கண்ணன் சொல்லியது போல, மகனுடைய காதல் விஷயம் கேள்விப்பட்டதும் வானத்துக்கும் பூமிக்குமாகத் தான் குதித்தார் வைரவமூர்த்தி. மூத்த மகன் கைதானதே அதிர்ச்சி என்றால், அவன் வழக்கறிஞர் மூலம் சொல்லிவிட்டிருந்த தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது அவருக்கு.
பாலகிருஷ்ணன் கைதாகும் வரையிலும் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்திருக்கவில்லை. மறுநாள் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்திருக்க, கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.
“பெத்தவங்களுக்கு பிள்ளைங்களோட கல்யாண விஷயத்துல முடிவெடுக்க உரிமை இல்லைன்னு நான் சொல்லலை. அதே நேரம், பிள்ளைங்க அதை உங்களுக்கு தராத பட்சத்துல, அடம்பிடிச்சு எடுத்துக்க முயற்சி செய்யாதீங்க. உங்க பொண்ணு அவங்க விருப்பத்துக்கு கல்யாணம் செய்ய முடிவெடுத்துருக்காங்க. வாழ்த்துங்க. முடியலையா, ஒதுங்கிக்கோங்க. இல்ல, முடியாதுன்னு தேவையில்லாத விஷயங்களை நீங்களோ உங்களைச் சார்ந்தவங்களோ செய்தா, காலத்துக்கும் நீங்க வெளி உலகத்தை பார்க்க முடியாது. இதை மட்டும் நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க.” மாவட்டத்தில் ஆங்காங்கே சாதியப் படுகொலைகள் நடந்திருந்ததில், அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று வைரவமூர்த்தியை கிட்டத்தட்ட மிரட்டித்தான் விட்டிருந்தார் நீதிபதி.
வீட்டுக்கு வந்தவரிடம் ஜெகத்ரட்சகன் அனிதா திருமண விஷயத்தை மருமகள் சொல்ல, கையறுநிலை மனிதருக்கு. அதைவிட மகனுக்கும் ஜாமீன் கிடைக்காமல் போக, நொந்து போனார்.
அந்த வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரியான நந்தினி, பாலகிருஷ்ணனுக்கு ஜாமீன் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தான் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்ட வைரவமூர்த்திக்கு, நந்தினியின் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டே சென்றது.
“பொம்பிள தானே, என்ன செய்ய முடியும்னு உன்னை விட்டு வச்சதுக்கு, எங்குடும்பத்து மேலயே கை வச்சிட்டல்ல? இதுக்கு மேல உன்னை விடுறதா இல்ல.” மனதிற்குள் வன்மம் வளர்த்தார் வைரவமூர்த்தி.
இரவு விருந்து முடிந்து, அனிதா வீட்டினர் கிளம்பி சென்றிருந்தார்கள். எந்த ஒரு நிகழ்வு வித்தியாசமாக இருந்தாலும் தன்னிடமோ, ஜெகனிடமோ சொல்லிவிட வேண்டும் என்று தங்கையிடம் அறிவுறுத்தியே சென்றிருந்தாள் நந்தினி.
சபேசனின் சார்பில் பெரிதாக உறவுக்கூட்டம் இல்லை. அவனுடைய பெற்றோர்களும் ஒருவர் பின் ஒருவராக தவறியிருக்க, அரசாங்கம் கொடுத்திருக்கும் வீட்டில் அவன் மட்டுமே.
பாதுகாப்பு கருதி, இங்கே பாட்டி வீட்டில் சிறிது நாட்கள் தங்க வேண்டும் என்று சபேசனை ஜெகன் கேட்டுக்கொள்ள, “போலீஸ்காரன் குடும்பத்துக்கே பாதுகாப்பா?” கேலியாக சிரித்திருந்தாலும் சம்மதித்திருந்தான். எனவே இரண்டு புதமணத் தம்பதியருமே பாட்டி வீட்டில் தான்.
இரண்டு தம்பதியருக்கும் முதல் இரவிற்கான ஏற்பாடுகள் அன்றே நடக்க, மணப்பெண்களை அலங்கரிக்க தொடங்கினார்கள்.
“நானே தலைப் பின்னிக்கிறேன்…” முதல் திருமணத்தின் கசப்பான நினைவுகள் நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து எட்டிப் பார்த்து தன் இருப்பைக் காட்டிக் கொண்டதில், தயங்கித் தயங்கி சொன்னாள் பூங்கோதை.
அவள் மனநிலை புரிந்ததோ என்னவோ அவளை விட்டுவிட்டு அனிதாவை வகைதொகை இல்லாமல் கேலி செய்ய ஆரம்பித்தார்கள் உறவுக்காரப் பெண்கள்.
