ஆதி கோர்ட் ஸூட்டில் கம்பீரமாக இருந்தான். மதி லாவண்டர் வண்ணப் பட்டுப் புடவை அணிந்திருந்தாள். அவளை மேடைக்கு அழைத்து வந்து அவள் கையில் அவளுக்கு என வாங்கி இருந்த நிச்ச்யதார்த்த சேலையைக் கொடுத்தார்கள்.

     அதை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றவளை அழகு நிலைய பெண் அலங்கரித்தாள். அந்த அரை லட்ச ரூபாய் பட்டுப் புடவை அவளுக்கு அம்சமாக பொருந்தி இருந்தது. அஞ்சனாவும் நந்தினியும் அவளை விட்டு அகலவே இல்லை. அவர்களின் நட்பு மதிக்கும் பிடித்திருந்தது. மஞ்சரியும் கூடவே இருந்தாள். ஆதியோ கருநீல நிற கோர்ட் சூட்டில் கம்பீரமாக இருந்தான்.

     இருவரையும் மேடையில் இருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு பெரியவர்கள் தட்டை மாற்றி நிச்சயம் செய்தார்கள். திருமண தேதியும் ஐயரால் வாசிக்கப் பட்டது.

     அந்த சடங்குகள் முடிந்ததும் “ஆதி மருமகளுக்கு இந்த மோதிரத்தை போட்டு விடு’, என்றாள் தமயந்தி.

            “இதோ மா”, என்றவன் அதை வாங்கி அவளைப் பார்க்க அவளோ பொம்மை போல விரலை நீட்டிக் கொண்டு இருந்தாள். அதே போல அவள் கையிலும் ஒரு மோதிரம் கொடுக்கப் பட வேண்டா வெறுப்பாக போட்டு விட்டாள்.

            அவள் அமைதி அவனை பாதிக்க “என்ன உர்ருன்னு இருக்க? அதான் இந்த கல்யாணத்தை நிறுத்துன்னு பெர்மிசன் கொடுத்துட்டேனே?”, என்று யாரும் அறியாமல் அவள் காதில் கிசுகிசுத்தான் ஆதி.

     “உங்களுக்கு வெக்கமா இல்லையா? மனசுல வேற ஒரு பொண்ணை வச்சிக்கிட்டு என்னைக் கல்யாணம் பண்ண?”, என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

            “என் மனசுல யாருமே இல்லை உன்னைத் தவிர. இதை நம்பலைன்னா பிரச்சனை உனக்கு தான்”, என்று கடைசி முறையாக பொறுமையாக சொன்னான்.

            “இதை என்னை நம்பச் சொல்றீங்களா? அரசியல்வாதி குடும்பம் தானே உங்களோடது? பொய் தன்னால வரத் தான் செய்யும். லவ் பண்ணலைன்னு சத்தியம் செய்ய மாட்டேன்னு சொன்ன நீங்க இப்ப மனசுல யாருமே இல்லைன்னு சொல்லுவீங்களா? இதுவே பொய்ன்னு தெரியலையா?”

     “ஏய், நிஜமா அப்படி யாரும் இல்லை டி. நீ மட்டும் தான் என் மனசுல இருக்க. யாரோ ஏதோ வேண்டாதவ மெஸ்ஸேஜ் அனுப்பினா அதை நம்பிருவியா? அப்ப இந்த நிமிஷம் ஒரு பொண்ணு வந்து அவள் குழந்தைக்கு நான் தான் அப்பான்னு சொன்னா நம்வியா?”, என்று எரிச்சலுடன் கேட்க அவளுக்கு வேறு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. நிச்சயம் அப்படி நடந்தால் நம்பி இருக்க மாட்டாள் தான்.

     அவன் சத்தியம் பண்ணத் தயங்கியதில் இருந்து அவன் மனதில் வேறு ஒரு பெண் இருக்கிறாள் என்று ஆணித் தனமாக நம்பினாள் தான். ஆனால் ஒரு பெண்ணுக்கு குழந்தை கொடுத்து விட்டு ஏமாற்றும் மோசமானவனாக ஆதியை அவளால் நினைக்க முடிய வில்லை.

     “என்ன வாயை மூடிட்டு இருக்க? பதில் சொல்லு”, என்று அவன் வற்புறுத்த    இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாமல் சந்தர்ப்பம் அவனுக்கு சாதமாக இருக்க வேறு வழியில்லாமல் அவளும் வாயை மூடிக் கொண்டாள். அவர்களுக்குள் நடந்த இந்த பேச்சு வார்த்தையை யாரும் அறிய வில்லை.

