சிலரின் பிறப்பு, வாழ்வு, அவர்களின் வாழ்க்கை லட்சியம், எல்லாமே குடும்பம் சார்ந்ததாய் இருக்கும். எக்காரணம் கொண்டும், குடும்பத்தின் அமைதியோ, கட்டமைப்போ, குடும்ப உறவுகளின் பிணைப்போ கேட்டுவிடக் கூடாது என்பதில், மிக மிக திண்ணமாய் இருப்பர்.
அப்படியொரு நபர் தான் மகாலட்சுமி. சரியாய் மகாவின் பதிமூன்றாவது வயதில் அப்பா அம்மா இல்லை. தாத்தா மற்றும் பாட்டியோடு, திருமணமாகாத சித்தப்பாக்களோடு, சில கால வாழ்வு. அதன்பிறகு ஒவ்வொரு சித்தப்பாவிற்கும் திருமணம் அடுத்தடுத்து நடக்க, சித்திகளின் புதுவரவு.
அதுநாள் வரைக்கும் வீட்டின் ஒரே பிள்ளை, செல்லப் பிள்ளை என்கிற கோதாவெல்லாம் சிறுக சிறுக காணாமல் போய், மகாவும் அவ்வீட்டின் பிள்ளை. அவ்வளவுதான். எப்போதும், மகாவின் மீது காட்டும் அன்பிற்கும், அக்கறைக்கும் அங்கே குறைவில்லை. ஆனால், தாத்தா பாட்டி இருக்கும் வரைக்கும், எல்லாமே சுமுகமாய் இருந்தது போல இருந்தது.
அவர்களின் காலத்தின் பின்னே, சித்திகள் சொல்வதை கேட்டால் நல்லது என்பதை, தானே புரிந்துகொண்டு நாட்களை கடத்தும் நிலை. விபரம் புரிந்த வயது என்பதால், தாத்தாவும் பாட்டியும் கூட நிறைய அறிவுரைகள் சொல்லியிருந்தார்கள். எப்படியெப்படி இருந்துகொள்ள வேண்டும் என்று.
வீட்டு நிலவரம், குடும்ப வரவுசெலவு, சொத்து விபரம் எல்லாமே மகாவிற்கு தெரியும்.
அதிலும் பாட்டியின் அறிவுரையான “இங்க பாரு கண்ணு, நீ ஒருத்தி தான் இருக்க. சித்தப்பனுங்க, சித்திங்க எல்லாம் நல்ல மாதிரி தான். ஆனாலும், சொத்து ஒண்ணா இருக்கிற வரைக்கும்தான், உனக்கு செய்வாங்க. உனக்கு கல்யாணமே ஆனாலும், போற வீட்ல அது இதுன்னு சொன்னாலும் கூட, எக்காரணம் கொண்டு நீ சொத்தை பிரிச்சு குடுன்னு கேட்டுடாத.
அதுக்காக நீ அப்படியே விட்டுக் கொடுக்கணும்னு இல்லை. காலம் எப்போ சூழ்ந்து வருதோ, சமயம் பார்த்து அப்போ கேளு. ஆனா கடைசி வரைக்கும் உனக்கு பிறந்த வீட்டு ஆளுங்க போக்குவரத்தும், பலமும் வேணும். நீ சொத்தை பிரிச்சுக் கொடுங்கன்னு கேட்டின்னா, அப்புறம் அதோட உனக்கு பிறந்த வீட்டு உறவுன்னு, எதுவும் இருக்காது.
பணம் காசு என்னிக்குனாலும் பார்த்துக்கலாம். ஆனா மக்க மனுசங்க நமக்கு வேணும். கடைசி வரைக்கும், உனக்கான துருப்புச் சீட்டு, உன் பங்கு சொத்து தான். அது அவங்க கைல இருக்க வரைக்கும், எப்பவுமே உனக்கு அவங்க பக்கபலமா வந்து நிப்பாங்க. எது ஒன்னுன்னாலும் எடுத்துக் கட்டி செய்வாங்க..” என்பதனை, இன்றளவும் மனதில் வைத்துக்கொண்டு, அதைப்பொருத்து தான் மகா நடந்துகொள்வது.
