அவனது கனவுத்தாரகை சிவனின் தீவிர பக்தை. சிவனுக்கு உகந்த நிறம் என்று அவள் ஒரு பட்டியலிடுவாள். வெள்ளையும், நீலமும், சாம்பலும், சிவப்பும், பொன்னிறமும் என்பதாக. அவளது முக்கிய தினங்களில் அந்த நிறங்கள் கலந்த கலவையினாலான உடை கண்டிப்பாக இருக்கும்.
என்னவோ தெரியவில்லை அவளின் அந்த குணம் இவனுக்கும் தொற்றிக் கொண்டு விட்டது வேடிக்கை தான் என்றால், எதிரில் நின்றிருப்பவளை இப்படி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?
இதுவரை எந்த பெண்ணைப் பார்த்த போதும் முகிலனுக்கு அவளது நினைவுகள் வந்ததில்லை. இதோ எதிரில் இருக்கும் இந்த பெண்ணை முதல் முதலில் பார்க்கும் பொழுது காரணமேயின்றி அவளது நினைவுகள் மேலெழுந்து நின்று சோதிக்கிறது.
தனக்காக வீட்டில் பார்த்திருக்கும் பெண் இவள் என்று தெரிந்ததும் இவளிடம் அவளைத் தேட விளைகின்றேனா? அப்படியானால் அது தவறு இல்லையா? மனம் அதீதமாகக் குழம்பியது.
வெண்மதிக்கும் அந்த நொடிகளைக் கடக்கத் தெரியவில்லை. சற்று முன்பு அவனைப் பார்த்தபோது அவளுக்கு என்ன நிலையோ மீண்டும் அதே நிலை தொடர்ந்தது.
“என்னடி ரெண்டு பேரும் இப்படி பார்த்துட்டே இருக்காங்க” சிந்துவும் நிஷாவும் குழம்பிய வேளையில், கோயில் மணி ஓசை சற்று பலமாகக் கேட்டது.
அதில் அவர்கள் இருவரும் ஒருசேரக் கலைந்திருந்தார்கள். ‘ச்சே! ஏன் இப்படி பார்த்துட்டு இருந்தோம்?’ என்று வெண்மதிக்கு லஜ்ஜையாகிப் போனதென்றால், ‘இங்கே வந்த வேலை என்ன? நீ என்ன பண்ணிட்டு இருக்க?’ என்று இளமுகிலன் சங்கடப்பட்டுப் போனான்.
முதலில் சுதாரித்து கைகளை நன்கு ஊன்றி அமர்ந்திருந்த திண்டிலிருந்து கீழே குதித்து தன் இரு கைகளையும் தட்டி அதிலிருந்த மண்ணை உதறியவன், அவள் முன்பு வலது கையை நீட்டி, “இளமுகிலன்” என்றான் அறிமுகமாக.
மனதிற்குள், ‘சொதப்பாம யோசிச்சு வச்சதை சொல்லிடுடா’ என்று உருப்போட்டுக் கொண்டிருந்தான்.
தன்னை நோக்கி நீண்ட கரத்தினை தயக்கமின்றி பற்றிக் குலுக்கியது மங்கையவளின் கரங்கள். அவன் விழிகளில் ஆழ்ந்தபடியே, “வெண்மதி” என்று சொல்லியிருந்தாள்.
“ஹே இவ என்னடி சிந்துன்னு சொல்லாம வெண்மதின்னு சொல்லறா?” இந்த சொதப்பலை எதிர்பார்க்காமல் சிந்து குழம்பினாள்.
“தெரிலையேடி. என்னவோ அவளுக்கு இன்னைக்கு மூடே நல்லா இல்லை. சரி விடு நடக்கிறது நடக்கட்டும்” என்று நிஷா சொல்ல, சிந்துவின் வயிற்றில் பாலை வார்த்தது போல, இளமுகிலன் வெண்மதி என்ற பெயரில் குழப்பம் அடையவில்லை.
இளமுகிலன் பிரகாரம் சுற்றுவது போல நடக்க இயல்பாக வெண்மதியும் அவனுடன் இணைந்து கொண்டாள்.
எதையாவது பொதுப்படையாகப் பேசியபடி திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட வேண்டும் என்று இளமுகிலன் தனக்குள் உருப்போட்டுக் கொண்டிருப்பது தெரியாமல், திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற பதற்றத்தில் வெண்மதி பெரும் சொதப்பலை தொடங்கியிருந்தாள்.
