காதல் 2
சித்தார்த்திடம் லேசாக பேச்சை தொடங்கினான் சம்பத்.
உனக்கு தாராவை பார்த்தால் உன்னோட அம்மா மாதிரியா இருக்கு?
தாராவா? அவங்க நேமா?
ம்ம்..
“அம்மா வாசனை வருது. அதான்….” உணவை மென்று கொண்டே கூறினான் சித்தார்த்.
அவனின் ஒவ்வொரு செயலையும் சம்பத்தும் ரசிக்க தான் செய்தான்.
அம்மாவை கட்டிப் பிடிப்பாயா?
ம்ம்! அம்மா தான் என் பக்கம் இருப்பாங்க. ஆனா கொஞ்ச நாளா அம்மா என்னோட அறைக்கு வரவேயில்லை.
அறையா? நீ வெளிய வர மாட்டாயா?
நான் வெளிய வந்தால் அவங்க அம்மாவை அடிப்பாங்க..
“யார் அவங்க? அடிக்கிறவங்க?” அமைதியாக சம்பத் கேட்டான்.
“அவங்க..அவங்க..” சம்பத்தை பார்த்தான்.
யாரு சொல்லு?
“வேண்டாம்” தலையசைத்தான்.
உன்னோட அறையை விட்டு வெளியே வந்ததில்லையா?
இல்லை… அவன் கையிலிருந்த உணவை பார்த்தான்.
சம்பத் அவனை கண்டு அவனுக்கு கொடுத்து விட்டு, “நானும் உன்னுடன் வாரேன். நாளைக்கு உன்னோட வீட்டுக்கு நாம போவோம். உன்னை யார் என்ன செய்றாங்கன்னு நான் பார்க்கிறேன்”..
சம்பத்திடமிருந்து எழுந்து அறையை விட்டு வெளியே நடந்தான் சித்தார்த்.
“மழ பெய்யுதுடா வா” சம்பத் அவனை அழைக்க, “என்னோட வீட்டுக்கு போக மாட்டேன். உனக்கு பிடிக்கலைன்னா நான் போறேன். அம்மா சொல்லி இருக்காங்க. யாருக்கும் நம்மை பிடிக்கலைன்னா அவங்கள கட்டாயப்படுத்தக் கூடாதாம்”.
“ச..ரி…..அழுத்தி கூறிய சம்பத், “நீ எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இரு” அவனை அழைத்து வந்தான்.
கையை கட்டிக் கொண்டு முறைத்து வாசலில் நின்று கொண்டிருந்தாள் தாரணி.
“ரெண்டு பேரும் மறுபடியும் நனைஞ்சுட்டு வந்து நிக்கிறீங்க?” அவள் கேட்டுக் கொண்டிருக்க, சித்தார்த் உள்ளே வந்து அவளை கட்டிக் கொண்டான். அவள் அதிர்ந்து நிற்க, “தாராவ விடுடா” இழுத்து நகர்த்தினான் சம்பத்.
தாரா அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவனது குழந்தை முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நா..போக மாட்டேன்” சம்பத் அறைக்கு சென்றான் சித்தார்த்.
தாரணி தோளில் கை வைத்து “அறைக்கு போ” அவளிடம் ஆராய்ச்சி பார்வையை செலுத்தினான் சம்பத். அவள் ஏதும் கூறாமல் அவளறைக்கு சென்றாள்.
துவாலையை எடுத்து சம்பத் அவனறைக்கு சென்று சித்தார்த்தின் ஈரத்தலையை துவட்டி விட்டு அவனும் துவட்டி ஆடை மாற்றி, “இதையும் சாப்பிட்டு படு” படுக்க வைத்து விட்டு, அவனும் உண்டு சிந்தனையுடன் சித்தார்த்தை பார்த்துக் கொண்டே உறக்கத்தை தழுவினான்.
அதிகாலையிலே விழித்த சம்பத் அருகே சித்தார்த் இல்லாததை கவனித்து வீடு முழுவதும் தேடினான். சித்தார்த்தை காணவில்லை. தன் தங்கையிடம் கேட்கலாம் என தாரணி அறைக்கு சென்று அதிர்ந்து நின்றான்.
