அத்தியாயம் 14
“நீங்க ரொம்ம்ப அழகா இருக்கீங்க ம்மா…” மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருந்த தாயின் மடியில் முழங்கைகளை ஊன்றியபடி, கண்களிரண்டும் மின்னச் சொன்னாள் குட்டிப்பெண் ஐஸ்வர்யா.
காலையிலிருந்து சலிக்காமல் இந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்த குட்டிப்பெண்ணின் கைகள், ஒவ்வொரு தடவை அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதும், தாயின் நீண்ட ஜடையைத் தடவி, அதில் அளவாக சூடியிருந்த பூவைத் தொட்டுப் பார்த்து, முகத்தை வருடி, பட்டுப்புடவையை நீவி விட்டு, காதுகளில் தொங்கிய ஜிமிக்கியை ஒற்றை விரலால் தட்டிவிட்டு, இப்படி ஏதாவது ஒரு செயலை பரவசத்தோடு செய்து கொண்டிருந்தது.
கல்லும் கூட கரைந்து போகும் அந்த சிறு பெண்ணின் செயலில், சுற்றியிருந்த மனித மனங்கள் உருகிப்போகாதா என்ன?
“நல்லகாலம், அடுத்தவங்களைப் பற்றி யோசிக்காம பூங்கோதைக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சு குடுத்த வல்லி, இல்லைன்னா அந்த சின்ன குட்டி ஏங்கிப் போயிருக்கும் போல?” வயதான பெண்மணி ஒருவர் தன்னருகே அமர்ந்திருந்த வல்லியிடம் தொண்டை கமற முணுமுணுத்தார்.
ஆமாம்… சபேசன், பூங்கோதையின் திருமணம் ஞானவல்லி அம்மாவின் குலதெய்வம் கோவிலில் வைத்து காலையில் முடிவடைந்திருந்தது. அதைத்தொடர்ந்து பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துவிட்டு ஞானவல்லியின் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
ஓரளவிற்கு சொந்த பந்தங்களுக்கு சொல்லித்தான் திருமணத்தை முடித்திருந்தார் ஞானவல்லி. உள்ளன்போடு ஒருசிலர் வந்திருக்க, என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களும் உண்டு.
அப்படியானவர்களின் மனங்கள் கூட, அந்த குழந்தையின் செயலில் கலங்கிப்போக, அந்த இடத்தில் பூங்கோதை சபேசன் திருமணத்தை மனதார வாழ்த்திய நெஞ்சங்கள் மட்டும் தான் இப்போது இருந்தன.
‘தன்னைக்கொண்டு தந்தையும் தமயனும் இன்னும் ஒருமுறை சபேசனின் வாழ்க்கையில் விளையாடிவிடக் கூடாது. என்ன நடந்தாலும் பரவாயில்லை, நான் கண்டிப்பாக அவரோடு நிற்க வேண்டும். இல்லையென்றால் அவரைப் பந்தாடிவிடுவார்கள்.’ முன் அனுபவம் கற்றுக் கொடுத்திருந்த பாடம், சபேசனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தந்தையிடம் தைரியமாக பூங்கோதையை சொல்ல வைத்திருந்தது.
ஆனால், அதை நோக்கிய நகர்தலில் தான் தயக்கம் பூங்கோதைக்கு. அதைவிட பத்து வயது மகள் இதைப் எப்படி புரிந்து கொள்வாளோ என்ற பயம் வேறு. அதைப் புரிந்து கொண்ட லக்ஷ்மியும் ஞானவல்லியும் மென்மையான வார்த்தைகளைக் கூறி அவளை அமைதிப்படுத்தியிருந்தார்கள்.
“ஒரே ஒரு வருஷம் வாழ்ந்த வாழ்க்கைக்காக பத்து வருஷம் தனியா நின்னாச்சு. உன்மேல வச்ச அன்புக்காக தனியா நிக்குற மனுஷன்கூட மீதி வாழ்க்கையை பகிர்ந்துக்கிறதுல தப்பே இல்ல.” மாற்றி மாற்றி இப்படிச் சொல்லித்தான் பூங்கோதையை சமாதானம் செய்திருந்தார்கள் இரண்டு பெண்களும்.
