காதல் 17

தர்மராஜ் வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே பிரணிதா அமைதியாக இருந்தாள். அவளை எண்ணி கவலையுடன் இருந்தார் கந்தசாமி.

தர்மாவை பிரணிதா காதலிக்கிறாளோ என்ற எண்ணத்தை அனைவரும் பேசி இருந்தனர்.

பிரணிதா முன் வந்த சர்வா, “வா பேசணும்…” அவளது கரத்தை பற்றினான்.

“சர்வா…..” சம்பத் அழைக்க, “பேச தான் போறேன். சண்டை போட மாட்டேன்” சொல்லி சென்றான். அவர்கள் சென்ற பின் தர்மா குழந்தையை பார்க்க வந்தான்.

பாட்டி அவனை பார்த்து, யாருப்பா நீ? கேட்டார்.

ஏதும் கூறாமல் அலைபாய்ந்த விழிகளுடன் கந்தசாமி அருகே சென்றான்.

தர்மா….அவர் எழுந்தார்.

பிரணிதாவின் சகோதரி குழந்தையை அவனிடம் நீட்டினார்.

இல்ல..எனக்கு என்றவனுக்கு அவனது தாயின் மடியில் பாந்தமாக உறங்கிய குழந்தை நிரஞ்சன் எண்ணம் உதித்தது.

குழந்தையை தூக்க அவன் கைகள் நடுங்கியது.

அப்பா….வாங்கிக் கொடுங்க….

கந்தசாமி குழந்தையை தூக்கி தர்மராஜ் கையில் கொடுத்தார். வாங்கிய அவன் கண்கள் குளம் கட்டியது.

மாமா, ரௌடிகளுக்கு அழுகைலாம் வருமா? அப்சரா தன் கணவன் காதை கடித்தாள்.

ஷ்…என்ற சம்பத், “அங்கிள் நாங்க வெளியே இருக்கோம். எதுவும் வாங்கணுமா?” கேட்டான்.

“இப்ப எதுவும் தேவைப்படாது மாப்பிள்ள” பாட்டி தர்மாவை பார்த்துக் கொண்டே கூறினார்.

சம்பாவும் அப்சராவும் வெளியே நகர்ந்தனர்.

தர்மாவும் குழந்தையை கொடுத்து விட்டு அர்த்தமுடன் கந்தசாமியை பார்த்து அவன் நகர, “ஏம்மா உன்னோட புருசன் இன்னும் புள்ளைய பார்க்க வரலை” பாட்டி பிரணிதாவின் சகோதரியிடம் கேட்டார்.

தர்மா இருவரையும் பார்த்தான். அவள் கண்கள் கலங்கியது.

ஏதும் பிரச்சனையா?

“அவருக்கு வேலை இருக்காம். இப்ப வர முடியாது. ஒரு மாதம் ஆகும்ன்னு சொல்லீட்டார்” கண்ணீர் மளமளவென வரத் தொடங்கியது.

கேட்க தானே செய்தேன். கணவன் இந்த நேரம் அருகே இருக்கணும்ன்னு கேட்டேன்ம்மா. வருத்தப்படாத! பாட்டி அவர் கண்ணீரை துடைத்து விட்டார்.

“பேசுறதையும் பேசிட்டு என்ன சமாதானப்படுத்துற?” தாத்தா பாட்டியிடம் சத்தமிட்டார்.

“உங்களுக்கு என்ன தெரியும்? இந்த நேரம் பொண்டாட்டி பக்கம் கட்டிக்கிட்டவன் இருக்க வேண்டாமா? அப்படி என்ன வேலை வேண்டி கிடக்கு. புள்ளைய பாக்குறத விட…” பாட்டி சினமுடன் கேட்டார்.

“மாப்பிள்ளைக்கு முக்கியமான பிராஜெக்ட் போயிட்டு இருக்காம். தாய்லாந்திலிருந்து உடனே வர முடியாது. அப்பா இருக்கேன்டா” தன் மகளுக்கு ஆறுதலாக தலை கோதினார் கந்தசாமி.

இதை கண்டவாறே வெளியே சென்றான் தர்மராஜ்.

சர்வாவும் பிரணிதாவும் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தர்மா இருவரையும் சேர்த்து காணவும் நின்று விட்டான்.

