ஆனால் வீட்டில் மற்ற வேலைகள் இருந்ததால் அவனால் அடுத்து வந்த ஒரு வாரமும் அவளைக் காண முடிய வில்லை. எப்போதும் போல யமுனா அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தாள்.
அடுத்த ஒரு வாரம் கழித்து அலுவலகம் வந்தவன் தன்னுடைய சீட்டில் அமர்ந்து யமுனாவை தான் அழைத்தான். அதை எடுத்து காதில் வைத்து “சொல்லுங்க”, என்றாள்.
“கொஞ்சம் என்னோட ரூமுக்கு வாங்க யமுனா”, என்று சொல்ல அவனது மரியாதையான அழைப்பு ஒரு அதிர்வைக் கொடுத்தாலும் அவன் அறையை நோக்கிச் சென்றாள்.
அனுமதி கேட்டு அவன் அழைத்ததும் உள்ளே சென்றாள். “உக்காருங்க மேடம்”, என்று சொல்லி இருக்கையை காட்டினான். அவனையே ஊன்றிப் பார்த்த படி அமர்ந்தாள். அவன் முகத்தில் கோபம் இல்லை. ஆனால் ஒரு வெறுமை தெரிந்தது.
என்னவா இருக்கும் என்று எண்ணியவள் “நிஷா எப்படி இருக்கா?”, என்று கேட்டாள்.
“நல்லா இருக்கா, நேத்து லண்டன் கிளம்பிட்டா”, என்று சொன்னான்.
“எதுக்கு வரச் சொன்னீங்க?”
“கொஞ்ச விஷயம் பேசணும். உங்க கேபின்ல வச்சு பேச முடியாது. அதான்”, என்று சொன்னவன் தன்னுடைய டேபிள் மீதிருந்து ஒரு காகித உரையை எடுத்து அவள் முன்னால் தூக்கிப் போட்டான்.
வேலையில் ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்ற குழப்பத்தில் அதை எடுத்துப் பார்த்தவள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். அவள் எழுதிய தேர்வுக்கான ரிசல்ட் தான் அது. அவள் தான் இந்திய அளவில் முதல் இடத்தில் வந்திருந்தாள். அதுவும் அதிக மதிப்பெண் எடுத்து. ஆனால் சுந்தரேசனை விட ஒரு மார்க் குறைவு தான்.
“பரணி, இது… நிஜமாவா? என்னால நம்பவே முடியலை”, என்று சொன்னவளின் கண்கள் ஆனந்தத்தில் கலங்க அதை வெறித்துப் பார்த்தான்.
சிறிது நேரம் கழித்த பிறகு தான் தன்னுடைய சந்தோஷம் அவனிடத்தில் எதிரொளிக்க வில்லை என்று புரிந்தது. “ஏன் இப்படி இருக்கான்? நான் சின்ன விஷயம் செஞ்சாலே அவ்வளவு சந்தோஷப் படுவானே?”, என்று எண்ணியவள் “என்ன ஆச்சு உங்களுக்கு?”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் ஆகலை. ஆனா எப்ப என்ன ஆகுமோனு தெரியலை. அப்புறம் இந்தா நீ கேட்டது”, என்று சொன்னவன் அவள் முன் மற்றொரு காகித உறையை தூக்கிப் போட்டான்.
“இது என்ன?”, என்று குழம்பி அதை எடுத்துப் பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்தாள். அது மும்பையில் இருந்த ஒரு பெரிய கம்பெனியில் யமுனா வேலைக்கு சேர்வதற்கான அப்பாயின்மெண்ட் ஆர்டர்.
“என்ன இது?”, என்று குரல் நடுங்க கேட்டாள்.
“என்னை விட்டு போகணும்னு ஆசைப் பட்டீங்க தானே? வேற வேலை கேட்டீங்களாம்? மச்… உங்க அண்ணன் சொன்னாங்க. அதான் ஏற்பாடு பண்னினேன். நீங்க நாளைக்கே ஜாயின் பண்ணலாம். இப்ப சந்தோஷமா?”
“நான் வந்து….”
