19

உன் நெனப்பு…

நெஞ்சுக்குழி வர இருக்கு…

என் உலகம் முழுசும்…

உன்னை சுத்தி சுத்தி கெடக்கு…

மனசுல ஒரு வித வலிதான்…

சுகமா சுகமா…

எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்…

நிஜமா நிஜமா…

கண்ணே கண்ணே…

காலம் தோறும்…

என்கூட நீ மட்டும்…

போதும் போதும்

      காரில் செல்லும் போது அவளிடம், “உனக்கேன் தூக்கம் வரல”, என்றான்.

     “அது முதல் தடவையா பிராக்டிகல் கிளாஸ் இல்லையா, அதனால தான்”, என்று சொல்ல.,

     அவனைத் திரும்பிப் பார்த்தவள், “உங்களுக்கு ஏன் தூக்கம் வரல”, என்றாள்.

“முதல் அனுபவம் இல்லையா, அதனால”, என்று அவன் சொல்ல.,

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

     எப்போதும் போல மீனாட்சி அம்மன் கோயிலில் வந்து நிற்க., அது போலவே பூவை வாங்கி அவள் கை நிறைய கொடுக்க., காலை நேரப் பூ லேசாக மலர்ந்து இருந்தது.,  வாசமோ அதற்குரிய தனித்துவத்தை தர.,

     தலை நிறைய வைத்துக் கொண்டவள், அவன் கையோடு கைக்கோர்த்தப் படி கோவிலுக்குள் சென்று மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் சேர்ந்து நன்றியை சொல்லிவிட்டு, கோவிலை சுற்றி விட்டு சீக்கிரமாகவே வந்திருந்தனர்.

“சீக்கிரமா  வந்துட்டோம்ல” என்று சொன்னார்கள்.

    பொற்றாமரை குளத்தில் சற்று நேரம் அமர்ந்து விட்டு தான் வந்திருந்தனர். ஆனாலும் சீக்கிரமாக வந்தது போல தோன்றியதால்., “திருப்பரங்குன்றம் போவோமா, டிராபிக் இருக்காது”, என்று அவன் கேட்க.,

   அவளோ அவனை திரும்பி பார்த்தபடி “ஓகே” என்று சொன்னாள்.

   இருவரும் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபட்டு விட்டு அதன் பின்பு வீட்டிற்கு திரும்பலாம் என்று முடிவெடுத்தனர்.

     இங்கு வீட்டிலோ ஒருவர் மாத்தி ஒருவர்.,  “நீ போய் மேல கூப்பிடேன்”, என்று சொல்ல,

     “எப்படி போக, இங்க தான் பாட்டி நைட்டே கதவை பூட்டிட்டு போ ன்னு சொன்னாங்க., அண்ணன் கதவை பூட்டிட்டே போயிடுச்சு”, என்றாள் சரிகா.

    “அந்த வாசல் வழியே போ” என்று சொல்ல.,

    “அது எப்படிம்மா , போய் கதவை தட்ட”, என்று அவள் பெரியம்மாவிடம் சொல்ல.,

    நித்திலன் தான், “போன் பண்ணி பார்க்கட்டுமா”, என்றான்.

     மணி ஏழை கடந்து இருக்க., பாட்டி தான், “என்ன பண்ண, இப்ப எப்படி கூப்பிட” என்று சொல்ல,

   அதற்குள் அனாமிகாவின் பெற்றோரும், பாட்டி தாத்தாவும் வந்திருக்க.,

   அனாமிகாவின் அம்மா தான், பாட்டி இடம் “என்ன அத்தை இது அவ சீக்கிரம் இறங்கி வந்தா தான் என்ன., இவ்வளவு நேரமா தூங்குவா”, என்று சொன்னார்.

      “என்ன பண்ண சொல்லு, இப்ப நாம யார் போய் கூப்பிட முடியும்”, என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, ராகவனும் வந்து சேர்ந்தான்.

    “என்ன ஆச்சு”, என்று கேட்டான்.