“தாரா” சத்தமிட்டு சம்பத் சினமுடன் அறைக்குள் வந்தான்.
அவன் சத்தத்தில் விழித்த தாரணி தன்னை கட்டிக் கொண்டு உறங்கும் சித்தார்த் கண்ணை கசக்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவனை வேகமாக தள்ளினாள்.
படுக்கையிலிருந்து மடமடவென உருண்டு கீழே விழுந்தான் சித்தார்த்.
“அம்மா” கத்தினான்..
அவன் விழுந்து அப்படியே இருப்பதை பார்த்து தாரணி கலகலவென சிரித்தாள். சம்பத் படுக்கையின் மறுபக்கம் வந்து பார்த்தான்.
சம்பத்தை நோக்கி கையை நீட்டினான் சித்தார்த்.
சம்பத் தன் தங்கையை முறைத்து விட்டு, “இங்க எதுக்குடா வந்த?” அவன் கையை தட்டி விட்டான்.
அம்மா நினைவு வந்துருச்சு..
“நீ சரியான அம்மா பிள்ளை” தாரணி சொல்லிக் கொண்டே வெளியேறினாள்.
சம்பத் சித்தார்த்தை முறைக்க, “எனக்கு தூக்கம் வரலை” சம்பத் அறைக்கு செல்ல நகர்ந்தான். அவனை நிறுத்தி “நீ என்னோட வா” அழைத்தான்.
இருவருக்கும் ஆம்லா ஜூஸ் வந்து கொடுத்தாள் தாரணி.
“என்னது?” சித்தார்த் முகர்ந்து பார்த்தான்.
“ஆம்லா ஜூஸ் கெல்த்துக்கு நல்லது” என்று தன் அண்ணனை பார்த்து, இவன்..என்று சித்தார்த்தை பார்த்தாள்.
அவன் என்னோட வரட்டும்.
அண்ணா, இவன் ஜிம்முக்கு வந்து என்ன செய்யப் போறான்?
நாம எங்க இருக்கோம்? இது எந்த ஊரு? சித்தார்த் கேட்டான்.
பூம்பாறையில இருக்கோம்..
நீ எங்கிருந்து வந்த? சம்பத் கேட்டான்.
கொடைக்கானல்..
“அரை மணி நேரத்துல உன் வீட்டுக்கு போயிறலாம்” தாரணி புன்னகைத்தாள்.
“வீட்டுக்கா? நான் போக மாட்டேன்” முகம் சுருக்கினான் சித்தார்த்.
சம்பத் அவனறைக்கு சித்தார்த்தை அழைத்து சென்று அவனது டீ சர்ட்டும் ட்ராக் பேண்ட்டையும் அவனுக்கு கொடுத்து விட்டு அவனும் அணிந்து வெளியே வந்தான்.
“தாரா” சம்பத் தாரணி அறையின் வெளியிலிருந்து சத்தம் கொடுத்தான்.
அண்ணா, குளிச்சிட்டு இருக்கேன்.
சரி, நாங்க கிளம்புகிறோம். அறையை தாழ் போட்டுக்கோ..
சரி அண்ணா. ஒரு நிமிசம்… துவாலையை உடலை சுற்றி தலையை மட்டும் நீட்டி, “அண்ணா” அழைத்தாள்.
என்ன?
“காலை உணவு?” விழிகளை உயர்த்தாமல் தரையை நோக்கியவாறு கேட்டாள்.
மாவு இருக்குல்ல. இட்லி தயார் செய்திடு.
ம்ம்! ஒன்பது மணிக்கே வந்திரு. நேற்றே டீன் சார் கால் பண்ணார். பத்து மணிக்கே உன்னை வர சொல்லி இருந்தார்.
“ஓ.கே வந்திருவோம். அறையை தாழ் போட்டுக்கோ” சம்பத் சித்தார்த்தை பார்த்தான். அவன் கவனம் வெளியே இருந்தது. ஆனால் தாரணி தான் வெட்கத்தில் நிமிர கூட இல்லாமல் கதவை அடைத்தாள்.
