மணமக்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்து மதியை விளக்கேற்ற சொல்லி இருவருக்கும் பால் பழம் கொடுத்தனர். இருவரும் உண்டு முடித்ததும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் “நீங்களும் உங்க லவ்வரும் ஒரே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சு குடிச்சிருப்பீங்க? ஆனா இப்ப என் கூட சேர் பண்ண வேண்டியதா போச்சுல்ல?”, என்று கேட்டாள் மதி.

     “சே சே, பப்ளிக் பிளேஸ்ல அப்படி எல்லாம் பண்ணினது இல்லை”, என்று அவன் சொல்ல “நிஜமாவா? அப்படின்னா டச்சிங் டச்சிங் எல்லாம் இல்லையா?”, என்று ஆர்வமாக கேட்டாள்.

     “பப்ளிக் பிளேஸ்ல அப்படி இல்லைன்னு தான் சொன்னேன். ஆனா தனியா இருக்கும் போது வாயோட வாய் வச்சே ஜூஸ் குடிச்சிருக்கேன்”, என்று சொல்ல நே என்று விழித்தாள். அவள் பார்வையை கண்டு அவனுக்கு அவ்வளவு சிரிப்பாக வந்தது.

     “சீ”, என்று அவள் முணுமுணுக்க “என்ன சீ?”, என்று கேட்டான்.

     “அப்படி எல்லாமா பண்ணுவாங்க? அதையும் வெக்கமில்லாம என் கிட்ட வேற சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”, என்று அவனிடம் சொன்னவள் “இதெல்லாம் கேட்டா கஷ்டமா வேற இருக்கே?”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.

     “நீ கேட்ட, நான் சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு? இனி எது கேக்குறதா இருந்தாலும் யோசிச்சு கேளு”, என்று சொன்னவன் தோள் குலுக்க அவன் தொடையை நறுக்கென்று கோபத்தில் கிள்ளி வைத்தாள்.

     “ஆ, ராட்சசி வலிக்குது டி”, என்று சொன்னவனுக்கு உண்மையிலே வலித்தாலும் அவளது தொடுகை பிடித்திருந்தது தான் உண்மை. அதற்கு பின் பக்கத்தில் ஆட்கள் வர இருவர் பேச்சும் நின்றது.

     மதியோ அந்த பிரம்மாண்ட வீட்டைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அவ்வளவு பெரிய வீட்டைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்தும் போனாள். இவ்வளவு பெரிய வீட்டைப் பெருக்கி முடிக்கவே ரெண்டு நாள் ஆகுமே என்று தோன்றியது அவளுக்கு.

            “சீ சீ, நீ இந்த வீட்டு மருமக டி. உன்னை பெருக்க எல்லாம் சொல்ல மாட்டாங்க”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். அவள் வீடும் கொஞ்சம் பெரியது தான். ஆனால் இந்த அளவுக்கு பெரியது இல்லை. அதுவும் அவர்கள் அமர்ந்திருந்த வரவேற்பு அறையில் இருந்த புகைப்படங்களும் வாள் கத்தி போன்ற பொருள்களும் அவர்களின் பாரம்பரியத்தை அவளுக்கு எடுத்துச் சொன்னது.

     அந்த வீட்டைக் கண்டதுமே அவர்களின் செல்வ செழிப்பையும் அவர்களின் பாரம்பரியத்தையும் புரிந்து கொண்டாள். இன்னும் அதைக் கட்டிக்காக்க தானும் போராட வேண்டும் என்று புரிந்தது. இனி தானும் இந்த வீட்டின் ஒரு அங்கம் என்று தெரிந்தே இருந்தாள்.

     பின் மீண்டும் மண்டபம் சென்று ரிசப்ஷன் உடை அணிந்து மேடையில் மணமக்களை நிற்க வைத்தார்கள். பிரபல தொழில் அதிபர்களும் அரசியல்வாதிகளும் ஒவ்வொருவராக மேடைக்கு அணிவகுத்து மணமக்களுக்கு பரிசுகளைக் கொடுத்தார்கள். அதை பின்னால் நின்று வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர் நந்தினி, அஞ்சனா மற்றும் மஞ்சரி மூவரும்.

