அத்தியாயம் 03

“வாழ்த்துகள் மேடம், நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு பெண் ஐபிஎஸ் ஆஃபீஸரை நம்ம நெல்லை சீமை சந்திக்குது.” நந்தினி காவல்துறை கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்ததும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடாகியிருக்க, நிருபர்கள் சார்பாக வாழ்த்துகள் வந்தது.

“தேங்க்யூ.” காக்கிச்சட்டைக்கென்றே பிறந்தவள் போல, அணிந்திருந்த சீருடை அத்துணை கம்பீரத்தைக் கொடுக்க தலையை லேசாக அசைத்து வாழ்த்தை ஏற்றுக்கொண்டாள் நந்தினி.

“சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை திருநெல்வேலி மாவட்டம் காவல்துறையை ஒரு பதட்டத்திலேயே வச்சிருக்குற மாவட்டம்னு உங்களுக்கே நல்லாத் தெரியும் மேடம். அப்படி இருக்கும் போது ஆண் உயரதிகாரிகள் சந்தித்த பிரச்சனைகளை ஒரு பெண்ணா உங்களால சமாளிக்க முடியுமா?” ஒரு நிருபரிடமிருந்து வந்து விழுந்தது கேள்வி.

“எக்ஸ்கியூஸ்மீ… இதுக்கு பதில் சொல்லுறதுக்கு முன்னாடி எனக்கு உங்ககிட்ட ஒரு கேள்வி இருக்கு. அது என்ன, திருநெல்வேலி மாவட்டம்னாலே பிரச்சனையான மாவட்டம்னு பேசுறது, அப்படித்தான்னு உங்களுக்கு யார் சொன்னது? ம்ம்…” அந்த கேள்வியை கேட்ட நிருபரை கூர்ந்து பார்த்தபடி கேட்ட நந்தினியின் புருவம் கேள்வியாக உயர்ந்தது.

“கடந்தகால வரலாறு சொல்லுது மேடம்.”

“ஓஹ்… அந்த வரலாறையே உங்களை மாதிரி ஆட்கள் தான் உருவாக்குறீங்களோ என்னவோ?” கேலி இழையோட வந்த நந்தினியின் பதிலில் நிருபர்கள் கூட்டத்திலிருந்து மெல்லிய சிரிப்பலை எழுந்தது.

“அப்புறம், இந்த ஆண்அதிகாரி பெண் அதிகாரின்னு ஜென்டர் பிரிச்சு பேசுறதுல எனக்கு உடன்பாடு கிடையாது. ஏன்னா, ட்ரெயினிங் பீரியட்ஸ்ல ஆண்களுக்கு எப்படி பயிற்சி குடுக்குறாங்களோ அதே பயிற்சியைத் தான் எங்களுக்கும் குடுக்குறாங்க. பெண்கள்னு சொல்லி பயிற்சியில சலுகைகள் எதுவும் எங்களுக்கு கிடையாது. மோர்ஓவர், நாங்க அதை எதிர்பார்க்கவும் இல்ல. சோ, ஜென்டர் பாகுபாடு இல்லாம எல்லா அதிகாரிகளையும் ஒரேமாதிரி பார்க்க பழகுங்க.”

“குட் எக்ஸ்ப்ளனேஷன் மேம், அப்படியே உங்களைப் பத்தியும் சொல்லிடுங்க.”

“நான் நந்தினி, ஐபிஎஸ். 2019 பேட்ச். கடந்த இரண்டு வருடங்களா சென்னையில் ஏசிபி யா வேலை பார்த்தேன் .”

“உங்க குடும்பம்.”

“என்னைப்பற்றி மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும்னு நினைக்கிறேன்.”

“மக்களுக்கு இந்த நேரத்துல என்ன சொல்ல விரும்புறீங்க மேடம்?”

“உங்களுக்கு சர்வீஸ் பண்ணத்தான் நாங்க இருக்கோம், என்ன பிரச்சினைன்னாலும் தைரியமா எங்களை அணுகுங்க.” நிருபர்களிடமிருந்து வரிசையாக கேள்விகள் வந்து விழ, எந்த தயக்கமும் இன்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் நந்தினி.

