ராகவனோ சித்துவின் அறைக்குள் சென்றவன், “ஏன்டா இப்படி பண்ண, கோவம் இருக்க வேண்டியது தான், அதுக்காக கண்மண் தெரியாத கோவமா, இப்ப யாரு கஷ்டப்படுறா, அவங்களா கஷ்டப்படுறாங்க., எதுக்கு இது, ஆர்க்யூ பண்ணு, பேசு, உன் கோபத்தை ஏன் சுவத்துல காமிச்ச, பாரு அடிச்சு கை வீங்கி இருக்கு., கண்ணாடி கிழிச்சு கை வெட்டி இருக்கு., தேவையா இது உனக்கு”, என்று அவன் கையை பிடித்துக் கொண்டு பேச.,
இவனும், “டேய் கிண்டல் பண்ணாத, வலி தாங்கலடா., வீட்ல உள்ளவங்க கிட்ட சொன்னேன்னா ஏதாவது சொல்லுவாங்க., அவளும் மாத்திரை கொடுத்தா, ஆனால் வலி மாத்திரை போட்ட கொஞ்ச நேரம் நல்லா இருந்துச்சு, இப்ப திருப்பி வலிக்க ஆரம்பிச்சிருக்கு”, என்று ஒவ்வொன்றாக சொல்லவும்.,
“ஓஹோ, உங்க டாக்டர் தான் ட்ரீட்மென்ட்டா”, என்று சொன்னவன், “இப்பவாவது உனக்கு என்ன தோணுது”, என்றான்.
“யோசிச்சேன் பார்ப்போம்”, என்றான்.
“இதுக்கே உன் டாக்டர் கிட்ட ஊசி போட சொல்லனும்”, என்று சிரிப்போடு சொல்ல,
“நீ வேற அவ ஏற்கனவே இரண்டு இன்ஜெக்ஷன் போட்டுட்டு தான் போனா”, என்று சொல்லவும்.
“பார்றா” என்று சொல்ல.,
“நீ கிண்டல் பண்ணாதடா”, என்று சொல்லவும்.
அப்போது தான், “வீட்டில் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன்”, என்று பேசியவன், “சரி விடு, எல்லாம் சரியாயிடும் சரியா., இப்ப ஒரு தடவை சொல்லிட்ட இல்ல, இனிமேல் உன்னை கேட்காமல் யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க., உங்க சித்தி உனக்கு பார்த்தா, தடை சொல்ற ஆளு, அந்த அம்மா எதுக்கு முந்திக்கிட்டு உனக்கு பொண்ணு பாக்குதுன்னு எனக்கு தெரியலையே டா”, என்று சொல்லவும்.
“ஏதாவது விஷயம் இருக்கும்., அவங்க மைண்ட்ல என்ன ஓடுதுன்னு யாருக்கு தெரியும் சொல்லு”, என்று சொன்னவன்., “விடுடா பெயினா இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,
அவன் அம்மா ஒத்தடம் கொடுக்க, ஹாட் வாட்டர் பேக் எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்தவர், அதை ராகவன் கையில் கொடுத்து, “அவனுக்கு வலிக்கிற இடத்துல பார்த்து கொடுப்பா, கொஞ்சம் வீக்கம் வத்தினா தான் நல்லா இருக்கும்., ரொம்ப வலிச்சா அந்த பொண்ணு கூப்பிட்டு சொல்றீங்களா, இல்ல நான் இங்கே இருக்கவா”, என்று கேட்க,
சித்து தான், “அம்மா போங்க, போய் ரெஸ்ட் எடுங்க கொஞ்ச நேரம் , எனக்கு ஒன்னும் இல்ல”, என்று சொன்னவன், “போங்கம்மா”, என்று சொல்லவும்,
“டீ போட்டுட்டு வரட்டா, சூடா குடிக்கிறியா”, என்று சொல்ல.,
அதே நேரம் ராகவன் கையில் ஹாட் பேக் வைக்க ஆரம்பிக்கவும், இவன் அமைதியாக அப்படியே இருந்தான்.
ராகவன் தான், “நீங்க கொண்டு வாங்கமா, அவன் குடிப்பான்”, என்று சொல்லவும்.
“சரி” என்று சொல்லிவிட்டு அவர் கீழே சென்றார்.
