காதலால் மாறினேன்….

காதல் 1

நிலவு விண்ணை தொட்டு நட்சத்திரம் கண்சிமிட்ட கருமேக தூதுவர்கள் நிலவை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்த அந்த குளிரான மலைபிரதேசத்தில் அலைபேசியில் உரையாடியவாறு நடந்து வந்து கொண்டிருந்தாள் தாரணி..

திடீரென கார் ஒன்று படுவேகமாக பளிச்சென வெளிச்சமுடன் வந்தது. அதன் முன் ஒருவன் அதிர்ந்து நின்று கொண்டிருந்தான்.

ஹேய்…..

தாரணி கார் முன் திகைத்து நிற்பவனை தன்னோட இழுத்து கீழே விழுந்தாள். அவளது தாவணி நழுவ பயத்தில் அவனை தள்ளி அவள் கத்த, அவனோ அவளை இறுக பற்றியவாறு…..

“அம்மா..அம்மா….”அழுது கொண்டிருந்தான்.

அலைபேசி கீழே விழ, “அண்ணா….” கத்தினாள் தாரணி. அவன் மேலும் பயந்து அவளை விட்டு நகரவில்லை. அந்நேரம் பைக் ஒன்று வந்து அவர்கள் முன் நின்றது.

பைக்கிலிருந்து இறங்கியவனை மருண்ட விழிகளால் நோக்கி, “அண்ணா….” தாரணி கண்கலங்க அவளை நெருங்கி இருப்பவனையும் தன் அண்ணாவையும் பார்த்தாள்.

அதிரடியாக இறங்கியவன் சுட்டெறிக்கும் சூரியன் போல சினமுடன் அவர்களிடம் வந்தான்.

வெளீரென முகம். அடர்ந்த புருவம். அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்த விழிகள், எப்பேர்ப்பட்ட வாசனையும் நுகரும் நாசி, தடித்த அதரங்கள், அதன் மேல அளவான மீசை, படிக்கட்டு தேகம் ஆணழகனாய் அவ்விடம் சீற்றமுடன் தாரணியை தழுவி இருந்தவனை இழுத்து அவனது வயிற்றில் குத்தி கீழே தள்ளினான். அவன் சம்பத்.

தாவணியை சரி செய்து, “அண்ணா அவனை அடிக்காத” தாரணி அடிபட்டவனை பார்த்தாள். அப்பொழுதும் அவன் “அம்மா..அம்மா…” என அழுது கொண்டிருந்தான்.

அண்ணா, இவன்…. தாரணி அவனை உற்று பார்த்து, இவனுக்கு இரத்தம் வருது..

“தாரா, அவன் என்ன செய்தால் நமக்கென்ன? நீ வா” தாரணி கையை பிடித்து இழுத்தான் சம்பத்.

கீழே விழுந்தவன் எழுந்து தாரணி கையை பிடித்து, “அம்மா….” என்றான் அழுது கொண்டு.

சம்பத் சினமுடன் தாரணி கையை விட்டு, அவனருகே வந்து அவன் கையை பிடித்து திருகினான்.

“ஆஆஆ…..” கத்தினான் அவன்.

அண்ணா, விடு. அவனை நான் பார்த்ததிலிருந்து அம்மா..அம்மான்னு தான் சொல்லிட்டு இருக்கான். அவனிடம் பேசிப் பார்க்கலாம்.

“தாரணி, இந்த மாதிரி பயலுகல்லாம் சென்டிமெண்ட்டா அட்டாக் பண்ணுவாங்க. நம்பக் கூடாது” சம்பத் சினமுடன் அவனை அடிக்க வந்தான். அவன் பட்டென மயங்கி சம்பத் மீது சாய்ந்தான்.

“அண்ணா மயங்கிட்டான். நீ அடிச்ச அடியில இவனுக்கு மயக்கமே வந்துருச்சு. இரு மூச்சு இருக்கான்னு பாக்குறேன்” அவனருகே வரவும் மயக்கத்திலே “அம்மா” என்றான் அவன்.

அவன் சித்தார்த்..

“அண்ணா இவன் மயக்கத்துல பேசுறான்” தாரணி கூற, சித்தார்த்திடம் தன் ஆராய்ச்சி பார்வையை செலுத்தினான் சம்பத்.

“பசி மயக்கமா கூட இருக்கலாம். எனக்கு பின்னாடி இவனை வண்டியில் ஏற்றுகிறேன். நீ அவனை பிடிச்சிட்டு வா… ஏறு” தாரணியிடம் சம்பத் கூறி வண்டியை எடுத்தான். இருவரும் பைக்கில் அவர்களது வீட்டை நோக்கி பயணித்தனர்.

