அத்தியாயம் 01

தன்னுடைய தொடர் ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு இளைப்பாறியபடி நின்றது அந்த சென்னை எக்ஸ்பிரஸ். இடம், திருநெல்வேலி ஜங்ஷன் ரெயில் நிலையம். நேரம் காலை ஏழு மணி.

இதுவரையிலும் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம் என்பதுபோல அடித்துப் பிடித்துக் கொண்டு தொடர்வண்டியிலிருந்து இறங்கத் தொடங்கினார்கள் பயணிகள். அப்படி எந்த அவசரமும் இன்றி நிதானமாக இறங்கினாள் நம் நாயகி நந்தினி.

ஷோல்டரில் மாட்டிய பையும், வலதுகையில் பயணப்பையுமாக நடைமேடையில் இறங்கி நின்ற நந்தினி, பெண்களின் சராசரி உயரத்தை தாண்டி வளர்ந்திருந்தாள். நல்ல திருத்தமான முகம், தென்னிந்திய பெண்களுக்கேயான மாநிறம் என்று நின்றிருந்தவளின் கண்களில் ஒரு தீட்சண்யம் குடிகொண்டிருந்தது.

கறுப்பு கலரில் காலர் வைத்த டிசர்ட் அணிந்து அதேகலரில் காட்டன் பேண்ட் அணிந்திருந்தவளின் உடல் மொழியில் இயல்பாகவே ஒரு மிடுக்கு இருந்தது. பிடரி வரைக்குமே இருந்த தன் அரையடி அடர்ந்த கூந்தலை தூக்கி குதிரைவால் போட்டிருந்தாள். அவள் திரும்பும் திசையெல்லாம் அதுவும் திரும்பி அவளுக்கு அசாத்திய அழகைக் கொடுத்தது.

சுற்றுப்புறத்தை தன் கண்களால் ஒரு அலசு அலசியவள், இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி கூட்டத்தோடு கூட்டமாக நடக்க ஆரம்பித்த நேரம்,

“ஹாய், ஹலோ, வெல்கம் ஃப்ரெண்ட்ஸ். இதுதான் எங்க திருநெல்வேலி ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷன், காலைல ஏழு மணிக்கே எவ்வளவு கூட்டமா இருக்கு பாத்தீங்களா?” சத்தமாக பேசியபடியே தன்னுடைய மொபைல் ஃபோனை ஒற்றைக் கையால் உயர்த்தி பிடித்துக்கொண்டு பின்னோக்கி எட்டுவைத்து நடந்து வீடியோ கவரேஜ் செய்து கொண்டுவந்த இளைஞன் ஒருவன் எதிர்பாராமல் நந்தினி மீது மோதி நின்றான்.

“இடியட், கையில ஒரு மொபைல் ஃபோன் இருந்தா எல்லாருக்கும் பி சி ஸ்ரீராம்னு நினைப்பு வந்துடுமே.” எரிச்சலாக சொன்ன நந்தினி, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த இளைஞனின் கையிலிருந்த ஃபோனை எட்டிப்பறித்திருந்தாள்.

“க்கா… க்கா… என் ஃபோனை குடுத்திருக்கா, எங்கப்பா கைல கால்ல விழுந்து வாங்குன ஃபோன் க்கா.” தன் உலகமே பறிபோனது போல கெஞ்சினான் நந்தினி மீது மோதிய இளைஞன்.

பதின்மவயதிலிருந்து இளமை பருவத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் முகத்தோற்றத்தில் இருந்தான் அந்த இளைஞன்.

“படிக்கிற வயசுல இது என்னடா லூசுத்தனம்?” அந்த இளைஞனின் கெஞ்சலுக்கு செவி சாய்க்காமல் நடந்தபடியே அதட்டினாள் நந்தினி.

“அதெல்லாம் நான் ப்ரைட் ஸ்டூடண்ட் க்கா, திருநெல்வேலி கவர்மெண்ட் இஞ்சினீயரிங் காலேஜ்ல மெரிட்ல சீட் கிடைச்சு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறேன். இது சும்மா ஒரு பாஷனுக்காக (passion) ஃபோனை குடுத்துடு க்கா, ப்ளீஸ்…” கெஞ்சியபடியே அவளோடு சேர்ந்து நடந்தான் அந்த இளைஞன்.

