ஏதோ சொல்லப் போகிறான் என்று அவள் பார்க்க அவனோ அவளை நெருங்கி வந்து கொண்டே இருந்தான். அதுவும் அவன் கண்கள் அவள் முகத்தையே மொய்க்க சிறிது நடுக்கம் கொண்டாள். அவன் நெருங்கி வர வர இவ்வளவு நேரம் இருந்த தைரியம் மாயமாய் மறைய “என்ன?”, என்று கேட்டாள்.
மூச்சுக் காற்று அவள் மேல் உரசும் படி அவன் வந்து நிற்க அவள் தான் பின்னால் நகர வேண்டியது இருந்தது. அவள் அதற்கு மேல் நகர முடியாமல் கதவில் சாய்ந்து நிற்க “இப்ப உன்னோட செய்கையும் பேச்சும் எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது. நான் ரொம்ப ரசிச்சேன். இப்படி ரசிக்கும் படியான வேலைகளை செஞ்ச உன்னை அப்படியே விட்டா என்னோட காதல் என்ன ஆகுறது?”, என்று கேட்டவன் அவளுடைய இரண்டு கன்னங்களையும் தன்னுடைய கைகளால் தாங்கினான்.
அவன் அருகாமையில் சிவந்து உதடு துடிக்க அவள் நிற்க அந்த கோலம் அவனை உசுப்பேற்றியது. “எப்படியும் சாகுற வரை லவ் தான் பண்ணப் போறோம்? அதுல கொஞ்சம் சுவாரசியமும் இருந்தா தப்பில்லை பேபி. கல்யாண வீட்ல உன்னை அந்த டிரஸ்ல பாத்தப்பவே தோணுச்சு. ஆனா அன்னைக்கு முடியலை. இப்ப மாட்டிக்கிட்ட”, என்று சொன்னவன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.
அவன் பார்வை அவளை சில்லிட செய்ய ரத்தம் உறைந்து நிற்பதைப் போல நின்றாள். அவன் பார்வையோ அவளை விட்டு கொஞ்சம் கூட அசைய வில்லை. சிறிய நெற்றி, நடுவில் கருப்பு வண்ணப் பொட்டு, மீன் விழிகள், கூர்மையான நாசி, லிஸ்ப்டிக் இல்லாமலே சிவந்த இதழ்கள் இடையை தாண்டி தொங்கிய பின்னல் என அவன் பார்வை அவளை அலசியது.
“அழகி டி நீ”, என்று அவன் மனம் முணுமுணுத்தது. அவளுக்கோ அவன் பார்வையில் மனம் அடித்துக் கொண்டது. இது வரை அவள் உணர்ந்திராத உணர்வுகள் இவை. அந்த உணர்வுகளைத் தாங்க முடியாமல் கால்கள் பலமிழப்பதை உணர்ந்தாள். அவனுக்கு அவள் வெட்கம் மெல்லிய சாரலில் நனையும் உணர்வைக் கொடுத்தது.
“என்ன இது, வழி விடுங்க”, என்று முணுமுணுத்தாள்.
“நானே நினைச்சா கூட விட முடியாது. இப்ப நடக்கப் போறது உனக்கு கஷ்டமா இருந்தாலும் சாரி பேபி. என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியலை”, என்று சொன்னவன் அவள் எலும்புகள் உடையும் அளவுக்கு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
அவள் இதழ்களில் தன் இதழைப் புதைத்தவன் சற்று ஆர்வமாகவே அவள் இதழ்களைச் சுவைத்தான். அவள் வெற்றிடையை ஆராய்ந்து கொண்டிருக்கும் அவன் கரங்களுக்கு அவளால் விளங்கிட முடிய வில்லை. இந்த அளவுக்கான நெருக்கம் இது வரை இருவருக்கும் இடையே நடந்ததில்லை என்பதால் இருவருமே நிதானத்துக்கு வர முடியாமல் திணறினார்கள்.
முதல் தீண்டலில் இருவரும் உருகிக் கொண்டிருந்தார்கள். ஒரு மாய உலகத்துக்குள் தன்னை அவன் இழுத்துச் செல்வது புரிந்தது யமுனாவுக்கு.
சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகியவன் “இனி என் ரூம் பக்கம் வந்திறாத. அதுக்கப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை”, என்று சொல்ல அமைதியாக அங்கிருந்து சென்றாள். அவள் உதடுகள் புன்னகையால் மலர்ந்த அதே நேரம் அவள் கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்தது.
அன்றில் இருந்து தான் இருவரும் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன தான் விலகி இருந்தாலும் அவர்களுக்குள் இருந்த காதல் அவர்களை பிணைத்தே வைத்திருந்தது.
