நீ ஒண்ணா தந்தத பத்தா திருப்பி நிச்சயம் நான் தருவேன்…
வேலன் குடில் என்ற பெயரிட்ட அந்த பெரிய வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் மிகவும் கலகலப்பாகவும் மகிழ்வாகவும் நடந்து கொண்டிருந்தது.
வீட்டின் பெரியவர் மூத்தவர் வேலன், அவரது மனைவி சரோஜா, இவர்களுக்கு ஒற்றை மகனாக கருணாகரன், அவரின் மனைவி தேவகி.,
இவர்களின் மகன் நித்திலனுக்கு தான் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
மற்றவர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாலும், வேலன் யோசனையோடு அமர்ந்திருப்பதை பார்த்த சரோஜா தான்.,
“ஏன் இவ்வளவு யோசனை, எதுவும் குறை இருக்குனு நினைக்கிறீங்களா”, என்றார் கேள்வியாக,
அருகில் இருந்த கருணாகரனும், ‘என்ன ஆச்சு’ என்று யோசனையோடு தன் தந்தையை ஏறிட்டார்.
வேலனும், “அதெல்லாம் ஒன்னும் இல்ல, இந்த பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன் ன்னு சொல்லுறாளே, இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணதுக்கு அப்புறம்., நித்திலனுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தா அது சந்தோஷமா இருந்திருக்கும்., இப்ப யோசனையா இருக்கு, கல்யாணத்துக்கு வர்றவங்க, சொந்தம் ன்னு எல்லாரும் கேப்பாங்க இல்ல., ஏன் பேத்திக்கு பண்ணல அப்படி ன்னு, அந்த யோசனை தான்”, என்று சொன்னார்.
சரோஜா பாட்டியும், “இது தானா, இத உங்க பேத்தி கிட்ட கேட்க வேண்டியது தானே”, என்று கேலியாக சொல்லி சிரித்தார்.
அவரும் “மேல் படிப்பு படிக்கணும் னா, இந்தா படிச்சிட்டு தான் இருக்கா, இன்னும் ஒரு மாதம் தான், அப்புறம் ஒரு வருஷம் டிரைனிங் அதோட படிப்பு முடியும்., சரி இப்பவே மாப்ள பார்க்கலாம் பேசி வைக்கலாம் என்றாலும்., பார்க்க விடமாட்டா, நானும் இப்போ இதே யோசனைல தான் இருக்கேன்., அவளுக்கு முடிச்சிட்டு தான் நித்திலனுக்கு முடிக்க நினைச்சேன்., ஆனா ஜோசியர் தான் இவனுக்கு இப்போ கல்யாண நேரம் கூடி வந்திருச்சு பேசுங்கன்னு சொல்லிட்டாரு., அதனால தான் உடனே பேச வேண்டியதா போச்சு”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கருணாகரன் தான் “என்னப்பா பொண்ணு வீடு எதுவும் உங்களுக்கு மனசுக்கு குறையா இருக்கா”, என்று கேட்டார்.
“அப்படி எல்லாம் இல்லடா, பொண்ணு பாத்துட்டு வந்தது எல்லாமே மனசு திருப்தி தான்.,
“இந்த பேத்தி பொண்ணு நினைச்சா தான்”, என்று யோசனையோடு சொன்னார்.
“இப்ப கிளம்பி வருவா, நீங்களே பிடிச்சு வைச்சு கேளுங்க”, என்று கருணாகரன் மனைவி தேவகி சொல்லிவிட்டு சென்றார்.
தன் படிப்பை இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முடிக்கவிருக்கும் அந்த வீட்டின் இளவரசி இறங்கி வர தாத்தாவோ, பாட்டியிடம் “நீ பேச ஆரம்பி, அதற்கு அப்புறம் நான் கேட்கிறேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
மருத்துவத்துறையில் மேற்படிப்பை படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு திருமணம் செய்துவிட்டு தான் அவளது அண்ணனுக்கு மணம்முடிக்க வேண்டும் என்று பெரியவர்கள் விரும்பினர், அவளோ திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
படிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் முடிந்து விட்டாலும், அதன் பிறகு ஏதாவது ஒரு ஊர் பக்கம் இருக்கும் அரசு மருத்துவமனையில் ட்ரைனிங் செல்ல வேண்டும். அதன் பிறகு தான் படிப்பு முடிந்ததாக எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே இன்னும் இரண்டு மாத படிப்பு மட்டும் தான் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அவளும் வந்து அமரவும் பாட்டி தான், “சாப்பிடலையா மா”, என்று கேட்டார்.
“சாப்பிடனும் பாட்டி” என்று சொல்லியபடி தன் கட்டியிருந்த புடவையை சரி செய்து கொண்டிருந்தாள்.