அத்தோடு குட்டிப்பெண் ஐஸ்வர்யாவிடமும் திருமண விஷயத்தைச் சொல்லி அவள் சம்மதத்தையும் வாங்கியிருந்தார்கள்.
“அன்னைக்கு ஹோட்டல்ல பாத்தோம்ல அம்மாவோட ஃப்ரெண்ட், அவரை அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுவோமாடா? கல்யாணம் செய்துகிட்டா உன் ஆசைப்படி அம்மா எப்பவும் கலர்கலரா புடவைக் கட்டுவா, நீளமா ஜடை போடுவா…” அந்த பிஞ்சு மனது, தன் அம்மாவை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஏங்கியதோ, அவற்றை முன்னிலைப்படுத்தியே கேட்டிருக்க, உற்சாகமாக தலையை அசைத்திருந்தாள்.
இப்போதோ மகளின் அளவில்லா சந்தோஷத்தைப் பார்த்த பூங்கோதைக்கு தன் முடிவு சரியானதே என்ற உறுதி தோன்ற,
“நீயும் தான் ரொம்ப அழகாயிருக்குற செல்லம். பாரு, அம்மாவுக்கும் உனக்கும் ஒரே கலர்ல ட்ரெஸ்.” மகளோடு மென்குரலில் உற்சாகமாக வார்த்தையாட முடிந்தது பூங்கோதையால்.
“இனிமே எப்போ ட்ரெஸ் எடுத்தாலும் நாம ரெண்டு பேரும் சேம் சேம் கலர்ல எடுக்கணும், ஓகேயா ம்மா.” டீல் பேசியது அந்த சின்ன சிட்டு.
“என்னையும் உங்க கூட்டணியில சேர்த்துப்பீங்களா பேபி?” அம்மாவும் மகளும் பேசுவதை புன்னகை முகமாக பார்த்திருந்த சபேசன் தான் கேட்டிருந்தான். பட்டு வேட்டி, சட்டை அணிந்து பூங்கோதை அருகே ஜோடியாக அமர்ந்திருந்தவனின் முகம், மனதுக்கு பிடித்தவளை கரம் பிடித்திருந்த மகிழ்ச்சியில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
“ஓகே அங்கிள்… நம்ம மூனு பேரும் இனிமே ஒரே கலர்ல ட்ரெஸ் எடுத்துக்கலாம்.” உற்சாகமாக வலது கையின் பெருவிரலை உயர்த்திக் காட்டிய ஐஸ்வர்யா,
“அச்சோ… உங்களை அப்பான்னு கூப்பிடணும்னு அம்மா சொல்லிக் குடுத்திருந்தாங்களே, மறந்துட்டேனே…” கண்களைச் சுருக்கி வெட்கத்தோடு சிரித்து வைத்தாள்.
“பரவாயில்ல பேபி… உனக்கு எப்படி கூப்பிட வருதோ அப்பிடியே கூப்பிடு.” பூங்கோதையின் முகத்தை புன்னகையோடு பார்த்த சபேசன், பிள்ளையின் கைகளிரண்டையும் மென்மையாக பிடித்து, இலகுவான குரலில் சொன்னான்.
பிறந்ததில் இருந்து அப்பா என்ற அடைமொழிக்கு புகைப்படத்தில் ஒரு உருவத்தைப் பார்த்து பழகியிருந்தவளுக்கு, சட்டென்று அந்த அழைப்பு சபேசனைப் பார்த்து வரவில்லை.
ஆனால், அந்த உறவுக்கான அன்பும் அரவணைப்பும் சபேசனிடமிருந்து கிடைக்கப்பெறும் போது, தானாகவே அப்பா என்ற அழைப்பும் வந்துவிடும்.
“மாப்பிள்ளையும் பொண்ணும் வந்தாச்சு, ஆரத்தியை ரெடிபண்ணுங்க.” உறவுக்கார பெண்மணி ஒருவர் சத்தமாகச் சொல்ல, அத்தனை பேரின் கவனமும் இப்போது வாசலில் குவிந்தது.
