அத்தியாயம் 04
திருநெல்வேலி நகரை சுற்றி ரோந்து வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் அமர்ந்திருந்தாள் நந்தினி. மாலை நான்கு மணிவரை அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவள், நகரின் மாலைநேர நடவடிக்கைகளை அவதானிக்கும் பொருட்டு கிளம்பி வந்திருந்தாள்.
முன்பக்கம் ட்ரைவர் சீட்டுக்கு அருகே நந்தினி அமர்ந்திருக்க, பின்னிருக்கையில் இன்னும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்தார்கள். இருவருமே முப்பத்தைந்து வயதைத் தாண்டாத இளைஞர்கள் தான்.
பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கூட்டம் கூட்டமாக நடந்து சென்ற பாதசாரிகள் என்று மாலை நேரத்து நெல்லையின் சாலைகள் பரபரப்பாகவே இருந்தது.
தன் பணி நேரம் முடியும் தருவாயிலும் சுறுசுறுப்பாகவே சூரியன் வேலை பார்த்ததில், மாலை நேரத்து காற்றிலும் கூட அனல் பறந்தது.
தார் சாலையின் சூடு முகத்தில் அடிக்க, கைக்குட்டையால் முகத்தை துடைத்த நந்தினி, கண்களுக்கு கூலர்ஸ்ஸைக் கொடுத்துக் கொண்டாள்.
“மிஸ்டர் சபேசன், கடந்த வருஷத்தைவிட இந்த வருஷம் ரோட் ஆக்சிடெண்ட் குறைஞ்சிருக்கா?” அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு கீழே சுற்றி வந்து திரும்ப, சுற்றுப்புறத்தை அவதானித்தபடியே கேட்டாள் நந்தினி.
“யெஸ் மேடம், இந்தமாதிரி மேம்பாலங்கள் வந்த பிறகு ட்ராபிக், விபத்து இரண்டுமே குறைஞ்சிருக்கு. ட்டூ வீலர்ல போறவங்க இன்னும் சின்சியரா ஹெல்மெட் யூஸ் பண்ணுனாங்கன்னா, ஆக்சிடென்ட் டெத்தும் குறையும்.” பின்னிருக்கையில் இருந்த சபேசன், போலீஸைக் கண்டதும் அவசர அவசரமாக ஹெல்மெட் அணியும் இருசக்கர வாகன ஓட்டிகளைப் பார்த்தபடியே சொன்னான்.
நந்தினிக்கும் அந்த கருத்தில் உடன்பாடு இருந்ததால் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டவள், “அந்த சிக்னலைத் தாண்டி வண்டியை நிறுத்துங்க” என்று ட்ரைவரிடம் சொல்ல, அப்படியே வண்டியை ஓரம்கட்டி நிறுத்தினார் ட்ரைவர்.
ஆண்கள் வெறுப்புக்கொள்கை எல்லாம் தனிப்பட்ட முறையில் நந்தினியின் மனதோடு மட்டுமே. அவளோடு பணிபுரியும் ஆண்களிடம் எப்போதுமே அதை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. எல்லோரிடமும் நட்பு முறையில் பழகினாலும், அதில் கண்ணுக்குத் தெரியாத ஒரு எல்லைக்கோடும் உண்டு.
போலீஸ் வாகனத்திலிருந்து நந்தினி இறங்கவும், அருகிலிருந்த கடையில் குளிர்பானம் அருந்தி கொண்டிருந்த அந்த சிக்னலின் போக்குவரத்து காவலர் பதட்டமாக ஓடிவந்து, விறைப்பாக சல்யூட் ஒன்றை வைத்தார். தலையசைத்து ஏற்றுக்கொண்டவள், ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கரவாகன ஓட்டிகளை ஓரம்கட்ட ஆரம்பிக்க, பரபரப்பானது சாலை.
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை சொல்லி, அபராதம் விதித்து முறையாக ரசீதும் வழங்கி அனுப்பிக் கொண்டிருந்த நேரம், புல்லட் ஒன்று சிக்னலை கடந்து வேகமாக வந்து கொண்டிருந்தது. வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தது கமலகண்ணன். அவன் தலையிலும் ஹெல்மெட் மிஸ்ஸிங்.
சற்றும் யோசிக்காமல் நந்தினி கையை நீட்டி அவனை நிறுத்த, கிரீச்சென்று பிரேக்கிட்டு வண்டியை அவள் அருகே நிறுத்தினான் கண்ணன். அவன் பின்னால் இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான்.
