“எப்பிடி மாப்ள? நான் அப்பிடி எதுவும் செய்யலையே?” இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் விடைபெற்று சென்றிருக்க வேலுவின் குரலில் ஜீவன் வற்றிப் போயிருந்தது.
“நல்லா யோசிச்சு சொல்லுங்க, நீங்க எப்பவாவது தாமோதரன் மாமா கேட்ட பத்திரத்துல கையெழுத்து போட்டு குடுத்தீங்களா?” தன்னுடைய முந்தைய கேள்வியையே மறுபடியும் கேட்டான் கண்ணன்.
மருமகனின் கேள்வியில் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தார் ராஜவேலு.
“ஹாங்… இரண்டு மூனு மாசத்துக்கு முன்னாடி அவனோட ஃப்ரெண்ட் கிட்ட கொஞ்சம் ஃபைனான்ஸ் ஏற்பாடு பண்ணுறதுக்காக போட்டு கொடுத்தேன். ஆனா பணம் கைக்கு வர லேட்டானதும், வேண்டாம் பத்திரத்தை வாங்கிட்டு வந்துடுங்கன்னு அண்ணன்கிட்ட சொன்னேன். அவனும் வாங்கி கிழிச்சி போட்டுட்டேன்னு சொன்னானே…” அவசரமாக சொன்ன மனிதருக்கு எங்கே தவறு நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்பது இப்போது புரிய, பாவமாக பார்த்தார் மருமகனை.
“அடப்பாவி மனுஷா, இப்பிடி கேணையனா இருந்திருக்கியே ய்யா?” கேட்டுக் கொண்டிருந்த கல்பனா தான் தன்னை மீறி வெடித்திருந்தார்.
மருமகனுக்கு முன்னால் மனைவி தன்னை மரியாதை இல்லாமல் பேசியது அந்த நேரத்திலும் ராஜவேலுவுக்கு கோபத்தை தூண்டியது.
“கல்பனா… “ உறுமியபடி கோபத்தில் அவர் கையை ஓங்க, “வேண்டாம் மாமா…” அவர் கையைப் பிடித்து தடுத்திருந்தான் கண்ணன்.
கணவன் தன்னை அடித்திருந்தால் கூட பொறுத்துக் கொண்டிருப்பாரோ என்னவோ அந்த பெண்மணி. ஆனால் உரிமையாக மாமனின் கையை மருமகன் பற்றி நிறுத்தியிருந்ததை அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
“குடும்பம் எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டீங்கல்ல, இனி என்னை அடிச்சு விரட்டத்தான் பாப்பீங்க.” மூக்கை உறிஞ்சியபடி கண்ணனை வில்லனைப் போல பார்த்தார்.
“ச்சை, இங்க என்ன பிரச்சினை ஓடிட்டு இருக்குது, இப்போ போய் என்ன பேசுற?” ராஜவேலு அசூசையாக முகத்தை சுழிக்க,
“யாரா இருந்தாலும் இந்த மாதிரி விஷயத்துல கரெக்டா இருக்க வேண்டாமா? உங்களோட சின்ன கவனக்குறைவு இப்போ எங்க கொண்டு வந்து உங்களை நிறுத்தியிருக்கு பாத்தீங்களா?” அதற்கு மேலும் அங்கே நிற்க விரும்பாதவனாக போர்ட்டிகோவை நோக்கி நடந்தபடி சொன்ன கண்ணன், கையிலிருந்த மற்றொரு பத்திரத்தையும் வாசிக்க ஆரம்பித்தான்.
“எல்லாம் பக்காவா ரெஜிஸ்டர் ஆகியிருக்கு மாமா. சட்டப்படி பார்த்தா இப்போ இந்த வீடு வைரவமூர்த்தியோடது.” தன்னோடு நடந்து வந்து கொண்டிருந்தவரிடம் கண்ணன் சொல்ல,
“என்ன மாப்பிள்ள, நீயும் இப்பிடி சொல்லுற?” அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முகத்தைச் சுருக்கினார் வேலு.
“எனக்கு மட்டும் இப்பிடி சொல்லணும்னு ஆசையா என்ன? டாக்குமெண்ட் அப்பிடித்தான் சொல்லுது மாமா.”