“அப்பூ, என்னடி பண்ற? இன்னுமா எழலை. பாரு எம் பிள்ளை வந்துட்டான். அவனுக்கு தேனீர் தயார் செய்து எடுத்து வாடி” சத்தமிட்டார் அவள் சித்தி தனலட்சுமி.

பிறை நெற்றி, மீனாய் கண்கள், வளைந்த புருவங்கள், கொழுகொழு கன்னங்கள், கொஞ்சி பேசும் உதடுகள், கொழுக்மொழுக்கென்ற தேகம். மெகில் வார்த்த சிலை. பெயருக்கேற்றாற் போன்ற அப்சரஸ்.

அப்சரா.

“வந்துட்டேன் சித்தி” அப்பெரிய பங்களாவின் சொந்தக்காரி ஸ்டோர் ரூமில் இருந்து வேகமாக சமையலறைக்கு சென்றாள்.

“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?” தனலட்சுமியின் வசை பாடலை கேட்டவாறு கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தான் அவளது சித்தி மகன். அவளின் தம்பி யாதவ்.

அப்சராவின் தந்தை குருமூர்த்திக்கு இரு மனைவிகள்.

மூத்தவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அவர் வசந்தி. அவரின் மகள் தான் அப்சரா.

இரண்டாவது மனைவி தனலட்சுமி. அவர் மகன் தான் யாதவ். ராஜாங்கம் தனலட்சுமி மற்றும் குருமூர்த்தியின் அக்கா ஜெயா கையில்.

குருமூர்த்தி கொடைக்கானலில் பெரிய தொழிலதிபர். அவர் பெற்றோர் விருப்பத்திற்காக வசந்தியை திருமணம் செய்தவர். அதன் பின் தான் தனலட்சுமியை சந்தித்து அவர் கருவுற்ற பின் தான் தனலட்சுமி கழுத்தில் வசந்தி முன்னிலையிலே திருமணம் செய்து கொண்டார்.

ஜெயாவின் கணவர் சுதாகரன். நம் குரு மூர்த்தியின் அனைத்து கம்பெனி பொறுப்புகளிலும் தலையீட்டுடன் இருப்பவர்.

மகள் கீர்த்திகா. அவளுக்கு நம் அப்சராவை வேலை வாங்குவது தான் பிடித்தமே!

“வந்துட்டேன் சித்தி” அவசர அவசரமாக தேனீர் தயார் செய்து சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் அப்சரா. மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தனர். தன் பெண்ணை குருமூர்த்தி கண்டு கொள்ளவேயில்லை.

அனைவருக்கும் தேனீரை கொடுத்து விட்டு சமையலறை சென்று காலை உணவை தயார் செய்ய தொடங்கியவள் அடிக்கடி மாடியிலிருக்கும் அறையை எட்டி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

சற்று நேரத்தில் அவ்வறை சென்று பதட்டமாக தன் தந்தை அறைக்கு சென்றாள்.

அப்பா சித்துவ காணோம் என்றாள்.

அவரோ கம்பெனிக்கு தயாராகிக் கொண்டே, “உன்னோட வேலையை பாரு” என்றார்.

“அப்பா சித்துவும் உங்க மகன். அம்மாவுக்கு உடல்நலமில்லை. காரணம் யாருன்னு தெரிந்தும் ஏதும் யாரிடமும் கேட்க மாட்டேங்கிறீங்க. இப்ப சித்துவை காணோம்ன்னு சொல்றேன். பதட்டமே இல்லாம இருக்கீங்க. எனக்கு பயமா இருக்குப்பா. அவனுக்கு வெளி உலகமே தெரியாது. அவனை தேட சொல்லுங்கப்பா” தன் தந்தை காலை பிடித்து அழுது கரைந்தாள் அப்சரா.

“தொல்லை விட்டது. அவன் எங்கேயும் போறான். நீ வந்து வேலைய பாருடி” தனலட்சுமி அப்சரா முடியை கொத்தாக பற்றி இழுக்க கல்லாகி நின்றார் அவளின் அருமை தந்தை.

“அப்பா சித்துவை தேட சொல்லுங்க. அவனால யார் உதவியும் இல்லாமல் வாழ முடியாது. அவனுக்கு ஏதாவது ஆகிடும்” அழுதாள்.