மாலையும் கழுத்துமாக ஜெகத்ரட்சகனும் அனிதாவும், வீட்டுக்கு முன்னால் வந்து நின்ற காரிலிருந்து புன்னகைமுகமாக இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆமாம்… சபேசன், பூங்கோதை திருமணத்தோடு, ஜெகத்ரட்சகன், அனிதா திருமணமும் இன்று காலையில் ஒரே முகூர்த்தத்தில் கோவிலில் வைத்து நடந்து முடிந்திருந்தது.
சபேசனும் பூங்கோதையும் கோவிலில் இருந்து பதிவாளர் அலுவலகம் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஜெகத்ரட்சகன், அனிதா ஜோடியை மணப்பெண்ணின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, இதோ இப்போது அழைத்துக்கொண்டு வருகிறார்கள், அவ்வளவு தான் வித்தியாசம்.
ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டுக்குள் அழைத்துக்கொள்ள, அவர்கள் பின்னோடு மணப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களும் வந்தார்கள்.
வீட்டுக்குள் வந்ததும் ஜெகத்ரட்சகன் சபேசனை கட்டிப்பிடித்துக்கொள்ள, “பாசமழையை அப்புறமா பொழிஞ்சிக்கலாம், இப்போ உன் பொண்டாட்டி கூட செய்ய வேண்டிய நடைமுறைகளை முடிச்சிடு.” பெரியம்மா முறையுள்ள பெண்மணி ஒருவர் ஜெகனை கேலி செய்ய, கலகலப்பானது வீடு.
அதன் பிறகு சடங்கு சம்பிரதாயங்கள் என்று நேரம் கழிய, எந்த பிரச்சினையும் இல்லாமல் திருமணங்கள் முடிந்ததில் எல்லோருக்கும் அப்பாடா என்ற உணர்வு தான்.
அதுவும் வீட்டுக்கு முன்னால் திருமணத்திற்காக போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த கமலகண்ணனுக்கு நிரம்பவே இருந்தது அந்த உணர்வு.
அவன்தானே ஜெகத்ரட்சகன் அனிதா திருமணமும் இன்று நடந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து நடத்தியும் காட்டியவன்.
ஆமாம்… ஐந்து நாட்களுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் கைதான அன்று மகளோடு வீட்டுக்கு திரும்பி வந்திருந்த திலகம், “இப்பிடி ஒரு ஏற்பாட்டை பண்ணிட்டு தான் எங்களை அங்க கூட்டிட்டு போயிருந்தியா நந்து?” என்று மகளிடம் கேட்டிருந்தார்.
என்னதான் மகனின் செயல்கள் பிடிக்கவில்லை என்றாலும், தனக்கு முன்னால் அவன் கைது செய்யப்படுவதை பார்த்ததும், முகம் வருத்தத்தில் சுருங்கிப் போயிருந்தது லக்ஷ்மிக்கு.
இத்தனை ஏற்பாடுகளை செய்துவிட்டு தான் தங்களோடு உறவாட வந்தார்களோ என்று அந்த அம்மா நினைத்துவிடக்கூடாதே என்ற எண்ணம் திலகத்துக்கு வந்திருக்க, ட்ரைவர் இருந்ததால் காரில் வைத்து அதை மகளிடம் கேட்க முயலாதவர், தன் சந்தேகத்தை வீட்டுக்கு வந்ததும் கேட்டிருந்தார்.
“இல்ல ம்மா, அப்பாவும் பிள்ளையும் அங்க வரலாம்னு எங்களுக்கு ஒரு கெஸ்ஸிங் இருந்தது. அதனால மப்டியில வீட்டு பக்கத்துல போலீஸ் நின்னுட்டு இருந்தாங்க. மற்றபடி நடந்தது எல்லாம் கோஇன்சிடென்ட்.” லேசாக தோள்களைக் குலுக்கியபடி சொன்னாள் நந்தினி.
வீட்டிலிருந்த கண்ணன் அவர்களுடைய உரையாடலில் என்னவென்று கேட்க, பாலகிருஷ்ணன் கைதான விஷயத்தை மருமகனிடம் சொன்ன திலகம்,
“நீ எதுக்கு அந்த இடத்துல அனிதாவைப் பற்றி அந்த ஆளுகிட்ட சொன்ன நந்து? தேவையில்லாத எதையோ சொரிஞ்சு விட்டுட்டு வந்துருக்கோம்னு மட்டும் எனக்கு தோணுது?” என்றார் கவலையாக.
