அழகான பெண் என்று, மகனது மனம் ஒருநொடி கொஞ்சமே கொஞ்சம் ஆசைப்பட்டிருக்கும் என்று நினைத்தவரும், இந்த சம்பந்தம் வேண்டாம் என்கிற முடிவினில் அந்தநோடியே வந்துவிட்டார். ஆனால் அங்கே விநாயகமோ மகாவின் மனநிலைக்கு அப்படியே எதிர் துருவமாய் இருந்தார்.

பாஸ்கரின் நிதானம் அவரை வெகுவாய் கவர்ந்தது. அவரின் குடும்ப விபரத்தையும் கூட, விநாயகத்தின் சித்தப்பா பகிர, அப்போதும் கூட பாஸ்கர் தங்களின் மகளுக்கும் மாப்பிள்ளை தேடுகிறோம் என்று வாய் திறக்கவில்லை. ஆனால் மற்றவர் பேசுவதை எல்லாம் ஆழ்ந்து நோக்குவதை விநாயகம் கண்டுகொண்டார்.

ஒரு பெண் பிள்ளையின் தகப்பன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தார் பாஸ்கர். அதையும் தாண்டி கவிதாவைப் பார்க்கையில், மகனுக்கு ஏற்ற ஜோடியாய் தான் தொன்றியது விநாயகத்திற்கு. மேற்கொண்டு வீட்டிற்கு சென்று பேசிக்கொள்வோம் என்று எண்ணிக்கொண்டார்.

அடுத்து திருமணம் முடிந்து அனைவரும் வீடு கிளம்ப, வரா எப்படி போய் கவிதாவோடு பேசினாலோ தெரியவில்லை. ஆனாலும் பேசிவிட்டாள்.

“என்னக்கா திடீர்னு போய் நீ பாட்டுக்கு பேசுற?” என்று தனா கேட்க,

“அட கிடைச்ச சான்ஸ விட முடியுமா? அவங்க அண்ணன் பொண்ணு போல அந்த குட்டி பாப்பா.. இந்த பொண்ணு கைல வச்சிருந்துச்சு. அந்த சின்ன குட்டி இப்படி அப்படி திரும்பவும், இவளுக்கு சேலைய அஜஸ்ட் பண்ண முடியல. டக்குன்னு குழந்தைய நான் வாங்கிட்டேன். தேங்க்ஸ்ன்னு சொல்லி சிரிச்சா. அழகா இருக்கா டி. தம்பிக்கு ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும். குரல் கூட இனிப்பா இருக்கு..” என்று சிலாகிக்க,

“ம்க்கும்.. அங்க அம்மாவ பாரு..” என்றாள் தனா.

“ஏன் அம்மாக்கு என்ன?” என்ற வரா, மகாவைப் பார்க்க அவரின் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை.

வீடு வந்து சேர்வதற்குள் பல பல பேச்சுக்கள். மகாவின் சித்தப்பாக்கள் இருவரும் கூட “பார்க்க நல்ல மனுசங்களா தான் இருக்காங்க..” என்று சொல்ல,   

சித்திகளோ “ம்ம் நல்ல வசதி போல..” என்று சொல்ல,

மாப்பிள்ளைகள் இருவரும் “அவங்க மகன் மருமகளும் கூட நல்ல ஒரு வேலையில இருக்காங்க. கண்ணனுக்கு இந்த இடம் அமைஞ்சா நல்லதுதான்..” என்றும் சொல்ல, விநாயகம் கேள்வியாய் மனைவியின் முகம் நோக்கினார். 

திருமணம் முடிந்து அனைவரும் மொத்தமாய் இங்கேதான் வந்திருந்தார்கள். பின்னே பேசுவதற்கு எத்தனை பெரிய விஷயம் கிடைத்திருக்கிறது. அதை விட முடியுமா என்ன?!

ஆனால் மகாவோ, யாரினது பேச்சிற்கும் பதில் பேசவில்லை. வந்ததுமே உடைமாற்றியவர், வீட்டினில் இருந்த சிறு சிறு வேலைகளை செய்துவிட்டு வந்து அமர்ந்துகொள்ள, விநாயகமோ கடைக்குக் கிளம்பிவிட்டார். அப்பா வரவும், கண்ணதாசன் கேள்வியாய் நோக்க,

“எனக்கு முழு திருப்தி. ஆனா உங்கம்மா முகம் சரியில்ல..” என்று விநாயகம் சொல்ல,

“நான் சொன்னேன்ல ப்பா, இது ஒத்துவராது.. விட்டுட்டு வேற வேலையை பாருங்க..” என்றுவிட்டு வீட்டிற்கு வந்தான் மகன்.

வீட்டிலோ ஆளாளுக்கு ஒன்றை பேசிக்கொண்டு இருக்க, அக்காக்கள் இருவரும் தான் வேகமாய் தம்பியை தனியே தள்ளிக்கொண்டு வந்தனர்.

