அத்தியாயம் 15

“ம்ஹும்… அந்த வைரவமூர்த்தி கண் முன்னாடியே அனிதா கல்யாணத்தை ஜாம்ஜாம்னு எப்படியெல்லாம் நடத்தணும்னு நினைச்சிருந்தேன் தெரியுமா? கடைசியில என் ஆசை எல்லாத்தையும் ஒன்னுமில்லாம செய்துட்டீங்க.” தங்கையின் திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆனபிறகும் மனம் சமாதானம் அடையாமல் கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் நந்தினி.

இருவரும் காலைநேர உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சமையலறையில் நின்றிருந்தார்கள். நந்தினி இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றிக்கொண்டிருக்க, புதினா சட்னி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் கண்ணன்.

“இப்போ என்ன? க்ராண்டா ஒரு ரிஷப்ஷனுக்கு ஏற்பாடு செய்துட்டு, அனிதாவோட மாமனாருக்கும் மச்சானுக்கும் ஒரு அழைப்பு வச்சிடுவோம், போதுமா?” கேலியாகச் சொன்னான் கண்ணன்.

“ஏன், செய்ய மாட்டேன்னு நினைச்சீங்களா?” இடுப்பில் கைவைத்தபடி கணவனிடம் முறைத்துக் கொண்டு நின்றாள்.

“அம்மா தாயே, உன்னோட தைரியத்தை குறைச்சு எடைபோடுவேனா நான்? எப்பிடியோ கல்யாணம் முடிஞ்சாச்சு, புது பொண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டுக்கு கூப்பிட்டு சூப்பரா ஒரு விருந்து வைப்பியாம். இன்னும் இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க உனக்கு, அவங்க கல்யாணத்தை ஜேஜே ன்னு க்ராண்டா பண்ணிக்கலாம்.” எங்கே தன் வார்த்தைகளை பிடித்துக்கொண்டு ரிசப்ஷன் வைத்தே ஆகவேண்டும் என்று மனைவி பிடிவாதம் பிடித்து விடுவாளோ என்று பயந்து போனவனாக அவசர அவசரமாக சொன்னான் கண்ணன்.

அவனுடைய பயம் புரிந்தது போல, இதழ்களில் மெல்லிய புன்னகை நந்தினிக்கு.

“ம்ம்… இந்த நந்தினியால முடியாதது எதுவுமே கிடையாது, அதை எப்பவும் மனசுல வச்சிக்கணும்.” கணவனின் மீசையை முறுக்கி விட்டபடியே கெத்து காட்டினாள் மனைவி.

“சரிங்க.” கண்ணன் போலி பவ்யம் காட்ட,

“நாகரீக உலகம்னு பெருசா சொல்லிக்கிறாங்க, ஆனா அதுல வாழுற மனுஷங்க இன்னமும் காட்டுமிராண்டிகளாத்தான் இருக்குறாங்க.” வருத்தத்ததின் சாயல் நிரம்பவே இருந்தது நந்தினியின் முகத்தில்.

“ம்ம்… சட்டங்கள் கடுமையாக்கப்படுற வரைக்கும் இந்த மாதிரி மனுஷங்க பயமில்லாம நாட்டுல நடமாடிக்கிட்டு தான் இருப்பாங்க. அடுத்தவங்க மேல கையை வச்சா, தன்னோட உயிருக்கு உத்தரவாதம் கிடையாதுங்குற பயம் எப்போ வருதோ, அப்போ தானாவே அடங்கிப் போவாங்க.” புதினா கீரையை மிக்ஸி ஜாரில் சேர்த்தபடியே சொன்ன கண்ணனின் வார்த்தைகளும் கொஞ்சம் தீவிரமாகத் தான் இருந்தது.

“அத்தான், அதோட கொஞ்சமா மாங்கா சேத்து அரைங்க.” மற்றவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு கணவனுக்கு சட்னி அரைக்க பக்குவம் சொன்னாள் நந்தினி.

