காதல் 21

சம்பிரதாய சடங்குகள் நடக்க, பிரணிதாவும் வசந்தியும் மணமேடையை விட்டு நகரவில்லை.

“எனக்கு என்ன எங்க பார்த்தாலும் தர்மா தெரியுறான்? கண்ணு நொள்ளையா போச்சோ?” எண்ணியவாறு “பெரியம்மா பார்த்துக்கோங்க” தண்ணீர் அருந்தி விட்டு மணமேடையை பார்த்தாள் பிரணிதா.

சித்தார்த்தும் அவனை சூழ்ந்து உறவினர்களும் நின்றனர்.

மணமகள் அறைப்பக்கம் வந்த பிரணிதா கண்ணில் சர்வா பட்டான்.

அவனருகே சென்று அவனை மேலும் கீழுமாக பார்த்து, திருமணம் சித் அண்ணாவுக்கு. நீ என்ன வெள்ளையும் சொள்ளையுமா திரியுற? அவன் தோளில் கை போட்டு குனி என்றாள்.

என்ன பண்ணப் போற? திகிலுடன் சர்வா, எல்லாரும் பாக்குறாங்க என்றான்.

“யாரு பார்த்தா நமக்கென்ன? அந்த நர்ஸ் பொண்ணை கரெக்ட் பண்ணிட்ட” கண்சிமிட்டினாள்.

அவள் பார்வையை பின் தொடர்ந்த சர்வா, பிரணிதா கையசைக்கும் பெண்ணை பார்த்து முறைத்தான்.

“சரி சரி உங்களுக்குள்ள நிறைய இருக்கும். நான் வாரேன்” அவள் நகர, அவள் கரத்தை பற்றி அவளை நெருங்கிய சர்வா, “லூசு…உனக்கு ஆப்பு தான்” என்றாள்.

வாட்? அவள் அவனை திரும்பி பார்த்தாள்.

“பாவம் நீ…” தலையை சிலுப்பினான்.

என்னடா பொண்ணுங்க மாதிரி பண்ற? சிரித்தாள்.

நீ இன்னுமா பார்க்கலை?

என்னடா பார்க்கணும்? போச்சு மறந்துட்டேன். தாலியை எங்கிட்ட தான் குடுத்தாங்க. பாட்டிகிட்ட இருக்கு. இந்த பாட்டி எங்க இருக்குன்னு தெரியலையே! பெரியம்மா என்னை வசை பாட ஆரம்பிச்சிடுவாங்க……

ஏய்ய்ய்ய்ய்…சர்வா குரல் கொடுத்து, “பாட்டி இங்க தான் இருக்காங்க” கையை காட்டினான்.

“மகனே! நல்லா இருப்ப. என்னை காப்பாற்றியதற்கு உனக்கு பரிசு வாங்கி தாரேன்” அமர்ந்திருந்த ஆட்களை விலக சொல்லி பாட்டி அருகே சென்றாள்.

“பாட்டி, தாலியை கொடு இல்ல பெரியம்மா நடனத்தை எல்லாரும் பார்க்க வேண்டி வரும்” முகத்தை சுருக்கினாள்.

புன்னகைத்த பாட்டி, “எந்த தாலி?” கேட்டார்.

“பாட்டி….” அவள் சத்தமிட சுற்றி இருந்தவர்கள் அவளை பார்த்தனர். போலியாக க்யூட்டான முகப்பாவனையுடன் “சும்மா கத்திப் பார்த்தேன்” என்றவள் விழிகள் விரிந்தது.

பாட்டி அருகே தர்மா இருப்பதை போல அவளுக்கு தெரிய, “இவன் வேற சும்மா மூஞ்சி முன்னாடி வந்து தொந்தரவு செய்றான்” என்றவாறு தர்மாவை ஒரு மூச்சுக்கு திட்டி…

பாட்டி வீட்டுக்கு போய் விளையாடலாம். என் வாழ்க்கையில் விளையாடாத.. பெரியம்மா மானத்தை வாங்கிடுவாங்க..

“ஹாய் பிரணி…” பின்னே சத்தம் கேட்க, பிரணிதா வந்தனா கல்லூரி தோழிகள் வந்திருந்தனர்.

