் வீணாக்க மாட்டேன்” மனதை திடமாக்கி அவன் சித்தார்த்தை விட்டு அப்சராவையும் அவள் குடும்பத்தையும் கண்காணிக்க சம்பத் கொடைக்கானல் கிளம்பினான்.

ஜிம்மிலிருந்து வெளியே வந்த சம்பத்திற்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. அதனால் அவனால் கொடைக்கானல் செல்ல முடியவில்லை. அன்றைய நாள் அவனுக்கு அப்படியே கழிந்தது.

சித்தார்த்தோ அழாத குறையுடன் சேந்தனிடம் சிக்கி தவித்தான்.

இரவு சித்தார்த்தும் சம்பத்தும் வீட்டிற்கு வந்தனர்.

தாரணி உணவை எடுத்து வைக்க, “தாரா நான் இப்ப வாரேன்” சம்பத் அறைக்கு சென்று அலைபேசியை எடுத்து கொடைக்கானலில் இருக்கும் தன் நண்பனை அழைத்தான்.

அலைபேசியை எடுத்த ஒரு பெண், டாக்டர் ஆப்ரேசன்ல்ல இருக்காங்க. உங்க நேம் சார்? கேட்டாள்.

“சம்பத்துன்னு சொல்லுங்க. முக்கியமான விசயம். உடனே பேசணும்ன்னு சொல்லுங்க” அலைபேசியை வைத்து விட்டு சம்பத் உணவுண்ண வந்தான்.

சித்தார்த்தும் தாரணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சம்பத் அறைக்கதவை திறக்கவும் தாரணி உணவை பரிமாறுவதும், சித்தார்த் உணவுண்டும் கொண்டிருந்தான்.

சம்பத் இருவரையும் பார்த்துக் கொண்டே அமர்ந்து உணவுண்ண, சித்தார்த் திருட்டுத்தனமாக கண்ணை உயர்த்தி தாரணியை பார்த்து கண்ணசைத்தான். அவள் முறைப்புடனான புன்னகை சிந்த, இருவரின் காதல் மொழிகளை கண்டும் காணாதது போல உணவுண்டு கொண்டிருந்தான் சம்பத்.

சித்தார்த்திற்கு முன்னே சாப்பிட்டு எழுந்த சம்பத், “சித் சீக்கிரம் சாப்பிட்டு நம்ம அறைக்கு வா” சொல்லி நகர்ந்தான்.

அறைக்கு செல்லவும் படுத்த சம்பத் கண்ணில் கண்ணீருடன் தன் நெஞ்சை அழுத்தி பிடித்திருந்தான். அவன் அலைபேசி ஒலித்தது.

சிபி என்ற பெயரை பார்க்கவும் கண்ணீரை சுட்டி விட்டு எழுந்து அமர்ந்து அலைபேசியை காதுக்கு கொடுத்தான்.

“என்னடா சீமந்த புத்திரா? என்ன பண்ற? இப்ப தான் என்னோட நினைவே வருதோ?” சம்பத்தின் நண்பன் மருத்துவன் சிபி கேட்டான்.

கரகரத்த குரலில், “நடந்தது தான் உனக்கு தெரியுமே! எனக்கு இப்ப ஒரு உதவி வேண்டுமே!”

“ம்ம்! செய்கிறேன். அதிலிருந்து வெளிய வாடா. உனக்கும் தாராவுக்கும் வாழ்க்கை இருக்கு” சிபி அறிவுறுத்தினான்.

சரிடா. எனக்கு குரு குரூப்ஸ் கம்பெனியோட சேர்மன் குருமூர்த்தி சார் பொண்ணோட நம்பர் வேண்டும்.

“வாட்?” அதிர்ந்த சிபி, “எதுக்குடா கேக்குற?” சினமுடன் கேட்டான்.

“வேறெதுக்கு கேட்க போறேன்” அசட்டையாக பேசினான் சம்பத்.

“சம்பா, அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அவங்களால எதுக்கு அந்த பொண்ணை பயன்படுத்த எண்ணுற? நீ எங்க சம்பாவே இல்லை. நீ இப்படி எண்ணுவன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை”.