சித்தார்த் அப்சராவின் அண்ணன்..

“அப்பா” அவள் அழ,

“அம்மா அவள விடு. இங்க வாடி. என்னோட ஆடையெல்லாம் துவைக்காமல் போட்டு வச்சிருக்க. போ..முதல்ல அதை பாரு” கீர்த்திகா அப்சராவை வேலை ஏவினாள்.

யாதவ் அவளை பார்த்து, “என்னோடதையும் எடுத்துட்டு போ” என்றான்.

அப்சரா வருத்தமுடன் நகர்ந்தாள்.

“எங்கடி போற? சமையல் வேலையை முடிச்சிட்டு போ. இதை என்ன உம் அம்மாவா பார்ப்பா?” ஜெயா திட்டினார்.

கண்ணீரை துடைத்து விட்டு சமையலறை செல்ல, அவளுக்கு உதவ ஆட்கள் வந்தனர். அவர்களையும் செல்ல விடாது தடுத்த தனலட்சுமி, அவர்களுக்கு வேறு வேலையை பிரித்து கொடுக்க, வேலைக்காரர்கள் அப்சராவை பாவமாக பார்த்து சென்றனர். அவள் வேலையை கவனிக்கலானாள். அவளை முறைத்தவாறு அமர்ந்திருந்தார் ஜெயா.

மத்தியரக வர்க்கத்தினர் வசிக்கும் தெருவின் வீடு ஒன்றின் முன் பைக்கை நிறுத்தினான் சம்பத்.

“அண்ணா..” தாரணி அழைக்க, “யாருடி இது?” பக்கத்து வீட்டு பெண்மணி கேட்டார்.

“அக்கா..” தன் அண்ணனை பார்த்தாள் தாரணி.

“என்னோட படித்தவன் தான். அவன் வீட்ல பிரச்சனை வந்துட்டான்” என சொல்லி தன் தங்கை மீது சாய்ந்திருந்த சித்தார்த்தை தூக்கி அவன் வீட்டினுள் சென்றான். தாரணி வண்டிச்சாவியை எடுத்து உள்ளே ஓடி வந்தாள்.

சம்பத் அவனறைக்கு சென்று சித்தார்த்தை படுக்கையில் போட்டு சமையலறைக்கு சினமுடன் சென்றான்.

சித்தார்த்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் தாரணி.

அழகான பூனைக்குட்டி கேசம். மிருதுவான அவனது ஸ்பரிசம். சப்பையான நாசி. அவன் மனம் போன்ற மென்மையான மீசை. வெயில் படாமல் வளர்த்த பூனைக்குட்டி அவன்.

குடத்து நீரை எடுத்து வந்து சீற்றமுடன் சித்தார்த் மீது சம்பத் ஊற்றினான்.

பதறி எழுந்து “அம்மா” அழுது கொண்டு சித்தார்த் முகத்தை கையால் மூடினான்.

அண்ணா என்ன பண்ணீட்ட? அவன் பயப்படப் போறான்.

பயப்பட அவன் என்ன குழந்தையா? எருமை மாதிரி வளர்ந்திருக்கான்ல்ல?

அவனை பார்த்தால் எருமை போலவா உனக்கு தெரியுது? சம்பத்திடம் வினவினாள்.

அவன் சித்தார்த்தை ஆழ்ந்து பார்த்து விட்டு அவனை அடிக்க செல்ல, அவன் மிரண்டு படுக்கையிலிருந்து கீழே விழுந்தான்.

விழிவிரித்து சம்பத் அவனை பார்க்க,

“அம்மா…” அழுத சித்தார்த் சம்பத் அடித்து விடுவானோ? என்று பயந்து மீண்டும் தாரணியிடம் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டான்.

சம்பத் சினமுடன் அவனருகே வர, தாரணி சித்தார்த்தை நகர்த்தி அவள் பின்னே நிற்க வைத்துக் கொண்டு சம்பத்தை முறைத்தாள்.

“தாரா அவனை விடு” சம்பத் சீற, பயத்துடன் அவனை பார்த்தான் சித்தார்த்.

“அண்ணா முதல்ல அமைதியா இரு. அவன் பயப்படுறான். உனக்கு தெரியலையா? அவனுக்கு ஏதோ பிரச்சனை? அவன் வித்தியாசமா இருக்கான். உனக்கு தெரியுதா? இல்லையா?” சத்தமிட்டு சித்தார்த் பக்கம் திரும்பினாள்.

உன்னோட நேம் என்ன?

