“நீ ஏண்டா, ஒரு மாசமா ஊருக்கு போகாம இங்கேயே உக்காந்துட்டு இருக்க”, என்று கேட்டான்.

“அம்மாவும் அதுதான் கேட்டாங்க, நானும் யோசிச்சுட்டே இருக்கேன் டா, பாக்கலாம் அடுத்ததாக அம்மா கிட்ட சொல்லணும், அந்த பொண்ணு ஊருக்கு போற நேரமா சொல்லுங்க, நான் வரேன் அப்படின்னு சொல்லணும்., ஏன்னா அவ இங்க இருக்கும் போது போனா கொஞ்சம் கஷ்டம் தான்”, என்று சொன்னான்.

   “அப்போ உனக்கு அவளை மறக்க முடியல, புடிச்சிருக்கு அப்படித்தானே”, என்று கேட்டான்.

“டேய் திரும்பத் திரும்ப அதே பேசாத, விடு”, என்று சொன்னவன், “கண்ணில் பார்க்காதது கருத்தில் நிலைக்காது, அதனால இப்ப என்னை பார்க்கலைன்னா அவ கொஞ்ச நாள்ல மறந்துடுவா., எனக்கும் அதே மாதிரிதான்”, என்று சொல்லவும்.

“உனக்கு பிடிச்சிருக்கு தானே, அப்ப ஒத்துக்கோ”, என்று சொல்ல.,

    “இல்லை என்னால ஒதுக்கவே முடியாது., அது சரி வராது”, என்றான்.

    அதே யோசனையோடு ராகவன் யோசித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவன் மனைவிதான்., “என்ன விஷயம் ஒரு மாதிரி இருக்கீங்க, எதையோ யோசிச்சிட்டு இருக்கீங்க., அந்த அண்ணாவும் ஒரு மாசமா ஊருக்கே போலயே., என்ன விஷயம்., நீங்க தான் போனவாரம் கூட தேனிக்கு போயிட்டு வந்தீங்க., எப்பவும் அண்ணா போயிட்டு அப்படியே ஊருக்கு போயிட்டு வருவாங்க.,ஏன் இப்ப போகல”, என்று கேட்கவும்.

     இவனுக்கும் யாரிடமாவது புலம்பினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற., விஷயங்களை எல்லாம் சொன்னான்.

   ராகவன் மனைவியோ, “ஏங்க அந்த அண்ணனுக்கு என்ன லூசா? அழகான பொண்ணு நல்ல குடும்பம், நல்ல படிச்சிருக்காங்க, கண்டிப்பா நல்ல வேலையில உட்கார்ந்துருவாங்க, ஏன் வேண்டாம் ன்னு சொன்னாங்க”, என்றாள்.

அவன் காரணத்தை எல்லாம் சொல்லவும்,

     “என்னங்க பேசுறீங்க, இதெல்லாம் ஒரு காரணமா, பொண்ணுங்க அப்படிலாம் யோசிக்க மாட்டாங்க, நீங்க யோசிக்கிற மாதிரி பணம் பதவி அப்படியெல்லாம் தோணவே தோணது., அவங்களுக்கு புடிச்சிருந்தா போதும் அப்படின்னு தான் யோசிப்பாங்க, நீங்க ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க”, என்றாள்.

     “சித்து தான் அப்படி யோசிக்கிறான்., நானா யோசிச்சேன், விட்டா நான்தான் யோசிச்சேன், நான் தான் அவனை பிரித்து வைத்திருக்கிறேன்னு  சொல்லுவ போல”, என்று சொல்லவும்.

    “அப்படி சொல்லலங்க, ஆனா அவங்களுக்கும் தெரியணும், இது அவங்களுக்கு பிடிக்கும் போது, ஒத்துக்க வேண்டியது தானே”, என்று சொல்லிக் கொண்டிருந்தவள்.

