எனவே சிலநாட்களுக்கு அந்த பேச்சை கிடப்பில் போட்டிருந்தவர்கள், இன்று சபேசனையும் பூங்கோதையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தார்கள். அதற்காகத்தான் இன்று துணிஎடுக்க என்று சொல்லி கிளம்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி திடீரென்று தம்பி அழைத்துச் செல்லுவது வழக்கம் தான் என்பதால் பூங்கோதையும் சந்தேகம் எதுவுமின்றி மகளோடு கிளம்பி சென்று கொண்டிருக்கிறாள்.
போத்தீஸின் குழந்தைகள் பிரிவில் நின்று கொண்டிருந்தார்கள் எல்லோரும். மகளுக்கான உடையை ஆசையாக பூங்கோதை தேர்ந்தெடுக்க ஆரம்பிக்கவும்,
“ம்மா… நீங்க கலர்கலரா சாரி எடுங்க, அப்போ தான் நானும் கலர்புல்லா ட்ரெஸ் எடுப்பேன், இல்லைன்னா எனக்கும் வொயிட் கலர்லயே ட்ரெஸ் எடுக்கலாம்.” ஐஸ்வர்யா சொல்லிவிட, பூங்கோதையோடு சேர்ந்து எல்லோரும் அதிர்ந்து போய் பார்த்தார்கள் அந்த சின்னப் பெண்ணை.
இப்போது என்றில்லை, விபரம் தெரிந்த நாள்முதலாகவே அந்த சின்னப்பெண் தாயை கலர்கலராக உடுத்தச்சொல்லி ஆசையாக சொல்லுகிறது தான். தாயின் நீண்ட கூந்தலை ஜடை பின்னி பூ வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசைக் கூட அந்த சின்ன இதயத்துக்கு உண்டு.
ஆனால் பூங்கோதை தான் மகளின் ஆசைக்கு அசைந்து கொடுப்பதே இல்லை. அதனால் அதிரடியாக இப்படி சொல்லிவிட, ஆடித்தான் போனது அந்த தாயின் உள்ளம்.
இவ்வளவு ஏன்? லக்ஷ்மி கூட மகளுக்காக பார்த்து ஆடம்பரமாக உடுத்த மாட்டார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தலையில் பூ பெயருக்கு சூடிக் கொள்வாரே தவிர, தலை நிறைய வைத்துக் கொள்வது கிடையாது.
இப்போது மகளும் இப்படி சொல்லிவிட நிலைகுலைந்து போனாள் பூங்கோதை.
“ப்ச்ச்… சின்னப்பொண்ணு, அவ ஆசையை சொல்லுறா, அவளுக்காக வேணும் எடுத்துக்கோ, உடுக்குறதைப் பத்தி பிறகு பாத்துக்கலாம்.” பாட்டியும் தாயும் பூங்கோதையைத் தேற்ற, வேறு வழியில்லாமல் தனக்காக என்று மகளிடம் சொல்லிக்கொண்டு பூங்கோதை கலர் புடவை எடுக்க ஆரம்பிக்க, ஆர்பாட்டமாக அம்மாவுக்கு உதவ ஆரம்பித்தது அந்த சின்ன சிட்டு.
அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு உணர்ச்சி வேகத்தில் கண்கள் நிறைந்து போனது. ஒருவருக்கொருவர் அதை மறைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாமலேயே கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டவர்கள், உற்சாகமாக பூங்கோதைக்கு புடவை தேர்வு செய்ய தொடங்கிவிட்டார்கள்.
மனம் நெகிழ அவர்களோடு நின்றிருந்த ஜெகன் கண்களில் அடுத்தாற் போல நின்றிருந்த அனிதா விழ, “அனி…” என்று உற்சாகமாக அழைத்து விட்டான்.
அடுத்த வாரம் இளைய தங்கை கௌரிக்கு பிறந்தநாள். அவளுக்கு ஒரு புடவை எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என்றுதான் அங்கே வந்திருந்தாள் அனிதா.
