அலைபேசியின் மெல்லிய அழைப்பில் கண்விழித்தாள் நந்தினி. இடம் கோவை மாநகரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டல். நேரம் அதிகாலை நான்கு மணி. அழைத்தது தங்கை இந்துஜா.
“வந்துட்டீங்களா இந்து?” அருகே தூங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு மெதுவாக பேசினாள் நந்தினி. ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது போல அவளோடு தங்கியிருந்த அனிதாவும் பூங்கோதையும் படுக்கையில் எழும்பி உட்கார்ந்தார்கள். சின்னப்பெண் ஐஸ்வர்யா மட்டும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
“ம்ம்… ரூம் வாசல் முன்னாடி தான் நின்னுட்டு இருக்கிறோம் க்கா, கதவைத் திற.” இந்துஜா சொல்ல, படுக்கையிலிருந்து இறங்கினாள் நந்தினி. கூடவே அனிதாவும் இறங்கினாள். இரண்டு படுக்கைகள் போடப்பட்டிருந்த நல்ல விஸ்தாரமான அறை அது. பக்கத்து அறையில் மூத்த பெண்கள் நால்வரும் தங்கியிருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார் ஞானவல்லி பாட்டி.
ஆறு மணிக்கெல்லாம் இங்கிருந்து ஊட்டிக்கு கிளம்பிவிட வேண்டும் என்று நேற்றிரவே முடிவு செய்திருந்ததால், அனிதாவும் பூங்கோதையும் எழும்பியதைக் கண்டும் அலட்டிக்கொள்ளவில்லை நந்தினி.
ஐஸ்வர்யா தூங்கிக்கொண்டிருப்பதால் வெளிச்சம் குறைவான விளக்கை அறையில் எரியவிட்ட நந்தினி அறைக்கதவை திறந்தாள். இளைய தங்கைகள் இருவரும் நின்றிருந்தார்கள். பயணத்தின் காரணமாக லேசாக நலுங்கிய தோற்றமே இருவரிடமும்.
“ட்ராவல் கம்ஃபர்ட்டபிளா இருந்ததா?” தங்கைகளிடம் கேட்ட நந்தினியின் பார்வையில் சற்று தள்ளி நின்றிருந்த சுரேந்தர் விழ,
“இவன் எங்க டி இங்க?” அதிருப்தியாக முகத்தை சுளித்தபடி கேட்டாள்.
“எங்களை தனியா அனுப்ப முடியாதுன்னு அண்ணாவும் கூட வந்தாங்க க்கா.” கௌரி தான் சொன்னது. சமீபமாக சுரேந்தரை அண்ணா என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறாள் கௌரி.
அந்த அழைப்பில் அசூசையாக முகத்தை சுழித்த நந்தினி, “நான் எப்பவும் சொல்லுறது தான், நம்மளைத் தவிர வேற யாரும் நமக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. அவனோட வேலையைப் பாத்துட்டு போகச் சொல்லுங்க.” சுரேந்தருக்கு கேட்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள்.
“அவன் சரியான அன்பு இம்சை க்கா, என்ன சொன்னாலும் கேக்க மாட்டான். ரூம்ல கொஞ்சம் இடம் கொடுத்தா, குளிச்சிட்டு கிளம்பிடுவான். அவனை சத்தம் போடாத, ப்ளீஸ்…” இறைஞ்சும் குரலில் சொன்னாள் இந்துஜா.
“அது உனக்கு எதுக்கு? நீ கிளம்பு டா.” நேரடியாகவே அவனை அதட்டிய நந்தினி,
“சும்மாவே அவனோட அம்மா, நம்மபக்கம் அவனை இழுத்துகிட்டோம்னு ஊர் முழுக்க சொல்லிட்டு திரியுது. இப்போ இதுமட்டும் தெரியவந்தா ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்தாலும் சேர்ந்திடும்.” நக்கலாக முணுமுணுத்தாள்.
ஆமாம்…சென்னையில் இந்துஜா, கௌரியோடு மகன் நட்பாக இருக்கிறான் என்பதை தெரிந்துகொண்ட கல்பனா, “என்னை பழிவாங்குறதுக்காக எம்பிள்ளையை எங்கிட்ட இருந்து அநியாயமா பிடுங்கிகிட்டாளுங்க.” என்று தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் புலம்பித் தீர்க்கிறார்.
அதற்கு ஏற்றாற்போலத்தான் சுரேந்தரும் நடந்து கொள்கிறான். வீட்டு பிரச்சினை ஆரம்பித்து பலநாட்கள் கழித்தே ஊருக்கு சென்றிருந்தான். மகனைக் கண்டதுமே பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார் கல்பனா.