தர்மாவை பிரணி காதலிக்கிறாளா? என்று அவளிடம் கேட்ட சர்வாவிற்கு அவளது பதில் குழப்பத்தையே தந்தது. குழப்பமுடன் எழுந்து தர்மாவை முறைத்து உள்ளே சென்றான் சர்வா.

சம்பத் அவன் பின்னே செல்ல, பிரணிதாவும் எழுந்து வந்தாள்.

அப்சரா அவளை நிறுத்தி தனியே அழைத்து அமர வைத்தாள்.

என்னாச்சு அண்ணீ?

சர்வா மாமாவை உனக்கு திருமணம் செய்து வைக்கணும்ன்னு உன்னோட அண்ணா சொன்னாரு. ஏன் வேண்டாம்ன்னு சொல்ற? போட்டு வாங்க எண்ணினான் அப்சரா.

அண்ணீ, சர்வா மீது எனக்கு அந்த உணர்வுகள் வராது. அவன் என் வந்துவை காதலித்தவன். அவ தான் அவன் மீதுள்ள பாசத்தில் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி இருக்கா. அதுக்காக நான் எப்படி திருமணம் செய்ய முடியும்?

உண்மையை சொன்னால் வந்தனாவும் சர்வாவும் காதலிக்கும் சமயத்தில் சர்வா போல ஒருவன் தான் எனக்கு வேணும்ன்னு நானும் எண்ணி இருக்கேன். ஆனால் அவன் வந்துவின் போதாத நேரத்தில் கூட உடனில்லை.

நீ எங்க போன? எல்லாரையும் திட்டுற? அப்சரா பட்டென கேட்டாள்.

எங்க குடும்ப விழா ஒன்றிற்கு நாங்கள் சென்றிருந்தோம். அவள் அனுப்பிய வீடியோவை பார்க்கவும் உடனே அப்பாவும் நானும் இங்கே வந்துட்டோம்.

வந்ததற்கு குரு அங்கிளுடன் சேர்ந்து அப்பா சிவக்குமார் அங்கிளை தான் காப்பாற்ற முடிந்தது. என்னால அவ இல்லைன்னு நம்பவே முடியல. அதற்கு நேரமெடுத்தது. பின் தான் சர்வாவை தேடினேன்.

“அவன் விரக்தியில் எல்லாத்தையும் விட்டு ஓடிட்டான்” அப்சராவை அணைத்து அழுதாள்.

பிரணி…

கண்ணை துடைத்து, நௌ ஐ அம் ஓ.கே அண்ணி…

எங்களை விட அண்ணா தான் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க. அவர் குடும்பத்தையே இழந்து நிற்கும் போது தாரா மட்டும் தான் உடனிருந்தாள். வலியை மனதில் வைத்து அவளுக்கு காட்டாமல் இருந்து கொண்டிருந்திருக்கார்.

அண்ணாவை தேடி பொள்ளாச்சி போனேன். அவங்க காலி பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்க. என்னோட கிளைண்ட்டை மீட் பண்ண ஒரு முறை பூம்பாறை சென்றேன். அண்ணாவையும் தாராவையும் பார்த்தேன். அவர்கள் முன் சென்று அவர்களை காயப்படுத்த வேண்டாம்ன்னு தான் பேசாமல் வந்துட்டேன்.

அண்ணா பழி வாங்க மட்டும் திருமணம் செய்வதாக இருந்தால் நீங்கள் கூறிய ஒப்பந்த திருமணத்தையே ஒப்பு கொண்டிருப்பார். நீங்க உங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க. அண்ணாவுக்கு உங்களை பிடிக்காமல் இல்லை.

ம்ம்! என்ற அப்சரா சோர்வுடன் அமர்ந்தாள்.

ஏதும் பிரச்சனையா அண்ணீ?

எங்க கம்பெனில அவருக்கு மரியாதையே இல்லை. மாமனார் பணத்தில் வசதியாக வாழ்கிறான். கொடுத்து வச்சவன் அது இதுன்னு அதிகமா பேசுறாங்க. அதுவும் அவர் முன்னாடியே! அவர் எப்படி இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்ன்னு தெரியல பிரணி. நாங்க சீக்கிரமே அவர் வீட்டுக்கு போகணும்.

வாட்?

ம்ம்! சித் அண்ணாவுக்கு தாராவும் சேந்தன் அண்ணாவும் பயிற்சி கொடுத்துட்டு இருக்காங்க. அவர் கம்பெனி பொறுப்பை எடுத்து நடத்தணும்.