அவள் கண்ணையே அவன் கண்கள் தீண்ட லேசாக தடுமாறினாள் பெண்ணவள்.

உன்னோட நேம் என்ன? மீண்டும் கேட்டாள்.

சித்தார்த்..

தன் அண்ணனை பார்த்து விட்டு, “உன்னோட வீடு எங்க இருக்கு?”

இடவலமாக சம்பத்தை நோக்கி பயத்துடன் தலையசைத்தான்.

தெரியலையா? உனக்கு ஏதும் அடி பட்டிருக்கா?

நோ என்றான்.

இங்கிலீஸ் தெரியுமா?

ம்ம்..

வீட்டு முகவரி சொல்லு?

நோ..

எதுக்கு நோ? தன் அண்ணனை பார்த்தாள்.

அவங்க அடிப்பாங்க. நான் போகலை..

“அடிப்பாங்களா? யாரு?” சம்பத் கேட்டான்.

சம்பத் கேட்கவும் பயத்துடன் தாரணி பின் மறைந்து நின்றான்.

சம்பத் சித்தார்த்தை தன் பக்கம் இழுத்து, “உன்னையா அடிப்பாங்க?” கேட்டான்.

தாரணியை பாவமாக பார்த்தான் சித்தார்த்.

“யாரு உன்னை அடிப்பாங்க?” தாரணியும் அவனருகே வந்து கேட்டாள்.

சொன்னா பாப்பாவை அடிப்பாங்க..

“பாப்பாவா? உனக்கு குழந்தை இருக்கா?” சம்பத் கேட்டான்.

நோ, ஷி இஸ் மை சிஸ்டர்.

“உனக்கு தங்கை இருக்காங்களா? எப்படி இருப்பாங்க?” தாரணி ஆர்வமுடன் கேட்க, சம்பத் அவளை முறைத்தான்.

“அப்போ நீ வீட்டை விட்டு ஓடி வந்திருக்க?” சம்பத் சித்தார்த்திடம் முறைப்புடன் கேட்டான்.

சித்தார்த் இருவரையும் பார்த்து மெதுவாக நகர்ந்தான்.

தாரணி அவன் கையை பிடித்து, “உன்னோட அக்காவா? அவங்கள தனியா விட்டு வந்திருக்கியா?” கேட்டாள்.

சித்தார்த் கண்ணீருடன் தலையை பிடித்து அமர்ந்தான்.

“நீ கிளம்பு. நீ இங்கிருப்பது சரியாக இருக்காது” சம்பத் சத்தமிட்டான்.

தாரணியும் அமைதியாக இருந்தாள். சித்தார்த் வெளியே சென்றான்.

“ஒரு நிமிசம்….” வெளியே ஓடி வந்த தாரணி, அவன் கையில் உணவடங்கிய டிபன் பாக்ஸை கொடுத்தாள். அவன் அதை வாங்காமல் அவளை உற்று பார்த்தான். அவள் பயந்து நகர்ந்தாள்.

சம்பத் தூரமிருந்து அவனை பார்த்தான்.

அவள் கையிலிருந்த பாக்ஸை பார்த்து வயிற்றை தடவி வாயை திறந்தான்.

“நீ இதை வச்சுக்கோ” அவன் கையில் அவள் திணிக்க, அவன் அதை திருப்பி திருப்பி பார்த்து ஏதும் புரியாமல் அவர்களருகே இருந்த பைக் மீது டிபன் பாக்ஸை வைத்து விட்டு தூரம் நின்ற சம்பத்தை கண்டவாறு நகர்ந்தான்.

தாரணிக்கு மனம் கேட்காமல் சம்பத்திடம், சித்தார்த்தை நம் வீட்டில் வைத்து பார்த்துக்கலாம்.

“உனக்கு பைத்தியமா தாரா? எல்லாரும் என்ன நினைப்பாங்க? நீ இருக்கும் நம் வீட்டில் யாருன்னு தெரியாத ஒருவனை எப்படி தங்க வைப்பது?” சத்தமிட்டான்.

அவன் வாயில் கை வைத்து, அண்ணா அவனுக்கு டிபன் பாக்ஸை கூட ஓபன் செய்ய தெரியல. பசியால தான் மயங்கி இருப்பான்னு நீ தான சொன்ன? பாவம் அண்ணா…

அதுக்காக ஊருக்குள்ள போற வர்றவனெல்லாம் வீட்ல தங்க வைக்க முடியாது..