“முதல்ல இவன் யாருன்னு தெரிஞ்சுக்கணும்” எண்ணியவாறு அவனுடன் சம்பத் நடத்திக் கொண்டிருக்கும் ஜிம்மிற்கு அழைத்து சென்றான்.
சம்பத் ஆரா மருத்துவமனையின் திறமையான கேன்சர் பரிசோதனை மருத்துவன். ஆன்கோலெஜிஸ்ட்..
தனியாக ஜிம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறான்.
சம்பத்துடன் வந்த சித்தார்த் அவ்விடத்தை புதியதாக பார்த்துக் கொண்டே வந்தான்.
சம்பத் வொர்க் அவுட்டை தொடங்கி சித்தார்த்திடம்.. “நீயும் வொர்க் அவுட் பண்ணு” அழைத்தான்.
இடவலமாக தலையசைத்து பிரமிப்புடன் அனைத்து பொருட்களையும் தொட்டு பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.
அவ்வேளையில் ஆண்களும் பெண்களும் சித்தார்த்தை கவனித்தவாறு சம்பத்திடம் வந்தனர்.
“ஹாய் சார், யாரு இந்த பையன்? க்யூட்டா இருக்கான்” ஒரு பொண்ணு கேட்க, ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்த சம்பத் அதன் வேகத்தை குறைத்து பின் நிறுத்தி அவன் முகத்தை துடைத்து அந்த பெண்ணை பார்த்தான்.
தப்பா எதுவும் கேட்டுட்டேனா? அவள் கேட்க, “அவன் எங்களோட விருந்தாளி. சில நாட்களில் போயிடுவான்” சற்று சத்தமாக கூறி சித்தார்த்தை பார்த்தான்.
சம்பத் அருகே வந்து, “ஐ டோன்ட் லீவ் வித் அஸ்” என்றான் சித்தார்த்.
“நல்லா பேசுற பட் உன்னை பார்த்தால் பொசுபொசு டெடி மாதிரி இருக்க? உன்னை போல பசங்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்” அவன் தோளில் அந்த பெண் கையை வைத்தாள்.
சட்டென அவள் கையை தட்டி விட்டு சம்பத் பின் வந்து நின்று கொண்டான் சித்தார்த்.
“லியா, கோ ஸ்டார்ட் யுவர் வொர்க் அவுட்” உரக்க கூறி அனைவரையும் பார்த்தான். எல்லாரும் இருவரையும் பார்த்துக் கொண்டே நகர்ந்தனர்.
“சித் நீ என்னோட வா” சம்பத் அவனை அவனறைக்கு அழைத்து சென்றான்.
அந்த பொண்ணு சும்மா தான பேசுனா?
எனக்கு பிடிக்கலை..
புன்னகைத்த சம்பத், தாராவிடம் பேசுற? கேட்டான்.
அவ என்னோட அம்மா மாதிரி இருக்கா.
உன்னோட அம்மா மாதிரியா?
ம்ம்..
ஏன் அப்படி சொல்ற?
அம்மா, எனக்காக செய்வதை செய்றா. ஊட்டல..அப்புறம் தாடையில் வைத்து சிந்தித்து, “நா அவ கூட தூங்கினா தப்பா?”
ஏன் உனக்கு தெரியாதா? படிச்சிருக்கேல்ல?
இல்ல. நான் என்னோட அறையில வச்சி யாருக்கும் தெரியாமல் தான் படிப்பேன். பாப்பா புத்தகம் தான். அவ தான் சொல்லித் தருவா..
அவ படிச்சிருக்காளா?
அவ நல்லா படிப்பா..
ஓ! என்ன படிச்சிருக்கா? அவன் கேட்க, வெளியே அழைப்பு வரவும் சம்பத் சித்தார்த்திடம் “இங்கேயே இரு” கூறிச் சென்றான்.
சம்பத் அறையிலிருக்கும் அவனது பெற்றோரின் புகைப்படத்தை பார்த்து வரைய தொடங்கினான் சித்தார்த்.
வெகு நேரம் கழித்து அறைக்கு வந்த சம்பத் நாற்காலியில் சாய்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்த சித்தார்த்தை தான் பார்த்தான்.