வருடங்கள் கூடினாலும் இன்னும் யமுனாவுக்காக காத்திருக்கிறான் பரணி. பரணிக்கும் அவனது குடும்பத்துக்கும் எந்த கெட்ட பெயரும் வரக் கூடாது என்று பொறுமை காக்கிறாள் யமுனா.
தாமோதரனும் காவேரியும் வேறு மாப்பிள்ளை பற்றி பேசினால் விஸ்வரூபம் எடுத்து அவர்களை அடக்கினாள். அவளுக்கு தெரியாமல் அவர்கள் பார்த்தாலும் அதை தெரிந்து கொண்ட வினோத் பரணி மூலம் அதை முறியடித்தான். நாட்கள் வருடங்களாக கடந்தாலும் இவர்கள் வாழ்க்கை மட்டும் அப்படியே இருக்கிறது. பழைய விஷயங்களை எண்ணிக் கொண்டிருந்த பரணி மற்றும் யமுனாவின் கண்கள் கலங்கியது.
இதுதான் பரணி மற்றும் யமுனா வாழ்க்கையில் நடந்தது என்று சாருவிடம் சொல்லி முடித்தான் முகுந்தன். அவர்களின் காதலின் ஆழத்தைக் கேட்ட சாருவுக்கு வியப்பாக இருந்தது.
“அதுக்கு அப்புறமும் யமுனா மேடம் வீட்ல ஒத்துக்கலையா?”, என்று கேட்டாள் சாரு.
“இல்லை சாரு, இப்ப வரைக்கும் ஒத்துக்கலை. ஆனா யமுனாக்கு நிறைய மாப்பிள்ளை பாத்தாங்க. ஆனா யமுனா ஒத்துக்கலை. அதுக்கப்புறம் அவளுக்கே தெரியாம பாக்க ஆரம்பிச்சதை வினோத் கண்டு பிடிச்சு பரணி கிட்ட சொன்னதும் அவனே தடுத்து நிறுத்திருவான். ரெண்டு பேருமே அவ்வளவு உறுதியா இருக்காங்க. ஆனா யமுனா கடைசி வரை வீட்டை விட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டா. அது தான் பரணி வீட்ல உள்ளவங்களுக்கு கோபம். ஆனா பரணி அதை பெருசா எடுக்கலை. அவன் அவனோட காதல்ல நிலையா இருக்கான். அது யமுனாவுக்கும் அப்ப அப்ப வேதனையா இருக்கும். தன்னால ஒரு நல்லவன் வாழ்க்கை வீணாகுது அண்ணான்னு புலம்புவா”
“அவங்க ஒண்ணு சேந்தா நல்லா இருக்கும்ல முகுந்தன்? இப்ப இந்த நிமிஷம் லவ்னா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
“ஆமா எப்படியும் ஒண்ணு சேந்துருவாங்க”, என்றவன் “நீ எப்படி சாரு? உனக்கும் லவ் மேரேஜ் தானா?”, என்று நூல் விட்டுப் பார்த்தான்.
“என் குடும்பம் இருக்குற நிலைல அதெல்லாம் முடியாது சார். எனக்கு நிறைய கடமை இருக்கு. அதையெல்லாம் முடிக்காம கல்யாணம் பத்தி நினைக்க கூட முடியாது. இன்னும் சொல்லப் போனா என் வாழ்க்கைல கல்யாணத்துக்கு இடமே இல்லைன்னு சொல்லலாம்? சரி சார், ரொம்ப நேரம் ஆச்சு. குட் நைட்”, என்று சொல்லி போனை வைக்க “இவளை எப்படி சரி செய்வது?”, என்ற யோசனையில் ஆழ்ந்தான் முகுந்தன்.
அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. யமுனா வேலைக்குச் செல்ல கிளம்பினாள். வினோத்தும் அலுவலகம்
எப்போதும் தன்னுடன் அலுவலகம் கிளம்பும் அண்ணன் கிளம்பாமல் இருக்கவும் “நீ வரலையா அண்ணா?”, என்று கேட்டாள் யமுனா.
“அருணை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும் மா. காச்சல் இன்னும் குறையலை. நான் லீவ் கேட்டு மெயில் பண்ணிட்டேன். மாப்பிள்ளைக்கும் மெஸ்ஸேஜ் பண்ணிட்டேன். நீ போயிட்டு வா. உனக்கு இன்னைக்கு ஆடிட்டிங்க் இருக்குல்ல?”, என்று வினோத் சொன்னதும் “சரி நான் கிளம்புறேன். குட்டியைப் பாத்துக்கோ”, என்றாள்.