“மாங்காயா?” வினாடி நேரம் யோசனையாக மனைவியைப் பார்த்தவன்,

“அடிக்கள்ளி… எங்கிட்ட எதுவும் சொல்லவே இல்ல நீ?!” சட்னி அரைக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு மனைவியின் கன்னங்களை தன்னிரு கைகளால் தாங்கிக் கொண்ட கண்ணனின் வாயெல்லாம் பல் தான்.

“ம்ம்… ஒரு டிஷ்ல மாங்கா சேத்துக்க சொன்னது குத்தமா ய்யா உங்க ஊருல?” தன்னை நெருங்கி நின்றிருந்த கணவனின் மார்பை ஆள்காட்டி விரலால் தள்ளியபடியே அலுத்துக் கொண்டாலும், மெல்லிய வெட்கம் ஒன்று எட்டிப்பார்த்து பெண்ணவளின் முகத்தை அழகாக்கத் தான் செய்தது.

“அப்போ அது இல்லியா?” கண்கள் குறும்பில் மின்ன கேட்டான் கண்ணன்.

“ம்ஹும்… இல்ல…” நந்தினியின் தலை வெட்கத்தோடு அசைந்தது.

“ம்ம்… இது எவ்வளவு அழகா இருக்கு? அதை விட்டுட்டு எப்போ பாத்தாலும் போலீஸா விரைப்பாவே இருக்குறது?” மனைவியின் சிவந்த கன்னங்களை பெருவிரல்கள் கொண்டு நீவி விட்டபடி கண்ணன் சொல்ல,

“அப்போ புருஷன் சொல்லுறதுக்கெல்லாம் வெக்கப்பட்டுகிட்டு, அவன் பின்னாடி நாய்க்குட்டி மாதிரி தான் பொண்ணுங்க அலையணும், அவங்களுக்குன்னு சுய சிந்தனை இருக்ககூடாதுன்னு சொல்லுறீங்களா நீங்க?” நொடி நேரத்தில் சந்திரமுகியாக மாறி நின்றாள்.

“இது என்ன புது புரளியா இருக்கு? நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” அப்பாவியாக விழிவிரித்தான் கண்ணன்.

“நேரடியா சொன்னா தானா? நீங்க இப்போ சொன்னதுக்கு அர்த்தம் என்னவாம்?”

“பேசாம நீ லாயருக்கு படிச்சிருக்கலாம் நந்து, என்னமா பாயிண்ட்ஸ் எடுக்குற.”

“இப்பிடி புகழ்ந்து பேசினா விட்டுருவேன்னு நினைக்காதீங்க. நீங்க செய்த தப்புக்கு பனிஷ் பண்ணியே ஆகணும். ம்ம்… என்ன பண்ணலாம்?” அவனிடமே நந்தினி கேட்க,

“தயவுசெய்து தோப்புக்கரணம் எதுவும் போடச் சொல்லிடாதீங்க மேடம்.” உதட்டை மடித்து சிரித்தபடியே சொன்னான்.

“சேச்சே… அதெல்லாம் உங்களை செய்யச் சொல்ல மாட்டேன். அயர்ன் வண்டிக்காரர் வரல, அதனால இரண்டுசெட் யூனிஃபார்மை அயர்ன் செய்து குடுத்துடுங்க.” அசால்டாக சொன்னவள்,

“ஆமா… உங்க மாமா பையனை எங்க காணோம்?” சுரேந்தரைப் பற்றி கேட்டபடியே தண்ணீர் தெளித்து இட்லியை எடுக்க ஆரம்பித்தாள்.

“எனக்கு தெரியாது. ஏன் கேக்குற?” என்றான் உஷாராகிக் கொண்டவன்.

“இல்ல, அதுக்கப்புறம் எங்கண்ணுலயே படலை, அதான் கேக்குறேன்.”

“நீதான் எம்முன்னாடி வராதன்னு சொல்லிட்டியே, அதான் அக்கா சொல்லைக் கேக்கணும்னு உங்கண்ணுல படாம இருப்பானா இருக்கும்.”

“அக்காவா?” நந்தினியின் கண்கள் இப்போது கோபமாக கணவனை முறைத்து வைத்தன.