     பின் அனைவரையும் விருந்து உண்ண அழைத்துச் சென்றார்கள். அந்த உணவு உண்ணும் இடமே ஆடம்பரமாக தான் இருந்தது. பந்தி பரிமாறவே நாப்பது கேட்டரிங் ஆட்கள் இருந்தார்கள். விதவிதமான உணவு பதார்த்தங்கள் பரிமாறப் பட்டன. மணமக்களை சாப்பிடச் சொல்ல அவர்களுக்கு பரிமாறினார்கள். அப்போது அவளை நெருங்கி அமர்ந்தான் ஆதித்யா.

     அவனின் இந்த உரிமையான செய்கையை கண்டு அவள் அதிர்ந்தாலும் உள்ளுக்குள் எரிச்சல் வந்தது உண்மை. “உங்க லவ்வர் கூட இப்படி தானே நெருக்கி அடிச்சு உக்காந்துருப்பீங்க? அந்த நினைவு வந்துருச்சா?”, என்று கடுப்புடன் கேட்டாள்.

            “நான் என்ன சொன்னாலும் நம்பவா போற? உன்னை எதுக்கு ஏமாத்தணும்? என் லவ்வர் கூட இப்படி நெருக்கி அடிச்சு மட்டும் இல்லை. அவளை என் மடியிலயே உக்கார வச்சிருக்கேன். போதுமா? இன்னும் என்ன எல்லாம் செஞ்சிருக்கேன்னு அப்புறம் சொல்றேன்”, என்று சொல்ல அவளுக்கு ஏதோ கஷ்டமாக இருந்தது. அவள் கண்கள் கூட கலங்கி விட்டது. ஆனால் ஏனென்று அவளுக்கே புரிய வில்லை. அவள் முகம் சுருங்கியதைக் கண்டவன் அடுத்து எதுவும் வம்பிழுக்க வில்லை. அவளும் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.

     நிச்சயம் நல்ல படியாக முடிந்ததும் இரண்டு குடும்பமும் அவ்வளவு திருப்தியாக இருந்தார்கள். பார்வதி மற்றும் மணிமேகலை கூட இன்னும் எதுவும் செய்ய முடியாது என்று அமைதியாகி விட்டார்கள், சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற மன நிலையோடு.

     “நிச்சயம் நல்ல படியா முடிஞ்சது சம்பந்தி. எனக்கு பரம சந்தோஷம். சரி நாங்க கிளம்புறோம். கல்யாணத்துல பாப்போம்”, என்று கரம் குவித்தார் ராயர்.

     “சரிங்க சார். பாத்து பத்திரமா போயிட்டு வாங்க”, என்று பரமசிவமும் கரம் கொடுத்தார்.

     “இன்னும் சார்ன்னு தான் சொல்லனுமா சம்பந்தி?”

     “அப்படியே பழகிருச்சு சார். மாத்திக்கிறது கொஞ்சம் கஷ்டம்”, என்று சொல்ல ராயர் சிரித்த படி விடைபெற்றார்.

     “கல்யாணத்துல பாக்கலாம் பொண்டாட்டி”, என்று சொல்லி மதியின் முறைப்பை பெற்றுக் கொண்டே அங்கிருந்து விடை பெற்றான் ஆதி. அவள் கொதிப்புடன் நிற்பதைக் கண்ட மஞ்சரி அவள் அருகே வந்து பேச்சுக் கொடுத்ததும் சகஜமாகி விட்டாள்.

     பங்ஷன் முடிந்ததும் தந்தையுடன் வீட்டுக்கு வந்த மதி மிகவும் சோர்ந்திருந்தாள். தந்தைக்கு குட் நைட் சொல்லி விட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள். அலங்காரத்தைக் கூட களைக்காமல் கட்டிலில் அமர்ந்தவளின் மனம் முழுக்க ஒரு மாதிரி குழப்பத்தில் இருந்தது ஆதியை எண்ணி. தன்னுடைய வாழ்க்கை இனி அவனுடன் எப்படி இருக்கும் என்று எண்ணி பயம், ஆத்திரம், கோபம், அழுகை, இயலாமை என அனைத்து உணர்வும் அவளைத் தாக்கியது. அவன் தந்தையின் மீது சத்தியம் செய்திருந்தால் அவன் மனதில் யாரும் இல்லை என்று நம்பி இருப்பாள். ஆனால் அவன் கடைசி வரை பண்ணாததே அவனைப் பற்றி தவறாக எண்ண வைத்தது.