“சித் எழுந்திரு” அவனை தட்டி எழுப்பினான். எழுந்த சித்தார்த் சம்பத்தையும் அவனறையையும் பார்த்தான்.
“சித், எனக்கு உதவி செய்கிறாயா?” சம்பத் கேட்க, அவ்விடத்தில் இருந்த அனைவரும் அவனை பார்த்தனர்.
சம்பா உதவி கேட்கிறானா? ஒருவன் பக்கமிருந்தவனிடம் கேட்க, எல்லாரும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சித்தார்த் அவனை பார்க்க, “இவங்கள கவனிச்சுக்கோ. நான் மருத்துவமனைக்கு போகணும்” என்றான்.
“சம்பா, இவர் மேனேஜ் பண்ணிடுவாறா?” பணபலம் படைத்த நடுத்தர வயதுடையவர் கேட்டார்.
ம்ம்!
“சித், எல்லாரையும் பார்த்துக்கோ. தாரா வருவா” சம்பத் சொல்ல, அவளும் உள்ளே வந்தாள். பசங்க எல்லார் கண்ணும் அவளை விட்டு அகலாதிருந்தது.
“அண்ணா சாப்பிட எல்லாம் உணவு மேசையில் இருக்கு. நீ போ. நம்ம மாஸ்டரோட சேர்ந்து பார்த்துக்கிறேன்” சித்தார்த்தை பார்த்தாள்.
அவனும் இங்கே தான் இருப்பான். அவனையும் பார்த்துக்கோ. நான் பேசண்ட்டை பார்த்துட்டு தான் வருவேன்.
அண்ணா, ஏற்கனவே நேரமாகிடுச்சு. பார்த்துக்கோ..
ம்ம்! சித்தார்த்தை கவனித்தவாறே சென்றான்.
“சித், நீ இங்க வா” தாரணி அழைக்க, தாரணியின் ஆடையை பார்த்து, “இந்த ஆடை நல்லாவே இல்லை” அவளை நெருங்கி வந்து கூறினான். “ஜிம் பாய்ஸ்” அனைவரும் அவனை முறைத்தனர்.
புன்னகைத்த தாரணி அவன் கையை பிடித்து சம்பத்திற்கு அடுத்தப்படியாக ஜிம்மை கவனிக்கும் நிலன் என்பவனிடம் அழைத்து சென்றாள்.
மதிய உணவிற்காக சம்பத் வீட்டிற்கு வந்தான்.
தாரணி உணவை எடுத்து வைத்தாள்.
அவன் எங்கே?
சிரித்த தாரணி, அண்ணா நம்ம நிலன் சார் சித் கையில் சிறிய டம்பிளை தான் கொடுத்தார். அவனால் தூக்கவே முடியலை. ஆனால் முயற்சியை விடவும் இல்லை. கடைசியில் நன்றாக தூக்கி சார் கூறியது போல் செய்து வீட்டிற்கு வந்து படுத்தவன் தான் எழவில்லை. நல்லா தூங்கிட்டு இருக்கான்..
புன்னகையுடன் அறைக்கு சென்று சம்பத் அவனை பார்த்தான்.
“ஏய், அறைக்குள் சென்று அவனை பார்த்தாயா?” திரும்பி தன் தங்கையிடம் கேட்டான்.
அவள் அவ்வறையை பார்த்துக் கொண்டே “ஆம்” தலையசைத்தாள்.
தாரா, ஆசையை வளர்த்துக்காத. அவனை பார்த்தாலே பெரிய வீட்டு பையன் போல இருக்கான். எப்பொழுது என்ன நடக்கும்ன்னு தெரியாது” எச்சரித்தான் சம்பத்.
அண்ணா, எனக்கு அவனை பிடிச்சிருக்கு.
அதான் சொல்றேன். அவனை விட்டு விலகி இருந்துக்கோ இல்லை நாம பட்ட கஷ்டத்திற்கும் மேலே நீ கஷ்டப்படணும்.
“அண்ணா” கண்ணீருடன் திரும்பிக் கொண்டாள்.