“கங்கிராட்ஸ் எஸ்பி மேடம். காலையில உங்க பிரஸ்மீட்டை நியூஸ்ல பாத்தேன். சும்மா தெறிக்க விட்டிருந்தீங்க.” உதடுகளுக்குள் சிரிப்பை மறைத்துக்கொண்டு யாரோபோல நந்தினிக்கு வாழ்த்து சொன்ன கண்ணன்,
“மேடம் கொஞ்சம் ஃபெமினிஸ்டோ, உங்க பதிலை எல்லாம் வச்சி பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் தோணிச்சுது” என்றான் குரலைத் தழைத்து.
அது எதையும் கண்டுகொள்ளாமல், “இவ்வளவு காசு போட்டு வண்டியெல்லாம் வாங்குறவங்களுக்கு, கூடவே ஹெல்மெட் வாங்கணும்னு தெரியாதா?” மிடுக்கான குரலில் கேட்டவள், “கான்ஸ்டபிள், சாருக்கு ஃபைனைப் போடுங்க.” என்றாள் பக்கத்தில் நின்றிருந்த காவலரிடம்.
“அதெல்லாம் இப்போ வண்டிவாங்கும் போது கூடவே ஹெல்மெட் குடுத்துடுறாங்க மேம். நாம தனியா வாங்கணும்னு அவசியம் இல்ல. அதுக்குன்னு இலவசமா குடுக்குறாங்கன்னு அர்த்தம் இல்ல. திருட்டு பசங்க, நம்மகிட்ட இருந்து காசை எடுத்துட்டு தான் குடுக்குறாங்க.” கண்ணனின் பேச்சு நீண்டு கொண்டே போக,
“ஃபைனைப் போட்டு ரெசிப்டை கைல கொடுங்க சர்” என்று சக பணியாளரை துரிதப்படுத்திய நந்தினி,
“இதுக்கு அப்புறமாவது ஹெல்மெட் போட மறக்காதீங்க.” என்றாள் கறார் குரலில்.
“அடிக்குற வெயிலுக்கு எவன் மேடம் ஹெல்மெட் போடுவான்? அப்புறம் தலை சொட்டையாகிப் போச்சுன்னா பொண்ணுங்க என்னை கல்யாணம் பண்ணிக்க யோசிப்பாங்களா, இல்லையா? இப்பிடியிருக்கும் போதே எங்க மாமன் பொண்ணு…”
“உங்க பெயரையும் வண்டி நம்பரையும் சொல்லுங்க சர்.” அதற்கு மேலே அவனைப் பேசவிடாமல் அந்த போக்குவரத்து காவலர் அவசரமாக கேள்வி கேட்க, கண்களில் அணிந்திருந்த கூலர்ஸ்ஸை கழற்றி விட்டு கண்ணனை முறைத்துப்பார்த்தாள் நந்தினி.
அவள் பார்வையை துச்சமாக புறம் தள்ளியவன், “என்ன நடேசன்! என்னை உங்களுக்கு தெரியாதா? இல்ல, என்னோட வண்டி நம்பரைத்தான் உங்களுக்கு தெரியாதா?” என்றான் வியந்து போனவன் போல.
“சார் பெயர் கண்ணன், ஃபேமஸ் கிரிமினல் லாயர் அய்யாசாமி சாரோட ஜுனியர். நான் கேஸ் விஷயமா கோர்ட்டுக்கு போகும்போது பழக்கம் மேடம்…” அந்த நடேசன் அவசர அவசரமாக தன்னுடைய மேலதிகாரிக்கு விளக்கம் கொடுக்க,
“இன்னும் என்னை ஜூனியர்னே சொல்லுறீங்களே நடேசன்? நான் இப்போ மூனு வருஷமா தனியா பிராக்டீஸ் பண்ணுறேன், உங்களுக்கும் அது தெரியும் தானே?” என்றான் கண்ணன் அப்பாவியாக விழி விரித்து.
‘யப்பா ராசா! போதும், உன் பெர்ஃபார்மென்ஸ்ஸை இதோட நிறுத்திக்கோ. இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்.’ அழுதுவிடுபது போல அந்த நடேசன் கண்ணனைப் பார்க்க,
“மொதல்ல ஃபைனைப்போட்டு உங்க லாயர் சாரை அனுப்புங்க. அப்படியே, கோர்ட்ல மட்டும் அவரை லாயர்னு ப்ரூஃப் பண்ணுனா போதும்னு சொல்லுங்க, ரோட்டுல வேண்டாம்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்து விட்டாள் நந்தினி. அங்கேயே நின்றால் இன்னும் ஏதாவது பேசியே கொல்வான் என்று முன்னெச்சரிக்கையாகத் தான் அங்கிருந்து விலகியிருந்தாள்.
