ஒரு சிறு பார்வை, சிறு தொடுகை, சிறு புன்னகை, சிறு நெருக்கம், துளி கண்ணீர் இதெல்லாம் கொண்டு ஏக்கம் பார்த்து, எப்போது எப்போது என்று காத்திருந்து, இவள் தான் என் மனைவியாகப் போகிறாள் என்று தெரிந்திருந்தும், இவ்வுணர்வுகளை எல்லாம் பரிட்சயம் கண்டு, பின்னே அனைத்தும் சொந்தமாகியும் கூட, போதாது போதாது என்பது போலான ஒரு வாழ்வு வேண்டும் என்பது தான் அவனின் விருப்பம்.
இதெல்லாம் சாத்தியப்படுமா என்பது அவனுக்குத் தெரியாது. ஆனாலும் சாத்தியப்படுத்த, அவனால் என்னென்ன செய்திட முடியும் என்பது தெரியும். வெளிப்பார்வைக்கு அவன் இலகுவாய் தோன்றினாலும், உள்ளுக்குள்ளே கொஞ்சம் அழுத்தக்காரன். இருபத்தி ஒன்பதை தொடப்போகும், இக்கால இளைஞன்.
அழகும், அறிவும், ஆண்மையும் கலந்த தோற்றம் தான் கண்ணதாசனுக்கு. தேவையற்ற கச்சடா பேச்சுக்கள் எல்லாம் இருக்காது. ஆனாலும் வீட்டினுள் கலகல பேர்வழி தான்.
அம்மாவின் மடியில், தலைசாய்த்து படுத்துக்கொண்டு டிவி பார்ப்பான். அக்காக்கள் வந்தால், இன்றளவும் அவர்களோடு வம்பளப்பான். மாமாக்கள் பேசினால், பதிலுக்கு கேலி கிண்டல் என்று தானும் பேசுவான். எல்லாமே இருக்கும். ஆனால், எல்லாமே ஒரு எல்லையில் இருக்கும்.
அது யார் கண்ணுக்கும் இன்றளவும் படவில்லை.
ஆம்.. அப்படித்தான் அவன்.
விநாயகம் மற்றும் மகாவின் குணாதியசங்களை, சரி விகிதத்தில் கலந்தால் எப்படி இருக்கும்?!
அப்படிப்பட்ட ஒருவன் தான் கண்ணதாசன்.
மும்பை வாழ்வு பெரிதாய் அவனுக்கு மனதினில் ஒட்டவில்லை. அதனால் சென்னைக்கு மாற்றிக்கொண்டான். ஆனால் வீட்டிலோ, அம்மாவும் அக்காக்களும், தங்களுக்காக மாற்றி வந்துவிட்டான் என்று மகிழ்ந்து கொண்டாடினர் இவனை.
அடுத்து சென்னை வேலையில், வீட்டிலிருந்தபடி வேலை செய்கிறாயா என்று கேட்டார்கள். வரவு செலவு கணக்கு பார்க்கையில், சரி என்றுதான் சொல்ல முடிந்தது. பின்னே சொந்த ஊரினில், சொந்த வீட்டினில் இருந்துகொண்டு, அம்மாவின் கையால் உண்டுகொண்டு வேலைப்பார்ப்பது என்பது கொடுப்பினை தானே.
மாற்றாலாகி வீடு வந்துவிட ‘அச்சோ.. எங்க பிள்ளை எங்களுக்காக வந்துட்டான்..’ என்று ஆர்பரித்தார் அம்மா.
அதையும் அமைதியாய் ஏற்றுக்கொண்டான் கண்ணதாசன்.
இதோ அவனுக்கு வாழ்வில் முக்கியமான ஒரு கட்டம். திருமணம்.. அதுகுறித்த ஏற்பாடுகள். யாரவள், எனக்கானவள்?!
இக்கேள்விக்கு அவனுக்கு விடை தெரியாது. பெண்களை கடந்திராதவன் இல்லை. ஆனால் பார்த்து ராசிப்பதோடு சரி. காதல் அது இதென்று எல்லாம் இறங்கியதில்லை. இறங்கும் அளவுக்கும் எதுவும் நடந்ததில்லை என்பதுதான் நிஜம்.
“ஏன்டா, நிஜமா ஒரு பொண்ண கூட நீ ப்ரொபோஸ் பண்ணது இல்லையா?” என்று அவனது நண்பர்களே கேட்டிருக்க,
“ப்ரொபோஸ் பண்ற அளவுக்கு, யாரும் என்னை இம்ப்ரஸ் பண்ணலை மச்சா..” என்று சமாளிப்பான்.
