ஆனால் அவர்களோ வேறு கதை சொன்னார்கள். ஆள் மாறாட்டம் நடந்து விட்டது, வேறு ஒரு நபருக்கு பதில் தவறுதலாக இந்த இளைஞனைத் தூக்கிவிட்டோம் என்று எளிதாக சொன்னார்கள்.

இந்த பிரச்சினை நடந்தது அவர்களுடைய ஐயா வைரவமூர்த்தி தோட்டத்தில் என்பதால் அந்த நல்ல மனிதருக்கு தங்களால் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வந்துவிட்டார்களாம்.

உண்மையில், அந்த இளைஞன் தன் காதலியோடு ஊரைவிட்டே சென்று விடுவதற்காக திட்டம் வகுக்க, அதைக் கண்டுகொண்டவர்கள் அவனை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். எல்லாம் வைரவ மூர்த்தியின் வழிகாட்டுதலின்படி தான்.

என்ன, அவர்களின் திட்டம் முழுமையாக நிறைவேறும் முன்னர் யாரோ ஒரு நபரின் கண்களில் விழுந்து தகவல் போலீஸாருக்கு வந்து சேர்ந்து விட்டது. விசாரணைக்காக வைரவ மூர்த்தியை போலீஸ் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகவே சரணடைந்து விட்டார்கள்.

தங்களுக்கு பின்னால் வைரவமூர்த்தி என்ற பெரும் பாதுகாப்பு அரண் இருக்கும் தைரியத்தில் சரணடைந்தவர்கள் இருக்க, அவர்களிடமிருந்து எப்படி முயன்றும் உண்மையை வாங்க முடியவில்லை.

கடத்தப்பட்ட இளைஞனின் பெற்றோரும் மகன் கிடைத்தவரைக்கும் போதும் என்ற எண்ணத்தில் அந்த வழக்கை வேறு கோணத்தில் அணுக நந்தினிக்கு உதவ மறுக்க, கொதிநிலைக்கே சென்று விட்டாள் நந்தினி.

இப்படி எல்லோரும் பயந்து பயந்து தான் இந்த மாதிரியான ஆட்களை வளர்த்து விடுகிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்தவள், என்ன ஆனாலும் பரவாயில்லை இன்று அந்த வைரவ மூர்த்தியை சந்தித்து விடுவது என்ற எண்ணத்தில் கிளம்பியே விட்டாள்.

இந்த ஒருமாத காலத்திற்குள் நந்தினியின் நம்பிக்கையை சபேசன் சம்பாதித்திருக்க, அவள் எங்கு சென்றாலும் பெரும்பாலும் உடன் செல்கிறான். அவர்களோடு இன்னும் ஒரு காவலரும் இணைந்துகொள்ள, அந்த மாலைவேளையில் வைரவ மூர்த்தியின் வீட்டுக்கு முன்னால் போலீஸ் வாகனம் போய் சர்ரென்று நின்றது.

பழைய காலத்து வீடு, கேரள பாணியில் மிக பிரம்மாண்டமாகவே இருந்தது. நல்ல பராமரிப்பின் கீழ் வீடு இருக்கிறது என்பதை முதல் பார்வையிலேயே கண்டுகொள்ள முடிந்தது. கண்களைச் சுழற்றி சுற்றுப்புறத்தை கவனித்தபடி வாகனத்திலிருந்து நந்தினி இறங்க, அவளோடு சக காவலர்களும் இறங்கி நின்றனர்.

அவர்கள் முன்பு வேகமாக ஓடிவந்து நின்ற ஒருநபர், முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு, “நீங்கல்லாம் இங்க வரக்கூடாது. யாரு உங்களை உள்ள விட்டது? டேய், யார் வந்தாலும் கேட்டை திறந்து விட்டுருவியாடா நீ?” இவர்களிடம் ஆரம்பித்து, போலீஸ் வாகனத்தைக் கண்டதும் மறுபேச்சின்றி கேட்டைத் திறந்து விட்டிருந்த காவலாளியைப் பார்த்து சத்தமாக அதட்டினார்.

அந்த வார்த்தைகளில் நந்தினியின் மனதிற்குள் கனன்று  கொண்டிருந்த கோபம் முணுக்கென்று தலையைக் காட்டிவிட,  அந்த நபரின் சட்டையை எட்டி கொத்தாக பற்றிவிட்டாள்.

“இந்த ஆளை அள்ளி வண்டிக்குள்ள போடுங்க சபேசன். நாம யாரு, நம்ம ரைட்ஸ் என்னன்னு நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போய் அவருக்கு பாடம் எடுக்கலாம்.” சபேசனை நோக்கி அந்த நபரை தள்ளிவிட்டபடி சொன்னாள்.

அதற்குள், வளர்த்து விட்ட திமிங்கலங்கள் போல ஆங்காங்கே வாட்டசாட்டமான ஆண்களின் தலைகள் தெரிய தொடங்கிவிட்டன.