ஆஆஆ….வென அவர்களை பார்த்து, உங்களுக்கு யாருடி சொன்னா?

சம்பத் அண்ணா தான் சொன்னாரு..

சொல்லீட்டாரா? சரிடி வெயிட் பண்ணுங்க. வந்திடுறேன்.

பாட்டி…. அழுத்தமுடன் அவள் அழைக்க, மேலும் அவளை சோதிக்காமல் தாலி வைத்திருக்கும் பெட்டியை அவள் கையில் கொடுத்தார் பாட்டி..

மேல வா பாட்டி. இங்கிருந்து கொடுத்தால் எப்படி? உம் பேரனுக்கு தான் திருமணம்..

பாட்டியும் தாத்தாவும் எழுந்தனர்.

பிரணிதா கரத்தை யாரோ பற்ற, யாருடா? என்ற பிரணிதா முகத்தில் புன்னகை.

ஹே…நிவி குட்டி, அம்மா எங்க?

அங்க வர்றா?

“இவ்ளோ நேரமா?” பாப்பாவை தூக்கிக் கொண்டு, “பாட்டி நான் அக்கா, மாமாவை பார்த்துட்டு வாரேன்” நகர்ந்தாள்.

கந்தசாமி பேத்திக்கு வந்தனா பெயரை வைக்கக் கூடாது என சம்பத் கண்டிப்புடன் கூறிவிட்டான்.

“தர்மா, நீயும் வா…” பாட்டி அழைக்க, அவன் விழியெடுக்காமல் பிரணிதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“தர்மா பிரணி எங்கும் போக மாட்டாள்” தாத்தா அவனையும் கையோடு அழைத்து சென்றார்.

ஐந்து வருட தண்டனை தர்மாவின் நன்னடத்தையால் மூன்று வருடத்திலே அவனை வெளியே அனுப்பி இருந்தனர்.

மேடையில் ஏறிய அவனை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.

“பிரணி, எப்படி ரியாக்ட் பண்ணா?” அப்சரா தர்மாவிடம் கேட்டாள்.

“அவள் கண்ணுக்கு நான் தெரியவேயில்லை” வருத்தமுடன் கூறினான்.

மாமா, அப்படியெல்லாம் இருக்காது. அவள் இன்னும் உங்களை சரியாக கவனிக்கவில்லை.

ம்ம்!!!..

சடங்குகள் முடிந்து கெட்டி மேளம் ஒலிக்க, பிரணிதா மணமேடையை பார்த்தாள். மணமக்களை தவிர யாரும் அவள் கண்ணிற்கு தெரியவில்லை.

தாராவின் வெண்சங்கு கழுத்தில் சித்தார்த் திருமாங்கல்யத்தை அணிவித்தான். அவர்களை பார்த்த பிரணிதாவிற்கு வந்தனா அவர்களுக்கு இடையில் அமர்ந்து புன்னகைப்பது போல இருந்தது. தானாக அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

நிவியை தன் சகோதரி கையில் கொடுத்து விட்டு விறுவிறுவென நகர்ந்தாள்.

“என்னாச்சு பிரணிக்கு?” அப்சரா வாய்விட்டு கேட்க, “ஒன்றுமில்லை” சம்பத் தன் பெற்றோரை பார்த்தான்.

பாட்டியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு தர்மராஜை பார்த்தனர்.

இல்ல என்று அவன் கண்ணால் தாரணி சித்தார்த்தை காட்டினான்.

வசந்தி பதறி, “புள்ளைய யாரும் எதுவும் சொல்லீட்டாங்களோ?” நகர, “இல்ல அத்தை, அவ இப்ப வந்துருவா. நீங்க இருங்க” என்றான் சம்பா.

பாட்டியும் தாத்தாவும் செல்ல, அவர்கள் பின் தர்மாவும் சென்றான்.

“என்னடி ஆச்சு?” பிரணிதாவின் சகோதரி பிரணிதாவை தன் பக்கம் திருப்ப, “ஒன்றுமில்லைக்கா” கண்ணீரை சுட்டி விட்டு, “வந்து நினைவு வந்துருச்சு. வேற ஒன்றுமில்லை” நகர்ந்தாள்.