நல்ல பொண்ணு தான். அந்த வீட்ல பொறந்துட்டால்ல?

மச்சீ, நீ சரியில்லை. அவனுக்கு மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான்..

“என்னடா, அவன வச்சி  பூச்சாண்டி காட்டுறீங்க? என்னை விட உங்களுக்கு அவனை தெரியுமா?”

அவன் உன்னோட தோழன்.

அது அப்ப..

ஓ!

ஒன்று மட்டும் நினைவில் வச்சுக்கோ சம்பா. நம்ம வந்துவுக்காக நீ மட்டுமல்ல அவனும் தான் நொந்து போயிருக்கான்.

அவனா? சிரித்தான் சம்பா.

“சம்பா….” சீற்றமுடன் சிபி அழைக்க, “அவன நம்பி தானடா எல்லாரையும் விட்டு போனேன். எனக்கு முதல் சந்தேகமே அவன் மேல தான்”.

வாய கழுவுடா. அவன் வந்துவுக்காக உயிரையே கொடுக்க நினைத்தவன்..

சிபி…எனக்கு அப்சராவின் நம்பர் வேணும்.

எதுக்கு? என்னால இதுல உனக்கு உதவ முடியாது..

“ஆமா, உனக்கு அவ சொந்தம் தான? நீ எதுக்கு எனக்கு உதவணும். நானே பார்த்துக்கிறேன்” அலைபேசியை தூக்கி கீழே போட்டான் சம்பத்.

அறைக்கு வந்த சித்தார்த் கால் முன் வந்து விழுந்தது சம்பத்தின் அலைபேசி. அவன் கோபத்தை பார்த்து மிரண்டு நின்றான் சித்தார்த்.

சம்பத் சிவந்த விழிகளுடன் சித்தார்த் அருகே வந்து அவனது அலைபேசியை எடுத்து வெளியே வந்தான்.

தாரணி உணவுண்டு கொண்டிருந்தாள். அவள் தன் முகத்தை பார்த்து விடக் கூடாது என எண்ணியவாறு அலைபேசியில் பேசுவது போல முகத்தை மறைத்து வெளியே வந்தான்.

சிபி சம்பத்தை அழைத்தான்.

உன்னோட அலைபேசிக்கு அப்பூ நம்பரை அனுப்பி இருக்கேன்.

“சம்பா என்னதான் கோபத்தில் நீ முடிவெடுத்தாலும் அப்சராவை கைவிட மாட்டன்னு நம்புகிறேன்” சொல்லி சிபி அலைபேசியை வைத்து விட்டான்.

வெளியே அமைதியாக அமர்ந்து அவன் அனுப்பிய எண்ணை பார்த்துக் கொண்டிருந்தான் சம்பத்.

  சம்பத் காலை விழித்ததும் தன் மீது காலை போட்டு உறங்கும் சித்தார்த்தை ஆழ்ந்து பார்த்து அவனை விலக்கி விட்டு அவனை எழுப்பி இருவரும் தயாராகி வெளியே வந்தனர்.

தாரணி எப்பொழுதும் போல ஆம்லா ஜூஸ் கொடுக்க, அதை குடித்து விட்டு இருவரும் ஜிம்மிற்கு சென்றனர்.

சித்தார்த்தை தன்னறையில் இருக்க வைத்து விட்டு சம்பத் சேந்தனை சந்திக்க சென்றான்.

என்னடா சிபிகிட்ட அந்த பொண்ணு நம்பர் வாங்கிட்ட போல? அவன் ரொம்ப வருத்தப்பட்டான். அந்த பொண்ணு நீ நினைக்கிறத விட ரொம்பவே கஷ்டப்படுற பொண்ணுடா..

