வாயில் அருகே அவளையே குறுகுறுவென்று பார்த்த படி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் ஆதி. வெண் பட்டு வேஷ்டியில் அரக்கு நிறச் சட்டை அணிந்து கம்பீரமாக இருந்தான். கழுத்தில் அணிந்திருந்த செயினும் லேசாக வெளியே தெரிந்த வெள்ளை பனியனும் அவனை இன்னும் கவர்ச்சியாக காட்டியது. ஆனால் இருந்த படபடப்பில் அவன் அழகு அவள் கண்ணில் பதிய வில்லை.
எப்போதும் அவனை நேருக்கு நேர் பார்த்து முறைப்பவள் இன்றோ தலையை தாழ்த்திக் கொண்டாள். சிவப்பு நிற புடவையில் சிவப்பு ரோஜாவாகவே நின்றவளைக் கண்டவனின் மனதுக்குள் மோகம் கிளர்ந்து எழுந்தது.
சிறு சிரிப்புடன் திரும்பி கதவை அடைக்க இவளுக்கோ நெஞ்சம் வேகமாக துடித்தது. அவன் திரும்பி அவளை நோக்கி நிதானமாக நடந்து வர அவள் உடல் எல்லாம் நடுக்கம் கொண்டது. தன்னுடைய இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்து நடுக்கத்தைக் குறைக்க முயன்றாள்.
அவளின் பின் பக்கமாக மிகவும் நெருங்கி நின்றவன் “அம்மணி”, என்று கிறக்கமாக அழைத்தான். அவனது குரலில் அவ்வளவு மென்மையும் தாபமும் நிரம்பி வழிந்தது. அவனது அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இது வரை யாரும் அப்படி அழைத்ததில்லை என்பதால் ஏதோ ஒரு உணர்வு அவளை அழைக்கழித்தது. அந்த உணர்வு அவளுக்கு பிடித்திருக்கிறதா பிடிக்க வில்லையா என்று யோசிக்கும் முன்பே அவள் முன் வந்து நின்றவன் அவள் கையைப் பற்றினான்.
அவன் தொடுகையில் அவள் உடல் நடுங்கியது. முதன் முதலில் உணர்ந்த ஒரு ஆணின் தொடுகையால் அவள் உடல் சிலிர்த்தது. இதை அவள் எதிர்க் கொள்ள தயார் தான். ஆனால் இன்றே அதற்கு அவள் தயாராக இல்லை. அவன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்திருக்க அவளை முழுமையாக அவன் மறந்து இவளிடம் வர வேண்டும் என்று விரும்பினாள். அதற்கு நிச்சயம் கால அவகாசம் வேண்டுமே. அதனால் அவனை என்ன சொல்லித் தடுக்க என்று அவள் மனம் வேகமாக கணக்கிட்டது.
“ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்பிட்டு இப்ப என் கையைப் பிடிக்கிறீங்க, உங்களுக்கு வெக்கமா இல்லையா?”, என்று கேட்க உதடு துடித்தது. ஆனால் இப்போது அவளுக்கே அதை பேச விருப்பம் இல்லை. மறக்க நினைக்கும் விஷயங்களை நினைவு படுத்துவதா என்று எண்ணினாள்.
அவள் அப்படி சிந்தித்துக் கொண்டிருக்க அவனுக்கோ அப்படி எந்த யோசனையும் இல்லை. அவன் கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக அளவிட்டது. இவ்வளவு அழகும் எனக்கே எனக்கா என்று எண்ணியவனுக்கு மனதுக்கு எதையோ சாதித்த உணர்வு வந்தது. அதுவும் முதலிரவுக்கெனே அவளது அலங்காரமும் தடுமாற்றத்துடன் கூடிய அவளது முகமும், அவளது தலையில் இருந்த மல்லிகையும் அறையின் அலங்காரமும் அவனை மயக்கி கிறங்க வைத்தது.
கண்ணால் பார்த்து, காதலித்து, தனிமையில் கட்டி அனைத்து, முத்தம் பகிர்ந்து, பெரியவர்களிடம் சம்மதம் வாங்கி, திருமணம் செய்து முதலிரவைக் கொண்டாடுவதை விட இது வரை எந்த தொடுதலும் இல்லாமல் கொண்டாடும் இந்த முதலிரவு தான் சிறந்தது என்று அவனுக்கு தோன்றியது. ஏனென்றால் அவளைக் கண்டு அந்த அளவுக்கு அவனுக்குள் கிளர்ச்சி எழுந்தது.
அதுவும் செரிப் பழம் போல சிவந்திருந்த அவளது இதழ்கள் அவனுக்குள் ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணியது என்று சொன்னால் அது மிகையில்லை. அவனின் பார்வை மாற்றமும், அவன் தொடுகையும், அந்த அறையில் இருந்த தனிமையும், ஏகாந்த இரவும், பூக்களின் நறுமணமும் அவளுக்குள்ளும் சிறு குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
அடிவயிற்றில் சில பல மின்னல்கள் தெறிக்க அதை மனம் புரிந்து கொண்டாலும் சில நாட்கள் கழித்து புரிதலுடன் கூடிய வாழ்வையே எதிர் பார்த்தாள். வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவள் நிற்க அவனோ அவளை இன்னும் நெருங்கி நின்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறினான்.
அவள் கரத்தைப் பற்றிய கை இப்போது அவளது இடையில் பதிந்திருக்க முழு தேகமும் அவள் மேல் உரசும் வகையில் நின்றிருந்தான் ஆதி.
