அத்தியாயம் 11

“நான் ஜெகத்ரட்சகன் பேசுறேன்.” என்ற குரல் கேட்டதுமே, “எதற்காக இப்போது என்னோடு பேசவேண்டும்? ஒருவேளை தங்களுடைய காதலைப் பற்றியோ, இல்லை கல்யாணத்தைப் பற்றியோ பேச்சிருக்குமோ?’ என்ற எண்ணம் தான் வந்தது நந்தினிக்கு.

ஆனால் அந்த எண்ணம் அதிருப்தியாக ஒரு உதட்டுச்சுழிப்பையே கொண்டு வந்திருந்தது நந்தினியிடம்.

வேறென்ன, இத்தனை சின்னவயதில் அக்கா வாழ்க்கையை தொலைத்து விட்டு வீட்டிலிருக்கும் போது, அவளைப் பற்றி சிந்திக்காமல் தன்னுடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்கும் அந்த ஆண் மீது என்ன மரியாதை வந்துவிடப் போகிறது நந்தினிக்கு?

ஆனால் எதையும் காட்டிக்கொள்ளாமல், “என்ன விஷயம்? சொல்லுங்க.” என்றாள் அமைதியாக.

“உங்க கூட பேசணும்னு அனிதாகிட்ட நம்பர் கேட்டேன், அக்கா வீட்டுக்கு வந்தபிறகு பேசுங்கன்னு சொல்லி நம்பர் குடுத்தா, வீட்டுக்கு வந்திட்டீங்க தானே? நாம இப்போ பேசலாமா?” பேசுவதற்கு அனுமதி கேட்டு நின்றான் ஜெகன்.

“ம்ம்… சொல்லுங்க.”

“இல்ல…என் அக்காவோட லைஃப் பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” ஜெகத்ரட்சகன் வாயிலிருந்து அக்கா என்ற வார்த்தை வந்ததுமே உடம்பில் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக்கொண்டது நந்தினிக்கு. இத்தனை நேரமும் இருந்த மனநிலையை கைவிட்டவளாக படுத்திருந்தவள் நன்றாக எழும்பி அமர்ந்து கொண்டாள்.

“அக்கா வாழ்க்கையை பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியுமோ எனக்கு தெரியாது? உங்ககூட வேலை பாக்குற மிஸ்டர் சபேசனை அக்கா வாழ்க்கையில இருந்து வலுக்கட்டாயமாக விலக்கிட்டு தான் அக்காவுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க அப்பா. ஆனா அக்கா வாழ்க்கை இப்போ என்ன நிலைமையில இருக்குங்குறதை அன்னைக்கு நீங்க நேர்ல பாத்தப்பவே புரிஞ்சிருப்பீங்க…”

சின்ன தயக்கத்தோடு பேசத் தொடங்கியிருந்தான் ஜெகத்ரட்சகன். ஏற்கனவே சபேசன் மூலமாக தெரிய வந்திருந்த விஷயம் தான் என்றாலும், ஜெகனுடைய பேச்சில் தலையிடாமல் அமைதியாக கேட்டுக் கொள்ள ஆரம்பித்தாள் நந்தினி.

“அப்போ எனக்கு சின்ன வயசு, அக்காவோட காதல் விஷயம் பெருசா எதுவும் தெரியாது. ம்ஹும்… தெரிஞ்சிருந்தாலும் என்னால எதுவும் செய்திருக்க முடியாது ங்குறது வேற விஷயம். உண்மையைச் சொன்னா, மிஸ்டர் சபேசனை நான் பார்த்தது கூட கிடையாது. அம்மா தான் அவரை உங்ககூட வந்தப்போ பாத்துட்டு எங்கிட்ட சொன்னாங்க. அப்புறம் அவரைப்பற்றி விசாரிச்சா இப்போ வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லைங்குற தகவல் கிடைச்சது. ஒருவேளை அவரோட காத்திருப்பு அக்காவுக்கானதா இருந்தா, நாம ஏன் இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்க முயற்சி செய்யக் கூடாதுன்னு எனக்குள்ள கேள்வி ஓடிக்கிட்டே இருக்குது.”

அக்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஜெகனின் வார்த்தைகளில், நந்தினியின் மனதில் அவன் மீதான மரியாதை கிடுகிடுவென உயர்ந்து உச்சாணிக் கொம்பில் போய் அமர்ந்து கொண்டது. கூடவே, இத்தனை நாட்களாக ஜெகன் மீது வராத நம்பிக்கை ஒன்றும் அவள் மனதில் ஜம்மென்று வந்து உட்கார்ந்தும் கொண்டது.