“நான் எத்தனைத்தடவை தொழிலைப் பாத்துக்கோ, இல்லைன்னா அந்த மனுஷன் நம்மளை விழுங்கி ஏப்பம் விட்டுருவார்னு சொன்னேன். நான் சொன்னதை நீ கேட்டுருந்தா இப்போ இப்பிடி நடந்துருக்குமா? அந்த திலகம் பெத்தது சொன்னதை மட்டும் கேட்க முடிஞ்ச உனக்கு, நான் சொன்னதை கேக்க முடியலையே.” என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டார்.
இந்த மாதிரியான அணுகுமுறை மகனை தன்னிடமிருந்து இன்னும் தான் தள்ளிப்போக வைக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை.
என்னதான் நம்பிக்கை துரோகத்தின் வலியை தன்னைப் பெற்றவர்களும் அனுபவிக்கட்டும் என்று நினைத்தாலும், சுயசம்பாதனையை துரோகத்தின் மூலம் இழந்து நிற்கும் தந்தையைப் பார்க்கும்போது பரிதாபமாகத் தான் இருந்தது சுரேந்தருக்கு.
“உங்க உழைப்பு எப்பவுமே உங்களை விட்டு போகாது ப்பா. நம்பிக்கையோடு இருங்க.” தகப்பனுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு சென்னைக்கு கிளம்ப தயாராகிவிட்டான்.
“எங்கடா கிளம்புற? நீ படிச்சு கிழிச்ச வரைக்கும் போதும். இருக்கிற சொத்தையாவது காப்பாத்திக்க பாருடா, இந்த மனுஷனை நம்புனா நீ தெருவுல தான் நிக்கணும்.” மகனை சென்னைக்கு அனுப்ப மறுத்து மல்லுக்கு நின்றார் கல்பனா.
“ம்மா, மொதல்ல நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணும். என்னோட வருங்கால தேவைக்கு என்னால சம்பாதிக்க முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்க சம்பாத்தியத்தை நீங்க காப்பாத்திக்கோங்க. என்னை தொழிலைக் கவனின்னு சொல்லுறதை விட்டுட்டு அப்பாவுக்கு தொழில்ல உங்களால முடிஞ்ச உதவியைச் செய்யுங்க. என்னால முடியாது, வயசாகிப் போச்சுன்னு சாக்குபோக்கு எல்லாம் சொல்லாதீங்க, இந்த வயசுல பெரியம்மா எவ்வளவு சுறுசுறுப்பா தொழிலைக் கவனிக்குறாங்க. அவங்களைப் பாத்தாவது கத்துக்கோங்க.” என்றுவிட்டான்.
அவ்வளவு தான், “அந்த திலகம் என்னைவிட பெருசா போனாளா உனக்கு? அப்போ நான் சோம்பேறியா? என்னை எப்படி அவகூட கம்பேர் பண்ணுவ?” என்று மகனிடம் ஆடித்தீர்த்து விட்டார் கல்பனா.
“உங்க அம்மாவைப் பற்றி உனக்கு தெரியாதா? நீ கிளம்புடா. நீயாவது சூதானமா பிழைச்சிக்கோ.” என்று ராஜவேலு தான் மகனை அனுப்பி வைத்திருந்தார்.
மகனோடு ஃபோனில் பேசும் போதெல்லாம், “அவளுங்க சகவாசம் உனக்கு வேண்டாம், அம்மா சொல்லுறதை கேளு டா.” என்று கல்பனா மகனுக்கு சொல்லத் தவறுவதே இல்லை. இவனும் தாயின் வார்த்தையை இந்த விஷயத்தில் கண்டுகொள்வதே இல்லை.
இதோ சகோதரிகள் இருவரும் ஊட்டிக்கு தனியாக கிளம்புவது தெரிய வரவும், அவர்கள் மறுத்தாலும் இருவரோடும் ஒட்டிக்கொண்டு வந்து விட்டான்.
“எப்போது மறுபடியும் கிளம்புவீர்கள்?” இந்த கேள்வியை சுரேந்தர் எதற்காக கேட்கிறான் என்று அக்கா, தங்கைகள் எல்லோருக்குமே புரிந்தது.
வேறு என்ன? இங்கிருந்து சென்னைக்கு திரும்பும் போதும் சகோதரிகளுக்கு துணையாகச் செல்லவே கேட்கிறான் சுரேந்தர். அவர்கள் கிளம்பும் நாள் வரையிலும் அவனும் ஊட்டியைச் சுற்றிப் பார்த்தால் போச்சு என்று மனநிலை தான் அவனிடம்.