“ஒன்னுமே செய்ய முடியாதா நாம?” ராஜவேலுவிடமிருந்து கரகரப்பாக வந்து விழுந்தது வார்த்தைகள்.
“நீங்க கேஸ் ஃபைல் பண்ணலாம், ஆனா முடிவு எந்த அளவுக்கு உங்களுக்கு சாதகமா இருக்கும்னு சொல்ல முடியாது.”
“ம்ஹும்… நான் பெத்த பிள்ளைங்களை வாடகை வீட்டுல தவிக்க விட்டுட்டு, நான் மட்டும் சொகுசா சொந்த வீட்டுல வாழ்ந்தேன் இல்ல, அந்த பாவத்துக்கு தான் இன்னைக்கு அநியாயத்துக்கு அதை இழந்துட்டு நிக்குறேன்.” கஷ்டம் வரவும் தன்னை மறந்து தன்னுடைய தவறை அவருடைய வாய் புலம்ப ஆரம்பிக்க, வீட்டுக்குள் ஏதோ உடையும் சத்தம் கேட்டது.
எல்லாம் கல்பனா தான். கணவனின் வார்த்தைகள் அவருடைய காதிலும் விழுந்திருக்க, கோபத்தில் அருகிலிருந்த பொருளை தூக்கி எறிந்திருந்தார்.
அதைக் கண்டுகொள்ளாதவர், “இப்போ என்ன பண்ணலாம் மாப்ள? அந்த வைரவமூர்த்திகிட்ட போய் பேசலாமா?” மருமகனிடம் யோசனை கேட்டார்.
“பேசி…” வார்த்தையை இழுத்தான் கண்ணன்.
“இப்பிடி தான் விஷயம், நான் வீட்டை விக்கவே இல்லை, கூடவே இருந்து ஏமாத்திட்டான்னு சொல்லுவோம்.” எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த வேலு, போகாத ஊருக்கு வழி சொன்னார்.
“அப்பிடிச் சொன்னா, பணம் போட்டு வாங்கியிருக்குறவங்க விட்டுக் குடுத்துடுவாங்களா என்ன?”
“அப்போ நான் மட்டும் எப்பிடி என்வீட்டை விட்டுக்கொடுக்க முடியும்?” கோபத்தில் குரலை உயர்த்தியவர், அமைதியாக தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மருமகனிடம்,
“பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு மாப்பிள்ள.” இயலாமையால் புலம்பியபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டார்.
எதுவாக இருந்தாலும் அவர் வாயிலிருந்தே வரட்டும் என்று கண்ணனும் அமைதியாக நிற்க,
“பேசாம அந்த பணத்தை நாம குடுத்துடுவோமா மாப்பிள்ள?” என்றார் முகத்தை அழுந்த துடைத்தபடி.
“வீட்டை எவ்வளவு தொகைக்கு வாங்குனோம்னு எதுவும் சொன்னாங்களா என்ன?”
“ம்ம்… படுபாவி ஒரு கோடிக்கு வித்தானாம். யாரு சொத்தை யாரு விக்குறது?” ஆத்திரத்தில் பல்லைக் கடித்தார் ராஜவேலு.
“அவ்வளவு பணத்துக்கு நீங்க இப்போ எங்க போவீங்க?”
“நம்ம ட்ராவல்ஸ் இருக்குறதும் சொந்த இடம் தான், அது நல்ல விலை போற இடத்துல இருக்குதுன்னு உனக்கு தெரியும் தானே, அதை வித்தாவது வீட்டை எடுத்துடுவோம்.” வீட்டை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொழில் செய்யும் இடத்தைக்கூட விற்பதற்கு தயாரானார் மனிதர்.
“ஹாங்… அதுக்கு மொதல்ல அந்த இடமும் உங்க பெயர்ல இருக்கணும்.” வீட்டுக்குள் இருந்து கல்பனாவின் குரல் அசிரீரியாக வந்தது.
“மாப்ள… அதையும் எதுவும் செய்திருப்பானோ?” சட்டென்று தடுமாறினார் ராஜவேலு.