“என்னப்பா இது? விட்டா என் வேலைக்கே உலை வச்சிடுவ போலயே?” முணுமுணுத்தபடியே நடேசன் தன் கடமையைச் செய்ய, வாயெல்லாம் பல்லாக அங்கிருந்து நகர்ந்தான் கண்ணன்.
“பொண்ணு யாரு மேன்? நீ இவ்வளவு பேசியும் பெருசா ரீஆக்ட் பண்ணாம நிக்குது?” பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் ஆர்வமாக கண்ணனிடம் கேட்க,
“நம்ம வருங்காலம் தான்.” என்றான் உற்சாகமாக.
“நம்ம வருங்காலமா?!”
“ச்சு… என் வருங்காலம் டா.”
“ஓ… அப்போ உன் எதிர்காலம் ப்ரைட்டா இருக்கும்னு சொல்லு.” அவன் தோளில் அடித்தபடி அந்த இளைஞன் சத்தமாக சிரிக்க, கண்ணனிடமும் வாய்கொள்ளா சிரிப்பு.
மேலும் சிறிதுநேரம் அங்கே நின்றுவிட்டு கிளம்பியிருந்த நந்தினி, “சிட்டியை விட்டு கொஞ்சம் அவுட்டர்ல போங்க” என்றாள் ட்ரைவரிடம்.
ஒரு முப்பது நிமிட ஓட்டத்தில் நகருக்கு வெளியே வந்திருந்தது அந்த ரோந்து வாகனம். இப்போது சாலையின் இருபுறமும் மரங்களும், வயல்வெளிகளும் தென்பட ஆரம்பித்தன. திருநெல்வேலி என்பதே கிராமங்கள் சூழ்ந்த நகரம் தானே! மரங்களுக்கும், வயல் வெளிகளுக்கும் அங்கே பஞ்சமா என்ன?
அந்திசாய ஆரம்பிக்கவும் காற்றில் கலந்திருந்த வெம்மை குறைந்து இதமாக வீசத் தொடங்கியது காற்று. சற்று நேரத்தில் காற்றில் லேசாக ஈரப்பதம் கலந்துவர, நீர் நிரம்பிய குளம் ஒன்று சாலையோரம் தென்பட்டது.
கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த அதன் கரைகள் சாலையிலிருந்து சற்றே உயரமாக இருந்தது. குளத்தைச் சுற்றிலும் பெரிய பெரிய ஆலமரங்கள் நின்றிருந்தன.
விழுதுகளோடு ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி நின்றிருந்த அந்த ஆலமரங்களை ஆர்வமாக பார்த்த நந்தினியின் பார்வையில், குளக்கரையில் அமர்ந்திருந்த ஐந்தாறு இளைஞர்கள் விழுந்தார்கள்.
அவர்கள் சாதாரணமாக அமர்ந்திருந்தால் கடந்து போயிருப்பாளோ என்னவோ? ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து கூட்டமாக தண்ணீருக்குள் குனிந்து பார்த்தபடி அவர்கள் அமர்ந்திருந்த விதம் அபாயகரமானதாக இருக்க, ட்ரைவரிடம் அந்த இளைஞர்களுக்கு அருகில் வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தச் சொல்லிவிட்டாள்.
“மீன் தூண்டில்ல சிக்கிருச்சின்னு நினைக்கிறேன் மாப்ள, நான் வேகமா தூண்டிலை தூக்குறேன், கரெக்டா வீடியோ கேப்ச்சர் பண்ணிருங்க. சரியா?” அருகில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கூட கேட்காதவர்களாக அவர்களில் மூழ்கி இருந்தார்கள் அந்த இளைஞர்கள்.
அவர்களின் செயல் அதிருப்தியைத் தர, “இங்க என்னடா பண்ணுறீங்க?” என்று அதட்டினாள் நந்தினி.
திடீரென்று கேட்ட அதட்டல் சத்தத்தில் எல்லா இளைஞர்களும் மொத்தமாக திருப்பிப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவன் கையில் மீன் பிடிக்கும் தூண்டில் இருந்தது, மற்றவர்கள் கைகளில் ஆறாம் விரலாய் அலைபேசி.
