Advertisement

கண்ணே முத்து பெண்ணே 1

“சுப்ரமணி.. சுப்பு.. மணி.. ஓய் மணியே” என்று தொடர்ந்து ஏலம் விட்டான் செல்வம்.

“ஏண்ணே இப்படி கத்துற” என்று சுப்பு வர,

“மாமாக்கு டீ போடுடா” என்றான்.

“அதையும் நீயே போட்டு கொடுத்திருக்கலாம்” சுப்பு முனங்கி கொண்டே செல்ல,

“கொடுத்திருக்கலாம் தான். ஆனா உனக்கு ஏதாவது வேலை கொடுக்கணும் இல்லை” என்றவன், தனக்கு தானே போட்டு கொண்ட  டீயுடன் வந்தான்.

“இப்போ தான் முருகேசுண்ணனோட குடிச்ச இல்லை” என்று கணேசனுக்கு டீ கொடுத்தபடி சுப்பு கேட்க,

“பங்காளியோட குடிச்சுட்டு மாமனோட குடிக்கலைன்னா அது தப்பு ஆயிடும்டா, என்ன மாமா நான் சொல்றது சரி  தானே?” என்று  கேட்டான்.

“செல்வா என்னைக்கு தப்பா சொல்லியிருக்கு. நீ வாயா” என்று தன் பக்கத்தில் அமர இடம் காட்டினார் கணேசன்.

செல்வம் அமர்ந்து டீ குடித்தபடி, “எப்படி மாமா போகுது கடை எல்லாம்” என்று பேச்சு கொடுத்தான்.

“அது ஒரு பாட்டுக்கு போகுது, நானும் அது பாட்டுக்கு பின்னாடியே போறேன்” என்று பெருமூச்சுடன் சொன்னவர், “வாங்குற பையலுங்க பூரா கடன் சொல்லி உரம் எடுத்தா என்ன பண்றது செல்வா? கொஞ்சம் கறாரா கேட்டுட்டா போதும், என்ன அவ்வளவு தானான்னு மிஞ்சி பேசுறானுங்க. இதுக்கு தான் சொந்த ஊர்ல கடை வைக்க கூடாது போல” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் கணேசன்.

“க்கும் டீ கடைக்கே அக்கவுண்ட் தான் வைக்குறானுங்க. இவனுங்ககிட்ட போய் காசு வசூல் பண்ணிட்டாலும்” என்று செல்வா சொல்ல,

“டேய் மருமவனே மாமனை ஏதும் சொல்றியா?” என்று கேட்டார் கணேசன்.

“ஹாஹா உன்னை சொல்லலை மாமா. நீ குடி” என்றவனை நெருங்கி வந்த சுப்பிரமணி, “ண்ணே.. பெரியப்பா வரார்” என்று மெல்ல சொன்னான்.

செல்வா கால் மடக்கி அமர்ந்திருந்தவன், இப்போது நன்றாக கால் மேல் கால் போட்டு ஆட்ட ஆரம்பித்துவிட்டான். “ஆத்தி நான் கிளம்பிடணுமே” என்று மாமா உஷாராக,

செல்வாவோ இப்போது குரல் உயர்த்தி, “கடன் சொல்றவங்களுக்கு எல்லாம் ஏன் உரம் கொடுக்கறீங்க மாமா” என்று கேட்டு வைத்தான்.

டிவிஎஸ் XL வண்டியை உருட்டி கொண்டிருந்த பெரியப்பா என்றவர் முறைத்தபடி நின்றுவிட, “நான் இல்லை தண்டபாணி” என்றார் மாமா வேகமாக XLகாரரிடம்.

“நீ ஏன் மாமா பதறுற. உட்காரு. அட உட்காருங்கிறேன், டேய் சுப்பு மாமாக்கு இன்னொரு ஸ்பெஷல் ஏலக்காய் டீ போடு” என்றான் செல்வா.

