அவர் சொல்வது உண்மை தானே? என்ன இருந்தாலும் அவள் ஆதியின் மனைவியாயிற்றே. ஆதியின் சரி பாதியாக தானே அவளைப் பார்த்திருக்க வேண்டும் என்று எண்ணியவள் “தப்பு தாங்க. நான் பாத்துருந்துருக்கணும். என்னை மன்னிச்சிருங்க”, என்றவள் “மதி மா நீயும் என்னை மன்னிச்சிரு டா”, என்றாள்.

     “ஐயோ என்ன அத்தை இதெல்லாம்? நீங்க போய் என் கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு?”, என்றாள் மதி.

     “அதை விடுங்க. இப்ப நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு”, என்றார் சேதுராமன்.

     “அவ வேலைக்கு போகணும்னு சொன்னதுனால அவளுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்? ஒரு ஸ்கூல் கட்டிக் கொடுக்கலாமான்னு யோசிச்சேன். அப்ப தான் இந்த கல்விக் குழுமத்தை விக்கப் போறதா தகவல் வந்துச்சு. அதனால வாங்கிட்டேன்”, என்று அவர் சொல்ல விழி விரிய அவரைப் பார்த்தாள் மதி.

     தனக்காக வாங்கி இருக்கிறார்களா? ஆனாலும் அவள் இதில் என்ன செய்ய முடியும் என்று புரிய வில்லை. கல்லூரியில் எப்படி அவளால் வகுப்பு எடுக்க முடியும் என்று எண்ணினாள்.

     “இவளுக்காக காலேஜா? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?”, என்று கேட்டார் பார்வதி.

     “இவளா? அம்மா என்ன பேசுறீங்க? எத்தனை தடவை உங்களுக்கு சொல்றது? மதி ஆதியோட மனைவி. இந்த வீட்டோட மூத்த மருமக. உங்களுக்கு அப்புறம் எப்படி தமயந்தியோ அதே மாதிரி அவளுக்கு அப்புறம் வான்மதி தான் இந்த வீட்டுக்கு”

     “அப்படின்னா எங்களை மாதிரி வீட்டை பாத்துக்கிட்டு கிடக்கணும்? எதுக்கு வேலைக்கு போகணும்? இவ வேலைக்கு போனா நம்மளை எல்லாம் மதிக்கவே மாட்டா”

     “ஏன் மா அப்படி? நான் அப்படி நினைச்சா என் பொண்ணை டாக்டருக்கு படிக்க வச்சிருப்பேனா? பொண்ணுங்க வேலைக்கு போகணும். ஆனா என்னோட மருமக யாருக்கிட்டயும் கை கட்டி வேலை பாக்க கூடாது. அதான் அன்னைக்கு அப்படிச் சொன்னேன். இப்ப தனியா எல்லாம் சமாளிக்கிறது கஷ்டம் தான். ஆனா நந்தினி படிச்சு முடிச்சு வர வரைக்கும் வான்மதி தான் எல்லாம் பாத்துக்க வேண்டியதா இருக்கும்”

     “நானா? நான் எப்படி?”, என்று குழப்பமாக கேட்டாள் மதி.

     “உன்னால முடியும் மா?”

     “இல்லை, நான் கேட்டது டீச்சர் வேலை”

      “இந்த குழுமத்துல பள்ளிக்கூடம், ஆர்ட்ஸ் காலேஜ், மெடிக்கல் காலேஜ், இன்ஜினியரிங் காலேஜ், ஒரு ஆஸ்பத்திரி, ஒரு டீச்சர் டிரெயினிங்க் காலேஜ், அப்புறம் தொழிற்கல்வி படிக்கிற காலேஜும் இருக்கு. இனி எல்லாம் நம்மளோடது தான். நிர்வாகம் மட்டும் தான் கை மாறிருக்கு. ஸ்டாப் யாரும் மாறலை”

     “என்னது இவ்வளவும் இருக்கா? இதுக்கு ஏது டா பணம்?”, என்று கேட்டார் சேதுராமன்.

     “நம்ம கம்பெனில இருந்து எடுத்தது கொஞ்சம் பா. அப்புறம் மீதி எல்லாம் லோன் தான்”

     “என்னது லோனா? கடன் எல்லாம் நாம வாங்கினது இல்லையே டா? கோடிக் கணக்குல கட்ட வேண்டியது இருக்குமே?”

