அம்மாவுடைய ஸ்கூட்டியில் வீட்டில் வந்து இறங்கினாள் நந்தினி. நேரம் பிற்பகல் இரண்டு மணி.
ஓய்வு எடு என்று காலையில் திலகம் எவ்வளவோ சொல்லியும் கேட்டுக்கொள்ளாமல் அவரோடு தையலகத்திற்கு கிளம்பி சென்றுவிட்டாள்.
சிறுவயதில் எத்தனையோ நாட்கள் தாயோடு கழித்த இடம். சீசன் நேரங்களில் அம்மாவுக்கு உதவி செய்தது எல்லாம் உண்டு. இவ்வளவு ஏன்? திலகத்தின் பெண்பிள்ளைகள் நால்வருக்கும் அடிப்படை தையல்கூட தெரியும்.
அனிதா பள்ளிக்கு சென்று விட, அம்மாவும் மகளுமாக கதவை பூட்டி எடுத்துக்கொண்டு திலகத்தின் ஸ்கூட்டியில் கடைக்கு வந்திருந்தார்கள். மகளுக்கு பின்னால் அமர்ந்து பிரயாணம் செய்த அந்த தாயின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்!
மதியம் வரை தாயோடு நன்றாகவே கழிந்தது நேரம். ஒருசில வாடிக்கையாளர்கள் நந்தினியை அடையாளம் கண்டுகொண்டு திலகத்திடம் விசாரிக்க, வாயெல்லாம் பல்தான் திலகத்திற்கு.
சாப்பிடும் நேரம் மறுபடியும் திலகம் மகளுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிக்க, “ஈவ்னிங் போன் பண்ணுங்க ம்மா, வந்து கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு தப்பித்து வந்துவிட்டாள் நந்தினி.
வண்டிச் சத்தம் கேட்டதும் தங்கள் வீட்டு வாசலில் வந்து எட்டிப் பார்த்தார் லீலாவதி.
“ஸ்கூட்டி உனக்கு கெத்தாவே இல்லை நந்து மா. உனக்கு புல்லட் தான் அழகு, சீக்கிரம் அது ஒன்னை வாங்கு, அதுவரைக்கும் அத்தானோடதை யூஸ் பண்ணிக்கோ.” தன் மகன் கண்ணனைத் தான் ‘அத்தான்’ என்று லீலா சொன்னது.
சிறுவயதில் அப்படி தான் நந்தினியும் அழைத்திருக்கிறாள். அப்படிச் சொல்லவில்லை என்றால் தலையில் குட்டு வைத்துவிடுவான் கண்ணன். இப்போதெல்லாம் அப்படி எதுவும் சொல்லி அவனை அழைப்பதில்லை நந்தினி.
“வீட்டுக்கு வா கண்ணு, சாப்பிடலாம்.” ஆசையாக லீலாவதி அழைக்க, அவளுக்கு தான் ஒருமாதிரியாக இருந்தது.
“இல்ல த்த, அம்மா கூட கடையிலேயே சாப்டுட்டேன். டயர்ட்டா இருக்கு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கணும்.” சொல்லிவிட்டு சட்டென்று வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.
முகம் கழுவி படுக்கையில் விழுந்தவளின் கண்களுக்குள், ஒருவிதமான எதிர்பார்ப்போடு தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அத்தையின் முகமே உலாவந்தது.
அத்தை எப்போதுமே அவள் மனதிற்கு நெருக்கமானவரே. அவள் மதிக்கும் ஆண்களில் ஒருவர் அத்தையின் கணவர். தங்களுடைய இப்போதைய வாழ்வில் அவர்கள் இருவரின் பங்கு அளப்பெரியது என்றும் அவளுக்கு தெரியும். அதற்காகவெல்லாம் அவர்கள் மகனை திருமணம் செய்துகொள்ள முடியாதே?