தாரா, சித் சாதாரணமாக வளரவில்லை. அவனை அறைக்குள்ளே வச்சி வளர்த்திருக்காங்க. அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க மாட்டாங்க. சொல்றத கேளு..
என்னை அறியாமலே அவன் மீது காதல் வந்திருச்சு அண்ணா. அவனுக்காக நான் இருக்கணும்ன்னு நினைக்கிறேன். எங்களுக்காக நீ இருப்பாயா? அழுது கொண்டே திரும்பி சம்பத்தை கேட்டாள்.
தாரா..
ஆமா அண்ணா, என்னால அவனை விட்டு இருக்க முடியாது. அவனோட இந்த இன்னசென்ட்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு.
ஒரு வேளை எல்லாம் அறிந்த பின் பணத்தால் அவன் மாறிட்டான்னா என்ன செய்வ?
பரவாயில்லை அண்ணா. அவனுக்கு முதல்ல காதல்ன்னா என்னவென்றே தெரியல. அவனுக்கு எல்லாமே அவன் அம்மாவா தான் இருந்திருக்காங்க. அவன் குடும்பத்தை நீ தேடாத. அவன் நம்முடன் இருக்கட்டும். அவனுக்கும் என்னை பிடிச்சிருந்தால் எங்களுக்கு திருமணம் செய்து வை. அவன் புரிஞ்சுப்பான். நானும் செவிலியருக்கு படிச்சிருக்கேன். நான் வேலைக்கு போய்ப்பேன்.
“தாரா” சத்தமிட்ட சம்பத்,
“உனக்கு என்ன சித்தார்த்தை பிடிச்சிருக்கு. அவனை கல்யாணம் பண்ணிக்கணும். அவ்வளவு தான? நீ எந்த வேலைக்கும் போகக் கூடாது. புரியுதா?” சீற்றமுடன் கத்தினான். அவன் கத்தும் சத்தம் கேட்டு பயந்து விழித்த சித்தார்த் வெளியே வந்து இருவரையும் பார்த்தான்.
அண்ணா, “நான் வேறென்ன செய்ய முடியும்? என்ன படிச்சிருக்கான்னு தெரியாது. அவனுக்கு எல்லாமே நாமே செய்வது போல இருக்கு. அவன் எப்படி வேலைக்கு போவான்? அதான் நான் போறேன்னு சொன்னேன்”.
“அவன் போகலைன்னா என்ன? நான் இல்லையா? அதுக்குள்ள என்னை விட்டு போவது போல பேசுற?” சம்பத் கேட்க, ஓடி வந்து அவனை அணைத்து அழுதாள் தாரணி.
சித்தார்த் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
உன்னை எப்படி அண்ணா விட்டு போவேன்? நான் அவனை நம்முடனே வச்சுக்கலாம்ன்னு தான சொல்றேன். அவனுக்கு என்னை பிடித்தால் தான திருமணம். அவன் இன்று போல சொல்லிக் கொடுப்பதை புரிஞ்சு செய்வான். “அண்ணா..ப்ளீஸ்..”
“திருமணமா?” சித்தார்த் மெதுவாக அறையுனுள்ளே இருக்கும் சோபாவில் சென்று அமர்ந்தான்.
“நான் உங்கள் இருவரையும் பார்த்துக்கிறேன். ஆனால் நீ வேலைக்கு போறேன்னு சொன்ன நான் பொல்லாதவனாகிடுவேன்” சீறினான் சம்பத்.
“சாரி அண்ணா, நான் எங்கேயும் போகலை” அழுதாள்.
ஓ.கே, சித் உன்னை பார்த்துக்க மாட்டான். நீ தான் அவனை பார்த்துக்கணும். உன்னோட கஷ்டத்தை கூட அவன் புரிஞ்சுப்பானான்னு தெரியல..
கண்ணீரை சுட்டி விட்டு, பரவாயில்லை அண்ணா. அவன் கேட்கலைன்னாலும் நான் கஷ்டப்பட மாட்டேன்.
டாட் இருந்திருந்தால் அவர் போதும்ன்னு இருந்திருப்பேன். உன் வாழ்க்கையில் உனக்கு….. என அப்படியே நிறுத்தி விட்டாள் தாரணி.