     “எல்லாமே பழகிக்கணும் பா. என்ன லோன் வந்தாலும் நம்ம கிட்ட பிஸ்னஸ் இருக்கு. என் பசங்க இருக்காங்க. கண்டிப்பா அடைச்சிறலாம்”, என்றார்.

     அனைவரும் திகைத்து போய் அமைதியாக இருக்க “இங்க பாரு மா மதி. இனி இந்த இன்ஸ்டிடியூசன் உன்னோட பொறுப்பு. நீ பள்ளிக்கூடத்துல விருப்பம் இருந்தா பாடம் எடுத்துக்கோ. அங்க என்ன முடிவு எடுக்கணுமோ அதை நீ தான் எடுக்கணும். என்ன சந்தேகம் வந்தாலும் ஆதி கிட்ட கேட்டுக்கோ. நந்தினி படிச்சு முடிச்சு வந்த உடனே ஆஸ்பத்திரியும் மெடிக்கல் காலேஜும் அவ பாத்துக்குவா. அது வரை ஆதியும் செழியனும் உனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க”

     “நல்லா இருக்குப்பா, ரொம்ப நல்லா இருக்கு. ஒருத்தி வேற வீட்ல இருந்து நம்ம வீட்டுக்கு வந்துருக்கா. இன்னொருத்தி வேற வீட்டுக்கு போகப் போறா. ரெண்டு பேருக்கும் நகையை வாங்கிக் கொடுத்து வீட்டோட வைப்பியா? அதை விட்டுட்டு சொத்தை எழுதிக் கொடுக்குற? அப்ப என் பேரனுங்களுக்கு என்ன இருக்கும்? இந்த பொண்ணுக்கு கொடுக்குறது ஆதிக்கு தான் போகும். மத்த ரெண்டு பசங்க என்ன பண்ணுவாங்க?”, என்று கேட்டாள் பார்வதி.

     “அம்மா இப்பவே என் பசங்களுக்கு இடையிலே சிண்டு முடிஞ்சு விடுறீங்களா? ஸ்கூல், ஆர்ட்ஸ் காலேஜ் இரண்டையும் மதி பாத்துக்குவா. இன்ஜினியரிங் காலேஜ் விக்கி பாத்துக்குவான். தொழிற்நுற்ப கல்லூரியும் டீச்சர் டிரெயினிங்க் கல்லூரியும் செழியன் பொறுப்பு. மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி ரெண்டையும் நந்தினி பாத்துக்குவா. ஆனா விக்கியும் நந்தினியும் படிச்சு முடிச்சு வர வரைக்கும் மதி தான் பாத்துக்கணும். மதி கூட செழியனும் ஆதியும் இருப்பாங்க. அப்புறம் என் மூணு பசங்களுக்கும் நம்ம தொழில்கள் இருக்கு. அதை பிரிச்சு கொடுத்துருவேன். அப்புறம் எல்லாத்தையும் விட ஆதிக்கு அதிகம் போக தான் செய்யும். ஏன்னா அது அவனோட அஞ்சு வருஷ உழைப்பு. அவன் தான் நிறைய லாபம் கொண்டு வந்து தொழிலை முன்னேத்திருக்கான். அவன் கேக்காமலே அவனுக்கு நிறைய செய்ய தான் செய்வேன். அதை யாரும் கேக்க கூடாது. ஆதி கிட்ட மத்த ரெண்டு தம்பிகளும் கணக்கு கேக்க மாட்டாங்கன்னு நம்புறேன்”, என்றவர் இருவரையும் ஒரு பார்வை பார்த்தார்.

     “நாங்க அண்ணா கிட்ட எதுவுமே எப்பவுமே கேக்க மாட்டோம் பா”, என்றான் விக்கி. “ஆமா பா”, என்றான் செழியன்.

     “மாமா நான் டீச்சர் வேலைக்கு போகணும்னு தான் சொன்னேன். இப்படி மேனேஜ்மெண்ட் பாக்க சொல்லுவீங்கன்னு எதிர் பார்க்கலை. இது ஏதோ பெரிய பொறுப்பா இருக்குற மாதிரி இருக்கு. வேணும்னா ஸ்கூல் மட்டும் பாத்துக்குறேனே?”, என்று கேட்டாள் மதி.