அவளோட அம்மா சித்தார்த்தை பார்க்கிறேன்னு இந்த பொண்ணை கண்டுகொண்டதேயில்லையாம். தனிமையிலே வளர்ந்த அந்த பொண்ணுக்கு நண்பர்கள் மட்டும் தான் உறுதுணையே! அதுவும் அவள் அம்மா உடல்நலமில்லாமல் படுத்த பின் அவள் நண்பர்களை அலைபேசியில் கூட பேசாமல் தனியாகவே இருக்கிறாளாம். ரொம்ப கஷ்டப்படுத்திறாதடா…. சம்பத்தை ஆராய்ந்து கொண்டே பேசினான் சேந்தன்.

பார்க்கலாம்..

என்ன திட்டம் வச்சிருக்க?

“அதெல்லாம் கேட்காத. அதை நான் பார்த்துப்பேன்” அலைபேசியை எடுத்து அப்சரா எண்ணிற்கு அழைத்தான்.

“ஹலோ…” சோர்வுடன் அவள் குரல் கேட்க, “அங்க என்னடி பண்ற? எனக்கு காஃபி எங்க?” கீர்த்திகா சத்தமிட்டாள்.

“வந்துட்டேன்” அலைபேசியை அடுக்கலையில் வைத்து விட்டு நடக்க முடியாமல் அப்சரா செல்ல, “எங்களுக்கு எங்கடி? உன்னை வெத்தல பாக்கு வச்சி அழைக்கணுமோ!” தனலட்சுமி சத்தமிட்டார்.

“மாம், அவளால தான் முடியலைல்ல? எதுக்கு எல்லாரும் அவளிடம் கேக்குறீங்க?” எத்தனை வேலைக்காரவங்க இருக்காங்க” யாதவ் அப்சராவிற்காக பேசினான்.

“யாதவ்” சத்தமிட்ட கீர்த்திகா, “உனக்கென்ன? உன் வேலையை பாரு” அதட்டினாள்.

“ஏன்டி, எம் பொண்ணு கீர்த்துவும் உன் தம்பியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க. உனக்கு நினைவிருக்குல்ல? உன்னோட அம்மா மாதிரி இவனையும் முந்தானையில முடிஞ்சு வைக்க பார்க்குறியா? உனக்காக பேசுறாரு மாப்பிள்ள?” ஜெயா ஆங்காரமுடன் கேட்டார்.

“அத்த அவ என்னோட அக்கா” யாதவ் சத்தமிட்டான்.

“என்னடா சத்தம் போடுற?” தனலட்சுமி தன் மகனை அதட்ட, அங்கிருந்த கண்ணாடி பொருள் ஒன்றை தட்டி விட்டு விறுவிறுவென அவனறைக்கு சென்றான் யாதவ்.

கண்ணீருடன் நிற்க முடியாமல் அப்சரா நிற்க, “ஏன் அப்பூ..அதெப்படி எல்லா பசங்களுக்கும் உனக்காக பரிஞ்சுகிட்டு வாரானுக? என்ன செய்வ?” வக்கிர வார்த்தையுடன் புருவம் சுருக்கி அப்சராவின் புடவை ஒதுங்கிய இடையை பார்த்து கீர்த்தனா கேட்க, மனம் வலிக்க வேகமாக அடுக்கலைக்குள் சென்று அழுதாள் அப்சரா.

சத்தமாக பேசியதில் அனைவரின் பேச்சும் அதனூடே அப்சராவின் அழுகையும் சம்பத் காதில் நன்றாக விழுந்தது.

“எவ்வளவு நேரம்டி?” ஜெயா சத்தமிட, முகத்தை துடைத்து காபியை எடுத்தவள் அலைபேசியை பார்த்து அதை மறைத்து அவளது இடையில் சொருகிக் கொண்டு அவர்களுக்கு காபியை கொடுத்து விட்டு நகர..

“ஏய் நில்லுடி” ஜெயா சத்தமிட, “அத்த..” அவள் கலங்கிய குரலில் அழைத்தாள்.

முறையா பார்த்தா எம் பிள்ள சர்வாவை தான் உனக்கு திருமணம் செய்யணும். நானும் எவ்வளவோ அவனை தேட முயன்றும் அவன் எங்க இருக்கான்னு கூட தெரியல. அவனை தேட வேண்டாம்ன்னு அந்த சிறுக்கிய நினைச்சிட்டு ஒரேதா பாரின் போயிட்டான்.