அந்த சூழ்நிலையில்கூட பூங்கோதையால் பொருந்த முடியாமல் போக, இயல்பாக நகர்வதுபோல அந்த அறையிலிருந்து வெளியே வந்தவள், வேறொரு அறைக்குள் நுழைந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். மனம் வலிக்க வலிக்க தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை அசைபோடத் தொடங்கியது.
ஒருவருட திருமணவாழ்க்கை… பூங்கோதைக்கு தன்னுடைய உயிரே சுமக்க முடியாத சுமையாகிப் போன நாட்கள் அவை.
பூங்கோதையின் கசக்கப்பட்ட காதலை துருப்பு சீட்டாக பயன்படுத்தி வைரவமூர்த்தியை காலம் முழுவதும் தங்களுக்கு கப்பம் கட்ட வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் மருமகளாக ஆக்கிக்கொண்ட குடும்பம்…
அவளுடைய மனம் தெரிந்தும், அதிலிருந்த ரணம் புரிந்தும், அவளுக்கான நேரத்தைக் கொடுக்காமல், விட்டால் எங்கே விட்டுவிட்டு ஓடிவிடுவாளோ என்ற எண்ணத்தில் திருமண நாளன்றே குடும்ப வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக அவளைத் தள்ளிய வாழ்க்கைத் துணை…
இவர்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு உடலும் மனமும் பூங்கோதைக்கு ரணமாகிப் போனது தான் மிச்சம்.
ஆனால் அதுவும் ஒரே வருடத்தில் முடிவுக்கு வர, ‘இதற்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?’ என்று விரக்தி சிரிப்பு தான் வந்தது பூங்கோதைக்கு.
பிறந்த வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த தகப்பனோடு சுவரில் அடித்த பந்தாக வயிற்றுப் பிள்ளையோடு பூங்கோதை கிளம்ப, பூங்கோதை என்னும் அக்ஷய பாத்திரத்தை தகப்பனிடம் ஒப்படைக்க மனமே இல்லை அவளுடைய மாமியாருக்கு.
“அண்ணா, பூங்கோத வயித்துல எங்க வீட்டு வாரிசு இருக்குது, அதை எப்படி நாங்க விடமுடியும்? எங்களுக்கு இன்னொரு மகன் இருக்குறான் தானே? அவனுக்கே பூங்கோதையை கல்யாணம் பண்ணிவச்சிடுவோம். எங்க மருமக எங்ககூட இங்கயே இருக்கட்டுமே.” தழுதழுத்த குரலில் தன்னுடைய நாடகத்தை அரங்கேற்றியிருந்தார் அந்த பெண்மணி.
மகளுக்கு மறுவாழ்வு, இதைக்கேட்டதும் தன் காலிலேயே நெடுஞ்ஜாண் கிடையாக வைரவமூர்த்தி விழுந்துகிடப்பார் என்று அந்த பெண்மணி கணக்கு போட்டிருக்க, அதற்கு நேர்மாறாகத்தான் எல்லாம் நடந்திருந்தது.
“இல்ல… இல்ல… அதெல்லாம் சரி வராது, நம்ம சமுதாயத்துக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு. அதைத்தான் எம்பொண்ணு கடைபிடிக்கணும்.” அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு, மகளை கையோடு அழைத்தும் சென்றுவிட்டார் வைரவமூர்த்தி.
இப்படியொரு பூதம் கிளம்பும் என்று முந்தைய நாள் இரவே தெரிந்திருந்தது பூங்கோதைக்கு. அதனால் வேடிக்கை பார்க்கும் மனநிலை தான் அவளிடம்.
ஆமாம்… “நாளைக்கு அப்பங்காரன் கூட கிளம்பி போயிடுவா, அவகூடவே அவ கொண்டு வந்த சொத்தும், அதால வர்ற வருமானமும் போயிடும். அதனால ஒரு தாலியை மட்டும் அவ கழுத்துல கட்டிரு டா.” பெற்றவர்கள் சேர்ந்து தங்கள் இளையமகனிடம் கெஞ்சிக்கொண்டு நின்றதை எதேச்சையாக பூங்கோதை பார்க்க நேர்ந்திருந்தது.
அவள் உதடுகள் அருவருப்பாக வளைய, அந்த வீட்டின் இளைய மகனும் அதையேத் தான் செய்திருந்தான்.