“டேய் பொண்ணு சூப்பர்டா..” என்று தனா சொல்ல,

“உனக்கு நல்ல பொறுத்தம்..” என்றாள் வரா.

“ம்ம்” என்று தலையை ஆட்டியவனிடம் வந்த மகா “வந்து சாப்பிடு கண்ணா..” என,

“கொஞ்ச நேரம் போகட்டும் ம்மா..” என்றவன் “ஏன் ம்மா டல்லா இருக்க?” என்று கேட்க,

“போயிட்டு வந்தது எப்படியோ இருக்குடா..” என்று முடித்துவிட்டார் மகா.

பிறகு என்ன, மகாவிடம் இருந்து எந்த பேச்சுக்களும் இல்லை என்றானதும் இரு சித்தப்பாக்களின் குடும்பமும் அப்படியே கிளம்பிட, மகள்கள் இருவரும் பிள்ளைகளோடு இங்கேயே இருந்துகொண்டனர்.

“லீவ் தானே. நைட் வர்றோம்..” என்று முடித்துவிட்டனர்.

அனைவரும் கிளம்பிய பிறகுதான் மகாலட்சுமி வாயே திறந்தார். கண்ணதாசனும் அப்போது உண்டு முடித்திருக்க, மகா “நீ எடுத்த முடிவு சரிதான் கண்ணா..” என்றார்.

“என்னம்மா?!” என்றவன், வாயைத் துடைத்துக்கொண்டே அம்மாவைப் பார்க்க,

“இல்லடா, இந்த சம்பந்தம் ஒத்து வராதுன்னு சொன்ன இல்ல. அது சரியான முடிவுதான். பொண்ணு அழகா இருக்கு. அதுக்காக எல்லாம் நமக்கு சரிபட்டு வருமான்னா, அது இல்லை. நம்ம வேற பாப்போம்..” என, மௌனமாய் தலையை ஆட்டினான் மகன்.

ஆனால் வராவோ “ம்மா என்ன இது? எதுக்கு சரிபட்டு வராதுன்னு சொல்ற?” என்று கேட்க,

“ம்ம்ச் ஆயிரம் காரணம் இருக்கும். நமக்கு தகுந்த இடத்துல தான் சம்பந்தம் வைக்கணும். பெரிய கை இது. வேண்டாம்..” என்றார் உறுதியாய்.

“ம்மா என்னம்மா நீ?!” என்று தனா இடைபுக,

“இங்க பாரு டி.. அந்தம்மா கட்டுன புருசன பேர் சொல்லி கூப்பிடுது.. அந்த மருமக பொண்ணு, ஆன்ட்டின்னு சொல்லுது. ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம். அவங்க வசதிக்கு, இருக்கிற இடத்துக்கு அதெல்லாம் சரிவரும்.  அவங்க வழக்கம் அதுவா இருக்கலாம். அது நமக்கு வேணாம்..” என,

“எந்த காலத்துல ம்மா நீ இருக்க, நான் கூட தான் சில நேரம் சபரின்னு மாமாவ கூப்பிடுவேன். அது அங்க எல்லாருக்கும் தெரியும். அவ்வளோ ஏன் தனா கூடத்தான் சுபாஷ்னு கோவமா பேசுவா.. இதுக்கெல்லாம் தாத்தா பாட்டிங்க யாரும் ஒண்ணுமே சொன்னது இல்லை..” என்று வரா நொடிக்க, கண்களை உருட்டிப் பார்த்தார் மகாலட்சுமி.

“ம்மா நீ எப்படி முறைச்சாலும் இதான் நிஜம்.. காலம் எங்கயோ போயிட்டு இருக்கு. எனக்கு புரிஞ்சு போச்சு, கவிதாவோட அம்மா நல்லா படிச்சு வேலையில இருக்காங்க. அவங்களோட எப்படி சகஜமா பழக முடியும்னு நீ யோசிக்கிற. ஒரு வட்டத்துக்குள்ளயே நீ வாழ்ந்துட்ட , அதைவிட்டு வெளிய வர முடியல..” என்று இரு மகள்களும் மாறி மாறி பேச,

கண்ணதாசனோ  “ஷ்! எதுக்கு இவ்வளோ ஆர்கியுமென்ட்ஸ்?! என்னோட ப்ரோபைலும் தானே மேட்ரிமோனில இருக்கு. அவங்களும் பார்த்திருக்கலாம் தானே. இதுவரைக்கும் எதுவும் நமக்கு சாதகமா வந்ததா, இல்லையே.. அவங்களோட எதிர்பார்ப்பு எல்லாம் வேற அளவுல இருக்கும் க்கா..” என்று நிறுத்த, அவன் சொல்வது சரியெனப் பட, அத்தோடு இப்பேச்சிற்கு வீட்டினில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் சிறிது நேரத்திலேயே கடையில் இருந்து விநாயகம் அழைத்துவிட்டார் மகனை.

