Advertisement
செல்வம் ஒரு முரட்டு ஜீன்ஸ், சர்ட்டையில் கிளம்பி வந்தவன், “இன்னைக்கு பக்கத்து ஊர் பஞ்சாயத்து. நீ சீக்கிரம் வந்து சேரு” என்று அப்பாவை கண்டு கொள்ளாமல் கிளம்பிவிட்டான்.
தண்டபாணி கத்தி முடித்து கிளம்பிவிட, சுப்பிரமணி கடையை உடனிருப்பவனிடம் விட்டு தானும் பஞ்சாயத்து நடக்குமிடம் வந்தான்.
ஆட்கள் அந்த களத்தில் அதிகளவில் கூடியிருக்க, பலராம் நடுவில் அமர்ந்திருந்தார். அவருக்கு பக்கத்திலே செல்வா நிற்க, சுப்பிரமணி அவனுக்கு பின்னால் போய் நின்று கொண்டான்.
ஏதோ நிலம் பஞ்சாயத்து போல. பேச்சு நீண்டு கொண்டே சென்றது.
“அண்ணாச்சி பேச்சு நமக்கு எதிரா போகுது” என்று அழைத்து வந்தவன் சொல்ல, பலராம் திரும்பி செல்வாவை பார்த்தார்.
செல்வா கைகளை பின்னால் கட்டி கொண்டு எதிரில் இருந்தவர்களை அளவிட்டான்.
அவனுக்கு தேவையானவன் கிடைத்துவிட, மணிக்கு கண் காட்டினான். அதன்படி சுப்பிரமணி முன்னால் வந்தவன், “என்ன கோவாலு இங்க மட்டும் எகிறி எகிறி பேசுற, போன வாரம் மூர்த்தி சித்தப்பா இடத்தை முழுசா முழுங்க பார்த்தவன் தானே நீ” என்றான் சத்தமாக.
“டேய் என்ன பேசுற நீ? அது முடிஞ்சு போச்சு. இங்க இருக்கிற நியாயத்தை பேசுடான்னா” என்று கோபாலு பேச,
“ஏன் மூர்த்தி சித்தப்பாது நியாயம் இல்லையா? இது என்ன அநியாயமா இருக்கு. உனக்கு வந்தா ஒயின், மூர்த்தி சித்தப்பாக்கு வந்தா குவாட்டாரா? என்ன சித்தப்பா இது?” என்று கூட்டத்தில் இருந்த மூர்த்தியை பார்த்து கேட்டான்.
“அவனுக்கு போய் நியாய, அநியாயம் வேற தெரியுதா, அவனே ஒரு ஆகாவலி, பிராடு பையன் தம்பி” என்றார் மூர்த்தி சித்தப்பா.
“டேய் உனக்கும், எனக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு, பேசான போயிரு, இவனுங்க லந்தை கொடுக்கிறானுங்க” என்று கோபாலு பேச, மூர்த்தி அவரிடம் மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டார்.
அவ்வளவு தான் பேச வந்த பஞ்சாயத்து போய், புது பஞ்சாயத்திற்கு நாள் குறிக்க வேண்டியதாகி போனது.
“பஞ்சாயத்தை கலைச்சு விட்டாச்சு. இனி நீ ஆக வேண்டியதை பாரு. நான் கவுன்சிலர்கிட்ட பேசிடுறேன்” என்று இவர்கள் கிளம்பினார்கள்.
பலராம் தன் இடத்திற்கு வர, அவருக்காக நாராயணன் காத்திருந்தார்.
பங்காளிகளான இருவருக்கும் மிக முக்கியமான தொடர்பும் உண்டு.
நாராயணன் தன் மகன் ரவியுடன் ஆபிஸ் அறையில் இருக்க, “என்ன மகனோட வந்திருக்க, என்ன விஷயம் நாராயணா?” என்று பலராம் கேட்டு அமர, நாராயணனோ ஒருவனை தான் முறைத்திருந்தார்.
பலராம் திரும்பி பார்க்க, அங்கு ஜன்னலுக்கு அந்த புறம் செல்வா இருந்தான்.
“அவனை ஏன் முறைக்கிற?”
“அண்ணாச்சி கொஞ்சம் பிரச்சனை வரும் போல” என்று ரவி இடையிட்டு சொன்னான்.