“நீங்க எதுவும் பேச வேண்டாம் ஆடிட்டர் மேடம். எனக்கு எப்பவும் உங்க சந்தோஷம் தான் முக்கியம். கல்யாணம் வேண்டாம்னு சொன்னீங்க நானும் விலகிட்டேன். ஆனா உங்களை கடைசி வரைக்கும் என் கூடவே வச்சு காதலிச்சிட்டே இருக்கணும்னு நினைச்சேன். அது தான் தப்பு. என்னோட ஆசை தான் பெருசுன்னு நினைச்சிட்டேன். நீங்க விலகி போ போ ன்னு சொன்னப்பவே நான் விலகிருக்கணும். சாரி. இப்ப உங்களுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. எக்ஸாம் பாஸ் பண்ணிட்டீங்க. நான் நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்துட்டேன். இந்த வேலை வேண்டாம்னு சொன்னா கூட உங்களுக்கு உங்க திறமைக்கு வேற வேலை கிடைக்கும். நீங்க நிம்மதியா இருங்க. இனி இந்த பரணி உங்க வாழ்க்கைல வர மாட்டான். நீங்க போகலாம் மேடம்”
“நான்….”
“பிளீஸ் எதுவும் பேச வேண்டாம். என் மனசு நடந்ததை எல்லாம் ஜீரணிக்க கொஞ்சம் அவகாசம் கேக்குது. நீங்க கிளம்புங்க. இப்பவே உங்க ரிசைக்னேசன் லட்டரைக் கொடுக்கலாம். இல்லை நாளைக்கு கூட கொடுக்கலாம். சந்தோஷமா உங்க எதிர்காலத்தை அமைச்சிக்கோங்க”, என்று சொல்ல தளர்ந்த மனதுடன் தன்னுடைய இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்.
அவள் வாய் விட்டு கேட்டது அவள் கையில் இருக்கிறது தான். ஆனால் அவனை விட்டுச் செல்ல அவளால் முடியுமா?
அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டாள். அவள் செல்வதை அவன் கவனித்தான் தான். அவள் என்ன முடிவு எடுப்பாள் என்று மனதுக்குள் புழுங்கிப் போனான். அவளை அந்த அலுவலகத்தில் வேலைக்கு வைத்ததே அவள் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான். ஆனாலும் அவள் முழு மனதுடன் இங்கு இல்லை என்றால் இங்கு இருந்து என்ன பயன்? அவள் சந்தோஷமும் முக்கியம் என்று எண்ணி தான் இப்படி முடிவு எடுத்தான். ஆனாலும் பயமாக இருந்தது.
வீட்டுக்கு சென்று அறைக்குள் அடைந்தவள் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். மாலை வினோத் வீட்டுக்கு வந்ததும் “ஏண்ணா இப்படி பண்ணின?”, என்று கேட்டாள்.
“நீ என் கிட்ட கேட்ட. நான் மாப்பிள்ளை கிட்ட… இனி மாப்பிள்ளைன்னு சொல்ல முடியாதே. நான் எங்க எம்.டி கிட்ட உனக்காக உதவி கேட்டேன். அவரும் உனக்கு வேலை வாங்கிக் கொடுத்துட்டார்? என்னைக்கு முன்பை கிளம்புற? நானே கூட வந்து உன்னை தங்க வச்சிட்டு வரேன்”
“ஏன் இப்படி பேசுற?”
“நான் பேசுறது இருக்கட்டும். நீ ஏன் இப்படி யோசிக்கிற? நீ ஆசைப் பட்டு கேட்டது கிடைச்சிட்டு. கிளம்பி போய்கிட்டே இரு. பரணி மாப்… சாரி பரணி சார் தான், உன்னை எக்ஸாம் பாஸ் பண்ண வச்சார்னு எல்லாம் உனக்கு குற்ற உணர்ச்சி வேண்டாம். உன் திறமைல நீ எக்ஸாம் பாஸ் பண்ணி வேலை வாங்கிருக்கன்னு நினைச்சிக்கோ. உனக்கு மாசம் மூணு லட்சம் சம்பளம். அப்பா அம்மா ரொம்ப பெருமைப் படுவாங்க. எனக்கும் என் தங்கச்சி மும்பைல வேலை பாக்குறான்னு சொல்றது பெருமை தான்”, என்று சொல்லிச் செல்ல அவள் கண்கள் கலங்கியது.