“ஏன்டா கோபத்தை அம்மாகிட்ட காட்டுற”, என்று சொல்ல.,
“எங்க அம்மாவுக்கு என்கிட்ட மட்டும் தான் பேச தெரியும்., எங்க அப்பாகிட்ட கூட எதிர்த்து பேச மாட்டாங்க., என்னை மட்டும் தான் அதட்டுவாங்க., அவங்க இவ்வளவு பேசுறாங்க, என் பிள்ளைக்கு எனக்கு பொண்ணு பார்க்க தெரியும் ன்னு, எங்க அம்மா ஒரு வார்த்தை பேசினா என்ன., எங்க அம்மா எதிர்த்து பேச மாட்டிக்காங்க ன்னு தான் எனக்கு கோபமே”, என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தான்.
டீ குடித்த பிறகு ராகவன் மிதமான சூட்டில் கையில் அவனுக்கு ஹார்ட் பேக்கை வைத்து எடுக்க அப்படியே பேசிக் கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் உறங்க தொடங்கினான்.
அவன் தூங்கிய பிறகு எழுந்து வெளியே வந்தவன், ‘கீழே போய் பேசிட்டு வருவோமா’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தற்செயலாக வெளியே வந்த அனாமிகா ராகவனை பார்த்துவிட்டு அவன் இருக்கும் பக்கம் வந்தவள்,
“சாரி அண்ணா அப்ப பேச முடியல”, என்றவள் வீட்டினர் நலத்தை கேட்டாள்.
“எல்லோரும் நல்லாயிருக்காங்க மா”, என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தவன், ‘அவளிடம் சொல்லிவிடுவோமா’, என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.,
அவள்தான் “தூங்கிட்டாங்களா”, என்றாள்.
“இப்ப தான் தூங்குறான்”, என்று சொல்லவும்.
“ஃபீவர் எதுவும் வரல இல்ல”, என்று கேட்டாள்.
“இல்லம்மா”, என்று சொல்ல,
“ஓகே அண்ணா, நைட் அவங்க கூட இருப்பீங்களா, கிளம்பிருவீங்களா”, என்றாள்.
“இல்லம்மா, இங்க தான் நாளைக்கு காலைல மதுரையில வேலை இருக்கு”, என்று சொல்லவும்.,
“ஃபீவர் வருதான்னு மட்டும் பார்த்துக்கோங்க, டேப்லெட் இருக்கு, இப்ப நைட்டு ஃபுட் எடுத்த உடனே டேப்லட்ஸ் மட்டும் போட சொல்லுங்க, பாத்துக்கோங்க”, என்று சொன்னவள்.,
“நான் கொஞ்சம் பாத்துட்டு வந்துரட்டுமா”, என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றவள், தூங்கும் அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின்பு ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து வெளியே வந்தவள், ராகவனைத் தாண்டி செல்லப் போகும் போது.,
“நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணும் மா”, என்று சொல்லவும்.,
“சொல்லுங்க அண்ணா”, என்றாள்.
“உன் போன் நம்பர் குடுமா, ஒரு வேளை ஃபீவர் இருந்துச்சுன்னா நான் கூப்பிடுவேன் இல்ல”, என்று சொல்லவும்.,
இவளும் போன் நம்பரை கொடுத்துவிட்டு, “ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்துருங்க, நான் சேவ் பண்ணிக்கிறேன்”, என்று சொல்லி விட்டாள்.
“உன்கிட்ட பேசணுமா” என்று சொல்ல,
“என்ன ண்ணா”, என்றாள்.
” தப்பா நினைக்க மாட்டியே”, என்று சொல்ல.,
“இல்ல ண்ணா, சொல்லுங்க”, என்று சொல்லவும்.,
அவன் அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை அனைத்தையும் சொல்ல.,
ஒரு நிமிடம் கேட்டதை நம்ப முடியாமல் நின்றவள், ராகவனை கேள்வியாக நோக்க., அவனும் “நிஜம்மா உண்மையிலேயே இது தான் அவன் சொன்னது, ஆனால் அவனால் ஏத்துக்க முடியல., அதுக்கு காரணம் இதுதான்”, என்று சித்து சொன்னதையும் சேர்த்து சொல்ல.,
இவளோ சிரித்துக்கொண்டே, “அவங்களே பேசட்டும் ண்ணா, இப்படி எப்பவும் தூதுக்கு ஆள் விட முடியாது இல்லையா, எதுக்கு இதுக்கெல்லாம் யோசிக்கணும்”, என்று சொன்னவள்.