“நீ ஒத்துக்கலைன்னாலும் இரண்டு பேருக்குமான உறவு அது தானே?” தைரியமாக சொன்னான் கண்ணன்.

“நீங்க ங்குறதால விடுறேன். இதே வேற யாரும் சொல்லியிருந்தா நடக்குறதே வேற.” பற்களைக் கடித்தாள்.

“என்னையும் எங்க விடுற, அப்பப்போ வச்சி செய்துடுற.” முணுமுணுத்தான் அந்த அப்பாவிக் கணவன்.

“ஹாங்… என்ன சொன்னீங்க?”

“இல்ல… துணி அயர்ன் பண்ணனும்னு சொன்னியே, எடுத்து குடுக்கிறியான்னு கேட்டேன்.” அவனுடைய வேலை முடிந்திருக்க அவசர அவசரமாக சமையலறையில் இருந்து வெளியேறியிருந்தான் கண்ணன்.

இருவரும் குளித்து முடித்து, அலுவலகத்திற்கு தயாராகி காலை உணவை உண்டு கொண்டிருந்தார்கள். அப்போது அனிதாவிடமிருந்து போன் அழைப்பு வர, கணவன் மனைவி இருவருமே பேசினார்கள்.

பேச்சின் முடிவில் கண்ணனிடம், “அத்தான், உங்ககிட்ட ஜெகன் பேசணும்னு சொன்னாங்க” என்றபடியே கணவனிடம் அனிதா போனை கொடுக்க, பொதுவான நலன் விசாரிப்பிற்கு பிறகு விஷயத்துக்கு வந்தான் ஜெகன்.

வேறொன்றுமில்லை, பூங்கோதை திருமணம் செய்து கொண்டதால் எங்கள் பேத்தியை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவளுடைய முன்னாள் மாமனார் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதை கண்ணனிடம் சொன்ன ஜெகன், பதிலுக்கு சட்டபூர்வமாக செய்ய வேண்டிய நடைமுறைகளைப் பற்றி கேட்டான்.

“நான் முன்னாடியே இதை எதிர்பார்த்தேன், அப்பிடி பாத்தா இவங்க லேட் தான். ஒருவேளை உங்க அப்பாவோட தூண்டுதல் காரணமா கூட இப்போ இது நடந்திருக்கலாம். அவரோட அமைதியை நீங்க சாதாரணமா எடுத்துக்காதீங்க.” என்ற கண்ணன்,

“அம்மாகிட்ட இருந்து குழந்தையை பிரிக்கிற உரிமை, பெத்த அப்பாவுக்கே கிடையாதுங்குற போது இவங்களால என்ன செய்துர முடியும்? சிஸ்டரை தைரியமா இருக்க சொல்லுங்க. அப்பிடியே ஆஃபீஸுக்கு அவங்களைக் கூட்டிட்டு வாங்க, நாம பதிலுக்கு கேஸ் ஃபைல் பண்ணிடலாம்.” என்றான்.

கணவன் பேச்சை வைத்தே விஷயத்தை புரிந்து கொண்ட நந்தினியின் முகம் கோபத்தில் சுருங்கியிருந்தது.

“ஒரு பொண்ணு நிம்மதியா வாழுறது இங்க யாருக்கும் பிடிக்காதே. உடனே குடைச்சல் குடுக்க ஆரம்பிச்சிடுவானுங்களே.” என்றாள் கடுப்பாக.

“இது இந்த சமுதாயத்தோட சாபக்கேடு, இதை நாம ஒன்னும் செய்ய முடியாது நந்து.” மனைவியை அமைதிப்படுத்த முயன்றான் கண்ணன்.

அதன்பிறகும் பேச்சு அதைச்சுற்றியே நீண்டு கொண்டு சென்றது.

 காலை உணவை முடித்து, மதிய சாப்பாடை கையில் எடுத்துக்கொண்டு எப்போதும் போல தங்களது பணியிடங்களுக்கு கிளம்பி சென்றிருந்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு இன்றுதான் பணிக்கு திரும்பியிருந்தான் சபேசன். அவனிடம் பொதுவாக வீட்டில் உள்ளவர்களின் நலன் விசாரித்த நந்தினி, எப்போதும் போல காலை நேரத்து ரோந்து பணிக்கு கிளம்பினாள். அவளோடு இணைந்து கொண்டான் சபேசன்.