“டேய் மூக்கையா, அவங்க எல்லாரும் அரசாங்கத்தோட ஆட்கள் டா, அவங்களை வரக்கூடாதுன்னு சொல்லுற அதிகாரம் உனக்கோ எனக்கோ கிடையாது. கொஞ்சநேரம் உன் விசுவாசத்தை மூட்டை கட்டி பரண்மேல போட்டுட்டு கையைக் கட்டி பேசாம நில்லு.” மூக்கையாவோடு சேர்த்து ஆங்காங்கே நின்று கொலைவெறியோடு நந்தினியை பார்த்துக் கொண்டிருந்த மற்ற நபர்களையும் தன் வார்த்தைகளால் கட்டுப்படுத்தியபடியே, வீட்டின் முகப்பு பகுதியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் வைரவ மூர்த்தி.

ஆவணங்கள் அவருக்கு அறுபத்துஐந்து வயது என்று சொல்லுகிறது. ஆனால் அறுபதை தாண்டாத தோற்றம் தான். தலை முன்வழுக்கை வாங்கியிருக்க, அதற்கு நேர்மாறாக அடர்ந்த பெரிய மீசை. கண்களோ அப்பட்டமாக அலட்சிய பாவனையைக் காட்டியது.

அவருக்கு பின்னால் அவருடைய இரண்டு மகன்களும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் மூத்தவன் போல தெரிந்தவனிடம் முற்றுமுழுதாக தகப்பனின் சாயல் இருந்தது. இளையவனிடம் அவரின் சாயல் குறைவே.

தன் போலீஸ் பார்வையால் அவர்கள் மூவரையும் எடைபோட்டபடி நின்றிருந்த நந்தினி, தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த வைரவ மூர்த்தியைப் பார்த்து, “விசுவாசம் இருந்தா மட்டும் போதாது, யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் குடுங்க உங்க ஆளுக்கு. இல்லைன்னா தட்டிக் காய போட்டுருவேன்.” என்றாள் பற்களை கடித்தபடி.

“சபாஷ்… பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கணும், நெருப்பு மாதிரி.” கைகளைத்தட்டி பாராட்டியபடியே நந்தினிக்கு அருகே வந்தவர்,

“பிழைச்சு போகட்டும், அவனை விட்டுருங்க.” கட்டளைகள் இட்டே பழகிவிட்டவருக்கு கெஞ்சல் தொனியில் பேச வராமல் போகவே, தொண்டையை செருமிக்கொண்டு கொஞ்சம் சத்தமாகவே பேசினார்.

புலி வேட்டைக்கு வந்த இடத்தில் இந்த காட்டுப்பூனையும் அவளுக்கு தேவையில்லையே, எனவே சபேசனைப் பார்த்து விட்டுவிடும்படி கண்ணசைக்க, அந்த நபர் மீதான தன் பிடியை தளர்த்தினான் சபேசன்.

  “நானே உங்களை சந்திக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் எஸ்பி மேடம். எனக்கு சிரமம் தராம நீங்களே எங்க வீட்டுக்கு வந்துட்டீங்க.” சடுதியில் முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு வரவேற்பில் இறங்கினார் வைரவ மூர்த்தி.

“எதுக்கு? ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் தரவா?” புருவத்தை உயர்த்தி கேலி பாவனையில் நந்தினி கேட்க, ஏதோ ஹாஸ்யத்தைக் கேட்டது போல

சத்தமாக சிரித்த வைரவ மூர்த்தி,

 “இவ்வளவு தைரியமா இந்த வைரவனோட கோட்டைக்குள்ளேயே வந்து நிக்குறீங்களே! இது ஒன்னே போதாதா நான் உங்களை பாக்கணும்னு நினைச்சதுக்கு.” என்றார் அலட்டிக்கொள்ளாமல்.

பேசிக்கொண்டிருந்தவரின் பார்வை திடீரென்று நந்தினியின் முகத்திலிருந்து விலகி சற்றே பக்கவாட்டில் சென்றது. அவரைப் பின்தொடர்ந்து பார்த்த நந்தினியின் கண்களில், அதிர்ந்துபோன பார்வையோடு இவர்களையே பார்த்தபடி நின்றிருந்த ஒரு பெண் விழுந்தாள்.

அந்த பெண்ணின் வயது முப்பதின் தொடக்கத்தில் இருக்கலாம். தூய வெள்ளை நிறத்தில் காட்டன் புடவை அணிந்திருந்தாள். அதில் கண்ணுக்கே புலப்படாமல் ஆங்காங்கே சிறுசிறு பூக்கள் சிதறிகிடந்தது. நீண்ட கூந்தல் இறுக்க பின்னலிட்டு கொண்டையாக முடியப்பட்டிருந்தது. மொத்தத்தில், அவள் கையிலிருந்த மாலைநேரத்து மொட்டவிழாத பூக்களுக்கு அவளிடம் வேலையே இல்லை என்பது போன்ற தோற்றம் தான்.