    “நான்  பேசட்டுமா”, என்று கேட்க.,

     “நீ ஒன்னுமே தெரியாத மாதிரி போய் கேளு, அப்புறம் அவனா சொன்னானா, பதில் பேசு, இல்லாட்டி பேசாதே,  நான் சொன்னேன் தெரிஞ்சிச்சின்னா என்ன தொலைத்து கட்டிடுவான்”, என்று சொல்லவும்.

   “ஒன்னு பண்ணுங்க, அந்த பொண்ணு போன் நம்பர் அண்ணன் கிட்ட இருக்கா”, என்று கேட்க,

   “அவன் பேசவே யோசிக்கான், போன் நம்பர் வாங்கி வைக்கிறானாக்கும் உனக்கு”, என்று சொல்லவும்.

“அப்ப பேசாம அண்ணனோட அம்மா ட்ட பேசி, அந்த டாக்டர் போன் நம்பர் கேளுங்க”,என்றாள்.

“எதுக்குன்னு கேட்பார்களே”, என்று சொல்ல.

    “ஆமால்ல, எதுக்குன்னு கேட்பாங்களே, ஆனால் எப்படியாவது அந்த பொண்ணுக்கு தெரியப்படுத்திட்டா போதும்., அதுக்கப்புறம் அந்த பொண்ணு பார்த்துக்கிடும்”, என்று சொன்னாள்.

   “நீ எப்படி இவ்வளவு உறுதியாக சொல்ற”, என்று கேட்டான்.

    “பொதுவா பொண்ணுங்க தான் ஒருத்தரை விரும்புறேன் அப்படிங்கறத வெளியே சொல்ல தயங்குவாங்க., அதுவும் நேர்ல வந்து ஒரு ஆள் கிட்ட சொல்றதுக்கு ரொம்ப யோசிப்பாங்க., ஆனா அதையும் தாண்டி ஒருத்தங்க  வந்து சொல்லி இருக்காங்க அப்படின்னு சொல்றீங்க.,  மதுரைக்கு வந்ததே அண்ணனுக்காக தான் சொல்றீங்க., அப்படி இருக்கும்போது கண்டிப்பா மீதியை அவங்க பாத்துக்குவாங்க., அல்லது டைரக்டா வீட்ல சொல்லி கல்யாணத்தையாவது பேசி முடிச்சுக்குவாங்க”, என்று சொன்னாள் .

   “ஓ அப்படி ஒரு விஷயம் இருக்கோ”, என்று சொன்னவன், “சரி அடுத்த தடவை  ஊருக்கு போகும்போது நானும் போறேன்., போயிட்டு அப்படியே போட்டு குடுத்துட்டு வந்துடறேன்., மீதி அந்த பொண்ணு பார்த்துக்கும்”, என்று சொல்லவும்.

   “இதுதான் சாக்குனு அங்கேயே உட்கார்ந்து இருக்காதீங்க., இரண்டு நாள்ல வந்துருங்க” என்று சொன்னாள்.

  “உனக்கு தான், நான் ஊருக்கு போனா துணைக்கு உங்க அம்மா அப்பா வந்துடுறாங்கல்ல., அப்புறம் என்ன”, என்று சொல்லி அவளை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தவன்.

   “ஓ விரும்பறது எல்லாம் பொண்ணுங்க சொல்ல மாட்டாங்க., அப்ப உனக்கு என்னை பிடிக்கும்னு தானே”,என்றான்.

   “கல்யாணம் கட்டி ஒரு பிள்ளை வந்துருச்சு. இனிமேல் பிடிக்குமா பிடிக்காதா உக்காந்து, ஆராய்ச்சி பண்ணுங்க” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தவள்.

அவனிடம் “கண்டிப்பா அண்ணனுக்காக நீங்க இதை பேசுங்க”, என்று சொன்னாள்.