இப்போதும் கண்ணன் என்னவென்று புருவத்தை உயர்த்த, நடந்தது அத்தனையும் ஒன்றுவிடாமல் மருமகனிடம் ஒப்பித்துவிட்டார் திலகம்.
”உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா நத்தினி? இப்போ எதுக்கு அவங்கிட்ட எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டு வந்திருக்க? ஏற்கனவே தகப்பனும் மகனும் கொலவெறியோடு சுத்திட்டு இருப்பானுங்க, இப்போ இதையும் சொல்லி ஏத்திவிட்டுருக்க, இப்பிடித்தான் அதிரடியா செய்யுறேன்னு எதையும் யோசிக்காம எல்லாத்தையும் செய்யுற நீ?” சமீபத்தில் அந்த மாவட்ட செயலாளர் வழக்கு விஷயத்தில் துறை ரீதியாகவே அவள் பிரச்சினையை சந்தித்திருக்க, கோபத்தில் சிடுசிடுத்தான் கண்ணன்.
“ஆமா… எனக்கு அறிவு இல்லதான். உங்ககிட்ட அதிகமா இருந்தா, ஒரு பத்து ரூபாய்க்கு தர்றீங்களா?” வெடுக்கென்று பதிலுக்கு கேட்டிருந்தாள் நந்தினி.
ஆமாம்… இவள் செய்தி சேனலுக்கு அனுப்பி வைத்திருந்த ஆடியோ, தொலைக்காட்சி, இணையம் என்று அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் தீயாக பரவி பரபரப்புக்குள்ளாக, நந்தினியின் மேலதிகாரி அவளை அழைத்து கண்டித்திருந்தார்.
“அந்த ஆளு லூசுத்தனமா பேசுனதை, கொஞ்சம்கூட யோசிக்காம எப்படி செய்தி சேனலுக்கு குடுப்பீங்க மிஸர்ஸ் நந்தினி? பப்ளிக் மத்தியில நீங்க ரொம்ப நேர்மையான ஆளுன்னு நிரூபிக்க பாக்குறீங்களா? இந்தமாதிரியான ஸ்டண்ட் அடிக்கிறது எல்லாத்தையும் இத்தோட விட்டுருங்க. இதுக்கு அப்புறமும் அதிகப் பிரசங்கித்தனமா எதுவும் செய்தா என்னோட நடவடிக்கையே வேறமாதிரி இருக்கும்.” அந்த ஆடியோ நந்தினியின் மதிப்பை மக்கள் மத்தியில் தாறுமாறாக உயர்த்தி இருக்க, தன்னுடைய துவேஷத்தை கண்டிப்பு என்ற பெயரில் நந்தினியின் மீது கொட்டியிருந்தார் அந்த மனிதர்.
நந்தினியைப் பொறுத்தவரை, அந்த மாவட்ட செயலாளர் மாதிரியான ஆட்களை வருங்காலத்தில் அவளை விட்டு தள்ளி நிறுத்த வேண்டும் என்றால், அவள் செய்தது சரிதான்.
அடுத்ததாக, ஒரு கட்சியின் பதவியை வைத்துக் கொண்டுதானே அந்த மனிதர் அத்தனை தூரம் துள்ளினார். அதை இல்லை என்று ஆக்கிவிட்டால்… இத்தனை தூரம் அந்த செய்தி பரபரப்புக்கு உள்ளான பிறகு, மக்கள் மத்தியில் தங்கள் கட்சியின் மதிப்பை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்றால், கட்சி அந்த நபரை பதவிநீக்கம் செய்தே ஆகவேண்டும். அதுவும் நடந்திருந்தது.
அதோடு, அந்த வழக்கும் கவனத்துக்குரியதாக மாறியிருந்தது.
