அத்தியாயம் 05
வழக்கம் போல அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது நந்தினிக்கு. தன்னருகில் படுத்திருந்த அம்மாவையும் தங்கையும் பார்த்தாள். நிர்மலமான முகத்தோடு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
இருந்த ஒற்றைப் படுக்கையறையில் தரையில் விரித்த பாயும் தலையணையும் தான் அவர்கள் படுக்கை. திலகத்தின் ஏனைய இரு பெண்கள் வீட்டில் இருக்கும்போதும் ஐவராக இதே படுக்கை அறையில் இப்படித்தான் வரிசையாக படுத்திருப்பார்கள். படிப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு ஹாலை உபயோகப்படுத்திக் கொள்வார்கள் பெண்கள்.
இருப்பதை வைத்து மனநிறைவோடு வாழும் வித்தையை திலகம் தன் பெண்களுக்கு கற்றுக்கொடுக்க, அவர்களும் அட்சரம் பிசகாமல் பிடித்துக் கொண்டார்கள்.
இப்போது மூத்த மக்கள் இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு முன்பைப் போல பணத்தட்டுப்பாடு என்பது இல்லை தான். ஆனாலும் வேறு வீடு பார்த்து செல்லும் எண்ணம் மட்டும் திலகத்திற்கும் அவருடைய பெண்களுக்கும் வரவேயில்லை. காரணம், லீலாவதியின் குடும்பம் என்பதை சொல்லவும் வேண்டுமா?
“அனி, தூங்குனது போதும், எழும்பு ஜாகிங் போகலாம்.” இரண்டு மூன்று நாட்களாக காலையில் ஓட்டப்பயிற்சிக்கு செல்லாமல் இருப்பது என்னவோ போலிருக்க, மெல்லிய குரலில் தங்கையை எழுப்பினாள் நந்தினி.
“ம்ஹ்ம்… நீ தான் போலீஸ், பிஸிக்கல் ஃபிட்னெஸ் உனக்கு தான் தேவை. என்னை விட்டுடு க்கா, இப்போ தான் எனக்கு நல்லா தூக்கம் வருது.” சிணுங்கியபடியே புரண்டு படுத்தாள் அனிதா.
“டிப்பார்ட்மெண்ட்ல இருக்குறவங்க மட்டும் தான் ஃபிட்டா இருக்கணும்னு யாரு டி சொன்னது? என்னைக்கேட்டா எல்லோருக்குமே ஹெல்த் கான்சியஸ் இருக்கணும். வா, போலாம்.” விடாமல் தங்கையை எழுப்பினாள் நந்தினி.
“அதைப்பத்தி நாப்பது வயசுக்கு மேல யோசிக்கலாம், இப்போ என்னை ஆளை விடு. உனக்கு கம்பெனிக்கு ஆள் வேணும்னா கண்ணத்தான் இதே வேலையாத் தான் அலைவார், அவர்கூட ஜாயின் பண்ணிக்கோ.” சொல்லிவிட்டு இதற்குமேல் என்னை தொந்தரவு செய்யாதே என்பது போல குப்புற படுத்துக் கொண்டாள் அனிதா.
“நீ வரலைன்னா போ, அதுக்காக ஏன் என்னை அவங்கூட கோர்த்து விடுற?” மெல்லிய குரலில் நந்தினி சலித்துக்கொள்ள,
“அவன் இல்ல, அவர்… என்னைக்கா இருந்தாலும் மிஸ்டர் நந்தினி அவருதான், வேற வழியே உனக்கு கிடையாது.” தைரியமாக சொல்லிவிட்டு அவசரமாக போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள் அனிதா.
“ஆஹாங்… அப்பிடிங்களா மேடம்… இன்னைக்கு நாள் முழுக்க இப்பிடி பெட்ஷீட்குள்ளயே இருந்துடுவீங்களா? வந்து கவனிச்சுக்கறேன் உங்களை.” தங்கையின் முதுகில் விளையாட்டாக அடித்தபடியே படுக்கையிலிருந்து எழும்பினாள் நந்தினி.
“கவனிப்பியா? க்கா… அக்யூஸ்ட் கிட்ட பேசுற மாதிரியே பேசாத, அயம் யுவர் செல்ல தங்கச்சி.” கேலியாக அனிதா சொல்ல, சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள் நந்தினி.
நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படியான ஒரு அழகான விடியல். அதை மனதார ரசித்தவள், காலைக்கடன்களை முடித்து, ஓட்டப்பயிற்சிக்கான உடையை அணிந்து வரும்போது திலகம் முழித்திருந்தார்.
“நான் தினமும் இவ்வளவு நேரத்துக்கெல்லாம் எழும்பிடுவேன் ம்மா. எனக்காக உங்களை சிரமப்படுத்திக்காதீங்க, நீங்க உங்க டைம் க்கு எப்பவும் போல எழும்புங்க போதும்.” அக்கறையோடு சொன்னபடியே கதவை நோக்கி நகர்ந்தாள்.
மகளின் அக்கறை இதமாக இருக்க, புன்னகைத்தபடியே வாசல் வரை வந்த திலகம், “கவனம் நந்து” என்று சொல்ல,
“எனக்கேவா ம்மா?” தலையை லேசாக சாய்த்து கேலியாக சிரித்தாள் மகள்.
“அந்த அளவுக்கு தான் நாட்டுல பொண்ணுங்களுக்கான பாதுகாப்பு இருக்குது.” பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒரு தாயாக திலகத்தின் வார்த்தைகளில் தானாகவே ஒரு கவலை வந்து ஒட்டிக்கொண்டது.
“சரி, கவனமா இருந்துக்கறேன். நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க.” அன்னையை ஒட்டிப்பேசியபடியே நந்தினி கிளம்ப,
“போகலாமா நந்து?” என்று வந்து நின்றான் கமலகண்ணன்.
“நான் உங்ககூட எங்கேயும் வரதா சொல்லலையே?” ஒற்றை வார்த்தையிலேயே அவனை வெட்டிவிடும் முயற்சியில் இறக்கிய நந்தினி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
அவளோடு இணைந்து நடந்தபடியே, திரும்பி பார்த்து, “குட்மார்னிங் அத்த” என்ற கண்ணன் வலது கையின் ஆள்காட்டி விரலை உயர்த்திக்காட்ட, திலகத்தின் முகம் பிரகாசமாகியது. இதழ்களில் மெல்லிய புன்னகையோடு தன் கண்களிலிருந்து மறையும் வரை இருவரையும் பார்த்தபடியே நின்றிருந்தார்.
அவன் செய்கையைக் கவனித்தவள், “ஓ… செக்யூரிட்டியா? என்னைத் தவிர வேற யாராலும் எனக்கான பாதுகாப்பா இருந்துர முடியாது?” அழுத்தமான குரலில் சொல்லியவள் மெதுவாக ஓடத் தொடங்க, கண்ணனும் அவளோடு சேர்ந்து ஓடத் தொடங்கினான்.
இருள் பிரியாத அதிகாலை வேளை. மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத தெருக்கள் என்று ரம்யமாக இருந்தது சூழ்நிலை. ஆனால் அதை ரசிக்க முடியாமல் உடன் வந்து கொண்டிருந்தவனின் அருகாமை அவஸ்தையாக இருக்க, ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தாள். அவளுக்கு இணையாக கண்ணனும் ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான். தப்தப் என்ற தாளலயத்தோடு ஒரே சீராக இருவரின் காலடி ஓசைகளும் சத்தத்தை எழுப்ப, இளமை வனப்போடு ஓடிய அந்த ஜோடியைப் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது.
பதினைந்து நிமிட ஓட்டத்துக்கு பிறகு பெண்கள் கல்லூரி ஒன்றின் விளையாட்டு மைதானத்திற்கு இருவரும் வந்து சேர்ந்திருந்தார்கள். கண்ணனை சட்டை செய்யாமல், நந்தினி தன்னுடைய உடற்பயிற்சியில் இறங்கிவிட, கண்ணனும் அவளைத் தொந்தரவு செய்யாமல் தனியாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டான்.
கிட்டத்தட்ட ஒருமணி நேர உடற்பயிற்சிக்குப் பிறகு, அங்கே மரத்துக்கு கீழே கிடந்த சிமெண்ட் பெஞ்சில் நந்தினி வந்து அமர, கண்ணனும் வந்து அமர்ந்தான்.
“இப்போ எதுக்காக ஷேடோ போலவே எம்பின்னாடி வர்றீங்க?” உடற்பயிற்சி செய்ததில் மூச்சு வாங்க, எரிந்து விழுந்தாள் நந்தினி. அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன்,
“உனக்கு என்னைப் பார்த்து பயம் நந்து.” சம்மந்தமே இல்லாமல் பதில் சொன்னான்.
