அத்தியாயம் 02

ராஜவேலு. இதுதான் திலகத்தின் கணவனின் பெயர்.

இருவருக்கும் காதல் திருமணம் தான். அதுவும் கலப்புத் திருமணம். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் வேறு.

திலகத்தின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத அவரின் பெற்றவர்களும், உடன்பிறந்தவர்களும் அவரைத் தள்ளிவைத்து தள்ளி நின்று கொண்டார்கள்.

ஆனால் ராஜவேலுவின் திருமணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவருடைய குடும்பத்தாரால் அவரிடமிருந்து தள்ளி நிற்க முடியவில்லை. காரணம் அவருடைய கைகளில் தாராளமாக புழங்கிய பணம்.

ட்ரைவராகத் தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார் ராஜவேலு. ஒரு காலகட்டத்தில் வெளிநாட்டுக்கு சென்றவரின் பொருளாதார நிலை உயர, அவருடைய குடும்பத்தாருக்கு மிகவும் முக்கியமானவராகிப் போனார் வேலு.

அப்படிப்பட்டவர் தங்களுக்கு பிடிக்காத திருமணம் செய்தவராக இருந்த போதிலும் சட்டென்று அவரை வெட்டிவிட முடியவில்லை அவருடைய குடும்பத்தாரால். ஆனால், அந்த குடும்பத்திலும் விதிவிலக்கு இருக்கத்தான் செய்தது.

ஆமாம்… ராஜவேலுவின் மூத்த சகோதரி லீலாவதிக்கு தம்பியின் திருமணத்தில் எந்தவிதமான மனத்தாங்கலும் இல்லை. அவன் மனதிற்கு பிடித்த பெண்ணை மணந்திருக்கிறான், இதில் என்ன தவறு என்ற அளவில் தான் இருந்தது அவருடைய எண்ணம். அதேநேரம் தம்பியின் கையில் புரளும் பணத்திற்காக அவரிடம் பச்சோந்தி பாசத்தையும் அவர் எப்போதுமே காட்டியதில்லை.

திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டுக்கு செல்லுவதை நிறுத்திய ராஜவேலு, தன்னுடைய காதல் மனைவி பெயரிலேயே ட்ராவல்ஸ் ஒன்றைத் தொடங்கினார். கார், நீண்டதூர பிரயாணங்களுக்கான சொகுசு வாகனங்கள் அங்கே வாடகைக்கு கிடைக்கும்.

‘திலகம் ட்ராவல்ஸ்’ மெல்ல மெல்ல வளர்ந்து திருநெல்வேலியில் தனக்கென ஒரு அடையாளத்தை பிடித்த நேரம், ராஜவேலு திலகம் தம்பதியர் நான்கு பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருந்தனர்.

அடிக்கடி வந்து பஞ்சப்பாட்டு பாடி, கிடைப்பதை சுருட்டிக்கொண்டு போகும் கணவனின் இரண்டாவது சகோதரி, தம்பியின் தனிப்பட்ட சம்பாத்தியத்தில் தனக்கும் பங்கு உண்டு என்பது போலவே நடமாடும் கணவனின் மூத்த சகோதரனின் நடவடிக்கைகள் தவிர திலகத்தின் குடும்ப வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதான பிரச்சனைகள் எதுவுமில்லை.

கணவனுக்காகவும், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று நடிக்காத லீலாவதியின் அனுசரனையான உறவுக்காகவும், ஏனையவர்களின் நடிப்பையும், கணவனின் கண்ணுக்தெரியாமல் தன்மீதும், தன்பிள்ளைகள் மீதும் அவர்கள் காட்டும் ஒதுக்கத்தையும் கூட திலகம் கண்டுகொள்ளுவதே இல்லை.