விநாயகத்திற்கு கூட இந்த ரகசியம் தெரியாது. மனைவி வெள்ளந்தியாய் பிறந்த வீட்டு ஆட்களை அனைத்திற்கும் நம்பிக்கொண்டு, தலையில் தூக்கிவைத்துக்கொண்டு அல்லாடுவதாய் தான் அவரின் எண்ணமெல்லாம். ஆனால் மனைவியின் மனதினில் இப்படியொரு எண்ணமிருக்கும் என்பதனை, இத்தனை ஆண்டுகளாய் அவரோடு வாழ்ந்தும் கூட அவரால் கணித்திட முடியவில்லை.
இருபது வயதில் திருமணம், அடுத்து ஏழாண்டுகளில் வரிசையாய் மூன்று பிள்ளைகள். மாமனார், மாமியார், குழந்தைகள் என்று மகாலட்சுமிக்கு புகுந்த வீட்டிலும் எக்குறையும் இல்லை. பிறந்த வீட்டு ஆட்களும் இன்றளவும் தாங்குகிறார்கள் தான்.
ஆனால், அதற்கு எல்லாம் அதிமுக்கிய காரணம் மகாலட்சுமி நடந்துகொள்ளும் முறை. தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, குடும்பத்திற்கு எது செய்தால், நன்மை என்பதனை பற்றி மட்டுமே யோசிக்கும் ரகம். விநாயகத்திற்கும், அவருக்குமான தனிப்பட்ட வாழ்வில் எவ்வித குறையும் இல்லை.
மனைவியின் சொல்லுக்கு என்றுமே அவர் முக்கியத்துவம் கொடுக்கும் நபர். ஆனால், என்னவொன்று பெண் பிள்ளைகளை பிடிவாதமாய், தம்பிகளுக்கு திருமணம் செய்து வைத்தது, இப்போதும் அவருக்கு அத்தனை பிடித்தமில்லை. ஒரே வட்டத்தில் தான் வாழ்வு செல்வது போல இருந்தது.
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதை தான்.
ஆனால் மகாவோ ‘இப்போ என்ன குறைச்சல் ஆகிட்டோம் மாமா? கண்ணுக்கு முன்ன நம்ம புள்ளைங்க வாழ்கையை பாக்குறோம். பாதுக்காப்பான இடத்துல, உரிமைப்பட்ட இடத்துல, நம்ம பொண்ணுங்க வாழறாங்க மாமா. நீங்க சொல்றது போல, வெளிய கட்டிக் குடித்திருந்தா, இப்படி இருந்திருக்குமா?
ஆளுக்கு ஒரு இடத்துல இருக்கணும் மாமா. நல்லது பொல்லதுன்னு நம்ம ரெண்டு பக்கமும் அலையணும் மாமா. இது அப்படியா, நினைச்சா அவங்க வர்றாங்க. நினைச்சா நம்ம போறோம் மாமா. வித்தியாசம் என்ன கிடக்கு? எங்கயோ போய் பிள்ளைங்கள குடுத்துட்டு, ஒவ்வொரு விசயத்துக்கும் சம்பந்திங்க முகத்தை பார்த்து நிற்கத் தேவையில்லை பாருங்க. இதுன்னா நானும் உரிமையா பேசி நடந்துக்குவேன்..’ என்று சொல்லிவிட்டார்.
மனைவி ஆணித்தரமாய் இப்படி சொல்லியபிறகு, விநாயகம் என்ன சொல்லிட முடியும்?!
மகனின் வாழ்வையாவது இக்காலத்திற்கு ஏற்ப, நல்லவழியில் அமைத்துக் கொடுக்க எண்ணினார். இந்த குடும்ப அரசியலில் எல்லாம் சிக்காமல், எப்போது பார்த்தாலும் கூட்டம் கூடிக்கொண்டு, சமைத்து உண்டுகொண்டு, கண்டதையும் பேசி, இதெல்லாம் இல்லாத மகனின் வாழ்வு ஒவ்வொரு படியாய் முன்னேறி, வாழ்வின் பல பரிமாணங்களை, அவன் துணையோடு சேர்ந்து காண வேண்டும் என்று ஆசை கொள்கிறார்.
விதி யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ யார் அறிவார்?!