“என்ன சொல்ல வந்த? சொல்லு?” சினமுடன் கேட்டான் சம்பத்.
அண்ணா..அண்ணீ..
“எனக்கு திருமணத்தில் விருப்பமில்லைன்னு உனக்கு தெரியாதா? அப்பா இல்லைன்னா நானும் இல்லாமல் போயிட்டேனா?” சினம் துளிர்க்க கேட்டான்.
அவன் வாயில் கை வைத்து, “ப்ளீஸ் அண்ணா. எனக்கு இருப்பதே நீ மட்டும் தான். இப்படி பேசாத. கஷ்டமா இருக்கு” கண்ணீர் நிற்காமல் வந்தது தாரணிக்கு.
“அன்பால் மனமும் உடலும் இணைந்து வாழ்நாள் முழுவதும் உடன் பயணிப்பவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். காதலில்லாத உறவுக்கு எந்தவொரு அர்த்தமும் இல்லை” சித்தார்த் தாய் அவனிடம் கூறியதை எண்ணினான் சித்தார்த்.
“அப்ப தாரா என்னோட எப்பவுமே இருப்பாளா?” வெளியே வந்தான்.
தாரணியும் சம்பத்தும் சமாதானமாகி இருந்தனர்.
தாரணி சம்பத்திற்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
சித்தார்த் அவனாகவே உணவு மேசையில் அமர்ந்து தாரணியை பார்த்தான்.
அண்ணனும் தங்கையும் அவனை பார்த்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“தாரா….” அழைத்தான் சித்தார்த்.
இதுவரை அவனாக எதுவும் பேசாத சித்தார்த் அவளை பெயர் கூறி அழைக்கவும் இன்பமுடன் அவனை நோக்கினாள்.
பசிக்குது….
சம்பத் தன் தங்கையை பார்க்க, சித்தார்த் அவன் முன்னிருந்த தட்டை உணவை வைக்க சொல்லி அவள் பக்கம் தள்ளினான்.
இருவரும் அதிர்வுடன் அவனை பார்த்தனர்.
சித், நீயாக உணவுண்ண போகிறாயா? சம்பத் கேட்க, உன்ன பார்த்து கத்துக்கிறேன்.
புன்னகையுடன் தாரா சித்தார்த்திற்கு உணவை தட்டில் எடுத்து வைத்து, சமையலறை சென்று அவளது ஏப்ரானை எடுத்து அவனுக்கு போட்டு விட்டு உணவுத் தட்டை அவன் முன் வைத்தாள்.
சம்பத் அவனுக்கு உணவை எடுத்து உண்ண கற்றுக் கொடுத்தான்.
சித்தார்த் தட்டில் வைத்த உணவு அவனை சுற்றி சிதறி இருந்தது. சிறு பிள்ளை போல அவன் வாயை பாழாக்கி சிந்தி சாப்பிடுவதை பார்த்து புன்னகைத்தான் சம்பத். தாரா அவனை ரசித்து பார்த்தாள்.
மாலை ஜிம்மிற்கு சித்தார்த்தை அழைத்து சென்றான் சம்பத். தாரா மட்டும் வீட்டில் இருந்தாள்.
சித்தார்த்தை நிலனிடம் விட்டு சம்பத் அவனது கஸ்டமரை கவனிக்க சென்றான்.
சித்தார்த் நிலனை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருந்தான்.
என்ன சித்?
உனக்கு எப்படி காதலிக்கணும்ன்னு தெரியுமா?
காதலா? கலகலவென சிரித்தான் நிலன்.
“வொய் ஆர் யூ லாஃபிங்?” தலையை சொரிந்து கொண்டே சித்தார்த் கேட்டான்.
என்ன திடீர்ன்னு எப்படி காதலிக்கணும்ன்னு கேக்குற?
தாரா சம்பத்திடம் பேசியதை சித்தார்த் கூறவும் அவனை அதிர்ந்து பார்த்தான் நிலன்.
“தாராவிற்கு உன்னை பிடிச்சிருக்கா?” நிலன் சிந்தனையுடன் சித்தார்த்தை பார்த்து, உன்னால தாராவை பார்த்துக்க முடியாது. அதனால இதை பெருசா எடுத்துக்காத..