“ஒரே நேரத்துல ரெண்டு கடைலயும் ஆளுங்க வந்துட்டாங்க கண்ணா. நீ கொஞ்சம் வர்றியா?” என,

“சரிப்பா..” என்று எழுந்து சென்றவனுக்கு, ஒருவித இன்ப அதிர்ச்சி தான்.

பித்தளைப் பாத்திரக் கடையில் கவி, தாரணி மற்றும் சுஷ்மிதா மூவரும் நின்றிருந்தனர்.  விநாயகமும் அங்கேதான் இருந்தார். மகன் வரவைப் பார்த்ததுமே “கொஞ்சம் பார்த்துக்கோ கண்ணா.. அங்க பில்லு போட நான்தான் போகணும்..” என்று சொல்ல,

“ம்ம்..” என்றவனின் முகத்தினில் இருந்தே, அவன் எண்ணம் புரிய பதிலே பேசாமல் விநாயகம் நகர்ந்துவிட்டார்.

அதற்குள் தாரணி கடை ஊழியரிடம் என்ன வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்க, சுஷ்மிதா அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துகொள்ள, கவிதாஞ்சலியோ அம்மாவின் அருகே நின்றுகொண்டு, அங்கே கடையில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்களை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இவர்களுக்கு கொஞ்சம் தள்ளி நின்றிருந்த கண்ணதாசனுக்கு தான் இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது. இப்படி திடுமென இவளை நேரில் காண்போம் என்று யார் கண்டது.

‘இந்த அப்பாவ..’ என்று நொந்துகொண்டவன், எப்போதும் அமரும் இடத்தினில் அமர்ந்துகொள்ள, அவனின் பார்வையோ அவனின் பேச்சை எல்லாம் கேளாமல் கவிதாவின் மீதே பதிய, அவளெங்க இவனை கண்டுகொண்டாள்.

“ம்மா இங்க பாரேன் இதுமாதிரி இருக்கா கேளு..” என்று அவளது அலைபேசியில் எதையோ காட்ட,

“ம்ம்ச் பேசாம இரு கவி.. பொங்கல் பாத்திரம் மட்டும் பார்க்கலாம்..” என்றார் தாரணி.

கடை ஊழியரோ “நம்ம கடைல இல்லாத பொருளே இல்ல மேடம்.. புதுசா ஆன்லைன்ல இருக்க எல்லாமே இங்க கிடைக்கும்..” என்று வியாபார யுக்தியை காட்ட,

“இதுபோல இருக்கா?” என்று அவளின் அலைபேசியை அவரிடம் காட்டினாள் கவி.

“அட இதுவா.. இதெல்லாம் எப்பவோ இங்க இறக்குமதி பண்ணிட்டோம் ம்மா..” என்றவர் “தம்பி.. புதுசா ஒரு குடுவை பாட்டில் போல வந்திருக்குள்ள.. அதை கேக்குறாங்க..” என்று கண்ணனிடம் பேச,

“எடுத்துக் காட்டுங்க ண்ணா..” என்றான் கொஞ்சம் அவதிபட்டே.

அப்போதுதான் தாரணியும் இவன்பக்கம் திரும்பியவர் “அவங்க மகனா நீங்க?” என்று கேட்க,

“ஆமாங்க..” என்று தலையை ஆட்டினான் கண்ணதாசன்.

“அங்க வீட்ல சொன்னாங்க, இங்க பாத்திரமெல்லாம் நல்லா இருக்கும்னு. இப்போ பொங்கல் சர்வமே புது மாடல்ல வருதே. அது போல வாங்கணும்..” என்று தாரணி பேச,

கவிதாவோ “ம்மா நீ பொங்கல் வைக்க போறியா?” என்று கண்களை உருட்டி,  கேட்ட தினுசில், கண்ணதாசனுக்கு பக்கென சிரிப்பு வந்துவிட்டது.

ஆனாலும் வெகுவாய் அதனை அடக்கிக்கொண்டவனின் கண்கள் சுருங்க, இதழ்கள் கொஞ்சம் நடுங்கி நிற்க, அப்போதுதான் கவிதாஞ்சலி அவனை நேருக்கு என்ற கண்டாள்.

‘ஹேண்ட்சம்..’ என்று எண்ணாமல் இருக்க இயலவில்லை அவளால். நொடியில் அவனை முழுதுமாய் அலசிவிட்டால் கவிதாஞ்சலி.

வேகமாய் சுஷ்மிதாவின் காலை லேசாய் மிதித்தவள், அங்கே பார் என்று சைகை செய்ய, கண்ணதாசனைக் கண்ட சுஷ்மிதாவோ “ம்ம் ம்ம்..” என்று நாத்தனாருக்கு சிக்னல் கொடுக்க, அதற்குள் அவள் கேட்ட பொருளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார் ஊழியர்.