Advertisement

“சரி டா, வரேன்”

“கொஞ்சம் சீக்கிரம் வருவியா? எனக்கு டேன்ஸ் கிளாஸ்க்கு போகணும்”

“சரி வரேன்”, என்று சொல்லி போனை வைத்தான். அன்று மாலை ஆனதும் யமுனா வீட்டுக்கு கிளம்ப “யம்மு பேபி கொஞ்ச நேரம் இரு. உன் கிட்ட கொஞ்சம் பேசணும். வா பார்க்குக்கு போகலாம்”, என்றாள் நிஷா.

“இன்னும் பேச என்ன இருக்கு நிஷா? அதான் எல்லாம் சொல்லிட்டேனே? நான் வீட்டுக்கு போகணும் டி”

“வீட்டுக்கு லேட்டா போனா திட்டுவாங்களா யமுனா?”

“ஆறரைக்குள்ள போயிட்டா பிரச்சனை இல்லை. அதுக்கு மேல போனா தான் பிரச்சனை”

“அப்புறம் என்ன பிரியா விடு. மணி இப்ப அஞ்சு தான் ஆகுது. நானே ஆறு மணிக்கு டேன்ஸ் கிளாஸ் போகணும். அதுக்கு முன்னாடி நீ போய்றலாம் சரியா? இப்ப வா பார்க்ல உக்காரலாம்”, என்று சொல்லி அழைத்துச் சென்றாள்.

அங்கே சென்று அமர்ந்த பின்னர் நிஷா வாசலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாளே தவிர, யமுனாவிடம் எதுவும் பேச வில்லை. பொறுத்துப் பார்த்த யமுனா “என்ன டி பேசணும்னு சொல்லிட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்குற?”, என்று கேட்டாள்.

“பேசணும் தான். ஆனா நீ பேச வேண்டிய ஆள் இன்னும் வரலையே?”

“என்னது? பேச வேண்டிய ஆளா? நீ என்ன சொல்ற?”

“என் சின்ன அண்ணனை இங்க வரச் சொல்லிருக்கேன் டி. அவங்க கிட்ட எல்லாம் சொன்னேன். அவங்க உன் பிரச்சனையை சரி பண்ணுவேன்னு சொல்லிருக்காங்க”

“என்னது? விளையாடுறியா நிஷா? ஏன் இப்படி பண்ணின?”

“டென்ஷன் ஆகாத யம்மு பேபி. அண்ணா எல்லாம் பாத்துக்குவாங்க. உனக்கு எந்த பிரச்சனையும் வராது. அதுக்கு நான் பொறுப்பு. நீ அண்ணா கிட்ட உங்க அண்ணாவோட ரெஸியூம், அப்புறம் உங்க அண்ணா யார் கிட்ட பணம் கொடுத்து ஏமாந்தாங்க, அப்புறம் உங்க மாமா எந்த பேங்க்ல வேலை பாக்குறாங்கன்னு எல்லா விவரமும் சொல்லு. மத்தது எல்லாம் அண்ணா பாத்துக்குவாங்க. அதான் உன்னை இருக்க வச்சேன்”

“நிஷா, இதெல்லாம் தேவையா? உங்க அண்ணனை இதுல எதுக்கு இடையில கொண்டு வர?”

“உன்னோட பிரச்சனை சரியாகனும் யமுனா. பொண்ணுங்க நம்ம நினைச்சா அது முடியாது. நமக்கு ரெஸ்ட்ரிக்ஷன் இருக்கும். உன்னால உங்க அக்கா வாழ்க்கையை சரி பண்ண முடியுமா சொல்லு? முடியாது தானே? ஆனா சொல்றவங்க சொன்னா யார்னாலும் கேப்பாங்க. பரணி அண்ணா பத்தி உனக்கு தெரியாது. பயங்கர கில்லாடி. தனி ஆளா நின்னு எல்லா பிஸ்னசையும் தாங்கி நிறுத்துறாங்க. எங்க பெரியண்ணன் வேலையையும் சேத்து பரணி அண்ணா பாக்குது. அண்ணனுக்கு எங்க யாரை எப்படி தட்டணும்னு நல்லா தெரியும். அதனால கவலையை விடு. ஒரு நிமிஷம் இரு, கிட்ட வந்துட்டாங்களான்னு கேக்குறேன்”, என்று சொல்லி விட்டு பரணியை அழைத்தாள்.

அதை எடுத்த பரணி “வந்துட்டு இருக்கேன் டா. டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். சாரி”, என்றான்.

“பரவால்லண்ணா, சரி எப்ப வருவ?”

“நான் வர அரை மணி நேரம் ஆகும்னு நினைக்கிறேன் நிஷா. பயங்கர டிராஃபிக்கா இருக்கு. ஸ்கூல் விடுற நேரம் பாத்தியா? ஏன் உன் யம்மு பேபி வெயிட் பண்ண மாட்டாங்களா?”