“அப்பிடியெல்லாம் எதுவும் இருக்காது.” கண்ணன் சொன்னாலும், அவன் வார்த்தைகளிலும் உறுதி குறைவாகத்தான் இருந்தது.
“எதுக்கும் டாக்குமெண்ட் இங்க இருந்தா கொண்டு வாங்க, செக் பண்ணிடலாம்.” கண்ணன் சொல்ல, பரபரப்பாக வீட்டுக்குள் ஓடிய ராஜவேலு, அடுத்த சில நிமிடங்களிலேயே கையில் பத்திரத்தோடு வந்தார்.
அதற்குரிய வலைத்தளத்தில் பத்திரப் பதிவு எண்ணை இட்டுத் தேடியவன், “இப்பவரைக்கும் உங்க பெயர்ல தான் இருக்கு.” என்று சொல்ல, அப்பாடி என்று ஆசுவாசமாக உட்கார்ந்தார் ராஜவேலு.
“ம்ஹும்… முடிவா என்னதான் செய்யலாம் மாப்பிள்ள, நீயே சொல்லு.” பெருமூச்சு விட்டவர், மருமகனின் கைகளில் பொறுப்பை ஒப்படைத்தார்.
“வீட்டை நான் விக்கலைன்னு உங்க அண்ணன் மேல கேஸ் ஃபைல் பண்ணி, அவர் வித்தது செல்லாததுன்னு ஸ்டே ஆர்டர் வாங்கலாம்.”
“அப்போ, இப்பவே அதை செய்துடு மாப்ள.”
“ஏன்? கேஸ் நடத்துறேன்னு சொல்லி, இருக்குற கொஞ்சநஞ்ச காசையும் உங்க சொந்தக்காரங்க பிடிங்கிட்டு போகவா?” கணவனின் வார்த்தைக்கு எதிரொலி வீட்டுக்குள் இருந்த மனைவியிடமிருந்து வந்தது.
“கல்பனா… உன்னை பேசாம இருக்கச் சொன்னேன்.” சத்தமாக மனைவியை அதட்டியபடி மருமகனின் முகத்தை அவஸ்தையாக பார்த்த ராஜவேலு, கோபத்தோடு வீட்டுக்குள் நுழைய முயன்றார். அவரைத் தடுத்தவன்,
“இந்த கேஸ்ல இருந்தும் உங்ககிட்டயிருந்தும் எந்த அளவுக்கு நான் விலகியிருக்கிறேனோ அதுதான் என்னோட வாழ்க்கைக்கும், உங்க வாழ்க்கைக்கும் நல்லது. ஒரு லாயரா இதுதான் விஷயம்னு உங்களுக்கு நான் சொல்லியாச்சு. எவ்வளவோ நல்ல லாயர்ஸ் நம்ம ஊர்ல உண்டு. அவங்க யார் மூலமாவது கேஸை நடத்துங்க, இதுக்கு மேல இது விஷயமா என்னைத் தேடாதீங்க.” கையிலிருந்த பத்திரங்களை மாமனிடம் ஒப்படைத்து விட்டு நடையைக் கட்டினான் கண்ணன்.
“என்னை அம்போன்னு விட்டுட்டு இப்பிடி விலகிப்போனா எப்பிடி மாப்ள?” அவனைத் தொடர்ந்தது ராஜவேலுவின் குரல்.
“உங்களைவிட்டு நாங்க விலகிப் போகலன்னு உங்களுக்கே தெரியும்.” திரும்பிப் பார்த்து சொன்னவன், அங்கிருந்து கிளம்பியே விட்டான்.
அங்கிருந்து வெளியே வந்த பிறகுதான் அவனுக்கு இயல்பாக மூச்சுவிடவே முடிந்தது.
‘ஒருநாளின் சிறிது நேரத்திலேயே தனக்கு இப்படி இருந்தால் இந்த மனிதர் எப்படித்தான் இந்த பெண்மணியோடு குப்பைக் கொட்டுகிறாரோ?’ மாமன் மேல் பரிதாபம் தோன்றிய அதேநேரம் மனைவியின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.