அவன் படிப்பதாகச் சொன்னதும் லேசாக இறங்கி வந்த நந்தினி, தன் வேகநடையை கைவிட்டவளாக, “இந்த லூசுத்தனத்தை எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாக்கணும், இதுக்கு மேல எங்கயாவது உன்னை இப்படி பாத்தேன்… மொவனே, கொன்னே போடுவேன்.” கண்களை உருட்டி மிரட்டியபடியே ஃபோனை நீட்டினாள்.

“தேங்ஸ் க்கா.” வாய் தன்னியல்பாக நன்றியை உதிர்க்க, சட்டென்று அதை கைப்பற்றிக் கொண்டவன்,

“மிஞ்சி மிஞ்சி போனா இன்னும் ஒரு பத்துநாள் இங்க இருப்பீங்களா? அப்புறம், இதேபோல ட்ரெயின் ஏறி கிளம்பி போயிடுவீங்க, அப்புறம் எப்பிடி க்கா உங்க கண்ணுல நான் விழுவேன்?” பொருள் கைவசம் வந்ததும் இயல்பான குறும்புத்தனம் தலைதூக்க கேலிபேசியது அந்த இளமை. எல்லாம் பத்திரமாக ஃபோன் இருந்த கையை முதுகுக்கு பின்புறமாக வைத்துக்கொண்டு தான்.

அவனுடைய பேச்சிலும் செயலிலும் இதழ்களில் புன்முறுவல் பூத்தது நந்தினிக்கு.

“ஆஹாங்… இன்னும் இரண்டே நாள்ல திருநெல்வேலி மாவட்ட எஸ்பியா சார்ஜ் எடுத்துக்கப்போறேன் தம்பி, இப்போ சொல்லு… ஏதாவது ஒரு நாள் எங்கண்ணுல நீ மாட்டுறதுக்கான ப்ராபபிளிட்டி இருக்கா? இல்லையா?” கேலி இழையோட நந்தினி கேட்க,

“யக்காவ்… இல்ல மே…ம், இதையெல்லாம் மொதல்லயே சொல்லுறது இல்லையா? ஏதோ தெரியாம உளறிட்டேன். நான் பேசியது எல்லாத்தையும் ரப்பர் வச்சி அழிச்சிடலாம், ஓகேயா? இந்த நாளை உங்க டைரில குறிச்சு வச்சிக்கோங்க, கண்டிப்பா உங்க கண்ணுல இந்த சிவா இனிமே சிக்கவே மாட்டான்.” உளறி கொட்டிவிட்டு ஓட்டமெடுத்தான் அந்த இளைஞன்.

அவனுடைய செய்கையில் நந்தினியின் இதழ்களில் பூத்த புன்முறுவல், விரிந்த சிரிப்பாக மாறியது. இலகு புன்னகையோடு தன் நடையைத் தொடர்ந்தவளின் வழியை மறிப்பது போல வந்து நின்றான் கமலகண்ணன். அவளுடைய அத்தை மகன்.

சட்டத்தில் மேற்படிப்பு முடித்து வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்து வரும் முப்பது வயது இளைஞன். நந்தினிக்கு ஜோடியாக நிறுத்த பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்திய கட்டுமஸ்தான தோற்றத்தை உடையவன்.

“வந்து இறங்குன உடனே அத்தானைத் தானே தேடுன நந்து?” கேலி இழையோட கேட்டவனின் கைகள் இயல்பாக நந்தினியின் கையிலிருந்த பயணப்பைக்காக நீண்டது.

அத்தனை நேரமும் இதழ்களில் இருந்த புன்னகை சட்டென்று மறைய, எதிரில் நின்றவனின் கேள்விக்கு பதில் சொல்ல முயலாமல், பை இருந்த கையை லேசாக விலக்கிக் கொண்டவள்,

“ஏன், வீட்டுக்கு வர எனக்கு வழி தெரியாதா என்ன?” என்று சிடுசிடுத்தாள்.

“இப்பிடியொரு அழகான மாமன் மக ஊர்லயிருந்து வரும்போது, அப்படியெல்லாம் தனியா வான்னு விட்டுட முடியுமா என்ன?” அவளுடைய சிடுசிடுப்பு தன்னை பாதிக்கவில்லை என்பது போல கமலகண்ணன் கேலி பேச, அப்படியே நின்று அவனை முறைத்தாள் நந்தினி.