“அம்மாடி” தாத்தா அழைக்க, சிரமப்பட்டு புன்னகையை வர வைத்து மணமேடை ஏறி மணமக்களுக்கு வாழ்த்து கூறினாள்.

மணமக்களுக்கு உறவினர்களின் வாழ்த்துகள் குவிந்த வண்ணமிருந்தது.

தன் தோழிகளிடம் சென்று பேச பேச மீண்டும் வந்தனா எண்ணமே அவளை சுற்றிக் கொண்டிருந்தது. அவளையே கவனித்துக் கொண்டிருந்த தர்மராஜிற்கு அது புரியவும் பாட்டியை பார்த்தான்.

பாட்டி அவளை தனியே அழைத்து ஆறுதலாக பேச, “பாட்டி…நான் மீண்டும் மறந்துட்டேன். சித் அண்ணா, தாராவுக்கு வாங்கிய பரிசை கொடுத்துட்டு வாரேன்” அவள் எழ, கந்தசாமி அவள் கை பிடித்து அழைத்து சென்றார்.

கந்தசாமி….. பாட்டி சத்தமிட, “பேசிட்டு வருவா” என்று மறைந்திருந்த தர்மாவை பார்த்துக் கொண்டே சென்றார்.

தர்மாவை காண முடியாமல் தன் மகள் பட்ட அவஸ்தையை பார்த்தவராயிற்றே! இப்பொழுதும் அவளிடம் பேச அவனுக்கு மனமில்லை என்றால் வேறு மாப்பிள்ளை தேட வேண்டியது தான் என்று எண்ணி, அவளை பார்த்து வரன் கேட்ட குடும்பத்திடம் அழைத்து சென்றார்.

“அப்பா…” அவள் புரியாமல் அவர் பின்னே சென்றார்.

குடும்பம் ஒன்றின் முன் பிரணிதாவை நிறுத்தி, உங்களுக்கு எம் பொண்ணை பிடிச்சிருந்தா திருமணம் வச்சுக்கலாம் என்றார் பட்டென.

அப்பா…..

அவளை நெருங்கி தர்மா வெளிய வந்து இரு நாட்களாகுது. இப்பொழுது கூட உன்னை பார்த்து மறைந்து தான் இருக்கிறான். என்னால இதுக்கு மேல உன்னோட திருமணத்தை தள்ளிப் போட முடியாது கண்கலங்கினார்.

தர்மா வந்துட்டானா? சுற்று முற்றும் பார்த்து அவனை கண்டும் விட்டாள். இவன் உண்மை தானா? கற்பனை என்று எண்ணியவளுக்கு பாட்டி கூட கூறவில்லை. இப்படியா முட்டாளாக இருப்போம்? எண்ணியவாறு, அப்பா நான் வீட்டுக்கு போகவா? கேட்டாள்.

என்னம்மா?

“அவன் மீது தவறில்லை. நான் தான் முட்டாள் தனமா அவன் என் கற்பனைன்னு நினச்சுட்டேன். நான் வீட்டுக்கு கிளம்புகிறேன். நீங்க விழா முடியவும் வாங்க” வேகமாக நடந்து தன் வண்டியை எடுத்தாள்.

பாட்டியும் தாத்தாவும் அவளை அழைக்க, கேளாதது போல சென்று விட்டாள். அவர்களுக்கும் சரி தர்மாவிற்கு சரி ஒன்றுமே புரியவில்லை.

“பிரணி..” கந்தசாமி அவள் பின்னே வந்தார்.

அவள் செல்லவும் அலைபேசியை எடுத்து அவளை அழைக்க, அவள் அழைப்பை ஏற்கவில்லை.

“என்னாச்சுப்பா புள்ள கோபமா போகுது” பாட்டி கேட்க, “ஒன்றுமில்லை” அவர் கூற, பிரணிதாவே அவரை அழைத்தாள்.

“பயப்படாதீங்கப்பா. நான் முருகன் கோவிலுக்கு தான் போறேன். நீங்க சொன்ன மாப்பிள்ளை இப்ப ப்ரீயா இருந்தா வரச் சொல்லுங்க. பேசி பார்க்கிறேன்” அழைப்பை துண்டித்தாள்.