ஆனால் விதி வலியது என்பது நிஜம்தானே..
அவனுக்கான ஒருத்தியும் வரப்போகிறாள். காதலும் இருவருக்குமிடையில் நுழைந்துகொள்ளப் போகிறது. பின்னே என்ன கல்யாணம் தானே என்று கேட்டால் ‘அடடா.. அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?!’ என்று மீண்டும் விதி உள்ளாடும் போது, என்ன நடக்கும்?!
‘எனக்கும் தெரியலை.. என்ன நடக்கும்.. பொறுத்திருந்து பாப்போம்..’
இதோ குலசாமி கோவிலில் பூஜை முடித்து, கண்ணதாசனின் ஜாதகம் வைத்து கும்பிட்டும் வீட்டிற்கு வந்தாகிவிட்டது.
“குடும்பமா எல்லாரும் போயிட்டு வரணும்..” என்று மகாலட்சுமி சொல்லியிருக்க, விநாயகமும் தாங்கள் மூவர் தான் செல்வோம் என்று நினைத்திருக்க,
முதல் நாள் இரவு மகா கேட்ட “வண்டிக்கு பேசிட்டீங்களா?” என்ற கேள்வியில் தான் புரிந்தது, யார் யார் எல்லாம் கிளம்பி இருக்கிறார்கள் என்று.
இரண்டு மகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகள், அதுபோக இரண்டு சித்தப்பாக்கள், சித்திகள்..
ஒரு பெருமூச்சினை விட்டவர் “இதுக்குக் கூடவா மகா?” என்று அலுப்பாய் கேட்க,
“என்னங்க சொல்றீங்க மாமா? இருந்திருந்து நம்ம புள்ளைக்கு நல்லதுக்குன்னு ஒரு விஷயம் ஆரம்பிக்கிறோம். இவங்க எல்லாம் இல்லாமையா? சரி அவங்கள விடுங்க, நம்ம பொண்ணுங்களை விட்டுட்டு நம்ம போக முடியுமா? தம்பிங்களை கூப்பிடாம, பிள்ளைங்க வருவாங்களா? அப்படியே தம்பிங்கக் கிட்ட மட்டும் சொன்னா, சித்தப்பா சித்திங்க என்ன நினைப்பாங்க மாமா?” என்று கேட்டு வைக்க, வழக்கம் போல தலையை ஆட்டிக்கொண்டார் விநாயகம்.
விளைவு, ஒருநாள் சுற்றுலா போல ஆனது, குலசாமி கோவில் சென்று வந்தது. போகும் வழியில் ஹோட்டலில் உண்டுவிட்டு, கோவிலில் பூஜை முடித்து, மீண்டும் வரும்வழியில் காபி பலகாரம் என்று உண்டுவிட்டு, மதியம் வீடு வந்து சேர்ந்தால், யார் சமைப்பது?!
அத்தனை பேருக்கும் மீண்டும் கடையினில் வாங்கி, அப்படியும் உடனே யாரும் கிளம்பினார்களா?! இல்லையே.
விநாயகம் மட்டும்தான் கடைக்குச் சென்றார். மற்றவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒருபக்கம் படுத்து ஓய்வெடுக்க, மீண்டும் மாலை போண்டா பஜ்ஜி என்று வீடு களேபரம் கண்டு, இரவும் கூட்டாஞ்சோறு உண்டு தான், அனைவரும் இடத்தை காலி செய்தார்கள்.
விநாயகத்திற்கு இப்படி எடுத்ததற்கெல்லாம் கூட்டம் சேர்ப்பது பிடிக்காது. அளவாய் மனைவி, மகன், தான் என்று சென்று வந்திருந்தால், வேலை முடிந்திருக்கும். வண்டி பிடித்து, இத்தனை பேருக்கும் இரண்டு வேலை கடையில் வாங்கிக் கொடுத்து என்று அவருக்கு மூச்சு முட்டிப்போனது.
கண்ணதாசனும் செலவு செய்தான் தான். ஆனாலும் விநாயகம் மனதளவில் மிகவும் சோர்வாய் உணர்ந்தார். இன்றைய ஒரு தின செலவே கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் தொட்டது. இனி கண்ணதாசனின் திருமணம் முடியும் வரைக்கும், இதுவே அடிக்கடி தொடரும் என்பதும் அவருக்குப் புரிந்தது.