நெல்லை நகரின் பரபரப்பான சாலைகள் முழுவதும் சுற்றி முடிக்கும் போதே காலை பதினோரு மணி ஆகியிருந்தது. அதன் பிறகும் அலுவலகம் திரும்பாமல், மாவட்டத்தில் இருக்கும் காவல் நிலையங்களை பார்வையிட கிளம்பினாள். இது அவ்வப்போது நடப்பது தான்.

இன்று பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு காவல் நிலையத்துக்கு வண்டியை விடச்சொல்ல, அப்படியே செய்தார் ட்ரைவர். போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய நந்தினி யாரையும் எதிர்பாராமல் விறுவிறுவென்று காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள். அவளை அங்கே எதிர்பாராத அந்த ஸ்டேஷனின் காவலர்கள் விறைப்பாக சல்யூட் வைத்து நந்தினிக்கு மரியாதை செய்ய,

“மேடம்…” என்ற பதட்டமான அழைப்பு கேட்டது.

‘இது… சிவா குரலாச்சே? இங்கே எங்கே அவன்?’ யோசனையோடு குரல் வந்த திசையை நந்தினி பார்க்க, அங்கே சிவாவோடு சுரேந்தரும் நின்று கொண்டிருந்தான். அவன் உதடுகள், “அக்கா…” என்று மெல்ல முணுமுணுத்ததை நன்றாகவே உணர முடிந்தது நந்தினியால்.

ஓய்ந்து போன தோற்றத்தில் நின்றிருந்த இருவரின் கண்களிலும் தன்னைக் கண்டதும் அப்பாடா என்ற நிம்மதி பரவியதையும் மனதில் குறித்துக்கொண்ட நந்தினி, “என்னாச்சு இன்ஸ்பெக்டர்? எதுக்காக இந்த பசங்களை இங்க கொண்டு வந்துருக்கீங்க?” என்று விசாரணையில் இறங்கினாள்.

நந்தினியைக் கண்டதும் இருவர் முகத்திலும் தெரிந்த ஸ்னேக பாவத்தில், “இவனுங்களை உங்களுக்கு தெரியுமா மேடம்?” என்று கேட்ட இன்ஸ்பெக்டர், அவர்கள் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட ஒரு மலைப்பாங்கான பகுதியின் பெயரைச் சொல்லி,

“அங்க போதைப் பொருள் விற்கிறவங்களோட நடமாட்டம் இருக்குதுன்னு தகவல் வந்தது மேம். அதனால ஒரு ரெய்டு மாதிரி போனோம். அங்க தான் சந்தேகத்துக்கு இடமா இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்க, கேட்டா யூடியூப், வீடியோன்னு என்னென்னவோ ரீல் விடுறாங்க, அதான் ஸ்டேஷனுக்கு கொண்டுவந்து விசாரிக்கலாம்னு அள்ளிகிட்டு வந்தேன்.” அவர்கள் இருவரையும் அங்கே கொண்டுவந்த கதையைச் சொன்னார்.

கேட்டவளுக்கு கோபம் எக்கச்சக்கமாக வந்தது. “என்னடா இது?” இருவரையும் பார்த்து முறைத்தபடி கேட்க, வாய்திறந்தான் சிவா.

“அங்கயிருக்குற மரங்கள்ல, செம்போந்து ங்குற பறவை கூடு கட்டியிருக்கும்னு சொன்னாங்க க்கா. அதோட கூட்டுல ஒருவகையான மூலிகை மரத்தோட குச்சி கண்டிப்பா இருக்குமாம். அந்த கூட்டை வீடியோ எடுத்து போட்டா வியூஸ் பிச்சிகிட்டு போகும்னு நான் தான் ப்ரோவை கூட்டிட்டு போனேன். வேற எதுவும் எங்களுக்கு தெரியாது க்கா.” ஆபத்பாந்தவனாக வந்து நிற்கும் நத்தினியை விட்டால் தங்களுக்கு வேறுவழியில்லை என்பதில் மேடம் மறந்து அக்கா என்றே அழைத்து நடந்ததைச் சொன்னான் சிவா. அவன் பக்கத்தில் பரிதாபமாக நின்றிருந்தான் சுரேந்தர்.

