9

என் அழகென்ன? என் தொழில் என்ன?

ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு?

சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு?

பெண்ணே பெண்ணே ராவோடும் பகலோடும்
உந்தன் ஞாபக தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை

இது சரியா? தவறா? என்பதை சொல்ல
சாஸ்திரத்தில் இடமில்லை

தேனி சென்று அங்குள்ள சில வேலைகளை முடித்துவிட்டு அதன் பின்பே அவனும் அவன் நண்பனும் இருக்கும் இடமான மூணாறுக்கு சென்றான்.

     அங்கு தான் அவர்களுடைய ரெஸ்டாரண்ட் இருக்கிறது. இருவரும் சேர்ந்து மூணாறில் ஒரு ஹோம் ஸ்டைவும், ஒரு ரெஸ்டாரண்டும் வைத்திருந்தனர்.

    அதுமட்டுமல்லாமல் தேனியில் ஒரு சிறிய அளவிலான ரெஸ்டாரண்டும் அதிலிருந்து கொஞ்சம் தள்ளி மக்கள் போக்குவரத்து இருக்கும் இடமாக ஒரு டிபன் சென்டரும் வைத்திருந்தனர்.

   இந்த தொழில் நண்பர்கள் இருவருக்கும் பொதுவானது தான், இருவரும் மாறி மாறி பார்த்துக் கொள்வர்.

    இவன் தேனிக்கு பார்க்க வரும்போது தான் ஊருக்கு வருவான். பத்து நாட்களுக்கு ஒரு முறை தேனிக்கு வந்தாலும் எப்போதாவது தான் வீட்டிற்கு வருவது முன்பெல்லாம் பழக்கமாக வைத்திருந்தான், இப்போதும் அதேதான், அவன் நண்பனும் வந்து பார்த்து செல்வான்.

    மூணாறில்  ரெஸ்டாரண்டுக்கும் அதிலிருந்து சற்று தள்ளி இருந்த ஹோம் ஸ்டேக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் இவர்களது வீடு, இருவர் வீடும் அருகருகே இருந்தது,  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதில்  நண்பர்கள் விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.

   இப்போது மூணாறு வந்து சேர்ந்தவுடன் நண்பன் தான்.,

     “என்ன மச்சான் அதுக்குள்ள வந்துட்ட, இந்த தடவை ரெண்டு நாள் இருந்து தான் வருவேன்னு சொன்ன”, என்று கேட்டான்.

     ஆனால் அவன் முகத்தை பார்த்தவுடன், “என்னடா ஏதும் பிரச்சனையா”, என்று கேட்டான்.

       இவனோ அவனைப் பார்த்து, “என்னத்த சொல்ல” என்று சொல்லவும்,

       “டேய், நீயேன் ஒரு மாதிரி இருக்க, என்ன ஆச்சு”, என்று கேட்டான்.

     அதன் பிறகு அங்கு நடந்த கலவரங்களை எல்லாம் சொல்லி முடித்து விட்டு அமைதியாக அமரவும்.,

    அவனுடைய நண்பன் தான், “லூசாடா நீ”, என்றான்.

    இவனோ அமைதியாக அமர்ந்திருக்க,

    “நல்ல பொண்ணுடா, ஏன்டா அப்படி சொன்ன”, என்றான்.

     “அவ நல்ல பொண்ணு தான், யாரு இல்லன்னு சொன்னா”, என்று சொன்னான்.

     “ஏன்டா லூசு மாதிரி பண்ற, உனக்கும் பிடிச்சிருக்கு தானே, ஆனா உன்னால ஏத்துக்க முடியல, அப்படித்தானே., அந்த பொண்ணோட ஒத்துப் போக முடியுமான்னு பயப்படுற அப்படித்தானே”, என்று கேட்கவும்.

     “அப்படி எல்லாம் இல்ல, புடிக்கும் தான், இல்லன்னு சொல்லல, பொதுவா கொஞ்சம் அழகான பொண்ணுங்களை பார்த்த உடனே, அந்த வயசுக்கு உரிய ஈர்ப்பு இருக்க தான் செய்தது, இல்லன்னு எல்லாம் சொல்லல., ஆனா யோசிச்சு பார்த்தா நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா அப்படிங்கறத பாக்கணும் இல்ல., அது மட்டும் இல்லாம அவளோட படிப்புக்கும், அவ பாக்குற வேலைக்கும் நான் இருக்கிற இடம் ஒத்து போகுமான்னு யோசிக்கணும் இல்ல”, என்று சொல்லவும்.,

    “ஏன்டா, இப்படி யோசிக்கிற ஏன் தேனில ரெண்டு கடை இருக்கு இல்ல,  நீ தேனில போய் உன் வாழ்க்கை காக இருக்கலாம், அவங்க அங்க உள்ள ஹாஸ்பிடல வேலை பார்க்க முடியாதா என்ன”, என்று கேட்கவும்.