கேள்வியாக வைரவ மூர்த்தியை நந்தினி பார்க்க, “என்னோட மக தான்“ என்று முடித்துக் கொண்டவர், “வீட்டுக்குள்ள போ பூங்கோத” என்றார். அவருடைய குரல் சாதாரணமாக இருந்தாலும், அதில் கட்டளை மறைந்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது.

அந்த குரலுக்கு விதிர்விதித்துப் போன பூங்கோதை, சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு, புடவையை இழுத்து போர்த்தியபடி வீட்டுக்குள் ஓட்டமும் நடையுமாக சென்று மறைந்து விட்டாள்.

“அப்புறம், என்ன விஷயம் எஸ்பி மேடம், என்னைத்தேடி இவ்வளவு தூரம் நீங்களே வந்துருக்கீங்க?” எதுவுமே நடவாதது போல கேட்டவரின் குரலில் இப்போது மெல்லிய தடுமாற்றம் இழையோடியதை கவனிக்க தவறவில்லை நந்தினி. ஆனால், ஏன் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.

“நான் எதுக்கு வந்துருக்கேன்னு உங்களுக்கு தெரியாதா மிஸ்டர் வைரவ மூர்த்தி?” தன்னுடைய யோசனையை தற்காலிகமாக தள்ளிவைத்து விட்டு கேள்வியையே பதிலாக்கினாள் நந்தினி.

“ஒரு சின்ன பொண்ணு எங்க ஐயாவை பெயரைச் சொல்லி எப்பிடி கூப்பிடலாம்?” அடங்க மறுத்து மறுபடியும் குதித்தார் அந்த மூக்கையன்.

“டேய் மூக்கா… அமைதியா நிக்குறதா இருந்தா நில்லு. இல்லைன்னா வாழைத் தோப்புக்கு தண்ணிகட்ட வேண்டியிருக்கு, அங்கப் போ.” என்று அதட்டியவர்,

“அதெப்படி மேடம் எனக்கு தெரியும்? நான் என்ன செப்படி வித்தையா கத்துவச்சிருக்கேன், உங்க மனசுலயிருக்குறதை கண்டுபிடிக்க?” என்றார் நக்கல் மீண்டிருந்தவராக.

“அப்போ, இன்னைக்கு உங்க தோட்டத்து வீட்டுல நடந்ததுக்கும் உங்களுக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொல்லுறீங்களா?” நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள் நந்தினி.

“யாரு கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சுகிட்டு பேசுங்க மேடம், ஏதோ எக்ஸாம் பாஸ் செய்து போலீஸ் ஆகிட்டா நீங்க பெரிய ஆளு எல்லாம் கிடையாது.” தகப்பனிடம் கேள்வி கேட்டதும் காலில் சுடுதண்ணீரை ஊற்றியது போல குதித்தான் அவருடைய பெரிய மகன். சின்னவனோ நடப்பதை வேடிக்கை பார்க்கும் பாவனையிலேயே நின்றிருந்தான்.

“டேய் பாலகிருஷ்ணா, உனக்கு வேற தனியா சொல்லணுமா? எங்கிட்ட தானேடா கேள்வி கேட்குறாங்க, நான் பதில் சொல்லிக்குவேன், நீயேன் வெசனப்படுற?” என்ற வைரவமூர்த்தி,

“விஷயத்தை நானும் கேள்விப்பட்டேன் மேடம். அந்த பசங்க நம்ம பசங்க தான். இவ்வளவு ஏன்? அடிக்கடி எங்ககூட தோட்ட வீட்டுக்கு வர்ற அளவுக்கு உரிமையுள்ளவங்க தான். அதனாலதான் அவ்வளவு ஈசியா எங்க இடத்துக்கு அந்த பையனை தூக்கிட்டு போயிருக்கானுங்க. சொந்தக்கார பயலுகளா போயிட்டானுங்க, இல்லைன்னா எங்க அனுமதியில்லாம தோட்டத்து வீட்டுக்குள்ள நுழைஞ்சதுக்கு நானே போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணியிருப்பேன்” என்றார் ஒன்றுமே தெரியாதது போல.

“ஓ… அப்போ உங்களுக்கு தெரியாமத் தான் எல்லாம் நடந்துருக்கு, இதை நாங்க நம்பணும்? ஹ்ம்ம்…” நக்கலாக நந்தினி கேட்க,

“நீங்க கேக்குறதைப் பாத்தா ஏதோ என் தலைமைல தான் எல்லாம் நடந்தது போல இல்ல இருக்கு.” கிண்டலாக சொல்லிவிட்டு அட்டகாசமாக சிரித்தார் வைரவமூர்த்தி. அந்த சிரிப்பு அவரைச் சுற்றிநின்ற அத்தனை பேர் முகங்களிலும் ஏளனப் புன்னகையாக எதிரொலிக்க, நந்தினியிடம் கோபத்தைக் கொண்டுவந்தது.