சொத்தினை பிரித்தால், மூன்றில் ஒரு பங்கினை அப்படியே மகாவிற்கு தூக்கிக் கொடுக்கவேண்டும் என்று இன்றளவும் சித்தப்பாக்கள் சொத்தை பிரிக்கவே இல்லை. மாறாக அண்ணன் மகளாய் அன்பாய், பண்பாய் பாசமாய் வளர்த்தாலும், அடிப்படை காரணமும் இருக்கவே செய்தது.
மகாவிற்கும் மற்றது எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. தன்னை எவ்வித குறையும் இல்லாமல் வளர்த்து, திருமணம் செய்து, இன்றளவு தங்களின் அனைத்து நல்லது கெட்டதிலும் வந்து நிற்கும் சித்தப்பாக்கள் என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு.
சித்திகளாய் வந்தவர்களும் அப்படித்தான்.
“எங்களுக்கு என்ன பொம்பள புள்ளயா மகா. நீ மூத்தார் பொண்ணுதான். ஆனா எங்களுக்கும் நீதான் மக. எங்களுக்கு ஒண்ணுன்னா, எல்லாமே நீதான் பார்த்து செய்யணும்..” என்று பேசி பேசியே, மகாவை இன்றளவும் தங்களின் கைக்குள் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் மகாலட்சுமியோ அனைத்தும் அறிந்து தான் வைத்திருந்தார். யார் யார் எப்படி, எங்கே எப்படி புத்தி மாறி பேசுவார்கள், எங்கே தன்னை தாங்கிப் பிடிப்பார்கள் என்றெல்லாம் எண்ணியிருந்தவர், வேறொரு கணக்குப் போட்டுவிட்டார். சித்தப்பாக்களுக்கு ஆளுக்கு ஒரு ஆண் பிள்ளை. தனக்கோ அடுத்தடுத்து இரண்டும் பெண் பிள்ளை.
சொத்தை பிரித்துக் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன, நாளைக்கு அதெல்லாம் என் பிள்ளைகளுக்குத்தான் என்று கணக்கு போட்டு, தம்பிகளுக்கு வெளியில் சம்பந்தம் பார்க்கக் கூட அவகாசம் தரவில்லை.
“அதென்ன சித்தி, மக மகன்னு என்னை சொல்றீங்க? நான் தங்கமாட்டம் ரெண்டு பிள்ளை பெத்து வச்சிருக்கேன். என் தம்பிங்களுக்கு குடுக்க மாட்டேன்னு சொல்வேனா என்ன?” என்று பேச,
“இல்ல வயசு வித்தியாசம்..” என்று தயக்கமாய் இழுத்த இரண்டாவது சித்தியிடம்,
“என்ன பெருசா வயசு வித்தியாசம். மூத்தவனுக்கும், வராக்கும் ஏழு வருஷம். சின்னவனுக்கும் தானாக்கும், ஆறு வருஷம். அம்புட்டு தானே…” என்று முடித்துவிட்டார்.
அவர்களுக்கு அத்தனை ஒன்றும் விருப்பமில்லை என்பது புரிந்து, விநாயகமும் தன் மாமாக்களிடம் “மகா புரியாம பேசுதுங்க மாமா. இப்போ என்ன, உங்களுக்கு வெளிய பார்க்கணும்னா பாருங்க. ஆனா பாருங்க மாமா, இப்போ வரைக்கும் நம்ம எல்லாம் ஒரேதா பழகிட்டோம்.
இப்போ வெளிய சம்பந்தம்னா, வெளியாளுங்க போக்கு வரத்து இருக்கும். அங்க நாங்க தள்ளித்தான் நிக்கணும். ஆனா என்ன இருந்தாலும் அங்க மகாவுக்கும் உரிமை இருக்கு, பங்கிருக்கு. அவளோடத்தை அவளுக்கு குடுத்துடுங்க.. நாங்களும் கௌரவமா வந்து போவோம்..” என்று வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றிட, அடுத்தது என்ன, அடுத்தடுத்த வருடத்தில் வரிசையாய் இரு திருமணங்களும் நடந்தேறியது.
“எங்க பேத்திங்கள, மருமகளா கொண்டு போக எங்களுக்கு என்ன கசக்குமா என்ன? ஒவ்வொன்னும் தங்க குடம் போல இருக்குதுங்க. வெளிய பார்த்தாலும், இப்படி கிடைக்குமா என்ன? இந்தக்காலத்து புள்ளைங்க, வேறெதுவும் மனசுல யோசிக்குதுங்களோன்னு ஒரு தயக்கம்.. அவ்வளோதான்..” என்ற பெரிய சித்தியிடம் ஒரு சிரிப்பினை மட்டும் பதிலாய் கொடுத்துவிட்டார் மகாலட்சுமி.