“கடைசியா ஒரு கேள்வி மேம், இந்த சந்தர்ப்பத்துல சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்யுறவங்களுக்கு ஏதாவது சொல்லணும்னா, நீங்க என்ன சொல்லுவீங்க?”

“மாவட்டம் முழுவதும் காவல்துறை விழிப்போடு இருக்குது. காவல்துறைக்கு சவாலாக இருக்குற யாரா இருந்தாலும் நீங்களே திருந்திக்கோங்க. இல்ல, காவல்துறையின் கடினமான நடவடிக்கைகளுக்கு நீங்க ஆளாக நேரிடும்.” சட்டென்று நந்தினியின் உடல்மொழியில் ஒரு கடினம் கூடியிருக்க, பளீரென்று வந்திருந்தது பதில்.

“சூப்பர் மேம், அடிச்சு தூள் கிளப்புங்க.” நிருபர்கள் கூட்டத்திலிருந்து கைத்தட்டலோடு கூடிய பாராட்டுக்கள் வர,

“பத்திரிக்கைகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் கூட ஒரு சமுதாய கடமை இருக்குது ஃப்ரெண்ட்ஸ். எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாம நடுநிலமையோட உங்களோட பணியை செய்யுங்க. உங்களோட சப்போர்ட் எப்பவும் எங்க டிப்பார்ட்மெண்டுக்கு தேவை.” முத்தாய்ப்பாக சொல்லிவிட்டு புன்னகையோடு எழும்பினாள் நந்தினி.

அத்தனையும் தன் முன்னால் இருந்த மடிக்கணினியின் திரையில் பார்த்துக்கொண்டிருந்த திலகத்தின் முகத்தில் தான் எத்தனை பரவசம்? ஒரு பிரபல செய்தி சேனலில் நந்தினியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு செய்தியாக ஓட, அதைத்தான் தன்னுடைய தையலகத்தில் அமர்ந்திருந்த திலகம் மடிக்கணினி வழியாக பார்த்துக்கொண்டிருந்தது.

செய்தி முடியவும் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த திலகத்தின் மனம், ‘எல்லாம் பொட்டபிள்ளைங்களா பெத்துப் போட்டுருக்கா, எனக்கு ஆம்பிள்ள பிள்ளை வேணுங்குற ஆசையிருக்காதா?’ என்ற வார்த்தைகளையும், அந்த வார்த்தைகளைச் சொன்ன மனிதரையும் வலிக்க வலிக்க நினைவுபடுத்திக் கொண்டது.

“பெண்குழந்தை… நீ அலட்சியமாக பொட்டப்புள்ளன்னு சொன்ன எம்பொண்ணு இன்னைக்கு ஒரு மாவட்டத்துக்கே போலீஸ் உயரதிகாரி, இன்னும் கொஞ்சநாள்ல இன்னொரு பொண்ணு மாவட்ட ஆட்சியரா வந்து நிப்பா.” ராஜவேலுவின் முன் போய் நின்று சத்தமாக கத்த வேண்டும்போல இருந்தது திலகத்திற்கு.

என்னதான் எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டாலும், வாழ்க்கையில் ஏமாந்து நின்ற அந்தப்பொழுதை அத்தனை எளிதாக மறந்துவிட முடியவில்லை திலகத்தால்.

அதுவும் தன்மீது தவறை வைத்துக்கொண்டு திலகத்திற்கு விவாகரத்து கொடுப்பதற்கு அவர் இழுத்தடித்து அலைக்கழித்தது எல்லாம் ஆண் என்ற திமிரின் உச்சகட்டம் தான்.

ஆமாம்… மணவாழ்க்கை வேண்டாம் என்று முடிவெடுத்ததும், அந்த வாழ்க்கையிலிருந்து சட்டப்படி வெளியே வருவதற்கான முயற்சியைத் தான் மேற்கொண்டார் திலகம்.