     “உன்னோட திறமைக்குன்னு அளவுகோல் எல்லாம் கிடையாது மா. இந்த கல்விக்குழுமம் ஒரே இடத்துல தான் இருக்கு. இதே கோவைல பல ஏக்கர் பரப்பளவுல விரிஞ்சு இருக்கு. அதனால உன்னால முடியும். உன் புருஷன் உனக்கு துணைக்கு இருப்பான். அப்புறம் நந்தினி படிச்சு முடிச்சு வர வரைக்கும் மெடிக்கல் காலேஜையும் ஆஸ்பத்திரியையும் நீ தான் பாத்துக்கணும். இது என்னோட பொண்ணுக்காக என்னோட வேண்டுகோள்”

     “நான் கண்டிப்பா பாத்துக்குறேன் மாமா. அப்புறம் தேங்க்ஸ்”

     “சரி மா, நாளைக்கே போய் பொறுப்பேத்துக்கோ. ஆதி உன் கூட வருவான். நான் மேனேஜர் கிட்ட சொல்லி மீட்டிங் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்”, என்று சொன்னவர் அவள் தலையாட்டியதும் அங்கிருந்து எழுந்து சென்றார். பின் ஒரு நொடி நின்றவர் “மதி”, என்று அழைத்தார்.

     “என்ன மாமா?”

     “நீ எப்பவும் நேருக்கு நேர் பேசுறவ தானே மா? இத்தனை நாள் இந்த வீட்ல உள்ளவங்க உன்னை கஷ்டப் படுத்திருக்காங்க. நீ அவங்க கிட்ட அதுக்கு சண்டை போட்டுருக்க வேண்டியது தானே? இல்லைன்னா உன் புருஷன் கிட்ட சொல்லிருக்கணும் தானே? ஏன் சொல்லலை?”

     “கம்ப்லைண்ட் பண்ணுற அளவுக்கு இது பெரிய விஷயமா தெரியலை மாமா. நீங்க தப்பில்லைன்னு சொன்னாலும் நான் அன்னைக்கு பேசினது தப்பு தான் மாமா. அதான் அத்தைக்கு என் மேல வருத்தம். எனக்கு அது கஷ்டமா தெரியலை. அதுல உங்க மேல அத்தை வச்சிருக்குற காதல் தான் தெரிஞ்சது”, என்று சொல்ல அனைவரும் அவள் பேச்சை வாயைப் பிளந்து கொண்டு பார்த்தார்கள்.

     “ஹா ஹா”, என்று சிரித்த ராயர் “தமா கேட்டுக்கோ டி. என் மனசுல உள்ளதை என் மருமக பிட்டு பிட்டு வைக்கிறா”, என்றார். தமயந்தி வெட்கப் பட அப்பா இப்படி எல்லாம் பேசுவாங்களா என்று எண்ணி பிள்ளைகள் வியப்படைந்தார்கள். உண்மையைச் சொல்லப் போனால் ராயர் சிரிப்பதை அவர்கள் பார்ப்பதே அரிது தான்.

     “உண்மை தான் மாமா. அத்தைக்கு உங்க மேல உண்மையிலே அவ்வளவு லவ் மாமா. முன்னாடி எனக்கு அது மடத்தனமா பட்டது. ஆனா இப்ப என்னால அதை உணர முடியுது. நமக்கு பிடிச்சவங்களை வேற யாரும் திட்டினா அதை நம்மளால பாத்துட்டு இருக்க முடியாது”, என்றவள் ஆதியை அடி கண்ணால் பார்க்க அவனோ போனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

     “இவன் என்ன பீசு டா. என்ன நடந்தாலும் கல்லு மாதிரி இருக்கான்”, என்று தான் தோன்றியது அவளுக்கு.

     “பெரிய விஷயங்களை கூட சின்ன விஷயமா பாஸிட்டிவா பாக்குற உன்னால கண்டிப்பா இந்த கல்விகுழுமத்தை பாத்துக்க முடியும் மா. எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்புறம் ஆதி உன் பக்கம் இருக்கும் போது நீ கண்டிப்பா சாதிப்ப. நல்லா இரு”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

     ராயர் அங்கிருந்து சென்றதும் ஒரு மயான அமைதி அங்கே நிலவ “ரொம்ப ஆடாத. இது எதுவும் நிரந்தரம் இல்லை. கண்டிப்பா இதை உன் கிட்ட இருந்து புடுங்குவேன். எங்க வீட்டு சொத்தை எல்லாம் உனக்கு விட்டுக் கொடுக்க முடியாது”, என்றாள் பார்வதி. பாட்டியை தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. அவன் பார்வையை யாரும் கவனிக்க வில்லை.