“ஷ்ஷ்…பேசவே விட மாட்டேங்கிறா” புலம்பியவாறு கந்தசாமி நகர, “புள்ளைக்கு ஒன்றுமில்லையே?” பாட்டி கேட்டார்.

மாப்பிள்ளையை வர சொல்லி இருக்கா. அவள் இருக்கும் நிலையில் எப்படி இவரை அனுப்புவது?

“என்ன மாப்பிள்ளை? எங்க அனுப்பணும்?” தாத்தா கேட்டார்.

வேலு சார் மகனுக்கு பிரணியை கேட்டிருந்தாங்க. அவ கோபமா நகர்ந்து பேசாம வந்துட்டா. இப்ப மாப்பிள்ளைகிட்ட பேசணும்ன்னு சொல்றா? அவங்க எதுவும் தப்பா எடுத்துப்பாங்களான்னு தெரியல..

“மாப்பிள்ளையா? உனக்கே புள்ளைங்க காதலிக்கிறாங்கன்னு தெரியுமே!” பாட்டி ஆதங்கமுடன் கேட்டார்.

“ஆமா, அதனால தான் எம் பிள்ளைக்கு மாப்பிள்ள பார்க்கலை. வர்ற இடத்தையும் தட்டிட்டு இருந்தோம். தர்மா வந்து இரண்டு நாளாச்சு. எம் பொண்ணை பத்தி அவன் தான் யோசிக்கவேயில்லை.

நான் சொன்னதால தான் தர்மா இங்க இருக்கான்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு. அதுவரை அவனை பார்த்து கற்பனைன்னு பைத்தியக்காரத்தனமா சுத்திட்டு இருந்திருக்கா…” மெதுவாக ஆரம்பித்தவர் சினமுடன் முடித்தார்.

கற்பனையா? தர்மா கந்தசாமி முன் வந்து, “நான் சிறையில் இருந்துட்டு வந்துருக்கேன் சார். உங்க பொண்ணு பெரிய வக்கீல். நான் அவளுக்கு தகுதியானவன் இல்லை. அதனால் தான் அவளிடம் பேச தயங்கிக் கொண்டிருக்கிறேன்” கலங்கினான்.

கந்தசாமி சினமுடன், “நீ சிறையில் இருப்பது தெரியாமலா அவள் உனக்காக காத்திருந்தாள்? கடைசி எம் பொண்ணை பைத்தியக்காரியாக்கீட்டீங்க” சத்தமிட்டார்.

“இல்ல சார்……” தர்மா செய்வதறியாது பாட்டி தாத்தாவை பார்த்தார்.

பிரணிதா அக்கா, மாமாவும் மற்றவர்களும் அவ்விடம் வந்தனர்.

“இங்க என்ன பிரச்சனை?” சம்பத் கேட்டான்.

தர்மா கண்கலங்க அவனை பார்த்தான்.

என்னாச்சு தர்மா?

மாமா, பிரணிகிட்ட நீங்க பேசவேயில்லையா? எங்க அவ? அப்சரா அவளை தேடினாள்.

“அவ கோபமா இருக்கா” தர்மா கூற, “அப்புறம் என்ன செய்வா?” கந்தசாமி சினந்தார்.

“கோவிலுக்கு தான போயிருக்கா. தர்மா நீயும் போ. புள்ளைய சமாதானப்படுத்து” பாட்டி கூற, “எப்படி?” மனதில் கேட்டவாறு அனைவரையும் பார்த்தான்.

“பாருங்க யோசிக்கிறான்” கந்தசாமி கூற, “அப்பா…கொஞ்ச நேரம் இருங்க” என்ற பிரணிதாவின் அக்கா, பிரணியை உங்களுக்கு பிடிக்கும் தான?

ம்ம்!

திருமணம் செய்யும் எண்ணம் இருக்கா?

ம்ம்! ஆனால் அவ வேற…நான்… அவன் பாவமாக எல்லாரையும் பார்த்தான்.

“உங்களது விருப்பம் தான் கேட்டேன்” சினந்தாள்.

எனக்கு விருப்பம் தான்.

தர்மா திருமணம் செய்தால் அவளும் நீயும் ஒன்று தான். பிரிச்சு பார்க்காத. அவள் அப்படி எண்ணி இருந்தால் உனக்காக காத்திருந்திருக்க மாட்டாள்.

