மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இந்த துன்பம் யாரால
திருமணமான மணமக்கள் மறு வீடு, குலதெய்வ கோயில் வழிபாடு என்று எல்லாவற்றிற்கும் சென்று வந்திருந்தனர்.
திருமணத்திற்கு பிறகான எந்த விழாக்களிலும் இவளால் கலந்து கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் ட்ரெய்னிங் பீரியடுக்கான கவுன்சிலிங் தொடங்கிவிடும் என்பதால் தன்னுடைய பயிற்சியில் கவனமாக இருந்தாள்.
சரியாக திருமணம் ஆகி ஒரு மாதத்தில் இவளுக்கான கவுன்சிலிங் தேதி வரவும் சென்றிருந்தவளுக்கு இவளுக்கான இடங்களாக இரண்டு மூன்று இடங்கள் கண்முன் இருக்க, ஏனோ இவள் மனம் மட்டும் மதுரையிலேயே நின்றிருந்தது.
‘ஏன் மதுரையை எடுக்கக் கூடாது, அங்கு சென்று பார்த்துவிட்டு வந்தால் என்ன., ஒருவேளை அங்கு போன பிறகு தன் மனம் தெளிவடைந்தால்’, என்று எண்ணிக் கொண்டவள் மதுரையை முதல் ஆப்ஷனாக எடுத்து விட்டு, இரண்டாவது ஆப்ஷனாக கன்னியாகுமரியை தேர்வு செய்து வைத்திருந்தாள்.
ஆனால் முதல் ஆப்ஷனாக தேர்ந்தெடுப்பது தான் அவரவருக்கு கிடைக்கும், இடம் இல்லை என்றால் மட்டுமே இரண்டாம் ஆப்ஷன் என்பதால் வீட்டில் வந்து மதுரை தான் வரும் என்று சொல்லி இருந்தாள்.
ஏனெனில் அவள் வெளியே வந்த சிறிது நேரத்திலேயே மதுரை வேணுமா கன்னியாகுமரி வேணுமா? என்று அங்கிருந்த கவுன்சிலிங் டாக்டர்கள் கேட்க.,
இவள் சற்று நேரம் குழம்பினாலும், பின்பு “மதுரை” என்று விட்டாள், ஏனெனில் ‘தனியாக வீடு பார்த்து இருப்பது என்றாலும் மதுரைக்கு சென்றால் வீட்டினர் கொஞ்சம் தயக்கம் இன்றி அனுப்புவார்கள் அது மட்டுமல்லாமல் பாட்டி தாத்தா தன்னோடு வருவதாக இருந்தாலும் பார்க்கலாம்’ என்று யோசித்தவள்.
‘பக்கத்துல தான் இருக்கு, போயிட்டு வர நமக்கு பிளைட் இருக்கு, அவசரத்துக்கு பிளைட் மற்றபடி ட்ரெயின் இங்கிருந்து கார் கொண்டு போய்விடலாம்’ என்று பலவாறு திட்டங்களை தீட்டியபடி வீடு வந்து சேர்ந்தவள்.,
எப்போதும் போல மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு குளித்து உடைமாற்றி வருவது போல வந்தவள் பாட்டியின் மடியில் படுத்துக்கொள்ள.,
அவள் அம்மாவோடு கிச்சனில் உதவி செய்து கொண்டிருந்த சரிகா தான் எட்டிப் பார்த்தவள், “அத்தை அண்ணி வந்துட்டாங்க,ஆனா ஒன்னும் குடிக்கலையே”, என்றாள் மெதுவாக,
“அவளுக்கு வேணும்னா வருவாமா, நீ விடு”, என்று சொன்னார்.
“நான் வேணும்னா ஏதாவது கொண்டு போய் கொடுக்கட்டா”, என்று கேட்டாள் தயக்கத்துடன்.,
“வேண்டாம்”, என்று சொல்லிவிட்டார்.
சற்று நேரம் கழித்து,
இவள் தான் இங்கு இருந்து, “ம்மா ஒரு காபி”, என்று சத்தம் கொடுத்தாள்.
“இங்க வா, நீ வந்து எடுத்துட்டு போ” என்று சொல்லவும்.
“இப்ப வந்துருவாங்க” என்று உள்ளிருந்து அவள் அம்மாவின் சத்தம் கேட்டது,
“ஓகே ம்மா, அண்ணாவும் அப்பாவும் வரட்டும், அதுக்கப்புறம் நான் பேசுறேன்”, என்று சொன்னாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்களும் வந்து சேர்ந்துவிட இவளும் காபியை குடித்து முடித்தபடி யோசனையோடு தன் முன் இருந்த பைலை திறப்பது மூடுவதுமாக இருந்தாள்.
அப்பா தான் “என்னமா ஏதோ பேசணும்னு சொன்னீயாம்”, என்று கேட்டார்.
“அப்பா கவுன்சிலிங் ஆர்டர் வந்துருச்சு, லிஸ்ட் ல இருந்ததில் மூணு இடம் செலக்ட் பண்ணி இருந்தேன், எனக்கு ஆப்ஷன் இருந்த இடமே சவுத் சைட் தான், மூணு இடத்தில எது கிடைச்சாலும் ஓகே என்கிற மாதிரி தான் செலக்ட் பண்ணி இருந்தேன், இப்போ எனக்கு மதுரை போட்டு இருக்காங்க., மதுரை ஜி ஹெச், அன்ட் பக்கத்துல ஒரு பிரைமரி ஹெல்த் சென்டர் இருக்கு அங்கே ஃபர்ஸ்ட் டூ மந்த்ஸ் ஜஸ்ட் கன்சல்டிங் மட்டும், அதுக்கு அப்புறம் உள்ள மீதி 10 மன்த்ஸ் நான் மதுரை ஜிஹெசில் ட்ரெய்னிங்”, என்று சொன்னாள்.
