Advertisement
கண்ணே முத்து பெண்ணே 2
அந்த நண்பகல் வேளையிலும் செல்வா கணக்கே இல்லாமல் டீ போட்டு குடித்து கொண்டிருந்தான்.
மண்டை அவ்வளவு சூடாகி போயிருந்தது. எத்தனை டீ குடித்தும், அந்த சூடு இறங்கவில்லை.
“ண்ணே.. போதும்ண்ணே. கஸ்டமருங்க வந்தா என்ன பண்றது? மொத்த பாலையும் நீயே காலி பண்ணிடுவ போல” என்று நிறுத்த பார்த்தான் சுப்பிரமணி.
“எவன்டா கஸ்டமரு, நான் தான் கஸ்டமரு. எனக்கு தான்டா மொத்த டீயும்” என்றவன் திரும்ப டீயுடன் அமர்ந்தான்.
நேரம் சென்றது. டீயும் கணக்கே இல்லாமல் அவனுக்குள் சென்றது. சுப்பிரமணி நொந்து போக, “ரவி என்னைப்பத்தி என்னடா நினைப்பான்?” என்று தம்பியிடம் திடீரென கேட்டான்.
“சும்மாவே அவனுக்கு என்மேல காண்டு. இதுல அவன் தங்கச்சி வேற பத்த வைச்சி விட்டிருக்கா?”
“இப்போ நீ விசாரிச்சு சொல்ற வரைக்கும் கூட எனக்கு அந்த பொண்ணு எப்படி இருக்கும்ன்னே ஞாபகம் இல்லைடா”
“நல்லா இருக்கிறாங்க தானேண்ணா” என்றான் சுப்பிரமணி சிரிப்புடன்.
“பிஞ்சுடும். நான் என்ன சொல்லிட்டிருக்கேன், நீ என்ன சொல்ற”
“நீ தானேண்ணா கேட்ட?”
“டேய். எனக்கு அவளை தெரிய கூட செய்யாதுன்னு சொல்லிட்டிருக்கேன்டா. நல்லா படிச்சு நல்லா தான் இருக்கா. என்னை போய் கட்டிக்கிறேன்னு சொன்னா நம்பவே முடியலைடா. ஒருவேளை லூசா ஏதும் இருப்பாளோ?”
“நல்லா படிச்சு நல்லா இருக்கிறவங்க லூசா இருக்க வாய்ப்பில்லைண்ணா”
“ஆமா தானே? அப்பறம் என்னவாம் அவளுக்கு? நான் ஏன் அவளுக்கு”
“உனக்கு என்னண்ணா குறைச்சல்?”
“எதுவுமே இல்லை. அதான் குறைச்சல்”
“கண்ணாடியில போய் உன்னை பாருண்ணே”
செல்வா தம்பியை முறைக்க, “ண்ணே ரவி மச்சான் வராங்க” என்றான் மணி.
ரவி பைக்கை நிறுத்தி அதிலே அமர்ந்திருந்தவனிடம், “மச்சான் டீ போடவா?” என்று சுப்பிரமணி கேட்க,
“என் தலையில அந்த பாய்லாரை கவுத்திவிடு” என்றான் ரவி.
“ஆத்தி என்ன எல்லாம் வெடிக்கிறாங்க” மணி வாய் மூடி கொண்டான்.
“டேய் அவனை போய் நாச்சிகிட்ட பேச சொல்லு” என்றான் மணியிடம்.
“நாச்சியா? அது யாரு மச்சான்” செல்வா பார்வையில் மணி கேட்டான்.
“என்னடா லந்தா?” ரவி பைக்கை விட்டு இறங்கி பாய்ந்தான்.
“மச்சான்.. மச்சான். சத்தியமா தெரியாம தான் கேட்டோம்” மணி பதற,
“என் தங்கச்சி” என்றான் ரவி முறைப்பாக.
செல்வாவின் புருவங்கள் சுருங்கி விரிந்ததுடன், “எந்த ஆச்சியையும் நான் போய் ஏன் பார்க்கணும்?” என்று கேட்டான்.
ரவியின் நெஞ்சு ஏறி இறங்க, இடையில் கை வைத்து பெரிதாக மூச்சு விட்டான்.
கோவத்தை கட்டுப்படுத்தரானாம்? ஏன் எனக்கு கோவம் வரதாமா?
“மணி இந்த மகராசனை முதல்ல போய் அவகிட்ட பேச சொல்லு. அப்புறம் அதை என்னன்னு”
“எனக்கு இஷ்டமில்லை” செல்வா இடையிட்டு சொன்னான்.