‘தனக்காக காத்திருக்க வேண்டாம், வேறு பெண்ணோடு உங்கள் மகனின் திருமணத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று தீர்மானமாக இன்று சொல்லிவிட வேண்டும்.’ மேலும் ஒரு அரைமணி நேரம் அப்படியே படுத்திருந்தவள், எழும்பி தன்னை லேசாக திருத்திக் கொண்டு அத்தை வீட்டை நோக்கி சென்றாள்.
வாசலில் புல்லட் நின்றிருந்தது. ‘வழக்கறிஞர் வீட்டில் தான் இருக்கிறார் போல. நல்லது, அவனும் என்னுடைய முடிவை என் வாயாலே தெரிந்து கொள்ளட்டும்.’ முடிவெடுத்துக் கொண்டவள், எந்த தயக்கமும் இன்றி வீட்டுக்குள் நுழைய,
“இவளை விட்டா வேற பொண்ணே கிடையாதா உங்களுக்கு? எதோ உலக அழகி ங்குற நினைப்புல நீங்க அவளையே பிடிச்சு தொங்குறதால தான், அவ்வளவு திமிர் அவளுக்கு. அதான் உங்க யாரையும் மதிக்க மாட்டேங்குறா. நீங்க ம்ம் ன்னு ஒரு வார்த்தைச் சொல்லுங்க, இப்பவே பொண்ணை கொண்டுவந்து இறக்கிடுறேன்” என்ற பெண் குரல் கேட்டது.
அது வேறு யாரும் இல்லை. கமலகண்ணனின் தங்கை தீபா தான். நந்தினியைவிட வயதில் இளையவள் தான் தீபா. இங்கே பக்கத்தில் தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறது. திருமணம் முடிந்து இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும். இதுவரையிலும் குழந்தை இல்லை.
கண்ணனுக்கு ஒரு தம்பியும் உண்டு. அருளானந்தன், சுருக்கமாக அருள். சிவில் இஞ்ஜினியரிங் முடித்துவிட்டு தொழில் பழகிக் கொண்டிருக்கிறான்.
“சபாஷ், சரியா சொன்ன தீப்ஸ். ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையா? இந்த பெட்ரேமாக்ஸ் லைட்டேத் தான் வேணுமா? இதே வேகத்துல ஒரு பொண்ணைப் பார்த்து உங்க அண்ணனுக்கு கல்யாணத்தை முடிச்சிடு, உனக்கு புண்ணியமா போகும்.” கேலி போலவே தன் மனதைச் சொல்லிய நந்தினி, தீபாவுக்கு அருகே அமர்ந்தாள். தீபா, லீலாவதி, கண்ணன் என்று அந்த வீட்டின் மூன்று பிரஜைகள் மட்டும் தான் தற்சமயம் அங்கே இருந்தார்கள்.
“என்ன அப்படி ஈஸியா சொல்லிட்ட அண்ணி? அப்போ இத்தனை வருஷமா எங்க அண்ணன் காத்திருந்ததுக்கு என்ன மதிப்பு இருக்கு? தெரியாமத்தான் கேட்குறேன், அப்படி என்ன எங்க அண்ணன் குறைஞ்சு போனான் உனக்கு பிடிக்காமப் போக. இந்த உலகம் முழுசும் சல்லடை போட்டு சலிச்சாலும் எங்க அண்ணனைப்போல ஒரு ஆளைப் பாக்க முடியாது. மரியாதையா எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கோ.” அப்படியே அந்தர்பல்டி அடித்து நந்தினியை மிரட்டினாள் தீபா.