எதிர்பாராமல் ஜெகனின் சத்தம் கேட்கவும், அனிதா திரும்பி பார்க்க, இங்கே வா என்று கையசைத்து அழைத்தான். அவனோடு நிற்பவர்களை கவனிக்காமல் உற்சாகமாக அவன் அருகே வந்தவள், உற்சாக மிகுதியில் அவன் கையோடு தன் கையை கோர்த்தபடி,
“இங்க எங்க ஜெகன் வந்தீங்க? அதுவும் லேடீஸ் செக்ஷன்ல நிக்குறீங்க?” என்று கேட்க,
“அம்மா, அக்கா, பாட்டி கூட வந்தேன்.” அலட்டிக்கொள்ளாமல் சொன்னான்.
ஜெகன் ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைத்ததும் அல்லாமல் தங்களைச் சொல்லவும், யாரடா அது என்பதுபோல ஒன்றுபோல திரும்பிப் பார்த்த பெண்களின் கண்களில் ஜெகத்ரட்சகனின் கையோடு கை கோர்த்தபடி நின்றிருந்த அனிதா விழ, கேள்வியாக ஜெகனின் முகத்தைப் பார்த்தார்கள்.
“அனிதா, என்னோட வருங்காலம், நம்ம ஸ்கூல்ல தான் வொர்க் பண்ணுறாப்ல.” ஜெகன் சின்னதாக அறிமுகம் செய்ய, பதறியபடி அவன் கையோடு கோர்த்திருந்த தன் கையை விலகிக்கொண்ட அனிதா, சட்டென்று பாட்டியின் காலைத் தொட்டு வணங்கியும் கொண்டாள்.
“நல்லா இரும்மா… பொண்ணு யாருடா? உங்க அப்பா பிரச்சினை பண்ணாம கல்யாணத்துக்கு சம்மதிப்பாரா? இல்ல அவரை எதுத்து தான் கல்யாணம் பண்ணிக்கணுமா?” கேலி போலவே ஞானவல்லி சிறுகுரலில் விபரம் கேட்க, உதட்டைப் பிதுக்கினான் பேரன்.
“சரிதான் போ… விஷயம் தெரிஞ்சா அந்த மனுஷன் தீயா வேலை பாப்பாரே…” என்றார் கேலியாக.
“ம்மா… எல்லாத்தையும் இங்கயே பேசணுமா?” அதற்கு மேல் தாயை பேசவிடாமல் இடைவெட்டிய லக்ஷ்மி,
“அக்கா விஷயத்துல உங்க அப்பா நடந்துகிட்டதை நினைக்கும் போதே ஈரக்குலை நடுங்குது. நீயும் இப்பிடி… பயமா இருக்கு ஜெகா.” மெதுவாக முணுமுணுத்தார்.
“நம்ம பயம் தான் அவரோட பலம், நாம தைரியமா நின்னா அவரால ஒன்னும் செய்ய முடியாது. அதுவும் இல்லாம அனியோட அக்கா நம்ம திருநெல்வேலியோட எஸ்பி, அப்பிடி ஈஸியா எல்லாம் எதுவும் செய்துட முடியாது.” தாயை சமாதானப்படுத்த ஜெகன் சொல்ல,
“ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு சந்தோஷம் ஆகாது பாட்டி ம்மா, இதைப் பத்தி அப்புறமா நாம பேசலாம், இப்போ வந்த வேலையை பாருங்க.” ஜெகன் சொல்ல, அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டவர்கள் அனிதாவையும் தங்களோடே வைத்துக் கொண்டார்கள்.
எல்லோருக்கும் துணி எடுத்து முடிக்கும்போது நண்பகல் கடந்து விட்டது. அவ்வளவு நேரத்துக்குள் அத்தை என்று அழைத்து ஐஸ்வர்யா அனிதாவோடு ஒட்டிக்கொண்டாள். அனிதாவுக்கும் இரண்டு புடவைகள் அவள் தயக்கத்தையும் மீறி எடுத்து கொடுத்திருந்தார் லக்ஷ்மி.