‘சீச்சீ… எம்பொண்டாட்டி இப்பிடியெல்லாம் இல்ல. நீதிடா, நேர்மைடான்னு தோள் தட்டிக்கிற ஆளு, அவ்வளவு தான்.’ மனைவியின் புகழைப் பாடிக்கொண்டாலும், அவன் வண்டியை கொண்டுவந்து நிறுத்தியிருந்தது என்னவோ தனது வீட்டிற்கு முன்னால் தான்.
“ம்மா…” அம்மாவை அழைத்தபடியே கண்ணன் வீட்டுக்குள் நுழைந்தான்.
“என்னடா அதிசயம், இந்த நேரத்துக்கு வந்துருக்குற? நந்தினி வரலையா?” மகனுக்கு பின்னால் எட்டிப் பார்த்தபடியே கேட்டார் லீலாவதி.
“ஏன், மருமக கூட வந்தா தான் வீட்டுக்குள்ள விடுவீங்களோ?” நக்கலடித்தபடியே தாயைத் தாண்டி வீட்டுக்குள் சென்றவன், அறைக்குள் சென்று ஒரு குளியலைப் போட்டு இலகு உடையோடு வெளியே வந்தான்.
வீட்டில் லீலாவதி மட்டும் தான் இருந்தார். வெளியே சென்றிருந்த நாதன் இன்னமும் வந்திருக்கவில்லை. நந்தினி வீட்டிலும், திலகம் கடையிலிருந்து திரும்பியிருக்கவில்லை.
“ம்மா, சாப்பிட என்ன இருக்கு?” கேட்டபடியே சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த மகனை, கண்களைச் சுருக்கி சந்தேகமாக பார்த்த லீலாவதி, “ வேலை விஷயமா நந்தினி வெளியூருக்கு எங்கயும் போயிட்டாளா?” என்று கேட்டார்.
“இல்லையே, ஊர்லதான் இருக்குறா.”
“அப்புறம் ஏன் டா இந்த ராத்திரி நேரத்துல நீ மட்டும் தனியா இங்க வந்த? இரண்டு பேருக்குள்ளயும் மறுபடியும் ஏதாவது பிரச்சனையா?” மகனின் கண்களைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார்.
“உண்மையைச் சொல்லட்டுமா? எந்த சூழ்நிலையிலும் இதை நீங்க உங்க மருமககிட்ட சொல்லிடக்கூடாது.” பயங்கர முஸ்தீப்போடு பதில் சொல்ல ஆரம்பித்தவன்,
“எம்பொண்டாட்டி சமையல்ல ரொம்ப வீக் ம்மா, அவ சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து போச்சு, அதான் உங்க கையால சாப்டுட்டு போலாம்னு வந்தா, சந்தேகமாவே பாக்குறீங்க.” அலுத்துக் கொண்டான்.
“இந்த கம்பிகட்டுற வேலை எல்லாம் எங்கிட்ட வேண்டாம் ராசா. நத்தினி நல்லா சமைப்பான்னு எனக்கு தெரியும், அதைவிட எம்புள்ள நீ நல்லா சமைப்ப, அதுவும் எனக்கு தெரியும், அப்பிடி இருந்தும் இப்பிடி சொல்லுறன்னா எங்கயோ இடிக்குது டா.” மகனை நம்ப மறுத்தார் லீலாவதி.
“நல்லதுக்கே காலம் கிடையாதுன்னு சும்மா சொல்லலை ம்மோவ்… வேணும்னா உங்க மருமகளுக்கு ஃபோன் செய்து தரேன், நீங்க அவகிட்டயே கேட்டுக்கோங்க.” இப்படிச் சொன்னால் அம்மா அமைதியாகிவிடுவார் என்ற தைரியத்தில் ஃபோனை கண்ணன் கையிலெடுத்த நேரம், அது அவனை அழைத்தது.
அழைத்தது சுரேந்தர். இவன் அழைப்பை ஏற்றதும்,
“அத்தான், நான் சுரேந்தர். உங்க மாமா என்னவோ சொல்லுறாரே, உண்மை தானா?” என்று கேட்டான்.
அந்த எட்டப்பன் கைபேசி பேசுவது யார் என்று லீலாவதிக்கும் போட்டுக்கொடுக்க, ஆர்வமாக கதை கேட்க தயாரானார் கண்ணனுடைய தாயார்.