“கேட்டுகிட்டீங்களா இன்ஸ்பெக்டர். அவ்வளவு தான் அவங்க எண்ணம். இரண்டு பேரும் எனக்கு ரொம்ப தெரிஞ்ச பசங்க, நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் கிடையாது. பசங்களுக்கு நான் கேரெண்டி. அவங்களை விட்டுருங்க. எதுவும் ரிட்டர்ன் ஸ்டேட்மெண்ட் குடுக்கணும்னாலும் நான் குடுக்குறேன்.” இப்படியொரு சூழ்நிலையில் தன்னைக் கொண்டுவந்து நிறுத்திய இளையவர்கள் மீது கோபம் உள்ளுக்குள் கொப்பளிக்க, அதை மறைத்து அளவான புன்னகையோடு அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் சொன்னாள் நந்தினி.

“காலேஜ் பசங்க தானே இந்த விஷயத்துல இப்போ ரொம்ப இன்வால்வ் ஆகுறாங்க, அதனாலத்தான் அவங்க சொன்ன கதையை நான் நம்பல மேம். நீங்க இவ்வளவு சொன்னதுக்கு பிறகும் நான் நம்பாம இருக்க முடியாதே, எழுதி எதுவும் குடுக்க வேண்டாம், பசங்களை கூட்டிட்டு போங்க.” என்றவர், இருவரிடமுமிருந்து கைப்பற்றியிருந்த கைபேசிகளைக் கொடுத்து,

“தம்பிகளா, இன்னைக்கு உங்க நேரம் நல்லாயிருக்கு, அதனால மேடம் கண்ணுல பட்டீங்க, இல்லைன்னா விசாரணை அது இதுன்னு சின்னாபின்னமா போயிருக்கும் உங்க லைஃப். அதனால இந்த மாதிரி பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் விட்டுட்டு படிப்பை மட்டும் பாருங்க.” என்றார் புத்திசொல்லும் விதமாக.

சர்வீஸில் சேர்ந்திருந்த இத்தனை நாட்களில் யாருக்காகவும் யாரிடமும் பரிந்துரை என்று நின்றிராத நந்தினிக்கு தான், அந்த சூழ்நிலையில் பொருந்த முடியாமல் நெருப்பின் மீது நின்றிருந்தது போல இருந்தது.

அந்த இன்ஸ்பெக்டருக்கு நன்றி சொல்லி, இருவரையும் சபேசனோடு வெளியே அனுப்பியவள், வந்த வேலையை முடித்துவிட்டே வெளியே வந்தாள்.

வெளியே வந்த நந்தினியின் பார்வையில் அனலடித்தது. அதை எதிர்கொள்ள முடியாத இளையவர்களின் பார்வையோ தரையைத் துளைத்தது.

இருவரையும் போலீஸ் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு கிளம்பியிருந்தார்கள். சற்று தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத கிளைச்சாலையில் நந்தினி வண்டியை நிறுத்தச் சொல்ல, அப்படியே செய்தார் ட்ரைவர்.

எல்லோரும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். நந்தினியின் பார்வையில் சபேசனும் ட்ரைவரும் சற்று தள்ளிச்சென்று நின்று கொண்டார்கள்.

நடந்த முன்னேற்பாட்டில் கிலி பிடித்து ஆட்டியது இளையவர்கள் இருவரையும்.

