11

காலை அணைப்பின் வாசமும்

காதில் கிறங்கும் சுவாசமும்

சாகும்போதும் தீர்ந்திடாது

வா உயிரே

காதல் உறைக்கும் பாடமும்

மார்பில் கிடக்கும் நேரமும்

வாழும் வரைக்கும் தேய்ந்திடாது

வா உயிரே

ஆணில் தாய்மை கருவாகும்

ஈரம் பூத்து மழை ஆகும்

கண்ணீர் சுகமாய் இமை மீறும்

காலம் உந்தன் வரமாகும்

   சித்துவின் ஞாபகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தவள் பின்பு தான் எழுந்து உடைமாற்றிக்கொண்டு தன்னை ரெப்பரஷ் செய்து கொண்டவள், சற்று நேரம் ஏதேதோ யோசனையில் மூழ்கி இருந்தாள்.

அதே நேரம் வெளியே பேச்சு சத்தம் கேட்க, ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும்போது தான் சித்துவின் அறைக்கு வெளியே பாட்டி தாத்தா சித்துவின் அம்மா அப்பா, கடைசி சித்தி என்று நிற்பது தெரிந்தது.

     ‘என்ன ஆச்சு, எதுவும் முடியலையோ’ என்று தோன்ற நேரத்தை பார்க்க, அவள் வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருக்கும் என்று தோன்றியது.

      சுடிதார் போட்டிருந்ததால் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள்., அவர்களை பார்த்தவுடன் “இப்ப எப்படி இருக்காங்க” என்று சித்துவின் அம்மாவிடம் கேட்க,

     அவரோ, “தெரியலமா படுத்திருக்கான், தூங்க மாட்டிக்கான், கை வலிக்குது போல, கேட்டா கோபம் வருது, புரண்டு கொண்டே இருக்கான்”, என்று சொல்லவும்.,

     ‘பெயின் கில்லர் போட்டுமா, வலி குறையல’ என்று யோசித்தவள்.

    “நான் பார்க்கட்டுமா”, என்று கேட்டாள்.

       “பாருமா” என்று பாட்டி சொல்லவும்.,

    மெதுவாக அவன் அறைக்குள் செல்ல, அவனும் கையை அருகில் இருந்த தலையணையில் வைத்த படி முகத்தை சுளித்துக்கொண்டு படுத்திருந்தான்.

      அப்போதே புரிந்தது,  அவனுக்கு வலி அதிகமாக இருப்பது., மெதுவாக அருகில் வந்தவள்,

    “ரொம்ப பெயின் இருக்குதா” என்றாள்.

    அவள் சத்தத்தை கேட்டவுடன் கண் விழித்து அவளைப் பார்த்தவன், இல்லை என்னும் விதமாக தலையை மட்டும் அசைத்தான்.

    “டேப்லெட் போட்டு வலி குறையலையா”, என்றாள்.

    மீண்டும் தலையசைப்பு மட்டுமே இருந்தது. சற்று நேரம் யோசித்தவள், “வேற டாக்டர் கிட்ட போலாமா, கைய ஒரு முறை பாத்துருவோமா., இல்லானா  ஓபன் பண்ணி  எதுவும் கிளாஸ் பீஸ்  இருக்குதான்னு பார்ப்போமா”, என்று அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

   அவனும், “ஒன்னும் இல்ல நீ போ”, என்றான்.

   சற்று நேரம் யோசனையோடு நின்றிருந்தவள், கட்டில் அருகே குனிந்து, அவன் கையை பிடித்துப் பார்க்க.,

   “ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல விடு”, என்றான்.

    அவளோ “ஒன்னும் இருக்கா, இல்லையா, ன்னு நான் செக் பண்றேன்., கொஞ்ச நேரம் அமைதியா இருங்க”, என்று சொல்லிவிட்டு அவன் கையை தூக்கிப் பார்க்கும் போது தான்,

    உள்ளங்கை பகுதிக்கும், மணிக்கட்டுக்கும்  இடைப்பட்ட பகுதியில் கண்ணாடி வெட்டி இருந்தது.,  அதற்கு தான் மருந்து வைத்து கட்டி இருந்தாள்.