தாயின் முஸ்தீப்பில் உஷாரான கண்ணன், உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி மெதுவாக நழுவ முயன்றான்.
“சுரேந்தர் கூடத்தான பேசப்போற, அப்பிடி என்ன ரகசியம் உங்களுக்குள்ள இருக்குது? எதுக்கு ஓடி ஒழியப்பாக்குற? இங்கயிருந்தே பேசு.” மகனின் கையைப் பிடித்து தடுத்தார் லீலாவதி.
“அத்தான்… லைன்ல இருக்கீங்களா? நான் பேசுறது கேக்குதா?” கண்ணனிடமிருந்து பதில் வரவில்லை என்றதும் தானே மறுபடியும் பேசினான் சுரேந்தர்.
“ம்ம்… கேக்குது டா, உங்கப்பா சொன்னதெல்லாம் உண்மை தான், நீ எதை நினைச்சும் ஃபீல் பண்ணாத, படிப்புல மட்டும் கவனம் வை.” மாமன் மகனுடைய இளம் மனது உடைந்து போகக்கூடாது என்று நினைத்து கண்ணன் சொல்ல, எதிர் முனையில் இருந்தவனிடமோ லேசான சிரிப்பு.
“நான் ஏன் ஃபீல் பண்ணப் போறேன் த்தான்? என்னைப் பெத்தவங்களுக்கும் நம்பிக்கை துரோகத்தோட வலி எப்பிடி இருக்கும்னு காலம் காட்டிக் குடுத்திடிச்சின்னு சந்தோஷமா தான் இருக்குறேன்.” உற்சாகமாகவே வந்தது பதில்.
‘எம்பொண்டாட்டிக்கு தம்பியா இருக்க, பத்து பொருத்தமும் பக்காவா இருக்குடா உனக்கு.’ மனதுக்குள் சுரேந்தரை கேலி செய்துகொண்டவன்,
“நான் கொஞ்சம் பிஸியா இருக்குறேன், அப்புறமா பேசுவோம்.” என்று அழைப்பை துண்டித்தான்.
“நம்பிக்கைத் துரோகம், வலி… என்னடா நடந்தது, என்ன பேசுறான் சுரேந்தர்?” இடுப்பில் கை வைத்து முறைத்தபடி லீலாவதி கேட்க, எப்படியென்றாலும் தெரியத்தான் போகிறது, அதை நாமே சொல்லிவிடுவோம் என்று முடிவு செய்தவன்,
“முட்டை தோசை சுட்டுத் தர்றதா இருந்தா சொல்லுறேன்” என்று டீல் பேசினான்.
“சரி, கிச்சனுக்குள்ள வா, நீ சொல்லச் சொல்ல, நான் தோசை சுடுறேன்.” என்று சமையலறைக்குள் மகனை அழைத்துச் சென்றார்.
ராஜவேலு தன்னை அழைத்தது, மனைவியின் வார்த்தையையும் மீறி தான் அங்கே சென்றது, அங்கே கல்பனா நடந்து கொண்டது என்று எதையும் சொல்லாமல், விஷயத்தை மட்டும் மேலோட்டமாக சொன்னான். கேட்டுக் கொண்டிருந்தவருக்கு அதிர்ச்சி தான் என்று அவரது முகபாவனையிலேயே தெரிந்தது. மகன் முழுவதும் சொல்லி முடிக்கவும்,
“இந்த சொத்து, பணம் எல்லாம் சொந்தத்தை விட அவ்வளவு முக்கியமானதா? எதுக்கு இப்பிடி பெரியவன் சின்னவனை ஏமாத்தினான்?” ஏதோ போலக் குரலில் சொன்னவர்,
“ஆமா… உனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும்? ஒருவேளை நீ… நீ…வேலு வீட்டுக்கு தான் போய்ட்டு வர்றியா? அது பிடிக்காம தான் நந்து உங்கிட்ட சண்டை பிடிச்சாளா? அதனாலத் தான் ஐயா இங்க வந்து இறங்கியிருக்கீங்களோ?” சரமாரியாக மகனை கேள்வி கேட்டார்.