“சரி… சரி… அத்தை மக, போதுமா?” தன்னுடைய வார்த்தைகளை உடனடியாக திருத்திக்கொண்டவன் நந்தினியின் கையிலிருந்த பயணப்பையை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டான்.

“ஹலோ… எங்களோட லக்கேஜைக்கூட தூக்கிட்டு வரமுடியாத அளவுக்கு பொண்ணுங்களை பலவீனமானவங்கன்னு நினைச்சிகிட்டீங்களா நீங்க?” பற்களை கடித்தபடி நடையைத் தொடர்ந்தாள் நந்தினி.

“அம்மாடியோவ், அப்படியெல்லாம் நான் சொல்லுவேனா? அதுவும் உங்கிட்ட?” பயந்தவன் போல விழிகளை விரித்து பதில் சொல்லியவன்,

“அப்புறம், அழகான இளம் போலீஸ் அதிகாரி கிளம்பி போய்ட்டாங்கன்னு சென்னை மாநகரமே கண்ணீர் கடலில் மூழ்கி போயிடிச்சாம், அப்பிடியா?” என்று கேலியில் இறங்கினான்.

கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் உதவி காவல்துணை ஆணையராக பணியில் இருந்த நந்தினி பதவி உயர்வில் தான் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறாள். அதைத்தான் குறிப்பிடுகிறான் கண்ணன்.

“பொண்ணுங்கன்னாலே அழகு மட்டும் தான் உங்க கண்ணுல விழுமா? அவங்ககிட்ட இருக்கிற திறமை எல்லாம் உங்களை மாதிரி ஆம்பிள்ளைங்க கண்ணுல விழவே செய்யாதா?” அப்பட்டமாக அவனை முறைத்தபடி வார்த்தைகளை கடித்து துப்பினாள் நந்தினி.

“ஆத்தி… இன்னைக்கு என்னவோ உன் நேரமே சரியில்ல போலவே கண்ணா, எல்லாம் ஏறுக்கு மாறா பேசி பல்ப் வாங்குறியே?” தனக்குத்தானே கண்ணன் அலுத்துக் கொள்ள,

“இப்பிடி பேசுனா, எடுத்து நடத்துற கேஸ் எல்லாம் உருப்டமாதிரி தான்.” அலட்சியமாக உதடு சுளித்தாள் நந்தினி.

“அதெல்லாம் தொழில்ல நாங்க கில்லி அம்மணி.” சட்டையின் காலரை உயர்த்தி விட்டபடியே கெத்து காட்டினான் கண்ணன்.

பதிலுக்கு பதில் வழக்கடித்தபடியே இருவரும் இரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு வந்திருந்தார்கள்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு, பைக்கை எடுத்துட்டு வந்துடுறேன்.” அங்கே ஓரமாக நிறுத்தியிருந்த தன்னுடைய புல்லட்டை கை காட்டியபடியே சொன்னான் கண்ணன்.

“லாயர்னு தான் பேரு, ஆனா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஃபாலோ பண்ணுறதே இல்ல, பைக்கை பார்க்கிங் ஏரியால விடாமல் பப்ளிக்கு தொந்தரவு தர்ற மாதிரி இப்படி விட்டுருக்கீங்க?” அவன் பின்னோடு வந்து சிடுசிடுத்தாள் நந்தினி.

‘விடலாம் தான்… ஆனா பைக்கை எடுத்துட்டு வெளிய வர்றதுக்குள்ள நீ ஆட்டோ பிடிச்சு போகாம இருக்கணுமே?’ சத்தமில்லாமல் அவன் மனது முணுமுணுத்துக் கொள்ள,

“இதோ… உள்ள போயிட்டு உடனே வந்துடப்போறோம், அதுக்கு எதுக்குன்னு நினைச்சேன்.” என்றபடியே கையிலிருந்த பையை பைக்கின் பெட்ரோல் சேமிக்கும் பகுதியின் மீது வைத்தவன், பைக்கை ஸ்டாண்டிலிருந்து விடுவித்து அதில் ஏறி உக்காரும் முயற்சியில் இறங்கினான்.