“எதுவும் பிரச்சனையா சம்பா?” பக்கத்து வீட்டு பெண்மணி கேட்க, சித்தார்த் அழும் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் விரைந்தனர்.

அவனை ஆட்கள் சிலர் அடித்துக் கொண்டிருந்தனர்.

“டேய் எதுக்கு இந்த பயல அடிக்கிறீங்க? நம்ம சம்பாவுக்கு தெரிந்தவன்” அந்த பெண்மணி அத்தெரு இளைஞர்களிடம் சத்தம் போட்டார்.

தாரணி சித்தார்த்தை நெருங்க, “தாரா” சத்தமிட்டான் சம்பத். தாரணி தன் அண்ணனை முறைத்தாள்.

எல்லாரும் அவனை பார்க்க, சித்தார்த்தை அடித்துக் கொண்டிருந்தவர்கள் சம்பத்தை கண்டு நகர்ந்து நின்றனர்.

அவர்கள் அடித்ததில் காயப்பட்டு அழுது கொண்டே கீழே கிடந்தான் சித்தார்த்.

“எதுக்குடா இவனை அடிச்சீங்க? உங்களில் யாரு அவனை முதல்ல அடிச்சது?” சம்பத் சத்தமிட்டான்.

அண்ணா, நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லவில்லை. சந்தேகமாக இருந்தது. அதான் அடிச்சு விசாரித்தோம்.

“அடிச்சு விசாரிக்க நீங்க என்ன போலீஸாடா?” அவர்களிடம் சீறி விட்டு சித்தார்த்திடம் கையை நீட்டினான் சம்பத். அவன் தாரணியை பார்த்தான். அவள் சம்பத்தை பார்த்தாள்.

சம்பத்திற்கு சித்தார்த் பார்வையில் கோபம் மூண்டாலும் தாரணியை பார்த்தான்.

அண்ணா, ப்ளீஸ்…

“சரி வீட்டுக்கு வா” சம்பத் மீண்டும் சித்தார்த்திடம் கையை நீட்ட, சம்பத் கையை பிடித்து எழுந்தான் சித்தார்த்.

மேகங்கள் இடியாய் முழங்கி, மின்னல் கீற்றை வெளிச்சமாக்கி மழை சடசடவென பொழிந்தது.

சித்தார்த் உடல் விறைத்து ஆகாயத்தை நோக்கி பார்த்து அப்படியே நிற்க, “வா மழை பெய்யுது” தாரணி அவனை இழுத்தாள். மற்றவர்கள் ஓடினர்.

“என்னடா பண்ற?” சம்பத்தும் அவனை இழுத்தான்.

இருவர் கையையும் விட்டு அவன் தலையை சிலுப்பி முகத்தை துடைத்து இரு கைகளையும் நீட்டி கண்களை மூடி மழையை உணர்ந்தான்

ரெயின். இஸ் இட் ரெயின்? கேட்டுக் கொண்டே புன்னகைத்தான்.

தாரணியும் சம்பத்தும் அவனை திகைத்து பார்த்தனர்.

“இஸ் இட் ரெயினா?  இதுக்கு முன் மழையை நீ பார்த்ததேயில்லையா?” தாரணி கேட்க, சுற்றும் முற்றும் பார்த்த சம்பத், “வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” இருவர் கையையும் பிடித்து இழுத்து சென்றான்.

ஆழ்ந்து சுவாசித்து முதல் முறையாக மழையின் மண்வாசம் உணர்ந்து மனமகிழ்வுடன் சம்பத் இழுப்பிற்கு சென்றான் சித்தார்த். தாரணி அவ்வப்போது சித்தார்த்தை பார்த்துக் கொண்டே நடந்தாள்.

சம்பத் மனதினுள், “மழையை இன்று தான் பார்ப்பது போல நடந்துக்கிறான்? இது ரொம்ப தப்பா இருக்கே!” வீட்டிற்கு அழைத்து சென்றான்.

குளிரில் அப்சரா நடுங்கிக் கொண்டிருந்தாள்.

“அவள விடலாம்ல்ல கீது?”  யாதவ் கேட்க, அதெல்லாம் அப்படியே விட முடியாது..

“ஏய், அவ செத்தா நீ தான் உள்ள போகணும். நானும் போக வேண்டி வரும்” கடுப்புடன் கூறினான் யாதவ்.