அண்ணீ, இது பாசிபுல்லே இல்ல…

ஏன் இல்லை? என் அண்ணாவை நீ பார்த்தாயா? முன் போல அவனில்லை. மாமா வீட்டிற்கு செல்லவும் நிறைய மாறி இருக்கான். தாராவுக்காக ஒருத்தனை அடிச்சான்…எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. அம்மா கூட அவனை எண்ணி புலம்பிட்டே இருப்பாங்க…இப்ப…அம்மா கண்கலங்கினாள்.

அண்ணீ, ஆன்ட்டி இப்ப ஓ.கே தான?

இல்ல, நினைவில்லாமல் இருக்காங்க. எந்த நேரத்திலும் விழிக்கலாம் இல்லை உயிர் போகும் வாய்ப்புள்ளதுன்னு மருத்துவர் சொல்லி இருக்கார் அப்சரா கண்ணீருடன் கூறினாள்.

என்ன அண்ணீ, நீங்களே அழுதால் எப்படி?

உதட்டை பிதுக்கியவாறு, அம்மாவை அத்தை, சித்தி, கீர்த்து ஏதும் செய்திடுவாங்களோன்னு பயமா இருக்கு. சர்வா மாமா செவிலியர் யாராவது பார்த்துக்க போடலாம்ன்னு சொன்னார்.

“இருக்கும் நிலையை பார்த்தால் யாரையும் வீட்டிற்குள் விடவே பயமா இருக்கு..” கலங்கினாள் அப்சரா.

ஆர்வமுடன் அவள் பக்கம் திரும்பி, அண்ணீ எனக்கு ஒரு ஐடியா இருக்கு. தாராவை சித் மாமாவுக்கு கல்யாணம் செய்து வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துருங்க. அவளும் செவிலியர் தான். பயப்படாமல் இருக்கலாம்.

இல்ல…இல்ல…அத்தை, கீர்த்து..

அவங்களாம் ஒரு ஆளா? போயும் போயும் இதுகளுக்கு பயந்துட்டு இருந்திருக்கீங்க? கீர்த்தியோட வீக்னஸ் கண்டறிந்து அவளை மிரட்டினால் போதும். அவளை யார்கிட்ட கோர்த்து விடலாம்..

ஹாய் அப்பூ…அவர்களிடம் வந்தான் யாதவ்.

ஆஹா..ஆடு தானா மாட்டுதே! அப்சராவை பார்த்து புன்னகைத்தாள்.

யாதவ், உன்னால ஒரு காரியம் ஆகணுமே! பிரணிதா கூற, என்ன செய்யணும்?

அதுவா அந்த ராங்கி கீர்த்தியை திருமணம் செஞ்சு எங்காவது கூட்டிட்டு ஓடிரு..

என்ன? அவள திருமணமா? இப்ப கொஞ்ச நாளா தான் அவ பக்கத்துல இல்லாமல் நிம்மதியா இருக்கேன்.

அப்சரா புன்னகைத்தாள்.

உன்னோட அப்பூவுக்காக இது கூட செய்ய மாட்டாயா? என்ன தம்பி நீ?

“என்ன சொன்னாலும் அவ எனக்கு வேண்டாம்ப்பா” அவன் வந்த வழியே ஓடினான். பெண்கள் இருவரும் சிரித்தனர்.

அப்சரா மீண்டும் சோகமானாள்.

தாரா விசயம் சும்மா தான் சொன்னேன். நான் வேண்டுமானால் எனக்கு தெரிஞ்ச யாராவது பார்க்கிறேன். ஓ.கே வா?

ம்ம்…நம்பிக்கையான ஆளா பார்க்குறியா? யாரையும் நம்ப முடியல…

சரி அண்ணீ, இதெல்லாம் நினைச்சு கவலைப்படாமல் எனக்கு ஒரு மருமகனுக்கு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

ச்சீ..போ…வெட்கமுடன் அப்சரா குனிய, அய்ய..இப்படி வெட்கப்பட்டால் இப்பொழுதைக்கு நடக்காது போல..

ம்ம்…சித்தி ஆகியாச்சு. அத்தையாகலாம்ன்னு நினைச்சேன் சிரித்தாள் பிரணிதா.