“நிச்சயமா நிச்சயமா பேசுறேன், எனக்கு தேனில கொஞ்சம் வேலை இருக்கிறதுனால, இவன முன்னாடி அனுப்பிட்டு நான் மெதுவா தான் போவேன்., அந்த பொண்ண பார்த்து பேசிட்டு தான் மறுநாள் கிளம்பி வருவேன் சரியா”, என்று சொல்லவும்.,

“அதை செய்யுங்க முதல்ல”, என்று சொன்னாள்.

   அங்கு அனாமிகாவின் நிலைமை வேறுவிதமாக இருந்தது.

மனமெல்லாம் ரணம் மட்டுமே., அவள் சாதாரணமாக மற்றவர்களிடம் பேசினாலும்., வீட்டிற்கு வந்தவுடன் மனம் எல்லாம் வலிப்பது போல ஒரு பிரம்மை உருவானது.

அதனால் முடிந்த அளவுக்கு மருத்துவமனையில் நேரம் செலவிடுவதை பழக்கி வைத்திருந்தாள். அங்கு இருப்பவர்கள் கூட, “ஒரு வருஷம் ட்ரைனிங் அ ஆறு மாசத்துல முடிச்சிடலாம் பிளான் பண்ணி உட்கார்ந்து இருக்கீங்களா” என்று கேட்கும் அளவுக்கு இருந்தது.

    இப்பொழுது அவள்
ஜி ஹெச் க்கு செல்ல தொடங்கி இருப்பதால்.,  வேலையும் சரியாக இருக்கும்., பகல் வேலைக்கு சென்றால் வீட்டிற்கு வரும்போது மறுநாள் தேவைக்கு காய்கறியோ அல்லது அசைவமோ வாங்கிக் கொண்டு வருபவள்., தேவையானதை சமைத்து வைத்துவிட்டு ஏதாவது பாடல் கேட்டு கொண்டே தன்னுடைய நேரத்தை போக்குவாள்.

   கீழே அதிகமாக யாரிடமும் பேச மாட்டாள். பாட்டி மட்டும் அவ்வப்போது அவள் இறங்கி செல்லும்போது நின்று பேசிவிட்டு தான் போவார்.

    பாட்டி தாத்தா யாரைப் பார்த்தாலும் பேசுவாள்., சரிகாவின் அம்மாவிடம் மட்டும் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ள மாட்டாள்.

அவரைக் கண்டாலே திரும்பிக் கொண்டு சென்று விடுவாள்.

     சரிகா அம்மாவிற்கு தான் ‘அது என்ன என்னை கண்டால் மட்டும் விலகி செல்கிறாள்’, என்ற கோபம் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது.

சித்தர்த்தனின் அம்மா என்றாவது பார்த்தால், அவரிடம் ஓரிரு வார்த்தை பேசி விட்டு தான் செல்வாள்.,

அன்று வேலை முடிந்து வந்தவள் அறைக்கு செல்லும் போது திரும்பிப் பார்க்க சிந்துவின்  அறைபூட்டப்பட்டிருந்ததை பார்த்தவளுக்கோ,

   கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக, அவன் ஊருக்கு வரவே இல்லை, தன்னை ஒதுக்குகிறான், என்று தெரியும்போது மேலும் அவளுக்கு மனது வலிக்க தான் செய்தது,

    குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த கதை தான், அவளுடைய கதை, அவனை நினைக்க வேண்டாம் என்றாலும்., ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை கடக்கும்போதெல்லாம்.,

   அவளுக்குள் அவன் மறுப்பும், அவன் மறுத்த விதமும், அவனுடைய வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டே இருந்தது.

   தினமும் காலையில் கிளம்பும் போது கண்ணாடியில் தன் உருவத்தை பார்ப்பவள், ‘அவ்வளவு மோசமாகவா இருக்கோம்’ என்று கேட்டுக் கொள்வாள்.