தங்களுக்கு அருகில் போலீஸ் வாகனத்தையும் போலீஸாரையும் காணவும் இப்போது ஒருவிதமான தடுமாற்றம் இளைஞர்களிடம்.
“டேய்… டேய்… குளத்துக்குள்ள விழுந்து தொலைச்சிராதீங்க டா.” பதட்டத்தோடு சத்தமிட்ட நந்தினிக்கு அந்த இளைஞர்களில் ஒருவனை அடையாளமும் தெரிந்தது.
வேறு யார்? அவள் ஊருக்கு வந்த அன்று ரெயில் நிலையத்தில் சந்தித்த அந்த இளைஞன் சிவா தான்.
“உன்னை இந்த மாதிரி எல்லாம் நான் பாக்க கூடாதுன்னு சொன்னேன் இல்ல சிவா?” சட்டென்று அதட்டினாள் நந்தினி.
நந்தினியைக் கண்டதுமே அதிர்ந்து போன சிவா மெதுவாக மற்ற நண்பர்களின் முதுகுக்கு பின்னே மறைந்துகொள்ள முற்பட, பெயரைச் சொல்லி நந்தினி அதட்டியதும் வேற வழியில்லாமல் தன் முயற்சியைக் கைவிட்டு விட்டு முன்னே வந்தான்.
“அது சும்மா டைம் பாஸுக்காக ஃபிஷ்ஷிங் பண்ணுறோம் க்கா… இல்ல, மேம்.” கையிலிருந்த ஃபோனை அவசர அவசரமாக பேண்ட் பாக்கெட்டில் திணித்தபடியே சொன்னான்.
“ம்ம்… ஃபிஷ்ஷிங்…” ஒருமாதிரி தலையை அசைத்துக்கொண்டவள்,
“ஃபிஷ்ஷிங் பண்ணுற தொரைங்கள்ல யாருக்காவது நீச்சல் தெரியுமா?” சிவா, எழும்பி வரவுமே தன்னிச்சையாக எல்லா இளைஞர்களும் வரிசையாக நந்தினி முன்னால் வந்து நிற்க, எல்லோரையும் பார்த்து பொதுவாக கேட்டாள் நந்தினி.
“இல்ல… தெரியாது.” எதற்காக கேட்கிறாள் என்று தெரியாமல் உண்மையே பதிலாக வந்தது அவர்களிடமிருந்து. ஆனால் சுதாரித்துக் கொண்ட ஒருவன் மட்டும், “யெஸ்… தெரியும் மேம்.” என்றான் கெத்தாக.
“மிஸ்டர் சபேசன், அந்தப் பையனைத் தூக்கி தண்ணிக்குள்ள போடுங்க, அவன் நீச்சலடிக்குற அழகை நாமளும் வீடியோ எடுக்கலாம்” என்றபடி தன்னுடைய கைபேசியை நந்தினி கையிலெடுக்க,
“இதோ… மேடம்.” என்ற சபேசன் ஒரு அடி முன்னால் வந்தான்.
அவ்வளவு தான்… “ஐயையோ… எனக்கு நீச்சல் தெரியாது, நான் சும்மா சொன்னேன். என்னை விட்டுடுங்க.” சத்தமாகச் சொன்னவன், தூக்கி தண்ணீருக்குள் போட்டு விடுவார்களோ என்ற பயத்தில் அங்கிருந்து தெறித்து ஓட ஆரம்பித்தான். அதிகதூரம் அவனை ஓட விடாமல் அள்ளிக்கொண்டு வந்தான் சபேசன்.
“ஏன்டா டேய், உங்கள்ல ஒருத்தனுக்கு கூட நீச்சல் தெரியல, இதுல ஃபிஷ்ஷிங் வேண்டி கிடக்கு உங்களுக்கு ம்ம்… சரி, செய்யுற வேலையையாவது பாதுகாப்பா செய்யுறீங்களான்னா, அதுவும் இல்ல. ஒருவேளை யாராவது தவறி குளத்துக்குள்ள விழுந்தீங்கன்னா, யாருடா உங்களை காப்பாத்துவா?” நந்தினியிடமிருந்து கோபமாக வந்தது கேள்வி.
“அதெல்லாம் எங்க ஃப்ரெண்ட்ஸ் கை விட்டுறமாட்டாங்க மேம்.” இளைஞர்களிடமிருந்து தைரியமாக வந்தது பதில்.