அனிதாவையும் தங்களோடு அழைத்துக்கொண்டு சாப்பிடுவதற்காக உணவகத்துக்கு வந்திருந்தார்கள். வழக்கமாக ஜெகன் குடும்பத்தை அழைத்து வரும் இடம் தான். அங்கே குடும்பமாக அமர்ந்து உணவு உண்ண தனித்தனி அறைகள் இருக்கும். அப்படி ஒரு அறைக்குள் நுழைந்து நிறைய நாற்காலிகள் சூழக்கிடந்த மேஜையை நோக்கி ஜெகன் சென்றான்.
“ஜெகா, அங்க யாரோ உக்காந்து இருக்காங்க பாரு, பக்கத்து டேபிள்ல உக்காரலாம்.” தம்பியின் கையைப் பிடித்து நிறுத்திய பூங்கோதையின் கண்கள் அந்த மேஜையில் அமர்ந்திருந்த சபேசனை அடையாளம் கண்டுகொள்ள,
“அப்போ, இதுக்காகத் தான் இன்னைக்கு போத்தீஸ் விசிட், இல்ல…” என்று தம்பியின் முகத்தைப் பார்த்து கேட்டாள்.
அந்த டேபிளில் இவர்களுக்கு முன்னால் வந்து அமர்ந்திருந்த சபேசன் எழும்பி பூங்கோதையின் அம்மாவுக்கும் பாட்டிக்கும் பொதுவாக வணக்கம் வைக்க, பெண்கள் இருவரின் பார்வையும் ஆர்வமாக அவனை பார்வையிட்டது.
“பரவாயில்ல… நீங்க இருந்து பேசிட்டு வாங்க, நானும் எம்புள்ளயும் கிளம்புறோம்.” குரல் நடுங்க கோதை சொல்ல,
“க்கா… இந்த பத்து வருஷத்துல ஒருநாள் கூட நீ இவரைப் பாத்து பேசணும்னு நினைச்சதே இல்லையா? உனக்கான சந்தர்ப்பம் இப்போ அமைஞ்சிருக்கு, பேசு க்கா, நாங்க பக்கத்து டேபிள்ல தான் உக்காந்திருப்போம்.” தமக்கையின் கைகள் இரண்டையும் ஆதரவாக பற்றிக்கொண்ட ஜெகன், மென்மையாகக் கூற, என்ன நினைத்தாளோ தெரியாதோ சபேசனுக்கு எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.
மற்றவர்கள் அடுத்த டேபிளில் அமர்ந்து கொள்ள, “அது யாரு? அம்மா மட்டும் ஏன் அவங்க கூட உக்காந்து இருக்காங்க?” என்ற கேள்வி வந்தது பூங்கோதையின் மகளிடமிருந்து.
“ரெண்டு பேரும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ், ரொம்ப வருஷத்துக்கு பிறகு இப்போ தான் மீட் பண்ணுறாங்க. அதான் தொந்தரவு இல்லாம அவங்க பேசிக்கட்டும்னு நாம இங்க உக்காந்து இருக்கோம். இப்போ நாம என்ன சாப்பிடலாம்?” என்றான் ஜெகன்.
மாமனின் பதிலில் சமாதானமான ஐஸ்வர்யா வேறெதுவும் கேட்டு தொந்தரவு செய்யாமல் அவர்களோடு இருந்து கொண்டாள்.
சபேசனுக்கு முன்னால் அமர்ந்த பூங்கோதை எதுவும் பேச முயற்சி செய்யாமல் உள்ளங்கையையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளத்தில் ஆழிப் பேரலையின் பேரிரைச்சல்.
தம்பி இப்போது கேட்டதுபோல பத்து வருடங்களுக்கு முன்னால், அதாவது தன்னுடைய கல்யாணத்துக்கு முன்னர், ஒருமுறையாவது சபேசன் குரலைக் கேட்டுவிட மாட்டோமா என்று தவித்திருக்கிறாள் தான்.
காரணம், இந்த உலகத்தில் அவன் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொள்ளத்தான். ஆனால் அது நடக்கவே இல்லை.
“அவன் உயிரோடு இருக்கணும்னா நீ கல்யாணம் பண்ணிக்கணும்.” இப்படி மிரட்டப்பட்டவளுக்கு அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்ற உறுதியை மட்டும் அவளுடைய தகப்பன் கொடுக்கவே இல்லை.