“யம்மா ஆளை விடுண்ணே” என்று சுப்பு கடைக்குள் பதுங்கிவிட,

“இப்படி தான் கொள்ளை பேர் இருக்காங்க மாமா. சொந்தம்ன்னு சொல்லியே பேக்கட்டை உருவி விட்டுடுவாங்க. நாம தான் சூதானமா தொழில் நடத்தணும். பிஸ்னஸ் மேன் இல்லையா நாம எல்லாம்” என்றான் செல்வா பந்தாவாக.

“ஹாஹா பிஸ்னஸ் மேனா. அது யாருடா சுப்பு. தான்  டீ குடிக்கிறதுக்காகவே டீ கடை வைச்சவன் எல்லாம் பிஸ்னஸ் மேனா?” என்று சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார் தண்டபாணி.

“இவராட்டம் விவசாயம் பண்றேன்னு கடங்காரனா இல்லையில்லை. போக சொல்லுடா சுப்பு” என்றான் செல்வா.

“ஏன் இவன் பாட்டன் போட்ட ரோடாக்கும் இது?” தண்டபாணி  நக்கலாக கேட்க,

“என் பாட்டான் எல்லாம் ரோடு சரியா தான் போட்டார். அவரு போட்ட குட்டிங்க தான் ரோட்டுல நடக்க தெரியாம உருண்டுட்டு கிடக்காங்க” என்றான் செல்வா.

“அடிங்க யாருகிட்ட. இன்னைக்கு உன் தோலை உரிச்சி உப்பு தடவிடுறேன்” என்று வண்டியை தள்ளிவிட்டு இவனிடம் வந்தார் தண்டபாணி.

செல்வா எழுந்து நெஞ்சை நிமிர்த்து, “வாயா பார்த்துடலாம்” என்று நின்றான்.

“ஏப்பா தண்டபாணி. அட விடுயா. சொந்த மகன்கிட்ட போய் பங்காளி கணக்கா வரிஞ்சி கட்டிட்டு நிற்கிற” என்று கணேசன் பிடித்து நிறுத்த,

“இவன் அப்பன் மாதிரியா என்கிட்ட நடந்துகிறான். உதவாதக்கரை  இவன் என்னை பேசுறான்.  நீயே சொல்லு இவனை படிக்க வைச்ச மாதிரி தானே இவன் அண்ணன், அக்காவை படிக்க வைச்சேன். அவங்க எல்லாம் ஆளுக்கொரு வேலைல கௌரவமா இருக்கும் போது இவன் மட்டும் என்ன வேலையெல்லாம் பார்த்திட்டு இருக்கான் பாரு” என்று பொங்கினார் மனிதர்.

“மாமா நான் என் அப்பா மாதிரியாம். படிப்பு வராதாம்” என்றான் செல்வா நக்கலாக.

“படிக்க உனக்கு வணங்களைன்னு சொல்லுடா” தண்டபாணி எகிற,

“ஆமா இவருக்கு வணங்கி கலெக்டர் கையெழுத்து போட்டுட்டு இருக்கார்” செல்வா விடாமல் பேசினான்.

“செல்வா. கொஞ்சம் நேரம் சும்மா இருய்யா. அப்பான்ற மட்டு மரியாதை இல்லாம சலம்பிட்டு இருக்க” என்று கணேசன் அதட்ட,

“உனக்கு ஏலக்காய் டீ கேன்சல் மாமோய்” என்றான் செல்வா.

“ஆமா நீ போட்டுட்டாலும். நீ வா தண்டபாணி இப்படி உட்காரு. சுப்பு டேய் சுப்பு உன் பெரியப்பனுக்கு ஒரு டீ போடு” என்றார் கணேசன்.

“இவன் கடையில நான் பச்சை தண்ணீ கூட குடிக்க மாட்டேன்” என்று தண்டபாணி திரும்ப குதித்தார்.

“இவங்க  டீயே தண்ணீர் மாதிரி தான் இருக்கும்” என்று கணேசன் இடையில் குறுக்கு சால் ஓட்டினார்.