திருமணமான புதிதில் கணவனுக்கு தொழிலில் உதவியாக இருந்த திலகம், ஒரு காலகட்டத்தில் பிள்ளை வளர்ப்பை காரணம்காட்டி வீட்டோடு நின்று போனார். அதுவும் நான்கும் பெண்பிள்ளைகள் என்றானதில் அவருடைய கவனம் எல்லாம் தங்கள் பிள்ளைகள் மீதுதான்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பத்தாவது படிக்கும் தங்கள் மூத்த பெண் நந்தினி இன்னமும் வயதுக்கு வரவில்லை என்பதைத்தாண்டிய கவலை கூட இல்லை திலகத்திற்கு.

“பப்ளிக் எக்ஸாம் முடியவும், பிள்ளையை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாம், கவலைப்படாதே.” தன்னிடம் சொல்லி வருத்தப்படும் மனைவிக்கு இப்படித்தான் ஆறுதல் கூறினார் ராஜவேலு.

ஆனால் மருத்துவரை கலந்தாலோசிக்கும் சூழ்நிலை வராமலேயே நந்தினி வயதுக்கு வந்திருந்தாள். ஆமாம்… முழுவருட பரீட்சை முடிந்த மறுநாள், தன்னுடைய குழந்தை பருவத்திற்கு விடை கொடுத்திருந்தாள் நந்தினி.

மகளுக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றும் சடங்கையே அமளிதுமளி பண்ணிவிட்டார் ராஜவேலு.

அந்த வருட கோடைவிடுமுறை முடியும் தருவாயும் வந்தது.

“பிள்ளைங்க அடுத்த வகுப்புக்கு போறதுக்கு முன்னாடி அவங்களை திருச்செந்தூர் கூட்டிட்டு போகணுங்க.” தன்னுடைய ஆசையை கணவரிடம் சொன்னார் திலகம்.

“எனக்கு ஒரு பிஸினஸ் மீட் இருக்கு ம்மா. நான் அவசரமா சென்னை வரைக்கும் போகணும். திரும்பிவர இரண்டு மூனு நாள் ஆகிடலாம், அண்ணன் கிட்ட கேளு, கார் அனுப்பி வைப்பாங்க, நீ பிள்ளைகளைக் கூட்டிட்டு போய்ட்டு வந்திடு. லீலா அக்காவையும் வேணும்னா துணைக்கு கூப்பிட்டுக்கோ.” மனைவியின் கன்னத்தை தட்டி புன்னகையோடு சொன்னார் ராஜவேலு.

தொழில்முறை கூட்டங்கள் என்று அவ்வப்போது ராஜவேலு வெளியூர்களுக்கு செல்வது வழக்கம் தான். அதுவுமில்லாமல் தொழிலுக்கு நம்பிக்கையான ஆள் வேண்டும் என்று அண்ணன் தாமோதரனை கூடவே வைத்திருந்தார். வேலு இல்லாத பொழுதுகளில் அவர் இடத்தில் இருந்து ட்ராவல்ஸ்ஸை கவனித்துக் கொள்வது அந்த மனிதர் தான்.

கணவனிடம் சம்மதாக தலையாட்டினாலும் அவர் இல்லாமல் கோவிலுக்கு செல்ல திலகத்திற்கு மனமில்லை. அதுவுமில்லாமல் கணவன் சொல்லிச்சென்றாலும் கூட ஏதோ அவருடைய காரையே வீட்டுக்கு அனுப்பி வைப்பது போல அலட்டிக்கொள்வார் தாமோதரன். எனவே ட்ராவல்ஸ்ஸிலிருந்து வாகனத்தை வரவழைக்க விருப்பமில்லை திலகத்திற்கு.

திலகம் தன் மனக்கிலேசத்தை பேச்சுவாக்கில் லீலாவிடம் போனில் சொல்ல, “உனக்கு கோவிலுக்கு தானே போகணும். வா, போகலாம்” என்று உள்ளூரிலேயே இருக்கும் நெல்லையப்பர் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு வந்துவிட்டார் லீலா.

மறுநாள் அதிகாலையிலேயே குளித்து, ஆட்டோவில் பிள்ளைகளோடு கோவிலுக்கு வந்துவிட்டார்கள் இருவரும்.