சற்று நேரம் வீட்டினர் அமைதியாக அவர்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தவர்கள், “நீ என்ன செய்யலாம் ன்னு முடிவு பண்ணி இருக்க”, என்று கேட்டனர்.
“ஏற்கனவே சொன்னது தான் எனக்கு ஒரு வீடு பார்த்து தாங்க, எனக்கான திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி அனுப்புங்க, எனக்கு தனி வீடு வேண்டும், நான் தனியா சமைச்சு சாப்பிட்டுக்குவேன்., உங்களுக்கு அப்படி என்னை தனியா விட யோசனையா இருந்துச்சுன்னா, பாட்டி தாத்தாவை என்கூட பேக் பண்ணி அனுப்புங்க., இப்பதான் உங்களுக்கு அண்ணி வந்துட்டாங்க இல்ல, அண்ணா அண்ணி ரெண்டு பேரும் உங்க கூட இங்க இருப்பாங்க”, என்று சொன்னாள்.
பாட்டி தான், “முதல்ல வீடு பார்க்க சொல்லுவோம். வீடு எங்கே கிடைக்குது என்பதை பொறுத்து நம்ம போறது பத்தி யோசிக்கலாம் புரியுதா”, என்று சொல்லவும்,
“பாட்டி 10 டேஸ் தான் டைம், 10 டேஸ்ல நான் போய் ட்ரைனிங் ஜாயின் பண்ணனும்”, என்று சொன்னவள் அமைதியாகிவிட்டாள்.,
அம்மா தான், “பாப்பா உன் பிரண்டுக்கு” என்று , தோழியின் பெயரை சொல்லி “அவளுக்கு எங்கடி கிடைச்சிருக்கு”, என்று கேட்டார்,
அவளுக்கா, “அவ ஹஸ்பண்ட் ஊருக்கே வாங்கிட்டு போயிட்டா ம்மா”, என்று சொன்னார்.
“ஆமா கல்யாணம் ஆயிட்டு, அவ ஹஸ்பண்ட் ஊருக்கு வாங்கிட்டு போவா., நீயும் கல்யாணத்தை பண்ணி இருந்தா”, என்று அவர் சொல்லி கொண்டு இருக்கும் போதே, வேகமாக இடையே பேச தொடங்கினாள்.
“ம்மா கல்யாணம் கல்யாணம் ன்னு பேசக்கூடாது, பேசாம இருங்க நான் பார்த்துக்கிறேன்., நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்., சரி மதுரையில் வீடு பார்க்க சொல்லுங்க”, என்று சொல்லிவிட்டு மீண்டும் பாட்டி மடியில் படுத்துக்கொண்டு.,
“ஏன் பாட்டி என்கூட வருவீங்க இல்ல”, என்று கொஞ்சி கொண்டு இருந்தாள்.
அவரோ “முதல்ல வீடு பார்க்கட்டும்டி”, என்று அவள் கன்னத்தை பிடித்து திருகிக் கொண்டிருந்தார்.
“அப்புறம் டாடி எனக்கு வாஷிங் மெஷின் வேணும், ஃபிரிட்ஜ் வேணும்”, என்று இவள் அடுக்கிக் கொண்டே போக,
“கேளுமா, அடுத்தது என்ன கல்யாணம் ஆகி போறதுக்கு சீர் கேக்குற மாதிரியே எல்லாத்தையும் கேக்குற”, என்று சொல்லி சிரித்தார்.
“ம்மா அங்க போய் துணி யாரு தோய்ப்பா., சரி சமையல் பண்றேன், பாத்திரத்த வேணா நான் வாஷ் பண்ணிருவேன்., துணி யார் தோய்ப்பா, அப்புறம் பிரிட்ஜ் வேணும் பிரிட்ஜ் இல்லாம முடியாது., காய்கறி வாங்கணும் தானே, தினம் எல்லாம் காய்கறி வாங்கிட்டு வந்தா சமைக்க முடியும்”, என்று கேட்டாள்.
சரிகா தான் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தவள்., “அத்தை வீட்ல சொல்லலாமா”., என்று அனுமதி கேட்டாள்.
“அண்ணி உங்களுக்கு ஓகேன்னா, நீங்க அங்க வீட்டிலேயே தங்கிக்கலாம்., வீட்ல நல்ல ஸ்பேஸியஸா தான் இருக்கும்., எக்ஸ்ட்ரா ரூம்ஸ் எல்லாம் இருக்குது”, என்று சொன்னாள்.
இவள் தான், “இல்ல இல்ல அதெல்லாம் செட் ஆகாது, எனக்கு தனியா இருக்கணும், நானே சமைச்சு சாப்பிட்டுக்குவேன்”, என்று சொல்லி விட்டு “ப்ளீஸ் எனக்கு தனியா வீடு பாருங்க”, என்று மட்டும் சொன்னவள், “சாரி அண்ணி தப்பா எடுத்துக்காதீங்க” என்று அவளிடமும் சொல்லிவிட்டு
மீண்டும் பாட்டி கையை பிடித்து தன் கன்னத்திற்கு அடியில் வைத்து அதில் தன் கன்னத்தை அழுத்தி பதித்து அமைதியாக படுத்திருந்தவள் மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
‘என் பிளான் இப்படியே கரெக்டா போனா., இப்போ அவங்க வீட்டுக்கு போன் போகும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே.,
அது போலவே தாத்தா போன் செய்து அவர்கள் வீட்டில் மற்றவர்களிடம் பேசிவிட்டு கருணாகரனிடம் கொடுத்தார்.