“உண்மையிலேயே ஒரு லாயரோட அம்மாங்குறதை ப்ரூஃப் பண்ணிட்டீங்க ம்மா.” தாயின் கன்னத்தை கிள்ளியபடி கண்ணன் சிலாகிக்க,
“எடு விளக்குமாத்த, நீ எதுக்கு டா அந்த பயல் வீட்டுக்கு போன? உனக்கு போய் தோசை சுட்டுப் போட்டேன் பாரு என்னைச் சொல்லணும், நீ இப்பிடி செய்தா எம்மருமக உன்னைக் கொஞ்சுவாப் பாரு? மொதல்ல உங்க வீட்டுக்கு கிளம்புடா.” மகனின் கையிலிருந்த பாத்திரத்தை வெடுக்கென்று பிடிங்கிய லீலாவதி, அடிக்காத குறையாக அவனை அங்கிருந்து கிளப்பினார்.
“ஆனாலும் இதெல்லாம் ரொம்ப அநியாயம் ம்மா, ஒரு மன ஆறுதலுக்காக பிறந்த வீட்டுக்கு வரலாம்னா, அதுக்கு கூட தடா சொன்னா எப்பிடி?” விளையாட்டாகவே தாயை கண்ணன் கையாண்டு கொண்டிருந்த நேரம், நாதனும் திலகமும் வந்திருந்தார்கள்.
மருமகனின் இருசக்கர வாகனத்தை கண்டதும் தன்னுடைய வீட்டுக்குள் செல்லாமல் திலகம் இங்கே வந்திருந்தார்.
“அம்மாவுக்கும் பிள்ளைக்கும் என்ன பஞ்சாயத்து ஓடுது?” விஷயம் தெரியாத நாதன் விளையாட்டாக கேட்க, எல்லாவற்றையும் சொன்ன லீலாவதி, மறுபடியும் மகனை திட்ட ஆரம்பித்தார்.
கேள்விப்பட்ட விஷயம் எதுவும் தன்னைப் பாதிக்காதவராக நின்றிருந்த திலகம், “இந்த பொண்ணு எதுக்கு தேவையில்லாம கண்ணன் கிட்ட பிரச்சினை பண்ணுறா? இருங்க, நான் என்னன்னு கேக்குறேன்.” என்றபடி கைபேசியை கையிலெடுக்க முயல,
“அதெல்லாம் ஒன்னுமில்ல த்த, நீங்க எதுவும் நந்துகிட்ட கேக்க வேணாம்.” அவசரமாக இடையிட்டான் கண்ணன்.
“இந்த முந்திரிகொட்டைக்கு அறிவு சொல்லுறதை விட்டுட்டு, என் தங்கத்துகிட்ட என்ன கேக்குறது?” தன் பங்குக்கு லீலாவதி பேச,
“ஆமா, ஆளாளுக்கு பேசி சின்னப் பிரச்சினையை பெருசாக்கி விட்டுருங்க.” என்றிருந்தார் நாதன்.
“என்னங்க சொல்லுறீங்க?”
“பிள்ளைங்க உங்ககிட்ட வந்து அறிவுரையோ உதவியோ கேக்காத வரைக்கும் நீங்களா அவங்க வாழ்க்கைக்குள்ள மூக்கை நுழைக்காதீங்கன்னு சொல்லுறேன். அடிச்சிகிட்டாலும் பிடிச்சிகிட்டாலும் அவங்க பிரச்சினையை அவங்களே தீர்த்துக்கட்டும்.” நாதனின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் பெண்கள் இருவரும் அமைதியாகிப் போனார்கள்.
“நீ சாப்டுட்டு, கிளம்புறதா இருந்தா கிளம்பு கண்ணா, இல்லைன்னா நாளைக்கு காலைல கிளம்பு. அதுக்கு முன்னாடி மருமகளுக்கு ஃபோன் செய்து இங்க இருக்கிறேன்னு தகவல் சொல்லிடு.”
மறுக்க முடியாத குரலில் நாதன் சொல்லிக் கொண்டிருந்தபோது, வாசலில் வந்து நின்ற அலுவலக வாகனத்திலிருந்து நந்தினி இறங்கிக் கொண்டிருந்தாள்…