மகள் பூப்பெய்திய பிறகு முதன்முதலாக கோவிலுக்கு அழைத்து வருவதால் பட்டுப் பாவாடை தாவணி அணிவித்து, பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கூட்டிக்கொண்டு வந்திருந்தார் திலகம்.

பழக்கப்பட்ட இடம் என்பதால் தேன்சிட்டுகளாக கோவிலுக்குள் சுற்றிவந்தார்கள் பிள்ளைகள்.

நெல்லையப்பர் சன்னிதியில் வணங்கி முடித்து, காந்திமதி அம்மன் சன்னதிக்குள் நுழைந்தவர்களின் பார்வையெல்லாம் உலகளந்த அந்த அம்பாளின் முகத்தில் பரவசமாக பதிந்திருக்க,

“இனிய திருமணநாள் வாழ்த்துகள் ப்பா.” என்ற சிறுவனின் சந்தோஷக்குரல் எல்லோரையும் கலைத்தது.

‘யாருடா அது?’ என்ற எண்ணத்தில் தங்களுக்கு முன்னர் மாலையும் கழுத்துமாக நின்றிருந்த தம்பதியரை எல்லோரும் ஆவலாக பார்க்க,

“ம்மா..‌. அது நம்ம அப்பா ம்மா.” என்றாள் கடைக்குட்டி கௌரி சத்தமாக.

கௌரியின் சத்தத்தில் அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தார் ராஜவேலு.

இன்னொரு பெண்ணின் அருகே மாலையும் கழுத்துமாக கணவன், அவர்களுக்கு அருகே கணவனையே உரித்து வைத்தாற்போல பத்துவயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். அதுவும் அப்பா என்று அழைத்துக்கொண்டு.

அவ்வளவு தான், திலகத்தின் காலடியில் பூமியே பிளந்து கொண்டது. அதிர்ச்சியில் அவரது மூளை மரத்துப்போக, கணவனை அடிபட்ட பார்வை பார்த்தவர் எதுவும் பேசாமல் சந்நிதானத்திலிருந்து வெளியே ஓடினார்.

“ம்மா… திலகம்…” அழைத்துக்கொண்டே அவர் பின்னோடு பிள்ளைகளும் லீலாவதியும் ஓடினர்.

“திலகா… நில்லு திலகா…” ராஜவேலுவும் மனைவியின் பின்னோடு வந்தார்.

சந்நிதானத்தை விட்டு வெளியே ஓடிவந்த திலகம் அதற்குமேல் முடியாதென்பது போல பொத்தென்று ஒரு இடத்தில் அமர, அவருக்கு அருகில் வந்து நின்றார் ராஜவேலு.

எதிர்பாராமல் மனைவியிடம் பிடிபட்டுக்கொண்ட அதிர்ச்சியில் ராஜவேலு முத்து முத்தாக வியர்த்திருந்தார். அவருடையக் கை அவசரமாக கழுத்தில் கிடந்த மாலையைக் கழற்றியது.

வேலுவை பின்தொடர்ந்து வந்த அந்த பெண்ணோ யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அலட்சிய பாவனையில் அவரை நெருங்கி நின்று கொண்டார். கைகளோ சிறுவனின் கைகளை இறுக்கமாக பற்றியிருந்தது.

“என்னடா இது?” எதிர்பாராத அதிர்ச்சியில் மூச்சுவாங்க தம்பியை அதட்டினார் லீலாவதி.

“பொட்டப்பிள்ளைங்களா பெத்துப்போட்டா… எனக்கும் ஆம்பிள்ள பிள்ளை வேணும்னு ஆசை இருக்காதா? அதான்… இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.” தன் தவறை மறைக்க சற்றே குரலை உயர்த்தி பேசிய வேலுவின் கை, வாஞ்சையாக அந்த சிறுவனின் தலையை தடவியது.

ஆக, தவறெல்லாம் உன்னுடையது என்று பழியைத் தூக்கி எளிதாக திலகத்தின் தலையில் வைத்தாயிற்று.