“அதுக்கு மொதல்ல உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு நீச்சல் தெரியணும் தம்பிங்களா.” நக்கலடித்தாள் நந்தினி.
“நீச்சல் தெரியாட்டா என்ன, கைகொடுத்து காப்பாத்திர மாட்டாங்களா என்ன?”
“எதுக்கு? கூண்டோடு கைலாசம் போகவா? இந்த ஃபேஸ்புக் ரீல்ஸ்ஸை எல்லாம் பாத்துட்டு கனவுலயே வாழாதீங்க டா. ஒருவேளை நீங்க சொல்லுற மாதிரி நடந்துடிச்சின்னா சந்தோஷம் தான். ஆனா நிஜத்துல அப்படி நடக்குறதுக்கான சதவீதம் ரொம்ப கம்மி. அதுலயும் உங்க ஃப்ரெண்ட்ஸ்… சுத்தம், வீடியோ எடுக்குற ஆர்வத்தை வேற எதுலயும் காட்டமாட்டாங்கன்னு நினைக்கிறேன். அதனால இந்த மாதிரி உயிரோட விளையாடுற வேலையை எல்லாம் இனிமே வச்சுக்காதீங்க.” நீண்ட அறிவுரை ஒன்றை நந்தினி பொறுமையாக கொடுக்க, அதை புரிந்து கொண்டதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல் வேண்டாவெறுப்பாக தலையை ஆட்டி வைத்தார்கள் அந்த இளைஞர்கள்.
அவர்களைப் பொறுத்தவரை நந்தினி பூமராகத் தெரிய, ஒப்புக்கு வந்தது தலையசைப்பு. அதைப் புரிந்து கொண்ட நந்தினிக்கு சுறுசுறுவென கோபம் வந்தது. எனவே,
“இப்பிடி எல்லாம் தலையசைச்சா மட்டும் போதாது தம்பிங்களா, இந்த மாதிரி முட்டாள்தனமான காரியம் இனிமே செய்யமாட்டோம்னு ஆளுக்கு ஐம்பது தோப்புக்கரணம் போடுங்க.” என்றாள் கட்டளையாக.
“தோப்புக்கரணமா?” கோரஸாக வந்தது குரல்.
“இவங்க 2K கிட்ஸ் மேம், நீல் டவுண்னு சொன்னா தான் தெரியும்.” கேலி செய்தான் சபேசன்.
“அப்பிடியா? அந்த லத்தியைக் குடுங்க, தோப்புக்கரணம்னா இவங்களுக்கு தெரியுதா இல்லையான்னு பாக்கலாம்.” லத்திக்காக நந்தினி கையை நீட்ட, காதுகள் இரண்டையும் கைகளால் பிடித்து கொண்டு குத்துக்காலிட்டு உட்கார்ந்து எழும்ப ஆரம்பித்தார்கள் இளைஞர்கள்.
“ம்ம்… எப்பவும் தண்டனைக்கு இருக்குற மரியாதையே தனி தான், இல்லையா சபேசன்.” சத்தமாக கேலி செய்த நந்தினி, அவர்கள் இருபத்து ஐந்து என்று எண்ணி தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருக்கும் போதே, போதும் என்று நிறுத்தச் சொல்ல, மலர்ந்து போனது அந்த இளைஞர்களின் முகம்.
“அப்புறம் தம்பிங்களா… இன்னைல இருந்து ஒரு மாசத்துக்குள்ள நீங்க எல்லாரும் நீச்சல் படிச்சிருக்கணும். சரியா ஒரு மாசம் முடியவும் இதே குளத்துல எங்க டிப்பார்ட்மெண்ட்டைச் சேர்ந்த யார் முன்னாடியாவது ஆறு பேரும் நீந்தி காட்டணும். இப்போ உங்க அட்ரஸையும் ஃபோன் நம்பரையும் கொடுத்துட்டு வீட்டைப் பார்த்து நீங்க போகலாம்.” அமர்த்தலான குரலில் நந்தினி சொல்ல,
“இந்த குளத்துல அப்போ தண்ணியில்லன்னா என்ன செய்வீங்க மேம்?” அறுவரில் ஒருவனிடமிருந்து குறும்பாக வந்தது கேள்வி.
ம்ம்… உங்களை வச்சே குளத்துல தண்ணியை ரொப்பி, நீச்சலடிக்க வைப்பேன். போதுமா? பெரிய அறிவாளிங்கன்னு நினைப்பு. நான் சொல்லுறதை பேசாம செய்துட்டு, வீட்டைப் பார்த்து போங்கடா.” என்றாள் பற்களைக் கடித்துக்கொண்டு.