நான்கு பெண்பிள்ளைகளோடு அவளால் தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாது, தன் காலில் வந்து விழுந்துவிடுவாள் என்று இறுமாந்திருந்த ராஜவேலுவுக்கு, திலகத்தின் இந்த நகர்வு பலத்த அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதைவிட ‘ஆண்’ என்ற அவரின் அகம்பாவத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அடி என்றே சொல்லலாம்.

“அப்படி என்ன உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான் செய்துட்டேன்னு துள்ளுற?” இப்படிச் சொல்லி திலகத்தை முறைத்துக் கொண்டு நின்றவர், வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளச் சொல்லி நேரடியாகவே மனைவியை மிரட்ட, எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை திலகம்.

திலகத்தின் பக்கம் உண்மை இருக்க, நீண்ட இழுபறிக்கு பிறகு என்றாலும் அவருக்கு மணவிலக்கு கிடைத்திருந்தது. கூடவே நான்கு பெண் பிள்ளைகளும் தாயுடனே இருக்க விருப்பம் தெரிவிக்க, தன் முதல் திருமணத்தால் கிடைத்த இரத்த சொந்தம் எதுவுமின்றி வெறும் கையோடு தான் நின்றிருந்தார் ராஜவேலு.

எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக அவரிடமிருந்து எந்தவிதமான இழப்பீட்டுத் தொகையும் கேட்கவில்லை திலகம். இவ்வளவு ஏன்? நீதிபதியே, “உங்களுக்கு இழப்பீடு எதுவும் வேண்டாமா ம்மா?” என்று கேட்டதற்கு, “வேண்டாம்” என்று திலகம் நிமிர்வாகச் சொல்ல, தன்னை செல்லாக்காசாக உணர்ந்தார் ராஜவேலு.

அப்போதும் திலகத்தின் நிமிர்வு ராஜவேலுவுக்கு திமிராகத்தான் தெரிந்தது.

அவரிடமிருந்து மட்டுமல்ல தனக்கு உதவி செய்த லீலாவதி தம்பதியிடமிருந்தும் தார்மீக ஆதரவைத் தாண்டி பணம் எதுவும் பெற்றுக்கொண்டதே இல்லை திலகம்.

தன் கழுத்து, கைகளில் கிடந்த தங்க நகைகளை விற்று ஆரம்பத்தில் தனக்கு தேவைப்பட்ட பணத்தை ஏற்பாடு செய்து கொண்டார் திலகம். அந்த நகைகளில் அவருடைய ‘திரு’மாங்கல்யமும் அடக்கம். அது உண்டாக்கித் தந்த உறவுக்கே மரியாதை இல்லாமல் போன பின்பு, அந்த மரியாதைக்குரிய நகையை வெறும் தங்கச் சங்கிலியாகத் தான் உணர முடிந்தது அவரால்.

 தன்னுடைய பெண்களின் முன்னேற்றத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவரின் வாழ்க்கையில் தற்போது அறுவடை காலம். அவர் விரும்பியது போல அவருடைய நான்கு பெண்களும் கல்வியில் சிறந்து விளங்க, இதோ முத்தாய்ப்பாக மூத்தமகள் பிறந்த மாவட்டத்துக்கே காவல் உயரதிகாரி.

இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு அம்மாவுக்கு? புன்னகையோடு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த திலகத்தின் இதயம், ஏதோ சாதித்துவிட்டது போல சந்தோசத்தில் விம்மித் தணிந்தது.

அதற்கு நேர்மாறான மனநிலையில் இருந்தார் திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் அமர்ந்திருந்த ராஜவேலு.

நந்தினி பத்திரிக்கையாளர்களை சந்திந்த நிகழ்ச்சி, அங்கே வரவேற்பு பகுதியில் இருந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

“பொண்ணு கண்ணுல ஒரு ஃபயர் தெரியுது. சின்னப்பொண்ணா வேற இருக்குது. நிச்சயம் திருநெல்வேலியை ஒரு கலக்கு கலக்கும்னு நினைக்கிறேன்.” இந்த வார்த்தைகள் அங்கிருந்தவர்களிடமிருந்து வர,

“அது எம்பொண்ணு தான்” என்று சொல்ல முடியாமல் அவர்களோடு ஒருவராக அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜவேலு.

