7

அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவொடு நான் எரிவதும் பகலொடு நான் உறைவதும்

நீ வாழும் அறை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலருவதும் நோய் கொண்டு நான் அழுவதும்

அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்

     மதுரைக்கு வந்து கிட்டத்தட்ட 15 நாட்கள் கடந்து இருந்தது., வேலைக்கு சேர்ந்து  12 நாட்களுக்கு மேலானது., போய் வருவது சற்று தொலைவு தான் என்றாலும் அவளுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது.

   மக்களின் அன்பும், அவளிடம் காட்டும் மரியாதையும், அவளுக்கு அங்குள்ள வெகுளி மக்களின் அன்பை அத்தனை பிடித்திருந்தது.

    அவர்கள் பேசும் தமிழ் வித்தியாசமாக இருந்தாலும், புரிந்து கொள்ள நன்றாக தான் இருந்தது,அவள் அண்ணி  வீட்டில் உள்ளவர்கள் அதிகமாக இழுத்துப் பேசுவது இல்லை, மதுரை தமிழ் முழுவதுமா பேசுவதில்லை, எல்லா வீட்டிலும் பிள்ளைகள் வெளியூரில் பள்ளிக்கு, கல்லூரிக்கு,  சென்று படித்ததால் கொஞ்சம் ஓரளவுக்கு இவளிடம் பேசும் போது சாதாரணமாக பேசினார்கள்.

   அவர்களுக்குள் பேசும் போது மதுரை தமிழ் தான் அதிகமாக இருக்கும், அதை நினைத்துக் கொண்டவள் இங்கு பேசும் மக்களிடம் எளிதாக பேசி பழகிக்கொண்டாள்.

அன்று ஹாஸ்பிடலிருந்து திரும்பி வந்தவள் காரை நிறுத்திவிட்டு இறங்கி வரவும், பாட்டி தான் “இங்க கொஞ்சம் வந்துட்டு போடா” என்று வாசலில் இருந்து அழைத்தார்.

     இவளோ பாட்டிக்கு சற்று தள்ளி நின்றபடி, “சொல்லுங்க பாட்டி, ஹாஸ்பிடல் இருந்து வரேன், பக்கத்துல வரக்கூடாது, நான் போய் குளிச்சிட்டு வரட்டுமா”, என்று கேட்டாள்.

     பாட்டி தான், “அதெல்லாம் ஒன்னும் இல்ல, உங்க பெரிய அத்த இருக்காளே, அவ மகன் வந்திருக்கான்னு அவனுக்கு பிடிச்ச பலகாரமா செஞ்சா.,  சரி நீயும் இப்பதானே வர அதுதான் எடுத்து வச்சிருந்தேன்., சாப்பிட்டுட்டு போறியா”,  என்று கேட்டார்.

“இல்லை பாட்டி”, என்று சிரித்தபடி கிளம்பப் போனவள் கையில் ஒரு கிண்ணத்தில் போட்டு அன்று சித்தார்த்தனுக்காக அவன் அம்மா செய்ததை கொடுத்தார்.

       “பாட்டி, இது இங்கே இருக்கட்டுமே, நான் குளிச்சிட்டு வந்து எடுத்துக்கிறேன்”, என்று சொன்னாள்.

    பாட்டி தான், “ஏன்மா”, என்றார்.

    ‌ “இல்ல குளிக்காம எடுக்க வேண்டாம் ன்னு  தான்., நான் குளிச்சிட்டு வந்து எடுத்துக்கிறேன்”, என்று சொல்லி அப்படியே வாங்காமல் மாடிக்கு சென்றவள்.,

     எப்பொழுதும் போல மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் குளித்து வேறு உடை மாற்றிக் கொண்டவள், ‘இன்று அவனைப் பார்க்கும்போது எந்த மாதிரி எண்ணங்கள் தோன்றுகிறது, என்பதை கவனிக்க வேண்டும்’ என்ற நினைவோடு கீழே பாட்டியின் வீட்டை நோக்கி சென்றாள்.

    பாட்டியிடம் பேசியபடி “நான் காபி குடிச்சிட்டேன்., நீங்க கொடுத்ததுல ஒன்னே ஒன்னு மட்டும் எடுத்துக்கிறேன், எனக்கு நிறைய வேண்டாம், நைட்டுக்கு காலையில  வச்ச குழம்பு இருக்குது, சோ நான் ரைஸ் வச்சு சாப்பிடுக்குவேன்”, என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்.

    பாட்டி தான், “இங்க ஒரு நாளாவது சாப்பிடுறீயா” என்று கேட்டார்.

       “பாட்டி உன்கிட்ட ஒன்னு கேட்கணும், ஏதோ மிளகாய் வச்சு புளி மிளகாய்னு ஏதோ ஒன்னு செய்வாங்கலாமே, அது எப்படி செய்வீங்க, உங்களுக்கு தெரியுமா”, என்று கேட்டார்.

   பாட்டியோ, “அது புளிப்பா நல்லா இருக்கும், உனக்கு வேணும்னா நான் செஞ்சு தரவா”, என்று கேட்டார்.