“இவ சாவாளா? செத்தான்னா கூட நமக்கு நல்லது தான். அவனும் இல்லை. இவளும் இல்லை. அந்த கிழவியும் போயிடுவா” கீர்த்திகா சொல்லிக் கொண்டே கதவை லேசாக திறக்க, அவ்வரண்மனை வீட்டின் வெளியே பற்கள் தந்தியடிக்க உடலை குறுக்கி மயங்கி இருந்தாள் அப்சரா.

“நீ சொன்னது போல செத்துட்டா போல!” கீர்த்திகா கதவை திறந்தாள்.

யாதவ் வெளியே வந்து அவளது மூச்சை பார்த்தான். அவள் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஏதாவது பண்ணு கீர்த்து? டாடுக்கு தெரிந்தால் கோபப்படப் போறார். அவர் பேர் கெட்டு போயிரும்..

“அவள தூக்கிட்டு என்னோட பின்னாடி வா” ஓர் அறைக்குள் அவளை போட்டு வேலையாள் பெண்மணியை கவனிக்க சொல்லி சென்று விட்டனர் கீர்த்தனாவும் யாதவும். அவன் அவளை பார்த்துக் கொண்டே சென்றான்.

அறையில் இருந்த அப்சராவிற்கு பயங்கர காய்ச்சலாக இருந்தது. உள்ளே வந்த பெண்மணி வருத்தமுடன் அவளை பார்த்து அவ்வீட்டின் டிரைவர் சிவக்குமாரை அழைத்தார்.

அவர் தயக்கமில்லாமல் உள்ளே விறுவிறுவென நுழைந்தார்.

ஜெயாவும் தனலட்சுமியும் அவரை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு தொலைக்காட்சி நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

விரைந்து அறைக்குள் நுழைந்து அப்சராவை தன் கைகளால் ஏந்தி கண்ணீருடன் வெளியே ஓடி சென்று காரில் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்தார்.

சித்தார்த் கையை பிடித்து தன்னறைக்கு அழைத்து சென்ற சம்பத் அர்த்தமுடன் தன் தங்கையை நோக்கினான். அவள் அவனுக்கு உண்ண உணவு எடுக்க சமையலறைக்கு சென்றாள்.

நாம சந்தித்த போது எதுக்கு தாராவ கட்டி பிடிச்ச?

“அம்மா..அம்மா வாசனை அவ கிட்ட வந்தது. அம்மா பக்கம் இருப்பது போல உணர்ந்தேன். அதான்…..தப்பா?” பாவமாக சம்பத்தை பார்த்தான் சித்தார்த்.

சம்பத் பேசும் முன் கையில் உணவுத்தட்டுடன் அறைக்குள் வந்தாள் தாரணி.

உணவை பார்க்கவும் அவனுக்கு எச்சில் ஊறியது. பசி மேலும் வயிற்றை கிள்ளியது சித்தார்த்திற்கு. அவனின் முக பாவனையில் தாரணி சிரித்து விட்டாள்.

பசிக்குதுன்னா கேட்க வேண்டியது தான? இந்தா சாப்பிடு..

அவன் இருவரையும் பார்த்து பாவமாக முகத்தை வைத்து, ஊட்ட சொல்லி அவன் விரலை வாயிடம் சுட்டி காட்டினான்.

“நீயாக சாப்பிட கூட மாட்டீயா?” சம்பத் சினமுடன் கேட்டான்.

அம்மா தான் ஊட்டுவாங்க. உனக்கு அம்மா ஊட்ட மாட்டாங்களா? சம்பத்திடம் கேட்டான் சித்தார்த்.

“எங்களுக்கு தான் அம்மா இல்லையே!” தாரணி கூற, சம்பத் அவளை பார்த்தான்.

எங்க போனாங்க?

இறந்துட்டாங்க..

நான் அம்மாவை கொஞ்ச நாளா பார்க்கல. அம்மா ஊட்ட கூட வரல. பாப்பா தான் வந்தா.

“குட்டிப்பாப்பா மாதிரி சொல்ற?” தாரணி கேட்க, “ம்ம்! என்னோட பாப்பா தான?” அவன் க்யூட்டாக பேசினான்.

கண்ணிமைக்காமல் தாரணி அவனை பார்க்க, “தாரா நீ சாப்பிட்டு தூங்கு. நான் இவனை பார்த்துக்கிறேன்”.

அண்ணா, நீ சாப்பிடணும்..

“நான் போட்டுப்பேன்..” அவளிடமிருந்து உணவு தட்டை வாங்கி சம்பத் சித்தார்த்திற்கு ஊட்டி விட்டான். புன்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டே தாரணி சென்றாள்.