மற்ற நேரமாக இருந்தால் அவளும் லீவ் போட்டிருப்பாள். அருணை விட்டு நகர்ந்திருக்க மாட்டாள். ஆனால் இன்று அவளுக்கு வருடாந்திர ஆடிட்டிங் இருப்பதால் அவள் போயே ஆக வேண்டிய நிலை. எப்போதும் போல தன்னுடைய வண்டியில் அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
சாரு அங்கே மீட்டிங்க்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தாள். கம்பெனியில் செய்ய வேண்டிய சில மாற்றங்களை மீட்டிங்கில் சொல்வதற்காக முகுந்தனும் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.
ஒன்பது மணிக்கு கருப்பு நிற கோர்ட் சூட்டில் அலுவலகம் வந்து இறங்கிய பரணி சாருவிடம் மீட்டிங்க்கான எல்லா ஏற்பாடும் செய்தாயிற்றா என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
கூடவே யமுனா மற்றும் முகுந்தன் இருவரும் வந்து விட்டார்களா என்று தான் கேட்டான். சாரு பதில் சொன்னதும் அவன் மற்ற வேலைகளைப் பார்த்தான்.
பதினொரு மணிக்கு ஆடிட்டிங்க் ஆரம்பிக்கும் என்பதால் அந்த அலுவலகத்தில் அனைவரும் பரபரப்பாக தான் இருந்தார்கள். மற்ற ஊர்களில் இருந்த ஜெனரல் மேனேஜர் அனைவரும் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள்.
சரியாக பத்தரை மணிக்கு அந்த மீட்டிங் ஹாலில் அனைவரும் ஆஜர் ஆனார்கள். சாம்பல் வண்ண கோர்ட் சூட் அணிந்து சேர்மன் சரவணப் பெருமாளும் அமர்ந்திருந்தார். ஜே. எம். டி என்ற முறையில் விஷ்ணுவும் அமர்ந்திருந்தான்.
மற்ற ஷேர் ஹோல்டர்கள், மற்ற கம்பெனிகளின் ஜெனரல் மேனேஜர்கள், லீகல் அட்வைசரான முகுந்தன் என அனைவரும் வந்து அமரும் போது மணி பத்தேமுக்கால். அப்போது சாருவுடன் உள்ளே நுழைந்த பரணியும் தந்தை அருகில் சென்று அமர்ந்தான்.
டிப் டாப்பாக உடை அணிந்து அனைவரும் அமர்ந்திருக்க “மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலையா பரணி?”, என்று கேட்டார் சரவணப் பெருமாள்.
பரணி யமுனாவை இன்னும் காணும் என்று புருவம் உயர்த்த “ஆடிட்டர் மேடம் இன்னும் வரலை சார்”, என்றாள் சாரு.
சரவணப் பெருமாளுக்கு கடுப்பாக வந்தது. அவருக்கு யமுனா இங்கு வேலை செய்வதே பிடிக்க வில்லை. இப்படி மகனின் கண் முன்னால் இருந்தால் மகன் மனது எப்படி மாறும் என்பது அவர் எண்ணம்? ஒரு இரண்டு முறை அவளை வேலையை விட்டு போகக் சொல்லி சொன்னார் தான்.
ஆனால் அதற்கு யமுனாவோ “நான் இந்த வேலையை விட்டு போக ரெடியா இருக்கேன் சார். ஆனா என்னை டிஸ்மிஸ் பண்ணச் சொல்லி எம்.டி சார் கிட்ட நீங்க சொல்லணும். அவர் சொன்னா நான் போறேன்”, என்று சொல்ல அவர் பி. பி தான் எகிறியது,.
ஆனாலும் மகனிடம் ஆடிட்டர் பொறுப்பை யமுனாவுக்கு கொடுக்க கூடாது என்று சொன்னார். அவள் வயது குறைவு, இந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டாள் என்பது அவர் வாதம். ஆனால் மகனோ “யமுனா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு பா. அவளுக்கு கீழே ஏழு ஆசிஸ்டண்ட் இருக்காங்க. அவ கண்டிப்பா எல்லா வேலையும் சரியா செய்வா”, என்று செர்டிபிகேட் கொடுத்தான்.
அடுத்து வந்த வருடங்களில் யமுனா அந்த வேலையை சரியாக செய்தாலும் சரவண பெருமாளுக்கு அதில் பிடித்தமே இல்லை. வருடம் வருடம் ஆடிட் நடக்கும் போது அவள் மேல் குற்றம் கண்டு பிடித்து வேலையை விட்டு வெளியே அனுப்ப சரியாக ஆஜர் ஆகி விடுவார். ஆனால் அவரால் அவளை அசைக்க முடிய வில்லை.