   “எனக்கு இல்ல பாட்டி, எங்க பிஹெச்க்கு வர்ற ஒரு பிரக்னன்ட் லேடி, வெளியூர்ல உள்ளவங்க, இங்க கல்யாணம் பண்ணி வந்து இருப்பாங்க போல, ‘உங்களுக்கு புடிச்சதெல்லாம் சாப்பிடுங்க’ அப்படின்னு சொல்லும் போது ‘எனக்கு இதுதான் ரொம்ப பிடிக்கும் ஆனா, எங்க வீட்ல உள்ளவர்களுக்கு இது ரொம்ப தெரியாது அப்படின்னு சொன்னாங்க’ அவங்களும் வில்லேஜ் சைட் தானே இருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு கேட்டேன், இவங்க எதிர்பார்க்கிற டேஸ்ட் அதுல வரல அப்படின்னு சொன்னாங்க, அதுதான் நம்ம ஜஸ்ட் ட்ரை பண்ணி பார்க்கலாம் ன்னு யோசிச்சேன்”, என்று சொன்னாள்.

    பாட்டி அதற்கான செய்முறைகளை விளக்கிக் கொண்டிருந்தார். இவளோ  கேட்டுக் கொண்டு “ஓகே பாட்டி” என்றாள்.

    “ஏம்மா”, என்று கேட்டார்.

     “நான்  ட்ரை பண்ணி செஞ்சு கொடுக்கலாமேன்னு பார்த்தேன், ஒருவேளை இந்த டேஸ்ட் அவங்களுக்கு புடிச்சிருந்துச்சுன்னா, நல்லா இருக்கும்ல”, என்று பாட்டியிடம்  சொல்லிக்கொண்டே கிளம்ப போகும் போது தான்., அவன் அவன் அப்பாவோடு வண்டியில் வந்து இறங்கினான்.

    தோட்டத்திற்க்கு சென்று விட்டு வந்திருப்பான் போல.,  லுங்கி டீசர்ட் ம்மாக வந்தவன் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல நகர்ந்தான்.

   இவள் தான் ஓரக்கண் வழியாக பார்த்தாள்.

      அவன் பார்க்காமல், அவளை கண்டுகொள்ளாதது போல போவது முதல் முதலாக அவளுக்கு மனதிற்குள் ஒரு வலியை கொடுத்தது போல உணர்ந்தாள்.

    ‘நம்ம இங்க வந்ததுக்கப்புறம் இதுதானே, ஃபர்ஸ்ட் டைம் பாக்குறாங்க, ஒரு வார்த்தை வா ன்னு கூடவா கேட்க மாட்டாங்க’ என்று நினைத்துக் கொண்டவள்.

        ‘நீ  ட்ரைனிங் வந்தியா, எதுக்கு வந்த’, என்று மனசாட்சி கேட்டது, ‘எல்லாத்துக்கும் சேர்த்து தான் வந்தேன்’ என்று மனசாட்சிக்கு பதில் சொல்லிக் கொண்டவள்.

     ‘மெனக்கெட்டு இந்த ஊரை எடுத்ததற்கான ரீசனே இந்த மட சாம்பிராணி தானே’, என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே.,

   பாட்டியிடம் “பாட்டி வரேன்” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு விடைபெற்றாள்.

அங்கிருந்து வீட்டிற்கு சென்றவள், தன் வீட்டின் எப்போதும் போல தனக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு விட்டு., மறுநாள் சமையலுக்கு தேவையானவற்றை தயார் செய்து வைத்தாள்.,

     பாட்டி சொன்னது போல புளி மிளகாய்  செய்து எடுத்து வைத்தவள்.,  அதன் ருசித்து பார்க்க நன்றாக தான் இருந்தது.

    புளிப்பும் உரைப்பும்  ஆக நன்றாகவே இருந்தது.

     பாட்டி சொன்னது போல கடைசியாக ஒரு துண்டு வெல்லம் போட்டதால் லேசான இனிப்பும் சேர்ந்து அதன் ருசி தனியாக தெரிந்தது.,  நல்லெண்ணெயில் செய்திருந்ததால் அதன் வாசமும் நன்றாகத் தான் இருந்தது.

     ‘இப்படித்தான் இருக்குமோ, ஒரு வேளை இந்த டேஸ்ட் அவங்களுக்கு புடிச்சிருக்கு போல’, என்று நினைத்துக் கொண்டவள்.

    அதை தனியாக ஒரு பாக்ஸில் எடுத்து வைத்துவிட்டு தன் அறையை சுத்தம் செய்து விட்டு எப்போதும் போல படுத்தவளுக்கு ஏனோ தூக்கம் மட்டும் தூரம் போனது போல இருந்தது.

தன்னை கண்டு கொள்ளாமல் போனவனை நினைத்த மனமோ அவளிடம், ‘நீ என்ன பெரிய ரதிதேவியா, உன்ன பாத்த உடனே எல்லாரும் ஆ ன்னு  வாய திறந்து பாக்குறதுக்கு., இருந்தாலும் உனக்கு ஓவர் நினைப்பு தான் தெரியுமா அனாமிகா’,  என்று மனசாட்சி அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தது.

அவளோ ‘மனசு என்ன நினைக்குதுன்னே தெரியலையே, என்னை இப்படி குழம்புன குட்டை மாதிரி ஆக்கிவிட்டுட்டாங்களே., இதுல ஒரு மீனை கூட பிடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.,  கூட கொஞ்சம் தான் குழம்பும் போல’ என்று நினைத்துக் கொண்டவள்.

    ‘அப்புறமா பார்ப்போம்’ என்று யோசித்துக் கொண்டாள்.

    மறுநாள் இவள் கிளம்பி கீழே வரும் போது பாட்டி வெளியில வந்து பேசிக் கொண்டிருந்தார்.

    தாத்தாவும் வீட்டில் உள்ள ஆண்களும் போர்ட்டிகோ வில் அமர்ந்து ஏதோ காரசாரமான விஷயமாக பேசிக் கொண்டிருந்தனர்.