ஒரே ஊரில் இருந்ததால் தன் பிள்ளைகளை அவ்வப்போது ராஜவேலு பார்க்க நேரிட்டிருக்கிறது. அதனால் அடையாளம் தெரியாது என்று எதுவும் இல்லை. இருவருக்கும் பொதுவான உறவுகள் வேறு இருக்க, தன் மனைவி மக்களைப் பற்றிய தகவல்கள் எல்லாம் கூட ராஜவேலுவுக்கு தெரிந்து தான் இருந்தது.

ராஜவேலுவின் பார்வை சுற்றிலும் பெருமிதமாக சுற்றிவர, கை யோசனையோடு மீசையை தடவியது.

 என்னதான் பெருமிதப்பட்டுக் கொண்டாலும் தனது முதல் மனைவியையும் பிள்ளைகளையும் நெருங்கிவிட முடியாது என்ற நிசர்சன உண்மை அவர் முகத்தில் ஓங்கி அறையத்தான் செய்தது.

மகள் தன்னை தள்ளி வைத்திருப்பதை, இதோ இப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட தெள்ளத் தெளிவாக்கியிருந்ததே!

ஆமாம்… குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள் என்ற கேள்வியில், அப்பா என்று தன் பெயரைச் சொல்வாள் என்ற எதிர்பார்ப்போடு ராஜவேலு நிமிர்ந்து அமர, என்னைப் பற்றி மட்டும் தெரிந்தால் போதும் என்று சொல்லி ஒரு அண்டா தண்ணீரை ஊற்றி அவருடைய ஆசையையே அழித்திருந்தாள் மகள்.

உண்மையில், ஆண்பிள்ளை வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட, பெண்பிள்ளைகளை அவர் எப்போதும் வெறுத்து ஒதுக்கியவர் கிடையாது.

தன்னிடம் வேலைக்கு வந்த கல்பனாவின் அழகு ஏற்படுத்திய சபலத்தில் தடுக்கி விழுந்தவர், மனைவிக்கு தெரியாமல் அவரை திருமணமும் செய்து கொண்டார். ‘குருவி உட்கார பனம் பழம் விழுந்த’ கதையாக இருவருக்கும் ஆண்பிள்ளையும் பிறந்துவிட்டது. தன்னுடைய நம்பிக்கைத் துரோகம் வெளிப்பட்ட போது, ஆண்பிள்ளைக்காகத் தான் அந்த திருமணம் என்பதுபோலக் காட்டிக்கொண்டு தன்மீது தவறு இல்லை என்று சித்தரிக்க முயன்றார்.

அவருக்கு திலகத்தையும் பிள்ளைகளையும் பிரிய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. இரண்டு குடும்பத்தையுமே தன்னோடு வைத்துக்கொள்ள தான் விரும்பினார். அதுவுமில்லாமல் தனிப்பட்ட சம்பாத்தியம் என்று எதுவும் இல்லாத தன்னுடைய மனைவி தன்னையும் தன் தவறுகளையும் பொறுத்துக் கொண்டு தன் காலடியிலேயே கிடப்பாள் என்று நினைத்தார்.

ஆனால் அவருடைய எண்ணத்தை தவிடுபொடியாக்கி விட்டு சட்டப்படி பிரிந்தே சென்றுவிட்டார் திலகம். அதுவும் இழப்பீட்டு தொகை எதுவும் பெற்றுக் கொள்ளாமலேயே.

எல்லாம் நடந்து முடிந்த பிறகும் அவ்வப்போது பிள்ளைகளைத் தேடி அவர்கள் படிக்கும் பள்ளி வாசலில் போய் நின்றிருக்கிறார் வேலு. பெற்றோர்களின் பிரிவுக்குப் பிறகு பிள்ளைகளின் படிப்பு அரசாங்கப் பள்ளியில் என்றானதில் அவருக்கு மிகுந்த வருத்தம் தான்.