     “அப்படி எல்லாம் நான் யோசிக்கலடா, அவளுக்கு எங்க குடும்பத்தோட ஒத்துப் போகுமா அப்படிங்கறத மட்டும் தான் யோசித்தேன், இன்னைக்கு சித்தி கூட பயங்கர வாக்குவாதம், ஆனா அவ யார்கிட்டயும் கோபப்பட்டு பார்த்ததில்லை., இன்னைக்கு கோவப்பட்டதை பார்த்தேன், அவளுக்கு என் மேல உள்ள டென்ஷன் அந்த டென்ஷன்ல அங்க கோவத்தை  காட்டினா, அது வேற ஆனாலும் சில விஷயங்கள் யோசிக்கும் போது வேண்டாம் ன்னு தோணுது.,  அதனால தான் சொன்னேன், அது மட்டும் இல்லாம நான் ஓகே சொன்னேனா, நாளைக்கு அவங்க வீட்ல சம்மதிச்சாலும், எங்க வீட்ல எங்க சித்தி ஊர கூட்டிடுவாங்க, அவங்க பொண்ணு வாழ்க்கையே என்னால தான் போச்சுன்ற மாதிரி சொல்லுவாங்க”., என்றான்.

    “அவங்களுக்கு என்னடா, அவங்க பொண்ணுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, நீ கல்யாணம் பண்ணிக்க போற., அவங்களுக்கு புடிச்சிருக்கு., நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்க., இதுல உங்க சித்திக்கு என்ன பிரச்சனை”, என்று சொல்லவும்.

“எங்க சித்திய பத்தி தான் தெரியும் இல்ல, ஒண்ணுன்னா பத்தாக்கி.,  ஒன்னுக்கும் இல்லாத விஷயத்தை எல்லாம் பிரச்சனையா கொண்டு வருவாங்க., அப்படி கொண்டு வர்றவங்க இப்படி ஒரு விஷயம் கிடைச்சுச்சுனா, சும்மா விடுவாங்களா”, என்று  கேட்டான்.

     “இப்ப நீ என்னதான் பண்ண போற”, என்று கேட்கவும்.

   “இப்போதைக்கு மதுரைக்கு போகவே போறது இல்ல, போதுமா”, என்று சொல்லிவிட்டு அவளுடைய கோரிக்கைகளையும் சொன்னான்.

   “சரி, அப்போ வீட்ல அலையன்ஸ் பார்க்கும் போது என்னடா சொல்லப்போற”, என்று சித்துவின் நண்பன் ராகவன் கேட்டான்.

    இவனும் “அதெல்லாம் சமாளித்து விடுவேன், வேண்டாம் என்று சொல்லுவேன், கொஞ்சம் தள்ளி போட சொல்லுவேன்., என்ன மிஞ்சி போனா இப்பதான் 2 மாசம் முடியப் போகுதுல்ல, இன்னும் பத்து மாசம் தானே முடிச்சிட்டு அவ கிளம்பிய பிறகு நம்ம பாத்துக்கலாம்”, என்றான்.

     “டேய் சீரியஸா சொல்றியா, நிஜமாவே அந்த பொண்ணு பிடிக்கலையா உனக்கு”, என்று கேட்கவும்.

    “பிடிக்கலை என்று நான் சொல்லவே இல்லையே மச்சான்.,  நமக்கு தகுந்தாப்ல தான் நம்ம ஆசை படனும்., உனக்கு தெரியாது இல்ல நான் தான் சொன்னேன் இல்ல எங்க வீட்டு பொண்ணு அங்க கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம்னா., அவ அங்க போய் வாழ போறா, செட்டில் ஆயிருவா, அவ புரிஞ்சுக்கவா, சாதாரணமா வாழ்ந்து இருந்துட்டு போய், பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது கூட பிள்ளைங்க அதுக்கு தகுந்தாப்ல மாறிக்குவாங்க., ஆனா நல்ல வசதியா வாழ்ந்துட்டு எல்லாத்துலயுமே ப்ரீயா இருந்துட்டு, நம்ம ஊருல வந்து வாழனும் என்கிறது கொஞ்சம் கஷ்டமான விஷயம்., நம்மள பொறுத்த வரைக்கும் ஊரு, திருவிழா, அது மட்டும் இல்லாம பெரியவங்க கிட்ட ஒவ்வொன்னுக்கும் பெர்மிஷன் கேட்கிறது., இப்படி எல்லாமே இருக்கு., ஆனா அவங்க வீட்ல அப்படி எல்லாம் கிடையாது., அவங்க வச்சது தான் சட்டம்., அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதை செய்வாங்க., ஆனா நம்ம அப்படி கேட்க முடியாது இல்லடா”, என்று சொல்லவும்.