    அதற்கு கீழ் பகுதியில் அவன் சுவரில் அடித்த வேகத்தில்., கையில் ஏதோ இடித்திருக்க அப்பகுதி வீக்கமாக இருந்தது.

   அதன் வீக்கம் தான் இப்போது வலிக்கிறது என்பதை இப்போது கண்டுபிடித்தவள்,

    அவன் கையைத் தொட்டு இந்த இடம்  வலிக்குதா என்றாள்.

    “ஷ்ஷ்  ஆஆ தொடாத”, என்று சொல்லவும்.

  ‘அந்த இடம் வீக்கம் இருப்பது வலிக்கிறது, ஒரு வேளை இரத்தக்கட்டு இருக்குமோ’, என்று யோசிக்கும் அதே நேரம் அவன் சித்தி உள்ளே வர.,

     “என்னம்மா” என்று அவர் கேட்டார்.

   “ஒன்னும் இல்லத்த, அவங்களுக்கு இந்த இடத்தில் ஏதோ இடிச்சு வீங்கி இருக்கு, அதுதான் பெயின் ஜாஸ்தி இருக்குது போல, மருந்து எடுத்துட்டு வர்றேன்”, என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பப் போனவள்.

“ஏதாவது தைலம் வச்சிருக்கீங்களா”, என்று அவனிடமே கேட்க.

     “இங்க ஒன்னும் இருக்காது”, என்று சொல்லி கண்ணை மூடியப்படியே படுத்திருந்தான்.

    அவளோ, அவன் சித்தியிடம், “சரி நான் பாத்துட்டு வரேன், இல்லானா வாங்கிக்கலாம், நீங்க பாத்துக்கோங்க”, என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவள்.

வெளியில் நின்றவர்களிடமும் கையில் இன்னொரு இடத்திலும் வீக்கம் இருக்கிறது அதுதான் அதிக வலிப்போல என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு உள்ளே சென்று மீண்டும் தன்னிடமிருந்த ஆயில்மெண்ட் எடுத்து வந்தவள்.,

    ‘நாம தேச்சு விட்டா அதிக பிரசங்கி தனமா தெரியும்., வேண்டாம்’ என்று மனதில் சொல்லிவிட்டு அவன் அப்பாவிடம் கொடுத்து, “மாமா இத அவங்க கைல கொஞ்சம் தேச்சு விடுங்களேன்., வாங்க நான்  எந்த இடம்னு காட்டுறேன்”, என்று சொல்லவும்,

   கூடவே வந்தவர், “முரட்டு பையன், என்ன கோவம் வருது”, என்று சொல்லிக் கொண்டே சென்றார்.

      பாட்டியோ, “இவன் கிட்ட பேசுறதுக்கு முன்னாடி அவ நம்ம கிட்ட இல்லடா பேசியிருக்கணும்., அவளுக்கு என்ன அழுத்தம்”, என்று சொல்லவும்.

     “இப்ப பேசாம உள்ள வாங்க, ஏதாவது பேசினா மறுபடியும் டென்ஷன் ஆவான்”, என்று சொல்ல.,

   ‘வீட்ல ஏதோ பேச்சு வார்த்தை நடந்திருக்கு’ என்று இவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

  பாட்டி வெளியவே நின்று விட, இவள் போய் கையில்  எந்த இடத்தில் தேய்க்க வேண்டும் என்று காண்பித்து விட்டு, அதிகமாக அழுத்தம் கொடுக்காமல் தேய்க்கும்படி சொன்னவள்.

    “வலிக் குறையுதா ன்னு பாருங்க, இல்லாட்டி சொல்லுங்க”, என்று அவனிடம் சொல்ல.