“ம்ஹூம்… சட்டம் படிச்சவங்களே இப்படி பொறுப்பில்லாம பேசினா, சாதாரண மக்களோட மனநிலைமை எப்படி இருக்கும்?” சத்தமாக அலுத்துக்கொண்டவள்,

“ஏன், பொண்ணுங்க தான் உங்க பின்னாடி உக்காந்து வரணுமா?” ஒருமாதிரி குரலில் கேட்டபடியே பைக் சாவிக்காக கையை நீட்டினாள்.

“சேச்ச… நான் அப்படியெல்லாம் நினைக்கிற ஆளே இல்ல ம்மா.” வாயெல்லாம் பல்லாக சாவியை நந்தினியிடம் நீட்டினான். பெற்றுக்கொண்டவள், லாவகமாக காலை வீசி ஏறி அமர்ந்தபடி,

“ஹெல்மெட்… ஹெல்மெட் குடுங்க.” என்றாள் சத்தமாக.

அந்த வஸ்துவை கடைசியாக எப்போது உபயோகப்படுத்தியது என்று கண்ணனுக்கே தெரியாதே? அதைச் சொன்னால் இப்போது ஒரு பிரசங்கமே நடத்தி முடித்து விடுவாள் என்பது புரிந்ததால்,

“ஹிஹி… அவசரமா கிளம்புனதுல மறந்துட்டேன்.” என்று அசடு வழிந்தான்.

“பைக்கை ப்ராப்பரா பார்க்கிங்ல போடுறது கிடையாது, ஹெல்மெட் யூஸ் பண்ணுறது கிடையாது, வேற எதைத்தான் நீங்க சரியா செய்வீங்க?” அலுத்துக் கொண்டபடியே நந்தினி பைக்கை கிக் செய்து ஸ்டார்ட் செய்தாள்.

அது எதையும் கண்டுகொள்ளாமல், “இப்பிடி ஷோல்டர்ல பேக்கோட உக்கார்ந்தா, நான் எப்படி உக்காருறதாம்?” உரிமையாக அவள் தோள்களில் கிடந்த பையை கண்ணன் கழற்ற முயன்றான்.

அவன் கையில் படீரென்று அடித்தவள், “கஷ்டமா இருந்தா, ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்து சேருங்க” என்றபடியே பைக்கை நகர்த்த முயல, சட்டென்று அவள் தோள்களை பற்றிக்கொண்டு பின்னால் அமர்ந்துவிட்டான்.

“கை… கையை எடுங்க மொதல்ல.” அடிக்குரலில் அதட்டினாள்.

“ஒரு பேலன்ஸ்ஸுக்கு…” என்றவனின் உதடுகளிலோ அவளறியா கள்ளச்சிரிப்பு.

“வாலைச் சுருட்டிக்கிட்டு உக்காரதா இருந்தா எங்கூட வரலாம்.” அதட்டியபடியே வண்டியைச் செலுத்தியவளின் கைகளில் புல்லட் ஒரு குழியில் இறங்கி ஏற, நந்தினியின் இடுப்பை தன்னிரு கைகளால் பற்றியிருந்தான் கமலகண்ணன்.

அவ்வளவு தான்… சட்டென்று பிரேக்கிட்டு வண்டியை நிறுத்தியவள், “கொஞ்சம் இறங்குங்க” என்றாள் திரும்பிப் பார்க்காமல்.

‘ஷ்ஷ்… உணர்ச்சிவசப்பட்டு சொதப்பிட்டியே டா…’ மானசீகமாக தலையில் தட்டிக்கொண்டவன்,

“ஏன்? நீ எம்பின்னால உக்கார்ந்து வரப்போறியா நந்து?” அப்படியே அமர்ந்தவாக்கில் இருந்தபடியே கேள்வி கேட்டான்.

“இப்போ நீங்க இறங்குறீங்களா? இல்ல, நான் இறங்கட்டுமா?” இறுகிப்போன குரலில் அவள் கேட்க, வேறுவழியில்லாமல் இறங்கிக் கொண்டான் கண்ணன். அடுத்த வினாடியே பைக்கை சீறவிட்டவள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் தன் வீட்டிற்கு முன்னர் வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தாள்.

திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டை மகாராஜா நகரில் தான் இருந்தது அவளுடைய வீடு.

ஆமாம்… மண்ணின் நாயகி தான் அவள்.

பைக் சத்தத்தை கேட்டதும் வீட்டுக்குள் இருந்து வந்தார் அவளுடைய அம்மா திலகம். அவர் கூடவே வந்தாள் தங்கை அனிதா.