“ரொம்ப நல்லது. இதையே போய் அவகிட்ட சொல்லிட்டு வந்திட சொல்லுடா, நானாவாவது நிம்மதியா இருப்பேன்” என்று ரவி கிளம்பிவிட்டான்.
மாலை நேரம் அவர்கள் ஊர் அம்மன் கோவில் என்று மெசேஜ் வர, செல்வா கடுப்புடன் அங்கு சென்றான்.
‘எந்த ஊர் அழகியாம் அவ?’ செல்வா கோவிலுக்குள் கண்களை சுழற்றி நிற்க,
“க்கும்” என்ற சத்தம் அவனுக்கு பின்னால் கேட்டது.
செல்வா திரும்ப, அங்கு அவள் கைகளை கட்டி அவனை பார்த்திருந்தாள்.
“நாச்சி” செல்வாவின் கேள்வி கொஞ்சம் அதட்டலாகவே வந்தது.
“முத்து நாச்சி” என்றாள் பெண்.
செல்வா ஏதோ சொல்ல வர, “கொஞ்சம் தள்ளி போய் பேசலாமா?” என்று அடி எடுத்து வைத்தாள். இவள் மட்டுமே. அவனோ நின்ற இடத்திலே நின்றான்.
திரும்பி இவனை பார்த்த முத்து நாச்சி, புருவம் தூக்கினாள் கேள்வியாக.
“எனக்கு இதுல இஷ்டமில்லை” என்றான் செல்வா.
“எனக்கும் தான்” என்றாள் அவள் நொடியும் இல்லாமல்.
செல்வா திகைத்து தான் போனான். “இப்போ வரீங்களா?” என்று கைகளை முன்னால் காட்டினாள்.
“அதான் இஷ்டமில்லைன்னு ஆகி போச்சு இல்லை. நான் கிளம்புறேன்” செல்வா தெளிந்து மறுதிசையில் செல்ல போக,
“தொழில் அதிபர் எனக்காக கொஞ்ச நேரம் ஒதுக்க மாட்டிங்களா என்ன?” என்று கேட்டாள் முத்து நாச்சி.
செல்வா நின்று அவளை பார்க்க, “எனக்கும் இஷ்டமில்லைன்னு தான் சொன்னேன், ஆனா நீங்க வேணாம்ன்னு சொல்லலையே” என,
செல்வா வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கியவன், “என்ன விளையாட்டு காட்டுறியா?” என்று கேட்டான்.
“விட்டா அடிச்சிடுவீங்க போல, வாங்க” என்று அவன் கையை பிடித்து இழுத்து சென்றாள்.
செல்வாவிற்கு அதிர்ச்சியே. என் பொசுக்குன்னு கை பிடிச்சுட்டா?
செல்வா அவர்களின் இணைந்த கைகளை பார்த்து நிமிர, “இப்போ சொல்லுங்க” என்றபடி அவனின் கையை விட்டாள் முத்து நாச்சி.
“க்கும். நீ தான் சொல்லணும்” என்றான் குறுகுறுத்த கையை பேண்ட் பேக்கெட்டில் விட்டபடி.
“நீங்க ஏன் இப்போவரை யாரோடவும் கமிட் ஆகலை?” என்று இவனை கேள்வி கேட்டாள் அவள்.
‘ஆஹ்ன். இதென்ன கேள்வி’ செல்வாவிற்கு புரியவில்லை.
“நீங்க கமிட் ஆகியிருந்தா இதெல்லாம் நடந்தே இருக்காது” முத்து நாச்சி ‘உச்சு’ கொட்டினாள்.
செல்வாவின் பொறுமை இருக்கவா, போகவா என்றது.
“உடனே ஷோல்டர் விறைச்சிடும்” முணுமுணுத்து கொண்டவள், “எனக்கு உங்களை பிடிக்கும்” என்றாள்.
“ஏனோ சின்ன பிள்ளையில் இருந்து பிடிக்கும். வளர வளர ஒரு கிரேஸ். இது மாறிடும்னு நினச்சேன். ஆனா இப்போ வரை மாறலை” என்று கோவில் கோபுரத்தை பார்த்தபடி சொன்னாள் முத்து நாச்சி.
செல்வாவிற்கு ஆச்சரியம் தான். “என்கிட்ட அப்படி கிரேஸா இருக்க எல்லாம் ஒன்னுமில்லை” என்று சொல்லியும்விட்டான்.
“உங்களுக்கு கூட தெரியுது, எனக்கு தான் தெரியலை” என்றாள் உதடுகள் விரிந்த புன்னகையுடன்.