“என் செல்லமே, இன்னைக்கு தான் கூடப்பிறந்த கடமையை நீ சரியா ஆத்தியிருக்க. எங்க கல்யாணத்தப்போ உன் கைக்கு இரண்டு பவுன்ல வளையல் போட்டுடுறேன். என்ன, போட்டுடலாம்ல நந்து?” நந்தினியைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியபடியே உற்சாகமாக கண்ணன் சொல்ல, பல்லைக் கடித்த நந்தினி,
“எனக்கு கல்யாணம் பண்ணுற ஐடியா எல்லாம் இல்லவே இல்ல அத்த. உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி பாக்கணுங்குற ஆசை உங்களுக்கு இருந்தா வேற பொண்ணைப் பாருங்க, இதுக்கு மேல எனக்காக வெயிட் பண்ணுறேன்னு சொல்லிட்டு யாரும் இருக்கக்கூடாது. நான் தெளிவா என்முடிவை உங்ககிட்ட சொல்லியாச்சு. அப்புறம் யாரும் என்னை குறை சொல்லக்கூடாது.” என்றாள் தெளிவாக.
“ஹலோ மேடம், நான் தான் உங்கிட்ட கல்யாணம் பண்ணிக்க கேட்டது. எங்கிட்ட பேசு, அம்மாகிட்ட இல்ல.” நந்தினியின் முகத்துக்கு நேராக சொடுக்கிட்டு அழைத்தவனின் உதடுகள் காதுவரை நீண்டிருந்தது.
“அவ்வளவு தான? நல்லா கேட்டுக்கோங்க, எனக்கு கல்யாணம் பண்ணுற ஐடியா எல்லாம் கிடையாது. எனக்காகன்னு சொல்லிட்டு நீங்க வெயிட் பண்ணவேண்டாம். போதுமா? இப்போ தெளிவாகிட்டீங்களா?” நிறுத்தி நிதானமாக மறுபடியும் சொன்னாள்.
“இப்போதான் நல்லா குழப்பிவிட்டுருக்க, நான் கேக்குற கேள்விக்கு பதிலைச் சொல்லு, நான் தெளிஞ்சிடுவேன்.”
“என்ன கேள்வி? சீக்கிரம் கேளுங்க.” மெதுவாக கோபம் தலைதூக்க, கண்ணனை அவசரப்படுத்தினாள்.
“மேடம் கல்யாணமே பண்ணமாட்டீங்களா? இல்ல, என்னைக் கல்யாணம் பண்ண மாட்டீங்களா?”
“ஹ… அரதப்பழசான இந்த கேள்விக்கு தான் இத்தனை பில்டப்பா? நான் சொல்லுறதை நல்லா மனசுல பதிஞ்சுக்கோங்க, இந்த ஜென்மத்துல மட்டுமில்ல, இன்னும் எத்தனை ஜென்மம் நான் பிறந்து வந்தாலும், ஒரு ஆணை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்கிறதா இல்ல, போதுமா?”
“நீ என்னை நம்பி உன் வாழ்க்கையை ஒப்படைக்காட்டா என்ன? நான் உன்னை நம்பி, உன் கையில என் வாழ்க்கையை ஒப்படைச்சிட்டு போறேன். எங்கம்மா, நந்தினி எங்கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன், அதுல ஆனந்த கண்ணீரைத் தவிர, வேற எதையும் நான் பாக்கக்கூடாதுன்னு டயலாக் சொல்லிட்டு போறாங்க, அவ்வளவு தான். இல்லையா ம்மா?” ஸ்டைலாக தோள்களைக் குலுக்கியபடி, யோசனையாக தங்களையே பார்த்துக் கெண்டிருந்த தாயையும் தன் பேச்சில் இழுத்தான்.
“சபாஷ்… சரியா சொன்னே ண்ணா.” கைத்தட்டி ஆர்ப்பரித்தாள் தீபா.
அண்ணன் தங்கை இருவரையும் ஒருசேர முறைத்துப் பார்த்த நந்தினி, “நான் சொல்ல வேண்டியதை தெளிவா சொல்லியாச்சு, இதுக்கு மேல இந்த விஷயத்துல எந்த விதத்திலும் நான் பொறுப்பாக முடியாது.” விறைப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தாள்…