“பயமா? எனக்கா? அதுவும் உங்களைப் பார்த்தா?” கேலியாக இதழ்களை வளைத்தவள் புருவத்தை உச்சி மேட்டுக்கே உயர்த்தினாள்.
“ஆமா.” அலட்டிக்கொள்ளாமல் பதில் வந்தது கண்ணனிடமிருந்து.
“பயம் எதுக்காம்? அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்.” சிமெண்ட் பெஞ்சில் இலகுவாக சாய்ந்து அமர்ந்தபடி கேட்டவளின் குரலில் கேலி இழையோடியது.
“வேற என்ன? என்னை லவ் பண்ணிடுவோமோன்னு தான்.” கண்களைச் சிமிட்டியபடி கண்ணன் சொல்ல,
“லவ்வா? ஹஹ… எனக்கா? ரிடிகுலஸ்…” என்றாள் கேட்கக் கூடாத வார்த்தையைக் கேட்டதுபோல முகத்தை சுழித்து.
“அதை மறைக்கத்தான் என்னைப் பாத்தாலே கோபப்படுற நீ.” மாறாத புன்னகையோடு பேச்சைத் தொடர்ந்தான் கண்ணன்.
“ஆமா… உங்களைப் பார்த்ததும் உள்ளயிருந்து காதல் பொங்கி வழியுது. அதை மறைக்க நாங்க கோபப்படுறோம், போவீங்களா?” உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பியபடியே படுநக்கலாக சொன்னாள் நந்தினி.
“அப்போ, இந்த அத்தானை நீ சைட் அடிச்சதே இல்லைன்னு சொல்லுறியா நந்து?” வழியை மறிப்பது போல அவள் முன்னால் வந்து நின்று கேட்டவனின் வார்த்தைகளில், இல்லை என்று தான் சொல்லிப்பாரேன் என்ற சவாலிருக்க, தடுமாறித்தான் போனாள் நந்தினி.
உண்மையில் சிறுவயதில் நந்தினிக்கு கண்ணன் என்றால் மிகவும் பிடித்தமே. திலகம், லீலாவதிக்கிடையே உறவைத் தாண்டி நல்லதொரு நட்பு இருக்க, அதுவே அவர்களுடைய பிள்ளைகளிடமும் பிரதிபலித்தது.
எதற்கெடுத்தாலும் கண்ணத்தான் என்று அவனையே சுற்றி சுற்றி வருவாள் நந்தினி. அந்த உறவில் எந்தவிதமான கல்மிஷமும் இருந்ததில்லை. ஆனால் நந்தினி வயதுக்கு வந்தபிறகு எப்போதும் போல அவனுடன் பழகமுடியாமல் சிறு வெட்கம் இல்லை தயக்கம் இப்படி ஏதோ ஒன்று அவளுக்கு வந்திருக்கத்தான் செய்திருக்கிறது.
தன்னைப் பார்க்காத நேரங்களில் அவனைப் பார்த்துக் கொள்வது, அவன் பேசினால் சரளமாக பேச முடியாமல் தடுமாறுவது என்று அந்த வயதுக்கே உரிய பருவ மாற்றங்கள் அவளுக்கும் வந்திருக்கிறது தான். ஒருவேளை ராஜவேலு மட்டும் சரியாக இருந்திருந்தால், அத்தை மகன் மீதான ஈர்ப்பு காதலாகக்கூட மாறியிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.
ஆனால் அதையெல்லாம் இப்போது அவனிடம் ஒத்துக்கொள்ள முடியாதே. என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பவனுக்கு, தானே கொம்பு சீவி விட்டது போலாகிவிடுமே.
நொடிநேரத்துக்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவள், முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு, “சும்மா பினாத்தாதீங்க” என்றாள் கோபத்தை மறைக்காத குரலில்.
“அப்போ அம்மணி என்னை சைட் அடிச்சதை ஒத்துக்க மாட்டீங்க, ம்ஹும்…” பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு கண்ணன் தலையாட்டியபடி கேட்க,
“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?” பேச்சை மாற்றியபடி அவனைத்தாண்டி நடக்கத் தொடங்கினாள்.