“ம்ச்ச்ச்…மாமா நீ அவளிடம் பேசு. எல்லாம் சரியாகும். மாமா பைக் கீ கொடுங்க” என்று சம்பாவின் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து தர்மாவிடம் கொடுத்தாள் அப்சரா.

தர்மா தயக்கமுடன், எந்த கோவிலுக்கு? வினவினான்.

வீட்டிற்கு அருகே இருக்கும் முருகன் கோவிலுக்கு தான்…

“நானும் வருகிறேன்” சர்வா தர்மா அருகே வந்தான்.

“மாமா, தர்மா மாமா தனியாகவே போகட்டும்” அப்சரா அனுப்பினாள்.

கந்தசாமி பதட்டமுடன் அமர்ந்தார்.

குருமூர்த்தி அவர் அருகே அமர்ந்து, “புரிதல் இல்லை அவ்வளவுதான் கந்தசாமி. பயப்படாதீங்க. எல்லாம் நன்றாக நடக்கும்….” அவரை தேற்றினார்.

கோவிலில் நுழைந்தவுடன் மனம் தாங்காது தீபமேற்றிக் கொண்டிருந்தாள் பிரணிதா. அவளருகே நெடியவன் ஒருவன் விளக்கேற்ற விளக்கு அணைந்து கொண்டே இருந்தது.

அவள் விளக்கேற்றி அவனை கண்டு, “ஒரு நிமிடம்” என்று இரு கைகளாலும் காற்று வரும் திசையை அடைத்து, விளக்கேற்றுங்கள் என்றாள். அவன் ஏற்றியவுடன் எழுந்தாள். அவளை கடந்து ஒரு பெண் சென்றார்.

பிரணிதா ஏற்றிய விளக்கின் அருகே பூவொன்று விழுந்து இருந்தது.

பிரணிதா முகம் புன்னகைக்க, “முருகா” கையெடுத்து கண்கலங்க தூரமிருந்து முருகனை பார்த்தாள். அவன் பிரணிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பிரணிதா……” பின்னே குரல் கேட்க, இருவரும் திரும்பினார்கள்.

தர்மாவை பார்த்து சினமுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

பிரணி நில்லு…நில்லு… தர்மா அழைத்துக் கொண்டே அவள் பின்னே சென்றான்.

ஹலோ, இது கோவில். எதுக்கு அந்த பெண்ணை தொந்தரவு செய்றீங்க? அவன் கேட்டான்.

தர்மா ஏதும் கூறாமல் விரைந்து அவள் முன் வந்து வழியை மறித்து நின்றான்.

மன்னிச்சிரு பிரணி. நான் வேண்டுமென்றே உன்னிடம் பேசாமல் இல்லை. என்னோட நிலைமை ..

அப்படி என்ன நிலைமை உனக்கு? உன்னிடம் காதலை கூறாமல் இந்த மூன்று  வருடமாக பார்க்கவும் முடியாமல் எவ்வளவு தவித்திருப்பேன்? சீற்றமுடன் அன்று நடந்த பிரச்சனையில் கைதாகும் முன் ஒரு முறை கூட என்னை பார்க்க தோணவில்லையா? சொல்லாமல் போயிட்ட..

போயிட்ட சரி.. உன்னை பார்க்க எத்தனை முறை வந்தேன். ஒரு முறையாவது என்னை பார்க்க அலோ பண்ணீயா? எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா? அழுதாள்.

கோவிலில் அனைவரும் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.

“உங்க சண்டையை வெளிய வச்சுக்கோங்கம்மா…” பூசாரி ஒருவர் கூற, தர்மா அவரை முறைத்த முறைப்பில் அவர் விலகி நின்று கொண்டார்.

புரியுது பிரணி. ஆனால் என் தகுதிக்கு நீ அதிகம்ன்னு எனக்கு தோணுச்சு. அதனால் தான் விலகி இருக்க எண்ணினேன். என்னை திருமணம் செய்தால் உனக்கும் அவப்பெயர் தானே!

என்ன புடலங்கா பெயர்? நான் எத்தனையோ டிவர்ஸ் கேஸ் பார்த்திருக்கேன்.  நல்லவன்னு திருமணம் செய்து அவனையே கெட்டவனாக உருவகப்படுத்தி பிரியும் ஆட்கள் தான் அதிகம்.