“இந்த விஷயத்துல எனக்கு உங்களோட உதவி வேணும் மேம். மிஸ்டர் சபேசன் மனசுல என்ன இருக்குதுன்னு நீங்க எனக்கு கேட்டு சொல்ல முடியுமா? நானே கேட்கலாம் தான், ஆனா விஷயம் இப்போதைக்கு அப்பா வரைக்கும் போகவேண்டாம்னு நினைக்கிறேன். உங்களால இந்த விஷயத்துல ஹெல்ப் பண்ண முடியுமா?” தொடங்கிய விஷயத்தை சரசரவென பேசி முடித்த அந்த இளைஞனின் வார்த்தைகளில் தான் சோகம், கோபம், எதிர்பார்ப்பு என்று எத்தனை பாவனைகள்!

அத்தனையையும் உள்வாங்கியபடி நந்தினி அமைதியாக எதிர்முனையில் அமர்ந்திருக்க, “மேம்… லைன்ல இருக்கீங்களா?” என்று கேட்டுக் கொண்டான் ஜெகன்.

  “ம்ம்… கேட்டுட்டு தான் இருக்குறேன். நான் கூட இன்னைக்கு தான் சபேசன் கிட்ட இந்த கல்யாணத்தை பத்தி பேசினேன். உங்க அக்கா சம்மதம் மட்டும் கிடைச்சா போதும்னு சொன்னார்.” அதற்கு மேலும் அமைதி காக்க விரும்பாமல் வாய் திறந்திருந்தாள் நந்தினி.

“எப்பிடி மேடம் உங்களுக்கு அவங்க விஷயம் தெரிஞ்சது? அவரே உங்ககிட்ட சொன்னாரா?” பரபரப்பாக கேட்டான் ஜெகன்.

“உங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கு, சபேசனைக் கண்டதும் உங்க அப்பா, அண்ணா இரண்டு பேர்கிட்டயும் சின்ன தடுமாற்றம். எனக்கு அது வித்தியாசமா பட்டது. நான் சபேசன் கிட்ட கேட்டேன். அப்போதான் விஷயத்தை எங்கிட்ட சொன்னார்…” என்றவள் இன்று சபேசனுக்கும் தனக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தைகளை எல்லாம் தயக்கமின்றி ஜெகனிடம் பகிர்ந்து கொள்ள, சிறிது நேரத்திலேயே இருவருக்குள்ளும் சகஜநிலைமை வந்திருந்தது.

“நீங்க மொதல்ல இந்த விஷயத்தைப் பற்றி உங்க அக்கா கிட்ட பேசுங்க ஜெகன், அப்புறமா இரண்டு பேரையும் மீட் பண்ண வைக்கலாம். இரண்டு பேரும் நேர்ல பாத்துப்பேசி ஒரு முடிவுக்கு வந்தப்பிறகு, அடுத்து என்ன செய்யலாம்னு நாம முடிவெடுக்கலாம்.” உற்சாகமாக திட்டமிட ஆரம்பித்தாள் நந்தினி.

“சரி மேம், நீங்க சொன்ன மாதிரியே செய்துடலாம்.” நந்தினியை ஒட்டியே பேசினான் ஜெகன்.

“அப்புறம், கல்யாணம்… அதை எப்படி நடத்துவீங்க? ஏதாவது ஐடியா வச்சிருக்கீங்களா?” வைரவமூர்த்திக்கு விஷயம் தெரியவந்தால் இந்த கல்யாணம் நடப்பது அத்தனை எளிதல்ல என்பதால் இப்படி கேட்டிருந்தாள் நந்தினி.

“இரண்டு பேரோட சம்மதம் கிடைக்குற வரைக்கும் தான் அப்பாவுக்கு விஷயம் தெரிய வேண்டாம்னு நினைக்கிறேனேயொழிய, கண்டிப்பா எங்க அப்பாவுக்கு ஒளிச்சு மறைச்சு கல்யாணத்தை செய்யமாட்டேன் மேடம். அவருக்கு சொல்லிட்டு தான் செய்வேன்.” தைரியமாக சொன்னான்.

ஜெகத்ரட்சகன் மட்டும் இப்போது நந்தினிக்கு அருகில் இருந்திருந்தால் சபாஷ் என்று சொல்லி அவன் முதுகிலேயே தட்டியிருப்பாளோ என்னவோ? அவனுடைய தைரியம் அத்துணை பிடித்திருந்தது அவளுக்கு.