   ராகவனும் அமைதியாக யோசிக்க.,  “சரிடா இனி உன் இஷ்டம், நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்., ஆனா உனக்கு பிடிக்கும்ன்றது எனக்கும் தெரியும்., அவங்க உன்ன பாக்குறாங்க அவங்களுக்கு உன்ன புடிச்சிருக்கு என்கிறது உனக்கு முதல்லயே தெரியும்., இதுக்கு அப்புறம் உன் இஷ்டம் டா., இதுல நான் தலையிடக்கூடாது, ஆனா எனக்கு மனசுக்குள்ள ஒரே ஆதங்கமா இருக்கு.,  ஏன் உனக்கு என்ன குறைச்சல், ஏன் வேண்டாம் ங்கிற , நீ சொல்ற இந்த பாயிண்ட் பார்க்கும் போது தான் எனக்கும் யோசனையா இருக்கு.,  கரெக்ட் அவங்க வளர்ந்த விதம் வேற நம்மோட ஊர்ல இருக்கிற முறைகள் எல்லாம் வேற.,  எல்லாத்துக்கும் ஒத்து போகணும், அது யோசிக்க வேண்டிய விஷயம்., ஆனால் நீ அதை பேசி இருக்கலாமே, அவங்க கிட்ட”, என்று சொன்னான்.

   “இல்ல அவங்களோட பீலிங் இப்ப எப்படி இருக்கும்ன்னா, தான் விரும்பினவன் தனக்கு வேணுங்கறதுக்காக எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லுவாங்க., அது மட்டும் இல்லாம காதல் என்பது வேற., கல்யாணம் என்பது வேற., காதல் வரும்போது எப்படினாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் அப்படின்னு மைண்ட் செட் ஆகும்., ஆனா கல்யாணம் நடந்ததுக்கப்புறம் ஏன் நம்ம இப்படித்தான் இருக்கணுமா, அப்படின்னு அவங்களுக்குள்ள ஒரு மைண்ட் செட் வந்துரும்.,  அதனால அவங்க இஷ்டப்படி அவங்க வீட்ல பாக்குற  மாதிரி கல்யாணம் பண்ணிக்கிடட்டும்,  அதான் நல்லது டா”, என்று சொல்லவும்.

    “சரி உன் இஷ்டம் இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்லல”, என்று சொல்லியவன்.

“நீ முதல்ல மனச மாத்திக்கோ, உனக்கும் மனசுக்குள்ள விருப்பம் இருக்கு தானே”, என்று சொல்லவும்.

  “விருப்பம் இருக்குனாலும், எல்லார் விரும்புறதும் எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லடா.,  பத்து மாசம் தானே அவ இங்க இருந்து போனதுக்கு அப்புறம் கண்டிப்பா எங்க அம்மா அப்பா சொல்ற பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்., அப்ப என் லைஃப் தன்னால மாற ஆரம்பிச்சுடும் அவ்வளவுதான்., இதுதான் வாழ்க்கை, அப்படியே போயிட வேண்டியதுதான், எல்லாரும் அவங்க அவங்க விரும்பின வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்காங்களா என்ன”, என்று சித்தார்த்தன் சித்தாந்தம் பேச…

     இவனோ, அவன் தோளில் அடித்து, “பெரிய இவன் மாதிரி பேசாத போ, முதல்ல மறக்க முடியுதான்னு பாரு”, என்று அதட்டி அனுப்பினான்.

     ஆனால் ராகவனோ, ‘ஏன் நம்ம பேசி பார்த்தா என்ன’, என்று மனதிற்குள் நினைத்தாலும்., ‘தெரிஞ்சுச்சு என்னை தொலைச்சிட்டான்’, என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

  ஊரிலிருந்து சித்தார்த்தன் மூணாறு வந்த பிறகு அவன் மனம் முழுவதும் அவ்வப்போது அவளுடைய வாடிய முகமும், அன்று காலையில் அவள் பேசியது மட்டும் நினைவு வந்தாலும் அவனும் யோசித்துக் கொண்டே தான் இருந்தான்.

    ராகவன் தான், “என்னடா இன்னும் எனத்தையோ போட்டு குழப்பிக்கிற போல”, என்றான்.

“இல்ல நான் தெளிவாயிடுவேன், அவ எப்படி அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன்., பேசாம வீட்ல சொல்லி சித்திய காரணம் காட்டி, அந்த பொண்ண வேற வீடு பார்த்து வைத்துவிடலாமா, என்று தோணுது ஊருக்கு போன் பண்ணும் போது பிராப்ளம் ஒன்னும் இல்லையே ன்னு அம்மாகிட்ட கேட்கும் போது ஒன்னும் இல்ல., அந்த பொண்ணு யாரு கிட்டயும் பேசாதாம், பாட்டி ட்ட மட்டும் என்னன்னா என்னன்னு கேட்குமாம், பேசாம தலைய ஆடிட்டு போயிரும் அப்படின்னு சொன்னாங்க.,  ரொம்ப கீழ வர்றதும் கிடையாது.,  ஹாஸ்பிடல் வீடு அப்பப்போ ஊருக்கும் போயிருது அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க”, என்று சொன்னான்.