அவளுள் இவனைக் கண்டதும் மெல்லிய தடுமாற்றம் எழாமல் இருந்திருந்தால், அவள் எண்ணி வந்ததுபோல தெளிவாகப் பேசி தன் அடாவடித்தனத்தால் அவனை ஆட்டிப் படைத்திருப்பாள்.
இப்பொழுதோ ஏன் தடுமாறி நின்றோம் எனத் தெரியாத பதற்றம்! எதையாவது சொதப்பி விடப்போகிறோம் என்கிற அச்சம்! இதெல்லாம் சேர்ந்து அவளின் இயல்பைத் தொலைத்திருந்தது.
‘சொதப்பிடாத! சொதப்பிடாத!’ என்று தனக்குள் உருப்போட்டபடி, “என்ன வொர்க் பண்ணறீங்க?” என்று மிடுக்காகப் பேச்சைத் தொடங்கினாள். கொஞ்சம் விசாரணை செய்யும் தோரணையை உடல்மொழியில் கொண்டு வந்திருந்தாள்.
தான் பேச யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் பொதுவாகத் தொடங்கவும், “டீம் லீட்” என்று பதில் சொல்லி விட்டவன், பக்கவாட்டில் அவள் தோற்றத்தை அளவிட்டான்.
‘இந்த சுடிதார் வகை எல்லாம் என் ரசனை இல்லையாக்கும்’ என்று சொல்வது போல அசிரத்தையாக உடுத்தியிருந்தாள். ஆனால், அதுவே அவளுக்கு பெரும் அழகை சேர்த்தது போல இருந்தது. தன் எண்ணம் இதுபோல பயணிக்கவும், ‘அடங்குடா’ என இளமுகிலன் தன்னையே கடிந்தப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“சேலரி… ஒன் பாய்ண்ட் பைவ் வருமா?” இப்பொழுதும் வெண்மதி கொஞ்சம் மிதப்பாகவே கேட்க, எரிச்சல் வர வேண்டியவனுக்கு அவளின் தோரணையே அத்தனை ஈர்த்தது. கூடவே அவளின் குரல் அவனுள் எல்லா செல்களையும் உயிர்ப்பிப்பது போல இருக்க, “ஹ்ம்ம்…” என்று மட்டும் சொன்னான்.
‘இவன் என்ன லேட்டா வந்ததுக்கும் கோபப்படலை. இப்ப இத்தனை விவரமா விசாரிக்கிறேன் இதுக்கும் கோபப்படலை’ என்று நொந்தவள், “பாருங்க, இப்படி கிளம்பி வந்து பொண்ணு பார்க்கிறது எல்லாம் நல்லாவா இருக்கு. கொஞ்சம் அப்கிரேட் ஆக மாட்டீங்களா?” என்று சொல்ல, இவள் மட்டும் என்ன செய்ய வந்திருக்கிறாளாம் என்று அவளை வினோதமாகப் பார்த்தான் இளமுகிலன்.
குரலை செருமி, “நீங்க கூட கிளம்பி வந்து மாப்பிள்ளை தான் பார்க்கறீங்க. அப்கிரேட் ஆக வேண்டியது தானே?” என்று திருப்பி கேட்க, அவள் திருதிருவென விழித்தாள்.
‘அச்சோ! என்னடி இப்படி சொதப்பற. கொஞ்சம் உன் மைண்டை போகஸ் பண்ணு. உருப்படியா ஏதாவது பேசு. அவனுக்கு உன்னை பிடிக்காம போகணும்’ என்று தனக்குள் உருப்போட, வெண்மதி திருதிருத்ததும் இப்பொழுது அடுத்து என்ன பேச என்று தடுமாறுவதும் அவனது நெஞ்சை கொள்ளை கொண்டது. இவளின் குரல் வேறு கேமர் த்ரீயின் குரலோடு ஒத்திருக்க, அவனின் உயிர் வரை தீண்டியது.
இதுமாதிரி வினோதமாக அவன் எண்ணங்கள் பயணித்ததே இல்லை. அவனாயிற்று அவனுள் பயணிக்கும் ‘கேமர் த்ரீ’ ஆயிற்று என்று தான் இருப்பான். முதல்முறை ஒரு பெண் அவனை வெகுவாக ஈர்க்கிறாள். இவனுக்கு இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை. இது நல்லதிற்கா கெட்டதிற்கா என்றும் புரியவில்லை.