 “வெல் செட் ஜெகன், இந்த முடிவு அக்கா கல்யாணத்துக்கு மட்டும் தானா? உங்க கல்யாணத்தைப் பற்றி என்ன யோசிச்சு வச்சிருக்கீங்க?” கேட்கவேண்டும் என்று திட்டமிட்டெல்லாம் கேட்கவில்லை நந்தினி. ஆனால் ஜெகன் மீது வந்திருந்த நம்பிக்கையில் தானாகவே வந்திருந்தது அந்த கேள்வி.

“மொதல்ல அக்கா கல்யாணத்தை முடிச்சு அவங்களை சேஃபா செட்டில் பண்ணனும் மேம், அப்புறம் தான் எங்க கல்யாணம். ஆனா அதையும் நான் அப்பாவுக்கு தெரியாம செய்யப் போறது இல்ல, கண்டிப்பா அவருக்கு சொல்லிட்டு தான் செய்வேன்.” என்றான் உறுதியான குரலில்.

அவன் குரலே சொன்னதை செய்து முடிப்பேன் என்று கட்டியம் கூற, திருப்தியாக உணர்ந்தாள் நந்தினி.

ஆரம்பத்தில் ஜெகனோடான தங்கையின் காதலில் ஒரு பயமும் அதிருப்தியும் இருந்திருக்கிறது தான் நந்தினிக்கு. ஜெகன் சேற்றில் முளைத்த செந்தாமரை என்பது தெரியவந்த பிறகு, அந்த உணர்வுகள் மறைந்து கொஞ்சம் தைரியம் வந்திருந்தது. இப்போது ஜெகனின் பேச்சில் தைரியம் இருமடங்காகி இருந்தது என்னவோ நிஜம்.

மேலும் கொஞ்சநேரம் திருமணத்தைப் பற்றி பேசி முடித்துவிட்டு இருவருமே அலைபேசியின் இணைப்பை துண்டிருத்திருந்தார்கள். பேச்சின் முடிவில் தன்னை அண்ணி என்று ஜெகத்ரட்சகனை அழைக்கச் சொல்லியிருந்தாள் நந்தினி.

எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கமலகண்ணனிடம் ஆச்சர்யம். அதுவும் ஜெகத்ரட்சகனிடம் ஏதோ ஒன்று மனைவிக்கு ஒப்பவில்லை என்பதுவரை புரிந்து வைத்திருந்தவனுக்கு, மனைவியின் இந்த திடீர் மாற்றத்தில் மந்தகாசமாக அவளைப் பார்த்து சிரித்தும் வைத்தான்.

அந்த சிரிப்பு தன்னை அப்பட்டமாக கேலி செய்யவும், “இப்போ எதுக்கு இந்த சிரிப்பு த்தான்?” என்றாள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு.

“இல்ல, கல்யாணமே பண்ணமாட்டேன்னு சொன்ன நீ, இப்போ அடுத்தவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்குற அளவுக்கு முன்னேறி இருக்குறியே… இது நீதானான்னு ஆச்சரியமா இருக்கு? அதான் என்னை அறியாமல் சிரிப்பு வந்திடிச்சி.” தன் உள்ளத்தை மறைக்காமல் சொன்னான்.

“உண்மையாவே, இது நான் தானான்னு எனக்கே ஆச்சர்யமாத் தான் இருக்கு த்தான்.” மெல்லிய வெட்கத்தோடு அழகாகத் தோள்களைக் குலுக்கிச் சிரித்தவள், சபேசன் பூங்கோதை காதல் கதையை சுருக்கமாக கணவனிடம் சொல்லி முடித்தாள்.

ஜெகத்ரட்சகனே இறங்கி வந்து அக்காவின் திருமணத்தை சபேசனோடு திட்டமிடுகிறான் என்றால், இப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று யூகித்திருந்தான் கண்ணன். ஆனால் வைரவமூர்த்தியை தாண்டி இந்த திருமணம் எப்படி சாத்தியம் என்ற கேள்வியே அவனுக்குள்ளும்.

“நான்கூட ஜெகனைப் பற்றி என்னவோ நினைச்சேன், ஆனா ஆளு பரவாயில்ல த்தான், நல்ல தைரியம் தான். அக்கா கல்யாணத்தை அப்பாவுக்கு தெரியாம முடிக்கப்போறதில்லன்னு எவ்வளவு உறுதியா சொல்லுறார் தெரியுமா?” என்றாள் ஜெகனை சிலாகித்து.