“என்னடி இது, நீ மட்டும் வந்துருக்க? கண்ணனை எங்க?” மகளுக்கு பின்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்வையால் அலசியபடி கேட்டார் திலகம்.

“ஏதாவது வேலையா போயிருப்பான் திலகா, நீ பிள்ளையை மொதல்ல கவனி.” அவர்கள் வீட்டுக்கு அருகே இருந்த இன்னொரு வீட்டிலிருந்து இறங்கி வந்தபடியே சொன்னார் கமலகண்ணனின் அம்மா லீலாவதி. மனைவியின் வார்த்தையை ஆமோதிப்பது போல புன்னகைத்தபடியே அவரோடு வந்தார் கண்ணனின் அப்பா நாதன்.

ஆமாம், இரண்டு வீடுகளும் அடுத்தடுத்தாற்போல ஒரே காம்பௌண்டிற்குள் தான் இருந்தது. உண்மையைச் சொன்னால் நாதனின் அண்ணனுடைய வீட்டில் நீண்ட நெடுங்காலமாக வாடகைக்கு குடியிருக்கிறார்கள் நந்தினியின் குடும்பத்தார்கள்.

“வா க்கா.” பைக்கில் நந்தினிக்கு முன்னால் இருந்த பயணப்பையை தூக்கியபடியே உற்சாகமாக வரவேற்பில் இறங்கிய அனிதா நைட்டியில் இருந்தாள். குளித்து முடித்ததற்கு அடையாளமாக ஈரக்கூந்தலையை விரித்து விட்டிருந்தாள்.

நந்தினியிடம் பயண சௌகரியங்களை விசாரித்த நாதன், “இனிமே இங்க தானே, நாம அப்புறமா பாத்துக்கலாம், நீ குளிச்சு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ ம்மா” என்றபடியே விடைபெற்றுக்கொள்ள முயன்றார்.

“டீ குடிச்சிட்டு போகலாம், உள்ள வாங்க ண்ணா” என்று அவருக்கு அழைப்பு விடுத்த திலகம்,

“நீ இப்பிடியே நில்லு, நான் இதோ வர்றேன்.” மகளிடம் சொல்லிவிட்டு பரபரப்பாக வீட்டுக்குள் ஓடினார். திரும்பி வரும்போது அவருடைய கைகளில் ஆரத்தி தட்டு இருந்தது.

“ம்மா… என்ன இது?” அதிருப்தியாக நந்தினி முகத்தைச் சுருக்கிய நேரம் ஆட்டோவில் வந்து இறங்கினான் கண்ணன்.

“என்ன அத்த, என்னை விட்டுட்டு உங்க பொண்ணுக்கு மட்டும் ஆரத்தி எடுக்க ரெடியாகிட்டீங்க?” பெரிதாக அவன் அலுத்துக்கொள்ள,

“அதெல்லாம் நேரம் காலம் வரும்போது ரெண்டு பேருக்கும் சேர்த்து ஆரத்தி சுத்தலாம்.” புன்னகையோடு மகனை அடக்கினார் லீலாவதி.

“அந்த நேரம்காலம் எப்போ வரும்னு உங்க மருமக கிட்ட கேட்டு சொல்லுங்க ம்மா.” முணுமுணுக்கிறேன் பேர்வழி என்று சத்தமாகவே சொன்னான் கண்ணன்.

“ம்ப்ச்…. வந்ததும் ஆரம்பிக்காத கண்ணா.” மகனிடம் கண்டிப்பான குரலில் சொன்ன லீலாவதி,

“நீ நந்தினிக்கு ஆரத்தி எடு, எத்தனை நேரம் பிள்ளை அப்படியே நிப்பா?” என்று திலகத்திடம் முடித்தார்.

நந்தினிக்கு ஆரத்தி எடுத்து முடித்ததும் எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

ஹால், ஒற்றை படுக்கை அறை, சமையலறை என்று கைக்கு அடக்கமான வீடு தான்.

ஹாலில் கிடந்த இருக்கைகளில் எல்லோரும் அமர்ந்தார்கள். கமலகண்ணனோ உரிமையாக நந்தினிக்கு அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

எல்லோருடைய பார்வையும் அருகருகே அமர்ந்திருந்த தங்கள் பிள்ளைகள் மீதே ஆர்வமாக பதிந்தது.