     “மணி ஏழை தாண்டிருச்சு இன்னும் ரெண்டு பேரும் கீழ வரல”, என்று சொல்ல,

     “போன் பண்ணிட வேண்டியது தானே”, என்று ராகவன் சொல்ல.,

     அதே நேரம் கோவிலில் இருந்து  திரும்பி வந்தவர்கள், காரை வெளியே நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி உள்ளே நடந்து வர.,

    ஆளாளுக்கு வெளியே நின்று மாடியை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.,

    அவனும் அவளை சேர்த்து பிடித்து இவள் எங்கே சிரித்து விடுவாளோ, இல்லை பட் என்று பேசி விடுவாளோ என்று வாயை பொத்திக் கொள்ள.,

       அதே நேரம் ராகவன் தான் சித்தார்த் செல்லுக்கு அழைப்பு விடுக்க.,

        அழைப்பு மணியோ அவர்களுக்கு பின்பக்கம் இருந்து சத்தம் கேட்டது., மொத்தமாக அத்தனை பேரும் திரும்பி பார்க்க இருவரும் அங்கு தான் நின்றனர்.

   இவர்கள் திரும்பிய பிறகு அவள் சிரிக்க மாட்டாள் என்று நினைத்து இவன் கையை  வாயிலிருந்து  எடுக்க அவளோ அவனின் தோளில் தட்டி சத்தமாக சிரித்து விட்டு, “மாடியில் என்ன ஷோவா காட்றாங்க, எல்லாரும் அங்க  பார்த்துட்டு இருக்கீங்க”, என்று சொல்லி மீண்டும் சிரிக்க.,

இவனோ அவள் வாயை மூடி, “நீ பேசாம இரு,  நீ ஏதாவது பேசிடுவ ன்னு தான், உன் வாயை மூடினேன், அப்பவும் உன் வாய் நிக்குதா பாரு”, என்று சொல்ல,

     இவளோ வேகமாக அவன் கையை தட்டி விட்டு சிரித்தவள்., வீட்டினரிடம் “மாடியில் போய் கதவை தட்டி பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும் ., இல்லனா  அந்த ரூம்ல போய் கதவை தட்டி பார்த்திருந்தாலும் தெரிஞ்சிருக்கும்.,  உங்களை யாரும் கீழே நின்னு மேல வேடிக்கை பார்க்க சொன்னா”, என்று சொல்லி மீண்டும் சிரிக்கவும்.

அவள் வீட்டினரோ அவளின் சிரிப்பை தான் பார்த்து இருந்தனர்.

    இரு வீட்டினரும் அவர்களின் மகிழ்வான முகத்தை பார்த்து இருக்க,

    “என்னடா எங்க போயிட்டு வரீங்க”, என்று கேட்க.,

    “காலையிலேயே கோயிலுக்கு போயிட்டோம்”, என்று சொல்லவும்.,

      “என்னது கோயிலுக்கா”, என்றான் ராகவன்.

“இல்லையா பின்ன.,  மீனாட்சி அம்மன் கோயில் போயிட்டு, திருப்பரங்குன்றம் முருகனை பார்த்துட்டு வந்தோம், லேட் ஆயிடுச்சு ன்னு தான் வீட்டுக்கு வந்தோம்,  இல்லாட்டி பழமுதிர்சோலை போயிட்டு வரலாம்னு தான் இருந்தோம்”, என்று அனாமிகா சொல்ல.,

    இவனோ கூட சேர்ந்து வேண்டுமென்றே, “ஆமா இவ வேற சொன்னா பழமுதிர்சோலையில் காலையில பொங்கல் கொடுப்பாங்க, வாங்க போவோம் ன்னு, நான் தான் வீட்ல வித விதமா செஞ்சு வச்சு இருக்கீங்களே, என்று வந்தேன்”, என்று சொல்லவும் .,

  “அடப்பாவிகளா”, என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர்.