“ஏன்? நல்லாத்தானே இருக்குறேன். இரண்டு கண், மூக்கு, வாய் எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல சரியாத்தானே இருக்குது? ஒருவேளை காலைல குளிக்காம வந்ததால உங்கண்ணுக்கு சுமாரா தெரியுறேனோ?” கலைந்திருந்த கேசத்தை வலது கையால் சரி செய்தபடியே உடன் நடந்தான்.
“ஷப்பா… நான் என்ன கேட்டா, நீங்க என்ன பதில் சொல்லுறீங்க? இந்த வாய் மட்டும் இல்லைன்னா…” அதற்குமேல் சொல்லாமல் நந்தினி நிறுத்திக் கொள்ள,
“அதை வச்சிதான் என் பொழப்பே ஓடுது ம்மா, கண்ணுபோடாத.” என்று சிரித்தான்.
“அதெல்லாம் வக்கணையா பேசுங்க, ஆனா பேசிக் ரூல்ஸ் ஒன்னு கூட ஃபாலோ பண்ணாதீங்க.” நேற்று தலைக்கவசம் அணியாததற்கு இப்போது வார்த்தையாலேயே அவனுக்கு கொட்டு வைக்க முயன்றாள்.
“என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் திருந்திட்டா, உங்க டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களோட பொழப்பு என்னாகுறது மேடம்? அதனால என்னைத் திருத்த முயற்சி செய்யாதீங்க, நான் இப்படியே இருந்துட்டு போறேன்.” நமுட்டு சிரிப்போடு கண்ணன் சொல்ல,
“மொதல்ல சொல்ல வர்றதை வெளிப்படையா சொல்லக் கத்துக்கோங்க.” என்றாள் தோரணையாக.
“சொல்லுவேனே, எனக்கென்ன பயமா?” அலட்சியமாக தோள்களைக் குலுக்கி கொண்டவன்,
“மாசக்கடைசியில பாக்கெட் காலியானா ஹெல்மெட் செக்கிங்னு ரோட்டுக்கு வந்துடுறது, கேட்டா மக்களோட சேஃப்டின்னு சப்பைக்கட்டு கட்டி, அவங்ககிட்ட இருந்து பணத்தை பிடுங்குறது. அவனவன் உயிரை அவனவனுக்கு பாதுகாக்க தெரியாதா? அப்படி தெரியலைன்னா…”
“கண்ணன்…போதும், நிறுத்துங்க. ஒருவிஷயத்தைப் பற்றி பேசுறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சு வார்த்தைகளை விடுங்க.” அவள் துறையைச் சார்ந்தவர்களைப் பற்றி குறை சொன்னதும் கோபம் கொப்பளித்துக் கொண்டுவர, அவன் பேச்சை முடிக்கும் வரை பொறுத்துக்கொள்ள முடியாதவளாக அடிக்குரலில் அதட்டினாள்.
“நீயும் பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசு நந்து, ‘கண்ணத்தான்’ இப்பிடி கூப்பிடுறதா இருந்தா மட்டும் என்னைக் கூப்பிடு, இல்லைன்னா கூப்பிடாத.” பதிலுக்கு அழுத்தமான குரலில் அவளை அதட்டியவன்,
“நான் உண்மையைத் தானே சொல்லுறேன், உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? நம்ம ஊர்ல ட்டூ வீலர்ல அதிகம் வர்றது மிடில் க்ளாஸ் மக்கள் தானே? அவங்க பாக்கெட்ல மட்டும் தைரியமா கைவைக்கிற உங்க டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க, ஒரு அரசியல்வாதியோ, தொழிலதிபரோ தப்பு செய்தா எதுக்கு நடவடிக்கை எடுக்க பம்முறாங்க? இதுல அந்த விளக்குமாறுங்களுக்கு ராஜமரியாதை வேற. அதே மரியாதையை சாதாரண மக்களுக்கு உங்க துறையைச்சேர்ந்த ஆட்கள் குடுக்குறாங்களான்னு நீயே சொல்லு. என்னைக்கேட்டா இல்லாதவனை விட்டுட்டு இருக்குறவங்கிட்ட இருந்து உங்க ஆளுங்க பிடுங்கலாம். அதுல ஒன்னும் தப்பேயில்ல…” என்று நியாயம் பேசினான்.
