10

உன்னோடு நானும் வாழ

உன்னோடு நானும் சாக

உன் மடி சாயவா

உன் மடி சாயவா

உன் பார்வை என்னை கொல்ல

சாய்ந்தேனே நானும் மெல்ல

நீதான் என் மன்னவா

நீதான் என் மன்னவா

என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

   அந்தப் பிரச்சனைக்கு பிறகு ஒரு மாதத்திற்கு மேல் கடந்திருந்தது, அன்று மருத்துவமனையில் இருந்து வரும் போதே பூ மொட்டுக்களை வாங்கி வந்திருந்தாள்.

   அப்போது செடிக்கு தண்ணீர் பாய்பதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி தான்.,  “என்னம்மா வந்துட்டியா”, என்று அவள் காரை விட்டு இறங்கவும் கேட்டார்.

     சிரித்த படி “ஆமா பாட்டி, வந்தாச்சு”., என்றார்.

    “இன்னைக்கு நாள் எப்படி மா போச்சு, இந்த ஆஸ்பத்திரி எப்படி இருக்கு”, என்று கேட்டார்.

      ஏனென்றால் அவள் பி ஹெச் க்கு போவது முடிந்து விட்டது,  இப்பொழுது தான் மதுரை ஜி ஹெச் க்கு ட்ரைனிங் செல்ல தொடங்கியிருந்தாள்.

    “நல்லா இருந்துச்சு பாட்டி” என்று சொன்னவள், தன் காரில் இருந்தவற்றை எடுத்துக்கொண்டு நகரப் போகும் போது.,

   “என்னம்மா அரும்பு வாங்கிட்டு வந்திருக்க போல”, என்று கேட்டார்.

   “ஆமா பாட்டி, நாளைக்கு  கல்யாண வீடு,  நான் லீவு தான், எங்க செக்ஷன் ல உள்ள நர்ஸ்க்கு கல்யாணம், அதனால காலையில போகும் போது வைத்துட்டு போலாமேனு அரும்பா வாங்கிட்டு வந்தேன்., அவங்க கட்டி வச்சிருக்கறத வாங்கிட்டு வந்தா நாளைக்குள்ள எப்படி இருக்கும் ன்னு தெரியல.,  அதனால எனக்கும் டைம் போகனும் இல்ல,  அதுக்காக கட்டுவதற்கு வாங்கிட்டு வந்தேன்”, என்று சொல்லி சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.

    செடிக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மூன்றாவது மருமகள், “சொல்லி இருக்கலாமே மா, நான் வாங்கி வச்சிருப்பேனே, இங்க நல்லா கிடைக்குமே, பூப்பறிக்கிறவங்க கிட்ட சொல்லி வாங்கி தரலாம்”, என்றாள்.

    “அடுத்த முறை உங்ககிட்டே சொல்றேன்”, என்று சிரித்தபடி நகரப் போகவும்.

        அப்போது சித்துவின் அம்மா தான், “அம்மாடி, ஒரே ஒரு நிமிஷம்”, என்று அழைத்தார்.

“சொல்லுங்க அத்தை”, என்றாள்.

      வேண்டுமென்றே சரிகாவின் அம்மாவை மட்டும் இப்போது வரை அத்தை என்று அழைப்பதே கிடையாது. அவளை ஏற்கனவே ஆன்ட்டி என்று அழைத்தது ஆனால் இப்போது பேசுவது கூட கிடையாது என்பதால், சித்துவின் அம்மாவையும்  மூன்றாவது சித்தியும் அத்தை இன்றே அழைக்க தொடங்கி இருந்தாள்.

   “இன்னைக்கு நைட்டுக்காக கோழி செஞ்சேன்மா, நீ இப்பதானே வந்திருக்க, இன்னைக்கு கோழி சாப்பிட்டுவ தானே”, என்று கேட்டார்.

    “அதெல்லாம் சாப்பிடுவேன் குடுங்க”, என்று வாங்கிக் கொண்டவள் சிரித்தபடியே மாடி நோக்கி சென்றாள்.