“நான் தான் என் வாழ்க்கையிலிருந்து அவரை விலக்கி வைத்து விட்டேனே. அதனால் கண்டிப்பாக உயிரோடு தான் இருப்பார்.” இந்த நம்பிக்கையை பிடித்துக்கொண்டு இத்தனை வருடங்களை ஓட்டிவிட்டவளுக்கு, அன்று தன் வீட்டில் நிஜமாகவே சபேசனைக் காணவும், தன் கண்களையே நம்ப முடியவில்லை.
‘இது உண்மைதானா?’ குழப்பத்தோடு நின்றிருந்தவளை, தகப்பனின் குரல் அதட்ட, நொடியில் தன்னை சுதாரித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று மறைந்திருந்தாள்.
தன் பத்து வருட தவம் பலித்தது போல அவனை உயிரோடு கண்டிருந்த சந்தோஷம் எல்லாம், இதுவரையிலும் சபேசன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தம்பி சொன்ன தகவலில் சுக்குநூறாக உடைந்து போயிருந்தது.
எதற்காக என்று இன்னொருவர் வந்து காரணம் சொல்லத் தேவையே இல்லையே. பெண் மனம் ஊமையாக அழுதது, மனதுக்குள் அவனோடு சண்டை போட்டது. ஆனாலும் தம்பி சொன்ன முடிவுக்கு மட்டும் உடன்பட மறுத்தது.
இருவரும் நேசம் கொண்டோம். ஆனால் நான் மட்டும் அந்த நேசத்திலிருந்து விலகி நீண்ட தூரம் சென்றுவிட, அவர் மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
‘இல்லை, கூடாது… அவரையும் திருமணம் செய்துகொள்ள சொல்ல வேண்டும்.’ முடிவெடுத்து அவன் முன்னே அமர்ந்தவள், சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, “எப்பிடி இருக்கீங்க சபேசன்?” என்றாள் மெதுவாக.
“உன்னை இந்த நிலமையில் பாத்தபிறகு நான் எப்படி நல்லா இருக்கேன்னு சொல்ல முடியும் கோதை?” கலங்கிய குரலில் வந்தது பதில்.
“நீங்க நினைக்குற மாதிரி இல்ல, எனக்கே எனக்காக என்னோட பொண்ணு இருக்கா, நான் சந்தோஷமா தான் இருக்குறேன். நீங்க கல்யாணம் செய்துகிட்டா இன்னும் சந்தோஷம் எனக்கு, செய்வீங்களா?” கண்கள் மின்ன ஆர்வமாக கேட்டாள்.
“உங்க ஆசையைச் சொல்ல, நான் இப்போ செல்வி பூங்கோதை இல்ல, திருமதி பூங்கோதை. போகாத ஊருக்கு வழியைத் தேடாம, சீக்கிரமா ஒரு கல்யாணத்தை பண்ணிகிட்டீங்கன்னா, என்னோட குற்ற உணர்ச்சியில இருந்து நான் வெளிய வந்துருவேன். ப்ளீஸ்…” கெஞ்சலாக கேட்க, அவளை அடிபட்ட பார்வை பார்த்தான் சபேசன்.
“ப்ளீஸ் சபேசன், கொஞ்சம் கொஞ்சமா இந்த குற்ற உணர்ச்சி என்னைத் தின்னுட்டு இருக்குது. அதுல இருந்து எனக்கு விடுதலை தாங்க.” இரண்டு கரங்களையும் கூப்பி இறைஞ்சலாக அவள் கேட்ட நேரம்,
“பூங்கோத… இங்க என்ன நடக்குது? இது… அந்த சபேசன் தானே? இவனைப் பாக்கத்தான் குடும்பமா கிளம்பி வந்தீங்களா? அந்த ராஸ்கல் ஜெகனை எங்க?” ருத்ரமூர்த்தியாக வந்து நின்றான் பாலகிருஷ்ணன். உடன் அவன் மனைவியும் பிள்ளைகளும் நின்றிருந்தார்கள்…