“சொல்லு நந்தினி, உனக்கும் கண்ணனுக்கும் கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்?” நேரடியாகவே மகளிடம் கேட்டார் திலகம்.

அது காதில் விழாதது போல இருக்கையிலிருந்து எழும்பிய நந்தினி, “ரொம்ப கசகசன்னு இருக்குது, குளிச்சிட்டு வரேன்.” முணுமுணுத்தபடி அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

வீட்டுக்கு பின்புறம் இருந்த குளியலறையில் குளித்து முடித்து அவள் உடைமாற்றி வரும்போது கண்ணன் குடும்பத்தினர் அங்கே இல்லை.

“அதிகம் படிச்சு, பெரிய பொறுப்புல இருந்தா வீட்டுக்கு வந்தவங்ககிட்ட மரியாதையா நடக்கக்கூடாதுன்னு எதுவும் இருக்கா நந்தினி?” அடக்கப்பட்ட கோபம் குரலில் இருக்க, மகளை அதட்டினார் திலகம்.

“நான் செய்தது மரியாதைக் குறைவா தெரியுற உங்களுக்கு, சம்மந்தபட்டவங்களை வச்சிகிட்டே எங்கிட்ட கேள்வி கேக்குறது மட்டும் மரியாதை குறைவா தெரியலையா ம்மா?” சூடாக வந்தது பதில்.

மகளின் பதிலில் திலகத்தின் முகம் வாடிப்போனது.

அவருக்கும் நந்தினி வந்த உடனே திருமண விஷயத்தைப் பற்றி பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. கமலகண்ணன் கேலியாக தொடங்க, அதன் தொடர்ச்சியாக மகளிடம் கேட்டு விட்டார். அவ்வளவு தான்.

தாயின் முகவாட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் அருகே அமர்ந்த நந்தினி, அவரது வலது கைகயை தன் கைகளுக்குள் பொதிந்தபடியே, “நான் ஏற்கனவே இந்த கேள்விக்கு பதில் சொல்லியாச்சு, அப்புறமும் ஏன் ம்மா திரும்பத்திரும்ப என்கிட்ட கேக்குறீங்க?” என்றாள் சலிப்பாக.

ஆமாம்… இந்த திருமண பேச்சுவார்த்தை இன்று நேற்று தொடங்கியது இல்லை. நந்தினி ஐபிஎஸ் ட்ரெயினிங் முடித்து பணியில் சேர்ந்த பொழுதில் இருந்தே தொடங்கிவிட்டது.

அப்போதிருந்து இப்போதுவரை நந்தினியின் பதில் என்னவோ திருமணம் வேண்டாம் என்பதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல், தான் விரும்பிய பதிலை அவளிடமிருந்து பெற்றுவிடும் முயற்சியில் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை மகளிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் திலகம்.

“இப்படி சொன்னா எப்படி நந்தினி? இப்பவே உனக்கு இருபத்தியெட்டு வயசாகுது, உனக்கப்புறம் மூனு தங்கச்சிங்க இருக்குறாங்க, அவங்களுக்கும் காலகாலத்துல நான் நல்லது பண்ணி பாக்க வேண்டாமா?” என்றார் திலகம் கண்டிப்பான குரலில்.

நந்தினியோடு சேர்த்து மொத்தம் நான்கு பெண் மக்கள் திலகத்திற்கு. இதோ இவர்களோடு நிற்கும் அனிதா தான் நந்தினிக்கு அடுத்தவள். எம் எஸ்சி பிட் முடித்து திருநெல்வேலியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாள். அடுத்தது இந்துஜா. தன்னுடைய பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு இந்திய குடிமையியல் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறாள். அம்மணியின் ஜாகை தற்சமயம் சென்னையில். அடுத்தது கௌரி. அவளும் சென்னையில் ஒரு கல்லூரியில் பிஆர்க் படித்து வருகிறாள். இது கடைசி வருடம்.

அம்மாவின் வார்த்தைகளில் சத்தமாக சிரித்தாள் நந்தினி. அதில் கேலி பாவனை அப்பட்டமாக கலந்திருந்தது.

“என்னோட கஷ்டம் உனக்கு கேலியா தெரியுதா நந்து?” அலுத்துக் கொண்டார் திலகம்.