கணவனின் கூற்றில் நிமிர்ந்து பார்த்தார் திலகம். அவர் பார்வையில் அந்த பெண்ணின் முகம் விழ, பரிச்சயமானது போல இருந்தது. ‘எப்படி?’ யோசித்தவருக்கு பளிச்சென்று மூளையில் மின்னல் வெட்டியது.

திலகத்திற்கு பதிலாக அவர்களுடைய அலுவலக பணிகளை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பெண் தான் அது. அதுவும் பல வருடங்களுக்கு முன்னரே அந்த பெண் வேலையை விட்டு நின்றுவிட்டதாக கணவன் சொன்ன தகவல் அசந்தர்ப்ப வசமாக ஞாபகம் வந்தது திலகத்துக்கு.

‘ம்ஹூம்… அலுவல பணியிலிருந்து விடுவித்து குடும்ப பொறுப்பைக் கொடுத்திருக்கிறாரே. அதற்கு சாட்சியாக பிள்ளை வேறு. எப்படியும் தன் மூன்றாவது பெண்ணின் வயது இருக்கும் அந்த சிறுவனுக்கு. அப்படியானால் கணவன் தன்னோடு இரட்டை வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான். அதுவும் இதே ஊரில்.’

‘அது தெரியாமல் அவனோடு காதல் செய்து மேலும் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டுவந்திருக்கிறோம்?’ கழிவிரக்கத்தில் கரைந்தே போனார் திலகம். விளைவு, கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

அதிகாலை நேரம் என்றாலும் கூட ஓரளவிற்கு கோவிலில் கூட்டம் இருக்கத்தான் செய்தது. அத்தனைபேரின் ஆர்வமான பார்வைகளுக்கும் அவருடைய கண்ணீர் தீனிபோட, தான் வேடிக்கை பொருளாவது பிடிக்காதவராக கோவிலின் வாசலை நோக்கி எழும்பி நடந்தார் திலகம்.

உணர்வுகள் மறத்துப்போன நிலையில், காத்திருந்த ஆட்டோவில் திலகம் ஏறி அமர, குழப்பத்தோடும், பயந்துபோன முகத்தோடும் பிள்ளைகள் நால்வரும் தகப்பனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே தாயை வால் பிடித்தார்கள்.

கோவிலுக்கு புறப்படும் போது இருந்த சந்தோஷமான மனநிலை அடியோடு மாறியிருந்தது. இறுக்கமான மனநிலையில் வீட்டில் வந்து இறங்கினார்கள் எல்லோரும்‌.

தன்னுடைய இரண்டாவது மனைவி, மகன் சகிதம் காரில் வந்து இறங்கிய ராஜவேலுவும் திலகத்தின் பின்னோடு வீட்டுக்குள் வர, அவருக்கு பின்னோடு நூல் பிடித்தபடி மகனோடு அந்த பெண்ணும் வந்தாள்.

“அண்ணி, அநாவசியமான யாரும் என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கக் கூடாதுன்னு சொல்லுங்க.” ஏமாற்றத்தின் உச்சியில் நின்ற திலகம் கணவனுக்கும் அந்த பெண்ணுக்கும் சேர்த்தே சத்தமாகச் சொன்னார். கோபத்தில் அவர் குரல் நடுங்கியது.

“நீ கொஞ்சநேரம் சுரேந்தரோடு கார்ல இரு கல்பு. நான் இப்போ வந்துடுறேன்.” வேலு சொல்ல, அதிருப்தியாக உதட்டை சுளித்த அந்த கல்பு என்ற கல்பனா,

“காருக்குள்ள புளுங்கும் ராஜா.” என்றாள் முகத்தில் இல்லாத வியர்வையை புடவை முந்தானையால் ஒற்றியெடுத்தபடி. அவள் பார்வையோ அலட்சியமாக திலகத்தைத் தொட்டு வந்தது.