கண்ணன் பேச்சில் தலையிடாமல் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு நாட்டு நடப்பும் அவன் சொல்லும்படிதானே இருக்கிறது என்றே தோன்றியது. ஆனால் அவனுடைய கடைசி வரிகளையும் அது தரும் அர்த்தத்தையும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்ன மாதிரியான மனநிலை இது என்று முகத்தை சுளித்தவள்,
“எல்லா துறைகள்லயும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யுறாங்க, நான் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக மொத்தமா எல்லாரும் அப்படித்தான்னு நீங்க சொல்லுறதை எந்தகாலத்துலயும் என்னால ஏத்துக்க முடியாது.” என்று தன்னுடைய கண்டனத்தை ஆணித்தரமாக பதிவு செய்தாள்.
அத்தோடு தன் பேச்சை முடித்து விடாமல், “நீங்க இப்பிடி தான் நடந்துக்குறீங்களா? அதாவது, உங்ககிட்ட கேஸ் நடத்த சொல்லி வர்றவங்களோட வசதிவாய்ப்பை அடிப்படையா வச்சி தான் உங்க ஃபீஸ் இருக்குமா?” அவனைத் துளைத்துவிடுவது போல பார்த்தபடியே கேட்டாள்.
“அப்கோர்ஸ்… இருக்கிறவங்ககிட்ட இருந்து நல்லாவே வாங்கிக்கறேன், சும்மா ஒன்னும் வாங்கலயே, அவங்க தேவைக்கு என்னோட அறிவை உபயோகப்படுத்துறதுக்காகத் தானே வாங்குறேன். அதுல என்ன தப்பு?” திமிராக வந்தது பதில்.
“அதுக்குன்னு… ஒரு எதிக்ஸ் வேண்டாமா?” என்றாள் அவனை அதிருப்தியாக பார்த்தபடி.
“எதிக்ஸ் பார்த்தா காசு சம்பாதிக்க முடியுமா? இங்க கீழ இருந்து மேல வரை யார்கிட்டயுமே எதிக்ஸ் இல்லையே, அப்படி யாருகிட்டயும் இல்லாததை நான் மட்டும் எதுக்கு தூக்கி சுமக்கணும்?” என்றான் ஒருமாதிரி குரலில்.
“இப்பிடி எல்லோரும் நினைச்சா நாடு சுடுகாடா மாறிப்போகும். அதுவும் நம்மளை மாதிரி சட்டம் ஒழுங்கை பாதுகாக்குறவங்க கிட்டயிருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வரவேக் கூடாது.” அவன் மனதில் பதிய வைத்துவிடும் முயற்சியில் கொஞ்சம் அழுத்தமாகவேச் சொன்னாள்.
“நீ வேணா ஏமாளியா இரு, என்னால முடியாது.” கண்ணனிடமிருந்து அசட்டையாக பதில் வர, ஆயாசமாக இருந்தது நந்தினிக்கு. அவளறிந்த கண்ணன் இப்படிப்பட்டவன் இல்லையே?
“நீங்க ரொம்ப மாறிட்டீங்க?” நினைத்ததை மறைக்காமல் சொல்லியும் விட்டாள்.
“ஹ்ம்ம்… சின்ன வயசுல என்னை சைட் அடிச்ச பொண்ணு, என்னை மறந்துட்டா, அந்த ஏமாற்றத்தை தாங்கிக்க முடியாமத் தான் இப்படி மாறிட்டேன்.” கண்கள் இரண்டும் சிரிக்க, முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னான். கோபத்தில் பற்களைக் கடித்தவளுக்கு இப்போது முற்றிலும் வேறாக தெரிந்தான் கண்ணன்.
‘இவன் எப்போது, எப்படி பேசுவான்? இவன் பேசுவதை எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொள்வதா? கூடாதா?’ நந்தினி குழம்பிப்போய் நின்றிருந்த நேரம், அங்கே சபேசன் வந்தான்.
நந்தினியோடு பணிபுரியும் காவலர் சபேசன் தான். அவனும் நடைபயிற்சிக்கான உடையில் தான் இருந்தான்.
தன் மேலதிகாரிக்கு விறைப்பாக சபேசன் சல்யூட் வைக்க, “ஏதாவது முக்கியமான விஷயமா மிஸ்டர் சபேசன்?” விசாரணையில் இறங்கினாள் நந்தினி.