வேறுவழியில்லாமல் இளைஞர்கள் தங்கள் வீட்டு விலாசத்தைச் சொல்ல, சுரேந்தர், சன் ஆஃப் ராஜவேலு” என்ற குரல் நந்தினியின் காதில் தெளிவாக விழுந்தது. சட்டென்று அந்த இளைஞனை நந்தினி கூர்ந்து பார்க்க, அவனும் இவளைத்தான் பார்த்தபடி நின்றிருந்தான்.
அவனிடமிருந்து பார்வையை விலக்கிக்கொண்ட நந்தினிக்கு தன்னைக் கண்ட நேரத்திலிருந்து அந்த இளைஞன் குறுகுறுவென்று தன்னைப் பார்ப்பதும், தலையை குனிந்து கொள்வதுமாக இருந்ததின் அர்த்தம் இப்போது புரிந்தது. முகம் சட்டென்று இறுக, வேகமாக சென்று வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள் நந்தினி.
****
இரவு ஒன்பது மணி, தன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் ராஜவேலு. நான்கு பிள்ளைகளை மனதில் வைத்து கட்டிய வீடு, ஒரு மகனோடு வாழும் அவர்களுக்கு அளவில் மிகப் பெரியதாகவே இருந்தது.
அவர் பார்வை கையிலிருந்த கைபேசியையும் வாசலையுமே மாறி மாறி பார்த்தபடி இருந்தது. வேறொன்றுமில்லை, இன்னமும் சுரேந்தர் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவர் அழைத்தாலும் அழைப்பை எடுக்கவில்லை.
மருத்துவமனைக்கு போய்விட்டு வந்த அலுப்பு, சாப்பிட்ட மாத்திரைகளின் வீரியம் எல்லாம் சேர்ந்து தூக்கம் வந்தாலும், தாமதமாக வரும் பிள்ளை தனியாக கணவனிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பயத்தில் கல்பனாவும் தூங்க செல்லாமல் அங்கேதான் இருந்தார்.
‘இந்த பையனுக்கு போனுக்கு மேல போனை போட்டாச்சு, எடுத்து தொலைக்க மாட்டேங்குறானே.’ மனதிற்குள் அலுத்துக் கொண்ட கல்பனா,
“நீங்க சாப்பிட்டு நேரம் ஆச்சுதானே ராஜா, போய் தூங்குங்க.” மெதுவாக கணவனை அங்கிருந்து கிளப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.
“உம்பிள்ளையை எங்கிட்ட இருந்து பாதுகாக்க முயற்சி பண்ணுறியா நீ? இப்பிடி செல்லம் குடுத்து குடுத்து தான் இன்னைக்கு இந்த நிலைமையில அவன் வந்து நிக்குறான்.” தன்னுடைய அழைப்பை மகன் ஏற்காததில் கோபமாக இருந்த மனிதர், மனைவியின் செயலில் அவரிடம் எரிந்து விழுந்தார்.
“அது என்ன எம்பிள்ளைன்னு சொல்லுறது? அப்போ சுரேன் உங்க பிள்ளை இல்லையா?” வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு தயாரான கல்பனா,
“நான் மட்டும் தான் அவனுக்கு செல்லம் குடுக்குறேனா? ஆம்பிள்ள சிங்கம், ஆளப்பிறத்தவன்னு அவனை தலைல தூக்கி வச்சி நீங்க ஆடுனது எல்லாம் வசதியா மறந்து போச்சா உங்களுக்கு?” என்று பொரிந்து தள்ளினார்.
“அதுதான் நான் செய்த தப்பு. எல்லாப் பிள்ளைகளையும் போல அவனையும் வளத்திருந்தா ஒழுங்கா வளந்திருப்பான்.” தன்னுடைய தாடையை தடவியபடியே அலுத்துக் கொண்டார் வேலு.
“எல்லாப் பிள்ளைகளைப் போலவா? அப்படி எத்தனைப் பிள்ளைகளை வளத்துட்டீங்களாம் நீங்க?” திலகம் பெற்ற பிள்ளைகளோடு தன் மகனை ஒப்பிட்டு பேசுவது பிடிக்காமல் நொடித்துக் கொண்டார் கல்பனா.
“ஏன்? சுரேந்தரை தவிர எனக்கு வேற பிள்ளைங்களே இல்லையா? அவங்களை நான் வளக்கத்தான் செய்யலையா?”