ஆனால் அதைப்பற்றி பிள்ளைகளே கவலைப்படாத போது, அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னைத் தவிர்த்த பிள்ளைகளிடம், “நான் உங்க அப்பா ம்மா, எங்கிட்ட என்ன ஒதுக்கம்?” என்று கேட்க,

“ஆனா எங்க அம்மாவுக்கு மட்டும் நீங்க ஹஸ்பண்ட் இல்லையே?” முகத்தில் அடித்தாற்போல நந்தினி ஒரு முறை சொல்லிவிட, அவமானத்தால் முகம் சுருங்கிவிட்டது ராஜவேலுவுக்கு. அதன்பிறகு பிள்ளைகளைத்தேடி பள்ளிக்குச் செல்லுவதை நிறுத்தி விட்டார்.

ஆனால் எப்படி என்றாலும், தன் பிள்ளைகளின் கல்யாணம் என்று வரும்போது தன்னிடம் தான் திலகம் வந்து நிற்பாள் என்ற எண்ணம் மட்டும் அவர் மனதில் ஆழப்பதிந்து போய் கிடந்தது. ஏனென்றால் தைப்பதில் எந்த அளவிற்கு வருமானம் வந்துவிடும் என்ற ஏளனமான எண்ணம் இருந்தது மனிதருக்கு.

ஒருபெண் மட்டும் மனதில் வைராக்கியத்தை வளர்த்து விட்டால் இந்த உலகத்தையே சுருட்டி தன் கக்கத்திற்குள் வைத்துக்கொள்வாள் என்பது அவருக்கு தெரியாமல் போயிற்று.

இதற்கு மேல் கண்டிப்பாக தன்னுடைய தயவு அவர்களுக்கு தேவையில்லை என்பது பொட்டில் அடித்தாற் போல ராஜவேலுவுக்கு புரிய, ஏற்றுக்கொள்ள தான் அவரால் முடியவில்லை.

என்ன செய்தாவது அவர்களிடம் தன்னுடைய முக்கியத்துவத்தை நிலை நிறுத்தியே ஆகவேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் வேரூன்றி வேகமாக வளர, எப்படி என்று யோசித்து கொண்டிருந்தவரை,

“ஸ்கேன் எடுத்தாச்சு, ரிப்போர்ட் கிடைக்க ஒரு மணிநேரம் ஆகுமாம்.” என்று அலுத்துக்கொண்டே சொன்ன கல்பனாவின் குரல் கலைத்தது.

“ஹாங்… என்ன சொன்ன கல்பு?” பக்கத்து இருக்கையில் அமர்ந்த கல்பனாவிடம் கேட்டார் ராஜவேலு.

 “முழிச்சிகிட்டே தூங்குறீங்களா என்ன?” உடலின் வருத்தம் வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட, கொஞ்சம் எரிச்சலாக கேட்டார் அந்த பெண்மணி. கடந்திருந்த காலமும், உடலில் சேர்ந்திருந்த விதவிதமான நோய்களும் அவருடைய அழகிய தோற்றத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தி உடலைப் பருமனாக்கியிருந்தது.

“நீயும் மணிக்கணக்கா சும்மாவே காத்துக்கிடந்தா தான், என்னோட கஷ்டம் உனக்கும் புரியும்.” பதிலுக்கு அலுத்துக் கொண்டார் வேலு. இப்போது செய்தி முடிந்து விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது தொலைக்காட்சியில்.

“பொண்டாட்டிக்காக காத்திருந்தா குறைஞ்சு ஒன்னும் போகமாட்டீங்க.” கல்பனா நொடித்துக்கொள்ள,

“வருஷத்துல பாதி நாள் இப்படி உங்கூட ஹாஸ்பிடலுக்கே அலைஞ்சா, தொழிலை யார் பாத்துக்குறது?” என்றார் ராஜவேலு.

“அப்போ நான் தனியா ஹாஸ்பிடல் வரணுமா?”