பலராம் கேள்வியாக பார்க்க, ரவி சொன்ன விஷயத்தில் மனிதருக்கு வேர்த்து போனது. வேகமாக அங்கிருந்த தண்ணீரை எடுத்து காலி செய்தார்.
“உறுதியா தெரியுமா?” பலராம் கேட்க,
“நிச்சயமா தெரியும் அண்ணாச்சி” என்றான் ரவி.
“இப்போ என்னடா பண்றது?” பலராமிடம் அதிகமான பதட்டம்.
“அப்பாவை காப்பாத்தணும்” என்றான் ரவி அவன் வேலையில் கண்ணாக.
“நெருங்கி வரும் போது என்ன செஞ்சாலும் மாட்டுவோம்” பலராம் கைகளை பிசைந்து நாராயணனை பார்க்க, அவரோ இன்னமும் செல்வாவை தான் முறைத்திருந்தார்.
“நாராயணா இங்க என்ன போய்ட்டு இருக்கு, நீ என்ன பண்ணிட்டு இருக்க” என்று எரிச்சலுடன் கேட்டார் பலராம்.
“அது வீட்டு விஷயம் அண்ணாச்சி”
“வீட்டு விஷயத்துல செல்வா எங்கிருந்து வந்தான்?” என்று பலராம் புரியாமல் கேட்க, ரவி தந்தையை பார்த்துவிட்டு மெல்லிய குரலில் விஷயத்தை சொன்னான்.
“இப்போ தான் இதெல்லாம் முளைக்கணுமா? எதை தான் பார்க்கிறது இப்போ” பலராம் தலையை பிடித்து கொண்டார்.
“எனக்கு இவன் வேணும் தலைவரே. இவனை முடிச்சுட்டு நான் அதெல்லாம் பார்த்துகிறேன்” என்றார் நாராயணன் உறுதியாக.
“கிறுக்கா பிடிச்சிருக்கு உனக்கு? செல்வா நம்ம பையன், அவனை போய், என்ன பேசுற நீ”
“அவனை அப்படியெல்லாம் விட முடியாது”
“செல்வா ஒன்னும் லேசுப்பட்ட ஆள் இல்லை நாராயணா. இதை பொறுமையா தான் பார்க்கணும்”
“அவன் இப்படி என் கண்ணு முன்னாடி நிற்கிறதே என்னோட உச்சகட்ட பொறுமையில தான். இதுக்கு மேல ஆகாது”
“ப்பா. ப்ளீஸ், நம்ம விஷயத்தை வேற மாதிரி பார்த்துக்கலாம். முதல்ல இதை என்னன்னு பார்த்து முடிக்கணும்” என்றான் ரவி.
“நீ எதுக்கு பேசுறன்னு எனக்கு நல்லா தெரியும், நீ முதல்ல வெளியே போ” என்று மகனை விரட்டி விட்டார் நாராயணன்.
பலராமும் அவனை போக சொல்ல, ரவி வேறு வழியில்லாமல் வெளியில் வந்தான். “எனக்கு இவனை மட்டும் கொடுங்க. காத்து உங்க பக்கம் திரும்பாம இருக்கிறது என் பொறுப்பு” என்றார் நாராயணன்.
பலராம்க்கு அது தான் வேண்டும். அவர் பக்கம் காத்து அடித்தால் நிச்சயம் இவரால் தாக்கு பிடிக்க முடியாது. நாராயணன் சொன்னால் சொன்ன சொல்லில் நிற்பார்.
ஆனாலும் செல்வா? சில பல யோசனைகளுக்கு பிறகு, பலராமின் முகம் சட்டென பிரகாசமானது.
“நான் சொல்றபடி நடந்தால், எல்லோருக்கும் நல்லது” என்று தன் திட்டத்தை சொன்னார்.
நாராயணனுக்கு ஒரு துளியும் அதில் விருப்பமில்லை. முழு மூச்சாக மறுத்தார்.
“புரிஞ்சுக்கோ நாராயணா, உன் ரத்தமே உன்னை கவுத்திடும்” என்றார் பலராம்.
அதில் நாராயணன் யோசிக்க ஆரம்பித்தார். பலராம் விடாமல் பேசி அவரை ஒத்துக்கொள்ள வைக்க, திட்டம் அமலுக்கு வந்தது.
“ண்ணே என்ன அதிசயமா ரவி மச்சான் பார்வை உங்க பக்கம் வருது” சுப்பிரமணி சொல்ல, கவனித்த செல்வாவிற்கும் ஆச்சர்யம் தான்.