     அதே நேரம் தன்னுடைய அறையில் இருந்த ஆதியோ வானில் பவனி வரும் அந்த வெண்மதியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். உடனே அவனுக்கு அவனுடைய மதியின் நினைவு தான் வந்தது. இன்று இருவருக்கும் முக்கியமான நாள். ஆனால் அவள் அவனிடம் கோபத்தை மட்டுமே காட்டுகிறாள். இதற்கெல்லாம் காரணம் யார் என்று குழம்பினான்.

     தன்னுடைய போனை எடுத்து அவனது செயலாளரை அழைத்தவன் “அந்த நம்பர் யாரோடாதுன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா?”, என்று கேட்டான்.

            “சார் விசாரிச்சிட்டேன். இன்னைக்கு உங்களுக்கு நிச்சயதார்த்தம் அபப்டிங்குறதுனால காலைல சொல்லலாம்னு நினைச்சேன்”

            “பரவால்ல நான் இப்ப பிரி தான். சொல்லுங்க சேகர். யார் அதை அனுப்பிருக்கா?”

            “சார் அந்த நம்பர் ரோஷினி அப்படிங்குற பேர்ல வாங்கிருக்காங்க. அந்த அட்ரஸ் போய்ப் பாத்தா அந்த வீட்ல வேற யாரோ இருக்காங்க. அது மட்டுமில்லாம அந்த ரோஷினி அப்படிங்குறவங்க இறந்துட்டதா சொல்றாங்க”

            “வாட்?”

            “ஆமா சார். இப்ப அந்த நம்பரை யார் வச்சிருக்கான்னு தெரியலை. நம்பரை டிரேஸ் பண்ணலாம்னா அந்த நம்பரும் இப்ப ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு”

            “ஓ, அந்த பொண்ணு இறந்து எவ்வளவு நாள் ஆகுது?”

            “அந்த பொண்ணு இறந்து ஏழு வருஷம் ஆகுதாம். ஆனா அவ பேர்ல எங்க வீட்ல யாரும் சிம் வாங்கலையேன்னு சொல்றாங்க”

            “சரி சேகர். அப்ப அப்ப அந்த நம்பருக்கு கால் பண்ணிப் பாருங்க. எப்பவாது கிளிக் ஆச்சுன்னா டிரேஸ் பண்ணுங்க”

            “அந்த நம்பரை சைபர் கிரைம்ல கொடுத்துருக்கேன் சார். அது எப்ப ஆன் ஆனாலும் சிக்னல் வந்துரும். அவனை பிடிச்சிறலாம்”, என்றதும் சரி என்று சொல்லி போனை வைத்தான்.

     போனை அனைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தவனுக்கு மனம் ஒரு மாதிரி இருந்தது. அவளது பேச்சைப் பற்றி எண்ணியே மனதுக்குள் உழன்று கொண்டிருந்தான். அவள் மனதில் இருக்கும் தவறான எண்ணத்தை போக்க வேண்டும் என்றால் அந்த மெஸ்ஸேஜ் அனுப்பிய ஆளைக் கண்டு பிடித்தாக வேண்டுமே.

            “அது யாரா இருக்கும்? எதுக்கு என் கல்யாணத்தை நிறுத்த பாக்குறாங்க? அப்பாவோட எதிரிகளா? இல்லை என்னோட பிஸ்னஸ் எதிரிகளா?”, என்று குழம்பினான். அவனுக்கு யார் சொல்வது மெஸ்ஸேஜ் அனுப்பியது அவனுடைய வருங்கால மனைவியின் எதிரி என்று. அவள் நிம்மதியை கெடுக்கவே இருவருக்கும் மெஸ்ஸேஜ் அனுப்ப பட்டது என்று அவன் கண்டு பிடிப்பானா? ஆதியின் காதலை மதி புரிந்து கொள்வாளா? அதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

     சிறிது நேரம் கட்டிலில் படுத்தவனுக்கு உறக்கம் வராமல் போக அணிந்திருந்த டீசர்ட்டைக் கழட்டி விட்டு நீச்சல் குளத்துக்கு நீந்த சென்று விட்டான்.

     ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீந்தியவனுக்கு சிறு களைப்பு ஏற்பட அறைக்குள் வந்து உடை மாற்றி விட்டு படுத்தான். இப்போது மனது சற்று அமைதி அடைந்திருந்தது. அப்படியே தூங்க ஆரம்பித்தான்.

     காதலில் வாழ்ந்தவரும் உண்டு வீழ்ந்தவரும் உண்டு. அந்த அளவுக்கு அது மிகப் பெரிய சக்தி. அப்படி பட்ட அந்த காதல் இருவரையும் தீண்டுமா?

காதல் தொடரும்…..