“ஏன் வந்தா என்னவாம்? திலகம் எல்லாம் என்னை எதுக்காகவும் பெருசா தொந்தரவு செய்ததே இல்லை. அவளோட தேவைகளை அவளே பாத்துப்பா.” தன்னையறியாமல் வேலு வார்த்தைகளை விட்டுவிட,

“அந்த பொம்பிள்ளையை எங்கூட கம்பேர் பண்ணாதீங்க…” சட்டென்று நெற்றிக்கண்ணை திறந்து கொண்டு சீறிய கல்பனா,

“அப்படி உங்களை சுதந்திரமா விட்டதாலத் தான, என்னைப் பிடிக்க முடிஞ்சது உங்களால.” என்றார் எள்ளலாக.

“ஏன்? நான் மட்டும் தான் உன்னை வலைவீசி பிடிச்சனா? நீ என்னை பிடிக்கவே இல்லையா?” மனைவியின் பதில் அவரின் தன்மானத்தை லேசாக உரசிச்செல்ல, பதிலுக்கு பதில் கொடுத்துவிடும் வேகத்தில் கேட்டுவிட்டவர் சட்டென்று எழும்பி வெளியே சென்று விட்டார்.

அவ்வளவு தான்… அவமானத்தால் முகம் கன்றி சிவந்து போயிற்று கல்பனாவுக்கு. வெளியே வேப்பமரத்துக்கு கீழே கோபமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த கணவனை கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தார்.

அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை, எள்ளி நகையாடியது அந்த பேரிளம் பெண்ணை.

திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகளுக்கு தகப்பனான ராஜவேலுவுக்கு தன்மீது ஆர்வம் வந்தது தெரிந்ததும், கல்பனாவிற்கு கோபம், பயம், பதட்டம், இப்படி எதுவுமே வரவில்லையே. அதற்குப் பதில் அவருக்கு தன்மீது வந்த ஆர்வத்தை தூண்டிவிட்டு, திருமணம் வரை கொண்டு வந்ததில் இவருடைய பங்கும் சரிபாதி உண்டு தானே.

ஆனால் அதைச்சொல்லிக் காட்டும் போது, அதுவும் கணவனே செய்யும் போது அவமானமாக இருந்தது.

ஏனென்று தெரியவில்லை, இப்போதெல்லாம் வீட்டில் அடிக்கடி திலகம் மற்றும் அவருடைய பிள்ளைகளின் பேச்சை கணவன் எடுக்கிறார். அதுவும் இன்று தன்னோடு திலகத்தை ஒப்பீடு செய்து பேசிவிடவும் பொங்கிவிட்டார் கல்பனா.

‘ஏன் இப்படி?’ அவர் யோசிக்க, தொலைக்காட்சியில் விளம்பரம் முடிந்து மறுபடியும் முதலில் இருந்து செய்தி ஒளிபரப்பாகத் தொடங்கியது.

“திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் எஸ்பி இன்று பதவியேற்றுக் கொண்டார்…” செய்தி வாசிப்பாளரின் குரலில் கல்பனா தொலைகாட்சியைப் பார்க்க, இளமை காலத்து திலகத்தை அப்படியே தோற்றத்தில் உரித்து வைத்திருந்த நந்தினி பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 தங்களுக்கு நடுவே திலகம் இப்போது எதற்காக வந்தார் என்பது புரிந்தது அவருக்கு. கூடவே, அந்த பெண்ணின் உயரம் பார்த்து மனம் பொறாமையில் பொசுங்கவும் செய்தது.

‘இத்தனைக்குப் பிறகும் இந்த திலகம் பிள்ளைகளை நன்றாக வளர்த்து ஆளாக்கி விட்டாளே! எனக்கும் வந்து பிறந்திருக்கிறதே பிள்ளை. அதுவும் ஆண்பிள்ளை.’ மனதிற்குள் அலுத்துக் கொண்டார் கல்பனா.

அவர் அலுத்துக் கொள்ளும் அளவிற்கு சுரேந்தர் அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை. வேதியியலில் எம் எஸ்சி முடித்திருக்கிறான். சிறுவனாக இருக்கும் போது தாய் தகப்பன் பேச்சைக் கேட்டு ஒழுக்கமாக வளர்ந்த பிள்ளை தான்.