பிரணி, உனக்கு சர்வா மாமா வேண்டாம்ன்னா வேற யாரையாவது திருமணம் பண்ணிக்கோ. மாமா ரொம்ப வருத்தப்படுறாங்க.

விருப்பமில்லை அண்ணீ. அக்கா வாழ்க்கையை முதலில் சரி செய்யணும்.

பிரச்சனையா?

அப்படின்னு சொல்ல முடியாது. வேலை தான் முக்கியம்ன்னு இருந்தால் எப்படி அண்ணீ? அக்காவையும் பார்க்கணும்ல்ல. மாமாவுக்கு யாருமில்லை. ரொம்ப நல்ல மனுசன் தான். பணமில்லாமல் ஏதும் செய்ய முடியாதுன்னு உழைப்பை பெரிதும் மதிப்பவர்.

ஒரு வருடம் ஒன்றாக இருந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்தவர் தான். பின் செல்லவே இல்லை. கால் செய்து பேசுவார். கர்ப்பம் தரிக்கவும் அக்கா இங்கேயே இருக்கட்டும்ன்னு விட்டுட்டார். அக்கா தினமும் மாமாவை பார்க்க எண்ணி அழுவாள். கஷ்டமா இருக்கும். ஆனால் அவர் புரிந்து கொள்ளணுமே!

இப்பொழுது கூட கால் பண்ணேன். ஒரு மாதத்தின் பின் தான் வருவேன்னு சொல்லீட்டார். குழந்தை பெற்று விழித்தவுடன் அக்கா குழந்தையை கூட காணாது மாமாவை தான் தேடினாள். அவர் இல்லை என்றதும் சிறு பிள்ளை போல அழுதுட்டு இருக்கா. என்ன செய்றது? கண்ணீரை சுட்டி விட்டு எழுந்தாள்.

பிரணிதா கரத்தை பற்றி, நீ தர்மாவை காதலிக்கிறாயா பிரணி?

என்ன எல்லாரும் இப்படியே கேக்குறீங்க? தர்மாவை பிடிக்கும். திருமணமெல்லாம் முடியாது. அன்றே சொன்னேன்ல்ல..

இல்ல பிரணி, உன்னுடைய நடத்தையில் வித்தியாசம் தெரிவதாக எல்லாரும் சொன்னாங்க. படிக்காதவனாக இருந்தால் கூட பரவாயில்லை.

தர்மா கொலை செய்திருக்கான். உனக்காக அவன் மாறினால் கூட அவனை தெரிந்தவர்கள் அவனை கொலைகாரனாக தான் பார்ப்பார்கள். உன்னுடைய தந்தை போலீஸ். அவர் பதவியில் இருந்திருந்தால் அவர் கூட அவனை கைது செய்யும் வாய்ப்புள்ளது. உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.

அப்புறம் அவன் உன்னை காதலிக்கிறான். அது நிச்சயமான உண்மை. எல்லார் கண்ணிலும் அவன் காதல் பட்டிருக்கு. நீயும் அவனுக்காக பேசுற….அப்சரா எழுந்து சென்றாள்.

அனைத்தையும் கேட்ட தர்மராஜ் மனதில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

என்ன தான் பிரணிதாவை வேண்டாம் என முடிவெடுத்தாலும் அவளுக்கு வேறொருவன் தாலி கட்டுவான் என்ற எண்ணம் அவனை மிகவும் வாட்டியது. அவன் அவளை பார்த்தான்.

அலைபேசி எடுத்து ஏதோ ஒன்றை வருத்தமாக பார்த்து விட்டு நகர்ந்தாள். கனத்த மனதுடன் அவன் வீட்டிற்கு கிளம்பினான்.

மறுநாள் மாலை வேளையில் குழந்தையை காண அனைவரும் வந்திருந்தனர். மருத்துவமனையின் வெளியே பிரணிதா கார்த்திக்குடன் அலைபேசியில் விவாதித்துக் கொண்டிருந்தாள்.

“பிரணி…” அழைப்பில் திரும்பிய பிரணிதாவால் அவள் கண்களை நம்ப முடியவில்லை. கார்த்திக்கிடம் ஏதும் கூறாமல் அலைபேசியை துண்டித்து விட்டாள்.