     வீட்டினர் தான், “ஆமாடா நல்ல வேலை பொங்கல் சாப்பிடாம வந்த, உங்க அம்மா ஓடறது ல  ட்ரெயினையும், மிதக்கிறதுல கப்பலையும் தவிர அத்தனையும் செஞ்சு வச்சுருக்கா.,  வாங்க வாங்க சாப்பிட வாங்க”, என்று சொல்ல.,

     “முதல்ல டீய கொண்டு வாங்கம்மா”, என்று தாத்தா சொல்ல,

    அனைவரும் டீ குடிக்க செல்ல., இவனோ, “அப்புறம் நாங்க இது மூன்றாவது டீயா இருக்கும்., இப்ப வேண்டாம்”, என்று சொன்னான்.

      ராகவன் தான், “என்னடா ஒவ்வொரு இடத்திலும் டீ குடிச்சீங்களா”, என்று கேட்க,

   “வீட்டில் இருந்து கிளம்பும் போதே, காபி குடிச்சிட்டு தான் போனோம், அப்புறம் திருப்பரங்குன்றத்தில் இருந்து கிளம்பும் போது ஒரு டீ குடிச்சிட்டு தான் வந்தோம்”, என்று சொல்லும் போதே.,

    இருவர் முகமும் அத்தனை மகிழ்வோடு இருப்பதை தான் நித்திலன் பார்த்துக் கொண்டிருந்தான்.

  விரும்பிய வாழ்க்கை கிடைப்பதெல்லாம் வரம்., தன்னைப் புரிந்து கொள்ளும் துணை கிடைப்பதும் வரம், அப்படிப்பட்ட வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள், இருவரின் முகமே அதற்கு சாட்சியாக இருந்தது.

    அண்ணன் தங்களை பார்ப்பதை பார்த்தவள்.,

    அவன் அருகில் சென்று “என்ன ஆச்சு ண்ணா”, என்று கேட்டாள்,

  “நீ நினைச்ச மாதிரி ஒரு லைஃப், நீ இதற்கு தான் ஆசைப்பட்ட ன்றது இப்பதான் புரியுது”, என்று சொல்லவும்.,

      “இப்படின்னு தெரிஞ்சா, நீயும் படபடன்னு அடிக்கணும், பட்டர்பிளை  பறக்கனும் ன்னு வெயிட் பண்ணி இருப்பியோ” என்று சொல்ல,

    “அதெல்லாம் இல்லமா, நான் அவ கூட நல்லா இருக்கேன், நீ வேற கோர்த்து விட்றாத”, என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருக்க., அவள் அண்ணனும் தங்கையும் சிரிப்பதை பார்த்து சரிகாவும் சித்தார்த்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

     இந்த குடும்பத்திற்குள் என்றும் பிரிவு வராது என்பது பெரியவர்களுக்கும் புரிந்தது.

    இனி சரிகாவின் அம்மா என்ன தந்திரங்கள் செய்தாலும், அதை உடைத்து எறியும் பட்டாசாக அனாமிகா வீட்டில் இருக்கிறாள் என்பதே பெரியவர்களுக்கு நிம்மதி.

அதன் பிறகு., திருமணத்திற்கு பிறகான மற்ற சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் நடந்தது., மறு வீடு , குலத்தெய்வ வழிபாடு விருந்து ஊர் சுற்றல் என ஒரு வழியாக அவர்கள் அனைத்தையும் முடித்துவிட்டு மூணாறில் கொண்டு போய் தனி குடித்தனம் வைத்து விட்டே பெரியவர்கள் அவரவர் இடம் திரும்பினர்.

மூணாறில் அனைவரும் ஒரு வாரம் தங்கி இருந்து அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்து விட்டு, இனி அவர்களுடைய வாழ்க்கை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றே திரும்பி வந்து சேர்ந்தனர்.

  மதுரை வீட்டிலோ சித்தார்த்தின் அம்மா இப்போதெல்லாம் முன்பிருந்தது போல அமைதியாக  இல்லாமல் எப்பவும் எல்லோரிடமும் கலகலப்பாக பேசிக்கொண்டு வேலைகளை மற்றவர்களுக்கும் பிரித்து கொடுத்து செய்ய தொடங்கியிருந்தார்.