அதான் நம்ம ராசாக்கண்ணு பையன் சின்னவனை உனக்கு முடித்து வைத்து ஏற்பாடு செய்திருக்கோம்.

“அத்த….” அப்சரா அதிர்ந்தாள்.

அவனுக்கு என்னடி ராசா மாதிரி இருப்பான். நல்லா படிச்சிருக்கான். அவன் அப்பன் தொழிலை எடுத்து நடத்திட்டு இருக்கான்.

“அத்த, அவனுக்கு பொண்ணுங்க பழக்கம் இருக்கு” தடுமாற்றத்துடன் அப்சரா கூற, ஜெயா கையிலிருந்த காபி கோப்பையை தூக்கி எறிய அது சுவற்றில் பட்டு தெறித்து உடைந்தது.

அப்சரா பயந்து பின்னே நகர, நாற்காலியின் கால் தட்டி பின்னோக்கி அவள் விழ, ஓடி வந்து யாதவ் அவளை பிடித்து..

“மாம்” சத்தமிட்டு அவளது இடையிலிருந்த அலைபேசியை பார்த்து அவள் முகத்தை பார்த்தான்.

ஏற்கனவே பயத்தில் இருந்தவள் முகம் அவன் அலைபேசியை கவனித்ததை பார்த்து மேலும் பயந்து விட்டாள். அவன் யாரும் கவனிக்காத சமயம் அவளது அலைபேசியை நேராக அவளது இடையிலே பொருத்தி விட்டு அவன் அம்மாவை சினமுடன் முறைத்தான்.

“ச்சீ..என்ன மாப்பிள்ள? அவள போய் பிடிச்சிட்டு கீழ விழுந்து சாவட்டும்” ஜெயா கூற, சீற்றமுடன் அவரை பார்த்து “அப்பூவுக்கு ஏதாவது ஆனால் உங்க திட்டம் என்னாவது? பணம் எப்படி உங்க கைக்கு வரும்?” அப்சராவை பார்த்தான்.

ஏற்கனவே காலில் இவர்கள் ஏற்படுத்திய காயம் வலிக்க, ஷ்ஆ..அவளது கையை யாதவின் தோளில் போட்டாள் அப்சரா.

“யாரு மேல கையை வைக்கிற எடுடி” யாதவ் எதிர்பாராத நேரம் அப்சராவை இழுத்து கீழே தள்ளினாள் கீர்த்திகா.

அவள் தள்ளியதில் சுவற்றில் முட்டி கீழே விழுந்தாள் அப்சரா.

“ஏய்ய்ய்..” சத்தமிட்ட யாதவ் கீர்த்திகாவை அடித்து விட்டான்.

“இவளுக்காக நீ என்னையே அடிச்சிட்ட? இவளை என்ன செய்றேன் பாரு” கீழே விழுந்திருந்த அப்சரா முடியை பிடித்து சுவற்றில் முட்ட வைத்தாள்.

அப்சராவின் கதறலில் இறுகி இருந்தான் சம்பத்.

“என்ன நடக்குது?” சத்தமிட்டு ஓடி வந்த குருமூர்த்தியை தனலட்சுமி தடுக்க, அவரை தள்ளி விட்டு குருமூர்த்தி தன் மகளிடம் ஓடினார்.

யாதவ் அப்சராவை எழ வைக்க, மயக்க நிலையில் தன் தந்தையை பார்த்து, “இதுக்கு என்னை கொன்னே போட்டுருக்கலாம்” என்று யாதவ் மீது மயங்கினாள்.

குருமூர்த்தி தலையில் அடித்து அழுது கொண்டிருக்க, பணியாளர்கள் உதவியுடன் அவளை மருத்துவமனையில் சேர்த்தான் யாதவ்.

யாதவின் மாற்றமும், குருமூர்த்தியின் மகள் மீதான பாசமும் அப்சரா மீது பெண்கள் மூவருக்கும் வெறுப்பே அதிகமானது.