அவங்களை விட நீ கெட்டவனெல்லாம் இல்லை. நீ உன் தம்பிக்காக வாழ்க்கையையே பாழாகிட்ட. இப்பொழுதெல்லாம் அடுத்தவர்களுக்காக வாழும் ஆட்கள் இங்கே யாருமில்லை.

முன் செய்த செயலால் யாரும் உன்னை ஏதும் சொன்னால் நான் கண்டுகொள்ள மாட்டேன். நான் அடுத்தவர்களுக்கு என்னாலான உதவி செய்வேன். அடுத்தவர்களுக்காக வாழ மாட்டேன். என் வாழ்க்கை எனக்குரியவர்கள் தான். இனி அந்த வரிசையில் நீ இல்லை…சினமுடன் நகர்ந்தாள்.

பேசுவது போல வாழ்க்கை இருக்காது பிரணி…

அப்புறம் எதுக்கு இங்க வந்த? போக வேண்டியது தான? அவன் சட்டையை பிடித்தாள்.

என்னால உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது…

என்ன தான் சொல்ல வர்ற? விட்டு கொடுக்க முடியாதுன்னு சொல்ற? தகுதின்னு ஏதோ பேசுற…சரியான முடிவெடுத்துட்டு பேசு…” விறுவிறுவென சன்னதியை நோக்கி நடந்தாள்.

பிரணி, நான் சரியான முடிவெடுக்கும் வரை நீ காத்திருப்பாயா? கேட்டான்.

“மூணு வருசமா காத்துட்டு தான் இருக்கேன். இன்னும் ஒரு வாரம் தான் உனக்கு நேரம். அதற்குள் பதில் சொல்லவில்லை என்றால் என் அப்பா காட்டுபவரை திருமணம் செய்து கொள்வேன்” முருகனின் சன்னதிக்குள் செல்ல, தர்மாவும் பின்னே சென்றான்.

இவர்களை பார்த்துக் கொண்டிருந்த அவன், போச்சா…..பெருமூச்சுடன் நகர்ந்தான்.

இப்ப எதுக்கு வர்ற?

“நான் சண்டை போட வரலை” முருகனை கை காட்டினான். அவள் அமைதியாக திரும்பிக் கொண்டாள்.

முருகன் முன்னிலையில் பிரணிதா வேண்டுதலை அடுக்க, அவள் கழுத்தில் ஏதோ அசைந்தது.

கண்ணை திறந்த பிரணிதா அதிர்ச்சியுடன், “என்ன பண்ற?” திருமாங்கல்யத்தை அவளது கழுத்தில் அணிவித்துக் கொண்டிருந்த தர்மராஜை அடித்தாள்.

அடியை வாங்கிக் கொண்டு, இதற்கு மேல் என்னாலும் உன்னை பிரிந்திருக்க முடியாது. நாம சேர்ந்திருந்தே சண்டை போட்டுக்கலாம் என்றான். இருவரும் கடவுளை தொழுது வெளிய வர மொத்தக் குடும்பமும் அவர்களை பார்த்து புன்னகைத்தனர்.

“என்ன தாலி கட்டிக்கிட்டீங்க? என்ன வேலை செய்றதுன்னு எதுவும் பேசலை” கந்தசாமி கேட்டார்.

மாமா, நான் ரெஸ்டாரண்ட் நடத்தலாம்ன்னு இருக்கேன். சிறையில் என்னவளுக்காக சமையல் கற்றுக் கொண்டேன். அவளது தந்தையை போல பாசத்தையும் சேர்த்து உணவு தயாரித்து அவளுக்கு வாழ்நாள் முழுக்க பரிசளிப்பேன் என்றான்.

பிரணிக்கு சமைக்கும் வேலை இல்லையா? தாரணி கேட்க,

பிரணிதா அவனை பார்த்து பரிசு தானா? ஊட்டி விட மாட்டியா தர்மா? கேட்டாள்.

உங்கள் ஆணைப்படி மகாராணி கரம் விரித்தான் தர்மராஜ். பாந்தமாய் அவன் கையில் அடைந்து கொண்டாள் பிரணிதா.

            (முற்றும்)