“அவ வெயிட் பண்ணுவா. ஆனா எனக்கு டேன்ஸ் கிளாஸ் இருக்குண்ணா. இன்னைக்கு கண்டிப்பா போகணும்”

“அப்படின்னா நீ கிளம்பு நிஷா. உன் பிரண்டை மட்டும் வெயிட் பண்ணச் சொல்லு. நான் பாத்துக்குறேன். அவங்க நம்பரை மட்டும் எனக்கு மெஸ்ஸேஜ் பண்ணி விடு”

“சரிண்ணா, அவளும் ஆறரைக்கு வீட்டுக்கு போகணும். அதனால கொஞ்சம் சீக்கிரம் வந்துரு”, என்று சொல்லி போனை வைத்தாள் நிஷா.

நிஷாவுக்கு தோழியை தனியே விட்டுச் செல்ல மனதில்லை. அதனால் நிஷாவும் அவளுடன் அமர்ந்திருந்தாள்.

சரியாக ஆறு மணிக்கு பரணியின் கார் பார்க் முன்னே நிற்க அதைக் கண்ட நிஷா “அதோ அண்ணா கார் வந்துருச்சு டி. அண்ணா வந்துட்டாங்க. எனக்கு கிளாஸ்க்கு நேரம் ஆச்சு. அதனால நான் கிளம்புறேன். நீ அண்ணா கிட்ட பேசு. எல்லா விவரமும் சொல்லு. பரணி அண்ணா நல்ல டைப். சோ தைரியமா இரு. நான் நைட் கால் பண்ணுறேன்”, என்று சொல்லி விட்டு அண்ணனைத் தேடி ஓடினாள்.

காரில் இருந்து இறங்கிய பரணி பார்க் உள்ளே வர அவனை வழி மறைத்த நிஷா தூரத்தில் இருந்த யமுனாவைக் கை காட்டி அண்ணனிடம் “பாத்துக்கோ அண்ணா”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றவள் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு பறந்து விட்டாள்.

தங்கை வண்டி மறைந்ததும் யமுனாவை திரும்பிப் பார்த்தவன் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான். தங்கையின் தோழிக்கு உதவ வேண்டும் என்று வந்தவன் அவள் முகத்தைக் கண்டு, அவள் அழகைக் கண்டு சற்று திகைத்து தான் போனான். மாசு மருவில்லாத முகம் என்று சொல்லும் படி இருந்தது. அதுவுமில்லாமல் அவள் உருவம் அவனது கனவுப் பொண்ணுக்கு உயிர் கொடுத்தது போல இருந்தது. அவனது கனவின் காரிகை இவள் தான் என அவன் மனது முழுமையாக நம்பியது.

அவனது கனவில் வந்த பெண் காற்றில் அசைந்தாடும் தலை முடியை அழகாய் எடுத்து தன்னுடைய செவிக்கு பின் சொருக அது அடங்காமல் மீண்டும் அவள் முகத்தில் தவழ்ந்து விளையாட அந்த அழகே தனி தான். கனவில் அவள் முகம் சரியாக தெரிய வில்லை தான். ஆனால் அவனுக்கு பிடித்திருந்தது.

அவன் கனவில் வந்த பெண் போன்றே இவளும் இருந்ததில் அவனுக்கு அதிர்ச்சி தான். அது மட்டுமில்லாமல் அவளைப் போலவே முடியை காதோரம் ஒதுக்கிய படி பதட்டமாக அவன் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய கனவுக்காரிகை இவள் தான் என்று அவன் உள்ளம் நம்ப ஆரம்பித்தது. அதுவும் அவள் அழகு அவனை மொத்தமாக சாய்த்தது என்று சொல்லலாம்.

இது வரை எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறான், அவர்களை எல்லாம் ஒரு பார்வையில் கடந்து வந்திருக்கிறான். ஆனால் இவளை அப்படிப் முடிய வில்லை. உள்ளுக்குள் ஏதேதோ செய்தது. இந்த மாதிரியான உணர்வுகள் பல முறை வந்திருந்தால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டான். முதல் முறை என்றதும் அவனுக்கே வித்தியாசமாக இருந்தது.

அவளது சிறு பொட்டு கூட அவன் மனக்கண்ணில் தெளிவாக விழுந்தது. அந்த நிமிடமே அவனது இதய சிம்மாசனத்தில் மொத்தமாக குடியேறிவிட்டாள் யமுனா.