    தள்ளி நின்று பார்த்த சரிகாவின் அம்மாவிற்கு தான்,  அந்த பிரச்சனைக்கு பிறகு மற்றவர்களிடம் சாதாரணமாக பேசினாலும் தன்னிடம் மட்டும் அவள் பேசுவதில்லை.

    ‘வீட்டில் யாருமே அவள் சிறியவள் தானே’ என்று அவளுக்கு அறிவுரை கூட சொல்வதில்லை.

      அவர் தன் மனதிற்குள்  புலம்பினாலும், அதை வெளியே காட்ட முடியவில்லை., ஆனால் மனதிற்குள் கோபம் கண்ணென்று இருந்து கொண்டே இருந்தது.

   தன்னறைக்கு சென்றவள் எல்லாத்தையும் வைத்து விட்டு, எப்போதும் போல குளித்து உடைமாற்றி தனக்கு மட்டும் காபி கலந்து கொண்டு அமர்ந்தவள்.,

   இரண்டு நாட்களுக்கு முன்பு சரிகாவின் சித்தியான அந்த  வீட்டு மூன்றாவது மருமகள்,  தன் பிள்ளைகளுக்கு ஆகவும், வீட்டினருக்காகவும், செய்த முறுக்கு தட்டை போன்ற பலகாரங்களை மேலே கொண்டு வந்து கொடுத்திருந்தார்.

     அதை எடுத்து காபியோடு சாப்பிட்டுக் கொண்டே அமர்ந்திருந்தவள், சித்துவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். ‘தன்னால் தான் அவன் வரவில்லையோ’ என்ற எண்ணம் வந்தாலும்.,

    ‘அவங்க வீட்டுக்கு அவங்க வரணும்னா வருவாங்க பார்த்துக்கலாம்,  நாளைக்கு கல்யாண வீட்டுக்கு போகணும், அதுக்கு என்ன சாரி கட்டலாம் ன்னு யோசிப்போம், பூ கட்டுவோம் முதல்ல”, என்று யோசித்து விட்டு தன் வாங்கி வந்திருந்த பூவை எல்லாம் கட்ட தொடங்கி இருந்தாள்.

   கட்டி முடித்து அதை பத்திரப்படுத்திவிட்டு, இரவு உணவுக்காக கீழே இருந்து ஏற்கனவே கோழி குழம்பு வந்து விட்டதால், தனக்கு இரண்டு சப்பாத்திகளை மட்டும் போட்டவள், ‘நாளைக்கு சமையல் வேலை இல்ல, காலையிலேயே கல்யாண வீடு, மத்தியானம் லஞ்ச் முடிச்சு தான் வருவோம்., நைட் டின்னருக்கு தான் பார்க்கணும், பாத்துக்கலாம்’, என்று யோசித்து விட்டு மெலோடியான பாடல்களை தன் அறையில் ஒலிக்க விட்டவள் தன் தோழியோடு பேசிக்கொண்டிருந்தாள்.

     மறுநாள் காலை குளித்து கிளம்பி,  லேசான ஆரஞ்சு வண்ணத்தில் அதற்கு அடர் பிங்க் நிற பார்டர் கொண்ட பட்டுப்புடவை எடுத்து தன் மீது வைத்து பார்த்தவள், அது அழகாக தெரிய, அதையே கட்டிக் கொள்ளலாம் என்ற  முடிவோடு எடுத்து வைத்து விட்டு கிளம்பினாள்.