     ரிசப்ஷன் பொழுதுகள் கொஞ்சம் சந்தோசமாகவே சென்றது. அதற்கு அவனது நண்பர்கள், அவளது நண்பர்கள், ஆதியின் உடன் பிறந்தவர்கள் தான் காரணம் என்று சொல்லலாம். டேன்ஸ், கேக் வெட்டுவது, மணமக்களைச் சீண்டுவது என அவர்கள் அடித்த கிண்டலில் உண்மையிலே மதியின் முகம் மலர்ந்து தான் இருந்தது. அதைக் கண்டவனுக்கு நிச்சயமாக அது நடிப்பில்லை என்று புரிந்தது. அவளின் உண்மையான அழகும் அவன் கண்ணில் விழுந்து அவன் தாபத்தை ஏற்றி இருந்தது. எப்போது இரவு வரும் என்று கற்பனைக் குதிரையை பறக்க விட்டான்.

     “என்னது நைட் எப்ப வரும்னு யோசிக்கிறியா? இப்ப சிரிச்சிட்டு இருக்குறவ நைட் என்ன மனநிலைல இருப்பான்னு தெரியலை”, என்று மனசாட்சி குரல் கொடுக்க உண்மையிலே இனி வரும் நாட்களில் இவளை எப்படி சமாளிக்க என்று தெரியாமல் விழி பிதுங்கினான் அந்த கரிகாலன். அவன் தொட்டதும் உருகி கிறங்கி அவன் மடியில் விழுவாள் என்றெல்லாம் அவனுக்கு நம்பிக்கை இல்லை. இவளை வேறு வகையில் தான் வசியம் செய்ய வேண்டும் என்று எண்ணினான்.

     ஆனால் அவள் மனது மாறும் வரை அவளுக்கு நேரம் கொடுத்து அவளை பிரிந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்க கூட இல்லை. அவளை தனித்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தான். “பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் நீ என் கூட வாழ்ந்து தான் ஆகணும் மதி. அது மட்டும் தான் உன்னை என்னோட இன்னும் பிணைச்சு வைக்கும். அது உனக்கு கோபத்தைக் கொடுத்தாலும் இது தான் நிதர்சனம். உன்னைப் பக்கத்துல வச்சிட்டு மாசக் கணக்கா பாத்துட்டு மட்டும் என்னால இருக்க முடியாது”, என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டான். அது அவளுக்கு தெரிந்தால்….

     ரிசப்ஷன் முடிந்து மறுவீடுக்கு சென்றார்கள். மாலை வரை அங்கே இருந்து விட்டு சீர் வரிசையுடன் ஆதி வீட்டுக்கு கிளம்பினாள் மதி. தந்தையை கட்டிப் பிடித்து கண்ணீர் வடிக்க அவனுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. பரமசிவமும் மகளை இனி எப்போது பார்ப்பது என்று கலங்கிப் போனார்.

     “மதி என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி. பாரு நீ அழுறதைப் பாத்து மாமாவும் கலங்குறாங்க”, என்று ஒரு அரட்டல் போட்ட பின்னர் தான் இயல்பானாள்.

     “நீங்க பாக்கணும்னு நினைச்சா சொல்லுங்க மாமா. நான் மதியைக் கூட்டிட்டு வரேன். இல்லைன்னா அவளே கூட அடிக்கடி உங்களைப் பாக்க வருவா. நீங்க கவலைப்படாதீங்க. அங்க நம்ம வீட்டுக்கும் வாங்க. எதுனாலும் எங்க கிட்ட சொல்லுங்க. இவ்வளவு நாள் உங்களுக்கு ஒரு பொண்ணு. இப்ப நான் உங்களுக்கு மருமகனா இருந்தாலும் மகன் தான்”, என்று ஆறுதல் சொன்னான்.

     “இது போதும் மாப்பிள்ளை. என் பொண்ணு இனி உங்க பொறுப்பு”, என்று அவனிடம் சொன்னவர் மதி புறம் திரும்பி “இங்க பாரு டா பாப்பா இனி அது தான் உன்னோட குடும்பம். அங்க எப்படி மரியாதையா பொழைக்கணுமோ அதை நீ தான் பாத்துக்கணும். மாப்பிள்ளை கூட நீ சந்தோஷமா இருக்கணும். அப்பா வளத்த பொண்ணு தானே அதான் இப்படி இருக்கான்னு கெட்ட பேர் வாங்க கூடாது”, என்றார்.