“பின்ன என்ன ம்மா? தனி ஆளா கஷ்டப்பட்டு எங்களை வளத்து ஆளாக்குனதும் இல்லாம, எங்க இஷ்டப்படி படிக்கவும் வச்சிட்டு, இப்போ படுகுழியில தள்ள முயற்சி பண்ணுறீங்களே… போதாததுக்கு அதை நல்லதுன்னு வேற சொல்லிக்கிறீங்க… அதையும் காலாகாலத்துல வேற பண்ணனுமாம்…” நக்கல் துள்ளி விளையாடியது அவளது குரலில்.

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லடா, அப்படி இருந்தா உலகத்துல உள்ள எல்லா பெத்தவங்களுமே பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தான் நினைப்பாங்களா?”

“கல்யாணம்…. கல்யாணம்…. கல்யாணம்… பொண்ணுங்கன்னா கல்யாணம் பண்ணியே ஆகணுமா? கல்யாணத்தை தாண்டி இங்க எதுவுமே இல்லையா?” சிரிப்பு மறைந்து இப்போது சலிப்பு வந்திருந்தது நந்தினியின் குரலில்.

“நீ ஏன் நந்தினி இப்படி இருக்க?” இறங்கிய குரலில் கேட்டவரின் பார்வை மகளை கவலையாக அளவிட்டது.

“ஏன்னு உங்களுக்கு தெரியாதா ம்மா?” கேள்வியையே பதிலாக்கினாள் மகள்.

அதெப்படி தெரியாமல் இருக்கும்? தெரியும், எல்லாம் தெரியும். அதற்காக மகளை அப்படியே விட்டுவிட முடியாதே?

“யாரோ ஒரு சில ஆண்கள் செய்யுற தப்பை மனசுல வச்சிட்டு, எல்லாரையும் ஒரே மாதிரி எடை போட முடியாதே நந்து.” தன் வார்த்தைகளை மகள் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு இருந்தது அந்த தாயின் குரலில்.

“இந்த உலகத்துல முக்காவாசி பயலுக எல்லாம் ஏம்மாத்துகாரனுங்களா தான் ம்மா இருக்குறானுங்க, நான் தான் தினம் தினம் பாக்குறேனே.” பளிச்சென்று வந்தது பதில்.

“நம்ம கண்ணன் அப்படியெல்லாம் இல்ல டா. சொந்த அத்த பையன் வேற. நாம பார்க்க வளர்ந்தவன்…”

“அவனும் ஆம்பிள்ளை தானே? அவனுக்கு மட்டும் ஆம்பிள்ளை புத்தி வராம போயிடுமா என்ன?” சட்டென்று தாயை இடைமறித்து பேசியவள்,

“நீங்க சொல்லுறதுக்காக எல்லாம் எவனை நம்பியும் என்னோட வாழ்க்கையை ஷேர் பண்ணிக்க முடியாது. சாரி ம்மா, என்னை இந்த விஷயத்துல இதுக்கு மேல ஃபோர்ஸ் பண்ணாதீங்க.” என்றாள் முடிவாக.

அப்படியே, அங்கே நடப்பதை சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டு நின்றிருந்த தங்கை அனிதாவின் பக்கம் பார்வையை திருப்பிய நந்தினி, “நான் சொல்லுறது சரிதானே அனி?” என்றும் கேட்டு வைத்தாள்.

“க்கா… நான் என்ன சொல்லுறேன்னா…” தடுமாறினாள் தங்கை.

“ஓஹ்ஹோ… உங்களுக்கும் வேற ஒப்பீனியன் இருக்கும் போலவே… அதை உங்ககூடவே வச்சிக்கோங்க மேடம், அது எனக்கு தேவையில்லாதது. இப்போ உங்க வேலை எப்படி போகுதுன்னு மட்டும் சொல்லுங்க.” யார் சொல்லியும் என் கருத்திலிருந்து மாறப்போவதில்லை என்பது போல தங்கையிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் நந்தினி.

அவ்வளவு தான், இதற்குமேல் இந்த விஷயத்தில் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்ற உடல்மொழியோடு தங்கையோடு பேசிக்கொண்டிருந்த மகளைப் பார்த்த திலகத்திற்கு, தன் கணவனை நினைத்து கோபம் கோபமாக வந்தது.

ஆமாம், இன்று கல்யாணம் வேண்டாம் என்று நந்தினி மறுப்பதற்கு முழுமுதற் காரணமும் அந்த மனிதர் தானே…