“அதான் நீ வளத்த வரைக்கும் போதும்னு, பாதியிலேயே பிள்ளைங்களை பிடிங்கிட்டு போய்ட்டாளே அந்த பொம்பிள்ளை.” மகனுக்காக காத்திருக்கும் படலம் மாறி, யுத்த படலமாக உருவெடுத்தது சூழ்நிலை.
“அந்த பொம்பிள்ளையா? நீ இந்த வார்த்தையை இன்னைக்கு இரண்டாவது தடவையா சொல்லுற கல்பு. இன்னொரு தடவை இப்படி மரியாதை குறைவா திலகத்தை பேசினா நான் மனுஷனா இருக்க மாட்டேன் பாத்துக்கோ.” கிட்டத்தட்ட உறுமினார் வேலு.
இருவருக்குமிடையே வாக்குவாதங்கள், சண்டைகள் வந்திருக்கிறது தான். ஆனால் இப்படியெல்லாம் ஒருநாளும் முதல்மனைவிக்காக கல்பனாவை அதட்டியவர் இல்லை ராஜவேலு. ஆனால் இன்று அந்த சரித்திரம் தலைகீழாக புரண்டிருக்க, அதிர்ச்சியாக இருந்தது கல்பனாவுக்கு.
“இப்போ கொஞ்சநாளா எதுக்காக எங்கிட்ட நீங்க சிடுசிடுன்னு நிக்குறீங்கன்னு இப்போ தானே எனக்கு புரியுது, நாம சந்தோஷமா வாழுறது புடிக்காம அந்த கடங்காரி திலகா எனக்கு ஏதோ செய்வினை வச்சிட்டா. அதான் எனக்கு நோய்க்கு மேல நோயா வருது. நீங்களும் எப்போ பாத்தாலும் அந்த லேடியைப் பத்தியேப் பேசுறீங்க.” அந்த பொம்பிளை லேடியாக மாறியிருக்க, கண்களைக் கசக்கினார் கல்பனா.
“ப்ச்ச்… லூஸு மாதிரி பேசாத கல்பனா. அவ அந்த காலத்துலயே என்னை வேண்டாம்னு சொல்லி உனக்கு விட்டு தந்துட்டு போனவ, அவப்போய் மந்திரம் கிந்திரம்னு எதுக்கு கீழ்தரமான வேலை எல்லாம் செய்யப்போறா?” சமாதானப்படுத்துகிறேன் பேர்வழி என்று கல்பனாவின் கோபத்தை இன்னும் கொஞ்சம் விசிறிவிட்டார் வேலு.
“என்னது? விட்டுத் தந்தாங்களா? அப்போ உங்க பொண்டாட்டி பிச்சை போட்டது தான், நான் வாழுற வாழ்க்கைன்னு சொல்லுறீங்களா நீங்க?” ஆங்கார ரூபிணியாக மாறி நின்றார் கல்பனா.
“ம்ப்ச்… எதுக்கெடுத்தாலும் இப்படி குதர்க்கமாவே பேசினா எப்படி கல்பு?” தன்னுடைய பேச்சு வேறுவிதமான விளைவை ஏற்படுத்தி விட்டது என்பது புரியவும், மெதுவாக இறங்கி வந்தார் ராஜவேலு.
“நானா பேசலை, நீங்க தான் என்னை பேச வைக்கிறீங்க.” கல்பனா முறைத்துக் கொண்டு நின்ற நேரம் அவருடைய கைபேசி அழைத்தது.
அழைப்பு ராஜவேலுவின் இரண்டாவது சகோதரி மாதவியிடமிருந்து. அந்த பெண்மணியை கல்பனாவுக்கு பிடிப்பதில்லை. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பட்டும் படாமலும் தான் அவர்கள் உறவு. கணவர் அருகே இருக்கவும், வேறுவழியில்லாமல் அழைப்பை ஏற்றார்.
“சுரேந்தர் வீட்டுக்கு வந்துட்டானா கல்பனா?” எடுத்த உடனே விசாரணையில் இறங்கினார் அந்த பெண்மணி.
மற்ற நேரமாக இருந்தால் கல்பனா என்ன பதில் சொல்லியிருப்பாரோ தெரியாது. இப்போதோ இரவு நேரம், மகன் இன்னமும் வீட்டுக்கு வரவில்லை என்ற தவிப்பு இருக்க, “இன்னும் இல்ல” என்றார் மெதுவான குரலில்.