“உங்களை பார்த்தாலே முகத்தை திருப்பிட்டு போவார். இப்போ என்னண்ணே” என்று கேட்க, இவனுக்கும் பதில் தெரியவில்லை தான்.
“கோவமா பார்க்கிறானே” செல்வா ஏன் என்று யோசிக்க,
“உங்களை அண்ணாச்சி உள்ள கூப்பிடுறார்” என்று ஆள் வந்தது.
செல்வா தம்பியுடன் செல்ல, “மணி நீ கொஞ்சம் வெளியே இருப்பா” என்றார் பலராம்.
மணி வெளியே செல்ல போக, கை பிடித்து கொண்ட செல்வா, “சொல்லுங்க அண்ணாச்சி” என்றான்.
நாராயணன் பிடிக்கா பாவனையுடன் பலராமை பார்க்க, கண்களால் சமாதானம் செய்தவர், “கொஞ்சம் பர்சனலா பேசணும் செல்வா” என்றார்.
“ஏதா இருந்தாலும் சொல்லுங்க அண்ணாச்சி” என்றான் செல்வா தம்பி கையை விடாமலே.
ரவி கதவு திறந்து கொண்டு வர, பலராம் ஒரு பெரு மூச்சுடன், “என்ன பிளான் வைச்சிருக்க செல்வா? அதான் கல்யாணம், குடும்பம்ன்னு” என்று கேட்க,
“அப்படி ஏதும் இல்லை” என்று செல்வா சொல்லி முடிக்கும் முன்னே,
“இல்லாம தான் என் மகளுக்கு ரூட் விட்டியா நீ” என்று குரல் உயர்த்தியிருந்தார் நாராயணன்.
“என்ன பேசுறீங்க” என்ற செல்வாவின் கோவம் அவன் முகத்தில் சிவப்பாக வண்ணம் கொண்டது.
“ப்பா” ரவி அவரை அடக்க,
“என்ன ரொம்ப துள்ளுற, நீ ஏதும் பண்ணாம தான் என் மக கட்டினா உன்னை தான் கட்டுவேன்னு நிக்கிறாளா?” என்று கேட்டார் நாராயணன்.
செல்வாவிற்கும் இது புதிய செய்தி தான். நான் இல்லை என்று ரவியை நோக்கி தலையை ஆட்டினான். அவனோ முகம் திரும்பி கொள்ள, மணி நடப்பதில் முழித்தான்.
“நாராயணா. நிதானமா இரு. பேசலாம், உட்காரு” என்று அமைதி படுத்தியர்,
“செல்வா அவர் பொண்ணை உனக்கு கொடுக்கிறது பத்தி பேசணும்” என்றார் பலராம்.
“அண்ணாச்சி எனக்கு அந்த எண்ணமே இல்லை” செல்வா சொல்ல,
“என் மகளை அந்த பக்கம் தூண்டிவிட்டு, இங்க வந்து நல்லவன் வேஷம் கட்டுறியா” பெண்ணின் தந்தை கொதித்தார்.
இவர் மொத்தத்தையும் கெடுத்துடுவார் போல.. பலராம் முயன்று நாராயணனை கட்டுப்படுத்தியவர், “செல்வா. நான் முன்ன நின்னு இந்த சம்மந்தம் பேசுறேன். நீ இவர் பொண்ணை கட்டிக்கோ” என்றார்.
ரவிக்கு இதில் உடன்பாடு இல்லை. இவர்களின் எண்ணம் எதுவென்று சுத்தமாக கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் நிச்சயம் நல்லதாக மட்டும் இருந்துவிடாது என்பது திண்ணம்.
எனவே “நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்றான்.
பலராமோ, அவனை அப்படியே அடக்கியவர் ” செல்வா சொல்லு. உன் முடிவு தான். யோசிச்சு நைட்டுக்குள்ள கூட சொல்லு. ஆனால் இது உனக்கு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்கோ” என்றார்.
செல்வாவிற்கு இதென்னடா புது தலைவலி என்றிருந்தது. அவனுக்கு கல்யாணம் வேண்டாம் என்றெல்லாம் இல்லை. ஆனால் இவர் பெண் என்பது தான் இடித்தது.
இதில் இவனை தான் கட்டுவேன் என்றாளாம்?.
அவள் எப்படி இருப்பாள் என்பது கூட நினைவிற்கு வர மாட்டேன் என்கிறதே?
Advertisement