     புடவை கட்டி முடித்ததும் தலை நிறைய பூவை வைத்து திரும்பி பார்த்தவள், சேலையை சரி செய்து கொண்டு தன்னை ஒரு முறை கண்ணாடியில் சுத்தி திரும்பி பார்த்துக் கொண்டவள்.,

      “சாரிடா சித்து, உனக்கு கொடுத்து வைக்கல., நான் என்ன பண்ணட்டும், நீ தானே வேண்டாம் ன்னு சொன்ன”, என்று சிரித்துக்கொண்டே கண்ணாடியை பார்த்து சொன்னாள்.,

“இருந்தாலும் நீ பாவம் தான்டா, ஒரு நல்ல பொண்ணு வாலண்டியரா  வந்து லவ் சொன்னா வேண்டாம் ன்னு சொன்ன தானே, எனக்கு தெரிஞ்சு நான் அழகா தான் டா இருக்கேன், ஆனா நீ வேண்டாம் ன்னு சொல்லிட்ட, உனக்கு கொடுத்து வைக்கல விதி விளையாடி இருக்கு., சரி என்ன பண்ண., உனக்கு எங்கேயாவது கண்டாங்கி சேலை கட்டின கிழவி தான் வரணும்னு இருந்தா மாத்தவா முடியும்.,

    அங்கிள் ன்னு சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன், நீ ஆன்ட்டி மாதிரி ஒரு பொண்ணு தான் வேணும்னு சொன்னா என்ன பண்ண முடியும்., இனி அவ்வளவு தான் நோ சான்ஸ்”, என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே.,

    “ஆனாலும் நீ பாவம்டி அனாமிகா, அந்த சுமார் மூஞ்சி குமாருக்கு கூட உன்னை வேண்டாம் ன்னு சொல்லிட்டான், நீ என்ன பண்ணுவடி”, என்று மனசாட்சி கேட்டது.

    இவளோ, “அவன் ஒன்னும் சுமார் மூஞ்சி குமார் எல்லாம் இல்ல, நல்லா தான் இருப்பாரு, நீ ரொம்ப ஓவரா என் சித்துவ கலாய்க்காதே”, என்று மனசாட்சியிடம் வாதாடி விட்டு,

     “நான் வேண்டாம் ன்னு அவங்க சொன்னாங்க என்பதற்காக நான்  ஒதுங்க எல்லாம் இல்லை,  நான் ட்ரை பண்ணுவேன், எங்க இருக்கான்னு இடம் மட்டும் தெரியட்டும்,  அவன் இடத்துக்கு போய் அவனை தூக்குறேனா இல்லையான்னு பாரு”, என்று சொன்னவள்,

      “ரொம்ப எல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டாம், வெயிட் பண்ணுவோம், ஒரு மூணு நாலு மாசம் பாப்போம், செட் ஆகாதுன்னு தோணுச்சுன்னா,  கரெக்டா இங்க ட்ரெயினிங் முடியுறதுக்கு, ரெண்டு மாசம் முன்னாடி அண்ணா கால்ல விழுந்து சரண்டர் ஆயிடுவோம்., அண்ணா எனக்கு அவரை புடிச்சிருக்கு கட்டி வையின்னு சொல்லிடுவோம்., மீதியை அண்ணன், தாத்தா ,அப்பா எல்லாம் சேர்ந்து பேசி முடிக்கட்டும், எப்படி ஐடியா”, என்று கண்ணாடி முன்னாடி நின்று கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்திடம் பேசியவள்., பின்பு சந்தோஷமாக குதித்துக் கொண்டாள்.

   “ஓகே ஒரு ஐடியா கிடைச்சிருச்சு , அந்த சித்து எனக்கு தான்”, என்று சொல்லவும்.,

    அவள் மனசாட்சியோ, “நீ அழகா தானே இருக்க., சரி அவன் வேண்டாம்னு சொன்னாலும், அவன் கிட்ட தான் போவேன்னு சொன்னா, என்ன பண்ண முடியும் போ,  உன் தலை எழுத்த யாரால மாத்த முடியும், அவனுக்கு தலையெழுத்து நல்லா இருக்கு போல”, என்று சொன்னது.

      “ஏய் நீ என் சித்துவ ஒரேயடியா கலாய்ச்ச நடக்கிறதே வேற”, என்று சொல்லிக் கொண்டவள் சந்தோஷமாகவே கிளம்பி கீழே சென்றாள்.