“என்னோட அம்மா சொல்லி இருக்காங்க. காதலித்தால் திருமணம் செய்து கொள்ளலாமாம். தாரா என்னை காதலிக்கிறா. நான் எப்படி அவளை காதலிக்கணும்? அதை சொல்லி தாங்க” பிடிவாதமாக கேட்டான்.
நீ தாராவை காதலிக்கப் போறீயா? சரி சொல்லு? உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கு? என்ன படிச்சிருக்க? என்ன வேலைக்கு போவ? வரிசையாக கேள்விகளை அடுக்கினான் நிலன்.
பணமா? அப்படின்னா?
பொருள் வாங்க நாம கடைக்காரனுக்கு கொடுப்போம்ல்ல?
அதுவா?
ஏற்கனவே நிலனிடம் மட்டும் சம்பத் சித்தார்த்தை பற்றி கூறி இருப்பான்.
நிலன் சிரிப்புடன், ம்ம்..அதான் பணம்.
நீ தாராவை காதலிக்கணும். திருமணம் பண்ணிக்கணும்ன்னா உனக்கு நிரந்திரமா வேலை, வீடு, பணம் வேண்டும்.
அம்மா திருமணம் செய்ய காதல் இருந்தால் போதும்ன்னு சொன்னாங்க..
ஆமா காதல் வேண்டும் தான். அந்த காதல் நிலைத்திருக்க பணமும் வேண்டும். பணம் இருந்தால் தான் தாராவுக்கு வேணுங்கிறதெல்லாம் நீ வாங்கித் தருவ?
என்ன வாங்கி தரணும்?
அவளுக்கு தேவையான எல்லாமே!
என்ன தேவை?
முதல்ல ஏதாவது வேலை செய்து பணம் சேர்த்து வச்சிட்டு அவளுக்கு என்ன வேணுமோ வாங்கி தந்துக்கோ.
அப்புறம் காதல்ன்னா அன்பு தான். கொஞ்சம் நெருக்கமாக அன்பு.. நெருக்கம் மீன்ஸ் க்ளோஸ்..
எப்படி?
காதலிக்கிறவங்கள முத்தம் கொடுக்கலாம்.
கிஸ் கொடுக்கலாமா? அப்பாவியாக சித்தார்த் கேட்க, நிலன் மனதில் சிரித்தவாறு,
ஆமா…கட்டியும் பிடிக்கலாம் என்று அலைபேசியில் காட்டியவன் மனதில் ஓர் எண்ணம் உதிக்க, காதலிக்கிறவங்க இதெல்லாம் செய்வாங்க என ரெமான்ஸ் வீடியோவை காட்டினான். சித்தார்த் வீடியோவையும் அவனையும் பார்த்தான்.
ஆனால்..சம்பா, நான் தாராவை கட்டிப்பிடிக்கக் கூடாதுன்னு சொன்னான்.
ம்ம்..திருமணத்துக்கு பின் இதெல்லாம் செய்வாங்க.
அப்ப இப்ப?
இப்ப தாராவின் விருப்பப்படி நடந்துக்கோ..
அதெப்படி?
சம்பத் இல்லாத நேரம் தாராவிடம் க்ளோஸா இது போல பண்ணு என்று அவன் விரலால் அவனது கைகள், முகம், கழுத்துகளில் வருடி காட்டினான்.
இப்படி பண்ணா எனக்கும் காதல் வந்துரும்மா? வெகுளியாக சித்தார்த் கேட்டான்.
ம்ம்! கண்டிப்பா வரும்.
இப்ப தான் திருமணத்தின் பின் பண்ண சொன்ன?
“அவளுக்கு விருப்பமிருந்தால் பண்ணலாம்” சித்தார்த்தை ஏற்றி விட்டான்.
சரி..நான் பண்றேன். பண்ணீட்டு நாளைக்கு சொல்லவா?
கண்டிப்பா. அவ என்ன பண்ணான்னு சொல்லு? என்றான் நிலன்.
சம்பத் வரவும் நிலன் அவ்விடம் விட்டு அகன்றான்.