உடனே, “வாங்க…” என்று மகனைக் கையைப்பிடித்து காருக்கு அழைத்துச் சென்ற வேலு, கார் இஞ்சினை இயக்கி, ஏசியை ஓடவிட்டு அவர்கள் வசதியாக உட்கார ஏற்பாடுகளைச் செய்ய, பார்த்துக்கொண்டிருந்த லீலாவதியே கோபத்தில் பற்களைக் கடித்தார் என்றால் திலகத்தின் நிலமையைச் சொல்லவும் வேண்டுமோ?

 மொத்த ஜீவனும் வடிய வெளிறிப்போன முகத்தோடு திலகம் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க, குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் வீட்டுக்குள் வந்தார் ராஜவேலு.

“ச்சீ… நீங்கல்லாம் என்ன மனுஷன்? உங்களை மட்டுமே நம்பி வந்த என்னை ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்து பிள்ளையையும் பெத்து வச்சிருக்கீங்களே? இதுக்கு அப்புறம் நமக்குள்ள என்ன இருக்கு? நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சுக்கோங்க. அப்படியே திரும்பி போயிடுங்க, இதுக்குமேல இந்த வீட்டுக்குள்ள வராதீங்க.” எத்தனைப் பெரிய துரோகம்? நினைக்க நினைக்க நெஞ்சு பற்றிக்கொண்டு எரிய, அடிக்குரலில் கணவனிடம் சீறினார் திலகம்.

“எதே? இந்த வீட்டுக்குள்ள நான் வரக்கூடாதா? இப்போ, இந்த நிமிஷம் வரைக்கும் வீட்டுக்கு நான்தாம்மா வாடகை குடுக்குறேன், அதை நீ மறந்துடாத.” திலகம் பேசிய எல்லா வார்த்தைகளையும் விட்டுவிட்டு அதுதான் முக்கியம் என்பது போல அலட்டிக் கொள்ளாமல் பேசினார் வேலு.

ஆமாம்… பெருந்தொகையை வீட்டில் முடக்கிவிடக்கூடாது என்பதற்காக சொந்தவீடு என்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த வேலு இப்போதுதான் வீடு கட்ட ஆரம்பித்திருக்கிறார். கிட்டத்தட்ட பத்து மாதங்களாக வீட்டுவேலை நடந்து கொண்டிருக்கிறது.

“ஹாங்… ஆமால்ல, வீட்டுக்கு நீங்கதான் வாடகைக் குடுக்கிறீங்க, அப்போ நீங்க வெளியே போகவேண்டிய அவசியம் இல்ல, நாங்கதான் போகணும்.” தலையை லேசாக ஆட்டியபடியே பேசிய திலகம் எதைப்பற்றியும் யோசிக்காமல், தன் அருகில் நின்றிருந்த பிள்ளைகளின் கைகளைப் பிடித்தபடி வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

“நில்லு திலகா, எனக்கு ஆம்பிள்ளை பிள்ளை ஆசை இருந்தது தான். அதுக்காக என்னோட பொட்டப்பிள்ளைகளை வேண்டாம்னு நான் எப்பவும் சொன்னதில்லை. உன்னோட வீண் பிடிவாதத்தால எம்பிள்ளைகளை கஷ்டப்படுத்தாத. வீட்டுக்குள்ள வா.” செய்தது தவறு என்ற அடிப்படை குற்ற உணர்வு கூட இல்லாமல் மனைவியை அதட்டினார் வேலு.

“உங்களுக்கு வந்த இதே ஆசை எனக்கும் வந்து, உங்களை மாதிரியே நானும் செய்திருந்தா விட்டு வைச்சிருப்பீங்களா என்னை? இல்ல தெனாவெட்டா இப்படி வந்து உங்ககிட்ட என்னால பேசிட்டு தான் நிக்க முடியுமா?”

“யோசிச்சு பேசு திலகா, இல்லைன்னா மூஞ்சைப் பேத்துடுவேன்.” திலகம் பேசி முடிப்பதற்கு முன், பற்களைக் கடித்துக்கொண்டு அவரை அடிப்பதற்காக கையை ஓங்கினார் வேலு.

“நான் சொன்னதுக்கே கையை ஓங்குறீங்களே, அப்போ செய்துட்டு வந்து நிக்குற உங்களை நான் என்ன செய்யலாம்? ம்ம்…” சவாலாக கேட்டார்.