“மாமா நீங்க…வாங்க மாமா…பாப்பா அப்படியே உங்களை மாதிரியே இருக்கா” ஆனந்தக்கண்ணீருடன் தன் சகோதரியின் கணவனை பார்த்து அவரது லக்கேஜை வாங்கி சென்றாள். அவர் புன்னகையுடன் அவள் பின்னே சென்றார்.

“அக்கா…” மகிழ்ச்சியுடன் பிரணிதா கதவை திறந்தாள். குழந்தை வீறிட்டு கத்தியது.

“மெதுவா திறக்க வேண்டியது தான? பாப்பா அழுறா” அப்சரா தன் கையிலிருந்த குழந்தையை கொஞ்சியவாறு ஆட்டினாள்.

ஏன்டி? பாட்டி அவளை முறைத்தார்.

அப்பா…மாமா…நகர்ந்து நின்றாள்.

எதிர்பாராத நேரம் தன் கணவனை காணவும் பிரணிதாவின் சகோதரி பேச்சிழந்து அவரை ஆராய்ந்து, விரைந்து எழுந்து அவனிடம் சென்று கட்டிக் கொண்டு அழுது தீர்த்து விட்டார்.

நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சு ரொம்ப கஷ்டமா இருந்தது. உங்களை பார்க்கணும் போல இருந்தது அழுதார்.

சாரிம்மா, வேலைப்பளுவில் வர முடியவில்லை. சம்பா சர்வாவை பார்த்தவாறு, “உங்களில் தர்மா யாரு?” கேட்டார்.

“தர்மாவா?” பிரணிதா தன் மாமாவிடம் கேட்டாள்.

ஆமா பிரணி, அவர் தான் நான் இங்கே வரக் காரணம். உன் அக்காவின் நிலையை புரிய வைத்தார். நானும் யாருமில்லாமல் வளர்ந்தவன் தானே! என்னால் அவர் கூறியதை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.

வெகு நாட்களாக சென்னைக்கு மாற்றலாக நான் கேட்டிருந்த பணியை எனக்கு கொடுத்துட்டாங்க. இனி நாம தாய்லாந்து போக தேவையில்லை தனது அப்பாயிண்ட்மெட்டை தன் மனைவியிடம் கொடுத்தார்.

சர்வாவை பார்த்து, நீங்கள் தான் தர்மாவா? கேட்டார்.

“தர்மா இங்கில்லை மாமா” பிரணிதா தன் தந்தையை பார்த்தாள்.

இதுக்கு தான் என்னிடம் இவர் எண்ணை கேட்டானா? சம்பத் கேட்க,

என்ன சம்பா?

“தர்மா என்னிடம் உங்க மாப்பிள்ளையோட எண்ணை கேட்டான்” சம்பத் கந்தசாமியிடம் கூறினான்.

“தர்மா இங்கில்லையா? யாரு அவர்?” கந்தசாமியின் மாப்பிள்ளை கேட்டார்.

அவர் தயங்க, சர்வா பட்டென “கொலைக்கார பய..” என்றான்.

தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“சர்வா…” சம்பத் சத்தமிட்டான்.

“உண்மையை தான சொல்றேன். உனக்கெதுக்கு கோபம் வருது” சினமுடன் சர்வா வெளியேறினான்.

சம்பத் தர்மாவிற்கு அழைத்தான்.

“என்ன சொல்றார் மாமா?” மாப்பிள்ளை கேட்க, ஆமா மாப்பிள்ள. அமைதியாக இருந்தார் கந்தசாமி.

கொலைகாரன் எப்படி இப்படி குடும்பத்தை சேர்த்து வைக்க எண்ணுவான்?

மாப்பிள்ளையின் கேள்வியில் பிரணிதாவின் கண்கலங்க உள்ளம் கசங்கியது.

அவன் குடும்பம்? சிந்தித்தாள்.

“தர்மா” சம்பத் அழைக்க,

சொல்லு..

அங்கிளோட மாப்பிள்ளை வந்துருக்கார். நீ அவரிடம் பேசினாயா?

“வந்துட்டாரா? நல்லது…” சோர்வுடன் பேசினான் தர்மா.

தர்மா குடிச்சிருக்கியா?

இல்ல. என்னால இதுக்கு மேல புரிய வைக்க முடியல..

யாருக்கு? என்ன புரிய வைக்கணும்?

“நிரா சொல்றதை கேட்கவே மாட்டேங்கிறான்” குலுங்கி குலுங்கி அழுதான் தர்மா.