“இல்ல மேம்… கண்ணன் சாரைத் தான் பாக்க வந்தேன்.” நந்தினியும் கண்ணனும் அருகருகே நிற்பதை குழப்பமாக பார்த்தபடி சொன்ன சபேசன்,
“லாயர் வச்சி வாதாட வசதியில்லாத சில கேஸ்ல கண்ணன் சார் அப்பியர் ஆகுறது வழக்கம். பி 12 ஸ்டேஷன்ல அப்படியொரு கேஸ் இருக்கு. அதைப்பத்தி சார்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.” கண்ணனை பார்க்க வந்த காரணத்தையும் சொன்னான்.
“சரி, நீங்க பேசுங்க.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்த நந்தினிக்கு கண்ணன் புரியாத புதிராகவே இருந்தான். எந்த வரையறைக்குள் அவனை கொண்டு வருவது என்று தெரியாமல் மெதுவாக நடக்க ஆரம்பித்தவளோடு, சீக்கிரமே வந்து இணைந்து கொண்டான் கண்ணன்.
இருள் விலகி கீழ் வானம் மெதுவாக வெளுக்க ஆரம்பிக்க, நடைப்பயிற்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் ஒன்றிரண்டாக அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.
சற்றுநேரம் எதுவும் பேசாமல் இருவரும் மௌனமாகவே நடைபோட்டார்கள்.
“என்ன, யோசனை எல்லாம் பலமா இருக்கு?” கண்ணனே அந்த மௌனத்தை உடைத்தான்.
“ம்ம்… பெரிய மூடு மந்திரமா இருக்குறீங்க நீங்க, உங்களை எந்த கேட்டகிரில சேக்குறது?” தன் சந்தேகத்தை உரியவனிடமே கேட்டாள்.
“இந்த ராபின் ஹூட் இருக்கார்ல… அதான் ம்மா, இருக்குறவங்க கிட்டயிருந்து எடுத்து இல்லாதவங்களுக்கு குடுப்பாரே, அவரை மாதிரின்னு நினைச்சுக்கோ…” சிரிக்காமல் கண்ணன் சொல்ல,
“அந்த அளவுக்கு எல்லாம் உங்களுக்கு ஸீன் இல்ல.” என்றவள் சட்டென்று சிரித்துவிட்டாள்.
“இது எவ்ளோ நல்லாயிருக்கு, இப்பிடியே எங்கிட்ட மெயிண்டெயின் பண்ணலாமே?” மெதுவாக நட்புகரம் நீட்டினான் கண்ணன்.
அதனைப் பற்றிக்கொள்ள மறுத்து அவனை யோசனையாக பார்த்தவள், பதிலேதும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தாள். அதைக் கண்டுகொள்ளாமல்,
“அம்மணி வேலைல சேர்ந்த மொதநாளே சம்பவம் எல்லாம் பெருசா பண்ணியிருக்கீங்க போலயே?” என்றான் வரவழைத்துக்கொண்ட உற்சாகத்தோடு.
“சம்பவமா?”
“ம்ம்… சுரேந்தர், சன் ஆஃப் ராஜவேலு.” இப்படி கண்ணன் சொல்லவும் அந்த வீடியோவை அவனும் பார்த்திருக்கிறான் என்பது புரிந்தது.
ஆமாம்… வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது நந்தினியின் கவனத்துக்கும் வந்திருந்தது.
முன்பெல்லாம், உன்னைச்சுற்றிலும் ஆயிரம் கண்கள் இருக்கிறது கவனமாக இரு என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது ஆயிரம் கேமராக்கள் அல்லவா இருக்கிறது! அந்த நிகழ்வு நடந்தது வேறு, சாலை ஓரத்தில். வீடியோ வந்திருக்காவிட்டால் தான் ஆச்சர்யம்.
கண்ணன் சொன்னது என்னவோ இரண்டே பெயர்கள் தான். ஆனால் அந்த பெயர்களே போதுமாக இருந்தது நந்தினியின் உடல்மொழியில் மாற்றம் கொண்டுவருவதற்கு.
“நடந்ததை சம்பவம்னு நீங்க நினைச்சா சம்பவம் தான், அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” உதட்டில் சிரிப்பு மறைந்திருக்க, இறுக்கமான குரலில் கேட்டாள்.