அவ்வளவு தான்… எது நடக்க வேண்டும் என்று நினைத்து அந்த ஆடியோவை செய்திச் சேனலுக்கு நந்தினி அனுப்பியிருந்தாளோ, அத்தனையும் சிறப்பாகவே நடந்து முடிந்திருக்க, மேலதிகாரியின் கண்டிப்பை சட்டையில் ஒட்டிய தூசைப் போல தட்டிவிட்டிருந்தாள் நந்தினி.
அதை இப்போது கண்ணன் மறைமுகமாக சொல்லிக் காட்ட, “நான் எப்படி வேலை செய்யணும்னு நீங்க யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டாம்.” என்றாள் கண்டிப்பான குரலில்.
“உன் வேலையில யாரும் தலையிடல, அதை நீயே பாத்துக்கோ. அதே நேரம் வீட்டு விஷயத்துல நீ செய்யுற குளறுபடியை பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது.” என்ற கண்ணன்,
“இதுக்கு மேல அனிதா கல்யாணத்தை தள்ளிப்போட முடியாது. சபேசன் பூங்கோதை கல்யாணம் நடக்குற அன்னைக்கே இவங்க கல்யாணமும் நடந்தாகணும்.” என்றான் உறுதியான குரலில்.
“இன்னும் அஞ்சுநாள்ல கல்யாணமா? என்ன, விளையாடுறீங்களா த்தான்?” கோபமாக கேட்டாள் நந்தினி.
“விஷயத்தை, கூப்பிட்டு அவன் காதுல சொல்லுற மாதிரி சொல்லிட்டு வந்தாச்சு. இதுக்கு மேலயும் நாம மெதுவா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தா, அந்த வைரவமூர்த்தி அனிதாவை அடிச்சு தூக்கி தூரப்போட்டுட்டு போயிட்டே இருப்பார். பரவாயில்லயா உனக்கு?” வெடித்தான் கண்ணன்.
“ஆமா நந்து, கண்ணன் சொல்லுறது தான் சரி, எப்போ என்ன நடக்கும்னு பயந்துட்டே இருக்க முடியாது. இதுக்கு மேல சட்டுபுட்டுன்னு இரண்டு பேரோட கல்யாணத்தை முடிக்கிறது தான் புத்திசாலித்தனம்.” திலகமும் மருமகன் பக்கமே பேச,
“இதுக்கு உன்னைப் பாத்து பயந்துட்டோம்னு அந்த வைரவமூர்த்திக்கிட்ட டமாரம் அடிச்சே சொல்லலாம்.” அலுத்துக் கொண்டாலும் வேறுவழியிருக்கவில்லை நந்தினிக்கு.
எடுத்த முடிவை உடனடியாக ஜெகத்ரட்சகனிடம் கண்ணன் கொண்டு சேர்க்க, அவனும் முதலில் சம்மதித்தான் இல்லை.
“நானும் மாப்பிள்ளையா நின்னா, பாதுகாப்பு விஷயத்துல கோட்டை விட்டுறக்கூடாது கண்ணன், அது சரிவராது. அக்கா கல்யாணம் முடிஞ்சதும், சீக்கிரமாவே எங்க கல்யாணத்தையும் முடிச்சிடலாம்.” மென்மையாகவே தன்னுடைய மறுப்பைச் சொன்னான்.
“பாதுகாப்பு தானே, அதை நான் பாத்துக்குறேன். நீங்க கல்யாணத்துக்கு தயாராகுங்க.” இப்போது அவர்கள் கல்யாணம் நடக்க வேண்டிய அவசியத்தையும், அதன் சாதக பாதங்களையும் கண்ணன் விளக்க, புரிந்து கொண்ட ஜெகத்ரட்சகன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தான்.
சொல்லியது போலவே திருமணத்தின் மொத்த பாதுகாப்பையும் கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டான். அதோடு அனிதாவையும் ஜெகத்ரட்சகனையும் வைரவமூர்த்தி நெருங்கிவிட முடியாத அளவிற்கு சட்டப்படி அனைத்து விஷயங்களையும் பக்காவாக அவன் முடித்திருக்க, இதோ இரண்டு திருமணங்களும் நல்லமுறையில் சிறப்பாகவே நடந்து முடிந்திருந்தது.