ஆனால் சமீபகாலமாக அவனுடைய நடவடிக்கைகளில் பெரும் மாற்றம். அதுவும் பெற்றவர்களைக் கொண்டு தான்.

ஆமாம்… தன்னுடைய அம்மா, அப்பாவிற்கு இரண்டாவது மனைவி, அதுவும் அப்பாவின் முதல் மனைவி உயிரோடு இருந்து அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கும் போதே இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள் என்ற தகவலை சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்த வயது தொட்டு, தன்னுடைய பிறப்புக் குறித்து அவனுடைய மனதில் தாழ்வு மனப்பான்மையோடு, குற்ற உணர்ச்சியும் ஏற்பட ஆரம்பித்து விட்டது.

 அவன் வளர வளர அந்த மனநிலையும் கூடவே வளர்ந்து, வீட்டில் பெற்றவர்களிடம் அவனுக்கு ஒட்டுதல் இல்லாமல் செய்தது. அதைவிட அவர்கள் மீதிருந்த மரியாதை வெகுவாக குறைந்து போயிருந்தது.

மகனை கண்டிக்கவோ, அறிவுரை சொல்லவோ ராஜவேலு முயன்றாலும், ஒரு அலட்சிய போக்கு தான் அவனிடம். ‘அறிவுரை சொல்லவும் ஒரு தகுதி வேண்டும், அது உங்களுக்கு இல்லை’ என்பது தான் அவனின் எண்ணம்.

தான்தோன்றித்தனமாக அலையும் அவனுடைய செயலால், சமீபகாலமாக தந்தைக்கும் மகனுக்குமிடையே அடிக்கடி முட்டிக்கொள்கிறது. சமரசம் செய்து வைக்கிறேன் பேர்வழி என்று அவர்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு முழி பிதுங்கி நிற்பது என்னவோ கல்பனா தான்.

அப்படித்தான் ஒருநாள் கல்பனா, “இப்பிடி சும்மா அலையுறதுக்கு அப்பாகூட சேர்ந்து நம்ம தொழிலை கவனிச்சுக்கோ சுரேன். இல்லைன்னா உன் அப்பாவோட அண்ணான்னு சொல்லிட்டு அங்க இருக்குற மனுஷன் தொழிலை அப்படியே ஏப்பம் விட்டுடுவார்” என்று சொல்ல,

“எப்பிடி? பெரியம்மாகிட்ட இருந்து பிடுங்கி அப்பாவை நீங்க ஏப்பம் விட்டீங்களே? அப்படியா?” என்றுவிட்டான் பிள்ளை.

ஒரு அம்மா பிள்ளையிடமிருந்து கேட்க கூடிய வார்த்தைகளா இவை? தன் கை வலிக்கும் வரை மகனை அடி வெளுத்துவிட்டார் கல்பனா. அவனும் தடுக்காமல் வாங்கிக் கொண்டு நின்றான். அவர்தான் கைவலி தாங்காமல் நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிருந்தது.

ஆக எங்கோ அடிபட்டதற்கு எங்கோ நெறிகட்டி உயிர் வாதை கொடுக்குமே, அப்படி பெற்றவர்கள் இளமையில் செய்த தவறுக்கு அவர்களுக்கு தண்டனைக் கொடுக்கிறேன் பேர்வழி என்று தன்னைத்தானே தண்டித்துக் கொண்டிருக்கிறான் சுரேந்தர்.

இப்படியே போனால் தன் மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயம் முளைத்திருக்கிறது கல்பனாவிடம். மகனின் எதிர்காலம் கண் எதிரே கேள்விக் குறியாக இருக்க, தொலைகாட்சி திரையில் கம்பீரமாக தெரிந்த நந்தினியை பொறாமை சூழ்ந்த விழிகளோடு பார்த்தவரை,

“மேடம், உங்க ஸ்கேன் ரிப்போர்ட் ரெடி.” என்ற குரல் நடப்புக்கு கொண்டு வந்தது.

ஒரு பெருமூச்சோடு இருக்கையிலிருந்து எழுப்பி ஸ்கேன் ரிப்போர்ட்டை சேகரித்துக்கொள்ள சென்றார் கல்பனா…