“இல்ல சுரேன், நாங்க வந்துப்போம். நீ கிளம்பு, மறக்காம சாப்டுக்கோ டா.” தங்களை முறைத்தபடி நின்றிருந்த அக்காவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே தான் சொன்னாள் இந்துஜா.
நாய்க்குட்டி போல தன்னுடைய காலையே சுற்றி வரும் சுரேந்தர் மீது இத்தனை நாட்களில் ஒரு நட்புணர்வு வந்திருந்தது இந்துஜாவுக்கு. அவன்காட்டிய பாசத்தில், அக்காவின் நண்பன் என்ற ரீதியில் சகோதர பாசம் வந்திருந்தது கௌரிக்கு. அவ்வளவு தான், அதைத்தாண்டிய எந்த உறவையும் அவர்கள் மனதுக்கும் அறிவுக்கும் கொண்டு செல்லவே விரும்பவில்லை அந்த புத்திசாலி பெண்கள்.
“நான் இப்போ கிளம்புறேன். அப்புறமா ஃபோன் பண்ணுறேன் இந்து.” அதற்கு மேல் அங்கே நிற்காமல் கிளம்பிய சுரேந்தர்,
“வர்றேன் க்கா. அனி க்கா, பை.” என்றுவிட்டே தான் நகர்ந்தான்.
“சரியான இம்சை.” எப்போதும் போல அவனைத் திட்டியபடியே அறைக்குள் வந்தாள் நந்தினி.
அதற்கு மேல் அக்காவின் கைகளில் சிக்கிக் கொள்ளாமல், பிரஷ், பேஸ்ட் சகிதம் குளியலறைக்குள் நுழைந்து கொண்டார்கள் இளையவர்கள். தங்கைகளிடம் பேச்சுகொடுக்க நேரம் கொடுக்காமல் கண்ணனும் மனைவியை கைபேசியில் பிடித்துக்கொண்டான்.
“நல்லா தூங்கி முழிச்சாச்சா பேபி? நீ பக்கத்துல இல்லாம அத்தானுக்கு தான் தூக்கமே வரலை. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, கிளம்பி நேரே ஊட்டிக்கு வந்துடட்டுமா? நீ உம்னு சம்மதம் மட்டும் சொல்லு. உன்னோட பெர்மிஷன் இல்லாம, என்னால கிளம்பி வரமுடியாது பேபி.” என்று அதிகாலையிலேயே மனைவியிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான். இல்லையில்லை கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“இங்கயும் ஜெகன் ராத்திரி முழுக்க ஒரே புலம்பல் தான். பேசாம எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கலாமோன்னு இப்போ தோனுது க்கா.” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் அனிதா.
“இதைத் தான், நான் அப்பவே சொன்னேன் அனி.” ஆரம்பத்திலிருந்தே வீட்டு ஆண்களையும் சேர்த்து அழைத்து வருவோம் என்று சொல்லிக்கொண்டிருந்த பூங்கோதை அழுதுவிடுபது போலச் சொன்னாள்.
“அடிங்… பெரிய ஆளாட்டம் நாங்க பொண்ணுங்க மட்டும் ட்ரிப் போறோம்னு சொல்லிட்டு, இப்போ பாதியிலேயே வீட்டுக்காரரை கூட்டிட்டு வந்துருக்கலாம்னு சொல்லுறியா? மொவளே, ட்ரிப் முடியிற வரைக்கும் சைலண்டா இருக்கணும். இதுக்கு மேல சோகராகம் ஏதாவது பாடின, பிச்சிபுடுவேன் பிச்சி. பூவு உனக்கும் சேர்த்துத் தான் சொல்லுறேன். பேசாம கிளம்புற வேலையைப் பாருங்க.” சிரிப்பும் மிரட்டலுமாக பெண்கள் இருவரையும் தயாராகுவதற்கு துரிதப்படுத்தினாள் நந்தினி.
திட்டமிட்டபடி ஆறுமணிக்கெல்லாம் ஊட்டியை நோக்கி கிளம்பிவிட்டது அந்த பெண்கள் கூட்டணி.
காலை உணவு என்னுடைய ஃப்ரெண்ட் ஹோட்டலில் நமக்காக ஸ்பெஷலாக தயாராகிறது என்று இந்து சொல்ல, எல்லோரும் டீ, வடையோடு தான் கிளம்பியிருந்தார்கள்.