“என்ன மகா, கண்ணனுக்கு ஜாதகம் விடப் போறீங்க போல?!” இது பெரிய சித்தி,
“பொண்ணு எப்படி வேணும்னு நினைக்கிற மகா?!” இது சின்ன சித்தி,
இருவரின் கேள்விக்கும் உடனே பதில் சொல்லாமல், ஒரு சிறு புன்னகையோடு ஆளுக்கொரு காபி டம்ப்ளரை கொடுத்துவிட்டு “என்ன சமையல் சித்தி வீட்ல?” என்றபடி, வந்தமர்ந்தார் மகாலட்சுமி.
சித்திக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “இப்போ அதுதானா டி முக்கியம்? நாங்க என்ன கேக்குறோம். நீயென்ன பதில் சொல்ற?“ என்று சொல்ல,
“அட… நீங்க கேட்ட கேள்விக்கு பதில், என்கிட்டே இருந்தா தானே சொல்ல?” என்று மீண்டும் சிரித்து வைத்தார் மகா.
“என்ன மகா இப்படி சொல்ற?!” என்று பெரிய சித்தி கேட்க,
“நிஜமா சித்தி. உங்களுக்குத் தெரியாம, உங்களுக்குச் சொல்லாம நாங்க என்ன செஞ்சிடப் போறோம். எனக்கு பிறந்த வீடு, சம்பந்தமும் பண்ணிருக்கேன். அதுவும் ரெண்டு..” என்று இரண்டு விரல்களை ஆட்டிச் சொன்னவர்,
“ஐப்பசி பிறக்கவும் ஜாதகம் விடணும்னு, மாமா சொன்னாங்க. ஆனா இன்னும் முடிவு பண்ணல. குலசாமி கோவிலுக்கு போயிட்டு வந்துதான் எதுவும்..” என்று பேச,
“ம்ம் அதெல்லாம் நம்ம கண்ணனுக்கு, நான் நீன்னு போட்டி போட்டுட்டு வருவாங்க பொண்ணு குடுக்க..” என்றார் சின்ன சித்தி.
“எது எப்படியோ, கடைசி வரைக்கும் நம்ம குடும்பம், நம்ம எல்லாம் இதேபோல ஒண்ணா, ஒத்துமையா இருந்தா போதும் சித்தி எனக்கு..” என்று மகா சொல்லவும்,
“ஆ.. இப்போதான் நியாபகம் வருது. நம்ம தெக்கு தெரு நாகப்பன் இருக்கான்ல. அட, கால் கூட கொஞ்சம் சாச்சு சாச்சு நடப்பான்ல..” என்று பெரியசித்தி ஆரம்பிக்க,
“யாருக்கா?! அவன் பொண்டாட்டி கூட தலைய ஆட்டி ஆட்டி பேசுவாளே?!” என்று கேட்டார் சின்ன சித்தி.
“ம்ம் அவங்களே தான்..” என்று ஓரகத்தியின் தொடையில் தட்டிய பெரியபெண்மணி “நீயும் கேளு மகா..” என்றவர் “அவனோட சகலை மகளுக்கு வரன் பாக்குறாங்க. பொண்ணெல்லாம் நல்லா அம்சமா தான் இருக்கு. நானும் கூட அன்னிக்கு கோவில்ல பாத்தேன்..” என்று சொல்ல,
“யாரு சித்தி? எந்த வகையறா?!” என்று கேட்டார் மகா.
“அவங்க என்ன வகைன்னு எல்லாம் தெரியாது. அன்னிக்கு கடைக்கு போயிருந்தப்போ, நாகப்பன் போன்ல பேசிட்டிருந்தான். மறுநாளே நான் கோவில் போனப்போ, அவன் பொண்டாட்டி கூட அந்த பொண்ணும் வந்திருந்துச்சு. நல்லா இருக்கு. நம்ம கண்ணனுக்கு பொருத்தமா இருக்கும்..”
“ம்ம் அவர் வரட்டும் சித்தி சொல்லிப் பாக்குறேன். நீங்களும் விசாரிங்க..” என்றுவிட்டார் மகாலட்சுமி.
அதன்பிறகு அதை இதை என்று கதை பேசி, இரண்டு சித்திகளும் கிளம்பிச் செல்கையில் மதியமே தொட்டிருக்க, வேலையில் அமர்ந்திருந்த மகனுக்கு, ஆரஞ்சு பழத்தை பிழிந்து, சாறு எடுத்துக்கொண்டு போய் கொடுக்க “தேங்க்ஸ் ம்மா..” என்று சொல்லி வாங்கிக்கொண்டான் கண்ணாதாசன்.