சூடான அவன் கை அவளது வெற்றிடையில் பதிய ஒரு மாதிரி அவஸ்தைக்கு உள்ளானவள் இப்போது அவனைத் தடுக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது என்று எண்ணி “என்ன பண்ணுறீங்க? என்னை விடுங்க”, என்று கோபமாக சொன்னாள்.
அவள் கோபத்தில் கொஞ்சம் ஜெர்க் ஆனாலும் “இன்னும் ஒண்ணும் பண்ணலையே. இனி தான் ஆரம்பிக்கணும்”, என்றான்.
“வேண்டாம், எனக்கு பிடிக்கலை?”, என்று அவள் சொல்ல “ஏன்?”, என்று தீர்க்கமாக வந்தது அவன் கேள்வி. அவள் இப்படி பேசுவாள் என்று அவன் தான் எதிர் பார்த்தானே? அதனால் தயாராக தான் இருந்தான். இவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேனுக்கு அவளை சமாளிக்க முடியாதா என்ன?
“எப்படி உங்களால முடியுது? நேத்து வரைக்கும் இன்னொரு பொண்ணை விரும்பிட்டு இன்னைக்கு என்னை, அதுவும் இப்படி…?”, என்று திணறலாக கேட்டாள்.
“வேற என்ன செய்வேன்னு நினைச்ச? இங்க பாரு மதி, நமக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு. இன்னும் என்னோட பழைய காதலையே நினைச்சிட்டு என்னை இருக்கச் சொல்றியா? இனி நீ தான் மனைவி. நான் உன் கூட வாழ்ந்து தான் ஆகணும்”, என்று சொல்ல அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள். அவன் சொல்வது சரி தான். இருந்தாலும் அவளால் அதை ஏற்றுக் கொள்ளத் தான் முடியவில்லை.
“என்ன பாக்குற? உன் கழுத்துல தாலி கட்டிட்டு நீ சொன்ன லவ்வரை நினைச்சிட்டு இருந்தா அது கள்ள காதல் மா. என்னால அதை எல்லாம் செய்ய முடியாது. எப்ப உன்னைப் பாத்தேனோ அந்த நிமிசத்தில் இருந்து நீ தான் எனக்கு பொண்டாட்டி. நீ மட்டும் தான் என் மனசுல இருக்க. என் மனசுல வேற யாரும் இல்லை”, என்று அவன் அவ்வளவு தெளிவாகச் சொல்ல அதை அவள் புரிந்து கொள்ளவே இல்லை.
“இல்லை, என்ன இருந்தாலும் உங்களுக்கு பழைய விஷயங்களை மறக்க டைம் வேணும்ல? நீங்க கொஞ்சம் டைம் எடுத்துக்கோங்க”, என்று தன்மையாகச் சொன்னாள்.
“அது என்ன தேவைக்கு? நான் இப்பவே காத்திருக்க முடியாதுன்னு சொல்றேன். நீ டைம் எடுத்துக்கோன்னு சொல்ற? சரி ஒரே ஒரு விஷயம் கேக்குறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு. அதுக்கு நீ சொல்ற பதிலும் என் விருப்பமும் ஒண்ணா இருந்தா அடுத்து ஒண்ணுமே யோசிக்காம உன்னை எடுத்துக்குவேன். ஆனா என் விருப்பமும் உன் விருப்பமும் வேற மாதிரி இருந்தா நான் உன் சுண்டு விரலைக் கூட தொட மாட்டேன்”, என்று சொன்னவன் அவளை விட்டு கொஞ்சம் விலகி நின்றான்.
“கண்டிப்பா வேற மாதிரி தான் பதில் சொல்லணும்”, என்று எண்ணி “கேளுங்க”, என்றாள்.
“இந்த ஜென்மத்துல இந்த ஆதியோட மனைவி நீ தான். ராயரோட மூத்த மருமக நீ தான். இதுல எந்த மாற்றமும் கிடையாது. அதை மாத்துற சக்தி இந்த உலகத்துல யாருக்குமே இல்லை. நீ தான் என்னோட பொண்டாட்டி அப்படிங்குறதுல நான் தெளிவா இருக்கேன். ஆனா உனக்கு…. நல்லா கேட்டுக்கோ… உனக்கு என்னைப் பிடிக்காமலோ, இல்லை வேற யாரையாவது பிடிச்சிருந்தாலோ…. என்னை விட்டு பிரிஞ்சு வேற கல்யாணம் பண்ணிக்க எண்ணம் இருக்கா? அதை மட்டும் சொல்லு”, என்று கேட்க அவனை முறைத்துப் பார்த்தாள்.
“தெரிஞ்சு தான் பேசுறீங்களா? நம்ம கல்யாணம் பெரியவங்க பண்ணி வச்சது. ஊர் சனம் கூடி தேவர்கள் சாட்சியா நடந்தது. இந்த ஜென்மத்துல நான் தான் உங்க பொண்டாட்டி. என் இடத்துக்கு வேற யாரும் வர முடியாது. வர விடவும் மாட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் தான் உங்க லவ்வர் கூட சேர உங்களுக்கு வாய்ப்பு இருந்தது”, என்றவள் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்து “இதை எப்ப கட்டுனீங்களோ அப்ப இருந்து நீங்க எனக்கு மட்டும் தான். வேற யாருக்கும் என்னோட வாழ்க்கையை எல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது”, என்று உறுதியுடன் முடித்தாள்.