அவன் மீண்டும் தலையசைப்பு மட்டும் தான் கண்ணை திறக்கவே இல்லை.,

     அவன் சித்தியும் அருகில் தான் இருந்தார்.

“வாயைத் திறந்து சொல்லேண்டா”, என்று சொல்ல.,

    “சொல்லுறேன் வலிச்சா”, என்று சொல்லி கண்ணை திறக்காமல் சொல்ல.,

    “இவன் ஒருத்தன், எங்கு உள்ள கோவத்தையும் நம்ம கிட்ட காட்டுவான்”, என்று சொல்லிக்கொண்டே  சித்தி வெளியே செல்ல.,

     இவளும் அவள் அவர்கள் பின்னாடியே சென்று விட்டாள்., ‘கதை கேட்க வேண்டுமே, என்ன நடந்தது என்று தெரிய வேண்டுமே’, என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது.

    அதன் பிறகு பாட்டி அங்க அமர்ந்து தாத்தாவிடம் புலம்பிக் கொண்டிருந்ததை கேட்டவளுக்கு, ஓரளவுக்கு இதுதான் விஷயம் என்று புரிந்து போனது.

     அப்போது சரிகாவின் அம்மா மேல் கோபம் வந்தது. ‘அந்த லேடிக்கு சும்மாவே இருக்க முடியாதா’ என்று வெளியே வேடிக்கை பார்ப்பது போல நின்றவள், மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.

     அதேநேரம் அவனுடைய நண்பனும் வந்துவிட, அனைவரும் இங்கு இருப்பதை பார்த்தவன்., “என்ன ஆச்சு போன் பண்ணுனீங்க ப்பா”, என்று கேட்டான்.

    அப்போது தான் சித்தார்த்தின் அப்பாவும் அவனுடைய அறையில் இருந்து வெளியே வந்தவர், விஷயத்தை சொல்ல இப்பொழுது முழுவதுமாக தெரிந்தது.

அவன் ராகவனோ பார்க்காதது போல இவள் முகத்தை பார்க்க, இவளோ வெளியே பார்ப்பது போல திரும்பி நின்றிருந்தாள்.

   பின்பு அனைவரிடமும் “நான் பார்த்துக்கிறேன், நீங்க போய் கீழ ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்லிவிட்டு

    “அவனுக்கு ஏதாவது சாப்பிடறதுக்கோ குடிக்கிறதுக்கோ எதுவும் குடுக்கனும்னா கொடுங்க” என்று சொன்னான்.

      சற்றே நிதானித்தவள், சித்தார்த்தின் அம்மாவிடம் கொஞ்சம் சூடாகவோ இல்ல ஐஸ் வச்சோ அந்த  இடத்துல ஒத்தடம் கொடுத்தீங்கன்னா, வீக்கம் குறையும்,கொஞ்சம் பெயின் கேட்கும் ஒருவேளை அதுக்கப்புறம் தூங்குறாங்களான்னு பாருங்க, தூங்கலனா சொல்லுங்க, ஸ்லீப்பிங் ஃபில் வாங்கிருவோம், பெயின் குறையணும், இவங்க தூங்கணும்”, என்று சொல்லவும்.,

     “சரி மா” என்று சொல்லிவிட்டு ஒத்தடம் கொடுப்பதற்கு தேவையானவற்றை எடுப்பதற்கு சென்று விட்டார்.

   மற்றவர்களும் கீழே செல்ல தொடங்க, ராகவன்  நண்பனை பார்ப்பதற்காக அறைக்குள் சென்றான்.

     இவளோ, சற்று நேரம் வெளியே நின்று வானத்தை வெறிக்க வேடிக்கை பார்த்துவிட்டு தன் அறைக்குள் சென்றவளுக்கு மனம் எல்லாம், அவனுடைய கோபமும் வலி நிறைந்த முகமும் மட்டுமே நினைவுக்கு வந்தது.