“ரொம்ப பேசுற திலகா, இது நல்லதுக்கு இல்ல.” அதட்டினார் வேலு.

“இந்த அதட்டுறது, கையை ஓங்குற வேலையை எல்லாம் இனிமே எங்கிட்ட வச்சுக்காதீங்க. அதுக்கான தகுதியை நீங்க எப்பவோ இழந்தாச்சு. இனிமே எங்க வாழ்க்கையில நீங்க இல்ல.” தீர்மானமாக சொல்லியபடி வீட்டுப்படி இறங்கினார் திலகம்.

“வீணா பிடிவாதம் பிடிக்காத திலகா, என்னை விட்டுட்டு போனா சோத்துக்கு கூட நீ சிங்கியடிக்க வேண்டியிருக்கும். எல்லாம் பொட்டப்பிள்ளைங்க வேற. அவங்களை படிக்க வச்சு கல்யாணம் பண்ணிவைக்க என்னோட தயவு இல்லாம உன்னால தனியா ஒன்னும் கிழிக்க முடியாது. பேசாம வீட்டோட அடங்கி கிட. உன்னையும் நான் கைவிட்டுற மாட்டேன். இவ்வளவு நாளும் எல்லாம் நல்லாத்தானே நடந்தது. அதேபோல் இனியும் நடக்கும்.” அக்கம்பக்கம் உள்ளவர்கள் எல்லோரும் தெருவில் நின்று வேடிக்கை பார்க்க, ஆண் என்ற அகம்பாவத்தில் அலட்சியமாக பேசினார் வேலு.

“ஒரு நம்பிக்கைத் துரோகி கூட வாழணும்னு இனியும் எனக்கு அவசியம் இல்ல. இந்த பச்சோந்தி தகப்பனோட தயவு இல்லாம என்னோட பிள்ளைங்களை என்னால வளர்த்து ஆளாக்க முடியுமா, இல்லையான்னு நானும் பாத்துடுறேன்.” திலகம் நிமிர்வாக சொல்ல,

“கௌரி ம்மா, உங்க அம்மா கூடப் போனா அப்பாவைப் பார்க்க முடியாது. கார்ல போக முடியாது, நல்ல ஸ்கூல்ல படிக்க முடியாது. நீ ஆசைப்பட்டதை சாப்பிட முடியாது. அப்பாக்கூடவே இரு தங்கம்.” மனைவியின் நம்பிக்கையை பலவீனமாக்க முயன்று முடியாமல் போகவே, இளைய மகளின் பிஞ்சு மனதைக் கலைத்து தன் பக்கமாக வளைக்க முயன்றார் வேலு.

  ஆனால், நடப்பதை சரியாக கிரகித்துக் கொள்ள முடியாத மனநிலைமையில் நின்ற அந்த குட்டிப்பெண் கூட, தாயின் முந்தானையைத்தான் பிடித்துக் கொண்டு நின்றது.

“ம்ஹும்… எங்கிட்ட மட்டுமில்ல, உங்க பிள்ளைங்க மனசுல கூட உங்கமேல இருந்த நம்பிக்கையை இழந்தாச்சு நீங்க, இனிமே தலைகீழா நின்னாக்கூட அதை நீங்க திரும்ப பெற முடியாது.” ஏளனப் புன்னகையோடு சொல்லிய திலகம் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

தன்னை விட்டு எங்கே போய்விடுவாள், வயிற்றுக்கு இல்லாமல் காய்ந்தால் நாலைந்து நாட்களில் கதறிக்கொண்டு தன்னுடைய கால்களில் தானாகவே வந்து விழுவாள் என்று இறுமாப்போடு நின்றிருந்தார் ராஜவேலு.

ஆனால் இதோ இந்த நொடிப்பொழுதுவரை எடுத்த முடிவிலிருந்து பின் வாங்காமல் தன்னந்தனியாக பிள்ளைகளை ஆளாக்கி சிங்கப்பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார் திலகம்.