மகனிடம் புலம்பித் தள்ளிவிட்டார் மனிதர்.
மகாவோ “வர்ற மருமகளும், இப்படி நம்மளோட கலந்து இருந்துட்டா எத்தனை சந்தோசமா இருக்கும் மாமா?” என்று கேட்டு வைக்க,
“எப்படி, உன் பிறந்து வீட்டு ஆளுங்களை கூப்பிட்டு இத்தனை செலவு செய்ற. நானும் என் பங்குக்கு, எங்க வீட்லயும் கூட்டி உக்கார வைக்கிறேன்னு சொன்னா, என்ன செய்வ நீ?” என்று சட்டென கடிந்துவிட, மகாவின் முகமும் வாடிப்போனது.
“ப்பா என்னப்பா?!” என்று கண்ணதாசன் இடைபுக,
“விடு கண்ணா. பார்த்த தானே நீ.. எத்தனை செலவுன்னு.. இதுக்கே இப்படி? இனி எத்தனை இருக்கு? நான் நல்லபடியா, சந்தோசமா உன்னோட கல்யாணத்தை எடுத்துச் செய்யணும்னு நினைக்கிறேன். ஆனா எடுத்ததுமே இப்படி செலவுகளை கொண்டுவந்து நிறுத்தினா என்ன செய்றது? ஏன் கோவிலுக்கு நம்ம மூணு பேருமா போயிட்டு வந்தா ஆகாதா கண்ணா?” என்று அவரும் கேட்க,
“அப்பா விடுங்கப்பா. நீங்க டென்சன் ஆகிக்காதீங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என்று சொல்ல,
“அதெப்படி கண்ணா? உன் கல்யாணத்துக்கு உன்கிட்டயே காசு வாங்குறதா? பின்ன பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்..” என்று விநாயகம் வருந்த, மகா வாயே திறக்கவில்லை.
அவருக்குமே இன்றைய செலவில் கொஞ்சம் மனது பக்கென்று தான் ஆனது. பின்னே கடையில் உணவு வாங்கலாம் என்றதுமே, ஆளாளுக்கு ஒரு லிஸ்ட் போட்டுத் தானே வாங்கினார்கள். இரண்டு வேலை கடை உணவிற்கே பல ஆயிரங்கள் தாண்டிவிட, கணவரின் பேச்சினில் இருக்கும் நியாயம் கண்டு மௌனமாய் தான் நின்றார்.
“வாழ வர்றவ, யாரா இருந்தாலும் இந்த கூத்துக்கு எல்லாம், சம்மதிக்க மாட்டா மகா பார்த்துக்கோ. பொண்ணுங்க வாழ்க்கை வேற. அதைமட்டுமே பார்த்து, நீ இவன் வாழ்கையை கேள்விகுறி ஆக்கிடாத…” என்றவர், வெடுக்கென அறைக்குள் நுழைந்துகொண்டார்.
மகாவோ உள்ளிறங்கிய குரலில் “இத்தனை ஆகும்னு நான் நினைக்கல கண்ணா..” என்று பேச,
“ம்மா.. விடும்மா பார்த்துக்கலாம். ஆனா திரும்பவும் சொல்றேன் ம்மா. கல்யாணம் எல்லாம் சந்தோசமா பண்ண வேண்டியது. எதுவா இருந்தாலும் அப்பாவும் நீயும் உக்கார்ந்து பேசி முடிவு பண்ணுங்க. நம்ம வீட்டு விஷயம், நம்ம முடிவா இருக்கணும் ம்மா…” என, மகா தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார்.
ஆனால் மறுநாளே பெரியசித்தி அழைத்து “நான் சொன்னேன்ல மகா நாகப்பன் சகலை பொண்ணு. கண்ணன் அப்பாக்கிட்ட பேசுனியா?!” என்று கேட்க,
“அது சித்தி.. அது..” என்று மகா பதில் சொல்லும் முன்னமே,
“தெரியும் நீ இப்படித்தான் நாள் பார்த்து, நேரம் பார்த்து நிப்பன்னு. உங்க சித்தப்பாக்கிட்ட விஷயத்தை சொன்னேன். அவரே நாகப்பனை கூப்பிட்டு என்னன்னு பேசி, பொண்ணு ஜாதகம் போட்டோ எல்லாம் வாங்கிட்டாரு. அங்க வீட்டுக்குத் தான் வர்றோம்…” என்று அலைபேசியை வைக்க, மகாலட்சுமியோ விழித்து நின்றிருந்தார்.