“மாமா அக்கவுண்ட் குளோஸ் பண்றேன் இரு. எங்க  டீயை குறை சொல்ற” என்று செல்வா மிரட்ட,

“சும்மா தாமஸுக்கு சொன்னேன் மருமவனே” என்ற கணேசனின் பேச்சில் செல்வா மெல்லிய சிரிப்புடன் நகர்ந்து டீ பாய்லரிடம் வந்தவன், தண்டபாணிக்கு டீ போட்டு சுப்புவிடம் கொடுத்தான்.

தண்டபாணி பிகு செய்து வாங்கி கொண்டவர், “இவன் கெட்டதும் இல்லாமல் என் தம்பி மகனையும் துணைக்கு கூப்பிட்டுக்கிட்டான். அவன் அப்பன்காரன் பார்க்கிற நேரமெல்லாம் என்னை கறிச்சு கொட்டுறான்” என்றார் புலம்பலாக.

“பெரியப்பா அவர் மாடு மேய்க்க ஆள் பிடிக்கிறார். என்னை விடுங்க” என்று சுப்பு கடைக்குள் ஓடிவிட்டான்.

டீ கடையே செல்வமுடையது தான். ஆனால் அவன் குடிக்கும் டீ கணக்கு வாடிக்கையாளர் கணக்கை விட அதிகம்.

சுப்பிரமணிக்கே சில நேரம் தோன்றும். இவருக்காகவே டீ கடையா என்று.

செல்வா திரும்ப ஒரு டீயுடன் அமர, தண்டபாணி மகனை பார்த்தார். அவ்வளவு வருத்தம், ஆதங்கம். மனைவி தவறி சில வருடங்கள் ஆகிவிட, செல்வமும் வீட்டிற்கு வருவதை குறைத்து கொண்டான். அண்ணன் மனைவியிடம் கொழுந்தனுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை.

தண்டபாணிக்கே முதலில் மகன் மேல் அதிருப்தி இருக்க, அவன் வராதது பெரிதாக உறுத்தவில்லை. ஆனால் இப்போதெல்லாம் தோன்றுகிறது அவனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்துவிட வேண்டும் என்று.

அதன் ஆரம்பமாக, “கணேசா இவன் டீ கடை மட்டுமே கூட பார்த்துக்க சொல்லுடா. அந்த  பலராம்  கூட சேராம இருந்தா இவனுக்கு நல்ல பொண்ணை” என்று பேசி கொண்டே இருக்க, செல்வா டம்ளரை வைத்து உள்ளே சென்றுவிட்டான்.

தண்டபாணிக்கு கோவம் வந்தது. “இவனுக்காக ஏதோ போனா போகுதுன்னு இறங்கி வந்து பேசினா ரொம்ப பண்றான்” என்றார் வார்த்தையாக.

“பலராம் கூட இருந்தாலும் வருமானம் பார்க்கிறான் தானே தண்டபாணி” கணேசன் சொல்ல,

“யோவ் கம்முன்னு இருயா. அதெல்லாம் ஒரு பொழப்பா. அவனே கட்ட பஞ்சாயத்துங்கிற பேர்ல ஊரையே கொள்ளையடிச்சுட்டு திரியரான். இவன் அவன்கூட சுத்துனா யார் இவனுக்கு பொண்ணு கொடுப்பா” என்றார் அதிகமான கோபத்துடன்.

“செல்வா அண்ணனுக்கு பிடிச்சிருக்கு போறார். இத்தனை வருஷம் நீங்களா அவரை கவனிச்சுக்கிட்டிங்க. படிக்கலைன்னு அவரை அப்படியே கை கழுவிட்டிங்க. ஏதோ அண்ணாச்சி கூட இருக்கிறதனால டீ கடையாவது வைச்சுக்கிட்டோம்” என்றான் சுப்பிரமணி.

“ஆமா ஏதோ பெரிய கப்பல் கம்பெனி வைச்சு நடத்துற  மாதிரி பேசுற” தண்டபாணி பேச,  இவருடன் பேச முடியாது என்று சுப்பிரமணி அமைதியாகிவிட்டான்.

Advertisement