“தர்மா….” சம்பத் அழைக்க, அவன் இணைப்பை துண்டித்தான்.

“அங்கிள், கொஞ்சம் வெளிய வாங்களேன்” சம்பத் கந்தசாமியை அழைத்தான்.

என்ன சம்பா? என்ன சொல்றான்?

“அழுதுட்டு இருக்கான் அங்கிள்…” பிரணிதாவை பார்த்தான் சம்பத்.

“அழுறாரா?” பிரணிதாவின் சகோதரி கேட்டாள்.

அப்சரா பிரணிதாவை பார்க்க, அவள் முகம் வாடி இருந்தது.

“பிரணி, நீ எதுவும் தர்மாவிடம் பேசுனியா?” கந்தசாமி அதட்டலாக கேட்டார்.

“அவன் தான் என்னை வர வேண்டாம்ன்னு வெளிய போக சொன்னான்ல்ல. அன்றிலிருந்து நான் பேசுவது கூட இல்லை. அப்படி நான் திட்டினாலும் அவள் அழும் ரகம் இல்லை. அவன் அழுகை தம்பிக்காக தான் இருக்கும். அவன் செத்து கித்து போயிட்டானான்னு பாருங்க…” மனதில் இருக்கும் வேதனையை மறைத்து பேசினாள்.

“உன்கிட்ட கேட்டதுக்கு கேட்காமலே இருந்திருக்கலாம்” சம்பா தலையில் அடித்து விட்டு, “நீங்க பேசுங்க அங்கிள். பதில் கூறுவான்…” அலைபேசியை கொடுத்தான்.

தர்மா, என்ன செய்ற? பதட்டமுடன் கேட்டார் கந்தசாமி.

ஒன்றுமில்லை சார்…

நீ அழுததாக சம்பா கூறினான். சொல்லு நிரஞ்சனுக்கு ஏதும் ஆகிடுச்சா?

இல்ல சார், அவன் என்னை அவனது எதிரியாக பார்க்கிறான். சொல்லும் எதையும் காதில் போட மாட்டேங்கிறான். படிப்பை வைத்து அவன் வாழ்க்கையை அவன் பார்த்துப்பான் என்று சிரமப்பட்டாலும் படிக்க வைத்தேன். ஆனால் அந்தாளூ பேச்சை கேட்டு…கலக்கமுடன்,

என் தம்பியை நானே கொன்று விடுவேனாம். பேசுறான் சார். இதுக்காகவா என் வாழ்க்கையை கூட பாராது அவனுக்காக இந்த கேடுகெட்ட செயலை செய்தேன். அவனை தவிர எனக்கும் யாரு சார் இருக்கா…??? மனம் வலிக்க பேசினான்.

தர்மா, இதுக்காகவா வருத்தப்படுற? அவனுக்கு புரியும் நேரம் வரும். இப்பொழுது நீ புரிந்திருப்பது போல…

“இல்ல சார், அவன் புரிஞ்சுப்பான்னு எனக்கு தோணலை” விரக்தியுடன் பேசினான்.

எங்க இருக்கான்?

அவன் அறையில் தான் அடைச்சு வச்சிருக்கேன்.

ஓ! சரி. கண்டதையும் போட்டு குழப்பிக்காம தெளிவா இரு அலைபேசியை அணைத்து சம்பத்திடம் கொடுத்தார்.

என்ன அங்கிள்? தர்மா மாறியது போல தான் இருக்கு. இருந்தாலும் இந்த நிரஞ்சன் கொஞ்சமும் திருந்தவில்லை போலும். ஆதாரத்தை சேகரித்து முதலில் நிரஞ்சனை கைது செய்வது தான் சரி என்று படுகிறது..

அதான் தர்மாவிடம் இருக்கே!

அவனிடம் எப்படி வாங்குவது? கந்தசாமி சம்பத்தை பார்த்தார்.

“அவனுக்கு இருக்கும் ஒரே உறவு நிரஞ்சன் மட்டும் தான். எப்படி அவனை சிறையில் அடைக்க தர்மா ஒத்துக் கொள்வான்? இவர்கள் செய்தது சாதாரண பிழையில்லையே! சிறைக்கு சென்றால் மரண தண்டனை நிச்சயம்….” சம்பத் கந்தசாமியை பார்த்தார்.