“இதுக்கு பெயர் தைரியம் இல்ல, அசட்டு தைரியம். கல்யாணத்தை காதும் காதும் வச்சது போல முடிச்சிட்டு, அந்த வைரவமூர்த்தியால பிரச்சினை வராத அளவுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்திக்கிறது தான் புத்திசாலித்தனம்.” பளிச்சென்று பதில் வந்திருந்தது கண்ணனிடமிருந்து.

“ம்ம்… கண்டிப்பா சட்டப் பாதுகாப்பு ரொம்ப அவசியம் தான். ஆனா காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிக்கணும்னு சொன்னீங்களே, அதுல எனக்கு உடன்பாடு கிடையாது. அனிதா கல்யாணத்தை ஜாம்ஜாம்னு ஊர் அறிய நடத்துறோம் நாம.” என்றாள் அவனையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு.

 “ஒரு வேகத்துல நீ இப்பிடி பேசலாம் நந்து. ஆனா நல்லா யோசிச்சு பாத்தா இது எந்த அளவுக்கு சாத்தியங்குறது உனக்கே புரியும்.” நிதர்சனத்தை அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

“சாத்தியம் இல்ல, சாத்தியம் இல்லன்னு சொல்லி, அந்த ஆளைக்கண்டு ஓடி ஒளியச் சொல்லுறீங்களா நீங்க?” சட்டென்று கோபம் வந்திருந்தது நந்தினிக்கு.

“அனிதா விஷயம் தெரிய வந்த அன்னைக்கு நீ பதட்டப்பட்டதே அந்த ஆளை நினைச்சு தானே? எங்க, இல்லன்னு சொல்லு பாக்கலாம்?” மனைவியின் அன்றைய பதட்டத்தை கண்ணன் சுட்டிக்காட்டிப் பேச, அதை விரும்பாத நந்தினி,

“ம்ப்ச்… இன்னைக்கு என்ன ஆச்சு அத்தான் உங்களுக்கு? நான் எது செய்தாலும், பேசினாலும் முட்டுக்கட்டை போட்டுட்டே இருக்குறீங்க?” அலுத்துக் கொண்டாள்.

“தன்னோட கையில் வானளாவிய அதிகாரம் இருக்குறது போல நினைக்கிற என் மனைவியை, நானும் அநாவசியமா ஏத்தி விடாம, அவளை நிதானமா யோசிக்க வைக்க முயற்சி செய்யுறேன்.” என்றான் அமைதியாகவே.

“அப்போ யுனிபாஃர்ம் போட்டுருக்குற தைரியத்துல, தான்தோன்றித் தனமா என்னோட முடிவுகளை எடுக்குறேன்னு சொல்லுறீங்களா நீங்க?”

“அப்படி சொல்ல வரல, ஒரு முடிவை எடுக்குறதுக்கு முன்னாடி அதனால வர்ற எதிர்விளைவுகளையும் யோசிக்கணும்னு சொல்லுறேன்.” சளைக்காமல் பேசினான்.

“இப்போ நான் ஒன்னு சொல்லட்டுமா த்தான்.” முஸ்தீபோடு நந்தினி ஆரம்பிக்க, சொல்லு என்பது போல மனைவியின் முகம் பார்த்தான்.

“நான் புதுசா எதுவும் சொல்லப் போறது இல்ல, நீங்க சொன்ன அதே பழைய டயலாக் தான், என்னோட வேலை விஷயத்துல நீங்க தலையிடாதீங்க, அதை நான் பாத்துக்கிறேன்.” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

முகத்திலடித்தாற்போன்ற மனைவியின் பேச்சில் முகத்தைச் சுழித்த கண்ணன், “நான் உன்னோட வேலையில தலையிடல, இப்போ நாம அனிதாவோட கல்யாணத்தைப் பத்திதான் பேசிட்டு இருக்கிறோம். அதுல நான் தலையிடக் கூடாதுன்னு நீ சொன்னாலும் அப்பிடியெல்லாம் என்னால விட்டுற முடியாது நந்து.” என்றான் தெளிவாக.

“ஐயோ… சத்தியமா என்னால முடியல த்தான்… இந்த விஷயத்தைப் பற்றி இதுக்கு மேல நாம பேசவேண்டாம்.” என்றபடியே கட்டிலில் மறுபடியும் படுத்துக் கொண்டாள்.

நந்தினியின் கண்கள் மூடிக்கிடந்தாலும், அவளுடைய அறிவு விழித்துக்கொண்டு தான் கிடந்தது. கணவனுடைய இன்றைய பேச்சுகள் அனைத்தையும் அமைதியாக ஓட்டிப் பார்த்தவளுக்கு, அவளுடைய நலனைக் கொண்டே எல்லாம் என்று புரியத்தான் செய்கிறது.