“உன்னைப் பாத்த முதல் நாளே, இதே மாதிரி இனிமே எங்கேயும் பாக்கக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?” சிவாவிடம் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

“அக்கா… வாழ்க்கை முழுமைக்கும் இந்த ஒரு அனுபவமே போதும் எனக்கு. இனிமே படிப்பு, காலேஜ் விட்டா வீடு, இதைத் தாண்டி வேற எங்கேயும் போகமாட்டான் இந்த சிவா.” நடந்த நிகழ்வில் கதிகலங்கிப் போயிருந்தவன் சட்டென்று சரணாகதி அடைந்திருந்தான்.

அவன் பதில் திருப்தியாக இருக்க, “நீ என்ன பண்ணப்போறதா உத்தேசம்?” முகத்தில் முள்ளை கட்டிவைத்தது போன்ற பாவனையில் நேரடியாகவே சுரேந்தரிடம் கேட்டிருந்தாள் நந்தினி.

அக்கா தன்னிடம் நேரடியாக பேசிவிட்டதில் ஜென்ம சாபல்யம் அடைந்தது போலிருந்தது சுரேந்தருக்கு.

“உங்களைப் போலவே ஐபிஎஸ் ஆகணும்ங்குறது தான் என்னோட ஆசை, ஆனா என்னால அதுல கான்சென்ட்ரேட் பண்ண முடியுமான்னு தெரியல.” மெல்லிய குரலில் சொன்னான்.

“ஏன்? என்ன கொள்ளை உனக்கு?” கடுப்பாக வந்தது கேள்வி.

“ப்ரோ நொந்து போய் இருக்கிறார் க்கா…” மெல்லிய குரலில் முணுமுணுத்தான் சிவா.

“என்னடா நொந்துபோய் இருக்குறான்? அம்மா இல்லையா, அப்பா இல்லையா அவனுக்கு நொந்துபோக?” விட்டால் அடித்து விடுபது போல நின்றாள் நந்தினி.

“அவங்க சரியா இல்ல?” விட்டேற்றியாக பதில் வந்தது சுரேந்தரிடமிருந்து.

“ராஸ்கல், அடிச்சு பல்லு எல்லாத்தையும் பேத்துடுவேன். அவங்க சரியில்ல, இவங்க சரியில்லன்னு சொல்லிகிட்டு உன் வாழ்க்கையை தொலைக்க போறியா நீ?” பற்களைக் கடித்துக்கொண்டு நந்தினி லேசாக கையை ஓங்க, அடித்துக்கொள் என்பதுபோல தோள்களைக் குறுக்கி ஒடுங்கினான் சுரேந்தர்.

“டேய்… டேய்… எரிச்சல் உண்டாக்காதடா, ஐயோ பாவம் நல்ல பையனா இருக்கானேன்னு பாத்தா, நீ ரொம்ப பண்ணுற.” அவள் சொல்லி முடிக்கக் தான் தாமதம்,

“நான் நல்ல பையனா க்கா?” தவிப்போடு கேட்டிருந்தான் சுரேந்தர்.

தவறு செய்தவர்கள் கிஞ்சித்தும் குற்ற உணர்ச்சி இல்லாமல் டாம்பீகமாக உலா வந்து கொண்டிருக்க, அவர்களுக்கு பிறந்தவனோ தடுமாறி நிற்கிறான்.

அவன் மனநிலை நந்தினிக்கு புரியத்தான் செய்தது. இவ்வளவு ஏன், அவன்மீது பரிதாபம் கூட வந்தது. கண்களை இறுக மூடித் திறந்தவள் எதையும் காட்டிக்கொள்ளாதவளாக தங்கை இந்துவிற்கு அழைத்தாள்.

இவ்வளவு நேரத்திற்கெல்லாம் அழைக்காத அக்கா அழைக்கவும் அழைப்பை ஏற்ற இந்துஜா, “என்ன க்கா?” என்று அவசரமாக கேட்க,

“உங்க கோச்சிங் சென்டர்ல சுரேந்தர் ங்குற பெயருல ஒரு அட்மிஷனை போடு, நாளைக்கு காலைல ஆள் அங்க வருவான்.” என்றாள்.

சுரேந்தர் என்ற பெயரிலேயே ஆள் யார் என்பது தங்கைக்கு புரிந்துவிட, “க்கா…” என்றாள் நம்ப முடியாதவளாக.