அவளை கண்டு ஜெர்க் ஆகி அவன் நடை தன்னால் ஒரு நொடி நின்று பின் தொடர்ந்தது. அவள் அழகில் அவன் தடுமாறியது சத்தியமான உண்மை. ஏனோ முதல் முறையாக மனம் எல்லாம் சிறகில்லாமல் வானில் பறப்பது போன்ற உணர்வு அவனுக்குள் எழுந்தது. தன்னவள் இவள் தான் என்று உணர்ந்தான்.

அந்த கணமே அவன் மனது அவனிடம் அதைச் சொல்லியது, இனி அவள் உனக்கு தான் என்று. இவள் தான் தன்னுடைய மனைவியாக வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டான். பார்த்த உடன் காதல் கொள்வதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்தவன் இன்று அவள் மீது காதலாகிப் போனான்.

அவன் தான் நிஷாவின் அண்ணன் என்று தெரிந்து அவள் தயக்கத்துடன் அவனைக் கண்டு புன்னகைக்க அவளது கன்னக்குழி தெளிவாக அவன் கண்களில் விழுந்தது. ஏனோ அவனே அதற்குள் விழுவது போல ஒரு உணர்வு பரணிக்குள் எழுந்தது. அவளுக்கோ படபடப்பாக இருந்தது.

சினிமாவில் வருவது போல ஒரு ஆணழகன் நேரில் வந்தால் எப்படி இருக்கும்? மாநிறத்தில் ஆறடிக்கும் மேலான உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்தான். அவன் ஒரு பக்கா  பிஸ்னஸ்மேன் என்னும் விதத்தில் இருந்தது அவனது உடை.

கிரீம் கலர் பெண்ட்டும் டக்கின் செய்யப் பட்ட கருப்பு நிறச் சட்டையும் அவனுக்கு அவ்வளவு அழகாக பொருந்தி இருந்தது. அடர் மீசைக்கு கீழ் இருந்த சிவந்த உதடுகளில் வந்து போகும் கீற்று புன்னகை கூட அழகு தான். அவன் நெருங்கி வர வர அவள் இதயம் படபடத்தது. அவளது கல்லூரி நண்பர்களிடம் பேசும் போது இல்லாத தடுமாற்றம் இவனைக் கண்டதும் அவளுக்கு வந்தது. அதுவும் அவன் பார்வை ஏனென்றே தெரியாமல் அவள் மனதில் சலனத்தை விதைத்தது.

அவன் அழகா, அவன் பார்வையா எதுவோ ஒன்று அவளை அதிகம் பாதிக்கவே செய்தது. அவள் அருகில் வந்து நின்றவன் “யமுனா”, என்று அவள் பெயரை ரசித்து உச்சரித்தான். ஏனோ இப்போது அவள் பெயர் கூட அழகான கவிதை போலவே அவனுக்கு தோன்றியது.

அவன் பேசியதும் இது வரை இருந்த மயக்கத்தை உதறிக் கொண்டவள் “யெஸ் சார், யமுனா தான். நிஷா கிட்ட சொல்லிருந்தேன்”, என்று அவளும் தயக்கத்துடன் பேச்சை ஆரம்பித்தாள்.

“வாங்க, அங்க உக்காந்து பேசலாம்”, என்று சொல்லி ஒரு பெஞ்சில் அமர அவளும் அவனுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள். யாரோ ஒருவனிடம் குடும்ப பிரச்சனைகளைச் சொல்வது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லையே.

நேரம் வேறு ஆறேகால் ஆகி விட்டது. இவ்வளவு நாள் காலேஜ் முடிந்ததும் வீட்டுக்குச் சென்று விடுவாள். ஆனால் இன்றோ ஒரு அழகான ஆணுடன் பார்க்கில் அமர்ந்திருக்கிறாள்.

அவள் அவளுடைய அக்காவுக்காகவும் அவள் குடும்பத்திற்காகவும் தான் அங்கே இருக்கிறாள். ஆனாலும் ஒரு ஆணின் அருகில் பார்க்கில் அமர்ந்திருப்பது அவளுக்கு என்னவோ போல தான் இருந்தது.

“நிஷா எல்லாமே சொன்னா. இப்ப நீங்க சொல்லுங்க. நான் என்ன பண்ணனும்?”, என்று தீர்க்கமாக கேட்டான் பரணி. உண்மையிலே அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் தீவிரமாக எழுந்தது.

“அது…. அது வந்து….”, என்று தயங்கினாள் யமுனா.

“தயங்காம சொல்லுங்க. என்னால முடிஞ்சா நான் கண்டிப்பா செய்வேன். நிஷா உங்க அக்கா வாழ்க்கைல பிரச்சனைன்னு சொன்னா. நீங்க கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும்”

“அக்கா பேர் காயத்ரி…”, என்று ஆரம்பித்து அனைத்தையும் சொன்னாள். வினோத்தின் பிரச்சனையைப் பற்றியும் சொன்னாள்.

Advertisement