“அதெப்படி, செத்துப்போனவனோட பிள்ளை அவ வயித்துல இருக்கு. எச்சத்தட்டுல சாப்பிட என்னால முடியாது.” தன் மறுப்பை ஆணித்தரமாக அவன் சொல்ல,
“ஒரு தாலியை மட்டும் அவ கழுத்துல கட்டி, நம்ம வீட்டோட கட்டிப்போட்டுட்டு உன் இஷ்டப்படி வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கோ டா.” மிகவும் தரம் தாழ்ந்த யோசனை சொல்லப்பட, அதிர்ந்து போனவள், அதற்கு மேல் எதையும் கேட்க பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
எனவே தகப்பனுக்கு முன்னர் அந்த நாடகம் அரங்கேற்றப்படும் போது அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை. பதிலுக்கு தகப்பன் சொன்ன சட்டதிட்டங்களுக்குள் விரும்பியே தன்னை நுழைத்துக் கொண்டாள்.
அதுவும், அம்மா மறுமணம் பற்றிப் பேசியிருக்க, இன்னமும் அதிகமாக அவற்றை இறுக்கி பிடித்துக் கொண்டாள். தன் காதலுக்கு செய்த துரோகத்துக்கு அவளாலான பரிகாரம். இப்படித்தான் அவளது புண்பட்ட மனது இத்தனை வருடங்களாக எண்ணிக் கொண்டது.
ஆனால் எல்லாவற்றையும், தான் முதன்முதலாக விரும்பிய இதயத்துக்கு சொந்தக்காரனின் பாதுகாப்பான வாழ்க்கைக்காக உதறிவிடவும் துணிந்துவிட்டாள்.
இப்போதோ திருமணத்தை தவிர்த்து வேறெதையும் யோசிப்பதற்கு அவளுடைய இதயத்துக்கு துணிவில்லாமல் போக, தலை விண்ணென்று வலியில் தெறிந்தது.
“நீ இங்கயா இருக்குற கோத? உங்க அம்மா உன்னைத் தேடுறாங்க.” லேசாக சாத்தியிருந்த அறைக் கதவை திறந்தபடி உள்ளே வந்த சபேசன், பூங்கோதையின் சுளித்த புருவங்களை விரல்களால் நீவி விட்டபடியே,
“என்னாச்சு கோத? தலை வலிக்குதா? சூடா காஃபி கொண்டுவரச் சொல்லட்டுமா? ” இதயத்தை வருடும் குரலில் கேட்டான்.
“இல்ல, வேண்டாம். தூங்கி எழும்புனா சரியாப் போயிடும்.” மெல்ல முணுமுணுத்தாள்.
“அப்போ, வா. தூங்கு.” சபேசன் அழைக்க, பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.
அந்த ஒற்றைப் பார்வையில் அவளுடைய மனதைப் படித்தவன், “நமக்கு பத்து வயசுல ஒரு பொண்ணு இருக்கா கோத, அதனால எதுக்கும் இப்போ அவசரமில்ல, புரிஞ்சுதா? தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்காத.” பெண்ணவளின் தலையை வருடி மென்மையான குரலில் சொன்னவன், ‘எதுக்கும்’ என்ற வார்த்தைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தான்.
ஒற்றைப் பார்வையிலேயே தன் மனதைப் புரிந்து கொண்டவனின் பதிலில் சட்டென்று கண்கள் கலங்கிப் போனது பூங்கோதைக்கு. பதிலுக்கு லேசாக தலையசைத்தவளிடமிருந்து நிம்மதி பெருமூச்சு ஒன்று வந்திருந்தது.
“வா, போலாம்.” சபேசன் மறுபடியும் அழைக்க, அதற்கு மேலும் யோசித்து அவனை சங்கடப்படுத்த விரும்பாமல் எழும்பினாள்.
“நீ இங்கயா இருக்குற கோத?” லக்ஷ்மியும் அங்கே வந்துசேர, புன்னகைத்தவள், “பாப்பா எங்க ம்மா?” என்றாள் தெளிந்த முகத்தோடு.
“தூங்கிட்டா, பாட்டி ரூம்ல படுக்க வச்சிருக்கேன். இன்னைக்கு எங்ககூடவே இருக்கட்டும், நீ மருமகனை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ.” லக்ஷ்மி சொல்ல,
“இல்ல ம்மா, ஐஸுவை எங்கூடவே வச்சிருக்குறேன்.” இத்தனை வருடங்களில் மகளின்றி அவளது இரவுகள் கழிந்ததே இல்லை. எனவே தாயின் வார்த்தைகளை வேகமாக மறுத்தவள், சபேசனை தயக்கமாகப் பார்த்தாள்.