இரவு முழுவதும் யோசித்தவளுக்கு தெளிவு வந்தது. “நான் ஏன் போகணும்? அதுவும் என்னோட பரணியை விட்டு ஏன் போகணும்? முடியாது, முடியவே முடியாது. என்னோட மனநிலையை நான் தெளிவா சொல்லிட்டேன். அப்படியும் அவரோட காதல் எனக்கு கிடைக்குதுன்னா அதை அனுபவிக்காம நான் ஏன் போகணும்? எனக்கு அவர் கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை, ஆனா இலவசமா கிடைக்கிற அவரோட காதலை இழக்க முடியாது. நான் இங்க இருந்து அவரைக் காதலிப்பேன். அதே மாதிரி அவரோட காதலும் எனக்கு வேணும். அவங்களா கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுற வரை நான் இங்க தான் இருப்பேன். அதே ஆபீஸ்ல தான் வேலை பாப்பேன்”, என்று முடிவு எடுத்தாள். பின் அவனை எண்ணிக் கொண்டு தூங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலையில் எப்போதும் போல அலுவலகம் கிளம்பினாள். “என்ன ரிசைக்னேசன் லட்டர் கொடுக்கப் போறியா?”, என்று சீண்டினான் வினோத்.
“நான் ஏன் கொடுக்கணும்?”
“என்ன இப்படி கேட்டுட்ட? இங்கயே இருந்தா பரணி வாழ்க்கை பாதிக்கப் படும்னு சொல்லுவ?”
“அவர் வாழ்க்கை பாதிக்கப் பட்டா எனக்கு என்ன? வேணும்னா அவர் தான் வேற கல்யாணம் பண்ணிக்கணும். அதை நான் ஒண்ணும் தடுக்கலையே? ஆனா அவர் என்னை நினைச்சி வாழ்ந்து மொத்தக் காதலையும் கொடுக்கும் போது அதை உதறிட்டு நான் ஏன் போகணும்? அவருக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் அவர் கூடவே இருந்து அந்த காதலை அனுபவிக்கப் போறேன். உலகமே சுயநலமானது தான். நானும் அப்படியே இருந்துட்டு போறேன்”, என்று சொல்லி வண்டியை கிளப்ப அவள் பேசியதை ரெக்கார்ட் செய்த வினோத் அதை பரணிக்கு அனுப்பி வைத்தான்.
அதைக் கேட்டு அவன் முகம் மலர்ந்தது. இப்போதைக்கு இது போதும் என்று எண்ணிக் கொண்டான். தான் எப்படி அவளுடைய காதலை உறுதியாக நம்புகிறோமோ அது போல அவளும் என் காதலை நம்புகிறாள் என்று புரிந்தது. இப்படியே சில வருடம் இருக்கலாமே என்று முடிவு எடுத்தான்.
அவன் அலுவலகம் வந்து அவனுடய சீட்டில் அமர்ந்ததும் புயல் போல அவனது அறைக்குள் வந்தாள் யமுனா. “உள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரணும்னு தெரியாதா ஆடிட்டர் மேடம்?”, என்று சிறு சிரிப்புடன் கேட்டான்.
அவன் குறுஞ்சிரிப்பு அவன் சீண்டலை அவளுக்கு உணர்த்த “உங்க கிட்ட எந்த அனுமதியும் வாங்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. நான் எப்ப வேணும்னாலும் உங்களைப் பாக்க வருவேன். யாரும் என்னைக் கேள்வி கேக்க முடியாது தெரிஞ்சதா?”, என்று கேட்டாள்.
“சரிங்க ஆடிட்டர் மேடம்”
“ஸ்டாப் இட். இன்னொரு தடவை மேடம், ஆடிட்டர் மேடம், இந்த வாங்க போங்க எல்லாம் உங்க வாய்ல இருந்து வரக் கூடாது. பேபி, டி, நீ வா போ தான் வரணும். அப்புறம் இதைக் கொடுக்க தான் வந்தேன்”, என்று சொன்னவள் அவனை நெருங்கி அவன் கொடுத்த அப்பாயின்மெண்ட் ஆர்டரை சுக்கல் சுக்கலாக கிழித்து அவன் கையைப் பிடித்து விரித்து அதில் வைத்தாள்.
அவன் அவளையே திகைப்பாக பார்க்க அவனையே கர்வமாக பார்த்தாள். அவன் அவளையே பார்த்த படி இருக்க அவள் வெளியே செல்ல திரும்பி நடந்தாள்.
“ஒரு நிமிஷம்”, என்று சொன்னதும் நின்று அவனைத் திரும்பி பார்த்தாள்.
எதுவும் சொல்லாமல் தன்னுடைய சீட்டில் இருந்து எழுந்தவன் கையில் இருந்த குப்பையை டஸ்ட்பின்னில் போட்டு விட்டு அவளை நோக்கி வந்தான்.