ஆனாலும், வெளியில் சம்பந்தம் செய்திருந்தால் எப்படியோ, அதைவிட ஒருபடி இப்போது வரைக்கும் அதிகமாய் எல்லாம் செய்துகொண்டு இருக்கிறார்கள். சொந்தமோடு சேர்ந்து இப்போது உரிமையும் கூடிப்போனது அல்லவா. ஆனால் இப்போதெல்லாம் அதிகப்படியான செலவுகள் கண்டு விநாயகம் கொஞ்சம் வருந்தினார் தான்.
பெண் பிள்ளைகளுக்கு செய்து செய்து, கடைசியில் மகனை ஒன்றுமில்லாமல் நிறுத்திவிடக் கூடாதே என்பது தான் அவரது தலையாய கவலையாய் இருந்தது இப்போது.
அதனைக்கொண்டே மகன் வரவும், அவனிடம் இதுதான் தனியே பேச சரியான சந்தர்பம் என்று, அவனது எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ள, பேச்சினை ஆரம்பித்தார் மனிதர். அவர் எண்ணியது போல மகனும் குடும்பத்தை முன்னிறுத்தி பேச, கொஞ்சம் வருத்தமாய் இருந்தது அவருக்கு.
ஆனால் கண்ணதாசனோ “ப்பா.. ரெண்டு கடை இருக்கு. நீங்க இன்னமும் தொழில் பண்றீங்க. அக்காக்களை செட்டில் பண்ணியாச்சு. அவங்கவங்க வாழ்கையை அவங்க பார்த்துட்டு இருக்காங்க. நானும் நல்லாவே சம்பாதிக்கிறேன். என் பொண்டாட்டி பிள்ளைகளோட, என் அப்பா அம்மாவையும் பார்த்துக்கிட்டு ஒண்ணா இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்புப்பா?” என்று கேட்க,
“தப்பே இல்லை கண்ணா..” என்றவர்,
“ஆனா கொஞ்ச காலம், உனக்கே உனக்கான வாழ்கையை, நீ வாழணும்னு நான் ஆசைப்படுறேன்..” என்று சொல்ல, கண்ணதாசன் கேள்வியாய் அவரைப் பார்த்து வைத்தான்.
“படிச்சு வேலையில இருக்கிற, சம்பாரிக்கிற பொண்ணத்தான் உனக்கு பார்க்கனும்னு நான் நினைக்கிறேன் கண்ணா. இரு இரு.. நான் சொல்லி முடிச்சிடுறேன்..” என்றவர், உண்ட பாத்திரங்களை எல்லாம் ஒதுங்கு செய்து எடுத்து வைத்துவிட்டு, சாவகாசமாய் ஒரு பக்கம் அமர்ந்துகொண்டார்.
சில நொடிகள் எதுவும் பேசவில்லை. அவரே ஆரம்பிக்கட்டும் என்று இருந்தவனும், இன்னொரு பக்கம் அமர்ந்துகொள்ள
ஒரு பெருமூச்சினை வெளியிட்டு “அப்பாக்கு இன்னும் எத்தனை நாளைக்கு ஓட முடியும் கண்ணா? இப்போ இருக்க விலைவாசிக்கு, வீட்ல புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேருமே சம்பாரிச்சாதான், நம்ம புள்ளைங்களுக்கு ஓரளவு நல்ல வசதியான வாழ்கையை அமைச்சுக் கொடுக்க முடியும்.
எனக்கு தொழில் தலைமுறையா வந்தது. விட்டுடக் கூடாதுன்னு இழுத்து பிடிச்சு பார்த்துட்டு இருக்கேன். என் கை முதலீடுன்னு எதுவுமே இல்லை. இதுவே காலத்துக்கும் போதுமான்னா, கண்டிப்பா முடியாது. சூழ்நிலை எப்படிவேனாலும் மாறும். திடீர்னு எனக்கோ, அம்மாக்கோ ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது?” என்று கேட்டு நிறுத்த,
“ப்பா..” என்றான் கண்டனமாய்.
“எல்லாமே யோசிக்கணும் கண்ணா. அப்பா உன் நல்லதுக்கு தான் சொல்றேன். உன் வாழ்க்கைல நீ சௌகர்யமா இருக்கணும்னா, சம்பாரிக்கிற பொண்ண கட்டு. ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்க்கைல ஒவ்வொரு அடியா எடுத்து வைங்க. ரெண்டு பக்க பெத்தவங்களுக்கும் செய்ங்க. கலந்து பேசி, ரெண்டுபேருமே சேர்ந்து முதலீடு செய்ங்க. இடம் வாங்குங்க, வீடு கட்டுங்க. டூர் போங்க.. பிள்ளைங்களுக்கு சேர்த்து வைங்க. சந்தோசமா இருங்க.. குடும்பத்துல ரெண்டுபேர் கையும் ஒண்ணா இருக்கட்டும். வாழ்க்கை நல்லா இருக்கும் கண்ணா..” என, ஓரளவு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்கு புரிந்துபோனது.