    பின்பு சிரித்துக்கொண்டே, ‘அதெல்லாம் இல்ல, நல்லா தான் இருக்கேன்’, என்று அவளுக்கு அவளே சமாதானம் செய்து கொண்டு அங்கிருந்து நகர்வாள். இப்படித்தான் தினமும் கண்ணாடியோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

     நல்லபடியாக உணவு சமைத்து சாப்பிட்டாலும், மனதின் ஏக்கமோ என்னவோ சற்று மெலிந்தது போலவே இருந்தாள்,

   சென்ற வாரம் சென்னை சென்று விட்டு வரும்போது வீட்டில் உள்ளவர்கள் கூட “ஒழுங்காக சமைத்து சாப்பிடுவது இல்லையா., ஏன் மெலிந்தது போல இருக்கிறாய்”, என்றுதான் கேட்டார்கள்.

   இவளோ “அதெல்லாம் ஒன்றும் இல்லை, நன்றாக இருக்கிறேன், நல்லதா தான் சாப்பிடுகிறேன், வேலை அதிகம்”, என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.

இப்போது அதை நினைத்துக் கொண்டவளுக்கு சிரிப்புதான் வந்தது. பள்ளி காலங்களில் தலைவன் தலைவி பிரிவை பற்றி பாடல் நடத்தும் போது., அதில் வரும் பசலை நோயை கிண்டல் செய்து சிரிப்பாள்.

மோதிரம் ஒட்டியானமாக மாறும் என்ற பாடல் வரிகள் எல்லாம் கேட்கும் போது கிண்டல் செய்து சிரித்தவள்.,

   இப்போது தன்னை பார்த்துக் கொண்டு, ‘அப்படித்தானோ’ என்று இப்போதும் சிரிப்பு  வந்தாலும், அதற்கு காரணமானவனை நினைத்து கோபம் கூட வந்தது.

    ‘ஏன் இப்படி இருக்கிறான்’, என்று நினைத்தவள், ‘பின்பு எது வந்தாலும் சரி என்று தானே நினைத்தாய்’, என்று நினைக்கும் போதே.,

    ‘இல்லையே நான் சொல்லி இருக்கேன், பாட்டி ட்டயும் ,என் பிரண்ட் கிட்டயும், நான் விரும்புறவங்க என்னை விரும்பலைனா கூட விரட்டி விரட்டி பின்னாடி போய் என் லவ்வ சொல்லி சம்மதிக்க வைப்பேன்னு சொன்னேனே.,

ஆனா இங்க விரட்டி விரட்டி சொல்றதுக்கு கூட வழியில்லாம, எந்த ஊர்ல உட்கார்ந்து இருக்காங்கன்னு கூட சரியா தெரியலையே., மூணாறு பக்கம் ன்னு ஒரு நாள் பேச்சு வாக்குல பாட்டி சொன்னது தான்  தெரியும், ஹோட்டல் பிசினஸ்னாங்க., ஆனா என்னனு ஃபுல்லா தெரியலையே., எதுவா இருந்தாலும் ஓகே., ஆனா நான் எங்கன்னு போய் தேடுவேன்’, என்று தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தவள்.

   தன்னை புலம்ப வைத்தவனை  நினைத்து கோபம் மற்றும் சிரிப்போடு யோசித்துக் கொண்டிருந்தாள்.

   ‘இல்ல இன்னும் பேசணும், பேசி பார்க்கணும், நான் உண்மையிலேயே விரும்புகிறேன் னா, என்னோட விருப்பம் உண்மை, என்னோட காதல் சரி அப்படின்னா., அவரை எப்படியாவது என்கிட்ட கொண்டுவந்து என்னோட காதல் சேர்க்கும்’, என்று மனதிற்குள் நினைக்கும் போதே.,

    ‘இது சினிமா தனமா இல்ல’, என்று மற்றொரு மனம் சாடினாலும்., ‘எப்படி இருந்தாலும் அவனை என் காதல் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்’, என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.