இவர்கள் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த சிந்துவிற்கும் நிஷாவிற்கும் வெண்மதி இயல்பாக இல்லை என்று புரிந்து விட்டது. சிந்து தன் புலம்பலைத் தொடங்க, நிஷா அவளை அதட்டி, “அவ தான் ஏற்கனவே இன்னைக்கு என்னவோ சரியில்லைன்னு சொன்னா தானே? நீ தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வெச்சிருக்க. அப்ப வரதை அனுபவி. சும்மா புலம்பினா கழுத்தை திருகிடுவேன்” என்று மிரட்டினாள். அதன்பிறகு அவள் கப்சிப்.
வெண்மதி கொஞ்சம் தன்னை நிலைப்படுத்தி இறுக்கமான குரலில், “பாருங்க இளமுகிலன் உங்களைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது. இந்த காலத்துல நிறைய பேரு சைக்கோ மாதிரி இருப்பாங்க. அந்த மாதிரி எதுவும் நான் மாட்டிட்டா? அதோட எனக்கு ட்ரிங்க்ஸ் பண்ணறவங்களை எல்லாம் சுத்தமா பிடிக்காது. நீங்க எப்படி என்னன்னு வேற தெரியாது?” சைக்கோ என்கிற வார்த்தையில் அவன் தூண்டப்படுவான் என்று எண்ணித் தொடங்க,
அவன் தான் அவளில் ஒருவித மயக்கத்தில் லயித்திருக்கிறானே! அதனால் இந்த வார்த்தை எல்லாம் பெரிதாகப் பாதிப்பைத் தரவில்லை. அதோடு அவள் தோரணை வேறு அவனுக்கு பெரும் சுவாரஸ்யத்தைத் தந்தது. ‘தன்னைப்போல இவளும் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறாளோ? ஆனால், ஏனாம்?’ அவனுள் ஒருவித குறுகுறுப்பு.
“ஹ்ம்ம் நோ வொரீஸ். நான் டீடோட்டலர் தான், அப்பறம் சைக்கோ கேட்டகிரி ஒருவேளை என்கூட பழகிப் பார்த்தா தெரியுமா? கொஞ்சம் ரெண்டு பேரும் பழகி பார்த்தா என்ன?” என்று அவன் கேட்டதும் அவள் அரண்டு போனாள்.
‘டேய்! நானே பிராக்ஸி போட்டு வந்து கல்யாணத்தை நிறுத்த நடிச்சிட்டு இருக்கேன்டா. என்கூட பழகி யாரை கல்யாணம் செய்வியாம்?’ அவள் விழித்துக் கொண்டு நின்றதில் அவனுக்கு சிரிப்பு வர, அதை வெகுவாக சிரமப்பட்டு அடக்கியவன், “இந்த ஆபர் பிடிக்கலையா?” என்றான் வேண்டுமென்றே வம்பிழுக்கும் தோரணையில்.
அவனிடம் வம்பு வளர்க்க வந்தவளின் நிலை பரிதாபமாகத்தான் இருந்தது. ‘என்ன இவன் நம்மளை வெச்சு செய்யறான்?’ என்று விழித்தவள், “பாருங்க… உங்களைப்பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு தோணலை” என்றாள் அவசரமாக. ஆனால், அவளின் உள்மனம் அதற்கு எதிராக நினைத்துக் கொண்டிருந்ததில், அவளின் முகமே அதை அவனிடம் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
‘ஏன் இந்த பெண் இத்தனை ஈர்க்கிறாள்? ஏன் இவளின் குரல் என் உயிரைத் தீண்டுகிறது?’ என்ன யோசித்தும் இளமுகிலனுக்கு புரியவில்லை. மனம் ஒருமாதிரி மிதந்த நிலையில் இருந்தது. அதிலும் தனக்கு இணக்கமாய் தன்னோடே நடந்து வருபவளின் செய்கை அத்தனை பிடித்தது. காலத்திற்கும் இவள் என்னுடனேயே வந்து விட்டால் என்ற எண்ணம் ஏன் எழுகிறது என்று புரியாமல் அந்த எண்ணத்திலிருந்து மீள முடியாமல் தவித்தான்.