“ஏன் அதை நேரில் என் கிட்ட சொல்ல வேண்டியது தானே, அப்படி என்ன தயக்கம்”, என்றவள் கேள்வியாக ராகவனை பார்க்க.
ராகவனோ “அவனுக்கு தயக்கம் அப்படிங்கிறதை விட, இந்த ஃபேமிலில அவங்க சித்தி கொஞ்சம் பிரச்சனைகளை கிளப்பி விடுறாங்க மா, இவன் ஸ்கூல் படிக்கும்போதே இவனை எப்பவும் குறை சொல்லிட்டே இருப்பாங்க., ஆனா இவன் நல்லாத்தான் படிப்பான்., அவங்களுக்கு தன் பிள்ளைகளை விட இவன் எந்த விதத்திலும் கூடிற கூடாது ன்னு நினைப்பாங்க”., என்றான்.
“ஏன் இவங்க மேல மட்டும் கண்ணு, அதுக்கு அடுத்து இன்னொரு மாமா இருக்காங்களே அவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க இல்ல., ஏன் அவங்களை இவங்க யோசிக்கவில்லை”, என்று கேட்கும் போது.
“அவங்க சின்ன பசங்க மா அவங்கள போட்டியா எடுக்கல, இவன்தான் அவங்க பையன விட மூத்தவன், அப்படின்னாலும் இவன் தான் ஒரே ஸ்டேஜ்ல இருக்கிறவன் அப்படிங்கற எண்ணம், தான் பையனுக்கு போட்டி இவன் தான் அப்படிங்கிற மைண்ட் செட் அவங்களுக்கு., காலேஜ் படிக்கும் போதும் இவன் மார்க் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு., இவன் எதிர்பார்த்த காலேஜ் கிடைக்கலைன்னு உடனே டிகிரிக்கு வந்துட்டான்., டிகிரி முடிச்சிட்டு எம்பிஏ பண்ணான், நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் படிச்சோம்., அப்பவும் இவங்க இப்படிதான் ஏதாவது குறை சொல்லிட்டே இருப்பாங்க., அதனால காலேஜ் படிக்கும் போது அவன் இங்க படிக்கவே இல்ல., திருச்சில படிச்சான் சோ ஹாஸ்டல்ல இருந்து தான் படிச்சான், எம் பி ஏ க்கு சென்னை ஹாஸ்டல்ல இருந்தான்., சோ அவனும் இவங்கள விட்டு தள்ளியே இருந்து பழகிட்டான்.,
ஏன்னா இவனால வீட்டுக்குள்ள பிரச்சினை வரக்கூடாதுன்னு அவங்க அம்மா சொன்னாங்க., அதனால இப்பவும் அவனுக்கு அவங்க அம்மா மேல கோபம், ஏன் அம்மா எதிர்த்து பேச மாட்டாங்க அப்படிங்கிற கோவம்”, என்று சொல்லும் போது..,
“அவங்க யோசிக்கிறது சரிதான், பட் ஒரு கூட்டு குடும்பமா இருக்கும்போது அத்தையோட திங்கிங்கும் கரெக்டு தான்., நம்மளால எதுவும் பிராப்ளம் ஆகிறக்கூடாது, ஆனா சில விஷயங்கள்ல கேட்கலாம் தப்பு கிடையாது., பிள்ளைகளுக்காக பேசுவது அம்மா அப்பா மட்டும் தான் பேச முடியும்”, என்று சொல்லவும்.,
ராகவனும் “அதுதான் அவனுக்கும் கோபம், அதுதான் இங்க அதிகமா வராமல் இருப்பான்., எப்ப இங்க வந்தாலும் அவங்க ஏதும் பிரச்சினை கிரியேட் பண்ணி விடுவார்களோ ன்னு பயந்து தான் அவன் அடிக்கடி வர்றதும் இல்ல., இப்போ அவனோட விருப்பத்தை உன் கிட்ட சொன்னாலோ., இல்ல நீ பேசி சரி பண்ணி, உங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு லவ் வந்தாலோ., அதைக்கூட அவங்க சித்தி காதுக்கு போச்சுன்னா., பெரிய இஷ்யூவாகி பிரச்சினையாக்கிடுவாங்க”, என்றான்.