அதற்கு அவருக்கு உறுதுணையாக நின்றது லீலாவதியும் அவருடைய கணவரும் என்று சொன்னால் மிகையில்லை.

“உங்கூட நான் பிறந்தேன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு டா.” தம்பியிடம் இப்படி சொல்லிவிட்டு தான், தம்பி மனைவியோடு அங்கிருந்து வெளியேறியிருந்தார் லீலாவதி.

“எடுத்த முடிவுல நீ உறுதியா இருக்குறியா திலகா?” தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்த திலகத்திடம் கேட்டார் லீலாவதி.

“இருநூறு சதவீதம் உறுதியா இருக்கேன் அண்ணி. மொதல்ல எனக்கு தங்குறதுக்கு ஒரு வீடு வேணும், அடுத்ததா ஒரு வேலை…” என்று தன் வாழ்க்கையை திட்டமிட ஆரம்பித்து விட்டார் திலகம்.

தானே அமைத்துக்கொண்ட திருமண வாழ்க்கை. அவர் நன்றாக இருந்த காலத்தில் கூட பெற்றவர்களோ, உடன்பிறந்தவர்களோ திலகத்தோடு உறவாட முயன்றதே இல்லை. எனவே வாழ்க்கையை தோற்று நிற்கும் இந்த சமயத்திலும் அவர்கள் யாரிடமும் போய் உதவிக்கு நிற்கும் எண்ணம் துளியும் இல்லை அவருக்கு.

அவரின் மனநிலை புரிந்தது போல தங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த தன்னுடைய அண்ணன் வீட்டையே ஏற்பாடு செய்து கொடுத்தார் நாதன். நாதனின் அண்ணன் திருப்பூரில் சிறிய அளவில் பின்னலாடை தொழில் செய்து வருவதால் அங்கேதான் குடும்பத்தோடு இருக்கிறார்.

தொழில் என்ற முறையில் திலகத்திற்கு கைகொடுத்தது தையல் தான். ஆமாம்…தனக்கு மட்டுமே தைத்து வந்தவர் இப்போது தன் சம்பாதனைக்காக அதைத்தான் கையிலெடுத்திருந்தார்.

நாதனும் ஒரு டெய்லர் தான். ஆண்களுக்கான ஆடைகள் தைப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர். என்றாலும் பெண்களுக்கான தையல் தெரியாதவரில்லை.

தன்னுடைய டெய்லரிங் ஷாப்புக்கு அழைத்துச்சென்று ஏற்கனவே திலகத்துக்கு தெரிந்த தையல் கலையை மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் கற்றுக் கொடுத்து, பெண்கள் தையலகம் வைப்பதற்கும் உதவி செய்தார் நாதன்.

அந்த தையலகம் இத்தனை வருடங்களில் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் விற்கும் பொட்டீக்காக வளர்ந்து நிற்கிறது.

திலகம் தன்னைத்தானே அங்குலம் அங்குலமாக செதுக்கி வாழ்வில் ஏற்றத்திற்கு வந்திருக்க, அவருடைய மூத்த மகளின் மனதில் திருமணத்தின் மீதும் ஆண்களின் மீதும் கண்மூடித்தனமான வெறுப்பு வளர்ந்து நின்றது.

பெண் பிள்ளைகளின் மனதில் முதல் ஹீரோ அவர்களுடைய அப்பாக்கள் தானே. அவரை வைத்துதான் மற்ற ஆண்களின் குணாதிசயங்களை அளக்க முற்படுவாள் பெண்.

அப்படிப்பட்ட அப்பா நந்தினியின் வாழ்வில் தடம்மாறி நிற்க, காதல், திருமணம் குறித்த நுண்உணர்வுகள் சிதைக்கப்பட்டு மொத்தமாக திருமணத்தையும் ஆண்களையும் வெறுத்து நிற்கிறாள் பெண். அதை களைவதற்கு ஆனமட்டும் திலகம் முயற்சி செய்தும், பலன் தான் ஏதுமில்லை.

********