நான் கேட்டுப் பார்க்கவா மாமா? அவரின் மாப்பிள்ளை வந்தார்.

என்ன சொல்றீங்க மாப்பிள்ள? நீங்க எப்படி?

வந்தனா பற்றி எனக்கும் தெரியும். என் மனைவி தான் கூறுவாளே! அந்த பெண்ணை கொலை செய்தவனின் அண்ணா தான் தர்மான்னு இப்பொழுது தான் தெரிந்தது. நான் பேசிப் பார்க்கிறேன்..

“இல்ல மாப்பிள்ள, தர்மாவும் சாதாரண ஆள் இல்லை. நீங்கள் அவனருகே செல்ல வேண்டாம். எனக்கு தவறாக படுகிறது” பதறினார் கந்தசாமி.

அங்கிள், நானும் அவருடன் சென்று வாரேன். பேச தானே போறோம் என்றான் சம்பத்.

ம்ம்! மனம் ஒப்பவில்லை என்றாலும் சம்பா உன்னை நம்பி மாப்பிள்ளையை அனுப்புகிறேன். பத்திரம் என்றார் கந்தசாமி.

நீங்க கொஞ்ச நேரம் மனைவியுடன் நேரம் செலவழியுங்கள். இரவு உணவை முடித்து விட்டு அவனை காண செல்லலாம்.

சம்பத்தை தனியே அழைத்து வந்த பிரணிதா,

அண்ணா…இதுல இருக்கிறவங்க சிறுவயதில் தர்மா இழந்த குடும்பத்தினர்கள். இவர்களை பற்றி விவரத்தை கண்டறி. இவர்களுக்கு நெருங்கிய உறவுகள் யாரையாவது தர்மாவிற்கு தெரிய வாய்ப்புள்ளது. அவர்களை வைத்து தர்மாவிடம் நாம் நினைப்பதை சாதித்துக் கொள்ளலாம்…

சம்பத் கையை கட்டிக் கொண்டு, நீ என்ன முயற்சிக்கிறன்னு எனக்கு நல்லா தெரியுது பிரணி. நீ அவனை பிளாக்மெயில் செய்ய இதனை சொல்லவில்லை. அவன் திருந்தணும்ன்னு நினைக்கிற…

ஒரு விசயம் நன்றாக நினைவில் வச்சுக்கோ. நிரஞ்சனை பாசமாக வளர்த்த உடன் பிறந்த சகோதரன் தர்மராஜ். நிரஞ்சனை என்றும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான்.

அண்ணா…நீ சொல்றது சரி தான். அவன் திருந்தணும்ன்னு நினைக்கிறேன். தர்மா நிரஞ்சனை விட்டுக் கொடுக்க மாட்டான் தான். அதே போல அவனை இதற்கு கொலை செய்ய அனுமதிக்க மாட்டான்.

அடுத்த முறை தர்மாவிடம் பேசினால், கொலை செய்ய ஆர்டர் பிறப்பிப்பவன் யாருன்னு கேளு. அது போதும்.

அதெல்லாம் கேட்டாச்சு. அவன் சொல்ல மாட்டேங்கிறான்.

சரி. இதில் இருக்கிறவங்களோட முழுவிவரமும் எனக்கு வேண்டும் என்றாள்.

மேடம், நீங்க தான் வக்கீல். நானில்லை…

உன்னோட நண்பனிடம் கேட்கலாமே!

சர்வாவிடம் நீ கேட்க வேண்டியது தானே!

நாங்கள் தான் சண்டை போட்டுக் கொண்டோமே!

நீங்க சண்டை போடாமல் என்று தான் இருந்தீர்கள்?

“சரி. உன் உதவி வேண்டாம். நான் கார்த்திக்கை வைத்து அறிந்து கொள்கிறேன்”  கவரை பிடுங்கினாள்.

“ஒரு நிமிசம்” அதிலுள்ள புகைப்படங்களை தனது அலைபேசியில் ஏற்றி, “முயற்சி செய்கிறேன்” சம்பத் நகர்ந்தான். பிரணிதா புன்னகைத்தாள்.

தர்மாவிற்கென உறவுகள் வந்தால் அவன் கொலை செய்யும் எண்ணத்தை கை விட்டு விடுவான் என்று அதை கண்டறிய கிளம்பினாள் பிரணிதா.