“சின்ன வயசுல பிடிக்கிறது எல்லாம் ஒரு விஷயமே இல்லை, இதுக்காக போய் யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா?”
“அதான் சொன்னேனே. இப்போ வரையும் பிடிக்கும். அப்பா கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு பிரஷர். அதான் அவர்கிட்ட உங்களை சொல்லிட்டேன்” என,
“உன்னை நீயே இழுத்து பிடிக்கிற போல. விட்டுடு. இது வேண்டாம். நான் வேண்டாம்” என்றான் செல்வா உறுதியாகவே.
முத்து நாச்சி கண்களை மூடி திறந்தவள், “இழுத்து பிடிச்சேன் தான். உங்ககிட்ட நான் வராம இருக்க, ம்ப்ச். முடியல. இப்போ உங்க முன்னாடி தான் நான் நிற்கிறேன்” என்றாள்.
“இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன்? உனக்கென்ன குறைச்சல்? குட் லூக்கிங், நல்ல படிப்பு, நல்ல ஜாப். நானெல்லாம் அசால்ட்டு. விட்டுட்டு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க பாரு”
“நீங்க தான் என்னோட அந்த நல்ல வாழ்க்கைன்னு நான் சொன்னா?” பெண் இப்போது அழுத்தம் திருத்தமாகவே கேட்டாள்.
“நான் கஷ்டப்படுறேன் தான். ஆனா அதுக்கு மீனிங் நீங்க சொல்றது இல்லை. உங்ககிட்ட இப்படி கேட்டு நிற்கிறதுக்காக”
“இத்தனை வருஷம் ஆகியும் எனக்கு உங்க மேல வந்த பீலிங்ஸ், உங்களுக்கு என் மேல வரலை. அப்போ என்னோட லவ். அது என்னன்னே எனக்கே தெரியலை”
“சின்னது, பெருசுன்னு என்னோட எல்லா கனவுகளிலும், எல்லா நிலையிலும் நீங்க இருந்திருக்கீங்க. இப்போ உங்க இடத்தில என்னால வேற ஒருத்தரை வைக்க முடியலை. அது எனக்கு நானே செஞ்சிக்கிற துரோகமா இருக்கு”
“பருவத்துல தான் பன்னி குட்டி கூட அழகா இருக்கும்ன்னு சொல்வாங்க. ஆனா இப்போ நான் பருவத்துலயும் இல்லை, நீங்க பன்னி குட்டியாவும் இல்லை. என்னை என்னதான் பண்ண சொல்றீங்க” என்று அவனிடமே கேட்டாள்.
“என்கிட்ட கேட்டா. நான். நான் என்ன சொல்ல?” செல்வாவிற்கு இதென்னடா என்றிருந்தது.
“அதான் என் நிலைமையும். எனக்கு நானே பதில் சொல்றது கஷ்டம். உங்களுக்கு சொல்லிக்கலாம். சோ சொல்லுங்க. உங்களுக்கு இஷ்டமில்லையா?”
“ஆ.. ஆமா.. ஆமா தான்”
“இப்போ என்ன பண்ணலாம்?”
“ஹேய் நீ என்ன எல்லாத்துக்கும் என்னையே கேட்டுட்டு இருக்க?”
“வேற யாரை கேட்க? நீங்க தானே எல்லாத்துக்கும் காரணம். நீங்க ஏன் என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சிங்க? ஏன் என்னை ரசிக்க வைச்சீங்க? ஏன் என் கனவுல எல்லாம் வந்தீங்க?”
“இதென்ன புது பித்தலாட்டமா இருக்கு”
“ஆமா இவரை அப்படியே வாரி சுருட்ட தான் பித்தலாட்டம் பண்றோம்”
“வேற எதுக்காம்?”
முத்து நாச்சி நிதானித்திற்கு வந்தவள், “ஆமா அதுக்கு தான்” என்றாள்.
“நீங்க பேசி எதையும் நான் புரிஞ்சுக்க போறதில்லை. எனக்கு நானே கேட்டுகிட்ட கேள்விகளை விட நீங்க புதுசா ஏதும் கேட்டு என்னை திருத்த முடியாது. சோ விட்டுடுங்க” என்று தளர்ந்து போய் தான் சொன்னாள்.
‘விவகாரமா இருக்கும் போலயே’ செல்வா மெல்ல அவளின் அருகில் வந்தவன், “ஆமா என்ன பிரச்சனை உனக்கு?” என்று கேட்டு வைத்தான்.
முத்து நாச்சி அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், “நீங்க மட்டும் ஒரு ஆளை பார்த்திட்டு போயிருந்தா லவ் பெயிலியர்னு தெளிஞ்சிருப்பேன். இனி அதுக்கும் வாய்ப்பில்லை” என்றாள்.