     “சரிப்பா, நான் அடிக்கடி உங்களைப் பாக்க வரேன்”, என்று சொல்லி கணவனுடன் விடை பெற்றாள். ஆதி வீட்டில் சென்று இறங்கியதும் மணமக்கள் இறங்க மறு பக்கம் சீர்வரிசைப் பொருள்கள் இறக்கப் பட்டது. அதற்கு என்று ஒரு அறை ஒதுக்கப் பட அங்கே நேர்த்தியாக அடுக்கி வைத்தார்கள்.

     இப்போதும் ஆரத்தி எடுத்தே உள்ளே அழைக்கப் பட்டனர் மணமக்கள். இதற்கிடையில் இருவருக்கும் இடையே எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. காரில் வரும் போது அவள் இறுக்கமாகவே இருக்க தந்தையை பிரிந்ததால் அப்படி இருக்கிறாள் என்று எண்ணி அவனும் அமைதியாக இருந்து கொண்டான்.

     உள்ளே சென்றதும் மதியை நந்தினியும் அஞ்சனாவும் பிடித்துக் கொள்ள ஆதி அவனது தளத்துக்குச் சென்று விட்டான். பெண்கள் மூவரும் அரட்டையில் இறங்க அவர்களுடன் விக்கியும் சேர்ந்து கொண்டான். கீழே இருந்த ஒரு அறையில் தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

     இரவு உணவுக்கு தமயந்தி அவர்களை அழைக்க நால்வரும் எழுந்து சாப்பிடச் செல்ல ஆதியும் உணவு அருந்த அமர்ந்திருந்தான். அவன் அருகில் இருக்கை இருந்தாலும் வேண்டும் என்றே வேறு பக்கம் அமரப் போக அங்கே அமர்ந்திருந்த ராயரைக் கண்டதும் படக்கென்று ஆதி அருகிலே சென்று அமர்ந்து கொண்டாள்.

     அதைப் பார்த்த ஆதி யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். ஆனால் அவளைக் கவனியாதது போல இருந்து கொண்டான். அவன் என்ன செய்கிறான் என்று அவள் அடிக்கண்ணால் பார்க்க ஆதியோ அவள் புறம் திரும்பக் கூட இல்லை.

     “என்ன கண்டுக்கவே மாட்டிக்கான்?”, என்று எண்ணிய படியே உணவு உண்ண “என்ன மா பிடிச்சிருக்கா?”, என்று கேட்டார் ராயர்.

     திடீரென்று அவர் குரல் கேட்க பதறி நிமிர்ந்தவள் “ஹான்”, என்று புரியாத மொழியைப் பேசினாள்.

     “என்ன மாமான்னு கேளு”, என்று பார்வதி கண்டிப்புடன் சொல்ல ஒரு மாதிரி அவமானமாக இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு “என்ன கேட்டீங்க மாமா?”, என்று கேட்டாள்.

     “எங்க வீடு, எங்களை எல்லாம் உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டார் ராயர்.

     “பிடிச்சிருக்கு மாமா”, என்று அவள் தயக்கத்துடன் உரைக்க “இது உன்னோட வீடு. இங்க நீ இயல்பா இருக்கணும் சரியா?”, என்று சொல்ல மண்டையை ஆட்டினாள்.

     “சரி மாமான்னு சொல்லு”, என்று மீண்டும் பார்வதி அரட்ட மதிக்கு கோபமாக வந்தது. “இதெல்லாம் உன்னால தான் வந்தது. ஒழுங்கா கல்யாணத்தை நிறுத்திருக்க வேண்டியது தானே?”, என்று எண்ணி அவனைப் பார்க்க அவனோ தட்டில் இருந்த இட்லியில் தான் கவனமாக இருந்தான். அங்கே நடந்த பேச்சு வார்த்தையை அவன் கவனித்தானா என்று கூட அவளுக்கு சந்தேகம் வந்தது.