ஒருவருட மும்பை வாழ்வும், நான்குவருட சென்னை வாழ்வும் அவனுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்து இருந்தது நிஜம். என்ன, அதனை எல்லாம் எண்ணிப்பார்த்து வாழவேண்டிய சூழல் இங்கே அமையவில்லை. மூன்று வேளையும், அம்மா கையால் வீட்டு சாப்பாடு, நினைத்த நேரத்தில் சொந்தங்களை பார்த்துக்கொள்ளலாம், சொந்த வீடு.. சொந்த ஊரு என்று
‘சொர்கமே என்றாலும்.. நம்மூரைப் போல வருமா..’ என்று பாடத குறைதான் கண்ணதாசனுக்கு.
ஆனால் திருமணம் என்று வருகையில், அப்பாவின் பேச்சு வேறொரு திசையைக் காட்ட, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதுவும் சரிதான் என்று தோன்றியது.
“சரிப்பா பார்த்துக்கலாம்..” என்றவன் மீண்டும் வீடு வந்து சேர்ந்திட, மதிய உணவு வேளை முடிந்து, அவன் மீண்டும் வேலையில் அமரும் நேரமும் வந்திருந்தது.
“கண்ணா, அப்பா என்ன சொன்னாரு?” என்று கேட்டபடி தான் மகாலட்சுமி, மகனிடம் பையை வாங்கினார்.
“ஒன்னும் சொல்லல ம்மா. ஏன் என்னாச்சு?” என்று ஒன்றுமே நடக்காதது போல மகன் கேட்க,
“இல்ல.. சும்மாதான். போயி நேரமாச்சே. அதான் கேட்டேன்..” என்றவர் உள்ளே சென்றுவிட, அவனுக்குத் தெரியும் எங்கே எப்போது எதை சொல்லவேண்டும், சொல்லக் கூடாது என்று.
அப்பா பேசியதை எல்லாம் சொன்னால், அவ்வளோதான் அம்மா நேரே கடைக்கு சென்றே அப்பாவோடு சண்டை பிடித்து வந்துவிடுவார் என்பது நன்கு அறிந்திருந்தான் மகன்.
“என்ன கண்ணா ரசம் மிச்சம் வச்சிருக்கார் அப்பா. குடிக்க சொல்லிருக்கலாம் தானே..” என்று உள்ளிருந்து மீண்டும் மகா வர,
“நீ நிறைய குடுத்துட்டம்மா. அப்பா எப்பவும் ஊத்திக்கிற அளவு தான் எடுத்தாரு..” என்ற மகனை நின்று பார்த்தவர்
“கண்ணா, ஐப்பசி பொறக்கவும் பொண்ணு பார்க்கணும் உனக்கு..” என்றார் மெல்லிய குரலில்.
“ம்ம் பாருங்க..” என்றவனுக்கோ முகத்தில் ஒரு இளநகை.
“அக்காக்களை கல்யாணம் கட்டி குடுக்கிறப்போ எல்லாம், ஒரு பயமும் இல்ல கண்ணா. இங்கன தானே, நம்ப தம்பிங்கதானேன்னு தைரியமா இருந்தது. ஆனா இப்போ, பக்கு பக்குன்னு இருக்குடா..” என்ற அம்மாவின் பேச்சைக் கேட்டு, இன்னும் சிரிப்பு கூட,
“சரிம்மா அதுக்கு என்ன செய்யலாம்?!” என்று கேட்டு வைக்க,
“நல்லா யோசிச்சு தான் சொல்றேன் கண்ணா.. நம்ம சுத்துபட்டுல, ஓரளவு படிச்சு, நல்ல குடும்பமா இருந்தா போதும். கைக்கு அடக்கமா வீட்ல நம்மோட இருக்கிற பொண்ணா இருந்தா சந்தோசம் தானேடா கண்ணா. நானெல்லாம் உங்கப்பா சம்பாரிப்பு வச்சு உங்களை ஆளாக்கலையா.
மகன், மருமக, மகளுங்க குடும்பம், பேரப்பிள்ளைங்கன்னு எங்களுக்கு எல்லாரையும் ஒரே இடத்துல வச்சு பார்க்க ஆசை இருக்கும்ல. அதுனால இங்கனயே நமக்கு சொந்தபந்ததுலயோ, இல்லை சுத்துப்பட்டு ஊருலயோ இருக்க பொண்ணா பாப்போம்..” என, கண்ணதாசனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.