“இப்போ கூட வேற பொண்ணு பார்த்திடவா” செல்வா தீவிரமாக கேட்டான்.
“டூ லேட் பாஸ். நான் தான் உங்ககிட்ட வந்துட்டேனே. இனி நான் தான் உங்க பொண்ணு, பொண்டாட்டி எல்லாம்” முத்து நாச்சி தெளிவாகவே சொன்னாள்.
“அப்போ என் இஷ்டம், முடிவு”
“உங்க இஷ்டம், கஷ்டம், தொடக்கம், முடிவு எல்லாம் இனி நானே” என்றாள் கையை தூக்கி ஆசீர்வதிப்பவளாக.
செல்வாவிற்கு அவள் பாவனையில் மெல்லிய புன்னகை கூட வந்தது. அப்படியே கீழே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டவன், “ஏன் பொண்ணுங்களுக்கு எல்லாம் எங்களை மாதிரி ஆளுங்க மேலே இந்த லவ் வருது” என்று நிமிர்ந்து பார்த்து கேட்டான்.
முத்து நாச்சி அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள், “எனக்கு பிடிக்க ஆரம்பிச்சப்போ நீங்க இப்படி இல்லையே” என்றாள்.
“இதுவும் என்னோட தப்பு தான் இல்லை” என்றான் செல்வா சிரித்தபடி.
“நிச்சயமா” முத்து நாச்சி சொல்ல, இருவருக்கும் புன்னகை தான்.
“உங்க அப்பா, அண்ணா, நான், நீ.. ம்ஹூம் எதுவும் சரியா இல்லை” என்றான் செல்வா தலையை ஆட்டியபடி.
“நான் என்ன சரியில்லை” பெண் கண்களை சுருக்கி கேட்டாள்.
“விசாரிச்சேன் உன் படிப்பு, வேலை பத்தி எல்லாம்”
“அதுவும் எனக்கு பிடிச்சது, படிச்சேன்! நீங்களும் எனக்கு பிடிச்சவர் தானே. போராடுவேன்!”
“ம்ஹ்ம். நிஜமாவே எனக்கு புரியலை உனக்கு எப்படி என்னை பிடிச்சதுன்னு.”
“கண்டுபிடிச்சிடுவோம். நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க. உங்களோட வாழ்ந்து பார்த்துட்டு பதில் சொல்லிடுறேன்” என்றாள் பெண் கண்களை சிமிட்டி.
செல்வா அவளை பார்த்தே இருந்தான். அவனுக்கும் வாழும் ஆசை நிறையவே உண்டு. மனைவி, குழந்தைகள் என்று அவனுக்கான குடும்பம் வேண்டுமே வேண்டும் தான்.
ஆனா இவ?
முடியவே முடியாதுன்னு தான் சொல்ல வந்த, இப்போ யோசிக்கிற தானே?
உன் குடும்பமே உன்னை கண்டுக்காம விட்டுடுச்சு, இவ நீ தான் வேணும்ன்னு வந்து நிக்கிறா. இவளை விடவா உனக்கு பொண்ணு கிடைச்சிட போகுது!
சப்போஸ் நான் சரின்னு சொன்னா என்ன ஆகும்?
ம்ஹ்ம் கல்யாணம் ஆகும்!
ஆகுமா? என்னவோ ஒரு மாற்றம் அவனுக்குள்.
“என்ன யோசிக்கிறீங்க” முத்து நாச்சி கேட்க, செல்வம் தன் முகத்துக்கருகே இருந்தவளை கொஞ்சம் அதிகமாகவே பார்த்தான்.
முத்து நாச்சிக்கு ‘இப்போவாவது பார்க்கிறாரே!’ என்று தான் இருந்தது. இதழ்கள் தாராளமாகவே விரிந்து அவளின் அழகை தூக்கி காட்டியது.
செல்வம் தலையை குலுக்கி கொண்டபடி எழுந்துகொள்ள பார்க்க, முத்து நாச்சி தான் அவன் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாளே.
“எழுந்துக்கணுமா” என்று கேட்ட பெண், அமர்ந்திருந்தவனின் தோளை உரிமையாகவே பிடித்து எழுந்து கொண்டாள்.
நெருங்கிய அவள் வாசத்தில் செல்வம் நொடி தாமதித்தே எழுந்தவன், “நான் வரேன்” என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
‘என்ன எதுவுமே சொல்லாம போறார்?’ முத்து நாச்சி அவனையே பார்த்திருந்தாள்.
Advertisement