“பாட்டி” என்று பேச்சை ஆரம்பித்தவள், “இன்னைக்கு அந்த சாரி கடைக்கு போலாம்னு சொல்லி இருந்தீங்க இல்ல., ஈவினிங் கிளம்பி ரெடியா இருங்க., நான் வரேன், வந்தவுடனே போவோம்”, என்று சொல்லியவளை பார்த்து.,
“ஊர்ல உள்ள பிள்ளைகள் எல்லாம் விதவிதமா டிரஸ் போடுது., புது மாடல் மாடலா டிரஸ் வருது, இவ ஒருத்தி சேலை தான் கட்டுவேன் ன்னு சுத்துறா, தறில நெய்த சேலை னா தேடி வாங்குறா, இப்படி சேலை தான் வேணும், இந்த மாதிரி சாப்டா வேணும் அப்படின்னு சொல்லி பார்த்து பார்த்து தேடிட்டு அலையுதா”, என்று சலிப்போடு சொல்லவும்.,
“மாடன் டிரஸ் போடலாம் பாட்டி, ஆனால் எனக்கு பிடிக்கனும் இல்ல., இப்போ பிரண்ட்ஸோட டூர் போகும் போது ஜீன் போடலாம் குர்த்தி போடலாம்., ஹாஸ்பிடல் போகும் போது ஈவினிங் டூட்டி அந்த மாதிரி ஷிப்ட் இருந்தா., சுடிதார் போட தான் செய்றேன்., எனக்கு சாரி புடிச்சிருக்கு, அதனால சாரி கட்டுறேன்., நீங்க எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க., உங்களை மாடர்ன் டிரஸ் போட சொல்லி நான் ஏதாவது சொல்றனா, இல்ல தானே”, என்று சொன்னாள்.
தாத்தாவோ சிரித்துக்கொண்டே “நீ சும்மா இரு” என்று பாட்டியை பார்த்து சொல்ல.,
அவரோ “ஊர்ல உள்ள பிள்ளை எல்லாம் எப்படி இருக்கு, 20 வயசு, 21 வயசுல எவனையாவது லவ் பண்ணிட்டு வந்து நிக்குது., இங்க பாருங்க 25 வயசு ஆக போறது, கல்யாணம் பேச்சு எடுத்தாலே வேண்டாங்க., ஏம்மா எப்ப தான் கல்யாணம் பண்ணிக்க போற”,என்று பாட்டி கேட்கவும்.,
அவளும் சிரித்துக் கொண்டே “கல்யாணம் தானே பாட்டி பண்ணிட்டா போச்சு, முதல்ல அண்ணனுக்கு பண்ணி வைங்க, அண்ணி வரட்டும் கொஞ்ச நாள் ஜாலியா இருங்க., எனக்கு எப்ப கல்யாணம் வேணும்னு தோணுதோ அப்ப நான் சொல்றேன்”, என்று சொன்னாள்.
‘இந்த காலத்து பிள்ளைகள நினைச்சா தான் பயமா இருக்கு., இவ சொல்ற மாதிரி எல்லாம் எப்படி தோணும், எப்ப பார்த்து எப்படி முடிக்க’, என்று வாய்க்குள் முணுமுணுத்தார்.
இவளோ, “ஏம் பாட்டி ஏதாவது முனுமுனுத்திங்க” என்று கேட்டுக் கொண்டே எழுந்தவள், “இருங்க நான் சாப்பாடு இங்க எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி டைனிங் டேபிளுக்கு சென்றவள்,
தனக்கான உணவை எடுத்துக் கொண்டு பாட்டிக்கு எதிரே இருந்த சோபாவில் வந்து அமர்ந்தவள்., தாத்தாவை நிமிர்ந்து பார்த்தாள், இன்னைக்கு ஒரு நாளைக்கு ஹால்ல உக்காந்து சாப்பிடுறன்னு பெர்மிஷன் எல்லாம் கேட்க மாட்டேன் தாத்தா., எங்க உக்காந்து சாப்பிட்டா என்ன., சாப்பிட கூட பிரீடம் இல்லையா”, என்று தாத்தாவின் பார்வைக்கு பதில் சொல்லிவிட்டு.,
பாட்டியிடம் “இப்ப கேளுங்க, நான் சொல்றேன்”, என்று சாப்பிட தொடங்கினாள்.,
அம்மா தான், “எப்ப கல்யாணத்துக்கு சம்மதிப்ப, உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்னு சொல்லு., அப்படி நாங்களாவது பாப்போம் இல்ல”, என்று சொன்னார்.
“நீங்க பாக்குற மாப்பிள்ளையா இருந்தாலும் சரி, நான் பார்த்து எனக்கு உடனே பிடிக்கிற மாப்பிள்ளையா இருந்தாலும் சரி., ஆனா எனக்கு தோணனும்., அப்பதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்”,என்றாள் சிரித்துக்கொண்டே.,
“அப்படி என்னடி தோணனும்”, என்று அந்த பக்கமாக வந்த அவள் அம்மா கேட்டார்.
“தோணுமா, அவரை பார்த்த உடனே தோணும்., இவர் தான் எனக்கு அப்படின்னு தோணும்”,என்றாள்.
“அப்புறம்” என்று பாட்டி கேட்கவும்,
“அவருக்காக எவ்வளவு நாள் என்றாலும், நான் காத்திருந்து கல்யாணம் பண்ணிக்குவேன்”, என்று சொல்லவும்.,
“ஏண்டி என்னதான் சொல்ல வர்ற”, என்று அவள் அம்மா கேட்டார்.