‘ஷப்பா… இப்போ தான் கொஞ்சம் மலை இறக்கி விட்டேன், அதை நானே கெடுத்துட்டேன் போலயே.’ மனதிற்குள் புலம்பிக் கொண்டவன், தொடங்கிய பேச்சை அப்படியே விட்டுவிட முடியாமல்,
“அந்த சுரேந்தரோட அம்மா, நேற்று ராத்திரியே எங்க அம்மாவுக்கு ஃபோன் செய்து, ஏதோ உள்நோக்கத்தோட தான் நீ இதை செய்திருக்கன்னு பயங்கரமா சண்டை போட்டாங்களாம்.” வாய்தவறி உறவுமுறையைச் சொல்லி பேசி விடாமல் இருக்க மிகவும் கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசினான் கண்ணன்.
“சண்டை போடுறது எல்லாம் இருக்கட்டும், இனியொரு தடவை அத்தைக்கு ஃபோன் செய்தா மொதல்ல அவங்க பெத்து விட்டுருக்க ஒத்தபிள்ளையை, அதுவும் ஆம்…பிள்ளபிள்ளையை இப்பிடி காடுமேடுன்னு அலையவிடாம, கண்டிச்சு நல்லது சொல்லிக்கொடுத்து வளக்க சொல்லுங்க. இல்லைன்னா பெத்தவங்களைப் போலவே ஒழுக்கம் இல்லாம வளந்து நிக்க போறான் அந்த பையன்.” என்றாள் அசட்டையாக.
ஒருவரைப்பற்றித் தெரியாமல் இப்படி குறைவாக மதிப்பிட்டு பேசிவிடுபவள் அல்ல நந்தினி. இப்போதோ ராஜவேலு மீதும் கல்பனா மீதும் இருந்த அளவில்லா வெறுப்பு அவளை அப்படி பேசத்தூண்டியிருந்தது.
ஆமாம்… சுரேந்தர் என்ற பெயரைத் தாண்டி பெயருக்குரியவனையோ, அவனுடைய குணநலன்களைப்பற்றியோ எதுவுமே தெரியாது நந்தினிக்கு. தங்கள் வாழ்க்கையை புரட்டி போட்ட அன்று கோவிலில் வைத்து சிறுவன் சுரேந்தரை பார்த்தது தவிர வேறெங்கும் அவனை பார்த்ததும் இல்லை. பொதுவாகவே நமக்கு தேவையில்லாத ஒன்றின் மீது நாம் ஆர்வம் காட்டுவதில்லை தானே. அப்படித்தான் சுரேந்தர் மற்றும் அவனுடைய அம்மா விஷயத்தில் நந்தினியின் அணுகுமுறையும் இருந்தது.
“இல்ல… பையன் நீ நினைக்கிற மாதிரி இல்ல, ரொம்ப நல்ல மாதிரி.” வாயை மூடிக்கொண்டு சும்மா இராமல் வார்த்தைகளை விட்டான் கண்ணன்.
“ஓ… அந்த அளவுக்கு உங்களுக்கு விஷயம் தெரியுதா? அப்போ ரகசியமா அந்த கூட்டத்தோடு கொஞ்சி குலாவிட்டு தான் இருக்கீங்க நீங்க, அப்படித்தான?” எல்லாவற்றிலும் நிதானமாக இருக்கும் நந்தினியின் நிதானம் கண்ணனின் வார்த்தைகளில் பறந்திருந்தது.
“என்ன பேசுற நந்தினி நீ? அவங்ககூட டச்ல இருந்தா தான் இந்த மாதிரியான விஷயங்கள் நமக்கு தெரியவருமா? நீ பேசுறது உனக்கே அபத்தமா தெரியலயா?” படபடவென பொரிந்தான் கண்ணன்.
“உங்க உறவு வட்டத்துல யாரெல்லாம் இருக்கணும், இருக்கக்கூடாதுன்னு உங்களை கட்டுப்படுத்துற உரிமை எனக்கு கிடையாது. நீங்க யார்கூட வேணுமானாலும் நல்லா ரிலேஷன்ஷிப்பை மெயின்டெயின் பண்ணுங்க. ஆனா… எங்ககிட்ட மட்டும் ரெட்டைவேஷம் போடாதீங்க.” சீறலாக சொல்லிவிட்டு, கண்ணனை எதிர்பாராமல் விறுவிறுவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் நந்தினி.
‘ரெட்டை வேஷம் போடுகிறேனா?’ நந்தினியின் வார்த்தைகளில் சுர்ரென்று கோபம் ஏற, அவளை முறைத்தபடி நின்றிருந்தான் கமலகண்ணன்…