“கண்ணா..“ என்றபடி மெதுவாய் அவனின் தலை கோதிவிட்டவர் “உனக்கு நல்லபடியா, ஒரு வாழ்க்கை அமைச்சுக் குடுத்துட்டா போதும்டா..” என,
“இப்போ எதுக்கும்மா, உன் முகம் இத்தனை டென்சனா இருக்கு?” என்று கேட்டு வைத்தான்.
“டென்சன் எல்லாம் இல்லை கண்ணா. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு ஒரு பயம். அவ்வளோதான்..“
“ம்மா, கல்யாணம் எல்லாம் சந்தோசமா செய்றது. இப்படி பயந்து பயந்து பண்றதில்லை..” என்ற மகனின் ஒரு அழுத்தப் பார்வையில், சட்டென பாவனையை மாற்றிக்கொண்டார் மகாலட்சுமி.
“ம்மா எதையும் அவசரப்பட்டுக்க வேணாம். முதல்ல அப்பா, நீ, நான் உக்கார்ந்து கலந்து பேசி முடிவு பண்ணிக்கலாம். எப்படி, எங்க, எந்த பக்கம் பொண்ணு பார்க்கணும்னு. அதைவிட்டு அவங்க சொல்றது இவங்க சொல்றதுன்னு எல்லாம் கேட்டு, தலையில போட்டுக்கிட்டு நமக்குள்ள அடுத்து சண்டையாகிட கூடாது..” என்ற மகனை, கொஞ்சம் புருவம் உயர்த்திப் பார்த்தார் மகாலட்சுமி.
“என்ன கண்ணா, நீயும் உங்கப்பா மாதிரியே பேசுற? பாட்டிங்க யாருடா நமக்கு? அவங்க நமக்கு தப்பா சொல்லிடுவாங்களா? விசாரிக்கிறதுல என்ன இருக்கு கண்ணா?” என்று படபடக்க,
“இதோ.. இதைத்தான் ம்மா சொன்னேன். அவங்க வந்து ஒரு விஷயத்தை சொல்லிட்டு போயிடுறாங்க. ஆனா அதையே பிடிச்சிட்டு நீ யோசிக்கிற. இதுதான் வேணாம்னு சொல்றேன். அப்பா கூட பேசு. சந்தோசமா எனக்கு கல்யாணம் பண்ணி வைம்மா..” என்று கண் சிமிட்டி சிரித்த மகனைக் கண்டு, அப்படியே உள்ளம் குளிர்ந்து போனது மகாலட்சுமிக்கு.
“என் மகனுக்கு என்ன குறை? ராஜாவாட்டம் இருக்கான். நீவேனா பாரேன், வர்றவ உன் சொல்லுக்கு மயங்கி நிப்பா..” என்று சிரிக்க,
“அதுசரி. பதிலுக்கு நானும் அவளுக்கு மயங்கிட்டா, நீ கோபப்படக் கூடாதும்மா..” என்று சொல்லி, ஆர்ப்பாட்டமாய் சிரித்த மகனை
“போக்கிரி டா நீ..” என்று சொல்லி முதுகில் தட்டிவிட்டு போனார்.
கண்ணதாசனுக்கு இன்னமும் முகத்தினில் இருந்த முறுவல் மாறவில்லை. மறையவில்லை. ஆனாலும் உள்ளுக்குள் அப்பாவின் வார்த்தைகள் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. அம்மாவின் எண்ணப்போக்கும் விருப்பங்களும் அவனுக்குத் தெரியும்.
அதுபோல அப்பாவின் எண்ணங்களும், தவறில்லை என்கிற மனப்பான்மை தான் அவனுக்கு. அதற்காக குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்லவேண்டும். தனியே போய் ஒரு வாழ்வு வாழவேண்டும், என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை.
திருமணம் என்பது, இதை வைத்தெல்லாம் முடிவு செய்வதில்லை என்பது அவன் கருத்து. பெற்றவர்கள் பார்த்தே முடிக்கும் திருமணம் என்றாலும், அவனுக்குப் பிடிக்கவேண்டும். இவள் எனக்கானவள் என்கிற எண்ணம் ஆணித்தரமாய் மனதில் விழுந்து, அவனை ஒருநொடியேனும் உலுக்கி எடுத்திடவேண்டும்.