இல்லையென்றாலும் அவ்வளவு நேரத்திற்கெல்லாம் காலை உணவை சாப்பிடவும் முடியாதே. தேவைப்பட்டால் சாப்பிடுவதற்கு ஏதுவாக பழங்கள், பிஸ்கட், பிரட், ஜூஸ் என்று கைவசம் வைத்திருந்தார்கள்.
ஞானவல்லி பாட்டியின் வயதை முன்னிட்டு பெரிய சொகுசு வாகனத்தில் தான் அவர்களது பிரயாணம். காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கவே, ஒன்பது மணிக்கு முன்பாகவே குறிப்பிட்ட ஹோட்டலை அடைந்து விட்டார்கள்.
மூன்றுமாடி கொண்ட பெரிய ஹோட்டல் அது. இரண்டு பேருக்கு ஒரு அறை என்று புக் செய்திருந்தாள் இந்து. முதல் தளத்தில் இருந்தது அவர்களது அறைகள். தங்களது உடைமைகளை அறைக்குள் வைத்துவிட்டு எல்லாரும் சாப்பிடுவதற்கு கிளம்பினார்கள்.
“என்னடி, ஃப்ரெண்ட்டை பாக்கப்போற உற்சாகம் எதுவும் இல்ல, முகம் பேஸ்தடிச்சுப் போய் கிடக்கு?” யோசனையோடு இந்துவின் முகத்தை அனிதா பார்க்க, அவர்களுக்காக ரிசர்வ் செய்துவைத்த மேஜை என்று ஒன்றைக் கைகாட்டினார் ஹோட்டல் பணியாளர் ஒருவர்.
குடும்பமாக அமர்ந்து சாப்பிடும் அறையில் கிடந்த அந்த ஒற்றை மேஜை, அளவில் மிகப் பெரியதாகவே இருந்தது. அதைச்சுற்றிலும் இவர்கள் அத்தனைபேரும் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஏதுவாக நாற்காலிகள் கிடந்தன. கூடவே, ஐஸ்வர்யா உட்கார்ந்து எளிதாக சாப்பிட சிறார்களுக்கான உயரமான நாற்காலியும் போடப்பட்டிருந்தது.
“ம்ம்… ஏற்பாடெல்லாம் பலமாத் தான் இருக்கு.” வாய்விட்டு பாராட்டினார் ஞானவல்லி பாட்டி.
அவர்கள் எல்லோரும் அமரவும் வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் வந்து நின்றான். அவன் தோற்றமும், தோரணையும் கம்பீரமாக இருக்க, அவனை யோசனையோடு பார்த்தார்கள் எல்லோரும்.
“இதுதான் என்னோட ஃப்ரெண்ட், ரஞ்சன். யுபிஎஸ்சி எக்ஸாம் கிளியர் பண்ணிட்டாங்க. ஐஏஎஸ் கிடைச்சிருக்கு, அடுத்த வாரம் ட்ரெயினிங் கிளம்புறாங்க.” அறிமுகப்படலம் இந்துவிடமிருந்து வர, அழகாக கரங்களைக் குவித்து வணக்கம் வைத்த ரஞ்சன்,
“உங்களை எல்லாம் சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம், வெல்கம் டூ ஊட்டி.” என்றான் சிரித்த முகத்தோடு.
அந்த ‘ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தைக்குள்ளிருந்து தோழன் ஒருவன் வருவான் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் ஆண்நட்பு கூடாது என்ற கட்டுப்பெட்டித்தனம் அங்கே யாரிடமும் இல்லை. எனவே பெரிதாக எந்த எதிர்வினையையும் முகத்தில் யாரும் காட்டவில்லை.
“உங்களை மீட் பண்ணுனதுல எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் ரஞ்சன்.” தன் குடும்ப உறுப்பினர்களின் சார்பாக பேச ஆரம்பித்த நந்தினி, ரஞ்சனின் யுபிஎஸ்சி தேர்வு அனுபவத்தைப் பற்றி இயல்பாக அவனிடம் பேச ஆரம்பித்து விட்டாள்.
நந்தினியிடம் பேசியபடியே பணியாளர்களை அழைத்து உணவைப் பரிமாறச் சொன்னான் ரஞ்சன்.
“நீங்களும் எங்ககூட உக்கார்ந்து சாப்பிடலாமே தம்பி.” திலகம் சொல்ல, எந்த அலட்டலும் இன்றி அமர்ந்துகொண்டவன், அவர்கள் ஹோட்டலுக்கே உரித்தான சிலவகை ஸ்பெஷல் உணவுகளை சுட்டிக்காட்டி இதை முயற்சி செய்து பாருங்கள், நன்றாக இருக்கும் என்று சொல்லவும் செய்தான்.