“என்ன யோசிக்கிற கோத? நாம மூனு பேரும் ஒரே குடும்பம்னு ஐஸு பேபிக்கு புரிய வைக்குறது தான் இப்போ முக்கியம். அதுக்கு நம்மகூடத் தான் அவ இருக்கணும். பேபியைப் போய் தூக்கிட்டு வா.” சபேசனின் வார்த்தைகளில், சுவிட்ச் போட்டது போல பெண்ணவளின் முகம் பிரகாசமாகிப் போனது.
வேகநடையோடு பாட்டியின் அறைக்குச் சென்று மகளைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வந்தவளை, அறையின் வாசலிலேயே எதிர்கொண்டு குழந்தையை தன் தோளுக்கு சபேசன் மாற்றிக்கொள்ள, மனநிறைவோடு அவர்களை பார்த்திருந்தார் லக்ஷ்மி.
அதே வீட்டில் இன்னொரு அறையில் காதல் மனைவியை எதிர்பார்த்து உற்சாகமாக நடைபோட்டுக் கொண்டிருந்தான் ஜெகத்ரட்சகன். அக்காவின் வாழ்க்கை சீராகி இருக்க, அவன் உற்சாகத்தின் அளவு கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது.
அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் மெல்லிய அலங்காரத்தோடு அறைக்குள் வந்தாள் அனிதா. வந்தவள் வேகமாக கதவை தாழ் போட,
“ஆரம்பமே அதிரடியால்ல இருக்குது, அப்போ ஆட்டம் களைகட்டும்னு சொல்லு.” கேலியாக கண்சிமிட்டி மனைவியின் இடுப்பில் கைகோர்த்துக் கொண்டான் புது மாப்பிள்ளை.
“ம்ம்… நினைப்பு தான்… எவனும் கத்தியையும் அருவாளையும் தூக்கிகிட்டு எம்பின்னாடியே ரூமுக்குள்ள புகுந்துடுவானுங்களோ ங்குற பயத்துல தான் வேகமா கதவை பூட்டிக்கிட்டேன்.” நொடித்துக் கொண்டாள் அனிதா.
“ஹஹ…அப்போ நான் தான் ஏமாந்து போனேனா?” வெடித்து சிரித்தவன்,
“உண்மையிலேயே பயமா இருக்கா அனி?” கேலியை கை விட்டிருந்தவனாக, ஒற்றைவிரலால் மனைவியின் நாடியை உயர்த்தி தன் முகம் பார்க்க வைத்து கேட்டான்.
“ம்ம்… பயமெல்லாம் இல்ல, ஆனா ஒரு டென்ஷன் இருந்தது என்னவோ உண்மை. எப்பிடியெல்லாம் நம்ம கல்யாணம் நடக்கணும்னு கற்பனை பண்ணி வச்சிருந்தேன் தெரியுமா? கடைசியில எங்கூடப் பொறந்த இரண்டு பேரால நம்ம கல்யாணத்துக்கே வர முடியல.” ஆதங்கத்தில் பெருமூச்சு விட்டாள்.
ஆமாம்… தவிர்க்க முடியாத பயிற்சி வகுப்புகளும் தேர்வுகளும் இருக்கிறது என்று சொல்லி இந்துஜா, கௌரி இரண்டு பேராலும் திருமணத்திற்கு வர முடியவில்லை.
“நடக்காததை நினைச்சு பெருமூச்சு விடுறதை விட, நடந்ததை நினைச்சு சந்தோஷப்பட்டுக்கலாமே டார்லிங். அஞ்சே நாள்ல கல்யாணம் முடிஞ்சு இப்பிடி நின்னுட்டு இருப்போம்னு நீயோ நானோ நினைச்சு பாத்தோமா? இனிமே யாரைப்பத்தியும் எதைப்பத்தியும் கவலைப்படாம நாம எப்பவும் சேர்ந்தே இருக்கலாம், நினைக்கும் போதே ஒரு மாதிரி ஜிவ்வுன்னு இருக்குல்ல.” கேட்டபடியே மனைவியை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஜெகன்.
“ம்ம்… இருக்கு தான், ஆனா இப்பிடியே பயந்து பயந்து தான், நம்ம வாழ்க்கையை நாம வாழணுமா ஜெகன்?” பாதுகாப்பு என்ற பெயரில் காலையில் இருந்து நடந்தவை எல்லாம் அனிதாவை பேச வைத்திருக்க,
“இதைப்பத்தி இப்பவே நாம பேசியாகணுமா டியர்?” கிறக்கமாக கேட்டவன், அதற்கு மேல் அனிதாவை பேச அனுமதிக்காமல் அவள் வாயை தன் வாயால் மூடினான். அதன் பிறகான நிகழ்வுகளை இருவரின் இளமையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டது…