“எப்படி வருவான்? உன் மூத்தார் மக, பிள்ளையை பிடிச்சு மிரட்டுனதும் இல்லாம, தோப்புக்கரணம் எல்லாம் போடவச்சிருக்காளே…” சந்தடி சாக்கில் நீ இரண்டாவது தான் என்று அந்த மாதவி குத்திக்காட்ட, அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லாத கல்பனா,
“என்ன சொல்லுறீங்க நீங்க?” கிட்டத்தட்ட அலறினார்.
“ம்ம்… நான் என்ன சொல்லுறது? நீயே டிவியைப் போட்டுப்பாரு, அது எல்லாத்தையும் உனக்கு சொல்லும்.” என்று குறிப்பிட்ட சானலின் பெயரைச் சொல்ல, பாய்ந்து சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்தார் கல்பனா. என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் வேலு.
நெல்லைச் சுற்றுவட்டார செய்திகள் ஒளிபரப்பாகும் உள்ளூர் சேனல் அது. வியாபாரிகள் தங்கள் வியாபார வளர்ச்சிக்காக அதில் விளம்பரங்களும் செய்து கொள்வார்கள். இவ்வளவு ஏன்? இவர்களுடைய ட்ராவல்ஸ் விளம்பரம் கூட அந்த சேனலில் வரும்.
“பணியில் சேர்ந்த அன்றே நம் நெல்லை எஸ்பி செய்த தரமான சம்பவம்” என்ற தலைப்பில், மாலைநேரம் குளங்கரையில் நந்தினிக்கும் இளைஞர்களுக்குமிடையே நடந்த நிகழ்வு வீடியோவாக ஓடிக்கொண்டிருந்தது. போதாததற்கு அவ்வப்போது சேனல்காரர்களின் நீட்டி முழங்கிய வர்ணனை வேறு.
அவ்வளவு தான்… கல்பனாவின் இரத்த அழுத்தம் தாறுமாறாக எகிறியது.
“என்ன நினைச்சிகிட்டு இருக்குறா மனசுல? கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு நினைச்சிகிட்டாளா? நான் இருக்கேன் எம்புள்ளைக்கு, இதோ இப்பவே போய் அவளை உண்டு இல்லைன்னு ஆக்குறேன். நீங்க எங்கூட வரப்போறீங்களா, இல்லையா?” வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார் கல்பனா.
ராஜவேலுவுக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் மனைவி அளவிற்கு ஏனோ கோபம் வரவில்லை.
“கொஞ்சம் பொறுமையா இரு கல்பு. சுரேன் வீட்டுக்கு வரட்டும், அவன்கிட்ட கேட்டுட்டு என்னன்னு முடிவெடுக்கலாம்.” மனைவியை அமைதிப்படுத்தவே முயன்றார்.
“இதுக்கு மேல என்ன கேட்கணும் அவன்கிட்ட? அதான் எல்லாத்தையும் வெட்டவெளிச்சம் போட்டு காட்டுதே இந்த வீடியோ. எங்கமேல எவ்வளவு வஞ்சம் இருந்திருந்தா, வேலைக்கு சேர்ந்த மொத நாளே எம்பிள்ளைமேல கையை வச்சிருப்பா அந்த கிரகம் புடிச்சவ…” சகட்டுமேனிக்கு கல்பனா பேசிக்கொண்டிருந்த நேரம் சுரேந்தர் வீட்டுக்குள் நுழைந்தான்.
“சுரேன்… நீ நல்லாயிருக்கியா ப்பா? அந்த திமிர் புடிச்சவ, உம்மேல கை எதுவும் வச்சிடலையே?” பதட்டத்தோடு மகனின் தோள்களை கைகளால் தடவியபடியே கேட்டார் கல்பனா.
தொலைக்காட்சியில் மறுபடியும் அந்த வீடியோ ஓடிக்கொண்டிருக்க, தாயின் பதட்டத்துக்கான காரணம் புரிந்தது இளையவனுக்கு.
“நீங்க சொல்லுற மாதிரி எதுவும் நடக்கல, சும்மா அட்வைஸ் தான் பண்ணுனாங்க அக்கா.” தாயின் கைகளை விலக்கிவிட்டபடியே சாதாரணமாக சொன்னான் சுரேந்தர்.
மகனின் ‘அக்கா’ என்ற வார்த்தையில் அயர்ந்து போய் நின்றார் கல்பனா…